‘சமுத்திரங்கள் அழியுமேயானால்’
“பூமியின் சமுத்திரங்கள் அழியுமேயானால்—அதாவது சமுத்திரங்களிலுள்ள உயிரினங்கள் திடீரென்று எப்படியாவது முடிவுக்கு வருமேயானால்—அதுவே மனிதன் மிருகங்களோடும் தாவரங்களோடும் பகிர்ந்துகொண்டு வாழும் இந்தக் கிரகத்தில், தொல்லைநிறைந்த அவனுடைய கதையின் இறுதியானதும் மிகப்பெரியதுமான ஓர் அழிவாக இருக்கும்.” இவ்விதமாகவே ஜாக்விஸ் காஸ்டாவின் சமுத்திர உலகம் என்ற தன்னுடையப் புத்தகத்தின் முதல் ஏட்டின் அறிமுகக் குறிப்பில் ஜாக்விஸ் காஸ்டா எழுதினார்.
குறிப்பைத் தொடர்ந்து அவர் கூறுவதாவது: “சமுத்திரங்களில் உயிர் ஏதுமில்லாதபோது, வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவின் அளவு ஆய்ந்து முடியாத அளவு மேல் செல்ல ஆரம்பிக்கும். இந்தக் கரியமில வாயு அளவு குறிப்பிட்ட ஒரு கட்டத்தைக் கடந்து செல்கையில், ‘உஷ்ண வீடு பாதிப்பு’ செயல்பட ஆரம்பிக்கும்: பூமியிலிருந்து விண்வெளி நோக்கி வீசும் உஷ்ணம் மீவளி மண்டலத்தின் கீழ் அடைப்பட்டுவிட, சமுத்திர மட்டத் தட்பவெப்பம் உயர்ந்துவிடும். வடதுருவத்திலும் தென்துருவத்திலும் பனிமூடியப் பகுதிகள் உருகிவிடும். சமுத்திரங்கள் ஒருவேளை ஒருசில எண்ணிக்கையான ஆண்டுகளுக்குள் 100 அடி உயர்ந்துவிடக்கூடும். பூமியிலுள்ள எல்லாப் பெரிய நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். மூழ்கிப்போவதைத் தவிர்க்க உலகிலுள்ள மக்கள் தொகயில் மூன்றில் ஒரு பங்கானோர், மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடிப்போக வற்புறுத்தப்படுவார்கள். மலைகளும் குன்றுகளும் இந்த ஆட்களை வரவேற்க தயார் நிலையில் இல்லாமல் அவர்களுக்குப் போதிய உணவை உற்பத்தி செய்ய இயலாத நிலையில் இருக்கும்.”
காஸ்டா பின்னர் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் முடிவுக்கு வருகிறார்: “பல்வேறு மேட்டு நிலங்களின் மீது ஜனநெருக்கத்தில் வாழ்பவர்களாய், பட்டினிக் கிடந்து, இயல்புக்கு மீறிய புயல்காற்றுக்கும் நோய்களுக்கும் உள்ளானவர்களாய், குடும்பங்களும் சமுதாயங்களும் தகர்ந்துவிட்ட நிலையில், மனிதவர்க்கத்தில் மீதமாயிருப்பவை மிதவிய கடற்பாசியின் மறைவினாலும் நில தாவர வளர்ச்சியின் குறைவினாலும் ஏற்படும் பிராண வாயு குறைபாட்டினால் அவதியுற ஆரம்பிக்கின்றன. மாண்டுப்போன கடல்களுக்கும் வறண்ட மலைச்சரிவுகளுக்குமிடையே நெருக்கமான இடைநிலைப்பகுதியில் சிறைப்படுத்தப்பட்ட மனிதன் சொல்லொண்ணாத் துயரில் தன் கடைசி விநாடிகளை இருமலாக வெளிவிடுகிறான். சமுத்திரம் அழிந்து முப்பது முதல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பூமியிலிருக்கும் கடைசி மனிதன் தன்னுடைய கடைசி சுவாசத்தை சுவாசிக்கக்கூடியவனாக இருக்கக்கூடும். கிரகத்தின் மீதிருந்த அடிப்படை உயிரினங்கள் நுண்ணுயிரிகளாகவும் அழுகியப் பொருள்களைத் தின்று வாழும் பூச்சுகளாகவும் தாழ்த்தப்படுகின்றன.”
என்றபோதிலும், மனிதன் அவன் இருக்கும் வண்ணமாக இருப்பதனால், இந்த எச்சரிப்பும் இன்று அறிவிக்கப்பட்டுவரும் இது போன்ற மற்ற எச்சரிப்புகளும், பண–வெறி பிடித்த மனிதர்கள் தொடர்ந்து கண்மூடித்தனமாக முன்சென்று அழிவோடு முட்டிக்கொள்கையில் கவனியாமல் விடப்படும். நீண்ட காலத்துக்கு முன்பாக யெகோவா சொன்னது போலவே: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல.” யெகோவாதாமே தலையிட்டு “பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுக்க”முடியும்.—எரேமியா 10:23; வெளிப்படுத்துதல் 11:18. (g89 9/22)