இளைஞர் கேட்கின்றனர் . . .
நண்பர்களாக இருப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?
ஒரு பெண் சபீனாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள், ஏனெனில் பள்ளித் தளபந்து விளையாட்டில் அவள் வெற்றி தேடித்தர தவறிவிட்டாள். மற்றுமொரு பெண் நட்பை முறித்துக்கொண்டாள், ஏனெனில் சபீனா ஒரு தேர்வில் ஏமாற்றுவதற்கு உதவி செய்ய மறுத்துவிட்டாள். மூன்றாவது பெண் சபீனாவை மற்றவர்கள் முன் தொடர்ந்து குறைகூறியும், அவமானப்படுத்தியும் வந்தாள். அதன்படி சபீனா அடிக்கடி ஒரு சிரமமான உண்மையைக் கற்றாள்: நட்பை காத்து வளர்ப்பது எப்போதுமே சுலபமல்ல.
‘அவள் என்னுடைய இரகசியத்தைக் காப்பதில்லை!’ ‘அவன் என்னை அசட்டைசெய்கிறான்!’ ‘அவள் எனக்குப் பின்னால் என்னைக் கேலி செய்தாள்!’ ‘இக்கட்டான நிலையில் வைக்கப்பட்டவனாக உணர்ந்தேன்.’ அநேக நெருங்கிய நட்பு இவ்விதமான புகார்களின் தீவிர தாக்குதல்களின் கீழ் நசுக்கப்பட்டிருக்கிறது.
எளிதில் முறிக்கப்படக்கூடிய நட்புகள்
ஏன் நட்புகள் அடிக்கடி முறிக்கப்படுகின்றன? பைபிள் கூறுவதாவது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகிறோம்.” (ரோமர் 3:23) அபூரணத்தின் காரணமாக, நாம் தவறு செய்யும் மனச்சாய்வுள்ளவர்களாக மட்டுமல்ல, ஆனால் நாம் கடவுளிடமும் நம்முடைய சகவாசிகளிடமும் இசைவில்லாதவர்களாக இருக்கிறோம். நாம் குற்ற உணர்வுகள், பாதுகாப்பின்மையின் உணர்ச்சி ஆகிய இவற்றால் துன்புறுகிறோம், விரைவில் கோபப்படுகிறோம், பயமுறுத்தப்படுகிறோம். அபூரணத்தன்மையின் மற்ற குணாதிசயங்களை—சினமடைதல், முன்கோபம், பொறுமையிழத்தல், பொறாமை—நாமுங்கூட உடையவர்களாக இருப்பதால், நாம் நட்பை காத்து வளர்ப்பதற்கு பதிலாக, “ஒருவரையொருவர் துண்டுதுண்டாக முறித்துபோடும்” மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கக்கூடும்.—நீதிமொழிகள் 18:24.
ஆகையால் வாலிப வயதின் நட்பு எளிதில் முறிக்கப்படக்கூடிய ஒன்று. ஒரு காரியம் என்னவெனில், அப்படிப்பட்ட உறவுகள் பெரும்பாலும் (முக்கியமாக இளம் பெண்களிடையே) மிகவும் நெருங்கியதாக இருக்கின்றன. ஒவ்வொரு நினைவையும், ஒவ்வொரு உணர்ச்சியையும் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சிநேகிதன் இருப்பது அனுகூலமுள்ளதாக இருந்தபோதிலும், அதன் பிரதிகூலமும் இருக்கிறது. சோவியத் ஆராய்ச்சியாளர்கள் கோன், லோசென்கோவ் ஆகியவர்கள் சொன்னதைக் கவனியுங்கள்: “இரகசியங்களை பகிர்ந்துகொள்ளுவதற்கான ஊக்கமான ஆர்வம், தப்பபிப்பிராயங்களுக்கும் விரோதங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடும்.”
உங்களுடைய பருவ வயது ஆண்டுகளில் ஏற்படும் உணர்ச்சி சம்பந்தமான வளர்ச்சியும்கூட நட்பிற்கு விரோதமாக வேலை செய்யக்கூடும். ஓர் எழுத்தாளர் சொன்னதைப்போல், வளரிளமைப் பருவத்திற்கு முன் “நம்முடைய ஆள்தன்மை முற்றிலும் அறியப்படக்கூடாததாய் இருக்கிறது, நம்முடைய அக்கறைகளும் இலக்குகளும் தெளிவற்றவையாயிருக்கின்றன; நாம் யார் என்பதைப் பற்றிய உறுதியான எண்ணத்தை நாம் கொண்டில்லை.” ஆனால் நாம் நம்முடைய பருவ வயதின் கடைசி பகுதியை நெருங்கும்போது, “நாம் முழு வளர்ச்சியடைந்தவர்களைப் போல மேலும் அதிகமாக தோன்றுகிறோம், நம்முடைய சொந்த இலக்குகள், எண்ணங்கள், அக்கறைகளை உடைய தனிப்பட்ட நபர்களாக இருக்கிறோம். இது . . . நம்மைவிட வித்தியாசமான விதத்தில் வளர்ச்சியடையும் முந்தின நண்பர்களுடன் நெருங்கிய உறவை காத்துக்கொள்வதை கடினமாக்கக்கூடும். ஆகையால் அவர்களிலிருந்து பிரிந்து வளர்வது தடுக்கமுடியாத காரியம்.”
முடிவாக, சில நட்புகள் பரஸ்பர அன்பின் பேரில் அல்லாமல் சுயநலத்தின்பேரில், கொடுக்கவேண்டுமென்ற ஆவலின் பேரிலல்லாமல் எதைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதன் பேரிலேயே ஆதாரமிடப்பட்டதாக இருக்கிறது. (துவக்கத்தில் கூறப்பட்ட) சபீனாவின் அனுபவம் சயநல எதிர்பார்ப்புகள் அடையமுடியாமற் போகும்போது, எவ்வளவு இலகுவாக அத்தகைய நட்புகள் ஒன்றுமில்லாதவையாக போய்விடக்கூடும் என்பதை விளக்குகிறது. அப்படியென்றால், மிகவும் பிரியமாக நீங்கள் கொண்டிருக்கும் ஒரு நட்பு ஆபத்துக்குள்ளாகும்போது நீங்கள் என்ன செய்யக்கூடும்?
உண்மைத்தவறாதவர்களாய் இருங்கள்
ஜோயனா அவளுடைய சிநேகிதிகளில் ஒருத்தி ஓர் இரகசியத்தை காத்துக்கொள்வாள் என்று நம்பினாள்—ஒருவரிடமும் சொல்லவேண்டாமென்று அவளிடம் கேட்டுக்கொண்ட ஒரு தனிப்பட்ட காரியமாக அது இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, அக்காரியத்தைப் பற்றி எல்லாரும் அறிந்திருந்தார்கள் என்பதை அவள் கண்டுபிடித்தாள். தன்னுடைய சிநேகிதி தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டாள் என்று உணர்ந்தவளாய் ஜோயன்னா கூறியதாவது: “நான் அவளை மன்னித்துவிட்டேன், ஆனால் நான் அவளை ஒருபோதும் நம்பமாட்டேன். எங்களுடைய நட்பு முன்பு இருந்ததுபோல் இருக்கவே முடியாது.” உண்மைதவறாதவர்களாய் இருத்தல் நட்பின் ஒரு முக்கியமான பாகம். தாவீதும் யோனத்தானும் ஒருவருக்கொருவர் உண்மைத்தவறாதவர்களாய் இருக்க ஆணையிட்டார்கள் என்றுங்கூட பைபிள் நமக்குச் சொல்லுகிறது! (1 சாமுவேல் 20:15-17) ஆனால் ஒரு நண்பன் இரகசியத்தை வெளிப்படுத்திவிட்டால் அந்த நட்பு அத்துடன் முற்றுப் பெறுகிறதா?
கட்டாயம் அப்படி இருக்க அவசியமில்லை. உண்மைதான், நம்பிக்கை துரோகம் மன்னிக்கப்பட முடியாத ஒன்று. ஆனால் உன்னுடைய சிநேகிதனிடம் அந்தச் செய்தியைச் சொல்லுவதன் மூலம் ஒரு சுமையை அவன் மேல் வைப்பது முதலிடத்தில் ஞானமற்ற ஒரு காரியமாக இருக்கக்கூடுமா? “வீண்பேச்சு இரகசியத்தைப் பாதுகாக்காது,” என்று நீதிமொழி எச்சரிக்கிறது. “தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.” (நீதிமொழிகள் 20:19, டுடேஸ் இங்கிலிஷ் வெர்ஷன்) ஓர் இரகசியத்தைக் காப்பாற்றக்கூடிய முதிர்ச்சி தன்மை வாலிபர்களிடம் இல்லை. பருவ வயதினரின் மனோ வியாதியை குணப்படுத்தும் மருத்துவர் ஜேன் ஆன்டர்சன் நமக்கு மேலும் ஞாபகமூட்டுவதாவது: “ஒரு நல்ல சிநேகிதன்கூட, அது (அவனுக்குகோ அல்லது அவளுக்கோ) முக்கியத்துவத்தை கொண்டுவருமாகில் அல்லது தன்னிடமாக கவனத்தை இழுக்குமாகில் சில சந்தர்ப்பங்களில் இரகசியத்தை வெளிப்படுத்த தூண்டப்படலாம். இது (அவனையோ அல்லது அவளையோ) ஒரு கெட்ட நபராக்கிவிடாது—முதிர்ச்சியற்றவராக அவர் இருக்கிறார்.” உங்களுக்கு ஒரு வினைமையான பிரச்னை இருக்கும்போது முதிர்ச்சியுள்ள ஒருவரிடம் செல்வதே இந்தப் பிரச்னைக்கு விடையாக இருக்கலாம்.
இரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றால் என்ன? உண்மைத்தவறாதவறாக இருங்கள், “மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே, மற்றபடி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது.”—நீதிமொழிகள் 25:9, 10, தி நியு இங்கிலிஷ் பைபிள்.
‘நான் இக்கட்டான நிலையில் வைக்கப்பட்டவனாக உணருகிறேன்’
ஜோ வேரொருவருடன் இருக்க விரும்பும்போதெல்லாம்—அல்லது வெறுமென தனிமையை அனுபவிக்க விரும்பும்போது—ஜோவின் நண்பன் நிலைகுலைந்துவிடுவான். அதன் விளைவாக, ஜோ அழுத்தத்திற்குள்ளாக்கப்படுவதாகவும் ஏமாற்றப்படுவதாகவும் உணர ஆரம்பித்தான்.
ஒரு நண்பனை, அவன் அல்லது அவளை உங்களுக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சொத்தாக நடத்துவது அவனை இக்கட்டான நிலையில் வைப்பதன் மூலம் நட்பை முறித்துவிடக்கூடும். ஒரு நெருங்கிய நண்பன் மற்றவர்களோடு கூட்டுறவு கொள்ள துவங்கும்போது புண்பட்டவராகவும் பாதுகாப்பற்றவராகவும் உணருவது இயல்பே. ஆனால் கொடுமைப்படுத்தும் விதம் சொந்தம் கொண்டாடுவது நிலைமையைச் சீர்ப்படுத்துமா? நீதிமொழிகள் 25:17-ன்படி அப்படி செய்யாது. அது சொல்வதாவது: “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே.”
இயேசு கிறிஸ்து அவருடைய சீஷன் யோவனிடம் விசேஷித்த விதத்தில் நெருங்கியிருந்தார். (யோவான் 13:23) இருப்பினும், இயேசு மற்றவர்களை விலக்கவில்லை, ஆனால் அவருடைய எல்லாச் சீஷர்களைப் பற்றியும் அறிவித்ததாவது: “நீங்கள் என் சிநேகிதராயிருக்கிறீர்கள்.” (யோவான் 15:14) அதே விதமாக, மிக நெருங்கிய நட்புகளிலும் மற்ற உறவுகளுக்கு இடமிருக்கிறது. உண்மையில், பைபிள் கிறிஸ்தவர்கள் நட்புகொள்ளும் காரியத்தில் “விரிவாகும்படி” ஏவுகிறது.—2 கொரிந்தியர் 6:13.
உன் பேரில் சொந்தங் கொண்டாடும் ஒரு நண்பனால் நீ இக்கட்டான நிலையில் வைக்கப்படுபவனாக இருக்கையில் என்ன? அப்படியானால், “நீ உன் அயலானுடனே மாத்திரம் உன் வியாஜ்யத்தைக் குறித்து வழக்காடு.” நீ எப்படி உணருகிறாய் என்பதை உன்னுடைய நண்பன் அறிந்துகொள்ளும்படிச் செய். (நீதிமொழிகள் 25:9) நீ மற்ற ஆட்களிலும், காரியங்களிலும் அக்கறை எடுப்பது உன் நண்பனுக்கு அதிக வேதனையைக் கொடுப்பதாக இருக்கலாம். அவனோ அல்லது அவளோ இது உன்னுடைய நட்பின் முடிவை குறிக்கிறது என்று பயப்படலாம். இது அப்படியல்ல, உன் உறவில் விரிவாகும்படியே நீ வெறுமென நாடுகிறாய் என்பதை உன் சிநேகிதனுக்கு உறுதிப்படுத்து.
அவமரியாதை
ஆராய்ச்சியாளர்கள் யூனிஸும், ஸ்மோலரும், “அவமரியாதையான செயல்கள்”, பருவ வயதினரிடையே இருக்கும் சச்சரவுகளுக்கு பொதுவாக ஒரு காரணமாக இருப்பதாக கண்டிருக்கிறார்கள். ‘அவன் என்னை பெயர்சொல்லி அழைத்தான்!’ அல்லது ‘அவள் மற்றவர்கள் முன் என்னைச் சிறுமைப்படுத்தினாள்!’ என்று புகார் சொல்வது சாதாரணமாக இருக்கிறது. உண்மைதான், நாம் நேசிக்கும் ஒருவரால் இரக்கமற்ற விதத்தில் நடத்தப்பட்டால் அது புண்படுத்துகிறது. ஆகிலும், நாம் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பது, பெரும்பாலும் நாம் மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இயேசு சொன்னதாவது: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” நீ இந்த மிக முக்கியமான கட்டளையை உன்னுடைய நட்புறவுகளில் மேலும் அதிக அளவு பொருத்திக்கொள்வது ஒருவேளை தேவையாக இருக்குமா?—மத்தேயு 7:2, 12.
நீ சிந்திக்கவேண்டிய மற்றொரு கேள்வியானது, அதிகமாக பேசுவதனால் அல்லது முட்டாள்தனமாக பேசுவதன் மூலம் நீ உன்னை கேலிக்கு ஆளாக ஆக்கிக்கொண்டிருக்கிறாயா என்பது. (நீதிமொழிகள் 15:2) அப்படியானால், நீ ஒருவேளை சில மாற்றங்களை செய்யவேண்டியதாக இருக்கலாம். இயேசு பூமியில் இருந்தபோது, அவருடைய விரோதிகளின் மரியாதையைக்கூட அவர் உடையவராய் இருந்தார். ஆனால் அது இயேசு சுற்றித்திரிந்து, ஜனங்கள் அந்தப்படி அவரை நடத்தவேண்டுமென்று கேட்டதனாலல்ல. இல்லை, அவர் மற்றவர்கள் தன்னை மரியாதையுடன் நடத்தும்படி செய்யும் விதத்தில் அவர் நடந்துகொண்டார். “வார்த்தையிலும் நடக்கையிலும்” ஒரு முதிர்ச்சியன கிறிஸ்தவ மாதிரியை வைப்பதன் மூலம் நீயும்கூட அதே காரியத்தை சாதிக்கலாம்.—1 தீமோத்தேயு 4:12.
அவமரியாதையான நடத்தை முற்றிலும் அவசியமற்றதாக இருக்கையில் எப்படி? இந்தச் சமயத்திலும் நீ வாய் திறந்து பேசவேண்டும். ‘மற்றொரு கன்னத்தைத் திருப்பிச்கொடுப்பது,’ நியாயமற்ற நடத்துதலை மெளனமாக சகிக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்தாது. (மத்தேயு 5:39; 2 கொரிந்தியர் 11:20-ஐ ஒப்பிடவும்.) ஆகையால் உன் நண்பனுடன் “உண்மையை பேசி”, அவன் அல்லது அவளுடைய நடத்தை உன்னை எவ்வாறு பாதிக்கிறது என்று ஏன் தெரிவிக்கக்கூடாது? (எபேசியர் 4:25) காரியத்தை அமைதலோடு அணுகி, உன் நட்பை பாதுகாக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் பேசு—பழிவாங்க வேண்டுமென்றல்ல.
“‘நீ என்னை குப்பையாக பாவிக்கிறாய்!’ போன்ற வார்த்தைகளைச் சொல்வதை தவிர்க்க முயற்சி செய்” என்று பருவவயது என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை சிபாரிசு செய்தது. “மாறாக, நீ எப்படி உணருகிறாய் என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்து: ‘மற்ற பெண்கள் முன்னிலையில் என்னை கேலி செய்யும்போது அல்லது அசட்டை செய்யப்படும்போது நான் புண்படுகிறேன், சங்கடமான நிலையில் வைக்கப்படுகிறேன். என்னைப் பற்றி நீ கவலைகொள்வதில்லை என்று நான் உணரும்படி அது என்னைச் செய்கிறது. அதைப்பற்றி நாம் பேசுவோமா?’”
சமான்தா ஒரு சிநேகிதியோடு இத்தகைய ஒரு கவலையோடுகூடிய பேச்சை நடத்த கட்டாயப்படுத்தப்பட்டாள். அவளுடைய சிநேகிதி அவளுடைய முதுகுக்குப் பின்னால் தனக்கு விரோதமாக பேசிக்கொண்டிருந்தாள் என்பதைக் கண்டுபிடித்தாள். அதைப்பற்றி அவளிடம் பேச சமான்தா தீர்மானித்தாள். “முதலில் நான் பயந்தேன், ஆனால் அப்படிச் செய்தது சரிதான்,” என நினைவுகூருகிறாள். சில மனஸ்தாபங்கள் இதில் உட்பட்டிருந்தன, மேலும் அவளுடைய சிநேகிதியின் பேச்சுகள் தனக்கு அறிக்கை செய்யப்பட்டதுபோல் அவ்வளவு கெட்டவையாக இல்லை என்பதை சமான்தா தெரிந்துகொண்டாள். (நீதிமொழிகள் 15:22) “இப்போது நாங்கள் முன்பைவிட நல்ல சிநேகிதிகளாக இருக்கிறோம்” என்று சமான்தா கூறுகிறாள்.
சிநேகிதர்களிடையேயுள்ள எல்லாச் சச்சரவுகளுக்கும் அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சிகரமான முடிவு இருப்பதில்லை என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். மேலும் உன்னுடைய நண்பன் மாறுதல்களைச் செய்துகொள்ள விரும்பாமல், சுயநலமுள்ளவனாக, கரிசனையற்றவனாக அல்லது உன்னுடைய உணர்ச்சிகளைக் குறித்து அக்கறையற்றவனாக தொடர்ந்து இருப்பானாகில், வேறு தோழமையை தேடுவதற்கு இது சரியான நேரமாக இருக்கும். (நீதிமொழிகள் 17:17) சாதாரணமாக, உங்கள் இருவர் பங்கிலும் தீர்மானமும் முயற்சியும் இருந்தால், நட்பு காப்பாற்றப்படும். ஒரு நல்ல நட்பு கொண்டுவரக்கூடிய ஆழ்ந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், அப்பேர்ப்பட்ட முயற்சி பிரயோஜமுள்ளதாக இருக்குமல்லவா?—நீதிமொழிகள் 27:9. (g89 9/22)
[பக்கம் 24-ன் படம்]
சொந்தங் கொண்டாடும் நபர் நண்பனை தனக்குச் சொந்தமான ஒரு பொருளைப்போல் நடத்துகிறான்