மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 17: 1530 முதற்கொண்டுபுராட்டஸ்டன்ட் மதம்—ஒரு சீர்திருத்தமா?
“புதுப்புனைவு சீர்திருத்துவதற்கு அல்ல.” எட்மண்டு பர்க், 18-வது நூற்றாண்டு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்
புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் உண்மையான கிறிஸ்தவ மதத்தைத் திரும்ப நிலைநாட்டியிருக்கிறது என்பது புராட்டஸ்டன்ட் சரித்திராசிரியர்களின் கருத்து. மறுபட்சத்தில் கத்தோலிக்க அறிஞர்களோ அது இறைமையியல் தவற்றில் விளைந்திருக்கிறது என்பதாகக் கூறுகின்றனர். என்றபோதிலும், மத சரித்திரத்தின் பின்னோக்கும் கண்ணாடி காண்பிப்பது என்ன? புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் உண்மையிலேயே ஒரு சீர்திருத்தமா, அல்லது மாசுபட்ட ஒரு வணக்க முறையை இன்னொன்றாக மாற்றிடும் வெறும் ஒரு புதுப்புனைவா?
கடவுளுடைய வார்த்தைக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கப்படுகிறது
புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் வேத வசனங்களின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினர். அவர்கள் பாரம்பரியங்களை மறுத்தனர், என்றபோதிலும் மார்ட்டின் மார்ட்டி, கிறிஸ்தவ நூற்றாண்டு பத்திரிகையின் மூத்த ஆசிரியர் சொல்லுவதாவது, கடந்த நூற்றாண்டில் “அதிகமதிகமான புராட்டஸ்டன்ட் மதத்தினர் பைபிளுக்கும் பாரம்பரியத்துக்கும் இடையே ஒரு தொடர்பைக் காண மனமுள்ளவர்களாயிருந்திருக்கின்றனர்.” என்றபோதிலும் அவர்களுடைய “மூதாதைய விசுவாசிகளைக்” குறித்ததில் இது உண்மையாக இல்லை. ஆகிலும் அவர்களுக்கு “பைபிள் ஒரு விசேஷ அந்தஸ்தையுடையதாயிருந்தது, பாரம்பரியமோ அல்லது போப்பின் அதிகாரமோ அதற்கு இணையாக இருப்பதற்கில்லை.”
இந்த மனப்பான்மைதானே மொழிபெயர்ப்பிலும், விநியோகிப்பிலும், பைபிளைப் படிப்பதிலும் இருக்கும் அக்கறைக்குப் புதுவேகம் அளித்தது. பதினைந்தாவது நூற்றாண்டின் இடைப்பகுதியில்—சீர்திருத்த சக்கரங்கள் பாதையில் செலுத்தப்படுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்—லூத்தரின் உடன் ஜெர்மானியன் ஜொஹனஸ் கட்டன்பர்க் தோன்றவிருந்த புராட்டஸ்டன்ட் மதத்திற்கு ஒரு பயனுள்ள உபகரணத்தை அளித்தார். அச்சு எழுத்துக்களை மாற்றிப்பொருத்திடும் ஓர் அச்சு முறையைக் கண்டுபிடித்த கட்டன்பர்க் அச்சில் வெளியான முதல் பைபிளை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பில் சாதனைக்குரிய வாய்ப்புகள் உள்ளடங்கியிருப்பதைக் கண்ட லூத்தர், அச்சடித்தல் “உண்மை மதத்தை உலகமுழுவதும் பரப்பிட கடவுளுடைய நவீனமானதும் மிகச் சிறந்ததுமான முறையாக இருக்கிறது” என்றார்.
இப்பொழுது அதிகமான ஆட்கள் தங்களுடைய சொந்த பைபிளைக் கொண்டிருக்க முடிந்தது. இது கத்தோலிக்க சர்ச் ஆதரிக்காத ஒரு முன்னேற்றமாக இருந்தது. சர்ச்சின் அங்கீகாரமின்றி பிராந்திய மொழியில் எந்தப் பைபிளும் அச்சடிக்கப்படக்கூடது என்று 1559-ல் போப் பால் IV சட்டம் விதித்தார்; அச்சடிப்பதற்கு அனுமதியளிக்கவும் சர்ச் மறுத்து விட்டது. உண்மையில், 1564-ல் போப் பயஸ் IV பின்வருமாறு கூறினார்: “பைபிளைப் பொதுவழக்கிலுள்ள மொழியில் வாசிப்பதற்குக் கட்டுப்பாடின்றி அனுமதி அளிக்கப்பட்டால், . . . அதிலிருந்து நன்மையைவிட தீமையே அதிகமாக ஏற்படுகிறது என்று அனுபவம் காண்பிக்கிறது.”
சீர்திருத்தம் ஒரு புதிய வகைக் “கிறிஸ்தவத்தை” உண்டுபண்ணியது. போப்புடைய அதிகாரத்திற்குப் பதிலாக தனிப்பட்டவர்களின் சுயாதீனத் தெரிவு இடம் கண்டது. கத்தோலிக்கப் பூசைக்குப் பதிலாக நற்கருணை ஆராதனை இடம் பெற்றது. பிரமாண்டமான கத்தோலிக்கக் கத்தீட்ரல் ஆலயங்களுக்குப் பதிலாக சாதாரணமாகப் பகட்டில் குறைவான புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் உருவாயின.
எதிர்பாராத நன்மைகள்
முதலில் மத இயல்புடையதாய் இருக்கும் இயக்கங்கள் பின்னர் பொதுவாக சமூக மற்றும் அரசியல் நிழல் படிந்ததாகிவிடுகின்றன என்பது சரித்திரம் நமக்குக் கற்பிக்கும் பாடம். இது புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் குறித்ததிலும் உண்மையாய் நிரூபித்திருக்கிறது. கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சரித்திரப் பேராசிரியர் இயூஜீன் F. ரைஸ், இளையவர் விவரிக்கிறார்: “இடைக் காலத்தில் மேற்கத்திய சர்ச் ஓர் ஐரோப்பிய சங்கமாக இருந்தது. பதினாராவது நூற்றாண்டின் முதல் பாதியின் போது அது ஏராளமான பிராந்திய சர்ச்சுகளாகப் பிரிந்தன. . . . [இவற்றின் மீது] தேசங்களின் அரசர்கள் ஒரு மேலான அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். இதுதான் அரசு மற்றும் மத அதிகாரத்திற்கிடையிலான நீடித்தப் போரட்டத்தில் விளைவடைந்தது. . . . அதிகாரத் தராசுத் தட்டுகள் தெளிவாகவே நிலையற்றிருந்தது, கடைசியில் சர்ச்சிலிருந்து அரசுக்கும், மதகுருவிலிருந்து பாமரருக்குமாக மாறியது.”
இது தனிப்பட்ட நபருக்குக் கூடுதல் சுயாதீனத்தை அர்த்தப்படுத்தியது, மதத்திலும் அரசியலிலும் அப்படியாக இருந்தது. கத்தோலிக்க மதத்தைப் போலில்லாமல், புராட்டஸ்டன்ட் மதம் கொள்கை அல்லது செயல்முறை ஆகியவற்றைக் கவனித்துச் செயல்படுத்த ஒரு மைய ஸ்தபனத்தைக் கொண்டில்லாமல் இருந்தது, இப்படியாக ஒரு பரந்த மத அபிப்பிராயம் வடிவெடுத்தது. இது, மெதுமெதுவாக மத சகிப்புத் தன்மையையும் தாராளமாகக் கருத்தைப் பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையையும் வளர்த்தது. இது அந்தச் சீர்திருத்தத்தின் போதும் புரியாத ஒரு காரியமாயிருந்தது.
முன்னதாக பயன்படுத்தப்படாத சக்திகளைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் சுயாதீனம் புறப்பட்டது. நம்மை இந்த நவீன சகாப்தத்திற்குள் வற்புறுத்தக் காரணமாயிருந்த சமூக, அரசியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தூண்டுவிப்பதற்கு அவசியமாயிருந்த ஓர் ஊக்கியாக இருந்தது என்று சிலர் உரிமைப்பாராட்டுகின்றனர். புராட்டஸ்டன்ட் வேலை நெறிமுறை “அரசு மற்றும் அனுதின வாழ்க்கைக்கு வடிக்கப்பட்டது,” என்று காலஞ்சென்ற ஆசிரியர் தியோடர் வைட் எழுதுகிறார். “மனிதன் மதகுருக்களின் தலையிடுதல் அல்லது மத்தியஸ்தம் இல்லாமல் தன்னுடைய மனச்சாட்சிக்கும் செயல்களுக்கும் மனிதன் கடவுளுக்கே நேரடியாகப் பொறுப்புள்ளவனாகிறான் என்ற மதக் கோட்பாட்டை” அவர் விளக்கினார். “ஒருவன் கடினமாக வேலை செய்தால், ஆழமாக உழுதால், தளர்ச்சி அல்லது சோம்பலுறாமலிருந்து தன்னுடைய மனைவியையும், பிள்ளைகளையும் கவனித்து வந்தால், அதிர்ஷ்டம் அல்லது கடவுள் அவனுக்குப் பலனளிப்பார்.”
புராட்டஸ்டன்ட் மதத்தின் நம்பிக்கையான அம்சங்கள் அதன் குறைகளுக்கு நம்முடைய கண்களை மூடிவிடவேண்டுமா? புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் “ஏராளமான தீமைகளுக்கு வாய்ப்பாக அமைந்தன” என்று மதம் மற்றும் நெறிமுறை என்சைக்ளோபீடியா கூறுகிறது. மேலும்: “ஜெசுவிட் மதமும் முரண்மதக் கோட்படுகளை ஒடுக்கிய சகாப்தமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. . . . அதைவிட சற்று குறைவானது தொடர்ந்தது. இடைக்காலத்தில் நேர்மையான அறியாமை அதிகமாக இருந்தது என்றால், இப்பொழுது ஒழுங்கமைக்கப்பட்ட பொய்மை அதிகமாக இருக்கிறது.”
“ஒழுங்கமைக்கப்பட்ட பொய்மை”—எந்த விதத்தில்?
அது “ஒழுங்கமைக்கப்பட்ட பொய்மை”யாக இருந்தது, ஏனென்றால் புராட்டஸ்டன்ட் மதம் கோட்பாட்டு சீர்திருத்தத்தைச் செய்வதற்கு வாக்களித்தது, ஆனால் அதை அளித்திட தவறியது. பெரும்பாலும் சீர்திருத்தவாதிகளின் சினத்தைத் தூண்டிய காரியம் சர்ச் கொள்கைகளே தவிர, கோட்பாட்டில் காணப்படும் உண்மையற்றத்தன்மை அல்ல. புராட்டஸ்டன்ட் மதம் பெருமளவில் கத்தோலிக்க மதத்தின் புறமத கலப்புடைய மதக் கருத்துகளையும் பழக்கங்களையும் அப்படியே வைத்திருந்தது. எப்படி? ஒரு முக்கியமான உதாரணம் திரித்துவக் கொள்கையாகும். சர்ச்சுகளின் புராட்டஸ்டன்ட் உலக சபையின் உறுப்பினராயிருப்பதற்கு இதுதானே அடிப்படையாயிருக்கிறது. ‘பைபிளில் எந்த இடத்திலும் இந்தக் கோட்பாடு திட்டவட்டமாகக் கற்பிக்கப்படவில்லை என்பதை இன்று விரிவுரையாளரும் இறைமையியலரும்’ ஒப்புக்கொள்கிறனர் என்று மத என்சைக்ளோபீடியா ஏற்றுக்கொள்கிற போதிலும் இந்தக் கொள்கை மிகவும் பலமாக பற்றிக்கொள்ளப்படுகிறது.
புராட்டஸ்டன்ட் மதம் ஊழல் மிகுந்த சர்ச் அரசை சீர்திருத்தினதா? இல்லை, மாறாக, அது “இடைக்காலத்து கத்தோலிக்க மதத்திலிருந்து அதிகார மாதிரிகளைக் கடத்தியது” என்றும் “வெறுமென புராட்டஸ்டன்ட் கருத்துப் பாங்குகளை அமைத்திட ரோமன் கத்தோலிக்க ஸ்தபனத்திலிருந்து பிரிந்தது,” என்றும் மார்ட்டின் மார்ட்டி கூறுகிறார்.
புராட்டஸ்டன்ட் மதம் ‘விசுவாசத்தில் ஒருமைப்பாட்டை’ திரும்ப நிலைநாட்டிட வாக்களித்தது. என்றபோதிலும், பிளவுபட்ட அநேக புராட்டஸ்டன்ட் மதப் பிரிவுகள் வளர்ந்திட, இந்த பைபிள் வாக்குத்தத்தம் நிறைவேற்றமடையாமற் போனது.—எபேசியர் 4:13.
ஒழுங்கமைக்கப்பட்ட குழப்பம்—ஏன்?
இன்று, 1991-ல், புராட்டஸ்டன்ட் மதம் அநேக மதப் பிரிவுகளாகவும் தொகுதிகளாகவும் உடைந்திருப்பதால், அவற்றின் மொத்த எண்ணிக்கையைத் தீர்மானிப்பது கூடாத காரியமாக இருக்கிறது. ஒருவர் எண்ணிமுடிப்பதற்குள் புதிய தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும், அல்லது மற்றவை இல்லாமற் போயிருக்கும்.
என்றபோதிலும், உலக கிறிஸ்தவ என்சைக்ளோபீடியா கிறிஸ்தவ மண்டலத்தை (1980-ன் படி) “20,780 தனிக் கிறிஸ்தவ மதப் பிரிவு”களாகப் பிரித்துக் குறிப்பிடுவதன் மூலம் அந்த “முடியாத” காரியத்தை மேற்கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையானவை புராட்டஸ்டன்ட் மதப்பிரிவுகளாகும்.a அவற்றில் 7,889 பிரபலமாயிருக்கும் புராட்டஸ்டன்ட் தொகுதிகளும், பெரும்பாலும் வெள்ளையரல்லாத 10,065 புராட்டஸ்டன்ட் பழந்தொகுதிகளும், 225 ஆங்கிலேய மதப் பிரிவுகளும், 1,345 இதர புராட்டஸ்டன்ட் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன.
“ஆரோக்கியம் மற்றும் நோய்க்குரிய அடையாளம்” என்று அழைக்கப்படும் இந்தக் குழம்பிய வேறுபாடுகள் எவ்விதம் ஏற்பட்டன என்பதற்கு விளக்கமளிக்கும் வகையில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவம் குறிப்பிடுவதாவது, அதற்கு “மனிதனின் ஆக்கப்பண்பும் மனிதனின் வரம்பும் காரணமாயிருக்கக்கூடும்; இன்னும் அதிகமாக, வாழ்க்கையின்பேரில் தங்களுடைய சொந்த நோக்குநிலையைக் குறித்து அதிக உயர்வாகக் கருதும் அகந்தையுள்ள மனிதரும் காரணமாயிருக்கக்கூடும்.”
எவ்வளவு உண்மையாயிருக்கிறது! தெய்வீக சத்தியத்திற்குப் போதியளவு கவனம் செலுத்தாமல், இரட்சிப்பை, விடுதலையை, அல்லது நிறைவேற்றத்தைக் காண்பதற்கு இந்த அகந்தையுள்ள மனிதர் புதிய வழிகளை முன்வைக்கின்றனர். மதப் பன்மைவாதத்திற்கு பைபிளில் எந்தவித ஆதரவும் கிடையாது.
மதப் பன்மைவாதத்தைப் பரப்புவதில், கடவுள் தொழுதுகொள்ளப்படுவதற்கு எந்தக் குறிப்பான வழிநடத்துதலையும் கொண்டில்லை என்று புராட்டஸ்டன்ட் மதம் கருதுவதாய்த் தெரிகிறது. இப்படியாக ஒழுங்கமைக்கப்பட்ட குழப்பம் சத்தியமுள்ள கடவுளுக்கு, “கலகத்திற்குத் தேவனாயிராமல் சமாதானத்திற்கு தேவனா”யிருக்கிறார் என்று பைபிள் கூறும் கடவுளுக்குப் பொருந்துவதாயிருக்கிறதா? அநேக சமயங்களில் கேள்விப்படுகிறது போல், உங்களுக்கு விருப்பமான சர்ச்சுக்குப் போங்கள் என்ற புராட்டஸ்டன்ட் மனப்பான்மை ஆதாம் ஏவாளைத் தவறான நம்பிக்கைக்கும் அதைத் தொடர்ந்த துன்பங்களுக்கும் வழிநடத்திய சுதந்திர எண்ணத்திலிருந்து எவ்விதத்திலாவது வித்தியாசப்படுகிறதா?—1 கொரிந்தியர் 14:33; ஆதியாகமம் 2:9, 3:17–19-ஐ பாருங்கள்.
பைபிளின் விசேஷ அந்தஸ்தை அசட்டை செய்தல்
ஆரம்ப சீர்திருத்தவாதிகள் பைபிளுக்கு விசேஷ அந்தஸ்து அளித்த போதிலும், புராட்டஸ்டன்ட் இறைமையியலர், பின்னர் பைபிள் எழுத்துக்களின் அமைவு, காலம், வாய்மை ஆகியவற்றை ஆய்வுசெய்தலுக்குத் தந்தையராய், “பைபிள் வசனங்களை எந்த ஒரு பூர்வீக இலக்கியப் பகுதிகளை ஆய்வு செய்தலைப் போன்று கையாளுகின்றனர்,” என்கிறார் மார்ட்டி. அவர்கள் “தேவாவியால் ஏவப்பட்டு எழுதிய பைபிள் எழுத்தாளருக்கு எந்த ஒரு விசேஷ அந்தஸ்தையும் அளிக்கவில்லை.”
பைபிள் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதைக் கேள்வி கேட்பதன் மூலம், புராட்டஸ்டன்ட் மதத்தின் அஸ்திபாரம் என்று சீர்திருத்தவாதிகள் நினைத்த அந்த விசுவாசத்தையே புராட்டஸ்டன்ட் இறைமையியலர் மட்டுப்படுத்திவிடுகின்றனர். இது நம்பிக்கையின்மை, சிந்தனைச் சுதந்தரம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றிற்கு வழியைத் திறந்தது. அநேக அறிஞர்கள் சீர்திருத்தத்தை நவீன மதச்சார்பின்மைக்கு முக்கிய காரணம் என்று கருதுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.
அரசியலில் சிக்கிக்கொண்டது
தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளும் அவர்களைப் பின்பற்றியவர்களும் நல்நோக்குடையவர்களாய் இருந்தபோதிலும், புராட்டஸ்டன்ட் மதம் உண்மை கிறிஸ்தவ மதத்தைத் திரும்ப நிலைநாட்டவில்லை என்பதை மேற்கூறிய கனிகள் தெளிவுபடுத்துகின்றன. கிறிஸ்தவ நடுநிலைமையின் மூலம் சமாதானத்தை வளர்ப்பதற்குப் பதிலாக அது தேசப்பற்றில் சிக்கிக் குழம்பியிருக்கிறது.
கிறிஸ்தவமண்டலத்தில் கத்தோலிக்க தேசங்கள், புராட்டஸ்டன்ட் தேசங்கள் என்ற பிளவு உண்மையான ஒன்றான உடனேயே இது தெளிவாயிற்று. கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் சேனைகள் ஐரோப்பா கண்டத்தினூடே ஒரு டஜன் போர்களுக்கு மேல் தொடுத்து இரத்தப் பாதையை ஏற்படுத்தின. தி நியு என்சைக்ளோபீடியா பிராட்டானிக்கா அவற்றை “1520-களின் ஜெர்மானிய மற்றும் சுவிஸ் சீர்திருத்தத்தால் கிளறப்பட்ட மதப் போர்கள்,” என்று அழைக்கிறது. இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது முப்பது ஆண்டு போர் (1618–48), இது ஜெர்மன் புராட்டஸ்டன்ட்டுகளுக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே அரசியல் மற்றும் மத வேற்றுமைகளை உட்படுத்தியது.
இங்கிலாந்திலும் இரத்த வெள்ளம் ஓடியது. 1642 மற்றும் 1649-க்கு இடையே, அரசன் சார்ல்ஸ் I பாராளுமன்றத்துக்கு எதிராகப் போர் புரிந்தான். அரசனின் எதிராளிகள் பேரளவில் இங்கிலாந்து சர்ச்சின் பியூரிட்டன் பிரிவினராயிருந்ததால், அந்தப் போர் சிலசமயங்களில் பியூரிட்டன் புரட்சி என்று குறிப்பிடப்படுகிறது. அது அரசன் கொல்லப்பட்டதுடனும், ஆலிவர் கிராம்வெலின் கீழ் மிகக் குறுகிய காலமே இருந்த பியூரிட்டன் மக்கள் பொது உரிமையரசு ஸ்தபிக்கப்பட்டதுடனும் முடிவுக்கு வந்தது. என்றபோதிலும் இந்த ஆங்கிலேய உள்நாட்டுப் போர் பெருமளவுக்கு ஒரு மதப் போரட்டமல்ல, எந்தப் பக்கத்தின் சார்பாயிருப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு மதம் அடிப்படை அம்சமாயிருந்தது என்பதை சரித்திராசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இந்தப் போரின் போது, நண்பர்கள், அல்லது நண்பர் கழகம் தோன்றியது. இந்தத் தொகுதி அதன் புராட்டஸ்டன்ட் “சகோதரர்களிடமிருந்து” பலமான எதிர்ப்பைக் கண்டது. பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் சிறையில் மரித்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் தகாத முறையில் நடத்தப்பட்டனர். ஆனாலும் அந்த இயக்கம் பரவியது. இது அமெரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் குடியிருப்புகளுக்கும் பரவியது. இங்கு ஒரு நண்பர் குடியிருப்பை அல்லது குவேக்கர் காலனியை ஏற்படுத்துமாறு சார்ல்ஸ் II வில்லியம் பென்னுக்கு ஒரு சாசனத்தை அனுப்பினார், இந்தக் குடியிருப்பு பின்னர் பென்சில்வேனியா மாகாணமாயிற்று.
அயல்நாடுகளில் மதம் மாற்றும் காரியத்தை நாடுவதில் குவேக்கர்கள் தனித்து இல்லை. ஏனென்றால் மற்ற மதங்கள் அவ்விதம் செய்திருக்கின்றனர். என்றபோதிலும், இப்பொழுது, புராட்டஸ்டன்ட் “புதுமைப் புனைவுக்குப்” பின்னர், கத்தோலிக்கர் ஒரு திரளான புராட்டஸ்டன்ட் பிரிவினருடன் சேர்ந்து சத்தியம் மற்றும் சமாதானத்தின் பேரிலான கிறிஸ்துவின் செய்தியை “அவிசுவாசிகளுக்கு” கொண்டுசெல்வதற்கான தங்களுடைய முயற்சிகளை அதிகரிக்க ஆரம்பித்தனர். ஆனால் என்னே முரண்! “விசுவாசிகளாக” கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்டினரும் தெய்வீக சத்தியத்தின்பேரில் ஒரு பொது விளக்கத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர்கள் உண்மையிலேயே சகோதர ஐக்கியத்தையும் அமைதியையும் வெளிப்படுத்துவதில் தவறிவிட்டனர். இந்த நிலைமையின்கீழ், “‘கிறிஸ்தவர்களும்’ ‘புறமதத்தினரும்’ சந்தித்தபோது” எதை எதிர்பார்க்கக்கூடும்? எமது அடுத்த இதழில் 18-வது தவணைப் பகுதியை வாசியுங்கள். (g89 9/8)
[அடிக்குறிப்புகள்]
a 1982-ல் பிரசுரிக்கப்பட்ட இந்தக் குறிப்பு நூல், 1985 போல் 22,190 பிரிவுகள் இருக்கும் என்பதை இப்படியாகச் சொன்னது: “தற்போதைய மொத்த அதிகரிப்பு ஆண்டு ஒன்றுக்கு 270 புதிய பிரிவுகளாக இருக்கிறது (வாரத்திற்கு 5 புதிய பிரிவுகள்).”
[பக்கம் 25-ன் பெட்டி]
சீர்திருத்தத்தின் ஆரம்ப கால பிள்ளைகள்
ஆங்கிலிக்கன் நற்கருணை: 25 தன்னாட்சி உரிமை கொண்ட சர்ச்சுகளும் இங்கிலாந்து சர்ச்சுடன் கோட்பாடு, ஆட்சி அமைப்பொழுங்கு, மற்றும் நற்கருணை அலுவலகம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் மற்ற 6 சர்ச் தொகுதிகளும் ஆர்ச்பிஷப் ஆஃப் கேன்டர்பரியின் தலைமை அதிகாரத்தை ஏற்றிருக்கின்றன. என்சைக்ளோபீடியா ஆப் ரிலிஜன் சொல்லுகிறதாவது, ஆங்கிலிக்கன் “பிஷப்புகள் அப்போஸ்தலரின் வரிசையில் வந்தவர்கள் என்று அதில் உரிமைப்பாராட்டுகிறது, மற்றும் சீர்திருத்தத்துக்கு முன்பிருந்த பழக்கங்களைக் காத்துக்கொண்டிருக்கிறது.” அதன் வணக்கத்தின் மையமாக இருப்பது, பொது ஜெப புத்தகம், “புழக்கத்தில் இருக்கும் சீர்திருத்தக் காலத்திய ஒரே பிராந்திய மொழி நற்கருணை ஏடு.” ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஆங்கிலிக்கன் பிரிவினர் இங்கிலாந்து சர்ச்சிலிருந்து பிரிந்து 1789-ல் புராட்டஸ்டன்ட் எபிஸ்கோபல் சர்ச்சாகத் தங்களை அமைத்துக்கொண்டனர். ஆங்கிலிக்கன் சரித்திரம் முதல் பெண் பிஷப்பை ஏற்படுத்துவதன் மூலம் மறுபடியும் 1989-ல் பாரம்பரியத்திலிருந்து பிரிந்தது.
பாப்டிஸ்ட் சர்ச்சுகள்: 369 பிரிவுகள் (1970) முழுக்காட்டுதல் மூலம் கொடுக்கப்படும் பெரியவர்களுக்கான ஞானஸ்நானத்தை அறிவுறுத்திய 16-வது நூற்றாண்டு மறுஞானஸ்நானக் கோட்பாட்டாளரில் ஆரம்பத்தைக் கொண்டவை. மத என்சைக்ளோபீடியா சொல்லுகிறதாவது, “பர்ப்டிஸ்ட்டுகள் அமைப்பு அல்லது இறைமையியல் சார்ந்த ஐக்கியத்தைக் காத்துக் கொள்வதைக் கடினமாகக் கண்டனர்,” என்றும் “ஐக்கிய மாகாணங்களிலுள்ள பாப்டிஸ்ட் குடும்பம் பெரியது, . . . ஆனால் மற்ற எந்த ஒரு பெரிய குடும்பத்திலிருப்பது போன்று, சில அங்கத்தினர் மற்ற அங்கத்தினருடன் பேசுவதில்லை.”
லூதரன் சர்ச்சுகள்: 240 பிரிவுகள் (1970), எந்த ஒரு புராட்டஸ்டன்ட் தொகுதியிலும் மிக அதிக உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டிருப்பதாய் உரிமைபாராட்டுகின்றன. அவர்கள் “இன வேற்றுமை சார்ந்ததில் இன்னும் ஓரளவுக்கு (ஜெர்மானியர், சுவீடன் மக்கள் போன்று) பிரிந்தவர்களாயிருக்கின்றனர்,” என்று உலகப் பஞ்சாங்கமும் உண்மைகளின் நூலும் 1988 கூறுகிறது. என்றபோதிலும் “அடிப்படைப் பிரிவுகள் பைபிளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கேட்பாட்டாளருக்கும் பரந்த கொள்கையுடையோருக்கும் இடையிலானவை.” லூதரன்கள் தேசிய முகாம்களாகப் பிரிந்திருந்த காரியம் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது தெளிவாகக் காணப்பட்டது. அ.ஐ.மா. லூதரன் இறைமையியல் பள்ளியின் E.W. கிரிட்ஷ் கூறுகிறார், அப்பொழுது “லூதரன் குருக்களிலும் [ஜெர்மனியிலுள்ள] சபைகளிலும் ஒரு சிறுபான்மையினர் ஹிட்லரை எதிர்த்தனர், ஆனால் லூதரன்களில் பெரும்பான்மையினர் அமைதியாக இருந்தனர், அல்லது நாசி ஆட்சியுடன் இணைந்து மிக மும்முரமாக ஒத்துழைப்பு அளித்தனர்.”
மெத்தடிஸ்ட் சர்ச்சுகள்: 188 பிரிவுகள் (1970) 1738-ல் ஜான் வெஸ்லியால் ஏற்படுத்தப்பட்ட சர்ச் ஆஃப் இங்கிலாந்திலிருந்து எழுந்த ஓர் இயக்கம். அவருடைய மரணத்திற்குப் பின்னர் இது ஒரு தனி தொகுதியாகப் பிரிந்தது; ஒரு மெத்தடிஸ்ட்டை “பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வகையில் வாழ்கிறவன்,” என்று வெஸ்லி விளக்கினார்.
ரிஃபார்ம்டு சர்ச்சுகளும் பிரஸ்பிடேரியன் சர்ச்சுகளும்: ரிஃபார்ம்டு சர்ச்சுகள் (1970-ல் 354 பிரிவுகள்) கோட்பாட்டு விஷயங்களில் லூதரன்களாயிருப்பதற்குப் பதிலாக ஜான் கால்வினின் இறைமையியல் கொள்கையினர், மற்றும் தங்களைச் “சீர்திருத்தப்பட்ட கத்தோலிக்க சர்ச்”சாகக் கருதுகின்றனர். “பிரஸ்பிடேரியன்” மூப்பர்களாலான (பிரஸ்பிட்டர்ஸ்) ஒரு சர்ச் அரசைக் குறிக்கிறது; அனைத்து பிரஸ்பிட்டேரியன் சர்ச்சுகளும் ரிஃபார்ம்டு சர்ச்சுகள்தான், ஆனால் ரிஃபார்ம்டு சர்ச்சுகள் அனைத்துமே பிரஸ்பிடேரியன் அரசு முறையை உடையதாயில்லை.
[பக்கம் 22-ன் படம்]
இலத்தீன் மொழியில் கட்டன்பர்க் பைபிளின் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு பக்கம்
[படத்திற்கான நன்றி]
By permission of The British Library
[பக்கம் 23-ன் படங்கள்]
கட்டன்பர்கும் அவருடைய அச்சு இயந்திரமும்
[பக்கம் 24-ன் படம்]
ஜான் வெஸ்லி, மெத்தடிஸ்ட் சர்ச் ஸ்தாபகர் (1738)