“நாங்கள் கடவுளைக் குற்றஞ்சாட்டுவதில்லை”
1988 டிசம்பரில், 259 பயணிகளோடு, பான் அமெரிக்க விமானம் 103, பயங்கரவாதிகளின் செயலால் விண்ணிலிருந்து வெடித்து நொறுங்கியபோது, காலோவேயின் ரோமன் கத்தோலிக்க பிஷப், மாரீஸ் டேய்லர், கடவுளைப் பற்றி கசப்பான வார்த்தைகளைச் சொன்னார்:
“பிதாவே, நீர் அன்பின் தேவனாக இருந்தால், ஏன் இது சம்பவிக்கும்படியாக அனுமதித்தீர்? பழிபாவமறியாத நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கை அழிவதை நீர் ஏன் அனுமதித்தீர்? லாக்கர்பையின் குடிமக்கள் 10 பேரை? லாக்கர்பையைக் குறித்துக் கேள்விப்படாத அநேகருடைய வாழ்க்கை ஏன் இத்தனை அதிர்ச்சியூட்டும் வண்ணம் ஸ்கட்லாந்தின் இந்தப் பகுதியின் தெருக்களிலும் வயல்வெளிகளிலும் முடிவடைந்தது? இத்தனை அநேகர் ஏன் இழப்பின் கொடுமையான சோகச் சுமையை அனுபவிக்கும்படியாக அனுமதிக்கிறீர்?”
பலியானவர்களில் ஐக்கிய மாகாணங்களிலுள்ள சிராக்குஸ் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் இருந்தனர். திருச்சபையைச் சேர்ந்த கன்னிமாடத் தலைவி மில்ட்ரட் சச்சுக் அணுகுண்டு வைத்த பயங்கரவாதிகளைப் பற்றி சொன்னதாவது: “நாம் அவர்களை நரகத்துக்குள் தள்ள வேண்டும்.”
செய்தி அறிக்கை ஒன்று சொன்னதாவது: “விமானப் பயண ஊழியர் பால் கேரட், 41, விமான பணியில் 15 ஆண்டுகளுக்குப் பின்பு, பாரீஸில் நவீன அலங்காரப் பொருட்கள் கடையொன்றைத் திறக்க திட்டமிட்டிருந்தார். ‘இதுவே அவருடைய கடைசி விமானப்பயணமாக இருந்தது பயங்கரமான சோகமாகும்’ என்பதாக கலிஃபோர்னியாவிலுள்ள மில்ப்ரேயில் ஜான் மாக்மைக்கல் என்ற நண்பர் கூறினார்.”
மில்ப்ரேயில் வாழ்ந்துவரும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பாலின் பெற்றோராகிய எர்னஸ்ட் மற்றும் நன்டீன் கேரடின் பிரதிபலிப்பு, காலோவேயின் பிஷப் மற்றும் சிராக்குஸ் கன்னிமாடத் தலைவியின் பிரதிபலிப்புகளுக்கு நேர் எதிர்மாறாக இருந்தது. பாலின் பெற்றோரின் பிரதிபலிப்பு, நியு யார்க் நகரிலுள்ள உடன்சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஓர் அனுதாபக் கடிதத்துக்கு அவர்கள் அனுப்பி வைத்த பதிலிலிருந்து தெரிகிறது:
உலகளாவிய ஒரு சகோதரத்துவம்
“கார்ல், உங்களுடைய சுறுசுறுப்பான அட்டவணையின் மத்தியிலும் எங்களுக்கு ஆறுதலான கடிதத்தை அனுப்பியிருப்பது மிகவும் தயவான செயலாகும். அநேக கடிதங்களில் இதுவும் ஒன்று. நார்வே, இத்தாலி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து காமரூன்—ஆகிய இடங்களிலுள்ள சாட்சிகளிடமிருந்து பெரும்பாலும் 600 கார்டுகளும், தந்திகளும், கடிதங்களும், உலகம் முழுவதிலுமிருந்து 250 பேர் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினார்கள். பான் அமெரிக்கன் விமானத்தில் பல ஆண்டுகளாக விமான பணியாளனாக பணிபுரிந்ததால் பாலுக்கு அநேக ஆட்களைத் தெரியும். பாரீஸ், சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் ஃப்ளோரிடாவிலுள்ள ஜாக்சன்வில்லில் ஞாபகார்த்த கூட்டங்கள் நடத்தப்பட்டன. மொத்தமாக இவைகளுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 1,385.
“எங்களுடைய சொந்த சபையிலும் அருகாமையிலுள்ள சபைகளிலுமுள்ள உள்ளூர் சாட்சிகள் எங்கள் வீட்டில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு, உணவு சமைப்பதற்காக கடைக்குச் சென்றனர், அதைச் சமைத்து தயாரித்து, எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து, ஒருவர் மாறி ஒருவர் எங்கள் வீட்டில் படுத்துக்கொண்டு, இரண்டு வாரங்கள் வரையாகவும் ஒரு கணமும் எங்களை தனியே இருக்க விடாமல், நாங்கள் இயல்பான நிலைக்கு வருவதை உறுதி செய்துகொண்டார்கள். உண்மையிலேயே, உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ‘தங்களுக்குள் அன்புள்ளவர்களாயிருக்கிறார்கள்.’—யோவான் 13:35.
“எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் அளிக்க அனுப்பப்பட்ட பான் அமெரிக்கப் பிரதிநிதி குறிப்பிட்டதாவது: “உங்களைத் தேற்றுவதற்காக நான் வந்தேன், ஆனால், மாறாக நான் தேற்றப்பட்டிருக்கிறேன். இந்த ஜனங்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக இருப்பதை நான் இந்தச் சந்தர்ப்பங்களில் கவனித்தேன்.” அவர் எதை அர்த்தப்படுத்துகிறார் என்பதாக கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: ‘இந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருவரில் ஒருவர் அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள்.’
“பைபிளைப் புரிந்துகொண்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ‘காலமும் எதிர்பாரா சம்பவமும்’ உயிர்களை பலிவாங்குவது எங்களுக்குத் தெரியும். (பிரசங்கி 9:11) இதைப் புரிந்து கொண்டிருப்பதால், கார்ல், காலோவேயின் கத்தோலிக்க பிஷப் செய்ததுபோல இந்தச் சோகச் சம்பவத்துக்கு நாங்கள் கடவுளை ஒருபோதும் அநியாயமாக நிந்திக்கவோ அல்லது தூஷிக்கவோ மாட்டோம். இல்லை, எங்களுடைய மகனின் மரணத்துக்காக நாங்கள் கடவுளை குற்றஞ்சாட்டுவதில்லை. பிஷப், உண்மையில், யெகோவா அன்பான கடவுளாக இல்லை என்பதாகச் சொல்லுகிறார்.—1 யோவான் 4:8.
“விமானம் நொறுங்கியதில் உறுப்பினர் ஒருவரை இழந்ததால், ‘நாம் அவர்களை நரகத்துக்குள் தள்ள வேண்டும்’ என்பதாகச் சொன்ன சிராக்குஸ் கன்னிமாடத் தலைவி செய்ததுபோல பயங்கரவாதிகளுக்கு எதிராக நாங்கள் பழிவாங்கவும் முயற்சி செய்வதில்லை. இப்படிப்பட்டக் காரியங்களை நாங்கள், “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்” என்று சொல்லும் கடவுளிடம் விட்டுவிடுகிறோம்.—ரோமர் 12:19.
“கடைசியாக, ஆனால் அற்பமானதாக இல்லாதிருப்பது நாங்கள் எங்களுடைய அன்பு மகனைத் திரும்பவும் பார்க்கும் வரையாக ஒவ்வொரு நாளும் எங்களைக் காக்க வல்லது உயிர்த்தெழுதல் நம்பிக்கையாகும். “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்பதாக யோபு என்ற மனிதன் வெகு காலத்துக்கு முன்பாகக் கேட்டான். ஆம், பைபிள் ஏசாயா 26:19-ல் அந்தக் கேள்விக்குப் பதிலளித்தது: ‘மரித்த உம்முடையவர்கள் . . . எழுந்திருப்பார்கள்.’ எங்களுடைய மகன் உண்மையுள்ளவனாக, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக மரித்ததில் நாங்கள் ஆறுதலடைகிறோம். உயிர்த்தெழுதலின் சமயத்தில் அவர் நினைவுகூரக்கூடியவகையில் கடவுளோடு ஒரு நற்பெயரைக் கொண்டவனாக மரித்தான். (பிரசங்கி 7:1, அடிகுறிப்பு; யோவன் 5:28) எங்களுடைய மகனின் இழப்பு குறித்து நாங்கள் நிச்சயமாகவே வருந்துகிறோம். ஆனால் உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருப்பதால் “நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கிப்”பதில்லை.—1 தெசலோனிக்கேயர் 4:13.
பாலுக்கு டாமினிக் என்ற மனைவியுண்டு. ஃபிரான்சிலுள்ள பாரீஸில் வாழ்ந்துவரும் அவள் ஒரு யெகோவாவின் சாட்சி. இவள் பாலின் பெற்றோரைப் போலவே நினைக்கிறாள். தன்னுடைய அவலமான இழப்புக்கு அவள் கடவுளைக் குற்றஞ்சாட்டாமல், எதிர்காலத்தை தைரியத்தோடும் நம்பிக்கையோடும் எதிர்ப்படுகிறாள்.
அக்கிரமத்தை அனுமதிப்பதைக் கடவுள் நிறுத்த வேண்டும் என்று மக்கள் உண்மையிலேயே விரும்புகிறார்களா?
பூர்வ காலங்களில் யோபு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன், யெகோவாவின் செயலாக இல்லாத துன்பங்களை அனுபவித்து வருகையில் இந்தக் கேள்வியைக் கொண்டு யெகோவாவை நிந்தித்தான்: “நீர் தவறு செய்வது உமக்கு நன்றாயிருக்குமோ?” யெகோவா வேறு ஒரு கேள்வியின் மூலமாக அவனுக்கு பதிலளித்தார்: “நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?” (யோபு 10:3; 40:8) யோபுவுக்குக் கற்பிக்க, கடவுள் தம்முடைய குணங்களாகிய நீதியையும் ஞானத்தையும் வல்லமையையும் அன்பையும் பிரதிபலித்த பரலோகங்களிலும் பூமியின் மீதுமுள்ள தம்முடைய பல சிருஷ்டிப்புகளை அவன் நினைவுக்கு கொண்டுவந்தார். (யோபு, அதிகாரங்கள் 38–41) யோபு தன் தவறையும் தன் தன்னல அக்கறையையும் உணர்ந்து சொன்னதாவது: “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.”–யோபு 42:6.
தங்களுடைய சொந்தப் பாவத்தின் மூலம், அநேக மனிதர்கள் தங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் ஆபத்துக்களை வருவித்துக் கொள்கிறார்கள். கடவுள் அக்கிரமத்தை அனுமதித்திருப்பதற்கு எதிராக அவர்கள் பிரசங்கிக்கிறார்கள், ஆனால் அவர்கள்தாமே அதை அனுமதிக்கவும் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். (ரோமர் 2:1, 21–24 ஒப்பிடவும்.) அவர்களுடைய அக்கிரமம் பல வடிவங்களை ஏற்கிறது—பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், திருடுதல், ஒடுக்குதல், விபசாரம் செய்தல், வேசித்தனம் பண்ணுதல், ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுதல், கொலை செய்தல், துப்பாக்கிகளையும் அணுகுண்டுகளையும் உற்பத்தி செய்தல், போர்களையும் புரட்சிகளையும் செய்தல், இவை அனைத்திலும் சுய-நியாயங்களும், மாய்மாலங்களும், தூஷணங்களும் தாராளமாக இடம்பெறுகின்றன. சமுதாயங்கள், ஒருசில தொகுதிகளின் பேரில் கொள்ளும் தப்பெண்ணங்களினாலும் ஒடுக்குதல்களினாலும் புரட்சிகள் எழும் சூழலை உருவாக்கியிருக்க, நம்பிக்கையிழந்தவர்கள் மன்னிக்க முடியாத முரட்டுத்தனமான பயங்கரவாதிகளாக மாறி இதில் உட்படாத பழிபாவமறியாத ஆட்களைக் கொலை செய்யவும் முற்படுகிறார்கள் என்பதாகவும்கூட ஒருசில சமூக அறிவியல் வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள். (யாத்திராகமம் 1:13, 14; 1 இராஜாக்கள் 12:12–14, 16, 19; மீகா 7:3, 4; மத்தேயு 7:12 ஒப்பிடவும்.) நிச்சயமாகவே பிரசங்கி 8:9, “ஒரு மனிதன் கேடுண்டாக வேறொரு மனிதனை ஆட்சி செய்கிறான்” என்பதாகச் சொன்னபோது அது உண்மையையே பேசுகிறது.
கடவுள் அவர்களுடைய அக்கிரமத்தை அனுமதிக்கவில்லையென்றால், அவர் அதைத் தடைசெய்ய வல்லமையோடு குறுக்கிட்டாரென்றால், தங்கள் உரிமைகள் மீறப்படுகின்றன என்ற அவர்களுடைய பல்குரல் போரட்டப் பாடல் உயர்ந்த வானங்கள் வரையாக மேலெழுந்து செல்லும்! உண்மையில் அவர்கள் தங்களுடைய சொந்த அக்கிரமத்தை அவர் அனுமதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் அதன் விளைவுகளை அறுக்காமலேயே அதை விதைக்கவும் விரும்புகிறார்கள்.—கலாத்தியர் 6:7, 8.
தன்னுடைய துன்பங்களுக்கு யெகோவா காரணர் அல்ல என்பதைப் புரிந்து கொண்டபோது மனம்திரும்பிய யோபுவின் நாணயமும் மனத்தாழ்மையும் இப்படிப்பட்டவர்களுக்கு இல்லை. சமுதாயம் இன்று கடவுளோடு நடந்துகொண்டில்லை, இதன் காரணமாக அதன் போக்கினுடையத் துன்பங்களை அறுவடைச் செய்கிறது, ஏனென்றால் “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) மனித சரித்திரத்தின் பல ஆயிரமாண்டுகளின் சரித்திரம் இது உண்மை என்பதை நிரூபிக்கிறது.
ஆனால் இந்தச் சந்ததி முடிவடைகிறதற்கு முன்னால் இந்தச் சாத்தானிய காரிய ஒழுங்குக்குப் பதிலாக கிறிஸ்துவின் ராஜ்யம் மாற்றப்படுகையில் இது மாறிவிடும். (தானியேல் 2:44; மத்தேயு 24:34; 2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) அப்போது, ‘துக்கமுமில்லை, கண்ணீருமில்லை, வருத்தமுமில்லை, மரணமுமில்லை.’ ஏனென்றால் யெகோவா தேவன் “இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்று சொல்லுகிறார்.—வெளிப்படுத்துதல் 21:1, 4, 5; 2 பேதுரு 3:13. (g89 7/22)
[பக்கம் 15-ன் படம்]
விமானப் பணியாளர் பால் கேரட்