மரணத்தை விற்பனை செய்பவர்கள் நீங்கள் ஒரு வாடிக்கையாளரா?
“புகைபிடிப்பவனிடம், அது உன்னைக் கொல்லப் போகிறது என்று பூமியின் மீதுள்ள எல்லா எச்சரிக்கைகளும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, நானும் அவ்விதமே எண்ணுகிறேன். அது உன்னைக் கொல்லப்போகிறது என்று நான் நினைக்கிறேன். தன் வயிற்றுக்குள் புகையைச் செலுத்தும் எந்த ஒரு முட்டாளும் அவதிப்படுவான் என்று நான் நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நான் ஒரு சிகரெட்கூட புகைத்ததில்லை. நான் அதைக் கொண்டு அதிக செல்வத்தை அடைந்திருக்கிறேன். . . . உலகிலுள்ள மற்ற முட்டாள்களுக்குப் புகையிலை விற்று இந்த ஒரே வழியில்தான் நாம் இந்த நாட்டைக் கட்டி இருக்கிறோம்.”
லேரி C. வைட் எழுதிய “மரண வியாபாரிகள்—அமெரிக்க புகையிலைத் தொழில்” (Merchants of Death—The American Tobacco Industry) என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் ஷார்ப், இவர் கெண்டக்கியில் வெகுகாலமாகப் புகையிலை சாகுபடி செய்தவர்.
அந்த வெளிப்படையான குறிப்பு அதிகம் சொல்லக்கூடியதாயிருந்தாலும், பல கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இருக்கிறது. உலகம் முழுவதும் நூறுகோடிக்கு மேற்பட்ட மக்கள் ஏன் புகைபிடிக்கிறார்கள்? மரணத்திற்கு வழிநடத்தும் என்பதை அறிந்தும், அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க அவர்களை என்ன உந்துவிக்கிறது? இறுதியில், புகையிலைக் கதையும் அடிப்படையில் போத மருந்து கதையைப்போலத்தான்—வழங்கீடும் தேவையும். இலாபமுள்ள விற்பனைக்களம் இல்லையென்றால் வழங்கீடு நின்றுவிடும். அப்படியானால் மக்கள் ஏன் புகைபிடிக்கிறார்கள்?
அடிமையாதலே முக்கிய வார்த்தை. உடலில் நிகோடீனிற்கான பற்றுதல் ஏற்பட்டபின், தினமும் ஓரளவு நிகோடீனை ஒழுங்காகக் கொடுப்பதற்கான தேவை ஏற்படுகிறது. இந்த அடிமையாகும் காரியத்துடன் பழக்கமும் இணைந்துசெல்கிறது. பழக்கத்தினால் அமைக்கப்பெற்ற சில சூழ்நிலைகள் சிகரெட்டுக்கான ஆவலைத் தூண்டுகின்றன. அது ஒருவேளை ஒருவர் எழுந்தவுடன் அல்லது காலையில் முதல் கோப்பைக் காபியுடன், அல்லது மத்திய உணவிற்குப் பிறகு குடிக்கும்போது, வேலை செய்யும் இடத்தில் அழுத்தம் மற்றும் தோழமை உறவுகளின் போது அல்லது பொழுதுபோக்கின்போது இருக்கலாம். பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் பல பழக்கங்கள், புகைபிடிப்பதை “ஆரம்பித்து”வைக்கும் விசையாக இருக்கலாம்.
அவர்கள் ஏன் புகைபிடித்தார்கள்?
புகைபிடித்தலுக்குப் பின் அமைந்துள்ள செயல் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்காக ஒருகாலத்தில் புகைபிடித்த சிலரை விழித்தெழு! பேட்டி கண்டது. உதாரணமாக, ஐ.மா.வின் கப்பற்படையைச் சேர்ந்த முன்னாள் சிறுதிறப்பணியாளராகிய ரே, அவருடைய 50-களில் இருக்கிறார். அவர் விளக்கிக்கூறியதாவது: “நான் முதலாவதாகப் புகைபிடிக்க ஆரம்பிக்கும்போது, 9 வயதானவனாக இருந்தாலும், நான் 12 வயதானதற்குப் பின்புதான் அதை அவசியமாக எண்ணினேன். புகைபிடித்ததற்காகப் பையன்களுக்கான சாரணர் அமைப்பிலிருந்து நான் வெளியேற்றப்பட்டது என் நினைவிற்கு வருகிறது.”
விழித்தெழு!: “புகைபிடிப்பதில் உங்கள் ஆவலைத் தூண்டியது என்ன?”
ரே: “ஆண்மையை வெளிப்படுத்துவதற்கு அது செய்யவேண்டிய ஒன்றாக இருந்தது. புகைப்பது ஆண்மைக்குரியதாக இருந்தது பாருங்கள். அந்த நாட்களில் விளம்பரங்கள் தீயணைப்பவரும் காவலரும் புகைபிடிப்பதுபோல் அமைந்திருந்தது என் ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு கப்பற்படையில், கப்பலைச் செலுத்தும் ஓர் அதிக அழுத்தம் நிறைந்த வேலையிலிருந்தபோது, புகைபிடிப்பது அந்த அழுத்தத்தை மேற்கொள்ள எனக்கு உதவியாக இருந்ததாக உணர்ந்தேன்.
“ஒரு நாளைக்குச் சுமார் ஒன்றரை பாக்கெட் (30 சிகரெட்டுகள்) புகைப்பேன். மேலும், சிகரெட் இல்லாமல் ஒருநாளையும் ஆரம்பிக்கமாட்டேன். நிச்சயமாகவே, நான் புகையை உள்ளிழுத்தேன். நீங்கள் உள்ளிழுக்காவிட்டால் புகைபிடிப்பதில் அர்த்தமே இல்லை.”
நியு யார்க்கில் ஓவியத் தொழிலைச் சேர்ந்த 50-களிலிருந்த பில் என்பவரும் அதே விதமாகக் கூறுகிறார்:
“பதின்மூன்று வயது சிறுவனாக இருக்கும்போது புகைபிடிக்க ஆரம்பித்தேன். பெரியவர்களைப் போல இருக்க நான் விரும்பினேன். அதன் பிடியில் அகப்பட்டப்பிறகு என்னால் அதை நிறுத்த முடியவில்லை. சிகரெட் புகைப்பது ஒரு நண்பனைக் கொண்டிருந்தது போல் இருந்தது. உண்மையில், நான் படுக்கைக்குச் செல்லும்போது, வீட்டில் சிகரெட்டுகள் இல்லை என்பதை நான் உணர்ந்தவுடன், வானிலை எப்படியிருப்பினும் நான் மறுபடியும் உடுத்திக்கொண்டு வெளியே சென்று மறுநாளுக்காக ஒரு பாக்கெட் வாங்கிவருவேன். நாள் ஒன்றுக்கு ஒன்றிலிருந்து இரண்டு பாக்கெட்டுகள் வரை நான் புகைத்துவந்தேன். நான் அடிமையாகிவிட்டிருந்தேன் என்று ஒத்துக்கொள்ளுகிறேன். அதே நேரத்தில் நான் அதிகமாக மதுபானம் குடிப்பவனாக இருந்தேன். குறிப்பாக, நான் அதிகமாக என் நேரத்தை செலவிட்ட மதுபானக் கடைகளில் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போவதாக இருந்தது.”
ஏமி, நன்கு பழகும் இளவயது பெண், 12 வயதினளாக இருந்தபோது புகைபிடிக்க ஆரம்பித்தாள். “முதலில் அது சகாக்களிடமிருந்து வந்த அழுத்தமாக இருந்தது. பிறகு, நான் 15 வயதினளாக இருந்தபோது, என் தந்தை இறந்துபோனார். அந்த அழுத்தம் என்னை மேலுமாக உந்தியது. ஆனால் நான் பெரியவளாக ஆக, விளம்பரங்கள் என்மீது செல்வாக்கு செலுத்தின; குறிப்பாக அந்த ஒன்று, ‘நீ வெகு தூரம் வந்திருக்கிறாய், பெண்ணே.’ நான் வேலை செய்ய திட்டமிட்டிருந்த பெண். அறுவைசிகிச்சையில் உதவிபுரியும் பணிப்பெண்ணாவதற்குப் படித்து வந்தேன். விரைவில் ஒரு நாளுக்கு மூன்று பாக்கெட்டுகள் புகைத்துவந்தேன். எனக்குப் புகைபிடிக்க பிடித்தமான நேரம் இரவு உணவிற்குப் பிறகு, எப்போதெல்லாம் நான் தொலைபேசியை உபயோகித்தேனோ, அப்பொழுதெல்லாம், அதை அடிக்கடி உபயோகிப்பேன்.” அவள் மோசமான விளைவுகள் ஏதேனும் கண்டாளா? “காலையில் எனக்கு இருமலும் தலைவலியும் ஏற்பட்டது; மேலும் அதன் பிறகு நான் சரீரப்பிரகாரமாக ஆரோக்கியமாகவே இல்லை. என்னுடைய அறைக்குப் படிகளில் ஏறிச்செல்வதே என்னை மூச்சுத் திணற வைத்தது. என் வயதோ அப்போது 19 தான்!”
இப்பொழுது தன்னுடைய 60-களில் இருக்கும் முன்னாள் கப்பற்படையைச் சேர்ந்த விமான ஓட்டி, ஹார்லி, பொருளாதார மந்த நிலைக் காலத்தில் 5 வயதில் புகைபிடிக்க ஆரம்பித்தார்! அவர் ஏன் அதைச் செய்தார்? “நான் வாழ்ந்துவந்த தென் டக்கோட்டாவிலுள்ள அபெர்தீனில் எல்லாச் சிறுவர்களும் புகைபிடித்தார்கள். நீங்கள் புகைபிடித்தால், பலசாலியாக எண்ணப்பட்டீர்கள்.”
ஹார்லி, தான் ஏன் புகைபிடித்தார் என்பது குறித்து சுற்றிவளைத்துப் பேசவில்லை: “அது எனக்கு உண்மையிலேயே ஆனந்தமாக இருந்தது. புகையை என்னுடைய நுரையீரல்களுக்குள் வெகு ஆழமாக இழுத்து, அங்கே அதை வைத்திருப்பேன். பிறகு புகை வளையங்களை வெளியே ஊதிவிட நான் மிகவும் விரும்பினேன். என்னுடைய சிகரெட் இல்லாமல் நான் வாழமுடியாத நிலைக்கு வந்தேன். ஒரு நாளைத் துவங்குவதும் முடிப்பதும் ஒரு சிகரெட்டோடுதான். கப்பற்படையில், நாள் ஒன்றுக்கு இரண்டிலிருந்து மூன்று பாக்கெட்டுகளும், ஒரு மாதத்திற்கு ஒரு கட்டு சுருட்டும் புகைத்துவந்தேன்.”
பில், ரே, ஏமி, மற்றும் ஹார்லி புகைபிடிப்பதை விட்டுவிட்டார்கள். அப்படி இலட்சக்கணக்கான மற்றவர்களும் செய்துள்ளார்கள்—ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே 4.3 கோடிக்கு மேலானவர்கள். ஆனால் புகையிலை விற்பனையாளரோ தங்கள் முயற்சியை விட்டுவிடவில்லை. எப்போதும் புதிய விற்பனைக் களங்களின் மேல் குறியிலக்கு வைக்கிறார்கள்.
நீங்கள் ஒரு குறியிலக்கா?
தொழிற்சாலைகளைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்ட நாடுகளிலுள்ள புகைபிடிக்கும் ஆண்கள் அநேகர் புகைபிடிப்பதை விட்டுவிடவே, மேலும் இயற்கையான மற்றும் புகைப்பதால் ஏற்பட்ட மரணத்தினாலான வாடிக்கையாளரின் இழப்பின் காரணமாக, புகையிலை நிறுவனங்கள் புதிய விற்பனைக்களங்களைத் தேடவேண்டியிருந்தது. அவர்களுடைய விற்பனையை பலப்படுத்துவதற்கான முயற்சியில், சிலசமயங்களில் அவர்கள் தங்களுடைய விளம்பரம் செய்யும் முறைகளை மாற்றியுள்ளார்கள். வரிப்பந்தாட்டம் (டென்னிஸ்) மற்றும் குழிப்பாந்தாட்டப் (கால்ஃப்) போட்டிகள் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாதரவு அளிப்பது, புகைபிடித்தலுக்கு ஒரு சுத்தமான சாயலை பார்வையளவில் அமைப்பதற்கு ஒரு திறம்பட்ட முறையாகக் கையாளப்படுகிறது. மற்றொரு வியாபாரத் தந்திரம் குறியிலக்காக தேர்ந்தெடுக்கப்படும் விற்பனைக்களங்கள். அவர்களது வாய்ப்பு மிகுந்த வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா?
முதல் குறியிலக்கு: பெண்கள். 1917-ல் கூட 18 வயதிலேயே புகைபிடித்துவந்த குளோரியா சுவான்சன் போன்ற சினிமா நடிகைகளின் மாதிரியின் துணையாலும் தூண்டுதலாலும் சிறுபான்மையான பெண்கள் பல பத்தாண்டுகளாக புகைபிடித்துவந்திருக்கிறார்கள். உண்மையில், திரையில் அவளுக்குக் கிடைத்த வாய்ப்புகளில் முதல் வாய்ப்புக்குக் காரணத்தை அந்த இயக்குனரே விளக்கினார்: “உனது முடி, உனது முகம், நீ உட்காரும் விதம், நீ புகைபிடிக்கும் விதம் . . . நான் விரும்புவதைப் போலவே நீ சரியாக இருக்கிறாய்.”
1940-களில் அதிகம் புகைபிடிப்பவராகிய தன் கணவனான ஹம்ஃப்ரி போகர்ட்டுடன் படங்களில் தோன்றிய லாரென் பாக்காலும் புகைபிடிப்பதில் கவர்ச்சியான விதத்தில் முன் நின்றாள். ஆனால் சிகரெட் விற்பனைக் களத்தின் பெண்கள் பகுதி எப்பொழுதுமே ஆண்களின் விற்பனையைவிட மிகவும் பின்தங்கி இருந்தது. மேலும் அதேவிதமாகப் பெண்களுக்கான புற்றுநோய் பற்றிய புள்ளிவிவரங்களும் இருந்தன. இப்பொழுது அவர்கள்—புகைபிடிப்பதிலும் நுரையீரல் புற்றுநோயிலும் வேகமாக அதிகரித்து வருகின்றனர்.
சமீப ஆண்டுகளில் விளம்பரம் செய்வதில் ஒரு புதிய மனப்போக்கு உருவாகியுள்ளது, இதற்கு சமூகத்தில் பெண்களின் அதிகமான போட்டியிடும் பங்காகும்; கூடவே புகையிலை விளம்பரங்களின் எளிதில் கண்டுகொள்ளமுடியாதச் செல்வாக்குமாகும். பெண்களுக்காக அனுப்பப்படும் செய்தி என்ன? பல்வேறு சிகரெட் முத்திரைச் சின்னங்களை உற்பத்தி செய்யும் பிலிப் மோரீஸ் நிறுவனம், நவீன பெண்ணை குறியாகக் கொண்டு “வெர்ஜீனியா ஸ்லிம்ஸ்” உற்பத்தி செய்கிறது. “நீ வெகுதூரம் வந்திருக்கிறாய், பெண்ணே,” என்ற அவர்களது கவர்ச்சியான விளம்பர வாசகந்தான் ஏமியைக் கவர்ந்தது. தன் விரல்களுக்கு நடுவே சிகரெட்டுடன் உலகியல் தெரிந்து அதற்கொப்பாய் நடக்கிற ஒரு நவீன பெண்ணை இந்த விளம்பரம் காண்பிக்கிறது. ஆனால் தாங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்களென்று இப்பொது சில பெண்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மார்பக புற்றுநோயைவிட நுரையீரல் புற்றுநோயின் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மற்றுமொரு சிகரெட் வகையானது, பெண்களுக்கு ஒரு பேர ஒப்பந்தத்தைத் தருகிறது: “ஒரு பாக்கெட்டுடன் 5 இலவசம்!” “ஓர் அட்டைப் பெட்டியுடன் 50 இலவசம்!” சில பெண்கள் பத்திரிகைகள் இலவசப் பாக்கெட்டுகளுக்காக சலுகைச்சீட்டுகளையும் கொண்டுள்ளன!
சிகரெட்டுகளைக் கவர்ச்சிகரமாகத் தோன்றும்படி செய்வதற்கு பாலுணர்வு மற்றுமொரு எளிய வழியாகும். ஒரு வகை இப்படியாக அழைக்கிறது: “அதிக இன்பத்தைக் காணுங்கள்.” அச்செய்தி ஒரு தேவை விளம்பரத்தையும் கொண்டு கூறுவதாவது: “தேவை—நெடுநாள் நிலைக்கும் உறவிற்காக உயரமான, கருத்த அந்நியர். நல்ல தோற்றம், சீரிய சுவை கட்டாயம் வேண்டும். புகைப்பதில் வரும் திருப்தியை ஆவலுடன் தேடும் என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.” அளிக்கப்படும் சிகரெட் “உயரமான”தாகவும் கருமைநிற காகிதத்திலும் வருகிறது. எளிதில் புலப்படாத ஒரு தொடர்பா?
பெண்களையும் பற்றியிழுக்கப் பிரயோகிக்கப்படும் மற்றொரு வழியானது பாணிகளுடன் தொடர்பு கொண்டது. “இவ்ஸ் செய்ன்ட் லாரன்ட்டின் புகழத்தக்கப் பாணியும் சுவையும் கொண்டது” என்று ஒரு வகை அழைக்கப்படுகிறது. தங்கள் எடையைப்பற்றி கவனமுள்ளப் பெண்களுக்கு மற்றுமொரு கவர்ச்சிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. “மிகவும் எடைக் குறைந்தவை—இருப்பதிலேயே மிகவும் எடை குறைந்த பாணி” என்று சிகரெட்டுகளை வருணித்து, ஓர் ஒல்லியான மாதிரிப் பெண்ணின் புகைப்படத்தை இந்த விளம்பரம் காண்பிக்கிறது.
சிகரெட் உற்பத்தியாளர்கள் ஏன் இவ்வுலகத்தின் பெண்கள் மீது குறிவைத்துள்ளார்கள்? “தொழிற்சாலைகளைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்ட உலகில் இரு பாலாரையும் சேர்ந்த 30 சதவீதத்தினருடன் ஒப்பிடும்போது வளர்ந்துவரும் நாடுகளில் ஆண்களில் சுமார் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர் புகைபிடிக்கும்போது, ஐந்து சதவீத பெண்கள்தான் புகைபிடிக்கிறார்கள்” என்று அதனுடைய மதிப்பீட்டைகொண்டு சுகாதார சபையானது ஒரு தெளிவானத் துணைக்குறிப்பைத் தருகிறது. முடிவில் ஆரோக்கியத்தை விலையாகத் தரவேண்டியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது, அங்கு புகையிலையினால் வரும் இலாபங்களுக்கு ஒரு பெரிய உபயோகப்படுத்தப்படாத விற்பனைக்களம் உண்டு, மேலும் புகையிலை விற்பனையாளர் வெற்றி அடைந்திருக்கிறார்கள். தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times) பத்திரிகையின்படி, ஜனவரி 1989-ல் வெளிவந்த ஐ.மா.வின் அறுவை மருத்துவ அதிகாரியின் அறிக்கை கூறியதாவது, ‘சிறு பிள்ளைகள், குறிப்பாகப் பெண் பிள்ளைகள் முன்பைவிட மிகவும் இளவயதில் புகைபிடிக்கிறார்கள்.’ மேலும் இது ஆரம்பப்பள்ளிப் பிள்ளைகளையும் உட்படுத்துகிறது. சமீப ஆண்டுகளில், புகைக்கும் வாலிபப்பருவப் பெண்களின் எண்ணிக்கை ஐக்கிய மாகாணங்களில் 40 சதவீத அளவிற்கு அதிகாரித்திருக்கிறது என்று மற்றுமொரு ஊற்றுமூலம் கூறுகிறது. மரணத்தையும் நோயையும் விற்பனை செய்பவர்களுக்குப் பெண்கள் மட்டுமே குறியிலக்கல்ல.
இனக் குறியிலக்கு
லேரி C. வைட் எழுதிய “மரண வியாபாரிகள்—அமெரிக்க புகையிலைத் தொழில்” (Merchants of Death—The American Tobacco Industry) என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “சிகரெட் உற்பத்தியாளர்களுக்குக் கருப்பு மனிதர் ஒரு நல்ல விற்பனைக்களம். சுகாதாரப் புள்ளிவிவரங்களுக்கான தேசிய மையம் 1986 வரை பார்த்தால் (ஐக்கிய மாகாணங்களில்) வெள்ளையரைவிட அதிக சதவீத கருப்பு மனிதரே புகைபிடித்தார்கள் என்று காண்பிக்கிறது. . . . அதிக அளவில் வெள்ளையரைவிட கருப்பு மனிதர் புகைப்பது ஆச்சரியப்படுவதற்கான ஒன்றல்ல, ஏனென்றால் சிகரெட் விற்பனையின் அதிகரிப்பிற்கான விசேஷித்தக் குறியிலக்காக அவர்கள் இருக்கிறார்கள்.” அவர்கள் ஏன் விசேஷித்த குறியிலக்காவர்? தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) குறிப்பிடுகிறது: “இந்தப் பழக்கத்தை உதறித்தள்ளுவதில் இந்த வகுப்பினர் மற்ற பொதுமக்களைக்காட்டிலும் பின்தங்கியிருக்கிறார்கள்.” ஆகவே வாடிக்கையாளரான ஒரு கருப்பு மனிதர் அடிக்கடி ஓர் “உண்மையுள்ள” வாடிக்கையாளராக, ‘மரணம் நம்மைப் பிரிக்கும் வரையில்’ வாடிக்கையாளராக இருக்கிறார்.
கருப்பு இன மக்கள்தொகுதியின்மீது புகையிலை நிறுவனங்கள் எப்படி முழு கவனம் செலுத்துகின்றன? நூலாசிரியர் வைட் கூறுகிறார்: “எபொனி (Ebony), ஜெட் (Jet), எசன்ஸ் (Essence) போன்ற கருப்பு மனிதருக்காக எழுதப்படும் பத்திரிகைகளில் சிகரெட்டுகள் மிகவும் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. 1985-ல் எபொனியில் வரும் விளம்பரங்களுக்காக மட்டுமே 33 இலட்சம் டாலரை சிகரெட் நிறுவனங்கள் செலவழித்தன.” கருப்பு இனப் பெண்களின் விற்பனைக்களத்திற்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு வருடாந்தர அழகு கண்காட்சிக்கான செலவை ஒரு புகையிலை நிறுவனம் மேற்கொள்கிறது. இலவச சிகரெட்டுகள் வழங்கப்படுகின்றன. மற்றுமொரு நிறுவனம் ஒரு சமயம் ஜாஸ் ஆரவார இசைவிழாவை தவறாமல் ஆதரித்து நடத்திவந்தது; மேலும் கருப்பு இன மனிதருக்கு விருப்பமான இசைவிழாக்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றது. கருப்பு இன மக்கள் தொகயானது எந்த அளவிற்கு ஒரு விசேஷித்தக் குறியிலக்காக இருக்கிறது? பிலிப் மோரீஸின் சார்பாகப் பேசுபவர் கூறியதாவது: “கருப்பு மனிதரின் விற்பனைக்களம் மிகவும் முக்கியமானது. அது அதிக பலமான ஒன்றாக இருக்கிறது.”
ஆனால் புகையிலை அரக்கருக்கு இன்னும் அதிக முக்கியமான விற்பனைக்களம் இருக்கிறது—வெறுமென இனத்தினரோ வகுப்பினரோ அல்ல, ஆனால் முழு தேசங்கள்! (g89 7/8)
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“ஒரு சிகரெட்டைக் கொண்டிருப்பது ஒரு சிநேகிதரைக் கொண்டிருப்பது போன்றிருந்தது”
[பக்கம் 9-ன் பெட்டி]
புகை பிடிப்பதும் பர்ஜர் நோயும்
அண்மையில் கானடாவில் மெக்ளீன்ஸ் (Maclean’s) அறிக்கை செய்த ஒரு வழக்கு, புகைபிடித்தலைக் காரணமாகக் கொண்ட மற்றுமொரு நோயைப் பற்றி விளக்குகிறது. ரோஜர் பெரான் 13 வயதில் புகைபிடிக்க ஆரம்பித்தார். அவர் 27 வயதில் பர்ஜர் நோயால் பீடிக்கப்பட்டு, ஒரு கால் முழங்கால் முட்டுக்குக் கீழ் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி எடுக்க வேண்டியிருந்தது. அவர் தொடர்ந்து புகைபிடித்தால் அந்த நோய் மறுபடியும் வரலாமென்று அவர் எச்சரிக்கப்பட்டார். மெக்ளீன்ஸ் அறிவிக்கிறது: “ஆனால் பெரான் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை; 1983-ல் மருத்துவர்கள் அவரது மற்றொரு காலையும் எடுத்துவிட வேண்டியிருந்தது. அதன் பிறகு, பெரான் . . . முடிவாக புகைபிடித்தலை நிறுத்திவிட்டார்.” இப்போது ஒரு புகையிலை நிறுவனத்தின்மீது நஷ்டஈடு வழக்கு தொடுத்துக்கொண்டிருக்கிறார்.
பர்ஜரின் நோய் என்றால் என்ன? அது “அடிக்கடி புகைபிடிக்கும் ஆண்களில் ஏற்படுகிறது. இரத்தக் குழாய்கள், நாளங்கள், நரம்புகள், புண்ணாகும் பிரதிபலிப்பின் போது, வெள்ளை இரத்த அணுக்கள் உள்ளே பிரவேசிப்பதால் ஏற்படும் இரத்தக் குழாய்களின் சூழ்புறப்பகுதியின் வீக்கம் இந்த நோயின் தன்மையாகும். பாதிக்கப்பட்ட கையோ காலோ உணர்வற்றுப் போவதும், ஒரு கைவிரலோ அல்லது கால்விரலோ நீலம் பூத்துப் போவதோ வழக்கமான முதல் அறிகுறிகளாகும். நரம்புகளும் புண்ணாகியிருப்பதால் கடுமையான வலியும் ஏற்படலாம். அவை கட்டுப்படுத்தும் சிறிய இரத்தக்குழாய்கள் மிகவும் கடுமையாக சுருங்கவும் செய்யலாம். அவர்கள் குளிராக உணர்ந்த போதிலும், மட்டுமீறிய கூருணர்வுடைய பரிவு நரம்புகள் பாதத்தை மிக அதிகமாக வியர்வை சிந்த வைக்கலாம். . . . முற்றிவரும் பர்ஜர் நோயின் சாதாரணமான சிக்கல்களாக இரத்தம் தடை செய்யப்பட்ட சீழ்ப்புண்களும் தசையழுகலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவும் உள்ளன.
“பர்ஜர் நோயின் காரணம் அறியப்படாவிட்டாலும் அது பெரும்பாலும் புகைபிடிக்கும் இளவயது ஆண்களுக்கு வருவதால், அது சிகரெட்டுகளினுள் உள்ள ஏதோ ஒன்றிற்கு ஏற்படும் பிரதிபலிப்பாக எண்ணப்படுகிறது. இதற்கு மிக முக்கியமான சிகிச்சை புகைபிடிப்பதை நிறுத்துவதுதான்.” (சாய்வெழுத்து எங்களுடையது.)—கொலம்பியா பல்கலைக்கழகக் கல்லூரியின் மருத்துவர் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்களின் முழுமையான வீட்டு மருத்துவ வழிகாட்டி (The Columbia University College of Physicians and Surgeons Complete Home Medical Guide).▪
[பக்கம் 9-ன் பெட்டி]
புகை பிடிப்பதும் மாரடைப்புகளும்
“சிகரெட் புகைப்பதற்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் மற்றும் இதர நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பெரும்பாலான மக்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் மாரடைப்புகளில் புகைபிடிப்பதும் ஒரு முக்கிய ஆபத்தான காரணக்கூறு என்பதைப் பலர் இன்னும் அறியாமலிருக்கிறார்கள். உண்மையிலேயே, இருதய இரத்த ஓட்ட நாளங்கள் சம்பந்தப்பட்ட நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 2,25,000 அமெரிக்க [ஐ.மா.] மரணங்கள் நேரிடையாகப் புகைபிடிப்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று அறுவை சிகிச்சை மருத்துவ அதிகாரியின் புகைபிடிப்பதும் ஆரோக்கியமும் என்பதைப்பற்றிய அறிக்கை மதிப்பிடுகிறது—இது புகைபிடிப்பதனால் ஏற்படுவதாகக் கருதப்படும் புற்றுநோய் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கையைவிட மிகவும் அதிகமானது.
“இருதய இரத்த ஓட்ட நாளங்களுக்கு வரும் ஆபத்தைக் குறைந்த தார், குறைந்த நிகோடீன் உள்ள சிகரெட்டுகள் குறைக்கின்றனவா என்று புகைப்பவர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். இதற்கான பதில் ‘இல்லை’ எனத் தோன்றுகிறது. உண்மையிலேயே, புகையை வடிகட்டி தூய்மைப்படுத்தும் அமைப்பைக் கொண்ட சில சிகரெட்டுகள் உள்ளிழுக்கப்படும் கார்பன் மொனாக்ஸைடின் அளவை அதிகரிக்கின்றன; இதனால் அப்படிப்பட்ட அமைப்பில்லாத வகையைவிட இவை இருதயத்திற்கு இன்னும் ஆபத்தானதாக செய்கிறது.” (சாய்வெழுத்து எங்களுடையது.)—கொலம்பியா பல்கலைக்கழகக் கல்லூரியின் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முழுமையான வீட்டு மருத்துவ வழிகாட்டி (The Columbia University College of Physicians and Surgeons Complete Home Medical Guide).▪
[பக்கம் 8-ன் படம்]
புகையிலை விளம்பரங்களின் குறியிலக்கு பெண்களாக இருக்கிறது, வெற்றியும் காண்கிறது