பாதுகாப்பாக உணவருந்துங்கள்
உணவு சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் பிழைத்திருப்பதற்குச் சில தேவைகள் இருக்கின்றன—உணவு, நீர், காற்று, வெப்பம் மற்றும் நேரம். இந்த அடிப்படைக் காரியங்களில் ஒன்று நீக்கப்படுமானால், அவற்றின் விருத்தி அல்லது உயிரோடிருப்பது தடை செய்யப்படுகிறது. எனவே பாதுகாப்பாக உணவருந்துதல் என்பது, உணவில் நுண்கிருமிகள் விருத்தியடையாத அல்லது சமையலறையில் அசுத்தம் பரவிடாத சூழ்நிலையில் உணவு சமைக்கப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. பாதுகாப்பாக உணவருந்துவதற்கான பின்வரும் ஆலோசனைகளைக் கவனித்து, உங்களுடைய வீட்டிற்குத் தேவைப்படும் வகையில் அவற்றைப் பொருத்திடுங்கள்.
உங்கள் கைகளைக் கழுவுங்கள், உணவைக் கையாளுவதற்கு முன்பு சோப்பால் கழுவுவது நல்லது. கையில் ஏதாவது காயங்கள் இருக்குமானால் அவற்றில் கட்டுப்போடுங்கள். உணவுக்கு முன் தும்முவதோ அல்லது இருமுவதோ தவிர்க்கப்படவேண்டும். உணவைக் கையாளும்போது உங்கள் முடியைத் தொடுவதையோ, அல்லது உங்கள் மூக்கைத் துடைப்பதையோ தவிருங்கள். நீங்கள் சமைக்கும்போது குறுக்கீடுதல் ஏற்படுமானால், உதாரணமாக கழிவறைக்குச் செல்லுதல் அல்லது விலங்குகளைத் தொடுதல் போன்ற காரியங்கள் இருக்குமானால், நீங்கள் மறுபடியும் உணவைத் தொடுவதற்கு முன் கை கழுவுவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
உணவுப் பொருட்களைக் கழுவுங்கள், அவற்றை நீங்கள் சமைப்பதற்கு முன். கடையிலிருந்து வாங்கிவரும் அல்லது உங்கள் தோட்டத்திலிருந்து பறித்துவரும் பழங்களை அல்லது காய்கறிகளைச் சமைப்பதாயிருந்தாலும் அவற்றைக் கழுவாமல் நேரடியாகப் பயன்படுத்தாதீர்கள். அவற்றைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். காய்கறிகளும் பழங்களும் தோலுறிக்கப்படாமல் சாப்பிடப்படுமானால் அவற்றில் படிந்திருக்கும் அழுக்கையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நீக்கிட அவற்றை (ஒருவேளை காய்கறி சுத்தம் செய்யும் பிரஷ் கொண்டு) நன்கு துடைத்திடுங்கள். கீரை வகை போன்ற இலையுணவுகளிலிருக்கும் மண்ணையும் தூசியையும் நீக்கிட அவை நன்றாகக் கழுவப்படவேண்டும்.
நீங்கள் வெப்பமான பிரதேசங்களில் வாழ்ந்தால், அவ்விடங்களில் குடல் பூச்சிகளும் புழுக்களும் சர்வ சாதாரணம். எனவே பச்சையாக அல்லது அரைகுறையாக சமைக்கப்பட்ட பழங்களும் காய்கறிகளும் நுண்கிருமிகளைக் கொல்லும் சிறிதளவு மருந்து கலந்த சுத்தமான தண்ணீரில் கழுவப்படவேண்டும். வித்தியாசமான பெயர்களில் விற்கப்படும் ஹைப்போக்ளோரைட் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக சுத்தமான தண்ணீரில் சிறிதளவு கலக்கப்பட்டு பழங்களும் காய்களும் அதில் மூழ்கும்படி வைக்கப்பட்டு, பின்பு அந்த உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாக அது சாதாரண, சுத்தமான தண்ணீரால் கழுவப்படலாம்.
முழுவதுமாக வேக வையுங்கள், எல்லாக் கறி, மீன் மற்றும் கோழி இறைச்சியையும் தீங்கிழைக்கும் நுண்ணுயிர்களிலிருந்து கொல்லுவதற்கு அப்படிச் செய்யுங்கள். குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட கறியும் கோழி இறைச்சியும் சமைக்கப்படுவதற்கு முன்பு அதன் விறைப்பு முற்றிலும் நீக்கப்படவேண்டும், அப்பொழுதுதானே சூடு அதன் மையம் வரையில் செல்லும். பன்றிகள் இழைப்புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும், எனவே சரியாக வேகவைக்கப்படாத பன்றி இறைச்சியைச் சாப்பிடுகிறவர்கள் இழைப்புழு நோயால் பீடிக்கப்படக்கூடும். சில நாடுகளில் நகர் கடைகளில் விற்கப்படும் பன்றியிறைச்சியில் 10 சதவீதம் இழைப்புழு நோயால் பாதிக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. இழைப்புழுக்கள் உச்ச சூட்டில் முழுவதுமாக வேகவைப்பதால் கொல்லப்படக்கூடும், ஆனால் புகைபோடுதல் அல்லது ஊறுகாய்ப் போடுதல் அவற்றைக் கொல்லுவதில்லை.
மீன்களும் சிப்பிநண்டின உயிரிகளும் ஈரல் அல்லது நுரையீரல் ஒட்டுண்ணிப்புழுக்களைக் கொண்டிருக்கக்கூடும், உணவு முழுவதுமாக சமைக்கப்படாவிட்டால் இவை மனித உடலில் பிரவேசித்திடும். கருவாடாக்குதல், ஊறுகாய்ப் போடுதல், அரிசிச் சாராயத்தில் ஊறவைத்தல் போன்ற காரியங்கள் அந்த நச்சுக் கிருமிகளைக் கொல்லாது. சில மக்கள் சமுதாயத்தில் மீன் மற்றும் சிப்பி நண்டின உயிரிகளும் பச்சையாக உண்ணப்பட்டாலும், தண்ணீர் அதிகமாக நச்சுப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் குறித்து கவனமாயிருக்க வேண்டும்.
தண்ணீர் சந்தேகத்துக்குரிய இடத்திலிருந்து கிடைக்கும்போது, அதைக் குடிப்பதற்கு முன்பு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நச்சு கடுமையாக இருக்குமானால், குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்காவது அதைக் கொதிக்க வைக்க வேண்டும். சில பகுதிகளில் குடிதண்ணீர் க்ளோரின் மருந்து கலந்து சுத்தம் செய்யப்படுகிறது, ஆனால் நுண்கிருமிகளும் ஒட்டுயிரிகளும் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் அதை நம்பி குடிப்பதற்கில்லை. கொதிக்க வைப்பதே சிறந்தது.
அநேக நாடுகளில் அசுத்தமான தண்ணீர் காலரா, மஞ்சள்காமாலை, டைஃபாய்டு ஜுரம் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களைப் பரவச்செய்கிறது. சில இடங்களில் நகர் குடி தண்ணீருங்கூட பாதுகாப்பாக இல்லை. தண்ணீரை ஒரு முறை கொதிக்கவைத்த பின் அதை ஒரு சுத்தமான பாத்திரத்தில் மூடி வையுங்கள்.
சில இடங்களில் தண்ணீரை வடிகட்டுவதும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வடிகட்டும் சாதனங்கள் ஒரே இணைப்பாக அல்லது தனி இணைப்பாகக் கிடைக்கிறது. இவற்றில் தண்ணீர் ஊற்றப்பட்டு, அது சில வடிகட்டும் சாதனங்கள் வழியாய்ச் சொட்டும்படியாக அனுமதிக்கப்படுகிறது. இவ்வடிகட்டும் சாதனங்கள் திடப்பொருட்களையும் நச்சையும் நீக்கிவிடுகிறதே தவிர, பொதுவாக தீங்கிழைக்கும் நுண்ணுயிர்களை நீக்குவதில்லை. என்றபோதிலும், சில புதிய வடிகட்டும் சாதனங்களும் இணைப்புகளும் தீங்கிழைக்கும் நுண்ணுயிர்களை நீக்கிப்போடுகின்றன என்றாலும், அவை அதிக விலையுள்ளதாகவும், தவறாமல் மாற்றப்படாவிட்டால், அவைதானே அசுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் காரணமாகிவிடுகின்றன. நவீன வடிகட்டு சாதனம் விண்வெளி வீரர்கள் தங்களுடைய சொந்த சிறுநீரையே குடிப்பதைக் கூடிய காரியமாக்கிடும் அளவில் இருக்கிறது.
உங்கள் பால் பதப்படுத்தப்படாததாயிருந்தால், அதைக் காய்ச்சுவதன் மூலம் தூய்மை நிலைக்குக் கொண்டுவருவது ஞானமானது. இந்திய ஊட்டச்சத்துக்குரிய மருத்துவர் டாக்டர் சூசி ஈப்பன் எச்சரிப்பதாவது: “பால் அதைக் கொடுக்கும் விலங்கினத்தாலோ, பால் விற்பனை செய்யும் நபராலோ, அவன் அதைக் கையாளும் முறையாலோ, மற்றும் பாலுக்குப் பயன்படுத்தப்படும் கொள்கலத்தாலோ பால் தூய்மையிழக்கும் நிலையிலிருக்கிறது.”
பால் 160 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் காய்ச்சப்பட்டு அந்நிலையில் குறைந்தபட்சம் 15 வினாடிகளுக்காவது வைக்கப்படவேண்டும். பின்பு அதை வேகமாக 50 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அல்லது அதைவிட குறைவான நிலைக்குக் குளிர்ப்படுத்திட வேண்டும். இன்னொரு முறையானது, குறைந்த சூட்டில் நீண்ட நேரம் காய்ச்சுதல்: 145 முதல் 151 டிகிரி ஃபாரன்ஹீட் வரை 30 நிமிடங்களுக்குக் காய்ச்சுதல்.
உணவில் ஈக்கள் உட்காராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். டைஃபாய்டு, காலரா, சீதபேதி, செம்புள்ளி நச்சுக் காய்ச்சல், டிப்தீரியா போன்ற விஷ ஜுரங்களை ஏற்படுத்தும் கிருமிகளை ஈக்கள் தாங்கிச்செல்லக்கூடும். அவை இளம்பிள்ளைவாத நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களையும் வயிற்றுக் கோளறை ஏற்படுத்தும் பூச்சிப் புழுக்களையும் ஒட்டுயிரிகளையும் கடத்தக்கூடும். ஈக்களுக்கு விலகியிருக்க மிகச் சிறந்த வழி அவை பெருகாதபடி பார்த்துக்கொள்ளுதல். உங்களுடைய சுற்றுப்புறத்தை நீங்கள் பார்த்து, குப்பைக்கூளங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமா என்பதைக் கவனியுங்கள். குப்பைகளைப் போடும் உறைகள் அல்லது தொட்டிகள் சரியாக மூடப்பட்டும் பூச்சி மருந்துகள் போடப்பட்டதுமாக இருக்கவேண்டும். நீங்கள் வசிக்கும் இடத்தருகே குப்பைகளைக் கொட்ட எவரையும் அனுமதிக்காதீர்கள். எரு மூடப்படவேண்டும், அல்லது ஈக்கள் அதில் பெருகாதபடிக்கு அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.—உபாகமம் 23:13 ஒப்பிடவும்.
உணவைச் சமைக்கப்பட்ட உடனேயே சாப்பிடுங்கள். விசேஷமாக உஷ்ணமான காலங்களில் தீங்கிழைக்கும் நுண்ணுயிர்கள் மிக வேகமாகப் பெருகிவிடும். நீங்கள் சீக்கிரமாகச் சமைத்து, தாமதமாக சாப்பிட விருப்பினால், உணவைத் தயாரித்த பின்பு அதைக் குளிர்ப்படுத்துங்கள், பரிமாறுவதற்கு முன்பு மீண்டும் நன்றாகச் சூடுபடுத்துங்கள்.
சமைக்கப்பட்ட உணவு போதியளவு சூடாக (140°F-க்கு மேல்) அல்லது குளிர்ந்த நிலையில் (50°F-க்குக் கீழ்) வைக்கப்பட வேண்டும். ஆபத்தான நிலை—நுண்கிருமிகள் வளர்ந்து பெருகும் நிலை—அதற்கு இடைப்பட்ட நிலை. அப்படியென்றால், மீதி மிச்ச உணவு குளிர் நிலையில் வைக்கப்பட முடியாவிட்டால் அவை வைக்கப்படக்கூடாது. உங்களிடம் குளிர் சாதனப் பெட்டி இல்லை என்றால், ஒரு வேளைக்கு மட்டும் சமையுங்கள். சில நாடுகளில் பச்சிலைகளும் வாசனைத்திரவியங்களுங்கூட நுண்கிருமிகளால் நச்சுப்படுத்தப்பட்டவையாயிருக்கின்றன. எனவே இவை சமையலின் ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட வேண்டும், அப்பொழுதுதான் அது முழுமையான சூட்டுக்கு உட்படுத்தப்பட்டதாயிருக்கும்.
உங்களுடைய சமையலறையைச் சுத்தமாக வைத்திருங்கள். இது உங்களுடைய சமையல் பாத்திரங்களையும், உங்கள் உடைகளையும், உங்களையும் உட்படுத்துகிறது. நீங்கள் பொதுவாகத் தரை மட்டத்தில் சமையல் செய்வீர்களானால், சமையற்கட்டிற்குச் செல்வதற்கு முன் நீங்கள் வெளியே அணியும் காலணிகளைக் கழற்றிவிடுங்கள். காலணிகள் மனிதனின் அல்லது மிருகத்தின் கழிவுகள் பட்டு, நோய்களைக் கொண்டுவந்து, நீங்கள் அவ்வளவு கடினமாக உழைத்துச் சமைக்கும் உணவை அசுத்தப்படுத்திவிடும். செல்லப் பிராணிகளும் மற்ற விலங்குகளும் சமையல் செய்யப்படும் இடத்திற்கு விலகியிருக்க வேண்டும்.
பாத்திரங்களை சுடுநீராலும் சோப்பாலும் கழுவுங்கள். நீங்கள் நிறைய சமையல் பாத்திரங்களைக் கழுவுவதாக இருந்தால், தண்ணீர் அழுக்கானதும் அதைக் கொட்டிவிட்டு சுத்தமான சுடுநீரையும் சோப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாத்திரங்களைச் சுத்தமான துணியால் துடைத்துவிடுங்கள், அல்லது தூசியும் பூச்சிகளும் இல்லாத இடத்தில் அவற்றை உலர விடுங்கள்.
அநேக தேசங்களில் பாத்திரங்கள் சாம்பல் கொண்டு துலக்கப்பட்டு, நீரில் கழுவப்பட்டு, சூரிய ஒளியில் உலர விடப்படுகிறது. சோப் உபயோகிப்பது சிக்கனமாக இல்லாத இடங்களில் இது திருப்திகரமான பலன்களைத் தருகிறது, ஏனென்றால் ஆல்கலீன் அல்லது காரத்தன்மை கொண்ட சாம்பல் நுண்ணுயிர்களைக் கொன்றுவிடுகிறது, சூரிய ஒளியின் வெப்பமும் அல்ட்ரா வயலட் கதிர்களும் பாத்திரங்களை சுத்தப்படுத்துகிறது.
உங்கள் வீட்டுக்கு வெளியே
உணவு தனித்தனியே பரிமாறப்படாமல் அவரவர் பரிமாறிக்கொள்வதற்காக உணவு மொத்தத்தில் வைக்கப்படும் உணவகங்களில் அல்லது பெரிய கூட்டங்களில் அதிக சூடாக அல்லது அதிக குளிர்ந்துவிட்ட உணவைத் தெரிந்துகொள்ளுங்கள். உஷ்ணமான ஒரு நாளில் உணவு மேசையில் அதிக நேரமாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கண்டால், அந்த உணவைத் தவிர்ப்பது சிறந்தது.
தண்ணீரை சூடுபடுத்துவது பணச் செலவை உட்படுத்துவதால், அநேக உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு தண்ணீரைக் கொதிக்கவைத்துக் கொடுப்பதில்லை, எனவே அதைக் குடிக்காமல் இருப்பது பாதுகாப்பான செயல். மேலும், தண்ணீர் அல்லது ஐஸ் கூட்டப்படும் பழரசப் பானங்களைத் தவிருங்கள். பொதுவாகப் புட்டிப் பானங்கள் அல்லது சூடான பானங்கள் பாதுகாப்பானவை.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் புழுக்கள் அல்லது வயிற்றுக் கோளறு உண்டுபண்ணும் ஒட்டுயிர்கள் பிரச்னையாக இருக்குமானால், பச்சை சல்லாதுகளை எல்லாம் தவிருங்கள். அவை எவ்வளவு கவர்ச்சியாயிருப்பினும், தோலுறிக்கப்படாத காய்கறிகளையும் பழங்களையும் தவிருங்கள். அப்படிப்பட்ட உணவுப் பொருட்கள் சரியாகக் கழுவப்படாமல் அல்லது மருந்துகள் கொண்டு கழுவப்படாமல் இருக்கக்கூடும். சில இடங்களில் மிக எளிதில் வாங்கி புசிப்பதற்காக பழங்களும் காய்களும் அரியப்பட்டு விற்கப்படும். இவையும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பற்றவையாயிருக்கக்கூடும்.
அநேக கிழக்கத்திய தேசங்களில் தெரு வியாபாரிகளைச் சர்வசாதாரணமாய்ப் பார்க்கலாம். இவர்கள் வாயூறும் வித்தியாசமான பண்டங்களை விற்பனை செய்வார்கள். அப்படிப்பட்ட இடத்தில் உணவை அருந்துவதற்கு முன், சுற்றுவட்டாரத்தின் சுத்தம் எப்படி இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அது அசுத்தமாக இருக்கிறதா? அந்த உணவு ஏற்கெனவே சமைக்கப்பட்டு மூடப்படாமல் விடப்பட்டிருக்கிறதா? குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு அங்கு ஏதேனும் ஏற்பாடுகள் உண்டா, அல்லது குப்பை சிதறிக்கிடக்கிறதா? அந்த உணவைத் தயாரிப்பவர் அழுக்காக அல்லது அசுத்தமாகக் காணப்படுகிறாரா? அக்கம்பக்கத்தில் விலங்குகளும் ஏராளமான ஈக்களும் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடை ஆம் என்று இருக்குமானால், நீங்கள் அங்கு உணவருந்தினால் பிரச்னைகளை வரவேற்கிறவர்களாக இருப்பீர்கள்.
நன்றாக, சுவையாக தயாரிக்கப்பட்ட உணவை அருந்துவதில் அநேகமாக எல்லாருமே மகிழ்ச்சி காண்கின்றனர். ஆனால் உணவைக் கையாளுவதிலும் தேர்ந்தெடுப்பதிலும் நல்ல நிதானத்தையும் கவனத்தையும் செலுத்துங்கள். பின்பு பாதுகாப்பாக உணவருந்துவதில் களிகூருங்கள்! (g89 6/22)
[பக்கம் 22-ன் படம்]
உணவைக் கையில் தொடுவதற்கு முன்னால் உங்கள் கைகளைச் சோப்பால் கழுவுவது நல்லது
[பக்கம் 23-ன் படம்]
தீங்கிழைக்கும் நுண்ணுயிர்களை அழிப்பதற்காக எல்லா வகைக் கறி, மீன், கோழி இறைச்சியையும் முழுவதுமாக வேகவைக்கவும்
[பக்கம் 23-ன் படம்]
சந்தேகத்துக்குரிய இடத்திலிருந்து கிடைக்கும் நீரைக் கொதிக்க வைக்கவும்
[பக்கம் 24-ன் படம்]
பால் பதப்படுத்தப்படாததாக இருந்தால், அதைக் காய்ச்சுவதன் மூலம் நுண்கிருமிகளைக் கொல்லுங்கள்
[பக்கம் 24-ன் படம்]
உணவில் ஈக்கள் உட்காராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்
[பக்கம் 24-ன் படம்]
உங்கள் உணவு அசுத்தப்படாதபடி பாதுகாப்பாய் வையுங்கள்
[பக்கம் 25-ன் படம்]
சமையல் பாத்திரங்களையும் தட்டுகளையும் சுத்தமாக வைத்திருங்கள்
[பக்கம் 25-ன் படம்]
தெரு வியாபாரிகள் விற்பனை செய்யும் உணவு பண்டங்கள் எந்தளவுக்கு பாதுகாப்பானவை என்று கேட்டுக்கொள்வதற்கு நல்ல காரணம் உண்டு