எல்லாக் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும் காலம்
வடதுருவப் பிரதேசத்தில் ஒருவரை இரவு நேரத்தில் அவருடைய கூடாரத்திலிருந்தும் அவர் தூங்குகிற உறையிலிருந்தும் வெளியே விரட்டி அவருடைய சிறிய உள்சட்டையுடன் அந்தச் சமயத்தைச் சகித்துக்கொள்ளச் செய்வது கடுமையான ஒரு குற்றச்செயலாக இருக்கும். அதுபோல, ஒரு குழந்தை இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் வெளி உலகத்தைச் சந்திக்க அதன் அனலான, பாதுகாப்பான கர்ப்பப்பையிலிருந்து உரிய காலத்துக்கு முன்பாகவே வெளியேற்றப்படுவது ஒரு குற்றச்செயலாகும். ஆனால் இந்தப் பயங்கரமான குற்றச்செயலுக்குப் பொறுப்பாக இருப்பது யார் அல்லது எது?
பெற்றோர் தங்களுடைய சிசுக்கள் மீது இப்படிப்பட்டதோர் கஷ்டத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தமாட்டார்கள் என்பது நிச்சயம். உண்மையில் தாய் தனக்கு ஏற்படும் பிரசவ வேதனையைத் தடை செய்ய முடியாதவளாயிருக்கிறாள். அந்தப் பிரசவ வேதனை சரியான சமயத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ ஏற்படுவதாயிருந்தாலும் அது உண்மையாக இருக்கிறது. இயல்பாக முழு வளர்ச்சியுறாத குழந்தைக்குரிய அல்லது முழு வளர்ச்சியுற்ற குழந்தைக்குரிய பிரசவ வேதனையாக இருந்தாலும் அந்தப் பிரசவ வேதனையை ஏற்படுத்துவது எது என்பதை மருத்துவ நிபுணர்களுங்கூட சரியாக அறியாதவர்களாக இருக்கிறார்கள். என்றபோதிலும் அறியப்பட்டிருக்கும் காரியம் என்னவெனில், சில சமயங்களில் ஏதோ ஒன்று மோசமான விதத்தில் தவறாகிவிடுகிறது, எனவேதான் குழந்தை வாழ்வதற்குத் தகுதியாயிராத ஓர் உலகில் வாழ வெளியே தள்ளப்படுகிறது.
இது ஏன் ஏற்படுகிறது என்பது பைபிளில் விளக்கப்பட்டிருக்கிறது: பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதிய சங்கீதக்காரன் பின்வருமாறு எழுதினான்: “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” (சங்கீதம் 51:5) கலகத்தனமான ஓர் ஆவி சிருஷ்டி முதல் மானிட ஜோடியைக் கடவுளுக்கு எதிராகக் கலகஞ் செய்யத் தூண்ட, இப்படியாக அவர்கள் பாவிகள் ஆனார்கள். தங்களுடைய சிருஷ்டிகருக்குத் தகுந்த கீழ்ப்படிதல் காட்டும் அந்தக் குறியைத் தவறவிட்டனர். இப்படியாக அவர்களுடைய சந்ததியனைத்தும் பாவத்தில் அல்லது அபூரணத்தில் உருவாயின. (ரோமர் 5:12) விளைவுகள் நோயும் மரணமும், அவற்றுடன் சேர்ந்து சரீரத்தின் சகலக் கோளறுகளுமாகும். சில சமயங்களில் தன்னுடைய விலைமதியா கர்ப்பக்கனியை வற்புறுத்தி வெளியேற்றும் ஒரு பிறப்பு முறையும் இதில் உள்ளடங்குகிறது.
முழு வளர்ச்சியுறாத பிறப்புகள் இல்லா ஓர் உலகம்
மனிதர் தங்களுடைய பரிபூரணத்தைக் காத்துக்கொண்டிருந்திருப்பார்களானால், முழு வளர்ச்சியுறாத இவ்வளவு அநேக பிறப்புகள் எதிர்ப்படும் துன்பங்களைச் சந்திக்கக் காலத்துக்கு முன்னதாக எந்தக் குழந்தையும் பிறந்திருக்காது. ஒரு தாய் இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் ஒரு குழந்தையை ஒருபோதும் பிரசவியாமலிருக்கும் ஒரு காலம் விரைவில் வரும். அந்தக் காலத்தைக் குறித்து ஆவியால் ஏவப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசி எழுதினான்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன், முந்தினவை இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.”—ஏசாயா 65:17, தி ஜெருசலேம் பைபிள்.
கடவுளுடைய புதிய உலகில் நிலவும் இருதயத்துக்கு அனலூட்டும் நிலைமைகளைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்லுகிறது: “அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும். . . உண்டாயிரார்கள். . . அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை, அவர்களும் அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே [யெகோவாவாலே, NW] ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.”—ஏசாயா 65:19–24.
எல்லா மனித துன்பங்களும் துயரங்களும் கடந்த கால காரியமாகிவிட்டிருக்கும் அந்தக் காலம் எவ்வளவு மகத்துவமாய் இருக்கும்! இயல்பாக முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகளை உயிரோடு வைக்கும் முயற்சி சார்ந்த மிகுதியான மருத்துவ நடவடிக்கைகளும் தீவிர சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளும் அப்பொழுது ஒருபோதும் தேவைப்படாது! அப்பொழுது நம்முடைய உன்னத கடவுளுடைய மீட்கும் பொருள் ஏற்பாட்டின் மூலம் மனித அபூரணம் நீக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையை முழு அளவில் அனுபவித்துமகிழ்வதற்காகக் குழந்தை பரிபூரணமாக ஆயத்தமாயிராமல் ஒருபோதும் கர்ப்பத்திலிருந்து வெளியேற்றப்படமாட்டாது.—வெளிப்படுத்துதல் 21:3, 4. (g89 2/22)
[பக்கம் 11-ன் பெட்டி]
நீங்கள் உண்மையான ஆறுதலைப் பெறலாம்
◆ உங்களுடைய குழந்தை இறக்க நேரிட்டால், நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் உதவியும் உற்சாகமும் பெற்றிட முயலுங்கள். ஒருவேளை தங்களுடைய பிள்ளைகளை மரணத்தில் இழந்தவர்கள் உங்களுக்கு ஆறுதலளிக்க உதவியாயிருக்கக்கூடும்.
◆ நீங்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை உடையவர்களாயிருக்கக்கூடும், ஆனால் அந்த நம்பிக்கை உங்களுக்கு உடனடியான ஆறுதலைக் கொடுக்காவிட்டால், அதிர்ச்சியுறாதீர்கள். காலம் இந்தப் புண்களை ஆற்றிட ஆரம்பிக்கையில், உங்களால் நேசிக்கப்பட்ட குழந்தையை நீங்கள் மீண்டும் காண்பீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் போற்றிவருவீர்கள்.—ஏசாயா 25:8; 65:23; யோவன் 5:28, 29; 1 கொரிந்தியர் 15:25, 26.
◆ “சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிற” யெகோவாவில் சார்ந்திருங்கள். (2 கொரிந்தியர் 1:3) “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு” ஒரு வழியை அவர்தாமே ஏற்படுத்தியிருக்கிறார்.—எபிரெயர் 2:14.
◆ துக்கிக்கும் பெற்றோரின் ஒரு நண்பராக நீங்கள் இருப்பீர்களானால், அவர்கள் இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லாமலிருப்பது நல்லது. அந்தச் சமயத்தில்தானே அந்தக் குழந்தையின் இடத்தை வேறு எதுவும் ஈடுசெய்ய முடியாது. இந்தக் காரியத்தில், “அழுகிறவர்களுடனே அழு”வது நல்லது. (ரோமர் 12:15) பெற்றோரின் இழப்பை நீங்கள் ஏற்று அவர்களோடு சேர்ந்து துயரப்படுவது அவர்களுக்கு ஆறுதலாயிருக்கக்கூடும், ஏனென்றால் துயரத்தில் பங்குகொள்வது அதைத் தணிக்க உதவக்கூடும்.
◆ துக்கத்தை வெளியிடுவது சரியானதே, எனவே துக்கம் மற்றும் இழப்பின் உணர்ச்சிகளைத் தணித்திட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். (ஆங்கில “விழித்தெழு!” ஏப்ரல் 22, 1985 வெளியீட்டில் “நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்க நேர்ந்தால்,” மற்றும் ஆகஸ்ட் 8, 1987 [தமிழ்: அக்டோபர் 1988] வெளியீட்டில் “ஒரு பிள்ளையின் இழப்பை எதிர்ப்படுதல்,” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.)