மறைந்துகொண்டிருக்கும் ஓசோன்—நம்முடைய சொந்த கேடயத்தை நாம் நாசமாக்கிக்கொண்டிருக்கிறோமா?
ஒவ்வொரு நாளும் நீங்கள் கொடியதும் எரிக்கும் தன்மை வாய்ந்ததுமான மழையில் நடக்க வேண்டியதாயிருப்பதை எண்ணிப்பாருங்கள். உங்களுக்குத் தற்காப்புக்காக இருக்கும் ஒரே சாதனம் ஒரு குடை மட்டுமே; அந்தக் கொல்லும் தன்மைவாய்ந்த மழைத் துளிகளைத் தடுத்திடும் வகையில் அது பரிபூரணமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குடை உங்களுக்கு எந்தளவுக்கு விலைமதியா ஒன்றாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனையில் காண முடிகிறதா? அதை நாசமாக்குவதில், ஒருவேளை அதில் துளைகளைப் போடுவதில் இருக்கும் மடமையை நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா? என்றபோதிலும் பூகோள அளவில் மனிதவர்க்கம் அதுபோன்ற நிலையில்தான் இருக்கிறது.
நம்முடைய கோளத்தில் சூரிய கதிர்களாகிய மழை தொடர்ந்து பெய்துகொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான கதிர்கள் பயனுள்ளவையாயிருக்க, நம்முடைய உலகுக்கு வெப்பத்தையும் வெளிச்சத்தையும் கொண்டுவருவதாயிருக்க, ஒரு சிறிய சதவிகிதம் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை அல்ட்ராவயலட்–B அல்லது UV–B (ultraviolet–B) கதிர்கள். அவை அனைத்துமே பூமியின் மேற்பரப்பை வந்தடையுமானால், அதில் உயிர்வாழும் எல்லாவற்றையும் அழித்துவிடும். மகிழ்ச்சிக்குரியவிதத்தில், நம்முடைய கோளம் ஒரு “குடை” கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அது நம்மை இந்தக் கதிர்களிலிருந்து தற்காக்கின்றன. அதுதான் ஓசோன் அடுக்கு என்று வழங்கப்படுகிறது. மனிதவர்க்கம் அந்தக் குடையை நாசப்படுத்திக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது!
ஓசோன் அடுக்கு என்பது என்ன? அது எவ்விதம் செயல்படுகிறது? அதை நாம் எவ்விதம் நாசமாக்கிக்கொண்டிருக்கிறோம்? சரி, ஓசோன் என்பது ஆக்ஸிஜனின் நிலையற்ற ஒரு வகையாகும். அது பொதுவாக இரண்டு அணுக்கள் (O2) கொண்டிருப்பதற்குப் பதிலாக மூன்று அணுக்கள் (O3) கொண்டிருக்கிறது. ஓசோன் இயல்பாகவே மீவளிமண்டலத்தில் உண்டாகிறது, ஆபத்தான UV–B கதிர்களை ஈர்த்து அதேசமயத்தில் பூமிக்குத் தேவையான வெளிச்சத்தை பாதுகாப்பான அளவில் அனுமதிக்கிறது. மேலும் ஓசோன் மற்ற வாயுக்களால் எளிதில் சிதைக்கப்படக்கூடியதாயிருக்க, மீவளிமண்டலத்தில் அது சூரிய கதிர்களால் தொடர்ந்து உண்டாக்கப்பட்டுவருகிறது. எனவே இது தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும் கேடயமாக இருக்கிறது. என்னே ஓர் அமைப்பு!
மனிதன் தன்னுடைய சொந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் வாயுக்களை இந்த நேர்த்தியான பகுதியில் செலுத்தும்போதுதானே பிரச்னை ஆரம்பமாகிறது. அப்பொழுது ஓசோனை உண்டாக்கிட சூரிய கதிர்கள் செயல்படும் வேகத்தைவிட அதிவேகமாக அது அழிக்கப்படுகிறது. CFC அல்லது க்ளோரோஃப்ளூரோகார்பன் (chlorofluorocarbon) வாயுக்கள்தான் ஓசோனை அழிப்பவை. இந்த CFC வாயுக்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. இவை எல்லா வகையான நுரைப்ளாஸ்டிக் பொருட்களை உற்பத்திச்செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. மின்தடுப்புச் சாதனங்கள், கோப்பைகள் மற்றும் பயன்படுத்திவிட்டு எறிந்துவிடப்படும் உணவுவகைகளின் கொள்கலங்கள் உட்பட எல்லா வகை பொருட்களையும் செய்ய அவை பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அவை தெளிப்பான்களில் முற்படி இயக்கிகளாகவும், காற்று கட்டுப்பாட்டு சாதனங்களிலும் குளிர் சாதனப் பெட்டிகளிலும் குளிரைக் காத்திடுவதற்காகவும், மின்னியந்திரங்களைச் சுத்தப்படுத்துவதற்குக் கரைமமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த அபாயத்தை அறிக்கைசெய்த ஒரு விஞ்ஞானி இப்படியாக நினைவுபடுத்திச் சொன்னதாவது: “‘கண்டுபிடித்துவிட்டேன்!’ என்று நான் விளம்பிய கட்டம் இருந்ததில்லை. ஒருநாள் இரவு வீடு திரும்பிய நான் என் மனைவியிடம், ‘வேலை நன்றாகவே முன்னேறுகிறது, ஆனால் அது இந்த உலக முடிவு போல் தெரிகிறது’ என்று சொன்னேன்.” ஆனால் 1930-ல் CFC கண்டுபிடிக்கப்பட்டதுமுதல் அவை நச்சுத்தன்மையற்றது என்றும் நிலையானது என்றும் போற்றப்பட்டுவந்திருக்கிறது. அவர்கள் அதில் தவறாயிருந்தார்களா?
முன்னறிவிக்கப்பட்ட அச்சுறுத்தல்
இல்லை. அவர்கள் எல்லாருமே சரியாக இல்லை. அவை அவ்வளவு நிலையானவையாய் இருப்பதால்தானே அவற்றின் அழிக்கும் தன்மையிலும் நிலையாயிருக்கின்றன. அப்புறப்படுத்தப்பட்ட காற்று கட்டுப்பாட்டு சாதனங்களிலிருந்தும், கசக்கி எறியப்பட்ட நுரைப்ளாஸ்டிக் கோப்பைகளிலிருந்தும் CFC மெதுவாகக் கசிந்து மீவளிமண்டலத்துக்குச் செல்கிறது. அங்கு அல்ட்ராவயலட் அல்லது கதிர்களால் தாக்கப்பட்டு, கடைசியில் சிதைந்து உண்மையிலேயே ஓசோன் கொலையாளியை வெளிவிடுகிறது: க்ளோரின். இதன் அணுத்திரண்மங்கள் சிதையக்கூடிய ஓசோன் அணுத்திரண்மங்களுடன் நடனமாடி, அவற்றை நாசமாக்கி, மற்றொரு துணையைக் கண்டுபிடிக்கச் சுழல்கிறது. ஒரு க்ளோரின் அணுத்திரண்மம் ஒரு நூற்றாண்டு வரை இப்படியாக நடனமாடி, இலட்சம் ஓசோன் அணுத்திரண்மங்களை தடம் தெரியாதளவுக்கு அழித்துவிடுகிறது.
CFC தெளிப்பான்களில் அடிப்படையில் முற்படி இயக்கிகளாக பயன்படுத்தப்பட்டுவருவதன் பேரில் விழித்துக்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரிப்புக் குரலை எழுப்பியிருக்கிறார்கள். 1978 போல் கானடா, சுவீடன் மற்றும் ஐக்கிய மாகாணங்கள் CFC பயன்படுத்தப்படுவதற்குத் தடை விதித்திருக்கின்றன, ஆனால் இன்னும் மற்ற சில நாடுகள் வழக்குகள் தொடுத்திருக்கின்றன. இதில் காரியத்தை மோசமாக்குவது என்னவென்றால், அந்த இரசாயனப் பொருட்களுக்குக் கூடுதல் பயன்களைக் கண்டுபிடித்திருப்பதால் அவற்றின் உற்பத்தி பெருகிவிட்டிருப்பதாகும். இவற்றின் உலக உற்பத்தி அளவில் ஐக்கிய மாகாணங்கள் நான்கில் ஒரு பாகத்தை இன்றும் பயன்படுத்திவருகிறது.
பூமியின் காற்றுமண்டல கம்ப்யூட்டர் மாதிரிகளைக் கொண்டிருப்பதால் இரசாயன நச்சு ஓசோன் அடுக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, அதிகமான UV–B கதிர்களை மெதுமெதுவாகப் பிரவேசிக்க அனுமதிக்கிற அபாயம் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்துவந்தனர். தொழில் துறையும் அரசாங்கங்களும் விஞ்ஞானிகளின் உரிமைப்பாராட்டல்களை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், அவர்களுடைய அத்தாட்சிகள் ஆதாரமற்றவை என்றும், முடிவுகள் நிரூபிக்கப்படாதவை என்றும் கூறுகின்றனர்.
கண்டுபிடிப்பு (Discover) பத்திரிகை விவாதிக்கப்படும் இந்தக் காரியத்தை “ஓசோன் போர்” என்று வழங்கியது. மற்றும் ஆராய்ச்சியாளர்கள் “இந்தப் பிரச்னையை மாபெரும் பூகோள செயல்முறையாகப் பல ஆண்டுகளால் நோக்கிவந்திருக்கின்றனர்: மனிதவர்க்கம் ஒவ்வொரு ஆண்டும் இன்னொரு பத்து இலட்சம் டன்கள் CFC வாயுக்களைக் காற்றுமண்டலத்தில் செலுத்தி, என்ன நிகழ்கிறது என்பதைக் காத்திருந்து பார்க்கிறது.” நிகழ்ந்த காரியம் எல்லாருக்குமே ஆச்சரியமாயிருந்தது.
உலக முழுவதுமுள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் முன்னறிவித்திருந்த விதமாக அதன் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதற்குப் பதிலாக, தென்துருவத்தில் ஓசோன் அளவு திடீர் குறைவைக் கண்டது! அக்டோபர் 1984-ல் அண்டார்ட்டிக்காவிலுள்ள ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் குழு கண்டதாவது, தங்களுக்கு மேல் இருந்த ஓசோன் ஏறக்குறைய 40 சதவிகிதம் சரிந்தது; இதுதான் இப்பொழுது பிரபலமாக அறியப்பட்டிருக்கும் “ஓசோன் துளை.” முதலில் மற்ற விஞ்ஞானிகள் இதை எள்ளினர். அந்தப் பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் குழு நன்கு பிரபலமடைந்தில்லை. அத்துடன், மற்ற காற்றுமண்டல கருவிகள் அண்டார்ட்டிக் ஓசோனில் எந்தவித குறிப்பிடத்தக்க சரிவையும் குறிப்பிடவில்லை.
என்றபோதிலும், என்ன ஏற்பட்டதென்றால், செயற்கைக் கோள்களிலிருந்து கிடைத்த தகவல்களைப் பதிவு செய்த கம்ப்யூட்டர்கள், ஓசோனில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவைத் தவறு என நிராகரித்துவிடும்படியாகவே வழிதிட்டமிடப்பட்டிருந்தன. அந்தக் கணிப்பொறிகள் ஓசோன் துளையைப் பல ஆண்டுகளாக அளந்துவந்திருக்கின்றன, ஆனால் அந்தச் செய்திவிவரத்தை ஒதுக்கிவிட்டன!
அந்தத் துளைக்குக் காரணம் குறித்து விஞ்ஞானிகள் சற்று திகைத்து நின்றனர். ஆனால் தக்க கருவிகளைத் தாங்கிச்சென்ற விமானங்கள் அந்த ஓசோன் துளை வழியாய்ப் பரந்தபோது உண்மையான குற்றவாளியைக் கண்டுவிட்டன—மனிதன் உற்பத்திச்செய்திருக்கும் க்ளோரின்! தென்துருவத்துக்கு மேலே சிறிய பனிக்கட்டிப் பகுதிகளைக் கொண்ட ஒரு மையச்சுழி இருக்கிறது, க்ளோரின் ஓசோனுடன் சேர்ந்து மரணத்துக்கேதுவாய் வேகமாக நடனம் ஆடுவதற்கு இலட்சக்கணக்கான சிறு சிறு மேடைகளை அளிப்பதாயிருக்கிறது.
அதுமுதல், விஞ்ஞானிகள் அதுபோன்ற ஒரு துளையை வடதுருவத்துக்கு மேலேயும் கண்டுபிடித்திருக்கின்றனர். இரண்டு துளைகளுமே காலத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் திறந்து மூடுகின்றன. தென்துருவத்துக்கு மேலே அமைந்திருக்கும் துளை ஐக்கிய மாகாணங்களின் பரப்பளவைக் கொண்டது. வடதுருவத்துக்கு மேலே அமைந்த துளை கிரீன்லாந்து அளவைக் கொண்டது.
இந்த ஓசோன் துளைகள் உங்களை எவ்விதம் பாதிக்கின்றன? அவை வட ஐரோப்பாவின் பகுதிகளுக்கு மேல் கடந்து தென் அமெரிக்காவின் தென் கோடியை அச்சுறுத்தியிருக்கிறது. ஆனால் அதனால் பாதிக்கப்படுவதற்கு நீங்கள் ஓசோன் துளைக்கு நேரே கீழாக இருக்க வேண்டியதில்லை. அந்தத் துளைகள் ஓசோன் நீங்கிய காற்றை ஏற்படுத்துகின்றன என்றும் அது பூமிக் கோளின் இரு பகுதிகளிலும் பரவுகிறது என்றும் சில விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். உண்மை என்னவெனில், மிக அதிக மக்கள் தொகை நிரம்பிய வடக்குப் பாதியில், கடந்த 17 ஆண்டுகளில் 3 முதல் 7 சதவிகிதம் ஓசோன் அடுக்கு ஏற்கெனவே நாசமாகிவிட்டது. மூன்று சதவிகிதம் குறைவதற்கு ஒரு நூற்றாண்டு எடுக்கும் என்று விஞ்ஞானிகள் கடந்த காலத்தில் எண்ணினர்!
பூமியை வந்தடையும் அல்ட்ராவயலட்–B கதிர்களின் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். இந்தக் கதிர்கள் மனிதரில் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. மனிதரின் உடலமைப்பில் காணப்படும் நோய்த்தடுப்பு அமைப்பு முறையையும் இவை பாதிக்கின்றன, மற்றும் கண்விழிவிறைப்பு நோயையும் ஏற்படுத்துகின்றன. கூடுதல் UV–B கதிரியக்கம் “இன்று வாழும் அல்லது 2075-க்கு முன்னால் பிறக்கும் ஆட்களில் 30 இலட்சம் மக்களைக் கொல்லும்” என்று அறிவியல் செய்தி (Science News) கணக்கிட்டுள்ளது.
டாக்டர் மைக்கெல் ஓப்பன்ஹீமர் குறிப்பிடுகிறார்: “இந்த மாற்றங்கள் ஒவ்வொரு மனிதரையும் பூமியின் மீதான இயற்கைச் சூழலில் சமநிலை காக்கும் முறைகளையும் பாதிக்கப்போகிறது. இந்த மாற்றங்கள் என்னவாக இருக்கும் என்பதன்பேரில் நாம் காணும் ஒளி மங்கலாகத்தான் இருக்கிறது.” அல்ட்ராவயலட்–B கதிரியக்கம் சமுத்திரங்களின் மேற்பகுதியில் இருக்கும் அரிமானத்தைத் தடுக்கும் அம்சங்களையும் சிறிய உயிரிகளையும் அழித்துவிடும், இது சமுத்திரத்தின் உணவு சங்கிலியைப் பாதிக்கும். தாவரங்கள் அழிக்கப்படுதலும், மகசூல் இழப்பும், பூகோளத்தின் காற்று மற்றும் வானிலை அமைப்பு முறைகளில் மாற்றங்களும் பலவீனமடைந்த ஓசோன் அடுக்கின் விளைவாக இருக்கக்கூடும். வரக்கூடிய பத்தாண்டுகளில் இந்த அச்சுறுத்தல்களில் ஏதாவது ஒன்று நிகழுமானால், அது மனிதனுக்கும் அவன் வாழும் உலகத்துக்குமே ஆபத்தாக இருக்கும்.
என்ன நம்பிக்கை இருக்கிறது?
செப்டம்பர் 1987-ல் ஏறக்குறைய 24 நாடுகள் மான்ட்ரியல் ப்ரோட்டோகால் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதிக வளர்ச்சியடைந்த நாடுகள் CFC-ஐ உபயோகிப்பதையும் உற்பத்தியையும் 1986-ன் மட்டங்களில் நிறுத்திவிடுவதற்கும், 1999-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாகக் குறைத்துவிடுவதற்கும் கோரியது. வளரும் நாடுகள் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு வாய்ப்பில்லாத நிலைக்குக் காரணம் CFC வாயுக்கள் நவீனமாக்கப்படுதலுக்கு அத்தியாவசியமாயிருக்கிறது.
குறைந்தபட்சம் 11 நாடுகளாவது அதைச் செயல்படுத்துவதாயிருந்து 1989-ல் அமல்படுத்தப்படவேண்டிய அந்த ஒப்பந்தம் ஒரு “மைல் கல்” என்று போற்றப்பட்டது. ஐ.மா. அரசியல்வாதி ஒருவர் உற்சாகத்துடன் கூறினார்: “தீய விளைவுகள் பரவுவதற்கு முன்பு ஒரு சுற்றுபுறச் சூழல் பிரச்னை சம்பந்தமாக உலக நாடுகள் இணங்கிவந்திருப்பது இதுவே முதல் முறை.”
என்றபோதிலும், எல்லாருமே அந்தளவுக்கு உற்சாகமாயில்லை. மான்ட்ரியல் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஓசோன் துளையை CFC வாயுக்கள்தான் ஏற்படுத்தின என்பதற்கான மிகப் பலமான நிரூபணம் வெளியிடப்பட்டது. ஓசோன் துளைகளைக் குறித்து தங்களுடைய விவாதங்களில் உட்படுத்தவேண்டாம் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் சொல்லப்பட்டார்கள். நிபுணர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “மான்ட்ரியல் ஒப்பந்தம் செய்தவர்கள் தங்களுக்கு முன் இந்த உண்மைகளைக் கொண்டிருந்திருப்பார்களானால், CFC உபயோகம் முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டிருப்பார்கள்.”
ஆனால் அதைவிட மிக மோசமான நிலை என்னவென்றால், அடிவளிமண்டலம் வழியே உயரச் செல்லும் CFC வாயுக்கள் மீவளிமண்டலத்துக்குள் செல்வதற்கு ஏழு முதல் பத்து ஆண்டுகள் எடுக்கும். அப்படியென்றால், மீவளிமண்டலத்தில் ஏற்கெனவே இருக்கும் CFC வாயுக்களின் அளவு, ஒப்பந்தங்கள் இருந்தாலும் இரட்டிப்படையும். தி ஜெர்மன் ட்ரிப்யூன் (The German Tribune) பத்திரிகையில் அறிக்கையிடப்பட்டதாவது: “உடனடியான தடை கொண்டுவரப்பட்டாலும், ஆகாயமண்டலம் 1920-களில் இருந்த நிலைக்குத் திரும்பவருவதற்கு 80 ஆண்டுகள் எடுக்கும்.”
இதற்கிடையில், CFC வாயுக்களுக்குப் பதில் வாயுக்களைக் கண்டுபிடிப்பதற்கு வேதியல் நிறுவனங்கள் கடினமாக உழைக்கின்றனர். இவற்றில் சில ஏற்கெனவே எதிர்பார்ப்பை வளர்த்திருக்கின்றன. ஆனால் அவற்றைப் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்வது எப்படி என்பதை அறிய காலம் எடுக்கும். “அவை நமக்கு இப்பொழுது அவசியம், நாளை அல்ல,” என்று துரிதப்படுத்துகிறார் அண்டார்ட்டிக் ஓசோன் துளையை முதல் முறையாகக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜோ ஃபார்மன். “இயற்கையில் அமைந்த அப்புறப்படுத்தும் முறைகள் CFC வாயுக்களை அப்புறப்படுத்த எந்த வேகத்தில் செயல்படுகின்றனவோ, அதைவிட ஐந்து மடங்கு அதிக வேகமாக அதை நாம் காற்றுமண்டலத்தில் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.” அதற்குப் பதில் வஸ்துவைக் கண்டுபிடிப்பதில் அவசரப்படவேண்டாம். “எல்லாருடைய சமையலறையிலும் இருக்கக்கூடியதும், பின்பு அது நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதை அறியவருவதுமான ஒரு வஸ்துவைக் கொண்டிருக்க எவருமே விரும்பமாட்டார்கள்,” என்று இரசாயன தொழிற்சாலைகளின் சுற்றுபுறச்சூழல் மேலாளர் ஒருவர் கூறுகிறார்.
எனவே பரிகாரத்துக்கான நம்பிக்கை ஒருபக்கம் இருக்க, விஞ்ஞானிகளோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். பூமியின் ஆகாயமண்டலம் பேரளவில் சிக்கலானதும் நுண்ணிய இயக்க அமைப்பு கொண்டதுமாக இருக்கிறது என்பதை அவர்கள் அறியவந்திருக்கிறார்கள்; அது மனிதன் ஏற்படுத்தும் நச்சுத்தன்மைக்குத் திடீரென்றும் முன்னெச்சரிப்பின்றியும் பிரதிபலிக்கிறது.
டாக்டர் ஓப்பன்ஹீமர் தொகுத்துரைப்பதாவது: “அதிக அநிச்சயமான ஓர் எதிர்காலத்தை நோக்கி நாம் குருடராய்ப் பயணம்செய்கிறோம்.” இப்பேர்ப்பட்ட ஓர் இக்கட்டான நெருக்கடிக்கு மேற்போக்கான தீர்வுகள் சிரிப்பை வரவழைக்கின்றன. ஐ.மா. அரசு அதிகாரி ஒருவர் “தனிப்பட்ட பாதுகாப்புக்காக” தொப்பி அணிவதும் வெயில்காப்புக்கண்ணாடி போட்டுக்கொள்வதுமான ஒரு விசேஷ செயல் திட்டத்தை ஊக்குவித்தபோது, அதை எள்ளியவர்கள் அவருக்குத் தொப்பியும் வனவிலங்குகளுக்கு வெயில்காப்புக்கண்ணாடியும் போடுவது எப்படி என்று கேட்டார்கள்.
ஒரு முழு அளவான பரிகாரம்தானே மதிக்கப்படும் அல்லது பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தகுந்த பரிகாரமாக அமையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மனிதன் இந்தக் கோளத்துக்கு எதிராக இழைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தவறுகளைச் சரிசெய்யும் பணிக்கு அவன் ஏற்றவனாயிருக்கிறானா? அப்படி இருப்பது அரிது. தன்னுடைய சொந்த குப்பை தன் சுவாசிப்பைப் பாதித்தாலொழிய அதைச் சுத்தப்படுத்துவதற்கு மனிதன் செலவு செய்ய மனமுள்ளவனாயிருப்பதும் அரிது. சிக்கலான நம்முடைய சுற்றுபுறச் சூழலுக்கு விடை காண அதன் திட்ட அமைப்பாளரிடம் திரும்புவது ஞானமான செயலாக இருக்காதா? தெளிவாகவே, “பூமியை நாசப்படுத்தியவர்களை நாசப்படுத்துவது” குறித்து அவர் முன்னுரைத்த போது அவர் நம்முடைய இக்கட்டான சகாப்தத்தை முன்காண்பவராய் இருந்தார்.”—வெளிப்படுத்துதல் 11:18, NW. (g89 1⁄22)
[பக்கம் 21-ன் பெட்டி]
அந்த ஓசோன் புதிர்
ஓசோன் உயிரைப் பாதுகாக்கும் கேடயம். ஓசோன் நச்சுத்தன்மை வாய்ந்தது. அது இரண்டு விதத்திலும் விவரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். எது சரி? இரண்டுமே! ஓசோன் இருக்கும் இடமாகிய மீவளிமண்டலத்தில், அது உயிர் காக்கும் ஒன்று. ஆனால் இங்கு இந்தக் கீழ்வளிமண்டலத்தில், அது மனிதன் ஏற்படுத்தும் நச்சுத்தன்மையின் ஒரு துணைப்பொருளாக உற்பத்தியாகிறது. மனிதர் காற்றுமண்டலத்தில் ஏராளமான ஹைட்ரோகார்பன் வாயுக்களை வெளியேற்றுகிறான். இதில் பெரும்பாலும் வாகனத்தில் பெட்ரோல் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இந்த ஹைட்ரோகார்பன் மீது சூரிய ஒளி செயல்பட்டு ஓசோன் உற்பத்தியாகிறது.
மனிதர் ஓசோனை சுவாசிப்பதற்கானவர்கள் அல்ல. அது நுரையீரலை நாசப்படுத்துகிறது. உண்மையில், இதற்கு முன்னால் கொள்ளப்பட்ட கருத்துடன் ஒப்பிடுகையில், அது அதிக ஆபத்தானது என்று அண்மையில் விஞ்ஞானிகள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஓசோன் மீது பலமான கட்டுப்பாட்டை வைக்க அவசரத்தன்மையுடன் சிலர் குரல் எழுப்பியிருக்கின்றனர்—ஆனால் பயனில்லை.
ஓசோன் நெருக்கடி எந்தளவுக்கு வஞ்சப்புகழ்ச்சியின் மையமாகிவிட்டிருக்கிறது என்பதை நீங்கள் காணமுடிகிறதா? மேலே ஓசோன் தேவைப்படுகின்ற இடத்தில் நாம் அதை அழித்துவிடுகிறோம். ஓசோன் நச்சுள்ளதாயிருக்கும் இந்த இடத்திலே அதை நாம் உற்பத்தி செய்கிறோம்!
ஆனால், ‘நாம் ஏன் கீழிருக்கும் ஓசோனை அது தேவைப்படும் இடமாகிய மீவளிமண்டலத்திற்கு அனுப்பிவிடக்கூடாது?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கக்கூடும். ஒரு காரியம் என்னவெனில், ஓசோன் அந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு நிலையற்றதாயிருக்கிறது; அந்த உயரத்தை அடைவதற்குள் அது முறிந்துவிடும். ஓசோனை சிறு வேவு விமானங்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உயர அனுப்பிவிடுவது குறித்து சில விஞ்ஞானிகள் கனவுகண்டிருக்கின்றனர். என்றபோதிலும் அதற்கான செலவு ஏராளமானதாய் இருக்கும் என்பதை அவர்கள் உடனே ஒப்புக்கொள்கிறார்கள். தெளிவாகவே, இருக்கும் ஒரே பரிகாரம், மேலே அதை அழிக்காமல் இருப்பது அல்லது இங்கு கீழே அதை உற்பத்தி செய்யாமல் இருப்பதாகும்.
[பக்கம் 22-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மீவளிமண்டலம்
அல்ட்ராவயலட் கதிர்கள்
மீவளிமண்டலத்தில் ஓசோன் அடுக்கு
கீழ்வளிமண்டலம்
தெளிப்பான்
பூமி
க்ளோரோஃப்ளூரோ கார்பன்
க்ளோரின்
ஓசோன்