இளைஞர் கேட்கின்றனர் . . .
என் நண்பனைப் பற்றி நான் கோள் சொல்லலாமா?
“அவன் இப்பேர்ப்பட்ட ஒரு காரியத்தை செய்து கொண்டிருந்தான் என்பதை என்னால் நம்பமுடியவில்லை,” என்பதாக லீ நினைவுபடுத்திச் சொல்கிறான். லீ தன்னுடைய அத்தை மகனுடன் மிதிவண்டியை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில், அவனுடைய ஆருயிர் நண்பன் க்ரிஸை எதிர்பாராத வகையில் வாலிபர்களின் ஒரு கும்பலில் பார்த்தான்.
க்ரிஸ் ஒரு சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தான்.
லீக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இது க்ரிஸ் உரிமைப் பாராட்டிய கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருந்தது—அவனுடைய பெற்றோரின் விருப்பங்களைக் குறித்து சொல்லவே தேவையில்லை. (2 கொரிந்தியர் 7:1) க்ரிஸ் திருட்டுத்தனமாக தன்னுடைய சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து அணைத்துவிட்டான். ஆனால் லீ ஏமாற்றமடைந்துவிடவில்லை. புகைபிடித்தல், அவன் வைத்துக் கொண்டிருந்த கெட்ட சகவாசத்தின் காரணமாக ஏற்பட்ட க்ரிஸினுடைய பிரச்னையின் ஆரம்பம் என்பதை அவன் பின்னர் தெரிந்து கொண்டான். தன்னுடைய நண்பனுக்கு உதவி தேவை என்பதையும் அதைத் தான் கொடுக்க இயலாத நிலையில் இருந்ததையும் லீ உணர்ந்தான். அதே சமயத்தில் அவன் வேறு எவரிடத்திலும் இந்தப் பிரச்னையைக் குறித்து பேச தயங்கினான். லீ விளக்குகிறான்: “அவன் என் நண்பனாக இருந்தான். நான் அவனைப் பற்றி கோள் சொல்ல விரும்பவில்லை.”
ஒருவேளை நீங்கள் உங்களை இந்நிலையில் கண்டிருக்கலாம்—நண்பர் ஒருவர் போதைப் பொருட்களில் விளையாடுகிறார், பாலுறவில் சோதனை செய்கிறார், ஏமாற்றுகிறார் அல்லது திருடுகிறார் என்பதை திடீரென்று நீங்கள் அறியவருகிறீர்கள். பிரபலமான இளைஞர்களின் ஒரு பத்திரிகை சொல்வதாவது: “காட்டிக் கொடுப்பது. செய்தியைப் பரப்புவது. கோள் சொல்வது. பருவ வயதினரில் சிலர், தங்கள் நண்பரின் சார்பாக பேசினால் இதைத்தான் தாங்கள் செய்து கொண்டிருப்பார்கள் என்று கவலைப்படுகிறார்கள்.”
மெளனம் சாதிக்கும் கொள்கை
தவறான பற்றுறுதியே ஒரு நண்பனின் தவறை அறிக்கை செய்வதிலிருந்து இளைஞர்களை பின்வாங்கச் செய்யும் அடிப்படைக் காரணமாக இருப்பதாக தெரிகிறது. சிட்சையை தீங்கானதாகவும், எதிர்மறையாகவும் சேதப்படுத்துவதாகவும் கருதுவதால் ஒரு நண்பனின் பிரச்னைகளை மூடிமறைத்துவிடுவதன் மூலம் தங்களுடைய நண்பனிடம் தயவு காண்பிப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். டெலிவிஷனும் திரைப்படத் தொழிலும், துரோகிகளும் வேவுக்காரர்களுமே நண்பர்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று நம்ப வைப்பதன் மூலம் இந்தக் கருத்தை வளர்த்திருக்கிறது. ஆகவே எழுதப்படாத மெளனம் சாதிக்கும் ஒரு கொள்கை, இளைஞர்கள் மத்தியில் அநேகமாக மேலோங்கி இருந்து வருகிறது. கார்ல் என்ற ஓர் இளைஞன் சொல்வது போல: “உங்கள் நண்பர்களுக்காக மூடிமறைப்பதே காரியமாக இருக்கிறது. மற்றவர்களிடம் கோள் சொல்வது என்ற நிலை வரும்போது, நீங்கள் அதைச் செய்வதில்லை!”
மெளனம் சாதிக்கும் கொள்கையை மீறுவது, ஒருவரை ஒத்த வயதினரின் பரிகாசத்துக்கும், நட்பை இழந்துவிடுவதற்கும் வழிநடத்தக்கூடும். உதாரணமாக பருவ வயது பத்திரிகையில், ஒரு கட்டுரை, அவளுடைய சிநேகிதி கேரன், கடைகளில் திருடுவதை அறிய வந்த டெபி என்ற பெயருள்ள ஒரு பெண்ணைப் பற்றி சொல்கிறது. உதவி செய்யும் நோக்குடன் டெபி, கேரனின் பெற்றோரிடம் இதைத் தெரிவிக்க தீர்மானித்தாள். கேரன் டெபியிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள். அதற்கும் மேலாக, டெபியின் நண்பர்களும்கூட அவளைக் காட்டிக் கொடுத்தவள் என்பதாக ஒதுக்கிவிட்டு அவளை பரிகாசம் செய்தார்கள். “அது ஒரு சங்கடமான அனுபவம், ஆம், அது இழப்பை ஏற்படுத்துகிறது,” என்கிறாள் டெபி.
மெளனத்தை நீ கலைக்க வேண்டுமா?
அதேவிதமாகவே லீ இப்படிப்பட்ட ஓர் இழப்பையும் சங்கடத்தையும் துணிந்து எதிர்ப்பட்டு செயல்பட முடிவு செய்தான். லீ சொல்கிறான்: “யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதை நான் அறிந்திருந்ததால் என் மனச்சாட்சி என்னை முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தது!” இது ஆதியாகமம் 37:2-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சம்பவத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது: “யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் . . . அந்த இளைஞன் . . . அவர்களுடைய துன்மார்க்கத்தை தன் தகப்பனுக்குச் சொல்லி வருவான்.” இந்த விஷயம் அற்பமான ஒரு காரியத்தைப் பற்றி இருந்திருக்க முடியாது. ஏனென்றால் “துன்மார்க்கம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல எபிரெய வார்த்தை “பொல்லாங்கு” என்பதையும்கூட அர்த்தப்படுத்தக்கூடும். ஒருவேளை யோசேப்பின் சகோதரர்கள் குடும்பத்தின் பொருளாதார அக்கறைகளை ஏதோ ஒரு வகையில் ஆபத்திற்குள்ளாக்கியிருக்கக்கூடும். எப்படியிருந்தாலும், அவன் மெளனமாயிருந்தால், அவனுடைய சகோதரர்களின் ஆவிக்குரிய நலன் ஆபத்திற்குள்ளாகும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
தவறான செயல்களை அல்லது வேதப்பூர்வமற்ற சிந்தனையைக் கவனிக்கத் தவறுவது ஒரு பல்வலியை அசட்டை செய்ய முற்படுவதற்கு ஒப்பிடப்படுகிறது. நீங்கள் எவ்வளவுதான் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டாலும் உட்குழிவு போய்விடாது. ஆம், நீங்கள் வெறுமென அழுகலை பரவ அனுமதிக்கிறீர்கள். அதேவிதமாகவே பாவமும் அழுகிக் கெடுக்கும், கறைப்படுத்தும் சக்தியாகும். தடுக்கப்படாவிட்டால், அநேகமாக கறை கறையையே பிறப்பிக்கும். (கலாத்தியர் 6:8) வேறு வார்த்தையில் சொன்னால் தவறு செய்யும் நண்பன் ஒரு வேளை உறுதியான வேதப்பூர்வமான ஒரு சிட்சையின் வடிவில் உதவியைப் பெற்றுக் கொண்டாலொழிய அவனோ அல்லது அவளோ இன்னும் வினைமையான ஒரு பொல்லாப்புக்குள் அமிழ்ந்துவிடக்கூடும்.—பிரசங்கி 8:11.
ஆகவே நண்பனின் தவறை மூடி மறைப்பதில் எந்த நன்மையுமில்லை. இது சீர்செய்ய முடியாத வகையில் கெடுதி விளைவிப்பதாக இருக்கக்கூடும். அப்படியென்றால் யோசேப்பு தன் சகோதரர்களின் பொல்லாப்பைக் குறித்து தெரிவிக்க தூண்டப்பட்டதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன? பைபிள் அறிவுரை கூறுவதாவது: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்.” (கலாத்தியர் 6:1) தவறு செய்யும் ஒரு நண்பனைச் சீர்பொருந்தப் பண்ணுவதற்கு உனக்கு ஆவிக்குரிய தகுதிகள் இருப்பதாக நீ நினைக்காமலிருக்கலாம். ஆனால் உதவி செய்ய தகுதியுள்ள ஒருவரிடம் விஷயத்தை நிச்சயமாகவே தெரிவிப்பது அறிவுள்ள காரியமாக இருக்குமல்லவா? ஏன், அவ்விதமாகச் செய்யாமல் அசட்டையாயிருப்பாயானால், உன்னை ‘அவனுடைய பாவத்துக்கு உடன்படுத்துகிறவனாய்’ இருப்பாய்! (1 தீமோத்தேயு 5:22; லேவியராகமம் 5:1 ஒப்பிடவும்.) இது கடவுளுக்கும் அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்கும் உன்னுடைய சொந்த பற்றுறுதியை சந்தேகிப்பதாக இருக்கும்.—சங்கீதம் 18:25.
உன் நண்பனை அணுகுதல்
ஆகவே உன் நண்பனை அணுகி அவனுடைய தவறை அவனுக்கு வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாததாகும். (மத்தேயு 18:15 ஒப்பிடவும்.) இது உன்னுடைய பங்கில் தைரியத்தையும் மன உறுதியையும் தேவைப்படுத்துவதாக இருக்கும். சாக்குப்போக்குகளைச் சொல்வது மனித மனச்சாய்வாக இருப்பதால் ஓரளவு எதிர்ப்பை நீ சந்திக்க நேர்ந்தால் ஆச்சரியப்படாதே. உறுதியாயிருந்து அவனுடைய பாவத்தைப் பற்றிய நம்பச் செய்யும் அத்தாட்சியை கொடுத்து, உனக்குத் தெரிந்தவற்றையும் அதை எவ்விதமாக நீ தெரிந்து கொண்டாய் என்பதையும் திட்டவட்டமாகச் சொல். (யோவான் 16:8 ஒப்பிடவும்.) ‘எவரிடமும் சொல்லமாட்டேன்’ என்று வாக்குக் கொடுக்காதே. ஏனென்றால் இப்படிப்பட்ட வாக்கு, பாவங்களை மறைக்கிறவனை கண்டனம் செய்யும் கடவுளின் பார்வையில் பயனற்றதாக இருக்கும்.—நீதிமொழிகள் 28:13.
ஆனால் நீதிமொழிகள் 18:13 எச்சரிப்பதாவது: “காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.” ஒருவேளை தவறாக புரிந்து கொள்ளும் காரியம் சம்பவித்திருக்கலாம். மறுபட்சத்தில் உன் நண்பன் அவனுடைய பிரச்னை வெளிப்படுத்தப்பட்டு நம்பிக்கையாக பேசுவதற்கு எவரையாவது கொண்டிருப்பது அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கக்கூடும். ஆகவே பேசுவதை நன்றாக கவனித்துக் கேட்பவனாயிரு. (யாக்கோபு 1:19) “நீ இப்படி செய்திருக்கக்கூடாது . . .” அல்லது, “நானாக இருந்திருந்தால், இப்படியாகச் செய்திருப்பேன் . . .” போன்ற கண்டன வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனுடைய உணர்ச்சிகள் தாராளமாக வெளிப்படாதபடி அதை அடக்கிவிடாதே. இவை நண்பனின் குற்ற உணர்வையும் நம்பிக்கையற்ற உணர்வையுமே வலியுறுத்துவதாக உள்ளது. அதேவிதமாக “நீ எவ்விதமாக இதைச் செய்யலாம்!” போன்ற அதிர்ச்சியை வெளிப்படுத்தும் வார்த்தைகள் மோசமான நிலையை இன்னும் அதிக மோசமாக்கிவிடும்.
யோபுவை கண்டனம் செய்வதைவிட சற்று அதிகத்தைச் செய்த அவனுடைய மூன்று “தேற்றரவாளர்களைப்” பற்றிய பைபிள் பதிவை நினைவுபடுத்திப் பாருங்கள். கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டதற்குப் பின்பு, யோபு சொன்னான்: “நீங்கள் கொடுக்கிற ஆறுதல் வெறும் வாதனையாகவே இருக்கிறது. நீங்கள் என்றுமாக பேசிக் கொண்டே இருக்கப் போகிறீர்களா? . . . நீங்கள் என் இடத்திலும் நான் உங்கள் இடத்திலுமிருந்தால், . . . நான் ஆலோசனையால் உங்களைப் பெலப்படுத்தி, உங்களை தேற்றுவதற்கு நான் பேசிக் கொண்டிருப்பேன்.” (யோபு 16:1–5, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகவே பிறரை உன்னுடைய இடத்தில் வைத்துப்பார்த்து உன் நண்பன் உணருவதை நீ உணர்ந்து பார். (1 பேதுரு 3:8) இது என்ன சொல்கிறாய் என்பதையும் அதை எவ்விதமாகச் சொல்கிறாய் என்பதையும் மாற்றி அமைக்கக்கூடும்.
ஆனால் உன் நண்பனை ஊக்குவிக்க, உன்னால் முடிவதை நீ செய்தாலும், உன்னால் கொடுக்கமுடிவதற்கும் மேலாக அதிக உதவியை நிலைமை தேவைப்படுத்துவதை நீ காண்பாய். அப்போது, உன் நண்பனை, தவறை அவனுடைய பெற்றோரிடமோ அல்லது பொறுப்புள்ள பெரியவர்களிடமோ வெளிப்படுத்தும்படியாக வற்புறுத்த வேண்டும். உன் நண்பன் அவ்விதமாகச் செய்ய மறுத்தால் எப்படி? நியாயமான ஒரு காலப்பகுதிக்குள் காரியத்தை அவன் சரிசெய்யாவிட்டால், உண்மையான ஒரு நண்பனாக, அவனுடைய சார்பில் எவரோ ஒருவரிடம் சொல்ல நீ கடமைப்பட்டிருப்பாய் என்பதாக அவனிடம் தெரிவித்துவிடு.
“உண்மையான ஒரு சிநேகிதனாக” இருத்தல்
“சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்,” என்பதாக நீதிமொழிகள் 17:17 நமக்கு நினைப்பூட்டுகிறது. உண்மைதான், உன்னுடைய நண்பன் நீ ஏன் இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுத்தாய் என்பதை புரிந்து கொள்ளாமல், அதைப் போற்றாதவனாக இருக்கக்கூடும். அவன் நிலைகுலைந்துபோய் கண்மூடித்தனமாக உன் நட்பையும் கூட முறித்துக் கொள்ளலாம். ஆனால் திகிலடைந்துவிடாதே. தன்னுடைய உணர்ச்சிகளைத் திருத்திக் கொண்டு நீ அவனுடைய நீடித்த நலனிலும் நல்வாழ்விலும் அக்கறையுடையவனாயிருந்தாய் என்பதை அவன் உணர்ந்துகொள்வதற்கு உன் நண்பனுக்கு நேரத்தைக்கொடு.
இப்பொழுது நாம் லீ மற்றும் டெபியின் விஷயத்துக்குவருவோம். லீ சொல்கிறான்: “எவரோ ஒருவரிடம் சொல்வதன் மூலம் நான் சரியான காரியத்தையே செய்தேன் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய மனச்சாட்சி மேம்பட்டதாக இருப்பதை நான் உணர்ந்தேன். ஏனென்றால் க்ரிஸ் அவனுக்குத் தேவையாயிருந்த உதவியைப் பெற்றுக் கொண்டிருந்தான். பின்னால் அவன் என்னிடம் வந்து நான் செய்த காரியத்துக்காக அவன் கோபப்படவில்லை என்று சொன்னபோது, இதுவும்கூட எனக்கு மனநிம்மதியை அளித்தது.” உண்மைதான், எல்லா நண்பர்களுமே சாதகமாகப் பிரதிபலித்துவிட மாட்டார்கள். டெபியைப் பற்றி நினைவுப்படுத்திப் பாருங்கள். “கேரன் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க நான் அனுமதிக்கக்கூடாது, அவள் கடைசியில் இளங்குற்றவாளி என்ற பதிவோடு சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம் என்பதை நான் அறிந்திருந்தேன்.” கடைசியாக கேரனுடைய நண்பர்கள் அருவருப்பான பேச்சு வார்த்தைகளை நிறுத்திவிட்டார்கள். டெபி சொல்கிறாள்: “நான் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டேன். நான் எப்படியோ சமாளித்து இதற்கிடையில் அநேக காரியங்களைக் கற்றுக் கொண்டுவிட்டேன்.”
உன் துணிச்சலான நடவடிக்கைகளை உன் நண்பன் தொடர்ந்து எதிர்த்துவருவானேயானால் அவனோ அல்லது அவளோ முதலிடத்தில் ஓர் உண்மையான சிநேகிதனாக ஒருபோதும் இருந்ததில்லை என்பது தெரிகிறது. ஆனால் உண்மைக் கிறிஸ்தவர்கள் மத்தியில், உன்னுடைய உயர்வான கொள்கைக்காக உன்னை வியந்து பாராட்டி, இதன் விளைவாக உன் நட்பை நாடக்கூடிய சிலரும்கூட இருப்பார்கள். குறைந்தபட்சம் கடவுளுக்கு உன்னுடைய பற்றுறுதியை நீ நிரூபித்து, உன்னை ஓர் உண்மையான நண்பனாக காண்பித்திருக்கிறாய் என்பதை அறிந்திருப்பதில் வரும் மனநிறைவு உனக்கிருக்கும். (g88 9⁄8)
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
உன் நண்பன் தனக்குதானே உதவியைப் பெற்றுக் கொள்ள மனமில்லாதவனாயிருந்தால், அவனுடைய சார்பாக நீ செயல்படுவது அவசியமாயிருக்கலாம்.
[பக்கம் 21-ன் படம்]
உன் நண்பன் ஒரு வினைமையான தொந்தரவை நோக்கி சென்று கொண்டிருக்கிறான் என்பதை அறியவந்தால், நீ என்ன செய்ய வேண்டும்?