தொடர்ந்து உயிரோடிருக்க அற்புதமாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்
உங்களை ஆரோக்கியத்துடன் உயிரோடிருக்கச் செய்ய உங்கள் உடலில் அற்புதமான திகைப்பூட்டும் தானியங்கி செயல்முறை அமைப்புகள் இருக்கின்றன. நாம் சிலவற்றைச் சுருக்கமாய் ஆராய்வோம்.
ஓர் உதாரணம் உங்கள் நுரையீரல்கள். முதலாவதாக குரல்வளை மூடி (எபிக்லோட்டிஸ்)-ஐ எடுத்துக்கொள்வோம். நீங்கள் உணவு அருந்துகையில் அது நுரையீரலுக்குள் செல்லாதபடி தடுத்து நிற்கும் ஒரு சிறிய திட்டி(கண்ணி)வாயில். இருமல் நுரையீரலை தற்காக்கும் இரண்டாவது அம்சம். மூன்றாவது வருவது பிசின்போல் ஒட்டும் தானியங்கி படிக்கட்டு போன்ற அடுக்கு. இது நுரையீரலுக்குப் போகும்பாதையில் உள்ளது. அங்கே சிறிய ஊடுருவற்காரர்களைத் தடுத்து நிறுத்தும் சீதம் உள்ளது. முள்போன்ற பாகங்களின் மேல்நோக்கிச் செல்லும் இயக்கத்தால் அவை நீக்கப்படுகின்றன.
நுரையீரல் தற்காப்பில் கடைசியில் வருவது, சுத்திகரிக்கும் இரத்த வெள்ளணுக்கள். இந்தச் சுகாதார அதிகாரிகள் கண்ணுக்குப் புலப்படாத கெட்ட இம்மிகளை விழுங்கிவிடுகின்றன. அத்தகைய செயல்முறை அமைப்புகளுக்கு நன்றி. நம்முடைய நுரையீரல்கள் பாதுகாப்போடு தொடர்ந்து இயங்குகின்றன.
நீங்கள் இதை வாசிக்கையில் உங்கள் உந்துசவ்வு சுருங்குகிறது மற்றும் தளருகிறது. ஒவ்வொரு சுருங்குதலும் உங்கள் நுரையீரலுக்குள் காற்றை உறிஞ்சுகிறது. தசைகள் தளர்ந்திருக்கும்போது காற்று வெளியேற்றப்படுகிறது. உங்கள் மூளையின் நம்பத்தக்க கட்டளை மையத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு 15 தடவைகள் இதனைச் செய்ய உந்துசவ்வு ஓர் ஆணையைப் பெறுகிறது.
அக்கறையூட்டும் விதமாகவே, மனிதன், மிருகங்கள் இரண்டையும் விவரிக்க எபிரெய வார்த்தையாகிய நெபெஷ் என்பதை 3,500 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பைபிளின் முதல் புத்தகம் உபயோகிக்கிறது. இந்த வார்த்தை சொல்லர்த்தமாக “ஒரு சுவாசிக்கும் பிராணி”a என்று அர்த்தங்கொள்கிறது. மருத்துவரீதியில் பார்க்கையிலும் துல்லியமாகவே, பைபிள், சுவாசம் உயிர் தொடர்ந்திருக்க உதவுகிறது என்றும் “நாசியிலே ஜீவசுவாசம்” இல்லாமல் மனிதனும் மிருகங்களும் சீக்கிரத்தில் மாண்டுபோகும் என்றும் காட்டுகிறது.—ஆதியாகமம் 1:20, 21, 24, 30; 2:7; 7:22.
மற்ற பூர்வ எழுத்துக்கள் சுவாசத்தின் நோக்கத்தைப் பற்றிய ஆதாரமற்ற ஊகங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, சுவாசம் இருதயத்திற்குள் ஒரு நெருப்பைத் தொடர்ந்து எரியச் செய்வதால், அந்த உள்ளுரை ஜூவாலை உடலுக்குத் தேவையான வெப்பத்தை அளிக்கிறது என்ற விசித்திரமான கோட்பாட்டைக் கிரேக்க மற்றும் ரோம தத்துவ ஞானிகள் கொண்டிருந்தனர்.
இந்தக் கோட்பாடு 16 வது நூற்றாண்டு வரையாக பிரபலமாக இருந்தது. 20-வது நூற்றாண்டில்தான் சுவாசத்தின் உண்மையான நோக்கம் தெளிவானது. காற்றிலுள்ள ஆக்ஸிஜன் இரத்தத்தினால் உட்கிரகிக்கப்பட்டு உடலின் கோடிக்கணக்கான உயிரணுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொரு உயிரணுவையும் சக்தியை உண்டுபண்ண இந்த ஆக்ஸிஜனை உபயோகிக்கிறது. பூமியில் எங்கு நாம் சென்றாலும், பயனுள்ள ஆக்ஸிஜன் இந்த முக்கிய நோக்கத்தைச் சேவிக்கக் கிடைக்கிறது. பூர்வ போதகன் ஒருவன் கிரேக்க தத்துவ ஞானிகளின் ஒரு கூட்டத்திற்குச் சொன்னான்: “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின் தேவனானவர் . . . எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறவர்.”—அப்போஸ்தலர் 17:24, 25.
உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் சுவாசம் முக்கிய பங்கை வகிக்கிறது. நுரையீரல் வழியாக இரத்தம் செல்லும்போது புதிய ஆக்ஸிஜன் விநியோகத்தை உட்கிரகிக்கும் முன்பு அது கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. நாம் சுறுசுறுப்பாக இருக்கையில் நம்முடைய உடலின் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்கிறது. இந்தக் கழிவில் உயிரணுக்கள் மூச்சுத்திணறாதபடிக்கு ஓர் அதிசயமான செயல்முறை அமைப்பு தடுக்கிறது. இரத்தம் மூளை வழியாகப் பாயும் போது கரியமிலவாயுவின் எந்த ஓர் அதிகரிப்பும் சீக்கிரமாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. கட்டளை மையம் சுவாசத்தின் வேகம் மற்றும் ஆழ்ந்த தன்மையை அதிகரிப்பதன்மூலம் பிரதிபலிக்கிறது.
சுவாசச் சீரமைப்பு தானாகவே ஏற்படுகிறது. இருப்பினும் வேகக்கட்டுப்பாடு தேர்ந்தெடுப்பான் உள்ள தானியங்கி செலுத்துமுறை வாகனத்தைப் போன்று மனித ஆற்றல் மூலமாகவும் சுவாசம் செயல்படக்கூடும். இந்தச் செயல்முறை அமைப்பு, நாம் நீருக்கடியில் இருக்கையிலோ அல்லது புகை நிரம்பிய அறையிலிருந்து அவசரமாக வெளியேறுகையிலோ நாம் மூச்சை அடக்கிக்கொள்ள உதவுகிறது என்பதைக் குறித்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடும். ஆனால், நாம் உணர்வில்லாதிருக்கையில், இந்தத் தானியங்கி செயல்முறை அமைப்பு மனித ஆற்றல் மூலம் செய்யப்படும் செயல்முறையை ரத்து செய்துவிடுவதால் நாம் காலவரையின்றி மூச்சை அடக்கமுடியாது. ஆகவே நாம் தூங்கும்போதுகூட உயிரைக் காக்கும் ஆக்ஸிஜன் உடலுக்கு அளிக்கப்படுகிறது.
உங்களுடைய உள்ளான ஜீவநதி
உடலிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மனிதனின் அறியும் சக்திக்கு அப்பாற்பட்டது. ஒரு குறைந்த பட்ச மதிப்பீடு 75,00,000 கோடி—இது நம்முடைய பூமியின் ஜனத்தொகையைக் காட்டிலும் 15 ஆயிரம் மடங்கு அதிகம். இந்த உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஆக்ஸிஜன் சென்றடைய, நவீன கால நகரம் ஏதோ ஒன்றின் போக்குவரத்து அமைப்பைக் காட்டிலும் அதிக சிக்கலான மற்றும் பயனுறுதிறனுள்ள ஒன்று தேவைப்படுகிறது.
உடலின் போக்குவரத்து அமைப்பு, இரத்தம் பாயும் இருதயம், தமனிகள், சிரைகள் மற்றும் சிறிய இரத்தக் குழாய்களின் வலைபோன்ற அமைப்பு. அது “1,00,000 மைல்கள் நீளமான குழாயின் திறந்த—முனையில்லா அமைப்பு” என்று மனித உடல் (The Human Body) என்ற புத்தகம் கூறுகிறது. அந்த ஊகத்தின் பிரகாரம் உங்கள் இரத்தக் குழாய்களை முனைக்குமுனை நீட்டி வைத்தால் பூமியைச் சுற்றி நான்குமுறை செல்லும்.
இந்தப் பெரிய வலைபோன்ற அமைப்பு குடல்களின் சுவர்களிலிருந்து உட்கிரகிக்கப்பட்ட உணவுத் துணுக்குகளையும் ஏந்திச் செல்கிறது. இப்படியாக முழு உடலும், குறிப்பிடத்தக்கவையாக இல்லாது தோன்றும் பாகங்களும் உணவையும், ஆக்ஸிஜனையும் பெறுகின்றன. சுமார் ஐம்பது இலட்சம் உரோமங்கள் உங்கள் தோலிலிருந்து வளர்கின்றன; இருப்பினும் நேர்த்தியான இரத்தக் குழாய்களின் வலைபோன்ற அமைப்பு ஒவ்வொரு உரோமத்தின் வேருக்கும் வழிநடத்தப்படுகிறது. ஒவ்வொரு சிறிய உரோமத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள கவனம், கண்டு அதிசயிக்க வேண்டிய ஒன்று. “நீங்கள் பயப்பட வேண்டாம், உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு உறுதியளித்தார்.—மத்தேயு 10:28, 30.
இரத்தத்தின் பொருளடக்கம் ஒவ்வொரு நிமிடமும் உத்தேசமாக 3,00,000 கோடி புதிய உயிரணுக்களை உண்டாக்க உங்கள் உடலை சாத்தியமுள்ளதாக்குகிறது. உரோம வளர்ச்சி, அதின் வேரில் உயிரணுக்களின் பெருக்கத்தின் விளைவாகும். பழைய தோல் உங்கள் உடலிலிருந்து உறியப்படுவதால் புதிய தோல் உயிரணுக்கள் அடிப்பாகத்தில் பெருக்கமடைகிறது. உங்கள் குடல்களின் சுவர்களிலிருந்து உயிரணுக்கள் சுரண்டப்படுவதால் அவைகளின் இடத்தைப் பூர்த்தி செய்ய புதிய உயிரணுக்கள் உண்டாக்கப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியும் உங்கள் எலும்பு மஜ்ஜையில் இலட்சக்கணக்கான இரத்த சிவப்பணுக்கள் உண்டாக்கப்படுகின்றன!
இயல்பாகவே, இந்த எல்லாக் கிரியைகளும் அதிகப்படியான கழிவுப்பொருட்களை உண்டாக்குகின்றன. கரியமிலவாயுவையும் சிறிய கழிவுப்பொருட்களையும் ஏந்திச் செல்வதன் மூலம் இரத்தவோட்டம் மறுபடியும் உதவியளிக்கிறது. மரித்துபோன உயிரணுக்கள் போன்ற பெரிய கழிவுப்பொருட்கள், இரத்தத்திலிருந்து திசுக்களுக்குள் பிரவேசிக்கும் இரத்தவெள்ளணுக்களால் உட்கொள்ளப்படுகின்றன. இந்தச் சுகாதார அதிகாரிகளின் பெருந்தொகை தங்களுடைய வேலையைச் செய்ய நோய் தொற்றிய இடத்தில் ஒன்று சேர்கின்றன. இந்த உண்மைகளை மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பைபிள் எளிமையாக எடுத்துச் சொன்னது: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.”—லேவியராகமம் 17:11, 14.
அவசரகாலம்—இரத்த இழப்பைக் கையாளுதல்
உங்களுக்கு எப்பொழுதாவது கடுமையான இரத்தக்கசிவு உண்டாக்கிய ஒரு காயம் ஏற்பட்டதா? நீங்கள் அதிக அளவு இரத்தத்தை இழந்திருந்தால் மரணம் சம்பவித்திருக்கக்கூடும். ஆனால், பெரும்பாலான சமயம், விஞ்ஞானம் முழுவதுமாக விளக்க முடியாத அதிசயமான அவசரக்கால செயல்முறை அமைப்புகள் அத்தகைய விளைவைத் தவிர்க்க உதவுகின்றன.
ஓர் இரத்தக்குழாய் துண்டிக்கப்படும்போது, அது சுருங்குகிறது, இதன்மூலம் இரத்தம் வெளியேறுவது குறைகிறது. இரண்டாவது செயல்முறை அமைப்பு இதைத் தொடருகிறது. காயப்பட்ட இடத்தில் இரத்தத்தில் மிதக்கும் வட்டவடிவான அமைப்புகள் (Platelets) பிசின்போன்று மாறி ஒன்று சேருகின்றன. பிறகு உறையச் செய்யும் புரத நாரிழைகள் புண்ணைச் சுற்றி உருவாக ஆரம்பிக்கின்றன, இவைகள் அந்த மிதக்கும் அமைப்புகளை ஒரு கட்டியாக இறுகச் செய்து இரத்தத்தின் கடைசித் துளியையும் சிந்தவிடாமல் அடைத்துப்போடுகிறது.
இந்த மேற்சொல்லப்பட்ட செயல்முறை அமைப்புகள் கையாள முடியாது போகையில் என்ன நேரிடும்? பேரளவான கசிவு, மற்ற செயல்முறை அமைப்புகளை வேலை செய்யத் தூண்டுகிறது, தமனிகளிலுள்ள மிகச் சிறிய புலன்கள் இரத்த அழுத்தக்குறைவு ஏதாவது இருப்பின் அதைப் பதிவு செய்கிறது. செய்திகள் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. அது இரத்தக் குழாய்களைச் சுருக்கச் செய்யும் வகையில் பிரதிபலிக்கிறது. அதே சமயத்தில் இருதயத்தை அதிக வேகமாக துடிக்குமாறு மூளை கட்டளையிடுகிறது. இரத்தக் கசிவு தொடர்ந்து இருக்குமானால், மூளைதானேயும் இந்த விளைவுகளால் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த நரம்பு அனிச்சை செயல்களைத் தீவிரமாக்கும் வகையில் பிரதிபலிக்கிறது. இருதயத்துடிப்பு வேகம் ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகள் என்ற வீதத்திலிருந்து சுமார் 200 ஆக அதிகரிக்கலாம். இத்தகைய செயல்முறை அமைப்புகள் எவ்வளவு பலன்தரக்கூடியவை?
சுருங்கிய இரத்தக் குழாய்கள் உடலின் பெரும்படியான பாகங்களுக்குப் பாயும் இரத்த அளவைக் குறைக்கின்றன. இதுவும், அதிகரிக்கப்பட்ட இருதய வேகமும் இரத்த அழுத்தத்தை ஒரே அளவாக வைக்கின்றன. “இருப்பினும், ஓர் அழகிய உபாயத்தின்மூலம்,” அதிசயமாக உண்டாக்கப்பட்டிருக்கிறது (Wonderfully Made) என்ற தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் A. ரெண்டில் ஷார்ட் குறிப்பிடுகிறார், “மூளையின் தமனிக் குழாய்கள் இந்தப் பொதுவான சுருங்குதலுக்கு விதிவிலக்காக இருக்கின்றன.” இருதய தசைகளுக்கு விநியோகிக்கும் தமனிகள் காரியத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. ஆகவே, இந்த முக்கிய பாகங்களினூடே இரத்தம் பெரும்பாலும் இயல்பாகவே பாய்கிறது. பேராசிரியர் ஆர்தர் கய்ட்டனின் மருத்துவ உடல்நூல் பாட புத்தகத்தின் (Textbook of Medical Physiology) பிரகாரம் இந்த மேற்கூறப்பட்ட எதிர்மாறான செயல்கள், “அவைகள் இல்லாதிருக்கையில் மரணம் விளைவிக்காமல் எவ்வளவு இரத்த இழப்பைக் கையாளமுடியுமோ அதைவிட இரண்டு மடங்கு அதிக இரத்தமிழப்பைக் கையாள உதவுகின்றன.”
இதற்கிடையில், இரத்தத்தின் கன அளவை அதிகரிக்க மற்ற செயல்முறை அமைப்புகள் இயங்குகின்றன. டாக்டர் மில்லர், கேள்விக்குரிய உடல் (The Body in Question) என்ற தன்னுடைய புத்தகத்தில் விளக்குவதாவது: “மிக முக்கியமாக முதலில் கவனிக்க வேண்டியது, திரவ கன அளவை முதலில் இருந்த நிலைக்குக் கொண்டுவருவது. இழப்பு போதுமான அளவு மெதுவாக இருந்தால் இரத்தத்தை நீர்க்கச் செய்வதன் மூலம் உடல் தானாகவே இதைச் செய்யக்கூடும். திசுக்களிலிருந்து திரவங்கள் எடுக்கப்படுகின்றன; சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு தானாகவே குறைந்துவிடுகிறது மற்றும் வாயின் மூலம் நீர் உட்கொள்ளுதலின் அளவு அதிகரிக்கிறது.”
இரத்தப்போக்கிற்கு இரத்தமேற்றுதலைப் பரிந்துரைப்பினும், டாக்டர் மில்லர் ஒப்புக்கொள்வதாவது: “உயிருக்கு மிகவும் உடனடியான அச்சுறுத்தல் இரத்தக் குறையாடு அல்ல, மாறாக, திரவ கன அளவு போதாமையே . . . இரத்தத்தை நீர்க்கச் செய்வதன் மூலம் அதன் கன அளவைப் பழையநிலைக்குக் கொண்டுவரும் உடலின் இயல்பான போக்கைப் பின்பற்றுவதால், ஆரம்ப கட்டங்களில் நிணநீர் பதிலிகளை ஏற்றுவது ஒப்புக்கொள்ளப்படும் இடைக்கால மாற்று சிகிச்சையாக இருக்கிறது.” பேராசிரியர் கய்ட்டன் கூறுவதாவது: “பல்வேறுவகையான நிணநீர் பதிலிகள் விருத்தி செய்யப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் சரியாக நிணநீரின் [இரத்தத்தின் திரவ பாகம்] அதே வேலைகளை [விநியோகம்] செய்கின்றன.”
ஆக்ஸிஜன் ஏந்திச் செல்லும் சிவப்பணுக்களின் குறைபாட்டைச் சரிக்கட்டுவதற்கும் உடல் ஒரு செயல்முறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியின் வாழ்கிற உடல் (The Living Body) என்ற தொடர்நாடகத்தின் “விபத்து” என்ற விளக்கப்படம் விவரித்ததாவது: “வழக்கமாக நம்முடைய எலும்பு மஜ்ஜை அதன் முழுத்திறனில் சுமார் 20 விழுக்காடு அளவில்தான் சிவப்பு அணுக்களை உண்டுபண்ணுகிறது. ஆகவே இரத்த சிவப்பணுக்களுக்குத் திடீர் என ஒரு தேவை ஏற்பட்டால், நாம் உற்பத்தி விகிதத்தை சுமார் ஐந்து மடங்குகள் அதிகரிக்கக்கூடும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.”
ஒரு விபத்து நேரிடுகையில் நம்முடைய உடல்கள் இந்த உடன் பொருத்தப்பட்ட செயல்முறை அமைப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதைக் கருதுகையில் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். மற்ற செயல்முறை அமைப்புகள் மரணத்துக்கேதுவான பாக்டீரியாக்களின் அச்சுறுத்தலிலிருந்து நம்மை விடுவிக்கின்றன.
உங்களுடைய நோய்க்கெதிரான பாதுகாப்பு அமைப்பு
சில சமயங்களில் அபாயகரமான பாக்டீரியாக்கள் அல்லது விஷக்கிருமிகள் நம்முடைய உடலில் புகுந்து அங்கே இனவிருத்தி செய்ய முனைகின்றன. நன்றி பாராட்டும் வகையில் நாம் பெரிய ஓர் எதிர்க்கிளர்ச்சியாளர் குழுவைப் பெற்றிருக்கிறோம்—இரத்த வெள்ளணுக்கள்—அவை அந்நிய ஊடுருவற்காரர்களைத் தாக்கி அழிக்கின்றன. இருப்பினும், விஞ்ஞான அறிவுக்கு இன்னும் எட்டாத வகையில் ஓர் அதிசயமான செயல்முறை அமைப்பு மூலம் இந்த இரத்த வெள்ளணுக்கள் உடலின் ஆரோக்கியமுள்ள உயிரணுக்களுக்குத் தீங்கு செய்வதில்லை.
தொலைக்காட்சியின் உதவியால் நீங்கள் இந்தத் திறம்பட்ட போர் வீரர்கள் வேலை செய்யும் விதத்தைப் பார்த்திருக்கலாம். ஒரு வெள்ளணு கழிவுப் பொருளைச் சூழ்ந்துகொள்வதைக் கவனித்துப் பார்ப்பது அதிசயமூட்டும். ஆனால் அத்தகைய ஒன்று ஓர் உடல் அங்கம் விஷக்கிருமி ஒன்றால் தொற்றப்பட்டிருப்பதை பரிசோதித்துப் பார்ப்பதையும் பிறகு அந்த ஊடுருவதற்காரனை இன்னொரு சக அணுவின் உதவியைக் கொண்டு கொன்று போடுவதையும் பார்ப்பது இன்னும் அதிக வியப்பூட்டும். இப்படியாக தொற்றுநோய் தடுத்து நிறுத்தப்படுகிறது.
மரணத்துக்கேதுவான ஒரு விஷக்கிருமியோ அல்லது அந்நிய ஊடுருவற்காரனோ, முதல் முறையாக ஊடுருவியிருந்தால் அதை அழிக்க உங்களுடைய நோய்க்கெதிரான பாதுகாப்பு அமைப்புக்குச் சில நாட்கள் எடுக்கலாம். முதலாவதாக, சரியான லிம்ஃபோசைட் (ஒரு விசேஷித்த வகையான இரத்த வெள்ளணு) கண்டுபிடிக்கப்படவேண்டும். தெரிந்தெடுப்பதற்கு உடலில் இலட்சக்கணக்கான லிம்ஃபோசைட்டுகள் உள்ளன; ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட விஷக்கிருமிக்குப் பொருந்தக் கூடிய ஒரு தனிப்பட்ட ஆயுதத்தை உண்டாக்க திறன் பெற்றிருக்கிறது.
சரியான லிம்ஃபோசைட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அது தீவிரமாக இனவிருத்தியாக்குகிறது. சில நாட்களுக்குள் இரத்த ஓட்டம் இந்தப் போர் வீரர்களால் நிரம்பி இருக்கும். அவை அந்த எதிரியை நழுவவிடாமல் பிடித்து அழிக்கும் அல்லது எதிரியைச் செயலற்றுப்போகும்படி செய்து அதை அழிவுக்கு அடையாளம் போடும் நோய் எதிர்ப்புப்பொருட்களை உண்டுபண்ணும். இயந்திர உடல் (The Body Machine) என்ற புத்தகம் சொல்லுகிறது, “அந்த நோய் எதிர்ப்புப் பொருள், விஷக்கிருமியின் மீதுள்ள அணுமூலக்கூறுகளுடன் பூட்டில் சாவி பொருந்துவதுபோன்று தன்னை இணைத்துக் கொள்கிறது.”
உங்களுடைய நோய்க்கெதிரான பாதுகாப்பு அமைப்பு மற்றொரு குறிப்பிடத்தக்க திறனைப் பெற்றுள்ளது. ஒரு முறை சரியான ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதை நினைவில் வைத்துக்கொள்கிறது. இது, அதேவிதமான கிருமியால் எதிர்காலத்தில் தாக்கப்படும்போது பாக்டீரியா எதிர்ப்புப்பொருட்கள் விரைவில் உண்டாக்க முடிவதை அர்த்தப்படுத்தும். “குழந்தைப் பருவ வியாதிகளான தட்டம்மை, பொட்டலம்மை அல்லது சின்னம்மை ஆகியவற்றிலிருந்து குணமடைந்த ஒருவர் பொதுவாக இந்த நோயின் இரண்டாவது தாக்குதலுக்கு உட்படுவதில்லை” என்பதாக நுண்ணுயிரியலின் கூறுகள் (Elements of Microbiology) என்ற அறிவியல் பாடபுத்தகம் விவரிக்கிறது.
இந்த நினைவாற்றலுள்ள செயல்முறை அமைப்போடு செயல்பட்டு மருத்துவ விஞ்ஞானம் அநேக நன்மையான காரியங்களைச் சாதித்துள்ளது. நோய்த்தடுப்பு ஊசிகள் போடுவது நோய்க்கெதிரான பாதுகாப்பு அமைப்பை ஒரு நபர் முன்னொருபோதும் கொண்டிராத நோய்களுக்கெதிரான பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்களை உண்டாக்கச் செய்கிறது. இதன் மூலமாக, குழந்தைகள் சில நோய்களுக்கு எதிரான பாதுகாப்பைப் பெறுகின்றன. ஆனால் சில குறிப்பிட்ட வியாதிகள் அவைகளைக் கட்டுப்படுத்தும் மனிதனின் முயற்சிகளை மீறுகின்றன.
“நோய் எதிர்ப்புப் பொருட்களின் மேலுமான புரிந்துகொள்ளுதல் புற்றுநோய், மற்றும் தீவிரமூக்குச் சளி அலர்ஜியுடன் கூடிய சிவந்து வீங்கும் கண்கள் (hay fever) போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு வழிநடத்தலாம்,” என்று நுண்ணுயிரியலின் கூறுகள் என்ற புத்தகம் கூறுகிறது. அது மேலும் சொல்கிறது, “எதிர்கால ஆராய்ச்சி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எல்லாருடைய ஆயுசு நாட்களை நீடிக்கவும் நோய்க்கெதிரான பாதுகாப்பு வேலையை எப்படி வயோதிப காலத்திற்கு விரிவாக்கலாம் என்பதற்கான அதிகப்படியான உட்பார்வைகளை விளைவிக்க வேண்டும்.” இருப்பினும், இந்த விஞ்ஞானப் பாடப்புத்தகம் பிரசுரிக்கப்பட்ட ஆண்டாகிய, 1981-ல் அக்குயர்ட் இம்யூன் டெஃபிஷியன்சி சின்ட்ரோம் (ஏய்ட்ஸ்) அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. அந்தப் பெயர் சுட்டிக்காட்டுவது போல் இந்த ஏய்ட்ஸ் விஷக்கிருமி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில நோய்களுக்கு எதிரான தற்காப்பை இழக்கும் வகையில் உடலின் நோய்க்கெதிரான பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியைத் தாக்குகிறது.
ஒரு முரண்பாட்டை உணருகிறீர்களா? மனித உடல் உண்மையில் தொடர்ந்து உயிருடனிருக்கவே உண்டாக்கப்பட்டது. ஓர் அதிசயமான முறையில் அது தற்காக்கிறது, பழுதுபார்க்கிறது, மற்றும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. இருப்பினும், ஏதோ ஒன்று குறைவுபடுகிறது. ஏய்ட்ஸ் போன்ற சில வியாதிகளை பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம் என்பது மெய்தான். (அப்போஸ்தலர் 15:28, 29; 2 கொரிந்தியர் 7:1) ஆனால் புற்றுநோய் போன்ற மற்ற வியாதிகள் அதிக கவனமாக முன்னெச்சரிக்கை எடுப்பவர்களையும் தாக்குகிறது. இது ஏன்? மனிதன் உண்டாக்கப்பட்டது வாழவா அல்லது சாகவா? டிசம்பர் விழித்தெழு! இதழில் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கப்படும். (g88 8⁄8)
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் மொழிபெயர்ப்புகளில் எபிரெய வார்த்தையாகிய நெபெஷ் அநேக விதங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் “ஆத்துமா” என்றும், சில சமயங்களில் “உயிருள்ள பிராணி” என்றும் சில சமயங்களில் “உயிர்” என்றும் அல்லது மற்ற வார்த்தைகளை உபயோகித்தும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation) முரண்பாடின்றி “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கிறது.
[பக்கம் 16-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
குரல்வளை மூடி உங்கள் நுரையீரல்களைப் பாதுகாக்கும் அநேக செயல்முறை அமைப்புகளில் ஒன்று
குரல்வளை மூடி திறந்த நிலை
குரல்வளை மூடி மூடிய நிலை
குரல்வளை (காற்றுக்குழாய்)
ஈசோபாகஸ் (உணவுப் பாதை)
[பக்கம் 17-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இரத்தக் குழாய்களின் வலைபோன்ற அமைப்பு ஒவ்வொரு உரோமத்தின் வேருக்கும் வழிநடத்தப்படுகிறது
உரோம உறை
இரத்தக் குழாய்
[பக்கம் 18-ன் படம்]
ஓர் ஊகமாக, ஒரு நிமிடத்திற்கு 3,00,000 கோடி உயிரணுக்களை உண்டுபண்ணுவதன் மூலம் உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது
உயிரணுவின் குறுக்கு வெட்டுத் தோற்றம்
[பக்கம் 19-ன் படம்]
நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாப்பு அமைப்போடு நாம் பிறந்திருக்கிறோம்