சில மூர்க்கமாயும் மற்றவை சாந்தமாயும் இருப்பதேன்
சமீப மாதங்களில், சண்டை நாய்கள் அமெரிக்காவில் தலையங்கச் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. அவை தாக்குதல் செய்கிற, காயப்படுத்துகின்ற, சில சமயங்களில் மனிதர்களைக் கொன்று விடுகின்ற நாய்களாக அநேகரால் கருதப்பட்டு அஞ்சப்படுகின்றன. அவை இயற்கையாகவே மூர்க்கமானவையா அல்லது மூர்க்கமான எஜமானர்கள் அவைகளை மூர்க்கமாக்கிவிடுகின்றனரா? நாய்கள் மூர்க்கமாக அல்லது சாந்தமாக இருப்பது வளர்ப்பினாலா அல்லது பயிற்றுவிப்பினாலா? ஒரு வேளை மனிதர்களுடைய விஷயத்தில் உண்மையாக இருப்பது போலவே, இவை இரண்டும் ஒன்று சேர்வதே அவைகள் என்னவாக இருக்கின்றன என்பதை தீர்மானிக்கின்றன.
சண்டை நாய்களைப் பற்றிய இரக்கமில்லாத ஒரு குற்றச் சாட்டுப் பத்திரம் போல பதிவு வாசிக்கிறது. கலிஃபோர்னியாவில் இரண்டு வயது பையன் ஜேம்ஸ் சோட்டோவை பக்கத்துவீட்டு சண்டை நாய் கீழே தள்ளி அவன் சாகும் வரை முகத்திலும் கழுத்திலும் கடித்துவிட்டது. ஃப்ளாரிடாவில், சண்டை நாய் ஒன்று தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பாலகனிடமாக ஊர்ந்து சென்று அவனைக் கொன்றுபோட்டது. ஜார்ஜியாவில், பக்கத்துவீட்டு புல் தரையில் நடந்து சென்ற நான்கு வயது சிறுவனை மூன்று சண்டை நாய்கள் கொன்றுபோட்டன. ஒக்லஹோமாவில்–சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வீட்டின் செல்லப்பிராணியான ஒரு சண்டை நாய் அதன் அருகில் சென்ற 16 மாத சிறுமியைக் கழுத்தில் பயங்கரமாக கடிக்க அவள் மரித்துப் போனாள். மிச்சிகனில், 20 மாத கைல் கொருல்லோ, அவன் பாட்டி வீட்டுப் புழக்கடையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சண்டை நாயால் தாக்கப்பட்டான். குழந்தையின் அம்மாவை எதிர்த்து அவளை விலக்கிவிட்டு பையனை ஒரு காலி மனைக்கு இழுத்துச் சென்று அவனை சாகடித்தது. கலிஃபோர்னியாவில் மரிஜுவானா பயிருக்கு காவல் காத்துக் கொண்டிருந்த ஒரு சண்டை நாய், இரண்டரை வயதுப் பையன் ஒருவனை சாகும்வரை கடித்து நொறுக்கியது. ஹார்லெமில் குடும்பத்தின் செல்லப் பிராணி இரண்டு மாத பாலகனின் தலையை நொறுக்கிவிட்டது. எந்தவித எச்சரிப்புமுன்றி ஒரு சண்டை நாய், தளிர் நடை போட்டுக் கொண்டிருந்த மெலிஸா லாரபீயின் மீது பாய்ந்து கழுத்தைக் கவ்வி ஒரே கடியில் அவளைக் கொன்றது.
பெரியவர்களும்கூட இதற்கு பலியாகிறார்கள். கான்ஸாசில் 67 வயதான ஒரு செவிலியின் உதவியாளர் முற்றத்தில் தாக்கப்பட்டாள். அவளுடைய உடல் கடித்து நொறுக்கப்பட்டு அவளுடைய மண்டைப் பிளக்கப்பட்டது. இரண்டு சண்டை நாய்களும் ஆயுதத்தோடு வரும் எவரையும் தாக்குவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன. இவள் கையில் ஒரு செய்தித்தாளை சுருட்டி வைத்திருந்ததால் அவை தாக்கியிருக்கின்றன. அவள் மருத்துவமனையில் உயிரிழந்தாள். ஓஹியோவில் 67 வயதான ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் இரண்டு சண்டை நாய்களோடு 25 நிமிடங்களாகப் போராடி உயிரிழந்தார். நியு யார்க்கிலுள்ள ராசெஸ்டரில் வானவெடியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வேலையில்லாத ஒரு மனிதனை ஒரு சண்டை நாய் தாக்கியது. அவன் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
1983 முதற்கொண்டு, நாய்களால் உயிரிழந்த 29 பேரில் 21 பேர் சண்டை நாய்களால் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் அறச்செயல் சங்கம் தெரிவிக்கிறது. இது 72 சதவிகிதம், நாட்டிலுள்ள 1 சதவிகித நாய்களால் கொல்லப்பட்டதாக அர்த்தமாகிறது. துஷ்ட நாய்களைப் பற்றிய அறிவில் நிபுணரான அறச்செயல் சங்கத்தைச் சேர்ந்த ரண்டால் லாக்வுட் சொல்வதாவது: “இந்த விலங்குகள் நாய் பற்களையுடைய முதலைகளாக இருக்கக்கூடும். இவைகளின் வரலாறு கொடியதும் கொடூரமானதுமாகும்.”
எருதுகள் மீதும் கரடிகள் மீதும் நாய்களை ஏவி பார்க்கும் வேடிக்கை விளையாட்டுகள் இங்கிலாந்தில் 1835-ல் தடை செய்யப்பட்டபின்பு, ஸ்டஃபோர்ட்ஷையர் நிலக்கரி தொழிலாளிகள் நாய் சண்டைக்காக நாய்களை வளர்க்க ஆரம்பித்தார்கள். இன்றைய சண்டை நாய்களின் ஆரம்பம் அந்தக் காலத்துக்குச் செல்வதால் அவைகளின் தற்காலப் பெயர் அமெரிக்க ஸ்டஃபோர்ட்ஷையர் வேட்டை நாய்களாகும். அவை அமெரிக்க பிட்புல் வேட்டை நாய்கள் என்றும்கூட அழைக்கப்படுகின்றன.
குட்டையான தசை முறுக்குள்ள உடல்களையும் 1 சதுர அங்குலத்துக்கு 1,800 பவுண்டுகள் அழுத்தத்தை உண்டுபண்ணக்கூடியதுமான கனமான வில்விசை அமைந்தப் பொறிப் போன்ற தாடைகளையுடைய சண்டை நாய்கள் பயங்கரமான போர் செய்யும் இயந்திரங்களாகும். அவை சீண்டப்படாவிட்டாலும் அமைதியாக இருக்கையிலேயே தாக்குதல் செய்து குறடு பிடிப் போல தன் தாடைகளை பலியாளின் மீது பதித்து, குலுக்கி சுறாமீனைப் போல கிழித்துவிடுகிறது. இதற்கு பலியாகிறவர்கள் குடும்ப அங்கத்தினர்களாக இருக்கின்றனர். மூன்று சண்டை நாய்களை ஆர்வத்தோடு வளர்க்கும் அவைகளின் சொந்தக்காரர், ‘விசேஷமாக பிள்ளைகளையுடைய ஒரு குடும்பத்துக்கு விசுவாசமுள்ள, மிக அருமையான செல்லப் பிராணி’ என்பதாக அவைகளைப் பாராட்டிப் பேசுகிறார். என்றபோதிலும், விசுவாசமுள்ள அவருடைய செல்லப் பிராணிகளில் ஒன்று அவர் கை மீது தன் பற்களை பதித்து அவரை மூன்று நாட்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஆண்டு மாலை செய்திகள் வாசிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த தேசீய டெலிவிஷன் பார்வையாளர்கள் லாஸ் ஆன்ஜலீஸ் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி ஃப்ளாரன்ஸ் க்ரோவெல்லின் மீது செய்யப்பட்ட பயங்கரமான ஒரு தாக்குதலை கண்கூடாக பார்த்தனர். பென்ஜெமின் என்ற பெயருள்ள ஒரு சண்டை நாய் வீட்டின் திரைக்கதவு வழியாக பாய்ந்து வந்து அவளுடைய கைகளில் ஒன்றை நொறுக்கி மற்றொன்றை மிக மோசமாக காயப்படுத்தியது. விலங்கு திரும்ப அடிக்கப்பட்டது. ஆனால் மறுபடியுமாக அது பாய்ந்து அவளுடைய இடது மார்பைக் கடித்துவிட்டது. ஏற்கெனவே இது கடித்துவிட்டிருந்த ஒருவரைப் பார்க்க அவள் வீட்டுக்குள் சென்றிருந்தாள். க்ரோவெல் ஐந்து நாட்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சைப் பெற்றாள். லாஸ் ஆன்ஜலீஸில் விலங்கு கட்டுப்பாடு துறையில் வைக்கப்பட்டுள்ள பென்ஜெமினின் படம் பக்கம் 24-ல் காணப்படுகிறது. கொடிய ஒரு கருவியைக் கொண்டு தாக்கியதாக ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று பென்ஜெமினின் சொந்தக்காரர் மீது தொடுக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக சண்டை நாயால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக இருக்கிறது. இதன் காரணமாக இதன் சொந்தக்காரர்கள் நூற்றுக்கணக்கான சண்டை நாய்களைத் தெருவில் கொண்டு விட்டிருக்கிறார்கள் அல்லது கொல்லப்படுவதற்காக விலங்கு உறைவிடங்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அநேக சொந்தக்காரர்கள் இனிமேலும் பாதுகாப்பாக உணருவதில்லை. மற்றவர்கள் தங்கள் நாயின் நடத்தைக்காக நீதிமன்ற வழக்குகளை சந்திக்க மனமுள்ளவர்களாக இல்லை. காப்புறுதி செய்யும் சிலர் இப்பொழுது சண்டை நாய்களுக்கும், டோபர்மான்களுக்கும் அல்லது ஜெர்மன் ஷெப்பர்டுகளுக்கும் காப்புறுதி செய்வதில்லை.
ரண்டால் லாக்வுட் சண்டை நாய்களை “நாய் பற்களையுடைய முதலைகள்” என்று அழைத்து அவர் மேலுமாகச் சொன்னதாவது: “அவலமான காரியம் என்னவென்றால், இந்த நாய்கள் அனைத்துமே ஆபத்தானவை அல்ல. ஒவ்வொரு பிட் புல் நாயும், குறித்த நேரத்தில் வெடிக்க தயாராக காத்திருக்கும் ஒரு சிறிய வெடிகுண்டும் அல்ல.” நிச்சயமாகவே பழைய நமது கும்பல் (Our Gang) நகைச் சுவைப் புத்தகங்களில் பிள்ளைகளோடு வரும் நாய் நண்பனைப் போல, அது ஒரு கண்ணைச் சுற்றி ஒரு கருப்பு வட்டத்தைக் கொண்டிருந்த பீட்டி என்றழைக்கப்பட்ட ஒரு பிட் புல் நாயாகும்!
சண்டை நாயை ஆதரித்துப் பேசுகிறவர்களில் ஒருத்தி டெக்ஸாஸிலுள்ள ஹெளஸ்டனின் சாரா நியுஜென்ட். அவள் அவைகளை 22 ஆண்டுகளாக வளர்த்து வருகிறாள். “பிரச்னை நாய்களில் அல்ல, ஆனால் சொந்தக்காரர்களிடமே,” என்கிறாள் அவள். ஆனால் இது “சிலவற்றைவிட வளர்ப்பதற்கு அதிக கடினமான நாய், அனைவரும் இதை வைத்திருக்கக்கூடாது” என்றும் அவள் குறிப்பிடுகிறாள். யூனைட்டட் கெனல் கிளப்பின் ஆன்டி ஜான்ஸன் சொல்வதாவது: “வளர்க்க வேண்டிய விதத்தில் பிட் புல்களை நீங்கள் வளர்த்தால், நீங்கள் கற்பனை செய்யக்கூடிய மிக நேர்த்தியான செல்லப் பிராணிகளைக் கொண்டிருக்கலாம்.” அமெரிக்க கெனல் கிளப்பின் செயற்குழு செயலர் ராய் கார்ல்பெர்க் அதிக எச்சரிக்கையாயிருக்கிறார். அவர் ‘சில நாய்கள் முழுமையாக நிலையான தன்மையோடிருக்கையில் மற்றவைகளால் அவைகளின் மூர்க்கமான இயல்பையும் மேலான பெலத்தையும் கட்டுப்படுத்தமுடிவதில்லை’ என்கிறார்.
ஃபிலெதெல்பியாவில் விலங்குகளைக் கொடுமைப்படுத்துதலைத் தடுக்கும் கழகம் (SPCA) முன்னாள் சோதனையாளர் சாமுவேல் மக்ளீன் நியுஜென்டினுடைய சொந்தக்காரரின் குற்றப் பொறுப்பை உறுதி செய்கிறார்: “மூர்க்க வெறிக் கொண்ட, கொடூரமான, கட்டுக்கடங்காத புதிய வகையான ஒரு சண்டை நாய் உருவாகிக் கொண்டிக்கிறது. கொலைக்காரன், மின்இயக்க கத்தி, மற்றும் பித்துப்பிடித்தவன் போன்ற அர்த்தமுடைய அவைகளுடைய பெயர்களைக் வைத்தே அவைகளைச் சொல்லிவிடலாம். வழக்கமாயில்லாத அப்பாவும் மகளும், அம்மாவும் மகனுமாகச் சேர்வதால் இவை பிறக்கின்றன.” இப்படியாக நெருங்கிய உறவுகளோடு புணர்தல் நாயை பாழாக்கிவிடுவது மட்டுமின்றி அது பெற்றுக்கொள்ளும் பயிற்சியும் அதை பாழாக்கிவிடுகிறது. ஃபிலெதெல்பியாவிலுள்ள 3,000 சண்டை நாய்களில் அறுபது சதவிகித நாய்கள் சண்டைக்காக பயன்படுத்தப்படுகிறது. சிறியவையாக இருக்கும்போதே அவற்றை மூர்க்கமாக ஆக்குவதற்காக துண்டு துண்டாக கிழித்தெறிவதற்கு அவைகளுக்கு சிறிய பூனைக்குட்டிகளும் நாய் குட்டிகளும் கொடுக்கப்படுகின்றன.
நாய்ச் சண்டைகள் எல்லா 50 மாநிலங்களிலும் சட்டப்படி குற்றமாகவும் 36 மாநிலங்களில் அது பெருங்குற்றமாகவும் இருக்கிறது. ஆனாலும் ‘50 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் வாரத்தின் எந்த இறுதி நாட்களிலும் நீங்கள் இதைக் காண முடியும்’ என்கிறார் கலிஃபோர்னியாவில் சாக்ரோமென்டோவின் அறச் செயல் சங்கத்தின் எரிக் சக்காச்.
தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கான நாய்கள் சண்டை நாய்களே. அவர்கள் பாதுகாப்பின்றி இருப்பதால், அவர்கள் மூர்க்கமாக்கிவிட்டிருக்கும் இப்படிப்பட்ட விலங்குகளின் துணை அவர்களுக்குத் தேவை. கொடிய இந்த விலங்கு அவர்களின் பாகமாகவே இருக்கின்றன.—“நாங்கள் போக்கிரிகள், எங்களை தொந்தரவுச் செய்யாதீர்கள்!” சிக்காகோவிலும் ஃபிலெதெல்பியாவிலுமுள்ள பருவ வயதினர் தங்கள் கத்திகளை அல்லது துப்பாக்கியைப் பயன்படுத்துவது போல அவர்களுடைய கொடிய சண்டை நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நகரங்களிலும் மற்றவற்றிலுமுள்ள தெருவில் போதை வஸ்துக்களை விற்பவர்கள் மர்டர், ஹிட்லர், ஸ்கர்ஃபேஸ் போன்ற பெயர்களோடு இந்த நாய்களைத் தங்களுடன் வைத்துக் கொள்கிறார்கள். இரும்பு பொருத்தப்பட்ட அவைகளின் கழுத்துப்பட்டையில் கொக்கேயினும் அந்நாளில் சம்பாதித்த பணமும் மறைத்து வைக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள் கும்பல்களின் உறுப்பினர்கள் தங்கள் போதை வஸ்துக்களை அவர்களுடைய சண்டை நாய்களின் வீடுகளுக்கு கீழே ஒளித்து வைத்துவிடுகிறார்கள்.
சண்டை நாய்களை ஆயுதங்களாக பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடப்பிக்கப்படுகின்றன. நியு ஜெர்ஸியில் ஒரு மனிதன் காவலாளன் ஒருவனை தாக்கும்படியாக தன் சண்டை நாய்க்கு உத்தரவுக் கொடுத்த போது, பயங்கரமான ஆயுதத்தைக் கைவசம் வைத்திருந்ததற்காக அவன் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டான். ஷாபு கூப்பர் என்ற திருடன் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த காவலரைத் தாக்கும்படியாக தன் சண்டை நாயை ஏவின போது, உயிரைப் போக்கவல்ல ஓர் ஆயுதத்தை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டான். மிச்சிகனிலுள்ள ஒரு மனிதனின் சண்டை நாய் 12 வயது சிறுமியை தாக்கிய போது கொடிய ஆயுதத்தோடு தாக்கியதாக அவன் குற்றஞ்சாட்டப்பட்டான்.
நகராண்மைக் கழகங்கள் பல சட்டத்தின் மூலம் சண்டை நாய்களைத் தடை செய்திருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜாதி நாயை குறியிலக்காகக் கொண்ட இப்படிப்பட்ட சட்டங்களுக்கு நீதிமன்றத்தில் ஆதரவு கிடைப்பதில்லை. “துஷ்ட நாய்களை” தனிப்படக் குறிக்கும் சட்டங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக தெரிகின்றது. “துஷ்ட நாய் சட்டம் திறம்பட்ட வகையில் இயற்றப்படுவது அவசியமாகும்,” என்கிறார் டஃப்ட்ஸ் பல்கலைக்கழக மிருகப் பள்ளியின் ஷெர்ல் ப்ளேர். எப்படியும் ஆக்ரோஷத்தோடு மக்களைத் தாக்கும் நாய் சண்டை நாய் மாத்திரமே அல்ல. ஜெர்மன் ஷெப்பர்ட், டோபர்மான், ரோட்வீலர், அக்கிட்டா, செளஸ் ஆகிய நாய்களுங்கூட இப்படிப்பட்டவையே. சரியாக வளர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்படும் ஆயிரக்கணக்கான சண்டை நாய்கள் பழிபாவமறியாதவையாக இருக்கின்றன.
“ஆம், பொறுப்புள்ள குடும்பங்களில் சண்டை நாய்கள் நல்ல செல்லப்பிராணிகளாக இருக்க முடியும். மற்ற எந்த ஜாதி நாயைப் போலவே இவற்றின் விளையாட்டுப் போக்கையும்கூட எளிதில் எழுச்சியுறச் செய்யக்கூடும். அவற்றின் மயிர் உதிர்வது குறைவாகவும் அவற்றை வளர்ப்பது எளிதாகவும் இருக்கிறது. அவை நல்ல காவல் நாய்களாக இருக்கின்றன என்பதைச் சொல்லவே தேவையில்லை,” என்கிறது வால் ஸ்டீரிட் ஜர்னல் கட்டுரை.
குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஒரு நாய் வளர்ப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு காவல் நாய்களைப் பற்றிய குறிப்பு ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது என்ன வகையானதாக இருக்க வேண்டும்? ஆலோசனைகளுக்காக, நாய்களுக்கு பயிற்சிக் கொடுப்பதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஒருவர் பேட்டி காணப்பட்டார்.
குடும்ப பாதுகாப்புக்காக நீங்கள் என்ன விதமான நாயை சிபாரிசு செய்வீர்கள்?
“முதலாவதாக, இந்தக் கட்டத்தில், அநேகர் கடிப்பதற்குப் பழக்குவிக்கப்பட்ட ஒரு நாயை அல்லது ஒரு காவல் நாயை மனதில் கொண்டிருக்கக்கூடும் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டில் வளர்ப்பதற்கு இப்படிப்பட்ட நாய்கள் ஆபத்தானவையாகும். அவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்க பயிற்றுவிக்கப்பட்டும் செயல்பட துரிதமாயுமிருக்கின்றன. இது வீட்டில் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது—அநேகமாக பாதுகாப்புக்குப் பதில் விபத்துக்களே இதனால் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட நாய்கள் அநேகமாக அக்கம் பக்கத்திலுள்ள பிள்ளைகளையும் சில சமயங்களில் சொந்த குடும்பத்திலுள்ள அங்கத்தினர்களையும்கூட காயப்படுத்தி அல்லது கொன்றுவிட்டிருக்கின்றன. உங்கள் நாய் தாக்குவதற்குப் பழக்குவிக்கப்பட்டதாயும், எவரையாவது கடித்துமிருந்தால், நீங்கள் கவலைக்குரிய தொந்தரவில் இருக்கிறீர்கள். நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டால் உங்களுக்கு தண்டனை விதிக்கப்படலாம். கடிப்பதற்கு பழக்குவிக்கப்பட்ட நாய்களின் சம்பந்தமாக நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்குவதில்லை. தாக்குவதற்கு பழக்குவிக்கப்பட்ட அல்லது காவல் நாயை வீட்டில் வளர்ப்பது மிகவும் ஞானமற்றதாகும்.
“பாதுகாப்புக்காக ஒரு நாயை பெற்றுக் கொள்ள ஒரு குடும்பம் தீர்மானிக்குமேயானால் அவர்கள் எச்சரிப்பூட்டும் நாய் என்றழைக்கப்படும் ஒன்றை—தொந்தரவு வரும் போது உங்களை எச்சரித்து அபாயத்தை உணர்த்த குரைக்கும் நாயைப் பெறுவது குறித்து சிந்திப்பது மேலானதாக இருக்கும். இதற்கு மிகச் சிறந்தது தோற்றத்தில் பெரியதாகவும் தொண்டை ஆழத்திலிருந்து குரைக்கும் நாயாகவும் இருக்க வேண்டும். இதன் குரைப்பொலி நடுங்கச் செய்வதாக இருந்து வேண்டாத ஆட்களை அச்சுறுத்தி துரத்திவிடுகிறது. ஆனால் கடிப்பதற்கு இது பழக்கப்பட்டில்லை. இப்படிப்பட்ட நாய் ஒரு நல்ல காவல் நாயாக இருக்கிறது, குடும்பத்துக்கோ அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கோ ஆபத்தாக இருப்பதில்லை.”
சுபாவத்தை கவனிப்பது முக்கியமா?
“சுபாவத்தை கவனிப்பது அவசியமாகும். நாய்க்கு நாயும் ஒரே ஜாதி நாய்களும்கூட ஒன்றுக்கொன்று வெகுவாக வித்தியாசப்பட்டவையாக இருக்கின்றன. வழிகாட்டி நாயாக பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட், சுபாவத்துக்காக பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை பக்குவமுள்ள நாய்களாக, விழிப்புள்ள நாய்களாக, அநேக பல்வேறு வித்தியாசமான ஆட்கள் சுற்றி இருக்கையில் பயன்படுத்தப்படக்கூடியதாக இருக்க வேண்டும். தாக்குவதற்காக பழக்கப்பட வேண்டிய ஜெர்மன் ஷெப்பர்ட்களுக்கு வித்தியாசமான சுபாவம்—சந்தேகிக்கிறதாயும் துணிச்சலானதாயும் ஆவேசமாயும் இருக்க வேண்டும். விழிப்பான நாய் இவை இரண்டுக்கும் இடைப்பட்டதாக—உற்சாகமானதாக ஆனால் அதீத கிளர்ச்சியடைவதாயில்லாமலும் அமைதியாகவும் ஒழுங்குள்ளதாயுமிருக்க வேண்டும்.
“ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நாய் குட்டியாக இருக்குப்போது வாங்குவதும்கூட விரும்பத்தக்கது என்பதாக நான் நினைக்கிறேன். பெண்ணாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்துவது அநேகமாக எளிதாக இருக்கிறது. குடும்பத்தோடு சேர்ந்து அவன் வளரட்டும். அப்பொழுது அந்தக் குடும்பத்தை தன்னுடையதாக அவன் கருதுகிறான். அது அவனுடைய குடும்பமாகிவிடுகிறது. அவன் வளரும்போது அதைக் கவனமாக அவன் பார்த்துக் கொள்கிறான். கீழ்ப்படிதலில் கொஞ்சம் பயிற்றுவிப்பைக் கொடுப்பதும்கூட முக்கியமாகும். குறைந்தபட்சம் இடத்தைவிட்டு நகராதே, நில், உட்கார், பின்னால் வா, வா, கீழே வை போன்ற அடிப்படை கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய அவனுக்கு கற்றுக் கொடுங்கள். அவன் சிறுவனாயிருக்கையிலேயே, சுமார் எட்டு வாரங்களிலேயே ஆரம்பித்துவிடுங்கள். அந்த வயதில் நீங்கள் விரும்புகின்றவற்றை நன்றாக புரிந்து கொள்கிறவனாக, உங்கள் மீது முழுமையாக சார்ந்திருக்கிறவனாக உங்கள் நம்பிக்கையையும் பாராட்டையும் ஆவலோடு விரும்புகிறவனாகவும் இருக்கிறான்.”
தேவைப்படுகையில் கண்டிப்பதைப் பற்றி என்ன?
“வெறுமென கண்டிப்பதைவிட கண்டிப்பையும் வெகுமதியையும் சேர்த்து தருவது அதிக பலனுள்ளதாக இருக்கிறது. நாய் அவனுடைய நல்ல நடத்தைக்காக போற்றப்படுகிறான். அதே சமயத்தில் கெட்ட நடத்தைக்காக கண்டிக்கப்படுகிறான். கண்டிப்பு என்று சொல்கையில் அடிப்பதை நான் அர்த்தப்படுத்தவில்லை. வாயால் “இல்லை! கெட்ட நாய்! போன்று கடிந்துக் கொள்வதாக அது இருக்கிறது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை உங்கள் குரலின் தொனியிலிருந்தே அவன் தெரிந்துக் கொள்கிறான். நல்நடத்தையை வெகுமதியினால் பலப்படுத்துங்கள்—நொறுக்குத் தீனி கொடுப்பதன் மூலம் அல்ல, ஆனால் அதை ஆசையோடு தட்டிக் கொடுப்பதன் மூலம் அப்படிச் செய்யுங்கள். திட்டுவதைவிட அது நன்றாக பலனளிக்கிறது. சிட்சிக்கும் போது உங்கள் நாயின் பெயரை பயன்படுத்த வேண்டாம்—அவனை அல்ல அவனுடைய நடத்தையையே நீங்கள் தண்டிக்கிறீர்கள்.”
கட்டுரையின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இப்பொழுது மறுபடியும் வருவோம். வளர்ப்பு நிச்சயமாகவே நாய்களின் சுபாவத்தை பாதித்து, ஆக்ரோஷத்தை அல்லது சாந்தத்தை முன்தீர்மானிப்பதாக இருக்கிறது. ஆனால் சுற்றுப்புறச் சூழலும்கூட முக்கியமான ஒரு பங்கை வகிக்கின்றது. மென்மையாக நடத்துவது, ஆக்ரோஷத்தைக் குறைத்து சாந்தத்தைக் கூட்டுகிறது. கொடூரமாக நடத்துவது அதன் இயல்பான ஆக்ரோஷத்தை அதிகரித்து சாந்தமான சுபாவத்தை மாற்றிவிடுகிறது. இதே ஜாதி நாயை குருடருக்கு வழிகாட்டவும் அல்லது வேண்டாதவரை தாக்கவும் செய்யும்படி வளர்த்து பயிற்சி கொடுக்கலாம். இயல்பான சுபாவமும் வளர்ப்பும் சேர்ந்தே செயல்படுகின்றன. ஆனால் நாயின் அடிப்படையான இயல்பு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. அது ஒரு சில நிலைமைகளில் மேலெழக்கூடும். அழுத்தமான ஒரு நிலையினால் ஆக்ரோஷமான இயல்பு முன்னறிவிப்பின்றி சீறிக் கொண்டு எழக்கூடும் அல்லது அதீத சாந்தமுள்ள ஒரு நாய் தன்னுடைய குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய சமயத்தில் பின்வாங்கிவிடக்கூடும்.
நாய் சண்டையின் பயங்கரத்தைப்பற்றி கடைசியாக ஒரு வார்த்தை: ஒரு நாய் சண்டைப் பிரியர் தன்னுடைய சண்டை நாய்களைப் பற்றி சொல்லுகையில், “சண்டைப் போடுவது அவைகளுக்கு உயிர் மூச்சைப் போன்றது” என்று சொல்கிறார். அவைகளைச் சண்டைப் போட அனுமதிப்பது, கொடூரமான செயலாக இல்லாமல் இரக்கச் செயலாக இருக்கிறது. அவை மகிழ்ச்சியாகவும் அவை எதற்காக வளர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டதோ அதை செய்து முடித்த நிம்மதியோடும் மரிக்கின்றன என்கிறார் அவர். விசித்திரமான இந்தக் கருத்துக்கு இசைவாகவே சட்டப்படி குற்றமாயிருக்கும் நாய் சண்டையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட, கொடுமையில் மகிழும் மற்றொரு மனிதன் இந்த அவலமான கூற்றை வெளியிட்டார்: “என் நாய்கள் அவைகளின் வாலை மேலே தூக்கி ஆட்டிக் கொண்டே உயிர் விடுகின்றன.”
எலும்புகள் முறிக்கப்பட்டும், காதுகள் கிழிக்கப்பட்டும், மாம்சம் சின்னாபின்னமாக்கப்பட்டும் இரத்தம் பீறிட்டு ஒழுகிக் கொண்டும்கூட அவை உயிர்விடுகின்றன. சண்டை ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை நீடிக்கின்றன. அவை மரிக்கும் வரை போராடுகின்றன. ரண்டால் லாக்வுட் வஞ்சப் புகழ்ச்சியாக சொல்வதாவது: “குழியிலிருந்து வந்து நாய்கள் பார்வையாளர்களைத் தாக்குவது இப்பொழுது கேள்விப்படாத ஒன்றல்ல. நமது ஆய்வாளர்களில் சிலர் இதைப் பார்த்திருக்கிறார்கள். சான் டிகோவின் ஊர்த் தலைவர் பிளாக்வுட் சொல்வதாவது: “முன்னங்கால் இரண்டும் ஒடிந்த நிலையில் சண்டைப் பண்ணுவதற்காக கம்பி வளையத்தைத் தாண்டி தள்ளிக் கொண்டு போவதை நாம் பார்த்திருக்கிறோம்.” இந்த நாய்களும்கூட அவைகளின் வாலைத்தூக்கி ஆட்டியபடி உயிர்விடுகின்றனவா?
சண்டை நாய்களின் தைரியமும் பலமும் அசாதாரணமானதாகும். இப்படிப்பட்ட தைரியமும் பலமும் கொடூரமாகவும் கொடுமையில் மகிழவும் பயன்படுத்தப்படுவது எத்தனை அருவருப்பானதாக எத்தனை வருத்தத்திற்குரியதாக இருக்கிறது! அதிக மூர்க்கமான மனிதர்களால் அவை மூர்க்கமாக்கப்படுகின்றன! கடைசியாக லாக்வுட் அதன் மூர்க்கத்தையும் அதன் விளைவுகளையும் குறித்து இவ்விதமாக வருத்தத்தோடு தெரிவிக்கிறார்: “மனிதர்களுக்கும் நாய்களுக்குமிடையே இருக்கும் விசேஷமான உறவில் நாய்ச் சண்டை மிகப் பெரிய முறைகேடாக இருக்கின்றது. இது மனிதர்கள் நாய்களை அளவிடமுடியாத துன்பத்துக்கு ஆளாக்குவதாக இருக்கிறது. இப்பொழுது நாய்கள் மனிதர்களைக் கொல்லுவதாக மாறிவிட்டிருக்கிறது.”
சண்டை நாய்கள் மனிதர்களுக்கு அதிகமான தீங்கை செய்திருக்கின்றனவா அல்லது மனிதர்கள் பிட் புல் நாய்களுக்கு அதிகமான தீங்கை செய்திருக்கிறார்களா? என்பதாக நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கிறீர்கள். நீதிமொழிகள் 12:10-லுள்ள பைபிளின் வார்த்தைகள் எத்தனைப் பொருத்தமாக இருக்கின்றன: “நீதிமான் தன் மிருக ஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.” (g88 3⁄22)
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
“இந்த விலங்குகள் நாய் பற்களையுடைய முதலைகளாக இருக்கக்கூடும்”
[பக்கம் 24-ன் படங்கள்]
மூர்க்கமான பென்ஜெமின் . . .
[படத்திற்கான நன்றி]
City of Los Angeles, Department of Animal Regulation
. . . சாந்தமான நெஹா
[பக்கம் 27-ன் படங்கள்]
மேலே: சைபீரியம் ஹஸ்கி
வலது: அக்கிட்டா
தூர வலது: சமோயட்