கவனமாக ஓட்டும் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும்
பத்திரமாக, கவனமாக, சீராக, எச்சரிக்கையாக, மிதமிஞ்சிய எச்சரிக்கையாக, ஒழுங்கில்லாமல், துணிச்சலாக, ஆபத்தாக— இவை அனைத்தும் ஓட்டுநர்களைப் பற்றிய வருணனையாக உள்ளன. இதில் உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறது? அநேக ஓட்டுநர்கள் தங்களை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுபவர்களாகவும் கவனமாக ஓட்டுபவர்களாகவும் கருதக்கூடும். ஆனால் அவர்களுடைய வாகனத்தில் பிரயாணம் செய்பவர்களும் சாலையை உபயோகிக்கும் மற்றவர்களும் அவ்வளவாக அவர்களை பாராட்டாமலிருக்கலாம்.
பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுவதற்கு, பெருஞ்சாலையில் செல்ல தகுதியான வாகனம் இன்றியமையாததாகும்.
உங்கள் வாகனம் பெருஞ்சாலையில் செல்ல தகுதியுள்ளதா?
சில தேசங்களில் ஒழுங்கான இடைவேளைகளில் வாகனங்களின் இயந்திர நிலை சரிபார்க்கப்படுகிறது. அநேகமாக முடிவுகள் ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கின்றன. பிரான்ஸில் உதாரணமாக ஐந்து ஆண்டு பழமையான வாகனங்கள் அண்மையில் சோதிக்கப்பட்டபோது, அதில் 73 சதவிகிதம் சாதாரணமான, மிக மோசமான அல்லது ஆபத்தான நிலையிலும் கூட இருப்பது தெரியவந்தது.
உங்கள் சொந்த வாகனத்தை சரிபார்க்க உதவியாக, விமானிகள் நிலத்திலிருந்து மேலே செல்ல புறப்படுவதற்கு முன் எல்லாம் தயாராக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துக்கொள்ளும் விதமாகவே ஒரு செயல்முறையை பின்பற்றுவதை நீங்கள் பயனுள்ளதாக காண்பீர்கள். குறிப்பாக ஒரு சரிபார்த்தல் பக்கம் 8-ல் காட்டப்பட்டுள்ளது.
சரியாக காப்பீடு செய்யப்பட்டதும், சட்டப்படி அங்கீகாரம் பெற்றதும், பெருஞ்சாலையில் செல்ல தகுதியுள்ளதுமான ஒரு வாகனத்தோடு, செல்லக்கூடிய ஓட்டுநர் அனுமதி உங்களுக்கு அவசியமாக இருக்கும். இதைப் பெற நீங்கள் ஒரு சோதனையை எதிர்பட வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வியடைவீர்களா?
ஓட்டுநர் சோதனை
ஓட்டுநர் பயிற்சி பெறும் அநேகர் ஓட்டுநர் சோதனையை ஒரு தடையாக கருதுகிறார்கள். அவர்கள் மத்தியில் இது நிச்சயமாகவே சம்பாஷணைக்கு முக்கிய பொருளாக இருக்கிறது. தேசத்துக்கு தேசம் சோதனை வேறுபடுகிறது.
மற்ற அநேக தேசங்களிலிருப்பது போலவே, பிரான்ஸில், புதிதாக கற்றுக் கொள்ளும் ஓட்டுநர்கள் நடைமுறைப் பயிற்சியிலும் பாடத்திலுமாக இரண்டுப் பகுதிகளில் ஓட்டுநர் சோதனையை எதிர்படுகிறார்கள். ஜெர்மனியில், விபத்து நிகழும் இடத்தில் செய்யப்பட வேண்டிய முதலுதவி கல்வியும் இடம் பெறுகிறது. மேலுமாக, இரவு வேளையில் ஒன்றரை மணி நேரங்கள் பயிற்சியில் ஓட்டிச் செல்வதையும் மோட்டார் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஓட்டிச் செல்வதையும் சட்டப்படி தேவையாக அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். புதிதாக கற்றுக் கொள்பவர், தேர்வு சோதனையில் வெற்றி பெற்றால், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஒரு சோதனைக் கால லைசென்ஸைப் பெற்றுக் கொள்கிறார். இந்தக் காலப் பகுதியில் எந்த ஒரு சம்பவமும் நேரிடாவிட்டால் நிரந்தர லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
ஜப்பான், தகுதியுள்ள ஓட்டுநர் ஆசிரியரிடமிருந்து 30-லிருந்து 60 மணிநேர நடைமுறைப் பயிற்சி பெறுவதை வற்புறுத்துகிறது. இதைத் தொடர்ந்து மூன்று பகுதியில் சோதனைகள் நடத்தப்படுகின்றன: மருத்துவம் (பார்வை, சில நிறங்களைக் காண இயலாமை, காது கேட்டல்) ஓட்டுதல் (நடைமுறையான திறமை) மற்றும் தேர்வு எழுதுதல் (போக்குவரத்து சட்டங்கள் பற்றி).
லண்டனில் வெளியாகும் தி டைம்ஸின் பிரகாரம், பிரிட்டனின் கடினமான ஓட்டுநர் தேர்வு, (அங்கே வசிக்கும்) நூற்றுக்கணக்கான கோபாவேச அமெரிக்க நாட்டவரை தோற்கடிக்கிறது.” இங்கு காணப்படும் 51 சதவிகித தோல்வியோடு, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் 15 சதவிகிதத்தை ஒப்பிட “இது உலகிலேயே இங்கு இது அதிக கெடுபிடியான சோதனையாக இருக்கிறது.”
மாறுபட்ட இந்த போக்குகள் தொழில் நுட்பத்தை கடந்து நிற்கின்றன. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஒன்றை நியு யார்க்கில் நடத்தி வரும் பென் யோஷிடா பின்வருமாறு உறுதியாகச் சொல்கிறார்: “டோக்கியோவில் ஒரு காவல் துறைக் கண்காணி, ஓட்டுநர் உத்தியோடு எவ்வளவு நன்றாக ஓட்டுகிறார் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார். ஆனால் அமெரிக்காவில் அவர் எவ்வளவு பாதுகாப்பாக ஓட்டுகிறார் என்றே அவர் சோதிக்கிறார்.”
வித்தியாசங்கள் எப்படியிருந்தாலும் எல்லா ஓட்டுநர்களும் பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல தங்கள் அறிவை பண்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அவர்கள் எவ்விதமாகச் செய்யலாம்?
50 வயதில் ஓட்டுநர் சோதனையை எதிர்பட்டு அதில் வெற்றி பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிரிட்டனின் நெடுஞ்சாலை சட்ட தொகுப்பேட்டைa முழுமையாக படிப்பதன் மூலம், தயாரிப்பது பயனுள்ளதாக இருப்பதைக் கண்டாள். ஆனால் எந்த ஒரு திறமையை வளர்த்துக் கொள்வதிலும் இருப்பது போலவே ஒரு பாடப்புத்தகத்தைப் படிப்பதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுவதை அவள் கண்டாள்.
பயிற்சி இன்றியமையாததாகும். நீங்கள் புதிதாக கற்றுக் கொண்டு ஓட்டுபவராக இருந்தால் பல்வேறு நிலைமைகளின்கீழ் பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல கற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக, வானிலை மாறும்போது சாலையின் மேற்பாகமும் மாறுகிறது. மிக இலேசான மழைத்தூறல் இருந்த போதிலும்கூட வறண்ட சாலையில் இருப்பதுபோல உங்கள் வாகனத்தின் பிடிப்பாற்றல் போதுமானதாக இராது. இதன் காரணமாக, வேகத்தைக் குறைத்துக் கொள்வதும் சாலையிலுள்ள ஆபத்துக்களைக் குறித்து அதிக எச்சரிப்பாயிருப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. பலமான மழை கூடுதலான பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது. வாகனங்கள் மழைத்தண்ணீரை பின்னால் அடித்து வாரி இறைக்க முன்னால் உங்கள் தெளிவானப் பார்வை தடைப்படுகிறது. ஆம், வித்தியாசமான வானிலைகளில் பழக்கப்பட்டு அதற்கேற்ப நீங்கள் ஓட்டுவதை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தேர்ச்சிப் பெற்ற ஒரு இயந்திர வல்லுநராக இல்லாமலிருக்கலாம். உண்மையில், “ஐந்து காரோட்டிகளில் ஒருவருக்குகூட தன் காரினுடைய டயரின் அழுத்தத்தைப் பற்றியோ அல்லது சீர்காப்பு ஏற்பாடு இடைவேளைப் பற்றியோ தெரியாது” என்பதாக குறிப்பிடும் லண்டனின் டேய்லி மேல், “மூவரில் ஒருவர்கூட கையேடு ஒன்றை ஒருபோதும் படிப்பது கிடையாது என்றும் நவீன என்ஜின் அமைப்பைப் பார்த்து ஏறக்குறைய அனைவருமே குழப்பமடைந்து விடுவதாகவும்” குறிப்பிடுகிறது. உங்களைப் பற்றி என்ன?
இன்றைய வாகனங்களின் எல்லா நுணுக்கமான இயந்திர நுட்ப விவரங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. ‘காரினிடமாக அனுதாபத்தை’ வளர்த்துக் கொள்ள இது உங்களுக்கு உதவிச் செய்யும்.
உங்கள் திறமைகளை முன்னேற்றுவித்துக் கொள்ளவும்
ஓட்டுநரின் தேர்வில் வெற்றி பெறுகையில் அது உங்களுக்கு ஒரு நல்லுணர்வை, ஒரு சாதனை உணர்வை உங்களுக்கு கொடுக்கும். ஆனால் அதற்குப் பின் என்ன? உங்கள் தராதரங்கள் குறைந்து விடுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? “அநேகமாக தேர்வில் வெற்றிப் பெற்றப் பின்பு ஓட்டுநர்களில் பலர் சற்று துணிச்சலாக ஓட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்” என்பதாக ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பவர் சொல்கிறார். அவர் அளிக்கும் ஆலோசனை இதுவே: “உங்கள் வரம்புகளையும் பல்வேறு நிலைமைகளில் உங்கள் வாகனத்தின் வரம்புகளையும் தெரிந்து வைத்திருங்கள். அவைகளை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால் நீங்கள் விபத்துக்குள்ளாகக்கூடும்.” ஓட்டுநர் ஒருவர் ஒத்துக் கொண்டதாவது: “தேர்வுக்குப் பின்பு முதல் சில வாரங்கள் நான் ஓட்டிய விதமாக ஓட்டினால், நான் அதிக பாதுகாப்பாக ஓட்டிச் செல்பவனாக இருப்பேன்.” ஏன் அப்படி? “இப்பொழுது நான் அதிகமாக துணிச்சலாக ஓட்டுகிறேன்.”
தேர்வில் தேர்ச்சி பெறும்போது, நீங்கள் அடிப்படையில் கவனமாக ஓட்டுபவர் என்பதை காண்பிக்கிறீர்கள். நீங்கள் ஓட்டுநராவதற்கு இப்பொழுது நீங்கள் தொடர்ந்து உங்கள் ஓட்டும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனுபவத்தினாலும் உங்கள் ஓட்டும் திறமைகளுக்கு கவனம் செலுத்துவதனாலும் நீங்கள் நிச்சயமாகவே உங்கள் திறமையை முன்னேற்றுவித்துக் கொள்வீர்கள்.
சாத்தியமான ஆபத்துக்களைக் குறித்து அதிக விழிப்புள்ளவர்களாயிருங்கள். “எதிலும், பின்னாலும் உங்கள் வாகனத்தைச் சுற்றியும் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதுப் பற்றிய எதிர்பார்ப்பும் விழிப்புணர்வும் குறைவுபடுவதே இன்றைய ஓட்டுநர்களின் முக்கிய தவறாக இருக்கிறது” என்கிறார் பிரிட்டிஷ் காவல் துறை ஓட்டுநர் ஆய்வாளர் அலெக்ஸ் மில்லர். எதிர்பாராததை எதிர்பார்க்க முயற்சி செய்யுங்கள். ‘சாலையை பார்த்து படிக்க’ கற்றுக் கொள்வது பயனுள்ளது. முந்தினப் பக்கத்திலுள்ள பெட்டியைப் பார்க்கவும்.
பாதுகாப்புறுதி மனநிலையை உட்படுத்துகிறது
ஓட்டுநர் ஆய்வாளர் மில்லரின்படி, “மனோபாவம் அதிமுக்கியமான காரியமாகும்.” ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஓட்டுநர் ஒருவரின் மதிப்பீடு பின்வருமாறு: “வாகனம் ஓட்டுவது என்பது நடத்தைப் பற்றிய ஒரு விஷயமாகும். ஒரு நபர் ஓட்டிச் செல்லும் விதமானது, அன்றாட வாழ்க்கையில் அவர் மற்றவர்களை நடத்தும் முறையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.”
கனடா தேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், பின்வருமாறு எழுதுகையில் சரியான மனநிலையின் மதிப்பின்மீது கவனத்தை ஊன்ற வைக்கிறார்: “ஓட்டுநரின் லைசென்ஸ் ‘சிலாக்கியமாக’ கருதப்படுகையில், போக்குவரத்து நல்நடத்தை நம்முடைய நெடுஞ்சாலை பாதுகாப்புறுதியை கணிசமாக முன்னேற்றுவிக்கும்.”
“பாதுகாப்புறுதி என்பது மனதின் மனநிலையாக இருக்குமென்றால், அப்போது மனத்தாழ்மை என்பது அதன் முக்கிய ஆக்கக்கூறுகளில் ஒன்றாக இருக்கிறது” என்கிறது பிரிட்டிஷ் துறையின் போக்குவரத்து ஓட்டுநர் குறிப்பேடு. அநேகருக்கு இது மனோபாவத்தில் ஒரு மாற்றத்தை அர்த்தப்படுத்தக்கூடும். அது கூடிய காரியமா? ஆம் அது மற்றவர்களைக்குறித்து உணர்வுள்ளவர்களாகவும், சுயநலவாதிகளாக இல்லாதிருப்பதையும் உட்படுத்துகிறது. பைபிளின் பொன் விதி எத்தனை அழகாக அதை வெளிப்படுத்துகிறது: “ஆதலால் மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”— மத்தேயு 7:12.
ஆனால் நடைமுறையில் இது எவ்விதமாக சாத்தியமாகிறது? “கோபத்தினால் மோதல்கள் சாலையில் ஏற்படும்போது நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது கடினமானதாகும்” என்கிறார் இங்கிலாந்தில் ஒரு ஓட்டுநர். நீங்கள் இதை ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. பழிவாங்குவதற்கான ஆசை பலமாக இருக்கிறது. “என்ற போதிலும் எனக்கு உதவியாக இசை காஸட்டுகளை நான் பயன்படுத்தியிருக்கிறேன். அமைதிப்படுத்தும் அதன் சக்தி ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.”—பக்கம் 9-ல் பெட்டியைப் பார்க்கவும்.
“எரிச்சலைக் கட்டுப்படுத்த கடினமாக முயற்சி செய்யுங்கள்” என்பது அனுபவமுள்ள ஜப்பானிய ஓட்டுநர் ஒருவரின் ஆலோசனையாகும். “ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு நீங்கள் நிலைகுலைந்து போனால் தாழ்ந்த குரலிலோ அல்லது வாய்விட்டோ பாடுங்கள்.”
மற்றவர்களிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்காதீர்கள். ஆபத்தான ஓட்டுநர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களைக்குறித்து விபத்து பற்றிய புள்ளி விவரங்கள் தெளிவாக எச்சரிக்கின்றன. ஆபத்து ஏற்படாமல் ஓட்டிச் செல்ல தீர்மானமாயிருங்கள் அல்லது “மற்ற அனைவருமே சாத்தியமான ஆபத்துக்கள் என்பது போல ஓட்டிச் செல்லவும்.”
மற்றவர்களிடமிருந்தும்கூட நீங்கள் கற்றுக் கொள்ளமுடியும் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். அவர்கள் ஓட்டிச்செல்லும் விதத்தை அலசிப் பாருங்கள்.—இந்தப் பக்கத்திலுள்ள பெட்டியைப் பார்க்கவும்.
“ஓட்டுவதில் வல்லுநராவதற்கு மந்திரம் ஒன்றும் அதிகமில்லை” என்பதாக தி டொரான்டோ ஸ்டாரில் எழுதும் ஜிம் கென்ஸி உறுதியாகச் சொல்கிறார். “உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் சிறிதளவு புத்தி, சிறிதளவு பொது அறிவு, அடுத்தவரிடம் சிறிதளவு கரிசனையுமே.” நீங்கள் புதிதாக கற்றுக்கொண்டு ஓட்டுபவராக இருந்தாலும் சரி, அல்லது அனுபவமுள்ள ஒருவராக இருந்தாலும் சரி, உங்கள் திறமையைக் காட்டுவதற்கு, பொறுமையை இழப்பதற்கு அல்லது சுயநலத்திற்கு சாலை ஓரிடமல்ல.
‘காரினிடமாக அனுதாபத்து’ வளர்த்துக் கொண்டு, ‘சாலையைப் பார்த்துப் படித்து’, கவனத்தை ஒருமுகப்படுத்தி எதிர்பார்ப்பைக் கொண்டிருந்து, அதோடுகூட அடக்கமுள்ள மனநிலையை வளர்த்துக் கொள்வதனால், நீங்கள் பாதுகாப்பாக ஓட்டிச் செல்வதில் வெற்றி பெறுவீர்கள்! (g88 1/8)
[அடிக்குறிப்புகள்]
a 1931-ல் அது முதல் முதலாக பிரசுரிக்கப்பட்டது முதற்கொண்டு இந்த அரசாங்க வெளியீடு பலமுறை திருத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் “பைபிளுக்கு அடுத்ததாக மிகச் சிறந்த விற்பனைப் புத்தகமாக இரண்டாவது இடத்தைப்” பெறும் இது, சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் தெளிவான பாதுகாப்பு ஆலோசனைகளைத் தருகிறது.
[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]
உங்கள் வாகனம் சாலையில் செல்ல தகுதியுள்ளதா?
வாகனம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டிய குறிப்புகள்:
காற்று காப்புத் தட்டியும் சன்னல்களும்: சுத்தமாக இருக்கின்றதா? காற்று காப்புத்தட்டியின் பட்டை வளையம் நிரப்பப்பட்டிருக்கிறதா? துடைப்பானின் அலகுகள் நல்ல நிலையில் இருக்கின்றனவா?
விளக்குகள், தடுப்புக் கருவி விளக்குகள் மற்றும் திசை மாற்ற சிக்னல்கள் செயல்படும் நிலையில் உள்ளனவா?
டயர்கள்: ஆழமான வெட்டுகள் அல்லது கீறல்கள், பிளவுகள், புடைப்புகள் அல்லது வேறு சேதம் இருக்கின்றனவா?
தடுப்புக் கருவி: வாகனத்தை எடுத்த உடன் கூடியவரை சீக்கிரமாக அவை செயல்படும் நிலையில் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
வாகன உற்பத்தியாளரின் கையேடுபடி அவ்வப்போது சரி பார்க்க வேண்டிய குறிப்புகள்:
எஞ்சின்: எண்ணெய் அளவு “ADD” கோட்டுக்கு மேலிருக்கிறதா? அளவுக்கு மேல் நிரப்பிவிடாதீர்கள்.
ரேடியேட்டர் (வெப்பத்தை ஆற்றும் கருவி): வெப்பாற்றி அளவு போதிய அளவு உயர்வாக இருக்கிறதா? போதிய அளவு உறை தட்ட நிலை பாதுகாக்கப் பட்டிருக்கிறதா?
டயர்கள்: சரியான ஊதல் அழுத்தம், நிலத்தைத் தொடும் சக்கரத்தின் அடிப் பகுதியின் ஆழம், சம அளவு தேய்மானம்?
மின்கலம்: ஒவ்வொரு மின் கலத்திலும் திரவத்தின் அளவு சரியாக இருக்கின்றதா? அளவுக்கு மேல் நிரப்பி விடாதீர்கள்.
[பக்கம் 9-ன் பெட்டி]
கவனத்தை திருப்பும்படி கட்டாயப்படுத்தப்படுதல்
கார் வானொலிகளிலும் காஸட் ரெக்கார்டர்களிலும் புதிய செய்திகளையும் இசையையும் கேட்க முடிகிறது. ஓட்டுநர் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு இவை இடையூறாக இருக்கின்றனவா? கருத்துக்கள் வித்தியாசப்படுகின்றன. ஒலிபரப்பப்படுவது எதுவாக இருப்பினும் தங்களால் கவனத்தை சிறப்பாக ஒருமுகப்படுத்த முடியும் என்கிறார்கள் சில ஓட்டுநர்கள். மற்றவர்கள் போக்குவரத்து நெருக்கடியுள்ள இடத்தில் வண்டியை ஓட்டுகையில் அவைகளை பின்னணி இசையாக மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்கள். வண்டி ஓட்டுதல் கையேட்டின் எச்சரிப்புக்கு இசைவாக இது உள்ளது: “அக்கறையோடு கேட்பது, கவனத்தை ஒருமுகப்படுத்தும் உங்கள் ஆற்றலை கவலைக்குரிய வகையில் பாதிக்கக்கூடும்.” அப்படியென்றால் கார் தொலைப்பேசிகளின் உபயோகம் பற்றி என்ன? எவருடனாவது பேசுவதற்கு முன்பு அல்லது எவரிடமிருந்தாவது அழைப்பு வரும் போது காரை நிறுத்திவிடுங்கள்.” பிரிட்டனிலுள்ள ஓட்டுநர்கள் “கைகளை” பயன்படுத்த வேண்டியிராத சாதனங்களை மட்டுமே பயன்படுத்துமாறும், சாலையிலிருந்து அவர்களுடைய கவனத்தை சிதறடிக்காமல் இருக்கையில் மட்டுமே அவைகளை பயன்படுத்துமாறும் சொல்லப்பட்டிருக்கிறார்கள்.b
[அடிக்குறிப்புகள்]
b பிரிட்டனிலுள்ள ஓட்டுநர்கள் “கைகளை” பயன்படுத்த வேண்டியிராத சாதனங்களை மட்டுமே பயன்படுத்துமாறும், சாலையிலிருந்து அவர்களுடைய கவனத்தை சிதறடிக்காமல் இருக்கையில் மட்டுமே அவைகளை பயன்படுத்துமாறும் சொல்லப்பட்டிருக்கிறார்கள்.
[பக்கம் 10-ன் பெட்டி]
சாலையைப் பார்த்து படிக்கவும்
புதிதாக வாகனம் ஓட்ட கற்றுக் கொள்பவர்களுக்கும் தகுதிப் பெற்ற ஓட்டுநர்களுக்கும் உதவிச் செய்வதற்காகவே பிரிட்டனின் விபத்து தடுப்பு ராயல் சோஸைட்டி தொடர்ச்சியாக வெளியிட்ட சிறுப் புத்தகங்கள் பாதுகாப்பை முன்னிட்டு மோட்டார் தொழிற்சாலைச் செய்யும் முதலீட்டு முதலாவதாக ஒப்புக்கொள்கிறது. ஆனால் “வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநர் எந்த அளவு பாதுகாப்பாக இருக்கிறாரோ அதே அளவுதானே வாகனமும் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்பதாக அது ஓட்டுநர்களுக்கு நினைப்பூட்டுகிறது. ஓட்டுநர்கள் அனைவரையும் ‘சாலையைப் பார்த்து படிக்குமாறு’ அது உற்சாகப்படுத்துகிறது. இது எவ்விதமாகச் செய்யப்படலாம்? என்ன உட்பட்டிருக்கிறது?
1. சாலை மற்றும் போக்குவரத்து நிலைமைகளின் முற்பட்ட அறிகுறிகளுக்காக பார்த்துக் கொண்டிருக்கவும். பெரும்பாலான நேரமும் ஒரு ஓட்டுநர் நேராக முன்னால் பார்த்துக் கொண்டிருப்பவராக சாத்தியமான ஆபத்துக்களுக்கு தன்னை விழிப்புடன் இருக்கச் செய்யும் தகவலுக்காக பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றபோதிலும் சாலையின் பக்கத்தில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் அவர் உணர்வுள்ளவராக இருப்பார்.
2. இடத்தையும் வானிலையையும் நேரத்தையும் சாலையை பயன்படுத்தும் மற்றவர்களையும் கவனிக்கவும்: நீங்கள் நகரத்திலா அல்லது நாட்டுப்புறத்திலா எங்கே இருக்கிறீர்கள் என்பது நீங்கள் வாகனம் ஓட்டுவதை பாதிக்க வேண்டும். ஈரமான, உறைப் பனி மூடிய அல்லது பயணஞ் செய்ய முடியாதபடி பனிச் சேற்றினால் தடைப்பட்ட சாலைகள் அதிக ஆபத்தானது. பலத்த காற்று உங்களை உங்கள் பாதையிலிருந்து அடித்துக் கொண்டு போய்விடக்கூடும். சூரியனிலிருந்து அல்லது எதிரில் வரும் மோட்டார்வண்டியின் முன்விளக்கிலிருந்து வரும் கூசொளியினால் நீங்கள் தற்காலிகமாக பார்வையிழந்துவிடவோ அல்லது அது குறைந்தபட்சம் உங்கள் பார்வையை வெகுவாக குறைத்துவிடவோகூடும். விடுமுறை காலத்தில் அனுபவமில்லாத ஓட்டுநர் பலர் சாலைகளில் உலாவரக்கூடும். பாதசாரிகளையும் மிருகங்களையும் கவனித்து ஓட்டவும். நீங்கள் முந்திக் கொண்டுச் செல்லும் பேருந்துக்கு முன்னால் சாலையை கடந்துக் கொண்டிருக்கும் பாதசாரிகளைக் குறித்து உங்களை எச்சரிக்கும் நிழல்களை கவனிக்கவும்.
3. நீங்கள் கவனிக்கும் காரியங்கள் நீங்கள் வாகனம் ஓட்டிச் செல்வதை எவ்விதமாக பாதிக்கும் என்பதை முன்னறிவியுங்கள். இதை எவ்விதமாக சமாளிப்பது என்பதை கவனமாக தீர்மானித்து பத்திரமாக வாகனத்தை ஓட்டிச் செல்லவும்.
“இந்த உத்தியானது வாகனம் ஓட்டுவதில் வல்லுநர்களாக இருப்பவர்களால் இடைவிடாது பயன்படுத்தப்படுகிறது . . . அது உங்களுடைய ஓட்டும் தரத்தை முன்னேற்றுவிக்க வேண்டும்” என்று விபத்து தடுப்புக்கான ராயல் சோஸைட்டி அறிவிக்கிறது. அதற்கும் மேலாக, “சாத்தியமான விபத்துக்களை குறைக்கவும் இது உதவுவதாக தெரிய வந்திருக்கிறது.”
[பக்கம் 11-ன் பெட்டி]
நிபுணர்களின் சில துப்புகள்
பிரயாணிகளுக்கு சௌகரியமான சொகுசான சவாரியை கொடுப்பதில் பெருமைக் கொள்ளவும்.
வாகனம் ஓட்டுவதை முழுநிறைவாக்கப்பட வேண்டிய ஒரு திறமையாக கருதவும்.
உங்கள் வாகனம் நேர்த்தியான நிலையிலிருப்பதை உறுதி செய்யவும்.
முன்னாலும் தொலைதூரத்தையும் இடை தூரத்தையும் அண்மையிலும் பார்க்கவும்.
உங்கள் வாகனத்துக்கு பின்னாலும் பக்கத்திலும் என்ன நடக்கிறது என்பதை கண்ணாடியில் பார்க்கவும்.
உங்கள் கண்பார்வையிலுள்ள இருட்டான புள்ளியைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவும்.
சந்து திரும்புகையில் அல்லது மாறுகையில் கண்ணாடியில் பார்த்து போதிய நேரத்தில் சைகைக் காட்டுங்கள்.
அவசியமானால் வேறு பக்கம் மாறுவதற்கு முன்னால் வெறுமனே கண்ணாடியை மட்டும் நம்பிக் கொண்டிருப்பதற்கு பதிலாக நீங்கள் திரும்பியும் பார்க்கவேண்டும்.
பொறுமையாயிருங்கள். அமைதியாயிருங்கள்.
பாதுகாப்பாக ஓட்டிச் செல்வது போக்குவரத்து சட்டங்களுக்கு கீழ்ப்படிவதை அர்த்தப்படுத்தும்.
[பக்கம் 7-ன் படம்]
நீங்கள் கவனமாக ஓட்டிச் செல்வீர்களா என்பதை உறுதி செய்யவே ஓட்டுநர் தேர்வு