பைபிளின் கருத்து
சட்டத்துக்குக் கீழ்ப்படிய மறுப்பது எப்போதாவது நியாயமானதாக இருக்கிறதா?
“உங்களுடைய சொந்த ஜனத்தார் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதை நீங்கள் பார்க்கும்போதும், முழு பட்டணங்களை போர்வீரர்கள் அழிப்பதையும், சிறுபிள்ளைகள் படைத்துறை சேவைக்காக வீடுகளிலிருந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்படுவதையும், மக்கள் தொகையில் 2 சதவிகிதத்தினர் ஏற்கெனவே செல்வத்தில் முக்கால்வாசியைத் தங்கள் கைக்குள் வைத்திருப்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்போதும், நீங்கள் வெறுமென பைபிளில் உங்கள் தலையைப் புதைத்துக்கொண்டு, இந்த நிஜங்களை அசட்டை செய்துவிட முடியாது” என்பதாக 30 வயது நிரம்பிய ஒரு கத்தோலிக்க மிஷெனரி குறிப்பிட்டார்.—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
இந்த மிஷினெரியின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? அமைதியாக ஒரு ஊர்வலத்திலோ அல்லது வேலை நிறுத்தத்திலோ சேர்ந்துகொள்வீர்களா? தேவையான மாற்றத்தை இவை கொண்டுவராவிட்டால் என்ன? அப்போது வன்முறையில் ஈடுபடுவது நியாயமாக இருக்குமா? ஒரு புரட்சி அல்லது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில்? இன்றைய “ஆன்மீகத் தலைவர்கள்” பரிந்துரை செய்வது என்ன? இந்த அறிக்கைளைக் கவனியுங்கள்.
◻மக்களுக்கும் புரட்சிக்கும் சேவை செய்வதன் மூலம் தான் கடவுளை சேவிப்பதாக நிக்கராகுவாவிலுள்ள ஒரு பாதிரியார் சொன்னார்.
◻பிலிப்பைன்ஸில், அரசியல் கிளர்ச்சியைத் தூண்டி, இயேசுவை ஒரு கலகக்காரராக வருணித்ததற்காக ஒரு ஊழியர் தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
◻மத்திய அமெரிக்காவில் ஒரு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக, மதகுருமார்களும், கன்னியாஸ்திரிகளும் கொரில்லாக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.
அவர்களுடைய செயல்கள் இந்தச் செய்தியையே சப்தமாகவும் தெளிவாகவும் அறிவிக்கின்றன: சட்டத்துக்குக் கீழ்ப்படிய மறுப்பது நியாயமானது அல்லது ஒரு கிறிஸ்தவக் கடமையாகவும்கூட கருதப்படுகிறது. ஆனால் உள்ளான எண்ணங்களும் இலக்குகளும் கபடற்றதாயும் மனிதாபிமானத்துக்கு இசைவாயும் இருந்தாலும்கூட இது உண்மையாக இருக்கிறதா? பைபிளின் கருத்து என்ன?
‘தேவனுக்கு எதிர்த்து நிற்பதா?’
கடவுள் மனித அரசாங்கங்கள் அல்லது அதிகாரங்களின் சம்பந்தமாக நியமத்தைத் தெளிவாக சொல்லியிருக்கிறார். “தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது” என்று பைபிள் கூறுகிறது. ஆம், உண்டாயிருக்கும் எந்த அதிகாரத்திலும் எந்த சமயத்திலும் தலையிடவும் அல்லது அதை முடிவுக்குக் கொண்டுவரவும் தேவையான வல்லமை யெகோவா தேவனுக்கு இருக்கிறது. அவை செயல்படுகிறதென்றால், அதற்குக் காரணம் அவர் அதை அனுமதித்திருப்பதே ஆகும்.—ரோமர் 13:1.
இந்த உண்மையை உறுதி செய்த பின்பு வேதாகமம் மேலுமாகச் சொல்வதாவது: “அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.” (ரோமர் 13:2) இந்த வார்த்தைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கையில், ஒரு கிறிஸ்தவன் ‘புரட்சிக்கு உதவுவதன் மூலம் தான் கடவுளை சேவிப்பதாக’ மனமாரச் சொல்ல முடியுமா? உண்டாயிருக்கும் ஒரு அரசாங்க அதிகாரத்தை நேரடியாக எதிர்க்கும் நடவடிக்கைகளில் பங்குகொள்வதன் மூலம் அல்லது அவைகளை ஆதரித்து பேசுவதன் மூலமாகவும்கூட ஒருவர் ‘தேவனுக்கு எதிர்த்து நிற்கிறாரா’?
பதிலைக் காண பைபிள் சரித்திரத்தை நாம் பார்க்கலாம். பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் முடிவில், யெகோவா பாபிலோனிய பேரரசு இஸ்ரவேலின் மீது ஆளுகைச் செய்ய அனுமதித்து, எருசலேமின் சிதேக்கியாவை அடிமை அரசனாக ஆக்கியிருந்தார். ஆனால் எட்டு ஆண்டு கால அடிமைத்தனத்துக்குப் பின்பு சிதேக்கியா இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை எதிர்க்கும்படியாக வற்புறுத்தப்பட்டான். உதவிக்காக அவன் எகிப்தை அழைத்துக்கொண்டான். அந்நிய வல்லரசு அதுவும் புறஜாதி அரசு, கடவுளுடைய ஜனங்கள் மீது ஆட்சி செய்வதை அவன் இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. அவனுடைய உள்ளான எண்ணங்கள் சுத்தமானவையாகத் தோன்றின. எனினும் கடவுள் அதை எவ்விதமாகக் கருதினார்? சிதேக்கியா தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ‘சுதந்திர போராட்ட வீரனாக’ ஆக வேண்டுமா? இல்லை! ஏனென்றால், பாபிலோனுக்கு எதிராக கலகஞ்செய்வதில் அவன் கடவுளுக்கு எதிராகவும்கூட கலகஞ்செய்து கொண்டிருந்தான். இந்தக் கலகத்தின் காரணமாக, சிதேக்கியா பாபிலோனில் ஒரு சிறைக் கைதியாக மரிப்பான் என்று யெகோவா தீர்ப்பளித்தார்.—2 இராஜாக்கள் 24:17-20; எசேக்கியேல் 17:15, 16.
சிதேக்கியாவின் விஷயத்தில் மட்டுமே இப்படியாக இல்லை. சட்டத்துக்கு கீழ்ப்படிய மறுப்பது, அவை நல்லெண்ணத்தோடு செய்யப்பட்டாலும்கூட, அதன் மூலமாக மனிதனுடைய பிரச்னைகளுக்கு நிரந்தரமான பரிகாரத்தைக் கொண்டுவர முடியாது என்பதைச் சரித்திரம் திரும்பத் திரும்ப காண்பித்திருக்கிறது. எழுச்சிகளும் புரட்சிகளும் நிலைமையை அநேகமாக இன்னும் மோசமாக்கிவிடுகின்றன என்பதே உண்மையாக இருக்கிறது. அநேக சந்தர்ப்பங்களில் ஒரு புரட்சியின் மேலீடான வெற்றிக்குப் பின்னர், “விடுதலையாளர்கள்” தாமே கடைசியில் அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை குற்றமுள்ளவர்களாக இருப்பதைக் காண்கிறார்கள். காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு புதிய சந்ததி புரட்சி செய்ய நாடுகிறது. இப்படிப்பட்ட ஒரு நச்சுச் சுழலை அநேக தேசங்கள் அனுபவித்திருக்கின்றன. உதாரணமாக, அண்மையில் தென் அமெரிக்காவில் ஒரு தேசம் 154 வருடங்களில் 189-வது முறையாக அதன் அரசாங்கம் கவிழ்க்கப்படுவதைப் பார்த்தது.
மனிதன் தோல்வியுறுவது—ஏன்?
மனிதவர்க்கத்தை சுயநல தேட்டத்திலிருந்தும் ஒடுக்குதலிலிருந்தும் விடுவிக்க ஏன் உண்மை மனதுள்ள மனிதரால் முடியவில்லை? அவர்கள் இரண்டு காரியங்களில்—ஞானத்திலும் வல்லமையிலும் குறைவுபடுவதே இதற்குக் காரணமாகும். பைபிள் பின்வருமாறு நம்மை எச்சரிப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “பிரபுக்களையும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.”—சங்கீதம் 146:3.
இதை விளக்க, அறுவைச் சிகிச்சைக்காக நீங்கள் மருத்துவமனையில் காத்திருப்பதாக உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள். வலியினாலும் உடல்நலக் குறைவினாலும் நீங்கள் கதறி அழுகிறீர்கள். திடீரென்று அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு வாயிற்காவலன் நீங்கள் கதறுவதைப் பார்த்து, ஒரு அறுவைக் கத்தியை அவசரமாக எடுத்து, உங்கள் நோவைப் போக்க உதவுவதாகச் சொல்கிறான். அவன் உங்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள்! ஏன்? ஏனென்றால் அவனுடைய அன்பும் இரக்கமும் மாத்திரமே இப்படிப்பட்ட ஒரு கடினமான வேலைக்கு அவனைத் தகுதியுள்ளவனாக்குவதில்லை. அவனுடைய செயல்கள் உங்கள் வேதனையை மேலும் அதிகரித்து உங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும். இப்படிப்பட்ட செயல் தகாத துணிவாகவும் மிகவும் பொறுப்பற்ற செயலாகவும் இருக்கும். தகுதியுள்ள ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கியிருக்கும் உண்மையை இது அசட்டை செய்வதாக இருக்கும். உதவி வந்துகொண்டிருக்கிறது என்பதாக அவன் உங்களுக்கு மீண்டும் உறுதியளிப்பதே உண்மையில் உங்களுக்கு மேன்மையானதாக இருக்கும்.
அதைப் போலவே மெய்க் கிறிஸ்தவர்கள் இன்று சட்டத்துக்குக் கீழ்ப்படிய மறுப்பது கிடையாது. தகுதியுள்ள கடவுள், குறுக்கிடப்போகும் நாளுக்காகவும் மணிநேரத்துக்காகவும் அவர்கள் காத்திருக்கிறார்கள். மனிதவர்க்கத்துக்கு நிலையான பரிகாரங்களைக் கொண்டுவருவதற்கு அவருக்கு மாத்திரமே ஞானமும் வல்லமையும் இருக்கிறது. பிரசங்க வேலையின் மூலமாக, யெகோவாவின் சாட்சிகள் அநீதியின் காரணமாகத் துன்பப்படும் ஜனங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு விடுதலை சீக்கிரத்தில் வர இருக்கிறது என்பதாக உறுதியாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.—ஏசாயா 9:6, 7; 11:3-5.
இதற்கிடையில், நம்முடைய உரிமைகளை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் அநீதியிலிருந்து விடுவிக்கப்படவும் கிடைக்கக்கூடிய எந்த ஒரு சட்டப்பூர்வமான வழிமுறைகளையும் நாம் மேற்கொள்ளலாம். ஆனால் இவற்றில் தோல்வியடைந்தால், சட்டத்துக்குக் கீழ்ப்படிய மறுப்பது தவறானதாக இருக்கும். இதன் காரணமாகவே அப்போஸ்தனாகிய பவுல் அறிவுரை கூறுவதாவது: “கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழி வாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” உண்மையான மற்றும் கீழ்ப்படிதலுள்ள கிறிஸ்தவர்கள் இந்த ஞானமான புத்திமதியை இருதயத்துக்குள் ஏற்றுக்கொள்கின்றனர்.—ரோமர் 12:18, 19. (g87 9⁄8)