இளைஞர் கேட்கின்றனர் . . .
என்னுடைய பொருட்கள் ஏன் அத்தனை ஒழுங்காக இருக்க வேண்டும்?
“இதுவே நான் உனக்குச் சொல்லப்போகிற கடைசித் தடவையாகும். உன் அறையைச் சுத்தம் செய்!”
அடிக்கடி கேள்விப்படும் வார்த்தைகளாக இவை தொனிக்கின்றனவா? நம்மில் வெகு சிலருக்கே ஒழுங்கினிடமாக இயல்பான சாய்வு இருப்பதால் இது அவ்விதமாக இருக்கக்கூடும்.
என்றபோதிலும், இப்படியாக ஒழுங்காக இருக்கும்படி உங்களை உரிமையுடன் கட்டாயப்படுத்துவது நியாயமற்றதாகத் தோன்றக்கூடும். உங்கள் அறை சற்று ஒழுங்கற்று இருப்பதை நீங்கள் விரும்பக்கூடும். தவிர, வீட்டின் மற்ற இடங்களின் சம்பந்தமாக அநேக விதிமுறைகள் இருக்கக்கூடுமாதலால், நீங்கள் உங்களுடைய சொந்த அறையை வைத்துக்கொள்ளும் விதத்தைப் பற்றியதிலும்கூட விதிமுறைகள் இருக்க வேண்டுமா? நீங்கள் மற்ற இளைஞர்களைப் போல குடிக்காமலும் அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்தாமலும் இருக்கிறபடியால், ஒழுங்கின்மை போன்ற ஒரு சிறிய தவறு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பதாகவும் நீங்கள் நினைக்கக்கூடும். உங்களுடைய நண்பர்களின் அறைகள் உங்களுடையதைவிட மோசமாக இருப்பது உண்மையல்லவா? அப்படியென்றால், சில பெற்றோர்கள் ஏன் ஒழுங்கைப் பற்றி மட்டுமீறிய அமளி செய்கிறார்கள்? அவ்விதமாகச் செய்வதற்கு அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா?
ஒழுங்குக்கு எதிராக ஒழுங்கின்மை
பெற்றோர்களிடம் பின்வருமாறு சொன்ன மனயியல் பேராசிரியர் ஒருவரின் ஆலோசனையை, உங்கள் பெற்றோர் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும்: “உங்களை எரிச்சலடையச் செய்யும் அறையின் கதவை வெறுமென மூடி வைத்துவிடுவதே மிகச் சிறந்த காரியம்.” ஆனால் பெற்றோர் ஒழுங்கை வற்புறுத்துவதற்கு அவர்களுக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன என்பதை மற்றவர்கள் அறிந்திருக்கிறார்கள். மன இயல் நிபுணரான பால் ஆடம்ஸ் லேடீஸ் ஹோம் ஜர்னலில் பின்வருமாறு எழுதியிருந்தார்: “ஒரு பிள்ளையிடம் அவனுடைய அறை ஓரளவு ஒழுங்காக வைக்கப்பட வேண்டும் என்று சொல்வது அறிவுள்ள காரியமாக இருக்கிறது. கட்டுப்பாடுகளை விவரமாகச் சொல்லுங்கள். படுக்கை அறையை அவனால் ஓரளவாவது ஒழுங்காக வைத்துக்கொள்ள முடியாவிட்டால், சில சலுகைகளை அவனிடமிருந்து எடுத்துவிடப் போவதாகச் சொல்லுங்கள்.”
இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், உங்களுடைய சொந்த அறையின் சம்பந்தமாகவும்கூட சில விதிமுறைகளை விதிப்பதற்கு உங்கள் பெற்றோருக்கு உரிமை உண்டு அல்லவா? நீங்கள் உங்களுக்கென்று சொந்தமாக அறையை உடையவர்களாயிருப்பதற்காகவும் அதற்கு தேவையானத் தட்டுமுட்டுச் சாமான்களை வாங்குவதற்காகவும் அவர்கள் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவழித்திருக்கிறார்கள். ஆகவே அதனுடைய பராமரிப்புக்காக அவர்கள் விதிமுறைகளை விதிப்பது நியாயமானதே ஆகும். அவைகளின்படி செய்வது உங்களுக்குப் பிரயோஜனமாயிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
தி பில்டர்ஸ் என்ற தன்னுடைய கவிதையில் ஹென்றி W. லாங்ஃபெல்லோ பின்வரும் பழமொழியை உருவாக்கினார்: “ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்திலிருப்பதே சிறந்தது.” இது உண்மையாயிருப்பதை உங்களுடைய பெற்றோர் உணர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் “ஒவ்வொரு பொருளையும் அதனதன் இடத்தில்” வைப்பதில் நன்மைகள் இருக்கின்றன. அவைகளில் சில யாவை?
ஒழுங்கின் சில நன்மைகள்
பொருட்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இருப்பது மிகவும் தெளிவாகத் தெரியும் ஒரு நன்மையாகும். ஒழுங்கற்ற ஒரு நபர், சாவிகளை, சீப்பை, கைக்குட்டையை தேடுவதில் அதிக நேரத்தை வீணாக்கக்கூடும். மேலும் படுக்கைக்கு கீழே எட்டி உதைக்கப்பட்ட மற்றொரு காலணியைத் தேடுவதில் செலவிடும் நேரத்தைப்பற்றி சொல்லவே அவசியமில்லை. மேலுமாக, துணிமணிகளும்கூட சரியாகத் தொங்கவிடப்படுகையில் அவை சுத்தமாகவும், மடிப்புக்கலையாமலும், நீண்ட காலம் உழைப்பதாகவும் இருக்கின்றன. மேலுமாக, ஏதோ ஒரு இடத்தில் எறியப்பட்ட சட்டைகள் அல்லது காலணிகளின் மீது தடுக்கிவிழும் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. உங்கள் அறையை ஒரு சகோதரன் அல்லது சகோதரியோடுப் பகிர்ந்துகொள்ளும்போது இது குறிப்பாக முக்கியமாக இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய அறையை ஒழுங்காகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் தங்களுடைய பங்கைச் செய்கையில் இது மற்றவர்களுடைய சுமையைக் குறைத்து, இவ்விதமாக மகிழ்ச்சியுள்ள ஒரு குடும்பத்துக்கு வகைசெய்கிறது. இதன் சம்பந்தமாக 14 வயது கேரோலின் எழுதுகிறதாவது: “அம்மாவுக்கு இங்கே வீட்டில் செய்வதற்கு அதிக வேலை இருக்கிறது. . . . என்னைத் தவிர ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒருவரால்கூட தங்களுடைய சொந்த வேலைகளைச் செய்துகொள்ள முடியாது. அம்மாவே எல்லாவற்றையும் செய்தாக வேண்டும். மேலுமாக அவளுக்கோ அடிக்கடி முதுகு வலி ஏற்படுவதுண்டு.” அந்த ஏழு பிள்ளைகளும், “ஒவ்வொரு பொருளையும் அதனதன் இடத்தில் வைத்தால்,” அது நிச்சயமாகவே அவர்களுடைய அம்மாவின் பாரத்தைக் குறைத்துவிடும் அல்லவா?
மற்றொரு நன்மையானது, நீங்கள் உங்களுடைய சொந்த அறையை ஒழுங்காக வைத்துக்கொண்டால், மற்ற இடங்களையும்கூட அதே விதமாகவே ஒருவேளை வைத்துக்கொள்வீர்கள். இந்த ஒழுங்கு பழக்கமானது நீங்கள் உங்களுடைய குடும்பத்தின் மோட்டார் வண்டியையும் மற்ற உடைமைகளையும் பராமரிப்பதிலும்கூட உதவியாக இருந்து ஒருவேளை நீங்கள் வளர்ந்து பெரியவராகும்போதும்கூட நிலைத்திருக்கக்கூடும். ஒரு நாள் உலகப்பிரகாரமாக நீங்கள் ஒருவேலையை ஏற்றுக்கொள்ள நேரிடும்போது, ஒழுங்குக்குப் பேர் போனவராக இருந்தால் நீங்கள் முன்னேறுவதற்குரிய வாய்ப்புகளையும்கூட அது அதிகரிப்பதாக இருக்கும். இது பயனுள்ள ஒரு எதிர்பார்ப்பு என்பதாக நீங்கள் நினைக்கவில்லையா?
உங்கள் பெற்றோரின் விதிமுறைகளைப் பின்பற்றுவது நடைமுறைக்குப் பிரயோஜனமானது என்பதைப் பின்வரும் காரியம் காண்பிக்கிறது: பெரும்பாலான இளைஞர்கள் ஒரு மோட்டார் வண்டியை ஓட்ட மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும்? சட்டப்பூர்வமான ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் என்று நாம் நிச்சயமாகச் சொல்வதற்கல்ல. தி ஃபாம்லி ஹாண்ட் புக் ஆப் அடோலஸன்ஸ் என்ற புத்தகத்தில் டாக்டர்கள் J.E. ஸ்கோவால்டர் மற்றும் W.R. அன்யன் Jr. சொல்வதாவது: “பருவ வயதிலுள்ள வாலிபன் விதிமுறைகளைப் பின்பற்றுவான் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அவன் பொதுவாக நம்பத்தக்கவனாகும் போது, அதே தன்மைகள் மோட்டார் வண்டியை ஓட்டிச் செல்கையிலும் அவனுடைய அல்லது அவளுடைய நடத்தையைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும். (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை) அப்படியென்றால், நம்பத்தக்கவராயும் நம்பிக்கைக்குரியவராயும் இருக்க உங்களைப் பயிற்றுவித்து, உங்களுடைய சொந்த அறையை ஒழுங்காக வைத்துக்கொள்வதன் சம்பந்தமாகவும்கூட விதிமுறைகளைப் பின்பற்றுவது பயனுள்ள காரியம் என்று நீங்கள் நினைப்பதில்லையா? இது பயனுள்ளது என்று பைபிள் சொல்லுகிறது: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.”—லூக்கா 16:10.
ஆனால் கிறிஸ்தவ இளைஞனுக்கோ, நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் இருப்பதற்குரிய முக்கிய காரணம், பின்வருமாறு எழுதிய அப்போஸ்தலனாகிய பவுலால் கொடுக்கப்பட்டது: “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல் சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்.” அவன் மேலுமாக எழுதியதாவது: “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.”—1 கொரிந்தியர் 14:33; எபேசியர் 5:1.
கடவுளுடைய விஷயத்தில் இந்த ஒழுங்கு இஸ்ரவேல் தேசத்தின் வணக்கத்துக்காக, ஆசரிப்பு கூடாரத்தில் அவர் செய்திருந்த ஏற்பாட்டில் தெளிவாக தெரிகிறது. ஆசாரிய குடும்பங்களின் (லேவியர்களின்) அங்கத்தினர் மாத்திரமே ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். மேலுமாக யெகோவா, கூடாரத்தில் ஒவ்வொரு பொருளும் எங்கே வைக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் ஆசாரியர்களும் லேவியர்களும் அவைகளை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவரமான கட்டளைகளை மோசே எழுதி வைக்கும்படிச் செய்தார். (யாத்திராகமம் 40) இவ்விதத்தில், லேவியரல்லாத இஸ்ரவேலர், ஆசரிப்பு கூடாரத்திற்குள் யெகோவாவின் வணக்கத்தின் சம்பந்தமாக செய்யப்பட்ட அனைத்துக் காரியங்களையும் மனக்கண்களின் மூலமாவது பார்க்கக்கூடியவர்களாய் இருந்தார்கள். இது அவர்களை அதன் நடவடிக்கைகளில் ஒரு பாகமாக தாங்கள் இருப்பதை உணரச் செய்து அவர்களுக்கு ஒரு ஒருமைப்பாட்டுணர்வைக் கொடுப்பதாக இருந்தது. யெகோவா ஒழுங்கின் கடவுளாக இருந்ததற்காக அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
அந்த அறையைப் பற்றி என்ன செய்வது?
அப்படியென்றால், உங்கள் அறையில் நீங்கள் எவ்விதமாக ஒழுங்கை உருவாக்கலாம்? ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, உங்களுடைய பெற்றோர், திட்டவட்டமாக சில காரியங்களை வற்புறுத்தக்கூடும். ஆனால் நினைப்பூட்டப்படாமல் மனமுவந்து எடுக்கும் உங்கள் சொந்த முயற்சியினால் நீங்கள் அதிகத்தைச் சாதிக்கக்கூடும். தெளிவாக கண்ணுக்கு முன் தென்படும் காரியங்களுடன் துவங்குங்கள்: அங்குமிங்கும் கிடக்கும் துணிமணிகளை ஒழுங்காக மாட்டி வைக்கவும். இதற்குரிய கொக்கிகளைப் பயன்படுத்தினால் மேல் சட்டைகளும், சட்டைகளும் உடைகளும் ஒழுங்காகக் கசங்காமலிருக்க உதவியாக இருக்கும். காலணிகளுக்காகப் பலகைகளுள்ள பெட்டி (அல்லது பிளாஸ்டிக் காலணிப் பை) இருக்குமானால் காலணிகளை அவைகளில் வைத்துவிட்டால், அது உடை அலமாரியின் தோற்றத்தை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும். அழுக்கான துணிகளை என்ன செய்வது? வெறுமென ஒரு மூலையில் அவைகளைத் தூக்கி ஏறிவதற்குப் பதிலாக அதற்காக ஒரு கூடைப் பெட்டியை அல்லது பையையாவது ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது? பின்னர் படுக்கையைக் கவனிக்கவும். ஒரு நாளில் ஒருசில நிமிடங்களைச் செலவழிப்பது, அலங்கோலமான ஒரு படுக்கைக்கும் ஒழுங்கான படுக்கைக்குமுள்ள வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். ஒழுங்கான ஒன்றை ஏன் தெரிந்துகொள்ளக்கூடது?
இப்பொழுது கண்ணுக்கு மறைவாயிருக்கும் பொருட்களுக்குக் கவனம் செலுத்துங்கள். உங்கள் அறையிலுள்ள இழுப்பறைப் பெட்டியின் பல அறைகளில் ஒன்றைத் தெரிந்துகொண்டு அதைச் சுத்தப்படுத்துங்கள். வேண்டாத பொருட்களைத் தூக்கி எறிந்துவிட்டு மற்றவற்றை அவற்றிற்குரிய இடத்தில் வையுங்கள். உங்களுடைய இழுப்பறையில் சிறிய அட்டைப் பெட்டிகள் அல்லது உள்ளேயுள்ள பொருட்களைக் காணக்கூடிய ப்ளாஸ்டிக் பைகளை வைத்து, அதில் ஒன்றை உங்கள் உள்உடுப்புகளை வைக்கவும், மற்றொன்றை உங்களுடைய காலுறைகளை வைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். குறுகிய காலத்துக்குள் உங்களுடைய அறையின் முழு தோற்றமே மாறிவிடும். அதை ஒழுங்காக வைப்பதில் நீங்கள் பெருமையை வளர்த்துக்கொள்ள ஆரம்பிப்பீர்கள்.
வாலிபர்களே—உங்கள் எதிர்காலத்தைச் சிந்தியுங்கள்
ஒழுங்காக இருப்பதற்குக் கற்றுக்கொள்ள இவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் எடுப்பதில் பயன் ஏதும் உண்டா? இப்பொழுது 20 வயதுகளிலிருக்கும் கேரலுக்கு அவள் பட்ட பாடுகள் இன்னும் நினைவிலிருக்கின்றன. கேரலின் அறை ஒழுங்கீனமாக இருப்பதை அவளுடைய அம்மா கண்டால் (உதாரணமாக, காலுறைகளும் உள்ளாடைகளும் ஒழுங்காக இழுப்பறையில் மடித்து வைக்கப்படாதிருந்தால்), அவள் வெறுமென இழுப்பறையிலுள்ள அனைத்தையும் தரையில் கொட்டி, கேரலை மீண்டும் எல்லாவற்றையும் ஒழுங்காக எடுத்து வைக்கச் செய்வாள். அல்லது தண்டனையாக, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அவள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாள்.
இதைப் பின்னோக்கிப் பார்க்கையில், தன் அம்மா அநியாயமாக நடந்துக்கொண்டதாக கேரல் நினைக்கிறாளா? “இல்லை, அதிலிருந்து நான் அதிகத்தைக் கற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னுடைய துணிமணிகளுக்கு எவ்விதமாக இஸ்திரி போடுவது என்பதும் பொருட்களை எவ்விதமாக ஒழுங்காகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்வது என்பதும் எனக்குத் தெரியும். ஒருவேளை என்னுடைய அம்மா எதிர்பார்க்கிற அளவின்படி இல்லாவிட்டாலும்கூட குறைந்தபட்சம் என் படுக்கை அறையின் கதவை என்னால் திறந்து வைக்க முடியும்.”
கேரலுக்கு எதிர்காலத்தில் சொந்தமாகப் பிள்ளைகள் இருக்குமானால், ஒழுங்கைப்பற்றி அவள் அவர்களுக்கு என்ன கற்பிப்பாள்? அவள் பின்வருமாறு விளக்கினாள்: “அவர்களுடைய இழுப்பறைகளை ஒருவேளை நான் சோதனை செய்யாவிட்டாலும், அவர்களுடைய அறை ஒழுங்காக இருக்குமானால் அது போதுமானதாக இருக்கும்.” மற்ற இளைஞர்களுக்கு அவள் என்ன ஆலோசனையைத் தரவிரும்புகிறாள் என்பதாக கேட்டபோது கேரல் சொன்னது: “உங்கள் பெற்றோர் எதிர்பார்க்கிற அளவு ஒழுங்கைப் பின்பற்றுங்கள். கடைசியில் ஒழுங்காயிருப்பது உங்கள் பழக்கமாவிடும்.”
மனிதன் பழக்கவழக்கங்களின் சிருஷ்டி என்பதாகச் சொல்லப்படுகிறது. இவைகளில் சில பழக்கவழக்கங்கள் பயனுள்ளதாகவும் மற்றவை பயனற்றதாகவும் இருக்கிறது. ஆகவே எல்பர்ட் ஹுப்பர்ட் ஞானமாக பின்வருமாறு எழுதினார்: “உங்களை அடக்கி ஆள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற பழக்கவழக்கங்களை மாத்திரமே வளர்த்துக்கொள்ளுங்கள்.”
ஒழுங்கா அல்லது ஒழுங்கீனமா—எந்தப் பழக்கவழக்கம் உங்களை அடக்கி ஆள வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்? இதைச் சிந்தித்துப் பார்க்கையில் ஒழுங்கு பழக்கத்தின் நன்மைகளை மறந்துவிடாதீர்கள்: இதற்கு வேதப்பூர்வமான ஆதாரம் இருக்கிறது, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. சுயமரியாதையையும் உங்களிடமாக மற்றவர்களின் மரியாதையையும் வளர்க்கிறது. கடைசியாக, கேரல் குறிப்பிட்ட விதமாகவே: “என் அம்மாவுக்கு என் உதவி உண்மையாகத் தேவைப்படுகிறது. நான் அவளுக்கு உதவி செய்யும்போது அவள் அதைப் பெரிதும் போற்றுகிறாள்.” (g87 8⁄22)
நீங்கள் எதை விரும்புகிறீர்கள்: இதுவா . . .
அல்லது இதுவா?