பிரசுரங்களை அனுப்புவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கும் புதிய வசதிகள்
பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பிரசித்திப்பெற்ற நியு யார்க்கின் வால் ஸ்ட்ரீட் மாகாணத்துக்கு எதிர்பக்கத்தில், துறைமுகத்துக்கு அடுத்துள்ள இந்தப் பிரமாண்டமான கட்டடம் புரூக்லின் கரையோரத்தில் எடுப்பான தோற்றமுடையதாக நிற்கும் ஒன்றாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய அச்சுத் தொழிற்சாலையிலிருந்து ஒரு சில கட்டடங்கள் தள்ளி 360 ஃபர்மன் தெருவிலுள்ள இக்கட்டடம், யெகோவாவின் சாட்சிகள், அவர்களுடைய பைபிள் பிரசுரங்களை உலகம் முழுவதும் அனுப்புவதற்கு வசதியான இடத்தில் அமைந்துள்ளது.
1928-ல் கட்டப்பட்ட ஃபர்மன் தெரு கட்டடத்தை யெகோவாவின் சாட்சிகள் 1983 மார்ச் 15-ம் தேதி விலைகொடுத்து வாங்கினார்கள். அந்தச் சமயம் முதற்கொண்டு அநேக மாற்றங்கள் செய்யப்பட்டு இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு ஜனவரியில், வாடகைக்கு இக்கட்டடத்தில் வசித்து வந்த கடைசி ஆட்கள் இதைக் காலி செய்துவிட்டதால் இப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் முழு இடத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இக்கட்டடம் 10 லட்சம் சதுர அடி (93,000 சதுர மைல்) அல்லது சுமார் 23 ஏக்கர் நிலப்பரப்பைப் கொண்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி, பிரசுரங்களை அனுப்பி வைக்கும் புதிய இலாக்காவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான இரண்டாவது மாடியின் அளவு 373 ×345 அடியாக (சாஸர் விளையாட்டரங்கம் அளவில் 1 1/2 மடங்கு) உள்ளது. இங்கே அலுவலகங்களும் பிரசுர ஆர்டர்களை விரைவாகப் பூர்த்தி செய்வதைக் கூடிய காரியமாக்கும் பிரசுரங்களைக் கொண்டு செல்லும் கருவி அமைப்பும் இருக்கின்றன.
1985-ன் இலையுதிர் காலத்தின்போது பிரசுரங்களை அனுப்பி வைக்கும் இலாக்காவை ஃபர்மன் தெருக்கு இடமாற்றுவதற்கு முன்பாக, 30 கொலம்பியா ஹைட்ஸில் இதற்காக இருந்த நெருக்கமான இடத்தில் பிரசுர ஆர்டர்களைப் பூர்த்தி செய்ய அநேகமாக ஆறு வாரங்கள் ஆயின. ஆனால் இப்பொழுது கம்ப்யூட்டர் அமைப்பு, பிரசுரங்களைக் கொண்டுசெல்லும் கருவி மற்றும் வேலை செய்வதற்கு தாராளமான இடவசதி ஆகியவற்றோடுகூட ஒரு ஆர்டரைப் பெற்றுக்கொண்ட பின் ஏழு நாட்களுக்குள்ளேயே அவைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த இலாக்காவையும் இது எவ்வாறு இயங்குகிறது என்பதையும் நாம் பார்க்கலாம்.
இங்கே நூறுக்கும் மேற்பட்ட வித்தியாசமான மொழிகளில் புத்தகங்களும் சிறுபுத்தகங்களும் சேமித்து வைக்கப்படுகின்றன. மாதந்தோறும் சுமார் ஆயிரம் டன்கள் எடையுள்ள பிரசுரங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு இந்த ஃபர்மன் தெரு கட்டடத்திலிருந்து நேரடியாகவோ அல்லது அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்தோ துறைமுகத்தின் சரக்கேற்றி இறக்கும் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் 2,000 பிரசுர ஆர்டர்கள் ஃபர்மன் தெரு கட்டடத்தில் பூர்த்தி செய்யப்பட்டு அமெரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 8,400-க்கும் மேற்பட்ட சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பிரசுரங்களைக் கொண்டு செல்லும் நவீன கருவி, திறம்பட்ட வகையில் பிரசுரங்களை ஒன்று சேர்த்து, அடுக்கிவைத்து, கட்டி அனுப்புவதற்காக வாங்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளே இக்கருவிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். இதற்குச் சுமார் நான்கு மாதங்கள் ஆயின. 1985 அக்டோபரின் முற்பகுதியில் இது முடிக்கப்பட்டது. பல்வேறு வார்களையும் கம்பி வடங்களையும் இயக்கும் 54 விசைப் பொறிகளையும், பிரசுரங்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் 30 நிழற்பட மின்சார கண்களையும் கொண்ட பிரசுரங்களைக் கொண்டு செல்லும் இந்தக் கருவி சுமார் முக்கால் மைல் நீளம் உள்ளது.
பிரசுரங்களை அனுப்பி வைக்கின்ற இலாக்கா நான்கு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான அலுவலகத்தில் ஆர்டர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. விலைப்பட்டியலையும் ஒவ்வொரு ஆர்டருக்காகச் சேர்க்கப்பட வேண்டிய பிரசுரங்களின் பட்டியலையும் தயாரிப்பதற்கு ஒரு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது பகுதி பிரசுர ஆர்டர்களை நிரப்புவதற்காக அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு இருக்கும் அமைப்பு ஆகும். மூன்றாவது, அவைகளைச் சரிபார்த்து நேர்த்தியாக அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. நான்காவது பகுதி ஒவ்வொரு அட்டைப் பெட்டியின் எடையையும் அளந்து அஞ்சல்தலை ஓட்டும் அஞ்சற்கட்டண அளவுக்கருவி நிலையமாகும். இந்த அட்டைப் பெட்டிகள் பின்னர் பற்பல இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு டிரக்குகளில் ஏற்றப்படும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால் 360 ஃபர்மன் தெரு கட்டடத்தில் பிரசுரங்களை அனுப்பி வைக்கும் இலாக்கா மட்டுமே இல்லை. மற்ற பல இலாக்காக்களுக்கும் இங்கிருந்து செயல்படுகின்றன.
(g87 8⁄22)
[பக்கம் 29-ன் படங்கள்]
ஃபர்மன் தெரு கட்டடத்தில் நடைபெறும் மற்ற வேலைகள்
56,000 சதுர அடி தரைப் பரப்புள்ள இந்தப் பெரிய தச்சர் கடையில், அநேக அலுவலகங்களுக்கும் தலைமைக் காரியாலயப் பணியாட்களின் அறைகளுக்கும் தேவைப்படும் மரச் சாமான்கள் தயார் செய்யப்படுகின்றன
பார்வையற்றோருக்காக (பிரேய்ல்) பிரசுரங்கள் தயாரிக்கும் இலாக்கா, 48-க்கும் அதிகமான பிரசுரங்களையும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு “காவற்கோபுரம்” பத்திரிகையின் ஒவ்வொரு பிரதியையும் உண்டுபண்ணுகிறது. பிரேய்ல் பிரசுரங்கள் 35-க்கும் மேற்பட்ட தேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன
35,000 பவுண்டுகள் வரையாக மின்கம்பி வடக்குழாய்களும் அதோடு சம்பந்தப்பட்ட உலோகத் தகடு உருப்படிகளும் இங்கே உற்பத்தி செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் புரூக்லினிலுள்ள சங்கத்தின் கட்டடங்களிலும் உவாட்ச் டவர் பண்ணைகளிலும் பொருத்தி வைக்கப்படுகின்றன
கடந்த மூன்று ஆண்டுகளில் டேப்பை மறுபடிவம் செய்யும் இலாக்கா, ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மற்றும் போர்ச்சுகல் மொழிகளில் 110 லட்சம் காஸட்டுப் பதிவுகளை உற்பத்தி செய்திருக்கிறது
உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கட்டடங்களுக்கு தேவைப்படும் அலுமினிய ஜன்னல் சட்டங்களும் மின்தடைக் கண்ணாடி சில்லு யூனிட்டுகளும் கணிசமாகக் குறைந்த விலையில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் புதிய ஜன்னல்களைப் பயன்படுத்துவதால், அறைகளை உஷ்ணப்படுத்துவதற்காகும் செலவு மிச்சப்படுத்தப்படுகிறது. இது இந்தத் திட்டத்துக்கான செலவை விரைவில் ஈடு செய்துவிடும்