அழுத்தத்தின் கீழ் இருக்கும் தாவரங்கள்
சில தாவரங்கள் திடீரென பூச்சி பிடித்து நோய்ப்பட்டு செத்துவிடுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவை எப்படியோ தவறாக நடத்தப்பட்டிருக்கின்றன, ஒருவேளை அனவுக்கு மிஞ்சி தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பதாலோ அல்லது காற்று நச்சுப்படுத்தப்பட்டிருப்பதாலோ ஏதாவது ஒரு நோய் அவற்றைத் தாக்கியிருக்கக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தத் தீய விளைவுகளை ஏற்படுத்தும் காரியங்கள் செடிகளை அழுத்தத்தில் வைக்கின்றன என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஆம், பிரச்னை இருக்கிறது என்பதற்குக் காணக்கூடிய அடையாளங்கள் தென்படுவதற்கு முன்பாகவே அவை “வேதனையின் அறிகுறிகளை” அனுப்புகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதைத்தான் சார்லஸ் B. ஃபார்னி தி எக்ஸ்பிரஸ் என்ற பென்சில்வேனியாவிலுள்ள ஈஸ்டன் செய்தித்தாளில் அறிக்கை செய்தார். பண்ணைத் தோட்டம் என்ற தனக்குரிய பத்தியின்படி, “தாங்கள் எப்பொழுது அழுத்தத்தில் இருக்கின்றன என்பதை—எச்சரிக்கைக் குறியை—செடிகள் நமக்கு அனுப்புகின்றன என்று விஞ்ஞானிகள் உரிமைபாராட்டுவதாக ஐக்கிய மாகாணங்களின் விவசாயத் துறை அறிக்கை செய்கிறது.” “ஒரு தாவரம் உதவிக்காக எப்படி கதறுகிறது என்பதைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.”
தாவரங்கள் அழுத்தத்தின்கீழ் வரும்போது நீர்க்கரியக வாயுவை வெளியிடுவதாகத் தெரிகிறது. வெளியிடப்படும் இந்த வாயுவைப் பூச்சிகள் அறிந்துகொள்கின்றன. நீர்க்கரியக வாயுவை வெளிவிடும் நோய்ப்பட்ட மரங்கள் விரைவிலேயே மர வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்குள்ளாகின்றன. இயலீர்ப்பாற்றல் மூலம் வாயுக்களைப் பிரிக்கும் முறைகொண்டு எவ்வளவு நீர்க்கரியக வாயுவைத் தாவரங்கள் வெளியிடுகின்றன என்பதை அளவிடமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இப்படியாக ஒரு தாவரம் எப்பொழுது அழுத்தத்திலிருக்கிறது, அதைத் தாங்கிக்கொள்ள முடிகிறதா என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியும். தெளிவாகவே, மனிதரைப் போலவே தாவரங்களுங்கூட அனாவசியமான அழுத்தத்திலிருந்து காக்கப்பட வேண்டும்! (g87 8⁄22)