நல்ல ஆரோக்கியம் வியாபாரத்திற்கு நல்லது
ஐக்கிய மாகாணங்களில் உடல்நல பாதுகாப்பிற்கான செலவு 40,000 கோடி டாலர்களுக்கு உயர்ந்திருக்கிறது. இது 1970-ம் ஆண்டுகளில் இருந்ததைப் பார்க்கிலும் அநேக மடங்குகள் அதிகம். அதிகரித்துக் கொண்டே போகும் மருத்துவ செலவுகள் குடும்பங்களின் நிதிநிலை பாதுகாப்பைப் பயமுறுத்துவதோடு, வியாபார இலாபங்களிலிருந்து மிகப் பெரிய துண்டை எடுத்துக்கொள்கிறது. வேலை செய்பவர்களின் உடல்நலப் பாதுகாப்பு கட்டணங்களுக்கு மட்டுமே ஐக்கிய மாகாணங்களின் வியாபார நிறுவனங்கள் ஆண்டுக்கு 8,000 கோடி டாலர்களுக்கும் மேலாக செலவிடுகிறது.
உதாரணமாக, ஃபோர்ட் மோட்டார் கம்பெனி 1980-ன் போது வேலை செய்வோருக்கு உடல்நல பாதுகாப்பிற்காக தாங்கள் செய்த செலவின் காரணமாக, உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்தின் விலை 290 டாலர்கள் கூடியது என்று கணிக்கிறது. ஜெனரல் மோட்டார்கள் அதற்குப் பிரதான எஃகு அளிக்கும் நிறுவனமாகிய யு.எஸ்.எக்ஸ். (முன்பு யு.எஸ்.ஸ்டீல்) அளிக்கும் எஃகிற்கு ஒரு ஆண்டுக்கு செய்யும் செலவைப் பார்க்கிலும் உடல் நலப் பாதுகாப்பிற்கும் உடல் ஊனங்களுக்கும் அதிக பணம் செலவு செய்கிறது.
முதுகு வலிகள் மட்டுமே ஐக்கிய மாகாணங்களில் வியாபார நிறுவனங்களுக்கு ஓர் ஆண்டில் 100 கோடி டாலர்கள் உற்பத்தியால் இழப்பு உண்டாக்குகிறது. இது போன்ற நோய்களின் நிமித்தமாக ஒவ்வொரு நாளும் அதிக பட்சம் பத்து இலட்சம் ஆட்கள் வேலைக்கு ஆஜர் ஆவதில்லை. முக்கியமாக இருதயநோய் நாசகரமானதாய் இருக்கிறது. சுமார் 7,00,000 அமெரிக்கர்கள்—அநேகர் வாலிபப் பிராயத்தில்—மாரடைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் மரிக்கிறார்கள், இன்னும் 7,00,000 பேர் அத்தகைய மாரடைப்பைத் தப்பிப் பிழைக்கிறார்கள், மற்றும் அதன் பிறகு அநேக மாதங்களுக்கு வேலைக்குப் போவதில்லை. வியாபார நிறுவனங்களுக்கு ஆகும் செலவு பேரளவானது.
“ஒரே சமயத்தில் நான்கு விதமான இருதய குறுக்குப் பாதை இரண சிகிச்சை பெற்றுக்கொள்ளும் ஒரு வேலையாள் சம்பள அடிப்படையைச் சார்ந்து உத்தேசமாக 1,00,000 டாலர்கள் வரை வேலை கொடுப்பவருக்குச் செலவு உண்டாக்குவார்” என்று டாக்டர் ரிச்சர்டு H. ஷ்டைன் விவரிக்கிறார். “ஒரு முழு நிறுவனத்திற்கும் எல்லாம் உள்ளடக்கிய நோய்த்தடுப்புத் திட்டத்திற்குக் குறைவாகவே செலவாகும். நிறுவனங்களின் சுமையைக் குறைப்பது நல்ல பொருளாதார அர்த்தமுள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்கிறார்.
தடுப்பு நடவடிக்கை விவேகமானதா?
40,000 கோடி டாலர்கள் உடல் நல செலவில் பெரும்பாகம் கூடுதல் எடை, புகை பிடித்தல், அதிக இரத்தக் கொழுப்பு மற்றும் அசாதாரண மேம்பட்ட இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளிலிருந்து விளைகிற கட்டுப்படுத்தப்படக் கூடிய சாத்தியமுள்ள நோய்களுக்குச் செலவிடப்படுகிறது.
பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் தங்களுடைய இயந்திரங்களை நல்ல இயங்கும் நிலையில் வைக்க பராமரிப்புத் திட்டத்தைக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் அப்படிச் செய்வது ஒரு நல்ல பொருளாதார அர்த்தத்தை உடையதாயிருக்கிறது. அப்படியென்றால், தங்கள் வேலையாட்களின் உடல்நல தடங்கல்களைத் தடுக்கும் திட்டத்தைப் பற்றி என்ன? அது விவேகமானதா?
‘உடல் நலத்தைக் காத்துக்கொள்வது ஒரு தனிப்பட்ட நபரின் பொறுப்பு’ என்று வேலை கொடுப்பவர் விவாதிக்கலாம். இருப்பினும், வருந்தத்தக்க புசித்தல், குடித்தல், மற்றும் தூங்கும் பழக்கங்கள், குறிப்பிடத் தேவையில்லாத சரீர உழைப்பற்ற வாழ்க்கைப் பாணிகள் மற்றும் மருந்து உபயோகத்தை வலியுறுத்துதல் ஆகியவற்றைப் பேணி வளர்க்கும் நம்முடைய நவீன, அழுத்தங்கள் நிறைந்த சமூகத்தை நோக்கும்போது வியாபார நிறுவனங்கள் இந்தக் காரியத்தை மீண்டும் சிந்திக்கின்றன.
1974-ம் ஆண்டில் இருபத்திநான்கு தொழில்தகுதி இயக்குநர்கள், வியாபார உடல்நலத் தகுதி சங்கம் என்பதை நிறுவினார்கள். இந்தச் சங்கம் இப்பொழுது 3,500-க்கும் மேலான அங்கத்தினரைக் கொண்டிருக்கிறது! பொருளாதார மற்றும் மனிதாபிமான உணர்வில் ஒரு நோய்த்தடுப்புத் திட்டம் அர்த்தமுள்ளது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.
சோகத்தைச் சமாளித்தல்
டாக்டர் ஜான் பாக்ஷா புலம்பினார்: “உங்கள் அலுவலகத்தில் யாராவது பிரச்னைக்குட்படுவார்கள் என்று அறிந்து அவர்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதற்கு ஆலோசனை கொடுத்தும் அவர்களில் எவ்விதமான முன்னேற்றமும் காணப்படாதபோது—அல்லது, முடிவில் அவர்கள் மாரடைப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணும்போது, அதைவிட ஏமாற்றம் எதுவும் இல்லை.”
இந்த வருந்தத்தக்க நிலைமை டாக்டர் பாக்ஷாவைத் தன்னுடைய மருத்துவத் தொழிலில் ஒரு சரிப்படுத்துதலை ஏற்படுத்தி ஒரு நோய்த் தடுப்புத் திட்டத்தை விருத்திச் செய்ய உந்துவித்தது. வலியுறுத்தத்தில் அத்தகைய ஒரு மாற்றம் இன்னொரு டாக்டர் சொன்ன அவருடைய கனவின் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது.
“நான் ஒரு நதியின் பக்கம் நின்றுகொண்டிருந்தேன்,” அவர் சொன்னார், “ஒரு மனிதன் நீந்திவருவது போல் தெரிந்தது. அவன் மூழ்கிக்கொண்டிருந்தான். ஆகவே நான் நீரில் குதித்தேன், அவனிடம் நீந்திச் சென்றேன், கரைக்கு அவனை இழத்துச் சென்றேன், அவனுக்குச் செயற்கை சுவாசம் கொடுத்து அவனைக் காப்பாற்றினேன். அப்பொழுது இன்னொரு மனிதன் உதவிக்காக அழைத்துக் கொண்டிருந்தான். ஆகவே நான் அவனைக் காப்பாற்ற மறுபடியும் குதித்தேன். ஆனால் அநேக மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அப்பொழுது தோன்றினார்கள். சீக்கிரத்தில் கரையோரம் முழுவதும் நான் காப்பாற்றிய மக்களால் நிரம்பியிருந்தது. அந்தக் கனவு நினைவில் நின்றதற்குக் காரணம், நான் நினைவுக்குக் கொண்டு வருகிறேன், ‘நான் உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால் நதியின் மேல் பக்கம் சென்று இந்த ஆட்களையெல்லாம் யார் தள்ளுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.”
உண்மையில், புகைபிடித்தல், போத மருந்து துர்ப்பிரயோகம், சரியாக உணவு உட்கொள்ளாமை மற்றும் உடற்பயிற்சியை அசட்டை செய்தல் மூலமாக ஜனங்கள் தங்களைத் தாங்களே டாக்டருடைய கனவு “நதியில்” தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இது ஐக்கிய மாகாணங்களின் நோய்க் கட்டுப்பாடு மையங்களின் புள்ளி விவரங்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 65 வயதுக்குட்பட்டவர்களின் மரணங்களில் பாதிக்கும் மேலானவை ஆரோக்கியமற்ற வாழ்க்கைப் பாணிகளுக்கு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
இருப்பினும், அமெரிக்க மருத்துவங்கள் பெரும்பாலும் நோய்த்தடுப்புப் பாதுகாப்பைக் காட்டிலும் நோய்க்குச் சிகிச்சையளிப்பதிலேயே பிரதான அக்கறையுள்ளவையாக இருக்கின்றன. மற்ற அநேக தேசங்களைப் போலில்லாமல், ஐக்கிய மாகாணங்கள் சமீபகாலம் வரையாக நோய்த்தடுப்புத் திட்டங்களுக்குக் கவனம் செலுத்தவில்லை. இப்பொழுது ஐக்கிய மாகாணங்களின் மக்கள் தலைவராகிய ரோனால்டு ரீகன்கூட மற்றவர்களின் திட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறார்.
“ஜப்பானிய நிறுவனங்களின் உடல்நலத் தகுதித் திட்டங்களைப் பற்றி நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம்,” அவர் சொன்னார். “ஆரோக்கியமுள்ள வேலைத்திறன் அதிக உற்பத்தித் திறனை அர்த்தப்படுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில் அது வேலையாட்களின் உடல் நலத்திற்கான செலவுகளில் ஒரு சரிவையும் அர்த்தப்படுத்துகிறது.”
நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
குறிப்பிட்ட ஜப்பானிய நிறுவனங்கள் தங்களுடைய வேலையாட்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்களில் பெரும் முதலீடு செய்கின்றன. அவை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவத்தை அளிக்கின்றன. உதாரணமாக, நிஸ்ஸான் மோட்டார் கம்பெனி தன்னுடைய முக்கிய தொழிற்சாலைகளும் தலைமைக் காரியாலயமும் எளிதில் அணுகக்கூடிய முறையில் 461 கோடி டாலர்கள் மதிப்புள்ள பரந்த உடல்நலத் தகுதி மையம் ஒன்றைக் கட்டியிருக்கிறது. டோக்கியோ காஸ் தன்னுடைய புதிய தலைமைக் காரியாலயத்தின் 27-வது மாடி முழுவதையும் ஓர் உடல்நலத் தகுதி மையமாக ஆக்கியிருக்கிறது. அது ஓடுதடம் ஒன்றையும் கொண்டிருக்கிறது.
தனக்கென்று சொந்தமான உடல்நல தகுதி ஏற்பாடுகளைச் செய்யாத நாமுரா செக்யூரிட்டீஸ் என்ற பெரிய ஜப்பானிய பங்குத்தரகு நிறுவனம் தன்னுடைய வேலையாட்களுக்கு மிகச் சிறந்த உடல் நலம் பேணும் சங்கங்களுக்குச் சீட்டுகளைக் கொடுக்கிறது மற்றும் அவைகளை அதிக பட்ச அளவு உபயோகிக்க வற்புறுத்துகிறது. என்.இ.சி. என்றழைக்கப்படும் கணிப்பொறிகள் மற்றும் மின்னணுவியல் துறையின் மாபெரும் தொழிலகம் தன்னுடைய உற்பத்திவரிசைகளை நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் நிறுத்துவதன் மூலம் தன்னுடைய வேலையாட்கள் உடற்பயிற்சியில் பங்குகொள்ள வகைசெய்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க வியாபார நிறுவனங்கள் தங்களுடைய வேலையாட்களுக்கு, முக்கியமாக, நிர்வாகிகளுக்கும் மேல்மட்ட ஊழியர்களுக்கும் அதேபோன்ற ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. சரியான சத்துணவு சம்பந்தமான உதவியை முதன்மைப்படுத்திக் காட்டும் வகுப்புகள் மற்றும் வேலையாட்கள் புகைபிடித்தலை நிறுத்துவதற்குத் தேவையான உதவி ஆகியவற்றை அளிப்பதோடு, நியூ யார்க்கிலுள்ள ரை புரூக் என்ற இடத்திலுள்ள தன்னுடைய அழகிய, புதிய கழக தலைமைக் காரியாலயத்தில் ஜெனரல் ஃபூட்ஸ் கார்ப்பரேஷன் ஒரு நேர்த்தியான உடல் நலத்தகுதி மையத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. இந்த வசதி ஒரு ரப்பர் பந்தாட்ட மைதானம், பூப்பந்தாட்ட மைதானம், எடைப்பயிற்சி சாதனம், உடற்பயிற்சி மிதிவண்டிகள் மற்றும் மிதி இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. வெளியே அழகிய சுற்றுப்புறங்களின் மத்தியில் ஓர் ஓடுதடமும் இருக்கிறது. மேற்பார்வை அதிகாரிகளும் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களும் அங்கத்தினர்களின் முன்னேற்றத்தை ஒழுங்காகக் கண்காணிக்கிறார்கள்.
1979-ல் பெப்சிகோ, நியூ யார்க்கிலுள்ள பர்ச்சேஸ் என்ற இடத்திலுள்ள தன்னுடைய கழக தலைமைக் காரியாலயத்தில் ஓர் உடல் நலத் திட்டத்தை ஆரம்பித்தது. அன்றிலிருந்து இந்தத் திட்டம் மற்ற இடங்களில் உள்ள அதனுடைய சுமார் பன்னிரண்டு நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. “முழுமையான வாழ்க்கைக் கொள்கை” என்று அறியப்படுகிற இதே மாதிரியான திட்டத்தை AT & T கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத் திட்டங்கள் உடற்பயிற்சியைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல் உணவு-எடை கட்டுப்பாடு, சத்துணவு பற்றிய ஆலோசனை மற்றும் இளைப்பாறு முறைகள் ஆகியவற்றையும் தன்னில் கொண்டிருக்கின்றன.
நிறுவன வேலையாட்களுக்குப் பல உடல்நல சம்பந்தப்பட்ட பேச்சுப் பொருள்களின் பேரில் விரிவுரையாற்ற பல்வேறு உடல் நலத்துறைகளிலிருந்து நிபுணர்கள் அழைக்கப்படுவதாக பெப்சிகோவின் திட்டத்தின் இயக்குநரான டாக்டர் டென்னிஸ் L. கோலாசீனோ குறிப்பிட்டார். நிறுவனத்தின் உணவு விடுதியில் பல்வேறு உணவுப் பொருட்களின் கலோரி அட்டவணையைக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான உணவு அருந்துமுறை முன்னேற்றுவிக்கப்படுகிறது. “நாங்கள் பச்சடி உணவகம் ஒன்றையும் பழவகை உணவகம் ஒன்றையும் கொண்டிருக்கிறோம். நாங்கள் விருப்பத்திற்கேற்ற தெரிவு செய்வதைக் கூடிய காரியமாக்குகிறோம்.” இருப்பினும் அவர் வலியுறுத்தியதாவது: “நாங்கள் உடற்பயிற்சியை எங்களுடைய நடவடிக்கைகளின் மையமாகவும் உந்துவிக்கும் சக்தியாகவும் உபயோகிக்கிறோம்.”
அநேக மற்ற நிறுவனங்களும் இதையே செய்கின்றன. ஐக்கிய மாகாணங்களின் எண்ணெய் மற்றும் வாயு நிறுவனம் சமீப மூன்றாண்டு காலத்தில் தன்னுடைய மையங்களில் பதினேழில் உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறது. சில குறிப்பிட்ட சிறிய நிறுவனங்களும் கூட தங்களுடைய வேலையாட்களுக்கு அத்தகைய வசதிகளுக்கு இடமளித்திருக்கின்றன.
உதாரணமாக, ஐந்து வேலையாட்களைக் கொண்ட ஒரு வியாபார நிறுவனத்தின் உரிமையாளரான சீக்ஹவிரைடு டங்கர் தன்னுடைய தொழிற்சாலைக்குப் பக்கத்தில் ஓர் ஓர்ங்கிணைந்த டென்னிஸ்-கைப்பந்து மைதானத்தைக் கட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை நேரம் முடிந்தபின் வேலையாட்கள் கைப்பந்து விளையாடியிருக்கிறார்கள். “நாங்கள் செய்யும் வேலை சில சமயங்களில் சலிப்பூட்டுவதாக இருக்கக்கூடும்,” என்று டங்கர் விளக்கினார். “வெளியே சென்று சற்று சுற்றித்திரிவது நல்லது—ஒவ்வொருவரும் அதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.”
மறுபட்சத்தில், சிறிய நிறுவனங்களுக்கு உண்மையிலேயே போதுமான உடல்நலத் தகுதி மையங்களைக் கொண்டிருப்பது அதிகச் செலவாவதால் அநேக நிறுவனங்கள் அருகிலுள்ள உடற்பயிற்சி நிலையங்கள் அல்லது உடல்நலச் சங்கங்களை உபயோகிக்க தங்கள் வேலையாட்களுக்கு முழு செலவையோ அல்லது பகுதி செலவையோ அளிக்கின்றன. பெரிய நகரங்களில் அத்தகைய உடல்நல தகுதி மையங்கள் அந்தப் பகுதியிலுள்ள அநேக நிறுவனங்களின் வேலையாட்களின் தேவையைப் பூர்த்தி செய்ய சமீப காலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கையை முன்னேற்றுவிக்கும் டாக்டர் ஜெரோம் சுக்கர்மன் என்பவரின் பிரகாரம், “அடுத்த பத்து முதல் 15 ஆண்டுகளில், நாட்டின் 50 பெரிய நகரங்களில் நிறுவனங்களின் உடல்நலத் தகுதியின் எதிர்காலம், பல நிறுவனங்கள் உபயோகிக்கும் பொதுவான உடல்நல மையத்தில் இருக்கிறது.
உடற்பயிற்சி உண்மையில் அவ்வளவு மதிப்புள்ளதா?
ஆனால், சிலர், உடற்பயிற்சி நோயைத் தவிர்த்து ஒரு வேலையாளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் என்பதை சந்தேகிக்கிறார்கள். இருப்பினும், அது உண்மை என்பதற்கான அத்தாட்சி தொடர்ந்து அதிகரிக்கிறது. கூடுதல் எடைக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லுநரான டாக்டர் பீட்டர் லிண்ட்னர் என்பவர் குறிப்பிடுவதாவது: “உடற்பயிற்சி என்டோர்ஃபின்கள் (endorphins) என்ற மூளையின் இயற்கை இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அவை மனச்சோர்வை அகற்றி நல்ல உடல்நல உணர்வை உண்டுபண்ணுகின்றன.”
ஆனால் உடற்பயிற்சி வெறுமென ஒருவரை மேம்பட்ட உணர்வைக் கொண்டவராக ஆக்குவதோடு உண்மையில் ஒருவரை அதிக ஆரோக்கியமுள்ளவராக்குவதால் அதிக பலன்தரக்கூடியவராக்குகிறது. இது ஒருவருடைய வாழ்நாளைக்கூட அதிகரிக்கக்கூடும். நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் முதல்பக்கத்தில், “மிதமான உடற்பயிற்சி ஒரு நபரின் வாழ்க்கைக்கு ஆண்டுகளைக் கூட்டக்கூடும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது” என்ற தலைப்பின் கீழ் 1966-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான சிறப்புக் கட்டுரை ஒன்று சொன்னதாவது:
“நடத்தல், படியேறுதல் மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றில் பங்குகொண்டு வாரத்திற்கு 2,000 கலோரிகள் உபயோகப்படுத்தினவர்களில் மரண விகிதம் ஆராய்ச்சியில் உட்படுத்தப்பட்டவர்களில் [சுமார் 17,000 ஹாவோர்டு பல்கலைக் கழகத்தின் முன்னாளைய மாணவர்கள்] மிகவும் குறைவாக சுறுசுறுப்பாயிருந்தவர்களைக் காட்டிலும் கால்பங்கிலிருந்து மூன்றிலொரு பங்குவரை குறைவாக இருந்தது.” மற்றும், குறிப்பிடும் வகையில், உயர்வான இரத்த அழுத்தமுள்ள சுறுசுறுப்பான மனிதர்களின் மரண அபாயம் அதிக இரத்த அழுத்தமுள்ள செயலற்ற மனிதர்களுக்கு நிகழ்வதில் அரைபங்குக்கும் குறைவாக இருந்தது.
ஆராய்ச்சியின் இயக்குநரான டாக்டர் ரால்ஃப் S. பாஃபன்பர்கர், ஜுனியர், குறிப்பிட்டார்: “ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லும் அநேக சந்தேகப்படுவோர் இருக்கிறார்கள்.” இருப்பினும் அவர் வலியுறுத்தினார்: “நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள், அதனால் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்.”
உடல் நலத்தகுதித் திட்டங்கள் வெற்றிகரமாக இயங்கிவரும் நிறுவனங்களில்கூட இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தங்கள் திட்டத்தைப் பற்றி பசிஃபிக் காஸ் அண்டு எலெக்ட்ரிக் என்பதன் தனிநபர் நிர்வாகி குறிப்பிட்டதாவது: “நாங்கள் இதைப் பேராபத்துக்கு எதிரான காப்பீட்டுக்கொள்கை என்று எண்ணுகிறோம்.” மேலும் அவர் சொன்னது: “எங்கள் கருத்தின்படி, அதற்கான செலவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் அது பலனளித்திருக்கிறது.” பெப்சிகோவின் ஒரு பிரிவான பெப்சிகோலாவின் முன்னாள் தலைவர் ஜான் ஸ்கல்லி இவ்வாறு சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறார்: “உடல்நலத் தகுதிதான் முதலீடுக்கு மிகச் சிறந்த பலனைக் கொண்டுவரும் இலாகா.”
எக்சான் என்ற பெரிய எண்ணெய் நிறுவனத்தில் நிர்வாகிகளுக்கான ஆய்வு ஒன்று உடல் நலத்தகுதித் திட்டத்தின் நன்மையை உறுதி செய்தது. பங்கு பெற்றவர்களில் நான்கில் மூன்று பகுதியினர் நல்ல உடல் நல மேம்பாட்டின் உணர்வை அனுபவித்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது, 29 விழுக்காடு ஆட்கள் எடை இழந்தனர், மற்றும் புகைபிடிப்போரில் 27 விழுக்காடு ஆட்கள் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டனர். அதேபோல, ஒழுங்காக உடற்பயிற்சி செய்பவர்களுக்கான உடல்நலக் காப்பு செலவுகள் உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கானதைக் காட்டிலும் ஆண்டொன்றுக்கு 115 டாலர்கள் குறைவாக இருக்கிறது என்று கன்ட்ரோல் டாட்டா கார்ப்பரேஷன் உறுதி செய்திருக்கிறது.
உடல்நல அல்லது உடல்நல தகுதித் திட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் ஒவ்வொரு பங்குபெறும் வேலையாளுக்கும் ஆண்டொன்றுக்கு உடல்நல செலவுகளில் 233 டாலர்கள் மிச்சப்படுத்தும் என்று 1982-ல் டோக்கியோவில் உள்ள டொரோன்ட்டோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியது. உடல்நலத் தகுதித் திட்டங்களை அளிக்கிற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 1061 டாலர்கள் தங்களுடைய வேலையாட்களில் உடல்நலக்காப்புக்குச் செலவு செய்தது, ஆனால் அவைகளைக் கொண்டிராத நிறுவனங்கள் 1456 டாலர்களைச் செலவழித்தது என்று 1983-ல் ஹெல்த் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் செய்த ஆய்வு காட்டியது. அது 37 விழுக்காடு மிச்சமாகும், அல்லது ஒரு வேலையாளுக்கு 395 டாலர்கள் மிச்சம்!
பங்குகொள்ளுதலை முன்னேற்றுவித்தல்
உடல்நல மற்றும் உடல்நலத் தகுதிக்கானத் திட்டங்களின் நன்மைகளை உணர்ந்தவர்களாக அநேக வியாபார நிறுவனங்கள் தங்களுடைய வேலையாட்களின் அதிகமானோரை அவற்றில் ஈடுபடுத்த முயற்சி செய்கின்றன. ஆனால் இது அடிக்கடி எளிதாக இருப்பதில்லை. புகைபிடித்தல், மிஞ்சிய குடிபோதை, ஒழுங்காக உணவு உண்ணாமை, போத மருந்துகள் துர்ப்பிரயோகம் செய்தல் மற்றும் உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை மூலமாக தங்களுடைய வாழ்க்கையைத் தாங்கள் ஆபத்துக்குள்ளாக்குவதை மக்கள் உணர்ந்தாலும், சிலரை, அவர்களுடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைப் போக்கிலிருந்து மாற்றுவது கடினமாயிருக்கிறது.
அடிக்கடி ஒரு நிறுவனத்தின் வேலையாட்களில் 30 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே அதனுடைய உடல் நலத்தகுதிக்கான திட்டத்தை அனுகூலப்படுத்திக் கொள்கிறார்கள். ஆகவே அதிகமான வேலையாட்களை உட்படுத்துவதற்குப் பணம் சம்பந்தமான ஈவுகள் உட்பட பல்வேறு தூண்டுதல்களைச் சில நிறுவனங்கள் அளிக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் மருத்துவமனை சங்கம் ஒவ்வொரு மைல் (1.6 கி.மீ.) ஓட்டம் அல்லது நடை மற்றும் ஒவ்வொரு கால் மைல் நீச்சல் அல்லது நான்கு மைல் சைக்கிள் பயணம் ஆகியவற்றில் பங்கெடுப்பவர்களுக்கு 24 சென்ட்டுகள் (அமெரிக்க நாணயம்) அளிக்கின்றது.
புகைபிடித்தலைத் தடுப்பதற்கு, ஸ்பீட்கால் கார்ப்பரேஷன், வேலையாட்களுக்கு வாரம் ஒன்றிற்கு 7 டாலர்களை வேலை செய்கையில் புகைபிடிக்காமல் இருந்தமைக்காக அளிக்கிறது. குறிப்பிடும் வகையில், நான்கு வருடங்களின் முடிவில், புகைபிடிப்போரின் எண்ணிக்கை 65 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. மற்றும் புகைபிடித்தலை விலக்கிவிட்டவர்களின் காப்பீடு உரிமைத் தொக தாக்கல்களின் எண்ணிக்கை 50 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் உடல்நலத் தகுதிக்கான திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானது அதனுடைய உயர் நிர்வாகத்தின் ஆதரவுதான். மேற்பார்வை செய்யும் பதவியில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்தால் மற்றவர்கள் அப்படிச் செய்வது அதிக சாத்தியமுள்ளது. உடற்பயிற்சியில் செலவிடும் நேரத்தைக் குறித்து அதிருப்தி கொள்ள வேண்டாம் என்று டாக்டர் லிண்ட்னர் மக்களை வற்புறுத்துகிறார். அவர் சொல்வதாவது: “உண்மையில், அதிக நேரம் உங்கள் வசம் இருக்கும். ஏனென்றால் உடற்பயிற்சி உங்களுக்கு அதிகளவான சக்தியைக் கொடுப்பதால் நீங்கள் குறைந்த கால அளவில் அதிக வேலையைச் செய்துமுடிப்பீர்கள்.”
நீங்கள் என்ன செய்யக்கூடும்
நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உடல்நலத் தகுதிக்கான திட்டத்தைக் கொண்டிருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும், உற்பயிற்சியை ஆரம்பிக்க நீங்கள் உந்தப்படலாம். இருப்பினும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை இதுவரை சிலகாலமாக நீங்கள் உடற்பயிற்சி செய்யாதிருப்பீர்களேயானால் மெதுவாக செயல்படுங்கள். ஒரே சமயத்தில் அதிகமாக செய்வதானது நன்மையைக் காட்டிலும் அதிக தீமையை செய்யக்கூடும்.
மேலும், ஒரு வாரத்தினூடே உடற்பயிற்சி செய்யாமல் அந்த வாரத்தின் இறுதி நாட்களில் மும்முரமாக உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்று நீங்கள் நினைப்பதும்கூட உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும். டாக்டர் லாரன்ஸ் பவர் குறிப்பிட்டதாவது: “அநேகர் வாரயிறுதி ஓய்வு நாட்களில் மரணமடைகிறார்கள். திடீர் மரணங்களில் 26 விழுக்காடு திங்கட் கிழமைகளிலும் 25 விழுக்காடு சனிக்கிழமைகளிலும் சம்பவிக்கின்றன என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. வாரத்தில் நிகழும் மரணங்களில் அந்த இரண்டு நாட்களில் நிகழ்வது பாதியளவானது.”
உண்மையான உடல் நலத்திற்கு உடற்பயிற்சி ஒழுங்காக அனுசரிக்கப்பட வேண்டும். ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கு அதிகமான தடவைகளில் ஒவ்வொரு தடவையும் 20 முதல் 30 நிமிட நேரம் அல்லது அதற்குமேல் இருப்பது நல்லது. நடப்பதை ஒழுங்கான பழக்கமாக்கிக்கொள்ளுவது ஆரம்பிப்பதற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. மருத்துவர் ஒருவர் விவரித்ததாவது: “மும்முரமாக நடத்தல் இளமை முதற்கொண்டு பழக்கப்படுத்திக் கொள்ளப்படுமேயானால் அதுவே சக்தியற்ற முடமாதலையும் மற்றும் தமனி அடைப்பினால் உண்டாகும் இருதய நோயினால் சம்பவிக்கும் அகால மரணங்களையும் தீவிரமாக குறைத்துவிடும்.”
வேலையாட்களின் நல்ல உடல்நலம் வியாபார நிறுவனங்களுக்கு நன்மைபயப்பதாக இருப்பதால் அதனுடைய அங்கத்தினர்களின் நல்ல உடல் ஆரோக்கியம் நிச்சயமாகக் குடும்பத்திற்கு நல்லதாக இருக்கிறது. ஆகவே, குடும்பத் தலைவர்களாக ஏன் சில வகையான உடற்பயிற்சியை ஒழுங்காக செய்வதை உற்சாகப்படுத்தக்கூடாது? ஒருவேளை நீங்களோ உங்களுடைய மனைவியோ அல்லது உங்களுடைய பிள்ளைகளோ தொலைக்காட்சியிலோ அல்லது மற்ற சரீர சம்பந்தமற்ற நடவடிக்கையிலோ அதிக மணிநேரங்களைச் செலவிட்டுக் கொண்டிருந்தால் இது அதிக முக்கியமானது. ஒழுங்கான உடற்பயிற்சி முழுகுடும்பத்திற்கும் நல்லது. (g87 2/22)
[பக்கம் 23-ன் படங்கள்]
ஜப்பானிய நிறுவனங்கள் இதுபோன்ற வசதிகளைத் தன்னுடைய வேலையாட்களுக்கு அளிக்கின்றன
[பக்கம் 24-ன் படம்]
ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது குடும்பத்திற்கும் நல்லது