புற்றுநோய்—நீங்கள் எப்படி ஆதரவாக இருக்கலாம்?
“எந்த ஒரு மருத்துவப் பணியானாலும், மருத்துவர் நோயாளியின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் உணர்வை வெளிப்படுத்துவதும், தன்னுடைய நோயை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு அவனுக்கு அல்லது அவளுக்கு உதவி செய்வதும் மிகவும் அத்தியாவசியமான காரியமாக இருக்கிறது.”—ஹாலிஸ்டிக் மருத்துவம்.
புற்றுநோய் நோயாளிகளைக் கவனிப்பது ஒரு பெரிய சவால், விசேஷமாக அந்த நோயாளிகளுடன் நேரடியான தொடர்பையுடைய மருத்துவப் பணியாளருக்கு அப்படி இருக்கிறது. அவர்கள் இரண்டு கடினமான காரியங்களுக்கு இடையில் சிக்கியிருக்கின்றனர். நோயாளிகளுடைய இடத்தில் தங்களை வைத்துப் பார்க்கும் தன்மையும் நம்பிக்கையான உணர்வை அவர்களிடம் வெளிப்படுத்துவதும். அதே சமயத்தில் உணர்ச்சி பொங்கிய அணுகுமுறையை தவிர்ப்பதுமாகும். இது சிகிச்சையில் எதை அர்த்தப்படுத்துகிறது?
புற்றுநோய் நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் ஒவ்வொரு நோயாளியோடும் சேர்ந்து கஷ்டப்படுவதற்குத் தங்களை அனுமதிக்கக்கூடாது. இல்லாவிடில், அவர்கள் உணர்ச்சி வேகத்திற்குப் பலியாகிவிடுவார்கள். இந்த அம்சத்தைக் குறித்து முன்னாள் மருத்துவ மருந்தாக்கக் கலைஞரிடம் விழித்தெழு! விசாரித்தது. அவர் சொன்னார்: “நான் மருத்துவமனையிலிருந்த எல்லா விதமான மருத்துவர்களுடனும் நிபுணர்களுடனும் பழகவேண்டியதாயிருந்தது. அதிக சோர்வுற்றவர்களாக, விசனமுள்ளவர்களாகக் காணப்பட்டவர்கள் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள்.”
அதே சமயத்தில், மருத்துவ பணியாளர்கள் உணர்ச்சியற்றவர்களாகவும் விலகியிருப்பவர்களாகவும் இருக்க முடியாது, ஏனென்றால் நோயாளி அவர்களை நம்பிக்கையோடு நோக்குகிறார். புற்றுநோயில் புதிய நம்பிக்கை என்ற புத்தகத்தில் மாரிஸ் பிங்கல் எழுதியதுபோல்: “எல்லாவற்றிற்கும் மேலாகப் புற்றுநோய் நோயாளிக்குத் தேவை நம்பிக்கை. தன்னுடைய வியாதியோடு போராடுவதற்கு—தன் போராட்டம் தோல்வியுற்றாலும்—தேவையான பலத்தைக் கொடுக்கும் நம்பிக்கை. . . . போராட்டத்தைக் கைவிடுபவர்களே எப்பொழுதும் மரிக்கின்றனர், போராடுபவரோ உயிர்பிழைத்திருக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்.”
மருத்துவரின் பங்கு கஷ்டமான ஒன்று, கயிற்றில் நடப்பது போன்றது. அந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு நோயாளிக்கு நோயைப் பற்றி எவ்வளவு சொல்ல வேண்டும் என்பதை மருத்துவர் நிதானிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சொல்லிவிடுவாரானால் நோயாளி தோல்வியின் பாதையில் திரும்பிவிடுவாரா? இந்த அம்சங்கள் தேசங்களின் கலாச்சாரங்களுக்கேற்ப மாறுபடும்.
புற்றுநோயினால் தன் மனைவியின் பெற்றோரை அண்மையில் இழந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோமோயோஷி ஹிரானோவை விழித்தெழு! பேட்டி கண்டது. அவர் பின்வருமாறு விவரித்தார்: “வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய உண்மைகளைச் சொல்லக்கூடாது என்பது ஜப்பானிய கலாச்சாரம். என்னுடைய மாமனாருக்கு புற்றுநோய் இருக்கிறது என்று மருத்துவர் அவரிடம் சொல்ல மாட்டார். உண்மை என்னவெனில், அவர் மகளுக்குங்கூட சொல்லமாட்டார். கடினமான அந்த விஷயத்தை அவர் என்னிடம் மட்டுமே, ஒரு ‘வெளியாளிடமே’ சொல்ல மனமுள்ளவராயிருந்தார். என்னுடைய மனைவிக்கும் அல்லது அவளுடைய தகப்பனுக்கும் சொல்லாமலேயே எல்லா தீர்மானங்களையும் நானே செய்ய வேண்டியதாயிருந்தது. என்றபோதிலும் ஒரு கிறிஸ்தவனாக நான் உண்மையை சாதுரியமாகவும் அதே சமயத்தில் உண்மைகளை மறைக்காமலும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருந்தது என்று உணர்ந்தேன்.”
மறுபட்சத்தில், மேற்கத்திய கலாச்சாரத்தின் கீழ் மருத்துவர் நிலைமையைப் தேவைப்பட்டளவுக்குத் தெளிவுபடுத்தவில்லையென்றால், போதுமான தெளிவு இல்லாததனால் நோயாளி எடுத்த தீர்மானத்திற்கு மருத்துவர் குற்றஞ்சாட்டப்படுவாரா? உண்மையில், இது நோயாளி என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார், எப்பொழுது தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்பதைப் பொருத்தது. டாக்டர் சார்ல்ஸ் F. மக்கான் கூறுவதாவது: “மக்கள் கடினமான கேள்விகளைக் கேட்க முடிகிறதென்றால், குறைந்தபட்சம் அவர்களுக்குத் தேவைப்படுவது அவர்களுடைய மருத்துவர் நியாயமான பதில்களைச் சொல்ல மனமுள்ளவராகவும் திறமையுள்ளவராகவும் இருப்பதே.”—புற்றுநோயைப் பற்றிய உண்மைகள்
எனவே, மருத்துவப் பணியாளர்கள் தங்களுடைய நோயாளிகளிடம் உண்மையிலேயே தயவுடன் நடந்துகொள்வது உற்சாகமளிப்பதாயிருக்கிறது. நீங்கள் நல்லதோர் தொடர்பைக் கொண்டிருக்க முடிந்த மருத்துவரை உடையவர்களாயிருப்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. டாக்டர் மக்கான் தொடர்ந்து கூறுகிறார்: “நீங்கள் உண்மையின் நம்பிக்கை கொண்ட ஒரு மருத்துவர், எல்லாக் காரியத்தையும் சகித்துக்கொள்ள உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் மருத்துவர் தயவுள்ளவராகவும், புரிந்துகொள்பவராகவும், நோயாளியாகிய உங்களில் அக்கறையுள்ளவராகவும் இருக்க வேண்டும்.”
மருத்துவப் பணியாளர்கள் அனைவருமே நோயாளியின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் உணர்வுள்ளவர்களாக இல்லை என்பதைப் புற்றுநோயாளியைக் கவனிக்கும் ஒரு செவிலியர் கூறுகிறாள்: “எனக்கு ஆச்சரியமாயிருக்கும் காரியம் புற்றுநோயிலிருந்து குணம் பெறும் நோயாளிகளும் மற்றும் அவர்களுடைய குடும்பங்களும் அல்ல, ஆனால் உடல் நலம் காக்கும் நிபுணர்களும் வசதிகளுமே; இவர்களுடைய இயக்கமும் அமைப்பும் நோயாளிகளின் இக்கட்டான நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய வழிமுறைகளும் ஆதரவும் கிடைக்கபெறச் செய்யாததால், அவர்களை வெறுப்படையவும் சோர்வடையவும் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.“ “உணர்வுள்ளவர்களாயிருத்தல், தயவாக நடந்துகொள்ளுதல், சிரிப்பு மற்றும் மனிதரைக் கவனிக்கும் தன்மை ஆகியவையுங்கூட புற்றுநோய்க்கு எதிரான நம்முடைய போருக்கு ‘ஆயுதங்களாக’ இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்,” என்று தன்னுடைய கடிதத்தை முடிக்கிறாள்.
நோயாளிகளுக்கு ஆதரவாக அல்லது உதவியாக இருப்பதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுங்கூட முக்கியமான பாகத்தை வகிக்கின்றனர். இது விசேஷமாக நோயாளியின் கணவன், மனைவி அல்லது பிள்ளைகளின் விஷயத்தில் அதிக உண்மையாக இருக்கிறது. மற்றவர்கள் எப்படிப்பட்ட ஆதரவை அளிக்கலாம் என்பதை எடுத்துக்காட்ட சில புற்றுநோய் நோயாளிகளையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களையும் விழித்தெழு! பேட்டி கண்டது.
“என்னுடைய முதன்மையான காரியங்களை நான் மாற்ற வேண்டியிருந்தது”
ஆதரவாக இருக்கும் ஒரு குடும்பம் வகிக்கும் முக்கியமான பாகம் டெரியின் விஷயத்தில் விளக்கிக் காட்டப்படுகிறது. அவளுக்கு வயது 28. 1982-ம் ஆண்டின் கடைசி நாளன்று அவளுக்குக் குணப்படுத்த முடியாத “கடுமையான” புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவள் 6 முதல் 12 மாதங்கள் உயிருடனிருப்பாள் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அந்த நிலைமையை அவளும் அவளுடைய கணவர் பால் என்பவரும் எப்படிக் கையாண்டனர்?
பால் விழித்தெழு!-விடம் பின்வருமாறு விளக்கினார்: “நான் உண்மையான நிலையை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அவள் உயிரோடிருக்கப்போகும் மாதங்கள் சில, அவளுடைய பிரிவு ஆகமட்டும் மதிப்புடையதாயிருக்க விரும்பினேன். அவளுக்குக் கொடுக்கப்பட்ட கெமோதெரப்பி சிகிச்சை, தலைமுடி கொட்டுவதையும் அடிக்கடி வாந்தியையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு கஷ்டமான சிகிச்சை.”
விழித்தெழு!: ஒரு கணவராக உங்களுடைய வாழ்க்கையை இது எப்படிப் பாதித்தது?
“என்னுடைய வாழ்க்கையில் முதன்மையாகக் கொண்டிருந்த காரியங்களை மாற்றவேண்டியதை இது உட்படுத்தியது. உடைமைகளும் பணமும் குறைந்த முக்கியத்துவமுடைய இடத்தைப் பெற்றன. அவளைக் கவனிப்பதற்காக நான் ஒரு முழு-நேர செவிலியராக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவள் யாவரறிய நோய்ப்பட்டிருக்கும்போது, அல்லது அவளுக்கு இழுப்பு ஏற்படும்போது நான் பொறுமையாக இருக்கவும் சங்கடப்படுவதை உதறித்தள்ளவும் கற்றுக்கொண்டேன். அவளும் உண்மை நிலை உணர்ந்தவளாகவும், அதே சமயத்தில், சுய இரக்கத்தை வெளிப்படுத்தாதவளாகவும் இருந்தாள். அது என்னுடைய பாகத்தை இலகுவாக்கியது.”
விழித்தெழு!: புற்றுநோய் நோயாளிகளின் உறவினருக்கும் நண்பருக்கும் நீங்கள் என்ன கூடுதலான ஆலோசனை கொடுக்க விரும்புகிறீர்கள்?
“உங்களுடைய பிரியத்திற்குரியவருக்கு நீங்கள் ஒரு பாரமாயிருக்கிறீர்கள் என்று அவர்கள் நினைக்க இடங்கொடாதீர்கள். உங்களை அவர்களுடைய இடத்தில் வைத்துப் பாருங்கள். அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள், அப்பொழுது அவர்களிடம் என்ன பேசவேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என்பதை அறிந்துகொள்வீர்கள். சில சமயங்களில் அவர்கள் தங்கள் பாரத்தை இறக்கிவைக்க விரும்புவார்கள், சில சமயத்தில் அவற்றைக் கடைசியாக சொல்ல விரும்புவார்கள்.”
விழித்தெழு!: அந்தச் சோதனையானக் கட்டத்தை சகிப்பதற்கு டெரிக்கு எது உதவி செய்தது?
“எங்களுடைய உடன் சாட்சிகள் எங்களுக்கு உணவு தயாரித்து கொண்டுவருவதன் மூலம் அவர்களுடைய சந்திப்புகளில் அதிக ஆதரவாக இருந்தார்கள். இன்னும் அதிக நிலையான ஒரு காரியம், அவளுடைய பைபிள் படிப்பு உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் பேரிலும் பூமியில் மரணமும் நோயும் இல்லாத ஒரு காலத்தின் பேரிலும் அவளுக்கு ஒரு தெளிவான காட்சியைக் கொடுத்தது.”
மருத்துவர்கள் சொன்னதுபோலவே அந்த ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பே அக்டோபர் 1983-ல் டெரியின் உயிர் பிரிந்தது.
வாழ்க்கையின் தரமும் இலக்குகளும்
மரணத்திற்கு வழிநடத்தும் ஒரு கொடுமையான நோயால் ஒருவர் பாதிக்கப்படும்போது, எழுப்பப்படும் கேள்வி, நான் இன்னும் எவ்வளவு காலம் உயிர்வாழ்வேன்? வாரங்களா? மாதங்களா? வருடங்களா? இந்த நிலையில் வாழ்க்கையின் தரம் மிக முக்கியமானது. சாதனைகள், சிறியவையாயிருந்தாலும், கடிதங்கள் எழுதுவது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கதாகவும் வாழ்க்கையைச் சிறப்பிப்பதாகவும் இருக்கிறது. இவை ஓரளவுக்குச் செய்யப்படலாம். ஒரு சிகிச்சை முறையாகவும் அமைகிறது.
இந்தக் கருத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த 46 வயது பார்பரா ஆதரிக்கிறாள். அவளுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக 1980-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமுதல் அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவிவிட்டது. என்றபோதிலும் கெமோதெரப்பி மற்றும் ரேடியேஷன் தெரப்பி என்றழைக்கப்படும் சிகிச்சை முறைகள் உதவிசெய்தன. அவள் எப்படி வாழ்கிறாள்? “குறுகிய கால இலக்குகளைக் கொண்டிருப்பது எனக்குப் பயனுள்ளதாயிருக்கிறது. அண்மையில் சாதிக்க முடிந்த இலக்குகளை நான் திட்டமிடுகிறேன். அப்பொழுது நான் ஓரளவுக்கு மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருக்க முடிவதைக் காண்கிறேன்.
“மற்றவர்களை நினைத்துப் பார்ப்பதும் அவர்கள் பேரில் அக்கறையாயிருப்பதும் நிச்சயமாகவே எனக்கு உதவியாயிருக்கிறது. உடல்நலம் குன்றியவர்களை உற்சாகப்படுத்துவதற்காக கார்டுகளை அனுப்புவதில் என்னைச் சுறுசுறுப்பாய் ஈடுபடுத்திக் கொள்கிறேன். மற்றவர்களுக்குக் கடிதங்கள் எழுதுவதிலும் இன்பம் கொள்கிறேன்.”
அவளுடைய கணவர், ஸ்டீபன், எப்படி அவளுக்கு ஆதரவாயிருக்கிறார்? “பார்பராவின் நிலையைக் குறித்து அவள்பேரில் ஆழ்ந்த உண்மையான அக்கறை காண்பிப்பது அவளுக்கு உதவியாக இருக்கிறது. எல்லாக் காரியத்தையும் நாங்கள் ஒன்றுசேர்ந்து கையாளுகிறோம். உதாரணமாக, நாங்கள் இருவருமே வாசிப்பதில் மகிழ்ச்சி காண்கிறவர்கள், என்றாலும் ஒருவருக்கொருவர் சப்தமாக வாசித்துக் காண்பிப்பதன் மூலம் வாசிப்பின் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறோம்.”
ஒரு மாரடைப்பு, பின்பு புற்றுநோய்
டோட்ஸின் கணவர் சார்ல்ஸ், 60-களில் இருப்பவர். 1985-ல் மாரடைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒன்பது நாட்கள் இருந்துவிட்டு, ஆறு வாரங்களில் வேலைக்குச் செல்லுமளவுக்குத் தீர்மானமான மனநிலையுடன் வெளிவந்தார். பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் மாதம், உணவருந்தும்போது கட்டுப்படுத்த முடியாத விக்கல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு அவருக்குப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு வாரத்தில் வேலைக்குச் சென்றார்!
இந்தக் கடினமான மாதங்களினூடே டோட் எப்படி தன் கணவருக்கு ஆதரவாயிருந்தாள்? அவள் பின்வருமாறு பதிலளிக்கிறாள்: “எதிர்மறையான காரியங்களுக்காக எங்கள் நேரத்தையும் நரம்பு சக்தியையும் வீணாக்குவதில்லை. நோயின் பேரில் விவாதிப்பதற்கு அல்லது எடுக்க வேண்டிய நடவடிக்கையின்பேரில் தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் நோய் சம்பந்தப்பட்ட எல்லா உண்மைகளுக்காகவும் காத்திருந்தோம்.
“சிகிச்சை சம்பந்தமாக மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் சிபாரிசு செய்த காரியங்களை ஏற்று, முழு நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தோம். எங்களுடைய சம்பாஷணை நம்பிக்கையான மனநிலையை வெளிப்படுத்துவதாயிருந்தது, குணமடைவதைக் குறித்தே யோசித்தோம். என் கணவருக்கு சண்டையிடும் தன்மை இருந்தது, அவருக்கு உதவி செய்வதில் நான் தீர்மானமாயிருந்தேன்.”
விழித்தெழு!: அவரை நம்பிக்கையான மனநிலையில் வைப்பதற்கு நீங்கள் வேறு என்ன செய்தீர்கள்?
டோட்: அவர் மருத்துவமனையிலிருந்தபோது, மற்றவர்கள் அவரை நலம் விசாரிக்க வரும் காரியத்தை நான் வரவேற்கவில்லை. அவர்களுடைய சந்திப்புகளை மட்டுப்படுத்தினேன். பார்க்க வருபவர்கள் முன்னேற்பாட்டுடன்தான் வரவேண்டும். சந்திப்புகள் சுருக்கமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். இப்படியாக, அவருக்கு சோர்வை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன் கூடிய விஜயங்களைக் கட்டுப்படுத்தினேன். உண்மையில், சந்திப்புகளைவிட அவருக்கு வந்த நூற்றுக்கணக்கான நலம் வாழ்த்துச் செய்திகள் மேலானதாயிருந்தன.”
விழித்தெழு!: நீங்கள் பதிவுபெற்ற ஒரு செவிலியர் என்பது எங்களுக்குத் தெரியும். அநேக மருத்துவர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறீர்கள். ஆனால், இப்பொழுது, ஒரு நோயாளியின் மனைவியாக, மருத்துவர்கள் எப்படி ஆதரவாக இருக்கலாம் என்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
டோட்: மருத்துவர் எங்களுடைய விஷயத்தில் நடந்துகொண்டதுபோல, அவர் நோயாளிகளுக்கு நம்பிக்கையான மனநிலையைக் கொடுக்கும் விதத்தில் தொடர்ந்து நடந்துகொள்ள வேண்டும். நோயாளிக்கு தெரியவேண்டிய காரியங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும், அது நோயாளியின் கேள்விகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் என்னிடம் ஒளிவுமறைவின்றி பேச விரும்பினேன் என்பது உண்மைதான். ஆனால், என்னுடைய கணவனின் விஷயத்தில், அவரில் மனச்சோர்வின் விதையை அல்ல, நம்பிக்கையின் விதையை விதைக்கவே விரும்பினேன். தான் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நோயாளி வற்புறுத்தினால்தவிர, அவர் இவ்வளவு மாதங்கள்தான் உயிரோடிருப்பார் என்று அவரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவை நோயாளியின் உடல்நிலை மற்றும் உறுதியை சார்ந்ததாயிருக்கட்டும்.”
விழித்தெழு!: ஒவ்வொரு நாளையும் சமாளித்திட உங்களுக்கு எது உதவுகிறது?
டோட்: “பரிவிரக்கம்! நோயாளிக்கு ஆதரவாயிருக்கும் துணைவர் தைரியமாகத் தென்படுவதற்காக தொடர்ந்து அழுத்தத்தை மேற்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. “எப்படி இருக்கிறார் டோட்?” என்று யாராவது கேட்பது நன்றாயிருக்கிறது. எனக்கிருக்கும் சோதனையையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது.
“சிறிது நகைச்சுவையும் உதவுகிறது என்பதைக் காண்கிறேன். எங்கள் இருவருக்குமே குழிப்பந்தாட்டம் அதிக விருப்பம். அவர் எடையில் குறைந்துகொண்டு போனதால், நான் ஒருநாள் அவரிடம், ‘உங்கள் கால்கள் காடுகள் கடக்கும் இரும்புக் கால்கள்!’ என்றேன். அவர் சிரித்தார். உங்களுக்குத் தெரியுமா, அறுவை சிகிச்சைக்குப்பின் ஆறு வாரங்களுக்குள் குழிப்பந்தாட்டத்தில் என்னுடன் 18 குழிகள் விளையாடினார்!”
ஒரு நோயாளியாக தனக்கு அதிக உற்சாகமளித்த அம்சங்கள் என்னவாயிருந்தன என்று சார்ல்ஸ் உணருகிறார்.
“நான் மூன்று காரியங்களைக் குறிப்பிட முடியும்.—என்னுடைய மனைவி, மருத்துவமனையின் பணியாட்கள், மற்றும் என்னுடைய எல்லா நண்பர்கள். மருத்துவப் பணியாட்களிடமிருந்து எங்களுக்கு அருமையான ஆதரவு கிடைத்தது. அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு படியையும் அவர்கள் முன்னதாகவே எங்களுக்கு விளக்கினார்கள், மற்றும் எங்களைத் தனிப்பட்ட ஆட்களாகக் கருதினார்கள், பூஜியங்களாகக் கருதி செயல்படவில்லை. இதனால் எங்களுக்கு அவர்கள் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டது, அதுதானே நாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதற்கு உதவியாக இருந்தது.
“ஆம், என்னுடைய மிகச் சிறந்த ஆதரவாளராக இருந்தது என்னுடைய மனைவி. அவள் செவிலியப் பெண்ணாக ஏற்கெனவே பணியாற்றியவள், எனவே அது எனக்கு அதிக உதவியாக இருந்தது. ஜெபமுங்கூட எனக்கு ஒரு பெரிய ஆறுதலாகவும் என்னைப் பலப்படுத்துவதாகவும் இருந்தது. நான் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்க ஜெபித்தேன். . . . இதோ, இப்பொழுது என்னை என் அலுவலகத்தில் பார்க்கிறீர்கள்!”
உண்மை நிலையை சந்தித்தல் நம்பிக்கையுடன் உயிர்வாழ்தல்
விழித்தெழு! ஈத்தல் என்பவளைப் பேட்டி கண்டது. அண்மையில் இவளுடைய கணவர் ஸ்டன் தனது 65-வது வயதில் புற்றுநோயால் மரித்தார்.
விழித்தெழு!: ஸ்டனுக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது
ஈத்தல்: அவருக்கு உதட்டுப் புற்றுநோய் இருக்கிறது என்பது முதலாவதாக ஜனவரி 1985-ல் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்குள் அவருக்கு நுரையீரலிலும் மூளையிலும் கட்டி இருப்பது தெரியவந்தது. அவருடைய நுரையீரலுக்குச் சிகிச்சையளிக்க கெமோதெரப்பி என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது, மற்ற பாகங்களில் கதிர்வீச்சு சிகிச்சை முறை கையாளப்பட்டது. சில நாட்களுக்குள் அவரில் முன்னேற்றம் காணப்பட்டு ஒரு பயணத்தை மேற்கொள்வதற்கான திட்டங்கள் போடப்பட்டது. பின்பு ஒருநாள் அவருக்குக் கடுமையான வாந்தி ஏற்பட்டது, அந்த நோய் மீண்டும் வந்துவிட்டது என்பதை அறிந்தோம். அன்று முதல், அவர் உயிர்பிழைக்கமாட்டார் என்பது எங்கள் இருவருக்குமே தெரியும்.”
விழித்தெழு!: அப்படியிருக்க, அந்த உண்மைக்கு நீங்கள் இருவரும் எப்படிப் பிரதிபலித்தீர்கள்?
ஈத்தல்: “அந்த நிலையைக் குறித்து நாங்கள் இருவருமே தாராளமாகப் பேசினோம். ஸ்டன் உண்மை நிலையை தைரியமாக எதிர்பட்டார். உண்மை என்னவெனில், அவருடைய மனநிலைதானே நிலைமையின் உண்மையை சந்திக்க எனக்கு உதவியது.
“நான் ஒரு அழுமூஞ்சியல்ல. அவருக்கு முன்பாக அழுவதைத் தவிர்த்தேன். ஆனால் ஒருநாள் அவர் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த நான் என்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ‘நீங்கள் அழுவதாக இருந்தால், நாம் இருவருமே சேர்ந்து அழுது முடித்துவிடுவோம்,’ என்றேன். எனவே நாங்கள் ஒன்றுசேர்ந்து அழுதோம். அது எங்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அதற்குப் பின்பு அவர் அமைதலாக சிரித்தார். ஆனால் அது எங்களுக்கு நல்லதாகவே இருந்தது.
“மற்றொரு முக்கியமான அம்சம், உயிர்த்தெழுதலின்பேரில் எங்களுக்கு இருந்த பைபிள் நம்பிக்கை. அதைக் குறித்து நாங்கள் அடிக்கடி பேசினோம். “நான் சிறிது காலத்துக்குத் தூங்கப் போகிறேன். பின்பு, இந்தப் பூமியில் புதிய ஒழுங்குமுறை வரும்போது, நான் திரும்பி வந்துவிடுவேன்,’ என்று அவர் சொல்லுவார். எங்களுடைய விசுவாசம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.”
புற்றுநோயும் விசுவாசமும்
புற்றுநோய் தனிப்பட்ட விதத்தில் எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு நோயாக இருப்பதால், பலமான விசுவாசம் அதிக உதவியாக இருக்கும். ஜெபம், கடவுளோடு கொள்ளும் ஒரு பேச்சுத் தொடர்பு. அது நமக்குள் அமைதியை ஏற்படுத்தும் செல்வாக்குடையது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தாத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
நிறைவேறியிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை. முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்ற நிலையைக் கடவுள் கொண்டுவருவதற்கான காலம் சமீபித்துவிட்டது. ஆம், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ், மற்ற வாதைகளுடன்கூட புற்றுநோயும் நீக்கப்படும். அந்தக் காலம் நெருங்கிவிட்டது.—வெளிப்படுத்துதல் 21:3, 4; லூக்கா 21:29-33. (g86 10/22)
[பக்கம் 17-ன் பெட்டி]
புற்றுநோய் நோயாளிகளுக்கு நம்பிக்கைக்குரிய சுய உதவி
1. வெறுத்தொதுக்கும் மனநிலை உங்களை மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள். உண்மை நிலையை உணர்ந்தவர்களாக பிரச்னையை சந்தியுங்கள். இப்படியாக, கிடைக்கும் நேரத்தை அதிகளவில் பயன்படுத்திக்கொள்வீர்கள்.
2. நீங்கள் சாதிக்க நினைக்கும் காரியங்களை நிறைவேற்றுவதற்கேற்ற திட்டங்களை அல்லது இலக்குகளைக் கொண்டிருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கட்டும். அர்த்தமற்ற வாழ்க்கை வெறுமையானது. அது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை—அது உங்களைப் பொருத்தது.
3. முடிந்தளவுக்கு சுறுசுறுப்பாயிருங்கள். சரீர சம்பந்தமான கட்டுப்பாடுகள் இருந்தாலும் உங்கள் அறிவை பயன்படுத்தும் வாழ்க்கை முடிவடையவில்லை. அப்படியிருக்க அதை ஏன் முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறீர்கள்? உங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்—வாசியுங்கள், எழுதுங்கள், வரையுங்கள், கற்றுக்கொள்ளுங்கள். புதிய திட்டங்களையும் உட்படுத்திக்கொள்ளுங்கள்.
4. உங்களுடைய வளங்களை ஞானமாகப் பயன்படுத்துவதற்காக நம்பிக்கையான மனநிலையை வளர்த்திடுங்கள். தன்னிரக்கம் தன்னைக்குறித்தே நினைக்கிறது. தன்னையே அழித்துவிடுகிறது. உங்களால் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிப்பாருங்கள். உங்களுடைய நம்பிக்கையான மனநிலை உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் ஊக்குவிக்கும்.
5. ஓரளவுக்கு நகைச்சுவையையும் உங்களை நினைத்து சிரிக்கும் தன்மையையும் காத்துக்கொள்ளுங்கள். ரோஜாக்களைப் பாருங்கள், முற்களை மட்டும் பார்கிறவர்களாக இருக்க வேண்டாம். நீங்கள் உயிருடனிருக்கிறீர்கள் என்ற உண்மைக்குப் போற்றுதல் காண்பியுங்கள், மற்றவர்களைப்போல நீங்களும் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற எண்ணத்திற்கு அல்ல.
[பக்கம் 16-ன் படம்]
மருத்துவமனையின் பணியாட்கள், நேசமானவர்கள் மற்றும் நண்பர்கள் யாவரும் ஆதரவு கொடுக்கலாம்