பணத்திற்கான தேவை
பணம் எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.” அந்த வார்த்தைகளை நீங்கள் எவ்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உண்மையில் அது பின்வரும் கூற்றின் ஒரு பகுதிதான்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.”a
ஆம், பணத்திற்கான தன்னல வேட்கையால் தீமைகள் பல விளைந்திருக்கின்றன என்பது உண்மைதான். இவற்றைப் பெறுவதற்காகவே பேரளவான குற்றச் செயல்கள் செய்யப்படுகின்றன. என்றபோதிலும், பணம் பழக்கத்தில் இல்லையென்றால் நாம் இன்று எங்கே இருப்போம்?
பணம் பயன்படுத்தப்படாத ஒரு காலம் இருந்தது என்பது உண்மைதான். அது அறிமுகப்படுத்தப்பட்ட பின்புங்கூட அதன் பழக்கம் குறைவாகவும் ஒழுங்கற்றும் இருந்துவந்தது. வேளாண்மையில் ஈடுபட்டுவந்த குடும்பங்கள் தன்னிறைவுடன் தங்களுடைய சொந்தத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளக்கூடியவர்களாயிருந்தனர். தங்களுக்குத் தேவையான ஒன்றைத் தங்களால் நிறைவு செய்ய முடியாத நிலையில் தங்களுடைய பொருட்களை மற்றவர்களுடைய பொருட்களுக்காகப் பண்டமாற்று முறையில் நேரடியாக மாற்றம் செய்துகொள்வார்கள். இருந்தாலும், சில பிரச்னைகளை எதிர்ப்பட்டனர், விசேஷமாக ஒரு குறிப்பிட்ட தொழிலில் கைதேர்ந்தவர்கள் அல்லது கூலியாட்கள் இந்தப் பிரச்னைகளை எதிர்ப்பட்டனர்.
வீட்டுக்காரர் ஒருவர் தன் தோட்டத்தில் வேலை செய்வதற்காக ஆட்களைக் கூலிக்கு அமர்த்திய ஒரு உவமையில் இயேசு அப்படிப்பட்ட வேலையாட்களைக் குறித்துப் பேசினார். (மத்தேயு 20:1-16) கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தக் காலத்திலேயே பணத்தின் பழக்கம் நிலையாகிவிட்டது என்பதை இயேசுவின் உவமை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், நீங்கள் அப்படிப்பட்ட ஒரு வேலையாளாயிருந்து பணத்திற்குப் பதிலாக திராட்சப் பழத்தைக் கூலியாகப் பெறுகிறீர்கள் என்ற நிலையை சற்று கற்பனைச் செய்து பாருங்கள்!
நீங்கள் திராட்சப்பழத்தை விரும்பி சாப்பிடுவீர்கள், ஆனால் தினந்தோறும் திராட்சப்பழமே சப்பிட்டுக் கொண்டிருக்க விரும்பமாட்டீர்கள். இறைச்சி, காய்கறி போன்று அதிக நிறைவான, வித்தியாசமான உணவு வகைகளைக் கொண்டிருக்கப் பிரியப்படுவீர்கள். அதே சமயத்தில் உங்களுக்குக் காலணிகளும், உடையும், எரிபொருளும் மற்றும் சில பண்டங்களும் உதவிகளும் தேவைப்படுகின்றன. எனவே அப்படிப்பட்ட பொருட்களை உங்களுக்கு அளிக்க அல்லது பண்டமாற்றம் செய்ய மனமுள்ள ஆட்களை நீங்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால் அவர்களுக்குத் திராட்சைப்பழம் பிரியமாயில்லை அல்லது அது அவர்களுக்குத் தேவைப்படவில்லையென்றால், அப்பொழுது என்ன? அந்தச் சந்தர்ப்பத்தில், உங்கள் திராட்சப்பழத்திற்காக வேறு பொருட்களைக் கொடுக்க மனமுள்ள ஆட்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு உங்களுக்குத் தேவையான பொருட்களுக்காகப் பண்டமாற்றம் செய்துகொள்ள வேண்டும். இந்த வியாபார முறை நீங்கள் முதலில் திராட்சப்பழத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எடுத்த காலத்தைவிட அதிக காலத்தை எடுக்கக்கூடும்!
இதில் எழும்பக்கூடிய மற்றொரு பிரச்னை, பண்ட மாற்றம் செய்யப்படும் பொருட்களின் மதிப்பை நிர்ணயிப்பதாகும். உதாரணமாக, ஒரு கோழி எத்தனை திராட்சை மதிப்புடையது? ஒரு ஜோடு காலணிக்கு எத்தனை திராட்சை? பண்டமாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் மற்ற எந்த ஒரு பொருளிலும் இணையான மதிப்பு உடையதாக இருக்க வேண்டும். “உதாரணமாகக் கடைவீதியில் 1,000 வித்தியாசமான பொருட்களும் சேவைகளும் இருந்தன,” என்று பணம், சேமிப்பு மற்றும் ஐக்கிய மாகாணங்களின் பொருளாதாரம் என்ற புத்தகம் கூறுகிறது. “அவற்றின் விற்பனைக் கிரயத்தை அளவிடுவதற்கு 1,000 டாலர் விலைகள் இருப்பதற்குப் பதிலாக 4,99,5000 மாற்று வீதங்கள் தேவைப்படுகிறது!
அது ஞாபகத்தில் வைப்பதற்கு அதிகமாயிருப்பது மட்டுமல்லாமல் நிலைமைகளின் மாற்றத்திற்கேற்ப அந்தப் பட்டியலும் அடிக்கடி மாற்றப்பட வேண்டியதாயிருக்கும். பண்டமாற்றம் செய்வதற்கு உங்களிடமிருக்கும் ஒரு பொருள், உதாரணமாக ஒரு பசு, நீங்கள் வாங்கவிரும்பும் கோடரியைவிட அதிக கிரயமுடையதாக இருக்குமானால், அந்தப் பிரச்னைக்கு என்ன முடிவைக் காண்பீர்கள்? அந்தக் கிரயத்தை, பலரிடமிருந்து பல பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்த விரும்புவீர்களானால், அந்தப் பசு யாருக்குக் கிடைக்கும்? அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வியாபாரம் செய்வதுதானே எவ்வளவு கடினமாக இருக்கும்! பண்டங்களை அல்லது சேவைகளை மாற்றீடு செய்வதற்குப் பொது தொகுதிக் கூற்றெண் ஒன்று நிச்சயமாகவே தேவைப்படுகிறது. இங்குதான் பணம் வருகிறது.
எனவே பணம் பின்வரும் அடிப்படைக் காரியங்களைச் சேவிக்கிறது:
● மற்றவர்களுடைய பொருட்கள் அல்லது சேவைகளை எளிதில் பெற்றுக்கொள்ள உதவும் செலாவணி இடையீட்டுப் பொருளாக இருக்கிறது.
● மதிப்பீட்டிற்கான ஓர் அளவுகோலாக—கணக்கிடுவதற்கான அடிப்படை அலகளவாக—சேவிக்கிறது. இதன் மூலம் எல்லாப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை ஒப்பிடவும் தெரிவிக்கவும் முடியும்.
● அது ஒரு கிரய சேமிப்புக் கூடமாக சேவிக்கிறது. உங்களுடைய சம்பாத்தியத்தை பின் உபயோகத்திற்காக சேமிக்க அல்லது சேர்த்து வைக்க ஒரு வழி முறையாக சேவிக்கிறது.
ஏராளமான பொருட்களைக் கொடுத்திருக்கும் பெரிய தொழில்துறை வர்த்தக முறைகளுங்கூட பணத்தின் பலன்தான். அதன் மூலம் நாம் நவீனமானதும் மிகச் சிறந்ததுமான பொருட்களை அல்லது சேவைகளைப் பெற்றுக்கொள்கிறாம். பொருளாதார வளர்ச்சிக்கு உயிராய் அல்லது இரத்தமாயிருப்பதும் அதுவே. அந்த அம்சத்தில்தான் வர்த்தக உலகம் சர்ந்திருக்கிறது. அதன் மூலம் பல்வேறு துறைகளில் நிபுணர்களாகவும் ஆகலாம்.
“ஆனால் அவ்வளவு பயனுள்ளதும் நேசிக்கப்பட்டதுமான பணம் சில சமயங்களில் சரியாக நடந்துகொள்வதில்லை,” என்று பணம் சேமிப்பு மற்றும் பொருளாதாரம் என்ற தன் புத்தகத்தில் ஜான் A. காச்ரன் எழுதுகிறார். “பணம் பெரிய ஆசீர்வாதமாகவும் இருக்கலாம், பெருத்த சாபமாகவும் இருக்கலாம்.” நம்முடைய நவீன காலங்களின் சிக்கல்வாய்ந்த பொருளாதார முறையைக் கவனிக்கும் விஷயத்தில் இது அதிக உண்மையாக இருக்கிறது. ஏனென்றால், பணம் ஒரே இரவிலே சம்பாதிக்கப்படலாம் அல்லது இழக்கவும்படலாம், வியாபாரம் வளரவுங்கூடும், சரியவுங்கூடும், அரசாங்கங்கள் செழிக்கவுங்கூடும், சீரழியவுங்கூடும். அநேக சம்பவங்களின் மையத்திலிருப்பதுதான் ஏராளமான பணத்தின் சேமிப்புக் கிடங்குகள்—வங்கிகள். அண்மையில் வங்கிகள் எதிர்பாராத வேகத்தில் தோல்வியுறுகின்றன. எச்சரிக்கையாயிருக்க வேண்டுமா? (g86 10/22)
[அடிக்குறிப்புகள்]
a மக்கெதோனியாவில் சுமார் பொ.ச. 61-64-ற்கு இடையே அப்போஸ்தலனாகிய பவுலால் எழுதப்பட்ட இந்தக் கூற்று, பைபிளில் 1 தீமோத்தேயு 6:10-ல் காணப்படுகிறது. தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு.