இளைஞர் கேட்கின்றனர். . .
பெரியவர்கள் என்னைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வாறு உதவக்கூடும்?
“அநேக பெற்றோர்களுடைய, அறியப்பட்ட பழைய சத்துரு—அந்த சந்ததிப்பிளவு—பெற்றோர் மற்றும் பருவப் பிள்ளைகள் இடையிலிருக்கும் மெய்யான தடைச் சுவராக இல்லை” அமெரிக்க பருவ பிள்ளைகளின் தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். ஆனால் அந்த தடை சுவர் சந்ததிப்பிளவு அல்லவென்றால் அவர்கள் காணக்கூடிய அந்த தடைச்சுவர் என்ன? ஒவ்வொரு மனித உறவுகளிலும் ஏற்படும் அந்த மெய்யான பிரச்னையானது—பேசுவதற்கும் செவிகொடுத்து கேட்பதற்கும், மற்றவருடைய நோக்குநிலையை புரிந்துகொள்வதற்கும் தவறுவதேயாகும்.
இன்ஜே என்ற ஒரு ஜெர்மானிய இளம் பெண்ணுக்கும் மற்றும் அவளுடைய பெற்றோருக்கும் இடையேயிருந்த பிரச்னை இதுவே. “ஆரம்பம் முதற்கொண்டே நான் என் பெற்றோரை வெறுத்து எங்களுக்கிடையே ஒரு தடைச் சுவரை ஏற்படுத்திவிட்டேன்,” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள். ஆனால் இன்றே அவள் வேறுவிதமாய் நடந்துகொள்கிறாள் “அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய அவர்களுடைய இடத்தில் நான் என்னை வைத்து பார்க்கிறேன்” என்று அவள் சொல்லுகிறாள். ஏன் இந்த மனநிலை மாற்றம்? ஏனெனில் பெரியவர்கள் தங்களை புரிந்துகொள்வதற்கு இளைஞர்கள் உதவ வேண்டுமானால் அதற்கு சிறந்தவழி அவர்கள் பெரியவர்களை புரிந்துகொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று இப்பொழுது இன்ஜே என்பவள் உணருகிறாள். ஆனால் இதை எவ்வாறு செய்யலாம் என்று நீ யோசிக்கக்கூடும்.
பேசு
ஒருவரை புரிந்துகொள்வதற்கு பேச்சுத் தொடர்பே முக்கியமானதாக இருக்கிறது. அது இல்லாமல் மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை நீ அறியமுடியாது. அதைக் காட்டிலும் முக்கியமானது என்னவெனில் அவர்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறார்கள் என்பதையும் நீ அறிய முடியாது. ஆனால் பேச்சுத்தொடர்பு என்பது இருவழிச்சாலை. “சில சமயங்களில் குறைவுபடக்கூடிய ஒரே ஒரு காரியம் வெறும் கொஞ்சம் புரிந்துகொள்ளுதலே” என்ற தலைப்பை கொண்ட ஒரு ஜெர்மன் பத்திரிகை கட்டுரை சொல்லுவதாவது: “இளம் பிள்ளைகள் இன்னுமதிகமாகப் பெற்றோரிடம் மனம்விட்டு பேச வேண்டும். அதே சமயத்தில் “பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்” என்று அது அறிவுரை கொடுக்கிறது.
உன் பெற்றோரிடம் நம்பி ஒப்படைத்தல் என்றால் உன் எண்ணங்களை ஒளிவுமறைவின்றி மனந்திறந்த முறையில் தெரிவிப்பதை குறிக்கிறது. நீ என்ன யோசிக்கிறாய் அல்லது உணருகிறாய் என்பதை குறித்து தெரியப்படுத்துவதில் நீ திட்டவட்டமாய் இருக்கவேண்டும். மொட்டையாக அல்லது சாதுரியமற்ற விதத்தில் பேசக்கூடாது. கேள்விகளை கேட்பதன் மூலம், சவால்விடும் ஒரு முறையில் அல்ல, ஆனால் உண்மையான அக்கறையுடனிருந்தால் அவர்களிடமிருந்து நீ விஷயங்களை வரவழைக்க முடியும். உதாரணமாக, தகுதிவாய்ந்த நண்பர்களை அல்லது வாழ்க்கையில் பயனுள்ள இலக்குகளை தேர்ந்தெடுக்க உதவுவதில் அவர்கள்—அல்லது மற்ற பெரியவர்கள்—என்ன யோசனை கூறுகிறார்கள் என்பதை கேட்டுபார்க்கலாம் என்று எப்போதாவது நீ நினைத்திருக்கிறாயா? “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது. புத்திமானோ அதை மொண்டெடுப்பான்,” என்று நீதிமொழிகள் 20:5 சொல்லுகிறது. மற்ற ஆட்களிடமிருந்து—ஆம், பெரியவர்களிடமிருந்துங்கூட—நீ எதை கற்றுக்கொள்ளக்கூடுமோ அதை குறித்து நீ வியப்படையக்கூடும். அதற்கு ஓர் முதல் தேவையானது நீ பேச வேண்டும்.
ஏமி என்பவளின் அனுபவம் இதனை விளக்கட்டும். அவள் சொல்வதாவது: “நான் சுமார் பதினைந்து வயதாக இருக்கும்போது என் தாயிடம் எனக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லை என்று சொன்னதை நான் இன்னும் மறக்கவே இல்லை. அவள் ஒரு மத பக்தியுள்ளவளாக இருந்தமையால், இது அவளுடைய உணர்ச்சிகளை வெகு ஆழமாக பாதித்திருக்க வேண்டும். ஆனால் அவள் என்னை கோபித்துக்கொள்வதற்கு மாறாக, அவள் ஏன் நான் நம்பவில்லை என்று என்னைக் கேட்டாள். பின்பு நாங்கள் சுமார் ஒரு மணிநேரம் போல் பேசிக்கொண்டிருந்தோம். ஏமி என்ற இந்தப் பெண் இன்னமும் கிறிஸ்தவளாக இல்லாதபோதிலும்: “அது முதற்கொண்டு நான் என் கருத்துக்களை கொஞ்சம் மாற்றிக்கொண்டேன், என் தாய் பரபரப்படைந்து கோப வார்த்தைகளை கொட்டாமல் இருந்ததற்காக நான் உண்மையிலேயே வியப்படைந்தேன். நான் என் கருத்தை மாற்றிக்கொள்வேன் என்று அவள் ஒருவேளை அறிந்திருக்கக்கூடும்.”
‘அது சிறப்பான காரியம், பெற்றோர் அவ்வகையான புரிந்துகொள்ளுதலை காட்டினால், எந்த பிரச்னையும் இருக்காது’ என்று நீ சொல்லக்கூடும். என்றபோதிலும் ஒரு காரியத்தை நினைவிற்கொள், பெரியவர்களுக்கும் குறைபாடுகள் உண்டு. அக்கறையுள்ள ஒரு தந்தையாக இருந்த லேரி, ஒளிவுமறைவின்றி ஒப்புக்கொண்டதாவது: “நான் பிள்ளைகளுக்கு அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் காட்டவேண்டும் என்று எனக்கு தெரிகிறது. என்றாலும் அதை காட்டுவதை மிகக்கடினமானதாக நான் உணருகிறேன். ஏனெனில் வளர்ந்துவரும் சமயத்தில் நான் ஒருபோதும் அதை அனுபவித்தது இல்லை. அதை எவ்வாறு காட்டுவது என்பதை நான் வெறுமென அறியாதவனாக இருக்கிறேன்.”
எனவே உன் குடும்பத்தில் காரியம் இவ்வாறு இருக்குமானால், உன் பெற்றோருக்கு காரியத்தை எளிதாக்க நீ பிரயாசப்படு. நீ முன்வந்து அவர்களிடம் பேசு, அவர்களிடம் அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் காட்டு. பெரும்பாலருடைய விஷயத்தில் சீக்கிரத்திலேயோ அல்லது பின்பாகவோ அவர்கள் உன்னிடம் அதிகப்படியான அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் காண்பிக்கக்கூடும். இதற்கு காரணம் என்னவெனில் அன்பு தொத்தும் தன்மையுள்ளது. கடவுளை குறித்து பைபிள் சொல்வதாவது: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்.”—1 யோவான் 4:19.
கேரன் என்ற 17 வயது பெண் இது உண்மை என்பதை அறிந்துகொண்டாள். அவள் சொல்வதாவது: “பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோர் தங்களிடம் பேசுவதற்கு போதுமான வாய்ப்பு அளிப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். பெற்றோராக இருப்பது கடினமானது. சில சமயங்களில் நாம் அவர்களுக்கு உதவ வேண்டியதாக இருக்கிறது.” அப்படியானால் அவர்களுடன் பேச்சு தொடர்புகொள்ள முயற்சிப்பதை இது குறிக்கிறது. இது எப்பொழுதும் எளிதான ஒரு காரியம் அல்ல. “அது என் பங்கில் அதிக பொறுமையை தேவைப்படுத்தியது,” என்று அவள் ஒப்புக்கொள்ளுகிறாள். ஆனால் அது அவளுக்கு நற்பலன் தந்தது; அது உனக்குங்கூட அவ்வாறே பலன்தரக்கூடும்.
செவிகொடுத்து கற்றுக்கொள்!
பேசுவது முக்கியமானது, செவிகொடுப்பது அதை காட்டிலும் முக்கியமானது. கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு நாம் ஒவ்வொருவரும் “கேட்கிறதற்கு தீவிரமாயும் பேசுகிறதற்கு பொறுமையாயும்” இருக்கும்படி புத்திமதி கூறுகிறான். (யாக்கோபு 1:19) “கேட்பது” என்று சொல்லுகையில் வெறுமென வார்த்தைகளை காதால் கேட்பதை காட்டிலும் அதிகத்தை குறிக்கிறது; அது எண்ணங்களை புரிந்து கொள்ளுவதை குறிக்கிறது.
எனவே உன் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் பெரியவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு நீ அக்கறை காட்டுவாயானால், தர்க்கம் செய்யும் நோக்கத்தோடு அவ்வாறு செய்யாமல், செவி கொடுக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு செய். கருத்து வேறுபாடுகள் ஏற்படுமானால், ஏன் என்று உன்னை நீயே கேட்டுக்கொள். நான் பேசிக்கொண்டிருக்கும் அந்த நபர் நான் அடைந்திராத அனுபவத்தை அடைந்தவராக இருக்கிறாரா? எனக்கு தெரிந்திராத காரியங்களை அறிந்தவராக இருக்கிறாரா? அப்படியிருக்குமானால் அப்பொழுது என்ன? அவருடைய சுற்றுப்புர சூழ்நிலைமை, கல்வி, பின்ணனி என்னுடையதிலிருந்து வித்தியாசப்பட்டதாயிருக்கிறதா? எந்த அம்சங்களில் அவ்வாறு இருக்கிறது? இது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் எண்ணத்தோடு அதிகம் செவி கொடுத்து, கருத்துக்களை ஏற்கும்படி உனக்கு உதவி செய்யும்.
மொத்தத்தில் வாழ்க்கை அப்படித்தானே இருக்க வேண்டும்—தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருக்கும் ஒரு போக்காக. ஒருவருடைய நோக்குநிலைகள், எண்ணங்கள், கருத்துக்கள் ஆகியவற்றை தொடர்ந்து சீர் செய்து கொள்வதையும் ஒரு திறந்த மனதை கொண்டிருப்பதையும் உட்படுத்துகிறது. நீ ஏற்கெனவே உன்னுடைய 20-வது வயதுகளில் இருப்பாயானால் இது உண்மை என்பதை நீ அறிவாய், இப்பொழுது நீ பெரியவனாக இருக்கையில் பருவ ஆண்டுகளில் (13 முதல் 19 வயதில்) உனக்கு இருந்த கருத்துக்கள் இப்பொழுது ஒருவேளை பெருமளவிற்கு மாறியிருப்பதை நீ பெரும்பாலும் ஒத்துக்கொள்வாய். மாற்றங்கள் செய்யாத ஒரு ஆள் “மரித்தவனாகவும்” அதை அவன் அறியாதவனாகவும் இருக்கிறான் என்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. எனவே உன்னுடைய காலத்துக்கு முன்னமே மரித்துவிடாதே!
முன்னேற்றம் செய்!
“வார்த்தையிலும் நடக்கையிலும் அன்பிலும் விசுவாசத்திலும் கற்பிலும் மாதிரியாயிரு” என்று ஒரு வயதான மனிதர் ஒரு இளம் நண்பனுக்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக அறிவுரை கொடுத்தார். இந்த முதிர்ந்த மனிதனாகிய கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவின் நலனில் அக்கறையுள்ளவனாக இருந்தான். ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பதன் மூலமும் பாலியத்துக்குரிய [இளமைக்குரிய] இச்சைகளுக்கு விலகியோடுவதன் மூலமும் மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக தீமோத்தேயு ஆகக்கூடும்.—1 தீமோத்தேயு 4:12; 2 தீமோத்தேயு 2:22.
நாம் எல்லாருமே—இளைஞரும் பெரியவர்களும்—இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஏங்குவோமானால் “நான் எவ்வாறு இருக்கிறேனோ அவ்வாறே நீ என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற அடிப்படையில் நாம் வற்புறுத்தக்கூடாது. நம்முடைய ஆள் தன்மையிலும் [சுபாவத்தில்] மற்றும் நடத்தைபோக்கிலும் மாற்றங்களை செய்வதற்கு நாம் மனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்பொழுது ஜனங்கள் தாமே நம்மை ஏற்றுக்கொள்வதற்கு விரும்புவார்கள்.
எனவே, உன் வாழ்க்கையில் பெரியவர்களோடு தொடர்ந்து கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய—உன்னுடைய ஆடை அல்லது சிகை அலங்காரம், நண்பர்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றில் உன்னுடைய தெரிவு போன்ற—சில அம்சங்கள் இருக்குமானால் அப்பொழுது உன்னைவிட வயதானவர்களும் அதிக அனுபவமுள்ளவர்களுமான ஆட்களிடமிருந்து மாற்றங்களை செய்வதற்குரிய கருத்துக்களை குறைந்த பட்சம் நேர்மையுடன் கலந்து பேசுவதற்காவது மனமுள்ளவனாயிரு. இது உன்னை “பக்குவப்படுத்த” உதவக்கூடும். மற்றும் பெரியவர்கள் உன்னை நேசிக்கவும் உன்னுடன் பழகவும் விரும்பப்படும் ஒரு ஆளாக அது உன்னை உருவாக்கும்.
உண்மையிலேயே புரிந்துகொள்ளுபவரைக் கண்டடைதல்
உன் மீது அக்கறையுள்ள பெரியவர்கள் உண்மையில் இருக்கிறார்கள் என்பதைக் குறித்து நிச்சயமாயிரு. ஜெர்மன் குடியரசிலிருந்து வரும் ராபர்ட் என்ற இளம் மனிதனை சற்று கேட்டுப் பார். இவன் தன் பருவ வயதில் (13-19 வயதில்) இருந்தபோது காவற்கோபுர சங்கத்துக்கு எழுதின ஒரு கடிதத்தில் அவன் சொன்னதாவது: “நான் செய்த எல்லாக் காரியத்திலேயும் கஷ்டங்களை கொண்டிருந்த நிலையில் நான் வளர்ந்தேன். வீட்டுப் பாடங்களை செய்து முடிப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. என்னால் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியவில்லை. எனக்கு எந்த நண்பரும் இருக்கவில்லை. என் பெற்றோர் பேரிலும் நம்பிக்கையில்லை. நான் கீழ்படியாதவனாயும் ஒழுங்கற்றவனாயுமிருந்தேன். ஒரு சமயம் நான் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். அதன் பின்பு யெகோவாவின் சாட்சிகளிடம் அறிமுகமானேன். என்னே ஒரு ஆசீர்வாதம்! நான் என்னைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் நேர்மையான கருத்தையுடையவனாக இருக்க கற்றுக்கொண்டேன். மிக அருமையான காரியம் ஒன்று இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன்— அதுவே அன்பு.”
அன்பிற்காகவும் புரிந்துகொள்ளும் உள்ளத்திற்காகவும் தேடியலையும் உன் முயற்சியில் நீ ஒருவேளை தோல்விகளை எதிர்படக்கூடும். ஆனால் விட்டுவிடாதே, அதில் தொடர்ந்திரு. நீ உண்மை நண்பர்களை கண்டடைவாய். ஆம் பெரியவர்கள் மத்தியிலும் முக்கியமாய் கிறிஸ்தவ சபைக்குள்ளும் நீ கண்டடைவாய். அவர்கள் மறைந்திருக்கும் புதையலை போன்று இருப்பதை நீ காண்பாய். முதலில் காணமறைவாக இருந்தாலும், ஒருமுறை அவர்களை கண்டுபிடித்துவிட்டால், அவர்கள் மிகவும் பிரகாசிப்பார்கள்.
மேலும் ராபர்ட் கண்டுபிடித்ததை போன்று, யெகோவா தேவனைப்பற்றி அறிந்து கொள்ளுவதும் அவருடன் ஒரு நெருங்கிய உறவை காத்துக்கொள்ள பிரயாசப்படுவதும் உனக்கு உண்மையான அனுகூலமாயிருக்கும். மனிதரால் தவறாக புரிந்து கொள்ளப்படும் சமயங்களில் தயக்கமின்றி ஜெபத்தில் “யெகோவாவிடம் உன் பாரத்தை வைத்துவிடுவாய்.” அவர் எப்பொழுதுமே புரிந்துகொள்ளும் ஒரு நண்பர். நீ அறிந்த ஒரு சில ஆட்களை போன்று உன்னுடைய பிரச்னைகளை—அவை எவ்வளவு அற்பமானவையாக தோன்றினபோதிலும்—கேட்கமுடியாத அளவுக்கு அவர் ஒருபோதும் நேரமில்லாதவராயில்லை. அவர் ஒருபோதும் உனக்கு பாதி கவனத்தை மட்டுமே கொடுப்பவர் அல்ல. நீ பேசும்போது அவர் ஒருபோதும் நீண்ட போதனைகளால் குறுக்கிடவும் மாட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் செவி கொடுப்பார். அவருடைய ஆறுதல் தரும் வாக்குறுதியானது “அவர் உன்னை ஆதரிப்பார்.”—சங்கீதம் 55:22. (g86 7/22)
[பக்கம் 11, 12-ன் படங்கள்]
பேசுவதற்கு மனவிருப்பம் கொண்டிரு . . . செவி கொடுப்பதற்கு தீவிரமாயிரு