மக்கள் ஏன் புகை பிடிக்கிறார்கள், ஏன் அவர்கள் புகை பிடிக்கக்கூடாது?
1985-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உண்டான பஞ்சம் தலைப்புச் செய்திகளை எட்டிப்பிடித்தது. ஆனால் புகை பிடித்தலோ இருபது இலட்சம் ஆட்களைக் கொன்றது. அந்தப் பஞ்சம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து அதை நடவடிக்கை எடுக்கத் தூண்டியது, ஆனால் புகை பிடித்தல் குளத்திலே ஒரு சிற்றலையையும் ஏற்படுத்தவில்லை. புகையிலையின் உபயோகத்தை முடிவுக்குக் கொண்டுவருவது எக்காலத்திலும் பெரிய “போதை வஸ்து முறியடிப்பாக” இருக்கும், ஆனால் அது வெகு விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்காதீர்கள். வல்லமையுள்ள சக்திகள் அதற்கு எதிராக செயல்படுகின்றன.
புகைபிடித்தல் ஒரு உலகளாவிய கொள்ளை நோயாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி ஆட்கள் 5,000 கோடி சிகரெட்டுகள் உபயோகிக்கிறார்கள். 1964-ம் ஆண்டில் ஐக்கிய மாகாணங்களின் இரண சிகிச்சை தலைமையதிகாரி சி. எவரெட் கூப், புகைபிடிப்பதனால் வரும் அபாயங்களைக் குறித்து எச்சரித்தார். அதிலிருந்து புகைபிடிக்கும் அமெரிக்கர்களின் சதவிகிதம் குறைந்திருக்கிறது, ஆனால் புகையிலை உபயோகம் 20 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. புகையிலை உபயோகம் உலகெங்கிலும் 75 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இது கொள்ளை நோயாக பரவியிருக்கிறது, வளரும் நாடுகளில் வெடிக்கும் விதத்தில் வளர்ந்து வருகிறது. புகைபிடித்தலோடு சம்பந்தப்பட்ட நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான உயிர்களைக் குடிக்கிறது. உலகத்தில் இறப்புகளில் ஐந்து சதவிகிதம் புகையிலை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் மொத்த இறப்புகளில் 20 சதவிகிதம் புகையிலையினால் உண்டாகிறது. கனடாவில் அது வயதுவந்தவர்களின் இறப்புகளில் 17 சதவிகிதம்.
இவை எல்லாவற்றிலும் ஏமாற்றத்திற்கும், துக்கத்திற்கும் சிகரமாக இருப்பது உலக சுகாதார ஸ்தபனத்தின் புகைபிடித்தலைப் பற்றிய கூற்று: “உலகத்தின் மிக முக்கியமான தவிர்க்கக்கூடிய சுகாதாரப் பிரச்னை.” ஆகவே மக்கள் ஏன் தொடர்ந்து புகைபிடித்து அதனால் புகையிலையின் சாவுக்கேதுவான அறுப்பை அறுக்கிறார்கள்? ஏன் அவர்கள் தவிர்க்க வேண்டும் என்பது வெளிப்படை. ஏன் அதைச் செய்கிறார்கள் என்பது சற்று ஆழத்தில் செல்கிறது.
1986-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள உலகத்தைக் கவனிக்கும் ஸ்தபனம் (The Worldwatch Institute) வெளியிட்ட புகையிலைப்பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை மேற்கண்டதைச் சொன்னது, இன்னும் அதிகத்தையும் சொல்கிறது: “புகையிலை, சக்திவாய்ந்த போதைப் பொருட்களால் கொல்லப்படும் அமெரிக்கரைப் பார்க்கிலும் 13 மடங்கு அதிகம் பேரை கொல்லுகிறது” என்றும் “வாகன விபத்துக்களில் இறப்பவர்களைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிகமான ஆட்களைக்” கொல்வதாகவும் அது சொன்னது. இரண்டாவது உலகப் போரில் இறந்தவர்களைக் காட்டிலும் அதிகமான அமெரிக்கர்களைக் கொன்றுவிடுகிறது. உலகத்தைக் கவனிக்கும் ஸ்தபனம் மேலும் குறிப்பிடுவதாவது: “அரசாங்கங்கள் மாரியுவானா (marijuana) அல்லது அபினி உற்பத்தி மற்றும் அவற்றைக் கடத்துவதை எதிர்த்துப் போர்க்கல அடிப்படையில் செயல்படுகிறார்கள், ஆனால் அதைவிட கொடிய விளைபொருளாகிய புகையிலைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை.”
விஞ்ஞானம் மேலுமாகக் கற்றுக்கொள்ளும்போது புகையிலையின் கொடிய தன்மை அதிகம் தென்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இருபது இலட்சத்திற்கும் மேலான புகைபிடிப்பவர்கள் இருதய நோயினாலும், நுரையீரல் புற்றுநோயினாலும் மற்றும் எம்ஃபிசேமாவினாலும் இறக்கிறார்கள். புகை பிடிப்பவரின் இருதயம் புகை பிடிக்காதவருடைய இருதயத்தைக் காட்டிலும் கடினமாக உழைக்கிறது. பகற்பொழுதில் ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக எட்டு முதல் பத்து துடிப்புகள் அதிகமாகவும் மற்றும் தூங்கும்பொழுது மூன்று முதல் ஐந்து துடிப்புகள் அதிகமாகவும் இருக்கிறது. சையன்ஸ் பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சி சொன்னது: “சிகரெட் உபயோகித்துப் புகை பிடிப்பது ஐக்கிய மாகாணங்களில் புற்றுநோய் மரணங்களுக்கு ஒரு தனிப்பட்ட முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் எல்லா புற்றுநோய் மரணங்களுக்கும் புகையிலையின் பங்கு 30 சதவிகிதம் என்றும் ஊகிக்கப்படுகிறது.” இந்த 30 சதவிகிதத்தில் பெரும்பான்மை நுரையீரல் புற்றுநோய் சம்பந்தப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நாளொன்றுக்கு 90 சிகரெட்டுகள் உபயோகித்த ஒரு புகை பிடிப்பவரின் புகையிலையைச் சார்ந்திருக்கும் பழக்கம் அவருடைய பார்வை நரம்பைக் கெடுத்து அவரைக் குருடாக்கிவிட்டது. புகையிலையில் வரும் ஏம்பிலியோப்பியாவுக்கு இறையானார்.
அடிமைத்தனத்திற்கு விடுதலையாக்கப்பட்டிருக்கிறீர்களா?
நவீனப் பெண், இப்பொழுது விடுதலையாக்கப்பட்டவள், அதிகம் புகைபிடிக்கிறாள். அதன் விளைவையும் அதிகமாக அறுவடை செய்கிறாள். அமெரிக்கப் பெண்களை மார்பகங்களின் புற்றுநோய் வழக்கமாக அதிகம் கொன்றது, ஆனால் இப்பொழுது நுரையீரல் புற்றுநய். அது 1950-ஆம் ஆண்டிலிருந்து 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது; இது 1986-ல் 38,000 பெண்களுக்கும் மேலாக கொன்றது. இருதய நோயும் பெண்களுக்கு அதிகமாகியிருக்கிறது. புகை பிடித்தல் இருதயத்தின் மீதும் இரத்த ஓட்ட மண்டலத்தின் மீதும் அதிக அழுத்தத்தைக் கொண்டு வருவதால் ஒவ்வொரு ஆண்டும் மேலும் 8,00,000 பெண்கள் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். புகைபிடிக்கும் பெண்களில் ஆண்களைப் பார்க்கிலும் பத்து இலட்சம் அதிகம் பேர் தீராத மார்ச்சளி நோயினால் அவதிப்படும் பெருமையைப் பெற்றிருக்கிறார்கள். சிகரெட்டின் புகையில் காணப்படும் இரசாயணப் பொருட்கள் மரபியல் சம்பந்தப்பட்ட பாதிப்புக்களைக் கொண்டுவந்து கர்ப்பவதியான பெண்களிலும் அவர்களுடைய சிசுக்களிலும் புற்றுநோயை ஆரம்பித்து வைக்கக்கூடும். நவீனப் பெண் விடுதலையாக்கப்பட்டிருக்கிறாளா? அல்லது அவளும், ஒருவேளை அவளுடைய சகாக்களும் உட்பட புகையிலையின் அடிமைத்தனத்திற்கு விடுதலையாக்கப்பட்டிருக்கிறார்களா?
அபாயங்களைக் குறைப்பதற்கு சில புகை பிடிப்பவர்கள் சிகரெட்டிலிருந்து, புகை பிடிக்கும் குழாய்களுக்கும், சுருட்டுகளுக்கும் திரும்பியிருக்கிறார்கள். 1985-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிகல் அசோசியேஷன் அந்தக் கனவை எரித்து சாம்பலாக்கிவிட்டது. புகைபிடிக்கும் குழாய்களிலும், சுருட்டுகளிலும் உபயோகப்படுத்தப்படும் புகையிலை அதிக நிக்கோட்டீன், அதிக புற்றுநோய் விளைவிக்கும் தார் (Tar) ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மற்றும் சிகரெட்டுகளில் உபயோகப்படுத்தும் புகையிலையைப் பார்க்கிலும் அதிக அபாயகரமான கார்பன் மோனாக்சைடு வாயுவை உற்பத்தி செய்கிறது. புகையாத புகையிலைகளைச் சிகரெட்டுகளுக்குப் பதிலிகளாக உபயோகம் செய்வது பாதுகாப்பானது என்று அநேகர், முக்கியமாக இளம் வயதினர், நம்புவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அது அப்படியாக இல்லை. 1985-ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களில் ஒரு 19 வயதானவன் வாய்ப்புற்று நோயால் இறந்தான். அவன் 12 வயதிலிருந்து பொடி போடும் பழக்கத்தைக் கொண்டிருந்தான், ஆனால் புகையாத புகையிலைகள் எச்சரிக்கை வில்லைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதாலும் விளையாட்டு வீரர்கள் அதை விளம்பரப்படுத்தினர் என்பதாலும் அதை விட்டுவிட மறுத்ததாக அவனுடைய தாய் சட்ட சபைத் துணைக்கமிட்டியின் முன்பாகச் சொன்னாள்.
பல் ஈறுக்கும் கன்னத்திற்கும் இடையே வைத்த ஈரப்பதமுள்ள பொடியை நீங்கள் மென்றாலும் உறிஞ்சினாலும் நீங்கள் வாய் புற்றுநோயையும், ஈறு நோயையும், நிக்கோட்டீன் சார்ந்திருத்தலையும் கேட்கிறீர்கள். புகையிலை, ஈறு மற்றும் கன்னத்தைச் சந்திக்கும் இடத்தில் புற்றுநோய் உண்டாகிறது, மேலும் அந்தப் பிளவை உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. புகையாத புகையிலைகள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட புற்றுநோய் விளைவிக்கும் நைட்ரோசாமின்களையும் (nitrosamines) பாலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோ கார்பன்களையும் (polycyclic aromatic hydrocarbons) கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மெல்லும் புகையிலை மற்றும் பொடிகளின் உபயோகம் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அதற்கேற்றவாறு வாய்புற்றுநோயின் அதிகரிப்பும் இருக்கிறது என்றும் உலக கவனிப்பு ஸ்தபனம் அறிவித்தது.
மற்றவர்களின் புகைக்குப் பலியாபவர்கள்
புகையிலை உபயோகிப்பவர்கள் தங்களுடைய சொந்த உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் மற்றவர்களுடையதையும் ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள். மற்றவர்களின் சிகரெட்டுகளிலிருந்து வரும் புகையை உட்சுவாசிப்பது புகை பிடிப்பவர்களின் புகை பிடிக்காத துணைகளில் நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணமாயிருக்கிறது என்று 1985-ஆம் ஆண்டின் பத்துக்கும் மேலான ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. “புகைபிடிக்காதவர்களின் துணைகளைவிட புகைபிடிக்கிறவர்களின் துணைகள் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாவதற்கு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்பதாக ஜப்பான், மேற்கு ஜெர்மனி, கிரீஸ் மற்றும் ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் சுட்டிக் காண்பிக்கின்றன. “ஐக்கிய மாகாணங்களில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற காற்றை அசுத்தப்படுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களின் ஒட்டு மொத்தமான பாதிப்பைக் காட்டிலும் மற்றவர்கள் வெளிவிடும் புகையை உட்சுவாசித்து புற்றுநோய்க்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்” என்று ஒரு ஆராய்ச்சி மதிப்பிட்டது. பிறர் மூலம் வருகிற புகைக்கு பாதுகாப்பான ஒரு அளவு ஒன்றும் இல்லை என்று கனடாவின் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். அது “அறியப்பட்ட ஐம்பதுக்கும் மேலான புற்றுநோயை உண்டாக்கும் பெருட்கள் மற்றும் 3800 இரசாயண கூட்டுப் பொருட்களைக் கொண்டிருக்கிறது.” ஒரு மருத்துவப் பத்திரிகை சொன்னது: “அநேக புகைபிடிப்பவர்களுடன் ஒருவர் முன்பு வாழ்ந்திருந்தாரேயானால் அவருக்குப் புற்றுநோயால் பீடிப்பதற்கான ஆபத்து அதிகம்.”
மற்றவர்களுடைய காற்று மாசுபடுவது புகைபிடிப்பதால் வெளியிடப்படும் புகையைக் காட்டிலும் மற்றொன்றை உட்படுத்துகிறது. புகையை ஊதும் சமயங்களுக்கிடையே கைகளில் வைத்திருக்கும் அல்லது சாம்பல்போடும் தட்டின் மீது இருக்கும் சிகரெட்டுகளிலிருந்து வடிகட்டாத புகை வளைந்து மேலே எழும்புகிறது. இந்தப் பக்கவாட்ட புகையானது புகைபிடிப்போர் உள்ள ஒரு அறையின் 85 சதவிகித புகைக்குக் காரணமாயிருக்கிறது. அது ஃபார்மால்டிஹைடு, அம்மோனியா, அக்ரோலைன், நைட்ரச ஆக்சைடு, ஹைட்ரோகார்பன் மற்றும் நுண் பொருட்கள் (particulate matter) போன்றவற்றையும் கொண்டிருக்கிறது. அது அருகிலுள்ள புகைபிடிக்காதவர்கள் உட்சுவாசிக்கிற புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களை 50 மடங்கு அதிகரிக்கிறது.
புகைபிடிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் அதிகம் சீதளத்தினாலும், குளிர் ஜூரத்தினாலும், மார்ச்சளி நோயினாலும், சுவாச காசத்தினாலும் மற்றும் கபவாதத்தினாலும் பாதிக்கப்படுகிறார்கள். புகைபிடிக்கும் தாய்மார்களின் குழந்தைகளின் கற்கும் திறமை பாதிக்கப்படுகிறது. அவர்கள் அதிகம் மெதுவாக வாசிக்கிறார்கள் என்றும் பள்ளியில், புகைபிடிக்காதவர்களின் குழந்தைகளைக் காட்டிலும் அநேக மாதங்கள் பின்தங்கியவர்களாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சிகள் காட்டியிருக்கின்றன. புகைபிடிக்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் புகைபிடிக்காத தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் இருமடங்கு அடிக்கடி எடை குறைவுள்ளவைகளாகப் பிறக்கின்றன. இந்தியாவில் பெண்களில் 39 சதவிகிதத்தினர் புகையிலை உபயோகிக்கிறார்கள். எடை குறைவாயிருக்கும் குழந்தைகளே அதன் விளைவுகளாயிருக்கின்றன. 1985-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் தி ஹாவார்ட் மெடிகல் ஸ்கூல் ஹெல்த் லெட்டர் “கடைசி மூச்சுத்தினறல்” (The Last Gasp) என்ற கட்டுரையில் மற்றவர்கள் வெளியிடும் புகையை உட்சுவாசிப்பதால் வரும் ஆபத்துக்களைச் சொல்லி கட்டுரையை இந்த வார்த்தைகளுடன் முடித்தது: “புகை பிடிக்கும் பருவ வயதினர் தாங்கள் சிறுபிள்ளைகளுக்கு முன்பாக சிகரெட் பற்றவைக்கும்போது குழந்தைகள் துர்ப்பிரயோகத்தில் அவர்கள் தீவிரமல்லாதது என்று சொல்லமுடியாத ஒரு முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.” மேலும் அது அவர்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் துர்ப்பிரயோகம் செய்வதாக இருக்கிறது!
மக்கள் ஆரம்பிப்பது ஏன்?
இதையெல்லாம் கருதுகையில், மக்கள் ஏன் முதலாவது புகைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள்? புதிதாக புகைபிடிக்க ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் வாலிப வயது தொகுதியிடமிருந்து தோன்றியவர்கள். வியாபார ஸ்தபனங்கள் மறுத்தாலும், அவர்கள்தான் புகையிலை விளம்பரத்தின் இலக்குகளாக இருக்கின்றனர். இந்த வியாபார ஸ்தபனங்கள் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க அநேக வார்த்தைகளை உபயோகிப்பதில்லை, மாறாக அவற்றின் அணுகுமுறை தந்திரமுள்ளதாயும் வெற்றியுள்ளதாயும் இருக்கிறது. ஒரு கேலிச்சித்திரம் வரைபவர் அவற்றின் விளம்பரப் பாணியை கேலியாக எழுதுவதுபோல அது இருக்கிறது: “புகையிலை வியாபார ஸ்தபனங்களாகிய நாங்கள், நீங்கள் வயதுவந்தவர்களாக தோன்ற நினைத்தாலொழிய குழந்தைகளாகிய நீங்கள் புகை பிடிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.” அவர்களுடைய விளம்பரங்கள் இளைஞர்களுக்குப் பிடித்த கவர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றன: “விளையாட்டுப் பந்தய கார்கள், ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் தொங்கு விமானங்கள் (hang gliders), ஜலக்கிரீடைகள், மாட்டுப் பண்ணை அதிபதிகள் (cowboys), விளையாட்டு வீரர்கள் வாட்டசாட்டமான மனிதர்கள், வசீகரிக்கும் அழகுள்ள பெண்கள் இப்படி வெளியில் உல்லாசமாக காலம் கழிக்கிற சந்தோஷமான எல்லா இளைய மற்றும் அழகான ஆட்கள். ஆனால் அதிக பொருத்தமான பின்னணி மருத்துவமனைகள் மற்றும் ஈமச்சடங்கு கூடங்கள்—ஆனால் அது சிகரெட்டுகளை விற்காது.
அநேக இளைஞர்களின் புகழுக்குரிய மாரியேல் ஹெமிங்வே, பருவ வயதினர் புகை பிடிப்பதைப் பார்த்து கலங்கினார். அவர் சொன்னதாவது: “நான் இதை ஒரு கலகத்தைப் போல கருதுகிறேன், அது எவ்வளவு முட்டாள்தனமாகவும் இருக்கிறது. இளைஞர்கள் புகை பிடிப்பதைப் பார்க்கும்போதெல்லாம், ‘நீங்கள் ஏன்தான் புகைபிடிக்கிறீர்களோ? அது ஒரு கொலையாளி என்று அறிந்திருக்கும் ஒரு சமுதாயத்தில் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள் அல்லவா?’ என்று சொல்லாமல் இருக்க முடிவதில்லை.” என்றபோதிலும் புகைபிடித்தல் என்பது சாந்தமுள்ள, பருவமடைந்த, நூதனமான தொகுதியில் இருப்பதை அர்த்தப்படுத்தும். புகைபிடிப்பதனால் இளம் வயதினர் சுயாதீனம் உள்ளவர்களாக உணர்கின்றனர், மாறாக, உண்மையில், அவர்கள் தங்கள் சகாக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிகின்றனர். அவர்கள் வியாபார ஸ்தபனங்களாலும் சாதுரியமாக கையாளப்பட்டிருக்கின்றனர். தங்களுடைய எதிர்காலம் இளைஞர்களில் இருக்கிறது என்பதை வியாபார ஸ்தபனங்கள் அறிந்திருக்கின்றன. இளைஞர்களை அவர்களுடைய இளமைக் காலத்தில் புகைபிடித்தலைச் சார்ந்திருப்பவர்களாக ஆக்கிவிட்டால் அவர்கள் ஆயுட்காலம் முழுவதிலும் நல்ல வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடும்.
ஐக்கிய மாகாணங்களின் அரசாங்க சட்டம் சிகரெட் விளம்பரங்களைத் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஏற்கெனவே தடை செய்கிறது, ஆனால் 1985-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க மருத்துவச் சங்கம் இந்தத் “தடையை மற்ற எல்லா புகையிலை பொருட்களுக்கும் மற்ற எல்லா சாதனங்களுக்கும் விரிவாக்க” முயற்சி செய்தது. உடனே, புகையிலை விளம்பரம் மற்றும் பிரசுரம் செய்யும் தொழில் நிறுவனங்களிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. சட்டத்தின் முதல் திருத்தத்தின்கீழ் அவர்களுடைய வியாபார பேச்சுரிமைகளை அது மீறுவதாக இருக்கும்! ஆரோக்கியம், இளமை மற்றும் புகையிலையைச் சார்ந்திருக்கும் பிரச்னைகளை மறுப்பதில் தோல்வியடைந்தவர்களாய், சில வியாபார ஸ்தபனங்கள் புதிய ஒன்றை உண்டாக்குகின்றன: அவற்றின் மற்றும் புகை பிடிப்பவரின் சமூக உரிமைகள். உதாரணமாக, பிலிப் மோரிஸ் வாதாடுகிறார்: “இன்று, என்னுடைய புகை பிடிப்பதற்கான சகிப்புத்தன்மை தாக்குதலுக்குள்ளாகலாம். நாளை, இன்னொருவருடைய ஜெபம் மற்றும் வாழ்வதற்கான ஒரு இடத்திற்கான உரிமைபற்றிய சகிப்புத்தமை.” அவர்கள் உண்மையில் கவலைக்கொள்ளும் உரிமை அவர்களுடைய பணம் சம்பாதிப்பதற்கான போதை மருந்தை உண்டாக்குவதற்கான “உரிமை.”
நிறுத்துவது ஏன் அவ்வளவு கடினமாயிருக்கிறது?
புகையிலையில் நிக்கோட்டீன் இருக்கிறது. நிக்கோட்டீன் ஒரு போதை மருந்து. அது போதையின் உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறது. மேலும் அது சார்ந்திருக்கும் நிலையை உண்டாக்குகிறது. சிகரெட் வியாபார ஸ்தபனங்கள் இதை மறுக்கின்றன, ஆனால், “நம்முடைய சமுதாயத்தில் நிக்கோட்டீன்தான் அதிகமாக சார்ந்திருத்தலைக் கொண்டுவரும் போதை மருந்து” என்று தேசீய போதை மருந்து துர்ப்பிரயோக ஸ்தபனத்தின் இயக்குநரான டாக்டர் வில்லியம் போலின் சொன்ன கருத்தை ஐக்கிய மாகாணங்களின் இரண சிகிச்சை உயர் அதிகாரி டாக்டர் கூப் சுட்டிக்காண்பிக்கிறார்.
கோடிக்கணக்கானோர் நிக்கோட்டீன் கொக்கியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள், அதை எவரும் ஒத்துக்கொள்வதில்லை. ‘எந்த நேரத்தில் விட்டுவிட விரும்பினாலும் என்னால் கூடும்’ என்ற உதவாத வார்த்தைகளினால் தங்கள் மனதை சமாதானம் செய்துகொள்கிறார்கள். ஒரு தடவை சிக்கிக்கொண்டால் அதை விட்டு விலகுவது மனவேதனையை உண்டாக்குகிறது. இலட்சக்கணக்கானோர் முயற்சி செய்கிறார்கள், பலர் வெற்றி பெறுகிறார்கள், அநேகர் தோல்வியடைகிறார்கள். 1980-ஆம் ஆண்டின் ஆராய்ச்சி ஒன்று ஐக்கிய மாகாணங்களில் புகை பிடிப்போரில் 60 சதவிகிதத்தினர் புகை பிடிப்பதை நிறுத்திவிட உறுதியாக முயற்சி எடுத்ததாக 1985-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகையிலை மற்றும் ஆரோக்கியம் என்ற ஒரு ஆராய்ச்சியில் ஐக்கிய மாகாணங்களின் இரண சிகிச்சை மேலதிகாரி அறிக்கை செய்தார். இருந்தபோதிலும் அவர்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு ஆண்டுக்குள் பின்வாங்கிவிட்டனர்.
நிறத்திவிடுவது என்பது சாதாரண காரியமல்ல, ஆனால் அது முயற்சி செய்யக்கூடிய தகுதியுள்ளது. ஆகவே அதைச் செய்யுங்கள். உங்களுக்காகச் செய்யுங்கள், உங்களுடைய சுயமரியாதைக்காக, உங்களுடைய ஆரோக்கியத்திற்காக, உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அதைச் செய்யுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் செளகரியத்திற்காகவும், நலனுக்காகவுங்கூட அதைச் செய்யுங்கள். உங்களை ஒரு கிறிஸ்தவனாகக் கருதினால் கடைசியாகச் சொல்லப்பட்டது முக்கியமான காரணமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் அயலகத்தானை நேசிக்க வேண்டும். அவனுடைய காற்றை உங்களுடைய விஷமுள்ள புகையினால் மாசுபடுத்துவது நேசிப்பதாக இருக்காது. (மத்தேயு 7:12; 22:39) இதன் காரணமாகவே புகையிலை உபயோகிப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக மாறும்போது அந்தப் பழக்கத்தை விட்டுவிடுகின்றனர், மற்றும் புகையிலை பொருட்களை முன்பு விற்பனை செய்த சாட்சிகள் தொடர்ந்து அதை விநியோகிப்பதில்லை.
நிறுத்திவிடுவதற்கு எளிதான வழியில்லை. நீங்கள் புகைபிடிப்பவராயிருந்தால் நீங்கள் ஒரு போதை மருந்து உபயோகிப்பவர், நிக்கோட்டீன் உச்ச நிலையைத் தொடர்ந்து காத்துவர முயற்சி செய்கிறீர்கள். பழக்கத்தை நிறுத்தியவர்கள் நிக்கோட்டீனிலிருந்து விடுபடுவது எளிதான காரியமல்ல என்பதை அறிவார்கள். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் சம்பவிக்கும் இலட்சக்கணக்கான புகையிலை சம்பந்தப்பட்ட நோயும் மரணமும் விட்டுவிலகுவதற்கான வல்லமையுள்ள ஊக்குவிப்புக்களாக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான புகைபிடிப்போருக்கு இந்த ஊக்குவிப்புகள் தொடர்ந்து ஈடுபடுவதற்கான சார்ந்திருத்தலின் தூண்டுதலைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ளவைகளாக இல்லை. வழக்கமான நிக்கோட்டீன் உட்கொள்ளுதல் ஏம்ஃபிடாமைன்கள் (amphetamines) கோகெய்ன் மற்றும் ஹெரோயின் உபயோகிப்புக்கு ஒப்பிடப்படக்கூடியதாக இருக்கிறது என்று சமீபகால விஞ்ஞான ஆராய்ச்சி காட்டுகிறது. நிக்கோட்டீன், “மூளை அலைகளின் வேலையை பாதிப்பதன் மூலமாக மனோநிலையை மாற்றுவதாலும், மனிதர்கள், மற்றும் பரிசோதனை சாலை மிருகங்களில் தனிப்பட்ட நடத்தையை விளைவிக்கும் உயிரியல் பலனாகச் செயல்படுவதாலும் (நிக்கோட்டீன் உச்சநிலை) பரிசோதனை சாலை ஆராய்ச்சிகளில் சார்ந்திருத்தலை உண்டுபண்ணும் போதை மருந்துக்கான தொழில் நுட்ப தராதரங்களைப் பூர்த்தி செய்கிறது.”
புகை பிடிப்பவர்களுக்கு அம்மோனியம் குளோரைடு கொடுத்தபோது சிறுநீரகத்தின் நிக்கோட்டீன் வெளியேற்றம் ஆறுமடங்கு அதிகரித்தது. அதை ஈடுகட்ட 20 சதவிகிதம் அதிகம் சிகரெட்டுகள் உபயோகித்து தங்கள் உடல் வாஞ்சிக்கிற நிக்கோட்டீனைப் பூர்த்தி செய்தனர். தார் (Tar) குறைவாக உள்ள சிகரெட்டுகளுக்கு மாற்றிக்கொள்கிற அக்கறையுள்ள புகைபிடிப்போர், “ஆழ்ந்த மற்றும் அதிக அளவு புகையை உறிஞ்சி வெளிவிடுவதன் மூலம் ஈடு செய்கிறார்கள்” என்று சையன்ஸ் நியூஸ் கட்டுரையொன்று காட்டுகிறது. “தானாக சரிசெய்துகொள்ளப்படும் நிக்கோட்டீன் அளவுகள், நிக்கோட்டீன் சரீர சார்ந்திருத்தலுக்கு வழிநடத்துகிறது என்பதற்கு அதிக அத்தாட்சி அளிக்கிறது” என்று அந்தக் கட்டுரை சொன்னது. இரத்தக் குழாய்கள் மூலமாக நிக்கோட்டீனைப் புகட்டுவதாலும் நிக்கோட்டீன் அளவை அதிகரிக்க முடிகிறது மற்றும் அது புகை பிடித்தலின் தேவையை நீக்குகிறது என்று பரிசோதனை சாலை ஆராய்ச்சிகள் காட்டியிருப்பது அக்கறையூட்டுவதாயிருக்கிறது.
புகையிலை பழக்கத்தைத் துண்டிப்பதற்கு எது சிறந்த வழி? பிப்ரவரி 1986, ஹெல்த் பத்திரிகை வெளியீட்டின் இந்த மேற்கோள்கள் பொதுவான கருத்தைப் பிரதிபலிக்கின்றன: “சுய உந்தும் சக்தி (self motivation) என்ற ஒரே காரியம்தான் ஒரு புகைபிடிப்பவரைக் காப்பாற்றும்.” “உங்களை விடுவிக்கச் செய்வதற்கு அல்லது சிகரெட்டுகளிலிருந்து உங்களை விலகியிருக்கச் செய்வதற்கு மாயாஜால மாத்திரை ஒன்றும் இல்லை.” “ஒவ்வொரு நாளும் மக்கள் புகைபிடிப்பதை நிறுத்தி வருகிறார்கள்—நிக்கோட்டீனைச் சார்ந்திருப்பவர்களும் மற்றும் பழக்கத்திற்கு அடிமையானவர்களும்கூட.” “திடீரென்று முழுவதும் நிறுத்திவிடுவது ஒருவரையும் கொன்றுவிடவில்லை, மாறாக, அதுவே புகைபிடித்தலை உதறித்தள்ள மிகச் சிறந்த வழியாகத் தோன்றுகிறது.” “எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கையில், பழக்கத்திற்கு ஒரு துரிதமான உதறித்தள்ளுதலையே பெரும்பாலான வல்லுநர்கள் ஆலோசனையாகக் கொடுக்கிறார்கள்.” “திடீரென்று முழுவதும் நிறுத்துங்கள், சாம்பல் தட்டுகளைத் தூக்கி எறியுங்கள். சிகரெட்டுக்கான உந்துவித்தல் வரும்போது, அங்குமிங்கும் நடமாடுங்கள், ஓடுங்கள், வெந்நீரில் குளியுங்கள், கடைக்குப்போய் சாமான் வாங்குங்கள். வேறுவிதமாக சொல்லப்போனால், ‘புகைபிடிப்பதைத் தவிர மற்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்!’”
நீங்கள் புகை பிடிக்கிறவராயிருந்து அதை விட்டுவிட விரும்பினால் அனுபவித்தின் இந்தக் குரல்களுக்குச் செவிகொடுங்கள். அது போதாதென்றால், இயேசு கிறிஸ்துவின் அதிமுக்கியமான குரலுக்குக் கீழ்ப்படியுங்கள். “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்று அவர் சொன்னார். (மத்தேயு 22:29) நீங்கள் உங்களை நேசிப்பதால் விட்டுவிடுங்கள். மேலும், நீங்கள் உங்களை நேசிப்பதுபோல உங்கள் அயலகத்தாரையும் நேசிப்பதால் விட்டுவிடுங்கள். (g86 7/22)
[பக்கம் 28-ன் பெட்டி]
ஜெர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிகல் அசோசியேஷன் (JAMA) பத்திரிகையில் வெளிவந்த தலையங்கச் செய்தி அது பெயரிட்டு அழைக்கும் புகையிலை கலாச்சாரம் என்பதைப்பற்றி இவ்வாறு சொன்னது:
“ஒரு சமூகமாக புகையிலையின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஆபத்தின் வினைமையான தன்மைக்கு நாம் விழிப்புணர்ச்சி கொண்டவர்களாக இல்லை. கோகெய்ன், ஹெரோயின், ஏய்ட்ஸ், போக்குவரத்து விபத்துக்கள், கொலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் எல்லாம் சேர்ந்து உண்டாக்கக்கூடிய உயிர்சேதத்தையும் டாலர்கள் செலவையும்விட புகையிலை கலாச்சாரத்தினால் அதிகம் உண்டாகிறது என்பதை நாம் உணர வேண்டும். மற்றும் ஐக்கிய மாகாணங்களில் புகையிலை கலாச்சாரமே இன்று மிகவும் பயங்கரமான போதை மருந்து சார்ந்திருத்தலாக இருக்கிறது.”
ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய்க்கு எதிரான போருக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான டாலர்களுக்குக் கவனத்தைத் திருப்பிய பிறகு அது கூறுகிறது: “அதற்கு இணையாக புற்றுநோய்க்கான காரணங்களுக்கான போர் காணப்படுவதில்லை. . . . இந்தத் தேசத்தின் குடிமக்கள் ஒரு நாளைக்கு 1000 என்ற வீதத்தில் புகையிலை கலாச்சாரத்திற்கு உயிரை இழக்கிறார்கள் என்று இப்பொழுது மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.”
புகையிலை மற்றும் அதனால் விளையும் நோய்களான “புற்றுநோய் எம்ஃபிசேமா மற்றும் இருதய சம்பந்தமான நோய்கள்” ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு தலையங்கம் செய்த சிபாரிசு: “புகையிலை உபயோகத்தினால் சமூகத்திற்கு எவ்வளவு இழப்பாகிறதோ அந்த அளவுக்கு புகையிலை வியாபாரத்திலிருந்து வரிவருமானம் சம்பாதிப்பதே இறுதியாக அடையும் இலக்காக இருக்கிறது. அது நம்முடைய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் (நம் எல்லாருக்கும்) ஒவ்வொரு சிகரெட்டுகள் அடங்கிய பாக்கெட்டுக்கும் 2.60 டாலருக்கும் அதிகமாக செலவாகிறது என்றால் புகைபிடிப்பவர்கள் அதற்கு விலைகொடுக்க வேண்டியவர்களாயிருக்கின்றனர் . . . புகையிலை உற்பத்தி செய்வதற்காக அரசு உதவித்தொகைகள் குறைக்கப்பட வேண்டும் . . . எல்லா புகையிலை பொருட்களின் மேலும் எச்சரிப்பு சீட்டுகள் ஒட்ட வேண்டும் . . . அரசு தகவல் சாதனங்களிலிருந்து எல்லா புகையிலை விளம்பரங்களும் நீக்கப்பட வேண்டும் . . . புகழ் பெற்றவர்களும் மற்றும் படக்காட்சி தயாரிப்பாளர்களும் புகையிலை உபயோகத்தை வசீகரமுள்ளதாக ஆக்குவதைத் தடுக்க வேண்டும்.”
“தெளிவான நோக்குநிலைக்கும் தைரியத்திற்கும் நேரம் வந்துவிட்டது என்று நம்புகிறேன். எல்லைக்கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. எக்காள அழைப்பு ஒலிக்கிறது.”—JAMA, ஏப்ரல் 11, 1986.
[பக்கம் 25-ன் படம்]
புகை பிடித்தலின் விளைவாக ஐரோப்பா/அ.ஐ.மா.வில் 20% மரணம்
புகை பிடித்தலின் விளைவாக உலகத்தில் 5% மரணம்
புகை பிடித்தலின் விளைவாக கனடாவில் 17% மரணம்
[பக்கம் 26-ன் படம்]
புகை பிடிப்பவர்கள், நிக்கோட்டீன் சார்ந்திருத்தலால் சிறைபட்டிருக்கிறார்கள், ஒன்றுமறியா ஆட்களையும் பலியாக்கி துன்பத்திற்குள்ளாக்குகிறார்கள்