பைபிளின் கருத்து
வாழ்க்கையில் ஏன் இவ்வளவு அநியாயம்?
லைசென்ஸ் வைத்திராத ஒரு 17 வயது பையன் குடித்துவிட்டு, பதிவு செய்யப்படாத ஒரு மோட்டார் வண்டியை சாலையில் வேகமாக ஓட்டிக் கொண்டு வருகிறான். எச்சரிப்பேதுமின்றி, வேகமாக வந்து கொண்டிருந்த வண்டி மெதுவாகப் போய்க் கொண்டிருந்த ஒரு மோட்டார் வண்டியின் பின்புறத்தை இடித்து, சாலையில் அதை 230 அடி (70 மீட்டர்) தூரத்துக்குத் தள்ளி திடுமென தீப்பற்றி எரிகிறது. மெதுவாகச் சென்று கொண்டிருந்த வண்டியின் பின் சீட்டில் அமர்ந்திருந்த தகப்பனும் உறங்கிக் கொண்டிருந்த அவருடைய 13 வயது பெண்ணும் அவ்விடத்திலேயே எரிந்து சாம்பலாகிறார்கள். எரிந்து கொண்டிருந்த வண்டியின் முன் சீட்டிலிருந்த தாயை, மகன் வெளியே இழுத்துப் போடுகிறான். அவளுடைய இரண்டு கால்களின் சதையும் எரிந்து விட்டிருக்கிறது. ஒரு சில மணி நேரங்களில் அவள் இறந்து போகிறாள். வண்டியை ஓட்டி வந்த அவர்களுடைய 21 வயது மகன் மட்டுமே உயிர் பிழைத்தான்.
குற்றவாளியான ஓட்நருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை? முன்னூறு மணி நேரங்கள் சமுதாய சேவை, 39,000 ருபாய் அபராதம் மற்றும் மூன்று வருடங்களுக்கு நல்நடத்தைப் பத்திரம்!
தீர்ப்பின் முடிவைக் கேட்டபோது மகன் டக்லஸ் பின்வருமாறு புலம்பினான்: “குடித்துவிட்டு ஓட்டுவதைத் தடை செய்வதற்கு அரசாங்கம் இலட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்யத் தயாராக இருக்கும்போது, எவராவது ஒருவர் கொல்லப்படுகையில், பொருத்தமான தண்டனைத் தீர்ப்பை வழங்க அவர்கள் தயாராக இல்லாதிருப்பது எனக்கு அநியாயமாகத் தோன்றுகிறது.” “சாலையில் நீதி” என்ற தலைப்பின் கீழ் சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தாள், வழக்கமாக அறிவிக்கும், அனேக வாகனங்கள் சம்பந்தப்பட்ட அநீதியான தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
ஒருவேளை நீங்களும் கூட அநீதிக்குப் பலியாகியிருக்கலாம்—நீதிமன்றங்களிலோ அல்லது குடியிருக்க ஒரு வீட்டைத் தேடுகையிலோ அல்லது வேலை செய்யும் போதோ இது உங்களுடைய அனுபவமாக இருந்திருக்கலாம்.
அநியாயம் ஒரு உலகப் பிரச்னை
நீங்கள் எங்கு பார்த்தாலும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் காண்கிறீர்கள். உதாரணமாக சில தேசங்களில் வீணாய்ப் போகும் அளவுக்கு ஏராளமான உணவும் அங்குள்ளவர்கள் பெருந்தீணிக்காரராய் இருப்பது சாதாரணமாயும் இருக்கையில், மற்ற தேசங்களில் இலட்சக்கணக்கானோருக்குச் சத்துணவு கிடைக்காமலும் அல்லது அவர்கள் பட்டினியால் சாவதும் ஏன்? 1983 ஜூலை மாதம், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, பட்டினிச் சாவை அணுக விடாது தவிர்ப்பதற்கு இலட்சக்கணக்கானோருக்குத் தானியங்களைக் கொடுத்து உதவ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது. 1985-ன் போது எத்தியோப்பியாவில் நடந்த சம்பவங்கள் காண்பிக்கிறவிதமாகவே பட்டினியால் மாண்டவர் பலராவர்.
அநியாயத்துக்கு மற்றொரு உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள்: சில ஆட்கள் மாளிகைகளில் வாழும்போது, அவர்களுடைய உடன்மானிடராகிய இலட்சக்கணக்கானோர் முழுமையான ஏழ்மையின் காரணமாக மிக மோசமாகச் சிறிய மண் குடிசைகளில் வாழ்கிறார்கள். 1984-க்கான தி நியு புக் ஆப் உவோர்ல்ட் ராங்கிங்ஸின் பிரகாரம் “கிரகத்திலுள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு—சுமார் நூறு கோடி மனிதர்கள்—மேற்கத்திய சமுதாயங்களில் வாழும் பெரும்பாலான ஆட்களால் நினைத்தும் பார்க்க இயலாத அளவுக்கு அத்தனை முழு அளவான மற்றும் மனித தன்மைகளைப் போக்கி விடும் வகையான ஏழ்மையில் வாழ்ந்து வருகிறார்கள்”.
ஆனால் வீடுகள் இருக்கும் இடங்களிலும் கூட சில சமயங்களில் வீட்டிலிருந்து பல மைல்கள் தொலைவிலுள்ள ஒரு கிணறு அல்லது ஆற்றிலிருந்து தண்ணீர் சுமந்து வருவது அனேக தேசங்களிலுள்ள பெண்களின் முக்கிய வேலையாக இருக்கிறது. ஒரு தேசத்தில் 99.7 சதவிகித வீடுகளில் குழாய் தண்ணீர் கிடையாது. மற்றும் ஐந்து தேசங்களில் 95 சதவிகித வீடுகளில் குழாய் தண்ணீர் கிடையாது. 50 க்கும் அதிகமான தேசங்களில் 50.6—88.9 சதவிகிதம் வீடுகளில் குழாய் தண்ணீர் கிடையாது.
இன்று மனிதவர்க்கத்தை வாதித்துக் கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளில் இவை சிலவாக இருக்கின்றன. ஆனால் இது ஏன் இவ்வளவாக இருக்கிறது? கடவுள் இதை ஏன் அனுமதிக்கிறார்? மற்றும் ஏன் இவ்வளவு காலத்துக்கு? இதைக் குறித்து எப்போதாவது அவர் எதையாவது செய்வாரா?
கடவுள் பட்சபாதத்தை வெறுக்கிறார்
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா “பட்சபாதமுள்ளவரல்ல” என்றும் “நியாயக் கேடில்லாத சத்தியமுள்ள தேவன்” என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறார். (அப்போஸ்தலர் 10:34, 35; உபாகமம் 32:4) ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுள் தாம் ஓரவஞ்சனையையும் நியாயக்கேட்டையும் வெறுப்பதை வெளிப்படுத்தினார். எவ்விதமாக? எந்தவிதமான பட்சபாதத்தையும் அல்லது அநியாயத்தையும் தடை செய்யும் அறிவுரைகளைத் தெய்வீகச் சட்டங்களில் எழுதி வைக்கும் படியாகச் செய்வதன் மூலம். செல்வந்தனாகவும் சிறியவனாகவும் வசதியில்லாதவனாகவும் இருப்பவனிடமோ தனி சலுகையைக் காண்பிப்பது கடவுளுடைய தராதரங்களை மீறுவதாக இருந்தது. தெரிந்து கொள்ளப்பட்ட பூர்வ தேசத்தாரிடமாகப் பின்வரும் கட்டளைக் கொடுக்கப்பட்டது: “நியாய விசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யமாலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும் நீதியாகப் பிறனுக்கு நீயாயந்தீர்ப்பாயாக.” மிருகங்களைக் கொடுமையாக நடத்துவதும் கூட கண்டனம் செய்யப்பட்டது.—யாத்திராகமம் 23:3-5; உபாகமம் 22:10; 25:4; நீதிமொழிகள் 12:10.
இப்பொழுது, மனிதன் தன்னுடைய உடன் மானிடனைக் கையாளும் வதித்தில் நியாயக் கேட்டையும் மிருக சிருஷ்டிகளை நடத்தும் விதத்தில் கரிசனையற்றத் தன்மையையும் வேரோடு அழிப்பதற்குச் சர்வ வல்லமையுள்ள கடவுள் இவ்வளவு முக்கியத்துவத்தைக் கொடுப்பாரேயானால், இன்று எல்லா இடங்களிலும் காணப்படும் அநியாயத்தைக் குறித்துக் கடவுள் தாமே ஏதாவது செய்வார் என்று நாம் எதிர்பார்ப்போமல்லவா?
அநியாயத்தின் மூல காரணம்
கடவுளுடைய பிரதான எதிரியான பிசாசாகிய சாத்தானே அநியாயத்துக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் காரணமாக இருப்பதாகப் பைபிள் காண்பிக்கிறது. மனித வாழ்க்கையின் ஆரம்பத்தில் நேர்மையற்ற செயலுக்கு அவனே முதல் காரணமாக இருந்தான். அப்போது முதற்கொண்டு, அநியாயத்தைத் தூண்டி அதைக் கொழுந்துவிட்டு எறியும்படி செய்திருக்கிறான். இதன் மூலமாக யெகோவாவின் மீதும் அவர் அவருடைய சிருஷ்டிகளைக் கையாளும் நியாயமான வழிகளின் மீதும் அவதூறைக் குவிக்கும் எண்ணத்தோடு இதைச் செய்திருக்கிறான்.—ஆதியாகமம் 3:4, 5; யோவான் 8:44; வெளிப்படுத்தின விசேஷம் 12:9.
இந்த அநீதி நிறைந்த நாகரீகத்தின், கடைசி நாட்கள் என்பதாகப் பைபிள் அழைக்கும் இந்தக் காலத்தில் பூமியிலுள்ள எல்லா பகுதிகளிலும் வாழும் ஆட்களின் மீது சாத்தான் அதிகமான இன்னல்களைக் கொண்டு வருவான் என்று முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏன்? ஏனென்றால் கொஞ்சக் காலம் மாத்திரமே அவனுக்கு உண்டு என்பதை அவன் அறிவான். ஆகவே அநியாயமும் மற்ற விதமாக அநீதிகளும் அதிகரிக்கையில் அனாவசியமாக கலங்கிப் போய் விடாதீர்கள். மாறாக, முழுமையான ஒரு மாற்றம் சமீபத்தில் இருப்பதைக் காட்டும் பல அம்சங்களடங்கிய அடையாளத்தின் பாகமாக இந்தச் சம்பவங்கள் இருப்பதைக் கவனியுங்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 12:12; தானியேல் 12:4; 2 தீமோத்தேயு 3:1.
அநியாயம் நீக்கப்படுதல்
அநியாயம் என்றுமாக நீக்கப்படுவது வீணான நம்பிகையாக—விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட எண்ணமாகக் கூட இருப்பதாகத் தோன்றலாம். சட்டத்தையும் ஒழுங்கையும் நிர்வகிக்கும்படியாகத் தொடர்ந்து மனிதன் அனுமதிக்கப்பட்டால் அவ்விதமாக இருக்கலாம். ஆனால் அநியாயத்திற்கு வரப்போகும் நிரந்தரமான முடிவு தெளிவாக இருக்கிறது. யெகோவா தேவன் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பிசாசையும் அதோடு கூட இப்பொழுது சாத்தானுடைய கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பொல்லாத ஒழுங்கு முறையையும் அழித்துவிட முடியும். அதை அவர் அழித்தும் விடுவார்.—ரோமர் 16:20; 1 யோவான் 2:15-17.
மேலுமாக கடைசி நாட்களில் அனைத்துலகையும் பாதிக்கிற அநியாயம் ஒரே ஒரு மனித தலைமுறை காலம் மட்டுமே இருக்கும் என்பதாக இயேசு காண்பித்தார். (மத்தேயு 24:3, 34) அப்படியென்றால் 1914-ல் வாழ்ந்திருந்த சிலருடைய வாழ்நாட்காலத்திற்குள்ளேயே, அநியாயம் என்றுமாக ஒழிக்கப்பட்டுப் பூமி முழுவதிலும் நியாயம் நிலைநாட்டப்படுவதைக் கடவுள் பார்த்துக் கெள்வார். நீதியுள்ள அவருடைய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, “தமது கண்கண்டபடி நியாயந்தீர்க்காமலும் தமது காது கேட்டபடி தீர்ப்புச் செய்யாமலும் நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரிப்பார்.” “அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்”.—ஏசாயா 11:3, 4; 42:1.