விவாகத்திற்குப் புறம்பான உறவு—ஏன் கூடாது?
நீ மட்டும், நீ மட்டுமே.” பிரசித்திப்பெற்ற ஒரு பாடலின் இந்த வார்த்தைகள், ஆண்களும் பெண்களும் தாங்கள் மணக்கப்போகும் ஆட்களிடமாக வெளிப்படுத்தும் உணர்வாகும். ஆனால் இந்த உண்மைத் தன்மை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கிறது?
விவாகத்திற்குப் புறம்பான விவகாரங்கள் நவீன சமுதாயத்தில் சர்வ சாதாரணமான காரியமாகிவிட்டதால் அப்படி ஒரு உறவை வைத்திராதது அசாதாரணமானது என்று கருதப்படுகிறது. உண்மையில்லாமல் இருப்பதைக் கண்டனம் செய்பவர்களும், அதை எதிர்ப்பவர்களும் அதைச் சிபார்சு செய்பவர்களும் இருக்கிறார்கள், ஒரு நல்ல விவாகத்தை அது உண்டு பண்ணுகிறது என்று சிலர் உரிமை பாராட்டுகின்றனர். உளநூல் வல்லுநரான டானி லேக்கும், பத்திரிக்கையாளர் ஆன் ஹில்ஸும் விவகாரங்கள்: விவாகத்திற்குப் புறம்பான உறவுகளைப் பகுத்தாராய்தல் என்ற தங்களுடைய புத்தகத்தில்: “விவாகமான பெரும்பாலான ஆண்களும் பெண்களும் விவாகத்திற்குப் புறம்பாகக் கொள்ளும் இரகசியமான பாலுறவுகளில் அவர்களுடைய வாழ்க்கை வளமூட்டப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமிருக்க முடியாது.”
பிரசித்திப்பெற்ற ஒரு மகளிர் பத்திரிகை வெளிப்படையாக பின்வருமாறு கேட்கிறது: “ஒரு இரகசிய உறவை கொண்டிருப்பது உங்களுடைய விவாகத்தைப் பாதுகாக்குமா?” ஒரு உறவைக் கொண்டிருப்பதுதானே உங்களுடைய விவாக துணைவரை அதிகமாக மதித்துணரவும், உங்களுடைய பாலுறவு ஈடுபாடுகளின் குறைபாடுகளை நிறைவுசெய்யவும் உதவுகிறது என்று அநேகமாய் விவாதிக்கப்படுகிறது. நீங்கள் அதிக அனுபவமுள்ளவர்களாவதற்கும், உங்களுடைய துனைவரோடும் பிள்ளைகளோடும் ஒத்துப்போவதற்கும், எனவே அதிக சந்தோஷமாயிருப்பதற்கும் வழிவகுக்கிறது என்று அவர்கள் உரிமைப் பாராட்டுகின்றனர். உங்களுக்கு விவாகத்திற்குப் புறம்பே ஒரு உறவு இல்லாவிட்டால், நீங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறீர்கள் என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா?
ஒரு இரகசிய உறவு விவாகத்தை மேன்மைப்படுத்துகிறதா?
விவாகத்திற்குப் புறம்பான விவகாரங்கள் பிரபலமடைவதானது நம்முடைய நாளில் அதிகரிக்கும் விவாகரத்திற்குக் காரணமாக இருக்கிறதா? சுவீடனில் ஐந்து விவாகங்களில் மூன்று விவாகரத்தில் முடிவடைகின்றன. மற்ற தேசங்களின் புள்ளிவிவரங்களும் இதைப்போலவே இருக்கின்றன—“1983-ம் ஆண்டின் விவாகம் மற்றும் விவாகரத்து புள்ளிவிவரம்” என்ற பெட்டியைக் கவனியுங்கள்.
விபச்சாரம் எந்தளவுக்கு இவ்விதமான விவாகரத்துக்குக் காரணமாக இருக்கிறது? எண்ணிக்கைப் பற்றிக் குறிப்பிடுகிறவர்களாக லேக்கும் ஹில்ஸும் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்: “நாற்பது வயதிற்குக் கீழே இருக்கும் விவாகரத்து செய்யப்பட்ட ஆண்களில் பாதி பேர், நீதிமன்றத்தில் பதிவுசெய்திருந்த தங்களுடைய மனுக்களில் விபசாரத்தைக் காரணமாக காட்டியிருந்தனர். இதைவிட அதிகமான விவாகங்களில் விபசாரம் ஏற்பட்டிருக்கும் என்றும் ஆனால் மனுவில் அது காரணமாகக் காண்பிக்கப்படவில்லையென்றும் நம்புவதற்கு காரணம் இருக்கிறது. அதே சமயத்தில், ஒவ்வொரு வருடமும் விவாக ரத்துக்களைக் காட்டிலும், விவாகத்திற்குப் புறம்பான விவகாரங்கள் அதிகமாக இல்லையென்றால், இது அதிக ஆச்சரியமாக இருக்கும்.”
சீனாவில், சமுதாய அறிவின் ஷாங்காய் அகாடாமி சமீபத்தில் நடத்தின ஒரு சுற்றாய்வில், கணவன் மனைவி உண்மையாக நடந்து கொள்ளாமை நாட்டில் இருக்கும் விவாகரத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது தெரியவந்தது. விவாகத் துணைவருக்கு உண்மையாக இல்லாமையின் விளைவாக ஏற்பட்டிருக்கும் விவாகரத்து, “கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது,” என்பதாக ஷாங்காய் அறிக்கை கூறுகிறது.
சந்தேகமில்லாமல், விவாகத்திற்குப் புறம்பான விவகாரங்கள் தானே, விவாகங்கள் சீர்கெட்டுப்போவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே, ஸ்திரமற்ற ஒரு விவாகத்தைப் பலப்படுத்த, ஒரு இரகசிய உறவு கொண்டிருப்பதைச் சிபார்சு செய்ய முடியுமா? 30-லிருந்து 40 சதவீதத்தினரைக் கொல்லும் ஒரு மருந்தை சிகிச்சைக்காக சிபார்சு செய்ய முடியுமா? முடியவே முடியாது!
இத்தகைய உறவை ஒருவருடைய விவாகத் துணைவருக்கு அறியாமல் இரகசியமாக வைப்பதுதானே சிறந்தது என்று சிலர் விவாதிக்கின்றனர். ஆனால் எவ்வாறு? லேக்கும் ஹிலசும் பின்வருமாறு விவரிக்கின்றனர்: “சாதாரணமாக இரகசிய விவகாரங்கள் பொய்களாலும் வஞ்சகத்தாலும் மூடி மறைக்கப்படுகின்றன. ஒரு உறவு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, அது முடிவடைந்தாலும்சரி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாலும்சரி, சொல்லப்படும் பொய்கள் விவாகத்தை அல்லது விவாக உறவின் சில அம்சங்களைப் ‘பாதுகாக்கவே’ உருவாக்கப்படுகின்றன. அந்தப் பொய்களில் பாதி உண்மை இருக்கின்றன, ஏனெனில் முழு உண்மை எதிர்ப்படுவதற்கு அதிக வேதனையாக இருக்கும், அல்லது கணவன் மனைவிக்கு இடையேயுள்ள உறவை முற்றிலுமாக மாற்றிவிடக்கூடும்.”
ஒரு ஆணும் பெண்ணும் விவாகஞ் செய்யும்போது, அவர்கள் தங்களை ஒரு ஒப்பந்தத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்கின்றனர். ஒப்பந்தத்தை முறிப்பதுதானே ஏமாற்றுதலாக, வஞ்சித்தலாக இருக்கிறது. பொய்களும், வஞ்சித்தலும், பாதி உண்மைகளும் விவாகத்தில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதா? எனவே, விவாகத்திற்குப் புறம்பான ஒரு உறவைக் குறித்து யோசிப்பதற்கு முன்பு ஒருவர் தன்னைத்தானே பின்வருமாறு கேட்டுக்கொள்வது நல்லது: இதில் உட்பட்டிருக்கும் எல்லோருமே கூடுதலான மகிழ்ச்சியைக் காண்பார்களா? குற்றமுள்ள உணர்வுகளும் கடைசியில் கண்டுபிடிக்கப்படுவோம் என்ற பயமும் தொடர்ந்திருப்பதைப் பற்றியதென்ன?
விவாகத்தின் பிரதானமான நோக்கம் உலகத்தில் பிள்ளைகளைப் பிறப்பித்தல் என்றும் பிள்ளைகள் வளர்ந்துபோன பின்பு துணைவருடன் சேர்ந்திருப்பதன் முக்கியத்துவம் மறைந்துவிடுகிறது என்றும் சிலர் வாதாடுகிறார்கள். பாலுறவு சம்பந்தமாக ஒரு மறுமலர்ச்சி இருக்கமுடியும் என்று உரிமைப்பாராட்டுகின்றனர். அப்படியென்றால் விவாகத்திற்குப் புறம்பே ஒரு உறவைக் கொண்டிருப்பதில் என்ன தவறு இருக்கிறது?
பாலுறவு சம்பந்தமான மறுமலர்ச்சி
நடுவயதினர் தங்களுடைய பிறப்புமூல சக்திகளை மீண்டும் மலரச் செய்ய விவாகத்திற்குப் புறம்பே ஒரு உறவைக் கொண்டிருப்பதை உளநூல் மருத்துவரும் குடும்ப ஆலோசகர்களும் சிபாரிசு செய்கின்றனர். லேக் மற்றும் ஹில்ஸ் என்பவர்கள் பின்வருமாறு உரிமைப்பாராட்டுகின்றனர்: “நடுத்தர வயதில் விவாகத்திற்குப் புறம்பே ஒரு இரகசிய உறவைக் கொண்டிருப்பது ஒரு விவாகத்திற்கு அதிக நிலையான தன்மையைக் கொடுக்கிறது. இன்னொரு துணைவரின் நிலையை எந்த விதத்திலும் அச்சுறுத்தாமல் ஒரு துணைவரை, புதிய வழிகளில் உயிர்ப்புள்ளவராக உணரச் செய்கிறது.”
விவாகத்திற்குப் புறம்பான ஒரு உறவு ஒருவனுடைய பாலுணர்வுகளைத் தூண்டுவதாக அல்லது அவனுடைய தன்னல ஆசையை அந்த நேரத்திற்குத் திருப்தி செய்வதாக இருக்கக்கூடும். “ஒரு காதலனைக் கொண்டிருப்பது பிரகாசமான ஒரு கருத்தாக இருக்கிறது,” என்கிறாள் ஒரு நடுவயதுப்பெண். ஆனால் அதற்குக் கொடுக்கும் விலை என்ன?
நடுவயது மனிதன் ஒருவன் தனக்கு 18 வருடம் இளயவளாகிய தன் காரியதரிசியுடன் காதல் உறவு கொண்டிருந்தான். அவனுக்கு என்ன ஏற்பட்டது என்பதைக் கவனியுங்கள். 30 வருட விவாக வாழ்க்கை முறிந்தது. தனது வேலையிலிருந்தும் நீக்கப்பட்டான். அவன் பின்வருமாறு புலம்புகிறான்: “என்னைக் குறித்து நான் பெருமையாக நினைத்துக்கொண்டதால் இப்படிச் செய்தேன். என்னுடைய வயதில் நான் அழகான ஓர் இளம் பெண்ணைக் கவர்ந்திருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பெருமைப்பட வேண்டியதை அவசியமாகக் கருதினேன். நான் ஒரு ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியத்தையும் நம்பினேன். வாய்ப்பு கிட்டும்போது அதிலே தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் மனிதரின் முட்டாள்தனத்திற்குப் பின்னால் இந்த ஆசை இருக்கிறது. இது எதிர்பார்க்கப்படாதது, ஏனென்றால் அப்படிப்பட்ட பெருமை ஒரு போலி அஸ்திவாரத்தில் நிற்கிறது.”
ஆம், “ஒரு போலி ஆஸ்திவாரம்!” பைபிள் வெகு காலத்திற்கு முன்பாகவே இப்படியாகக் குறிப்பிட்டது: “அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.”—நீதிமொழிகள் 16:18.
பாலுறவில்தான் எல்லாமே இருக்கிறதா?
விவாகத்தில் தங்களுக்குப் போதிய இன்பம் கிடைக்கவில்லை என்று நினைத்து விவாகத்திற்குப் புறம்பே பாலுறவு இன்பத்தை நாடிச்செல்கின்றனர். வாழ்க்கையில் மகிழ்ச்சி எல்லா சமயத்திலும் பாலுறவு வாழ்வில்தான் சார்ந்திருக்கிறது என்று நினைக்கின்றனர். ஒரே துணைவரோடு வாழ்நாள் முழுவதும் உறவுகொண்டிருப்பது காலத்திற்கு அப்பாற்பட்டது என்பதாக உணருகின்றனர். சுவீடனில் சமூக வாழ்வுப் பிரிவில் துணைப் பேராசிரியராய் பணிபுரியும் ரீட்டா லில்ஜெஸ்ட்ராம் பின்வருமாறு சொன்னார்: “சுவீடனில் விவாகத் துணைவருக்கு உண்மையாயிருப்பது வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவாக வாழ்க்கைக்கு உண்மைத் தன்மை பரிகசிப்பின் ஆவியால் சூழப்பட்டிருக்கிறது. ‘நாங்கள் நவீன மக்களாக இருக்க விரும்புகிறோம்.’”
அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், பைபிள் பாலுறவு சம்பந்தமாக அநேக காரியங்களைச் சொல்லுகிறது. இந்தக் காரியத்தின்பேரில் சமநிலையான நோக்குநிலையை அளிக்கிறது. உதாரணமாக ஞானமுள்ள அரசனாகிய சாலொமோன் எழுதியதைக் கவனியுங்கள.
“உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும் உன் துறவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு. உன் ஊற்றுகள் வெளியிலும், உன் வாய்க்கால்கள் வீதியிலும் பாய்வதாக. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக. அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?”—நீதிமொழிகள் 5:15-20.
எனவே ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் பாலுறவின் “மயக்கத்தை” அல்லது அளவில்லா மகிழ்ச்சியையும் திருப்தியையும் பைபிள் மட்டுப்படுத்திக்கூறுவதில்லை. ஆனால் அது விவாகத்திற்குள் இருக்க வேண்டும், ‘இளவயது துணைவருடன்’ இருக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்.
கணவனுக்கும் மனைவிக்குமிடையே பாலுணர்வுகள் வித்தியாசப்படக்கூடும் என்பது உண்மைதான். வாழ்க்கையின் அநேக அம்சங்களில் உண்மையாயிருப்பதுபோல சமயத்திற்கேற்ப தங்களை அமைத்துக்கொள்ளுதலும் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாயிருப்பதும் மகிழ்ச்சியுள்ள உறவுகளுக்கு மிகவும் அவசியம். பேச்சுத்தொடர்பு மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய திறமைகளையும் விருப்பங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சிபாரிசு செய்கிறான்: “புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.” இப்படியாக செய்யும்போது இதோடு சம்பந்தப்பட்ட நியமத்தைப் பின்பற்றுவது நல்லது: “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”—1 கொரிந்தியர் 7:3; 10:24.
விவாகத்தில் பாலுறவு ஒரு பாகத்தை உடையதாக இருந்தாலும், அதுதானே எல்லாமாக இருக்கிறது, அல்லது பாலுறவு ஆசைகள் கட்டுப்பாடற்றதாக இருக்கலாம் என்றும் சொல்லுவதற்கில்லை. உதாரணமாக: மதுபானம் அளவாக அருந்தப்பட்டால், “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்” என்று பைபிள் சொல்லுகிறது. ஆனால் நாம் மதுபானத்தின்மீது அளவற்ற பிரியத்தை வளர்க்க வேண்டும் என்றோ அல்லது அதை நாம் எப்பொழுது, எங்கே, எப்படி அருந்தவேண்டும் என்ற காரியத்தில் கட்டுப்பாடற்றிருக்க வேண்டும் என்றோ அர்த்தப்படாது.—நீதிமொழிகள் 20:1; 23:29-35.
தன்னலமற்ற நியதி
இல்லை, மகிழ்ச்சியுள்ள விவாகத்திற்குப் பாலுறவு ஒரே அடிப்படையாகவும் மிகச் சிறந்த அடிப்படையாகவும் இல்லை. நீடித்த திருப்திக்கு அடிப்படையாயிருக்கும் அன்பு, நட்பு, மென்மை, கரிசனை, புரிந்துகொள்ளுதல், உண்மைத்தன்மை, உத்தரவாதம் ஆகியவை கலந்த அன்பாக இருக்கிறது. அதுதானே உண்மையான விவாகத்திற்குரிய அன்பு. இதுதான் நிலைநிற்கக்கூடியது. சோதனைகள் ஏற்படும்போதும் சரீர சுகவீனம் அல்லது மனக்கோளாறு பாலுறவுகளைத் தடைசெய்யும்போதும் அல்லது வயது பெலத்தையும் அழகையும் மட்டுப்படுத்திவிடும்போதும் விவாகத் தம்பதிகள் பொறுமையோடு சகிப்பதற்கு உதவக்கூடியது.
கடைசியாகப் பார்க்கும்போது, புத்தகங்களின் புத்தகமாகத் திகழும் பைபிளில்தான் மிகச் சிறந்த புத்திமதி காணப்படுகிறது. அது சொல்லுவதாவது: “உன் சொந்த மனைவிக்கே உண்மையாயிரு, அவளுக்கு மட்டுமே உன் அன்பைக் கொடு.” (நீதிமொழிகள் 5:15; இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் மேலுமாகக் கூறுவது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக.” (எபிரெயர் 13:4) தம்முடைய நாட்களில் கேள்விகள் கேட்ட சிலருக்கு இயேசு இதன் சம்பந்தமாகப் பின்வருமாறு கூறினார்: “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா?”—மத்தேயு 19:4, 5; ஆதியாகமம் 2:24.
இப்படிப்பட்ட தன்னலமற்ற அன்பிலும் உண்மையிலும், கடவுள் பேரிலும் அவருடைய வார்த்தையின்பேரிலும் முறிக்கமுடியாத அன்பிலும் கட்டப்பட்ட பலமான விவாகம்தானே—தம்பதிகளுக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் உட்பட்டிருக்கும் மற்ற அனைவருக்கும் நீடித்த மகிழ்ச்சிக்கு ஆதாரமாயிருக்கிறது. (g86 7/8)
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
விவாகத்திற்குப் புறம்பான இரகசிய விவகாரங்கள் நவீன சமுதாயத்தில் சர்வசாதாரணமான காரியமாகிவிட்டதால் அப்படி ஒன்றை வைத்திராதது அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது
[பக்கம் 10-ன் பெட்டி]
1983-ம் ஆண்டில் விவாகம் மற்றும் விவாகரத்தின் புள்ளிவிவரம்
விவாகங்கள் விவாகரத்துக்கள் விகிதம்
அமெரிக்கா: 24,44,000 11,79,000 2-ல் 1-ஐவிட அதிகம்
சோவியத் ரஷ்யா: 28,34,000 9,46,000 3-ல் 1
ஆஸ்திரேலியா: 1,13,905 41,412a 3-ல் 1-ஐவிட அதிகம்
கியூபா: 76,365 29,249 ஏறக்குறைய 5-ல் 2
நெதர்லாண்ட்: 78,415 32,596 ஏறக்குறைய 5-ல் 2
ஐக்கிய ராஜ்யம்: 3,87,000 1,45,802* ஏறக்குறைய 5-ல் 2
ஹங்கேரி: 75,978 29,000 ஏறக்குறைய 5-ல் 2
டென்மார்க்: 27,096 14,763 2-ல் 1-ஐவிட அதிகம்
சுவீடன்: 36,210 20,618 ஏறக்குறைய 5-ல் 3
இந்தப் புள்ளிவிவரங்கள் 1983 டெமொகிராபிக் வருடாந்தர புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. சுவீடன் மற்றும் டென்மார்க் புள்ளிவிவரங்கள் 1984 நார்டிக் ஸ்டட்டிஸ்டிக்ஸ் வருடாந்தர புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
[அடிக்குறிப்புகள்]
a ஆஸ்திரேலியாவின் விவாகரத்துக்கள் எண்ணிக்கை 1981-ம் ஆண்டுக்குரியது; ஐக்கிய ராஜ்யத்திற்கான எண்ணிக்கை 1982-ம் ஆண்டுக்குரியது.
[பக்கம் 9-ன் படம்]
மனிதனுக்கும் மனைவிக்குமிடையே ஒரு மகிழ்ச்சியான உறவு நிலைத்திருப்பதற்கு நல்ல பேச்சுத் தொடர்பும் நிலைமையறிந்து செயல்பட மனமுள்ளவராயிருப்பதும் அவசியம்