பைபிளின் கருத்து
நீங்கள் இதற்கு முன்பாக எப்போதாவது வாழ்ந்திருக்கிறீர்களா?
என்னுடைய கடந்தகால அநேக வாழ்க்கைகள் என்னுடைய ஞாபகத்துக்கு வருகிறது—சில சமயங்களில் நான் ஆணாகவும், மற்ற சமயங்களில் ஒரு பெண்ணாகவும் இருந்தேன்.” தான் அந்த முடிவுக்கு எப்படி வந்தள் என்பதை அவுட் ஆன் எ லிம்ப் (Out on a Limb) என்ற பிரசிச்திப்பெற்ற புத்தகத்தில் நடிகை ஷர்லி மக்லய்ன் விவரிக்கிறாள். முதலில் அவள் “மறுபிறப்பானது அநேக கிழக்கத்திய நம்பிக்கைகளின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக இருப்பதுமன்றி . . . மேற்கத்திய பிராந்தியத்தின் பிரபல யோசனையாளர்களில் பலருங்கூட இந்த எண்ணத்தை ஆமோதிக்கின்றனர் என்பதைக் காண ஆச்சரியப்பட்டாள்.”
ஆம், நீங்கள் நினைப்பதைப் பார்க்கிலும் அநேக ஆட்கள்—கோடிக்கணக்கான புத்தர்கள், இந்துக்கள் உட்பட—தாங்கள் இதற்கு முன் வாழ்ந்துவந்ததாக நம்புகின்றனர். தங்களுக்குள்ளே உள்ள ஒன்று—அநேகர் அதை ஆத்துமா என்றழைக்கின்றனர்—மரணத்திலிருந்து தப்பி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாழ்க்கைகளிலே பிறப்பதாக எண்ணுகின்றனர். இந்த “ஏதோ ஒன்று” மனித உருவத்திலும் அல்லது சிலர் சொல்லுகிறபடி மிருகம் அல்லது காய்கறி உருவத்திலுங்கூட திரும்ப வருவதாக எண்ணப்படுகிறது. அவர்களில் அநேகர் இவ்விதமாகத் திரும்ப வருவதன் நோக்கம் ஆத்துமாவை படிப்படியாக சுத்திகரிப்பதற்கும் அல்லது தனிப்பட்டவரைக் கடைசியான பூரணத்துக்கு வழிநடத்தி செல்வதற்காகவும் என்று ஒத்துக் கொள்கின்றனர்.
ஒத்துக்கொள்ளுகிறபடி, இதற்கு முன்பாக வாழ்ந்து வருவதன் எண்ணமும், மறுபடியுமாக வாழப் போகிறோம் என்ற எண்ணமும் ஆச்சரியமாக இருக்கக்கூடும், ஆறுதலாகவுங்கூட இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா?
ஆவி உலகத்தில் நீங்கள் இருந்திருக்கிறீர்களா?
“ஆம்,” என்று கிறிஸ்துவின் பிற்காலத்திய புணிதவான்களின் சர்ச் (The Church of Jesus Christ of Latter-day Saints) சொல்லுகிறது. அதனுடைய அங்கத்தினர் சாதாரணமாக மார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்தச் சர்ச்சின் அப்போஸ்தலனான காலம்சென்ற ஜேம்ஸ் E. டால்மேஜ் “மனிதகுலத்தின் ஆவிகள் தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கைக்கு முன்னதாக வாழ்ந்து கொண்டிருந்தன—இந்தப் புத்திக்கூர்மையுள்ளவைகள் சரீர கூடாரங்களிலே தங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னதாக, சுயாதீனத் தன்மையோடு வாழ்ந்துவந்த நிலைமை—என்பதற்கு அநேக வேதப்பூர்வமான அத்தாட்சிகள் இருப்பதைக் குறித்து எழுதினார்.
உண்மைதான், கடவுளுடைய குமாரனாகிய இயேசு பூமியிலே வாழ்வதற்கு முன்பாக பரலோகத்திலே இருந்தார். (யோவான் 6:38, 62) இதனால்தான் டால்மேஜ் “அவருடைய [கிறிஸ்துவின்] பூமிக்குரிய பிறப்பானது, முன்னாலே தமக்கு இருந்த ஒரு அழிவில்லா ஆவி அழிவுள்ள சரீரத்தோடு இணைவதாக இருக்குமானால், மனிதகுலத்தின் ஒவ்வொரு அங்கத்தினனுடைய பிறப்புங்கூட அவ்விதமாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வருவதானது பொருத்தமாகவே இருக்கிறது,” என்று எழுதும்படி வழிநடத்தப்பட்டான்.
பரலோகத்தில் இருந்தபோது இயேசு தன் பிதாவினிடத்தில் எப்பொழுதும் கீழ்ப்படிதல் உள்ளவராகவே இருந்தார். ஆகவே அவருடைய பூமிக்குரிய வாழ்க்கை அவர் ஒரு பாவியாக, “பூமியில் தவணையின் காலத்தில்” வாழும்படியாகத் திட்டமிடப்படவில்லை. அதற்கு மாறாக, அவர் ஒரு பரிபூரண, பாவமற்ற மனிதனாக, பாவிகளை இரட்சிக்கக்கூடிய விதமாக “அநேகரை மீட்கும் பெருளாக தன் ஜீவனைக்” கொடுக்கக்கூடியவராக இருந்தார். (மத்தேயு 20:28) ஆகவே, இயேசு “தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” என்று சொல்லப்படக்கூடிய ஒருவராக இருந்தார். (1 தீமோ. 2:5, 6) பூமியிலே அவருக்கு நியமிக்கப்பட்ட வேலை தற்காலிகமே. அதை முடித்த பிறகு அவர் தனது சொந்த வீட்டிற்கு, பரலோகத்திற்குத் திரும்பப் போகக்கூடும்.
ஆனால் இந்த உண்மைகளின் காரணமாக, அவர் தம்முடைய வீடு என்று அழைத்த அதே அர்த்தத்தில் பரலோகத்தைக் குறித்து நாமும் சொல்லக்கூடுமா?
மனித உருவத்தில், ஆனால் மனிதனாக அல்ல
கடந்த காலங்களிலே, காணக்கூடாத ஆவி சிருஷ்டிகள், தூதர்கள், கடவுளுடைய வழிநடத்துதலின்கீழ் காணக்கூடிய மனித சரீரங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். (ஆதியாகமம் 19:1; லூக்கா 1:26-28) ஆனால் நோவாவின் நாட்களிலே அவர்களில் சிலர் தாங்களாகவே அவ்விதம் செய்தார்கள். ஏன்? மனிதப் பெண்களோடு பாலுறவு கொள்ள வேண்டும் என்ற தன்னல நோக்கத்தோடு. (ஆதியாகமம் 6:2) இது தூதர்களுக்கான கடவுளுடைய ஏற்பாடாக இல்லாததனால், அவர்கள் எடுத்த நடிவடிக்கையானது கீழ்ப்படியாமையின் ஒன்றாக இருந்தது. பைபிள் அவர்களைத் “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள்” என்று அழைக்கிறது. (யூதா 6) தெளிவாகவே, மனிதருக்குப் பூமி எப்படியோ, அப்படியே பரலோகம் தூதர்களுக்கு உரிய பொருத்தமான “வாசஸ்தலமாக”, இருந்தது.—சங்கீதம் 115:16; 1 கொரிந்தியர் 15:39, 40-ஐ ஒத்துப் பாருங்கள்.
இயேசு பூமிக்கு வந்தபோது உண்மையாகவே “மாம்சமானார்.” (யோவான் 1:14) ஆனால் தேவதூதர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் மனித சரீரங்களை எடுத்துக்கொண்டனர். ஜலப்பிரளயத்தின்போது மீண்டும் ஆவி உலகத்துக்குத் திரும்புவதற்காக, வெறுமனே அந்த மனித சரீரங்களை விட்டுவிட்டு சென்றார்கள். என்றபோதிலும் அவர்களுடைய கலகத்தின் காரணமாக கடவுள் அவர்களை “அந்தகாரச் சங்கிலிகிளினாலே கட்டி . . . நியாயத்தீர்ப்புக்கு” ஒப்புக்கொடுத்தார். இனிமேலும் பூமியிலே வசிக்கும்படியாக அவர்கள் மனித சரீரங்களை எடுக்கக்கூடாதவர்களாக இருந்தனர்.—2 பேதுரு 2:4.
ஆக இயேசு கிறிஸ்து, மற்றும் மானிட சரீரங்களை எடுத்துக்கொண்ட இந்தத் தூதர்கள் ஆகியோரின் முன்மாதிரிகள், மார்மோன்கள் சொல்வதை, அதாவது “பூமிக்குரிய வாழ்க்கைக்கு முன்னர் ஆவி உலகத்திலே மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்” என்பதை நிரூபிக்க சரியாக பயன்படுத்தமுடியாது. ஆனால் மனிதர்களாகவே பூமியில் முந்தின வாழ்க்கைகளை அவர்கள் ஜீவிக்கவில்லை என்பதை இது நிரூபிக்குமா?
ஆத்துமாவைச் சிருஷ்டித்ததில் கடவுளுடைய நோக்கம்
மனிதன் இதற்கு முன்பாக ஆவி உலகத்திலோ அல்லது பூமியிலோ வாழ்ந்து கொண்டிருந்தானா இல்லையா என்பதை உண்மையாகவே தீர்க்கக்கூடிய மூல விஷயம்—அவனுக்கு ஒரு அழியாத ஆத்துமா இருக்கிறதா இல்லையா என்பதுதான். மனித ஆத்துமா சிருஷ்டிக்கப்பட்ட விதத்தைக் குறித்து ஆதியாகமம் 2:7 இவ்விதமாக விவரிக்கிறது. “தேவனாகிய யெகோவா மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.”
ஆத்துமா, உயிரில்லாத சரீரத்திலிருந்து வித்தியாசப்பட்ட, தனிப்பட்ட ஒன்றாக விவரிக்கப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். சொல்லப்போனால், உயிரில்லாத சரீரத்தை, ‘ஜீவசுவாசத்தைக்’ கொண்டு சுவாசிக்கும்படி செய்து செயல்படுத்தப்பட்ட பிறகே, ஆதாமாகிய ஆத்துமா ஜீவனுக்கு வரக்கூடியவனாக இருந்தான். சுவாசம் நின்று போய், உயிர்சக்தி மண்ணுக்குத் திரும்புகையில், சரீரம் மறுபடிமாக உயிரற்றதாகிவிடுகிறது. “அவன் மண்ணுக்குத் திரும்புகிறான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” (சங்கீதம் 146:4) அவன் மறுபடியும் ஜீவிக்க, உயிர்தெழுதலின் நாளுக்காக காத்திருக்க வேண்டும். (யோவான் 5:28, 29) அதற்கிடையில் மரண நிலையிலே “செய்கையும், வித்தையும், அறிவும், ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) சுருக்கமாகச் சொன்னால் ஆத்துமா மரித்துவிட்டது.
பைபிளின் அநேக வசனங்கள் ஆத்துமா அழிக்கப்படக்கூடியது என்று காண்பிப்பதனால் மனித ஆத்துமா அழியாமையைக் கொண்டுள்ளது என்பதைப் பொய்யாக்கிவிடுகிறது. (எசேக்கியேல் 18:4, 20; சங்கீதம் 22:29; அப்போஸ்தலர் 3:23; வெளிப்படுத்துதல் 16:3) ஆத்துமா இறந்துவிட மற்றொரு சரீரத்தில் மறுபடியுமாக ஜீவிக்க என்ன அதிலே விடப்பட்டிருக்கிறது? மேலுமாக ஏதோ ஒன்று கடந்து செல்ல என்ன தேவை இருக்கிறது? கடவுள் மனித ஆத்துமாக்களைச் சிருஷ்டித்தபோது அவர் “மிகவும் நன்றாயிருந்தது” என்றார். அவர் அவ்விதமாக செய்யமுடியும், ஏனெனில் அவர்கள் பரிபூரணமாக பூமியின் மீது என்றென்றுமாக வாழத் திட்டமிடப்பட்டிருந்தார்கள். (ஆதியாகமம் 1:31) சுத்திகரிப்பு அவசியமாக இருக்க வேண்டிய ஆத்துமாக்களாக அவர்கள் இல்லை; ஒழுக்க விஷயத்தில் அவர்கள் ஏற்கெனவே சுத்தமாக இருந்தார்கள். மறுபடியுமாக வாழ அவர்கள் இறக்க வேண்டிய அவசியத்தை உடைய ஆத்துமாக்களாகவும் இல்லை. பூமியிலே அவர்கள் வாழும்படியான முதலாவதான திட்ட அமைப்பிலே, நித்திய வாழ்வு அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
நீங்கள்—ஆவி உலகத்திலோ அல்லது பூமியிலோ—ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்தீர்களா என்பதற்குப் பைபிளின் பதில் மிகவும் தெளிவாக உள்ளது. அதே விதமாக ஒருநாள் நீங்கள் பரதீஸான பூமியில் என்றென்றுமாக வாழும் வாய்ப்பைக் கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதும் தெளிவாக இருக்கிறது. இதைப்பற்றி மேலுமாகக் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? (g86 6/8)
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
மனித ஆத்துமா சாவுக்கேதுவானது, அழிவுள்ளது என்று ஏறக்குறைய நூறு பைபிள் வசனங்கள் காண்பிக்கின்றன; அது அழியாமையுள்ளது என்பதற்கு நீங்கள் ஒரு வசனத்தையாவது காண முடிகிறதா?
[பக்கம் 10-ன் படங்கள்]
நீங்கள் முன்பு இந்த ஆட்களாக இருந்தீர்களா?