ஒரு குவளை நீரில் மேன்மையான ஆரோக்கியம்!
அது சமையலறை தொட்டியிலேயே இருக்கிறது. பொதுவாக அது அனைவருக்கும் உடனடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அது மிகவும் மலிவானது. ஆனால் அது மேன்மையான உடல் ஆரோக்கியத்துக்கு வழிநடத்தக்கூடும். அது நம்முடைய உடலுக்கு அதிமுக்கியமான ஊட்டச் சத்துக்களில் ஒன்றாக இருக்கிறது. அது குளிர்ந்த தெளிவான நீராகும். என்றபோதிலும் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுள்ளவர்களாக இருக்கும் ஆட்களும்கூட, அதிகமாக தண்ணீர் குடிக்கும்படியாகச் சொல்லப்படும் எளிய ஆலோசனையை அநேகமாக அசட்டை செய்துவிடுகிறார்கள்.
நம்முடைய உடலில் மொத்த எடையில் 70 சதவிகிதம் தண்ணீராலானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆகவே நம்முடைய உடல்கள் ஆரோக்கியமாக செயல்பட நமக்கு ஏன் ஏராளமான தண்ணீர் தேவையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வது கடினமாக இல்லை.
நிச்சயமாகவே நம்முடைய சிறு நீரகங்கள் ஆச்சரியம் தரும் வகையில் செயல்படுகின்றன. லட்சக்கணக்கான வடிகட்டும் தொகுதிகளைக் கொண்டதாய், இரத்தத்துக்கு கழிவு பொருட்கள் போகாத வண்ணம் தடுத்து, இது சுத்தம் செய்யப்பட்ட திரவத்தை இரத்த ஓட்டத்துக்கு அனுப்பி வைக்கிறது. சுழற்சியின் காரணமாக, மீண்டும் மீண்டுமாக நம்முடைய சிறு நீரகங்கள் நமக்கு நீரை கிடைக்கச் செய்யாவிட்டால் நாம் ஒரு நாளில் ஆயிரக்கணக்கான குவளைகள் தண்ணீர் குடிப்பது அவசியமாக இருக்கும் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் ஆரோக்கியமான சிறு நீரகங்கள் சிறப்பாக செயல்பட்டாலும்கூட, நம்முடைய உடலிலுள்ள சுத்தமான நீரின் அளவு எப்பொழுதும் குறைந்து கொண்டே இருக்கிறது. அந்த குறை நிரப்பப்படுவது அவசியமாக இருக்கிறது. செல் மாறுபாட்டின் விளை பொருட்களை துப்புரவுச் செய்ய போதிய திரவங்கள் இல்லாவிடில், உடலின் செல்லுகள் அவைகளின் சொந்த கழிவு பொருட்களாலேயே பழுதாகிவிடக்கூடும்.
அதிர்ஷ்டவசமாக, நாம் உண்ணும் பெரும்பாலான உணவு பொருட்களே நமக்குத் தேவையான அதிகமான தண்ணீரை கொடுக்கின்றது. ஏனென்றால் அநேக உணவு பொருட்களில் அதிகமாக தண்ணீர் தானே இருக்கின்றது. உதாரணத்துக்கு முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முட்டை சுமார் 74 சதவிகிதம் தண்ணீராலானது என்பதை நீங்கள் உணராதிருக்கலாம். ஒரு இறைச்சி கண்டத்தில் 73 சதவிகிதம் தண்ணீரும் ஒரு தர்பூசனையில் 92 சதவிகிதம் தண்ணீரும் இருக்கிறது. ஆனாலும்கூட நம்மில் பெரும்பாலானவர்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் நன்மையடைவோம்.
உடலின் செல்களில் விஷ கழிவு பொருட்கள் சேர்ந்துவிடுவதால், மட்டுக்கு மீறிய களைப்பு ஏற்படக்கூடும் என்று சொல்லப்படுவதை உறுதி செய்ய, வீக்கன்ட் ஆஸ்ட்ரேலியா-வில் எழுதுகையில் மைக்கல் போடி, மலையேறிகளின் அனுபவத்தை மேற்கோள் காட்டுகிறார். அவர் சொல்கிறார்: ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறிகள் தண்ணீர் இல்லாமையால்தானே எவரஸ்ட் மலையை ஏறுவதில் தோல்வியடைந்தனர். தண்ணீரினால்தானே சர் எட்மண்ட் ஹில்லரியின் தலைமையில் பிரிட்டனைச் சேர்ந்த குழு வெற்றியடைந்தது—அவர்கள் மலையேறும்போது ஒரு நாளுக்கு பன்னிரண்டு குவளைகள் தண்ணீர் குடிக்கும்படியாகச் செய்யப்பட்டார்கள்.
அதே எழுத்தாளர், தண்ணீர் குடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஹார்வார்ட் பல்கலைகழக பரிசோதனையைப் பற்றி குறிப்பிடுகிறார். ஒரு சிறு கோஷ்டியான விளையாட்டு வீரர்கள் தண்ணீர் குடிக்காமலே, சுறுசுறுப்பாக மணிக்கு மூன்று மைல்கள் (5 கி.மீட்டர்/மணி) வேகத்தில் நடக்கும்படியாகச் சொல்லப்பட்டார்கள். அவர்கள் தொடர்ந்து மூன்றரை மணி நேரங்கள் நடந்து போனார்கள். பின்பு அவர்களுடைய உடலின் வெப்பம் திடீரென்று சுமார் 102 டிகிரியாக (39 C) உயர்ந்தது. சீக்கிரத்தில் அவர்கள் முழுமையாகச் சோர்வடைந்து வீழ்ந்துவிட்டார்கள்.
இரண்டாவது ஒரு கோஷ்டி அதே விதமாகவேச் சென்றது. ஆனால் அவர்கள் தாகமாயிருந்தபோதெல்லாம் விரும்பிய அளவு தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்பட்டார்கள். இந்த கோஷ்டி சுமார் 6 மணி நேரங்கள் நடந்துவிட்டு, பின்னர் முந்தைய கோஷ்டியைப் போலவே அதே விதமாக எதிர் விளைவுகளை அனுபவித்தார்கள்.
பின்பு மூன்றாவது கோஷ்டி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் இந்த கோஷ்டி மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு 15 நிமிடங்களும் அது சுமார் 1 குவளை தண்ணீரை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இழந்துபோன இந்த அளவு தண்ணீருக்கு பதிலாக தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருந்தபோது, இந்த கோஷ்டியில் எவருமே உடல் வெப்பத்தில் திடீர் உயர்வை அனுபவிக்கவோ அல்லது முற்றிலும் சோர்ந்துவிடும் நிலையை அடையவோ இல்லை. உண்மையில் அவர்களில் அனைவருமே வரையறையில்லா தூரம் தங்களால் நடக்க முடியும் என்பதாகச் சொன்னார்கள். ஆகவே தண்ணீருக்கான நம்முடைய உடலின் தேவையை அளவிட, இயற்கையான தாகம் ஒரு துல்லிபமான கருவியாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. தாகம் தூண்டுவதைக் காட்டிலும் நமக்கு அதிகம் தேவையாக இருக்கலாம்.
ஒருவேளை அதிகமான அளவில் குளிர்ந்த புத்துயிரளிக்கும், கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், நாம் அனைவரும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்பபடுத்திக் கொள்ளலாம். (g86 3/8)
[பக்கம் 24-ன் படம்]
ஒரு மணிக்கு மூன்று மைல்கள் வேகத்தில் நடக்கும்போது ஒரு நபர், ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒரு குவளை தண்ணீரை இழந்துவிடுகிறார்