உலகத்தைக் கவனித்தல்
ஏய்ட்ஸ் நோய் பரவுகிறது
“நோய் எதிர்ப்பு சக்தியைக் கடுமையாக பாதிக்கும் ஏய்ட்ஸ் [AIDS] நோய் மருத்துவ நிபுணர்கள் நம்புவதைவிட அதிக எளிதாகப் பரவுகிறது,” என்று யு.எஸ். நியுஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் கூறுகிறது. “ஒவ்வொரு 12 மாதங்களும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது, மற்றும் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆட்கள் ஏய்ட்ஸ் நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.” இவர்களில் பெரும்பான்மையினர் மரணத்துக்கேதுவான வகையில் இந்நோயால் பாதிக்கப்பட்டில்லாமலிருந்தாலும், இந்த நோயை மற்றவர்களுக்குக் கடத்தும் நிலையிலிருக்கிறார்கள். ஏய்ட்ஸ் நோய்க் கிருமிக்கு அல்லது மற்ற நோய்க்கிருமிகளுக்கு அதிகமாக வெளியாகும்போது, அப்படிப்பட்ட ஆட்களை அந்நோய்க் கடுமையாக தாக்குகின்றன என்று புதிய ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. ஏய்ட்ஸ் கிருமிகளைத் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் அநேகருக்கு அது தெரியாது. ஏனென்றால் பாதிக்கப்பட்டு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஏதும் காணப்படுவதில்லை. ஐக்கிய மாகாணங்களில் ஏய்ட்ஸ் நோய்க்கு 7,000 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியிருக்கிறார்கள். பாலுறவு மூலமாகவும், இரத்தமேற்றுதல் மூலமாகவும், போதை மருந்து ஊசிகளை பயன்படுத்துவதன் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது. தாய் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளும் இந்நோயுடன் பிறக்கக்கூடும்.
ஏய்ட்ஸ் நோயின் கடுமையான தன்மை ஒரு சமயத்தில் அதிகமாய்க் காணப்பட்ட இன உறுப்புகள் வழியாய்த் தொற்றும் ஹெர்ப்பீஸ் நோயை பின்நிலையில் வைத்துவிடுகிறது. இது எதிர்பாராத செயல்களில் விளைவடைந்திருக்கிறது. டெக்ஸாஸில் சான் அண்டோனியோவின் மேயர், “தங்களுடைய தனிப்பட்ட உரிமைகளைக் கோரும்படி” பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஊக்குவித்தார். அதே சமயத்தில் நகர உடல்நல மருத்துவப் பிரிவு, பாலுறவில் ஈடுபடுவது அல்லது இரத்தம் கொடுத்தல் சட்டத்திற்கு முன் வன்மையான குற்றமாகக் கருதப்படக்கூடும் என்று எச்சரித்தது. சில சர்ச்சுகள் நற்கருணை பாத்திரத்தை பொதுவாக எல்லோருக்கும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. ஐ.மா.-வின் இரணுவத்தில் புதிதாக சேர்க்கப்படுகிறவர்கள் ஏய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டே சேர்க்கப்படுகிறார்கள். இந்த நோயை உடைய பிள்ளைகளைச் சேர்க்கும் பள்ளிகளிலிருந்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை நிறுத்திவிடுகிறார்கள். ராக் ஹட்ஸன் என்ற நடிகர் ஏய்ட்ஸ் நோயால் மரித்தார் என்ற செய்திக்குப் பின்பு, நடிகர்கள் முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு அவர்கள் முன்னறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று திரைப்பட நடிகர் கழகம் எதிர்பார்க்கிறது.
பாதுகாக்கப்பட வேண்டிய காண்டர் கழுகு இனம்
வட அமெரிக்காவைச் சேர்ந்த காண்டர் கழுகு இனம் பறவைகளில் மிகப் பெரிய வகையைச் சேர்ந்தவை. இறக்கைகளை விரித்தால் 10 அடி (3 மீ.) நீளமும் 22 பவுண்டு (10 கிலோ) எடையுடையவை என்ற பெருமை இதனைச் சேருகிறது. என்றபோதிலும் சமீபத்தில் அவற்றின் தஞ்சமாகிய கலிபோர்னியாவில் ஏழு மட்டுமே பறப்பது காணப்பட்டது. சயன்ஸ் பத்திரிகை பிரகாரம், 1967-ல் 40 பறவைகளாக இருந்தவை 1984-ல் 15-ஆக குறைந்துவிட்டிருக்கின்றன. நவம்பர் 1984-ற்கும் ஏப்ரல் 1985-ற்குமிடையே ஆறு இறந்துவிட்டன. அவற்றில் 20 காட்சி சாலைகளில் இருந்தாலும், அந்த இனம் முற்றிலும் அழியும் தருவாயிலிருக்கிறது. காண்டர் கழுகுகள் ஆறு அல்லது ஏழு வயதில்தான் முட்டையிடுகின்றன. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு முட்டை இடும். இந்தக் குறைந்த வேக பெருக்கமும், காண்டரின் குடியிருப்புப் பகுதிகளில் மனிதனின் இடையூறும், ஈயம் போன்ற மற்ற விஷ வாயுக்கள் காற்றை நச்சுப்படுத்துதலும் அவை இனமாக உயிர்பிழைத்தலை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.
சிறிய நாடு, பெரிய பிரச்னை
பெலைஸ் நாடு 1,60,000-ற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டதென்றாலும் “மத்திய அமெரிக்காவில் போதை மருத்துக்களை கடத்தும் மிக முக்கிய நாடாக இருக்கிறது. மற்றும் ஐக்கிய மாகாணங்களுக்கு மாரிஜுவானா அனுப்புவதில் கொலம்பியா, மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்காகவுக்குப் பின்பு நான்காவது நாடாகத் திகழ்கிறது” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. ஆட்கள் கைது செய்யப்பட்டபோதிலும், மாரிஜுவானா கடத்துவதிலும் புகைப்பதிலும் இருக்கும் ஆபத்துக்களைக் குறித்து மக்களுக்கு அறிவு புகட்டப்பட்டபோதிலும், அவற்றை முற்றிலும் தடைசெய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் 85 சதவிகித விளைச்சல் ஐக்கிய மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. “இதை நாம் தொடர்ந்து அனுமதித்தால், நமது அரசாங்கத்தை—நமது சுதந்திரத்தை இழக்க நேரிடும்,” என்றார் பிரதமர் மானுவேல் எஸ்குவிவெல்.
கடுமையான கல்மழை
1985-ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் கடைசி நாளன்று பிரேஸிலில் ஒரு நகரைக் கடுமையான கல்மழை தாக்கியது. ஒரு தெருவில் 5 அடி அகலமும் நூறு அடி நீளமுமான ஐஸ் கட்டியை விட்டுச் சென்றது. ரியோ டி ஜனீரோவுக்கு 300 மைல்களுக்கு (500 கி.மீ.) தூரத்திலுள்ள இட்டபிரின்ஹா டி மன்டேனா என்ற பட்டணத்தில் இரண்டு பவுண்டு (1 கிலோ) எடையுள்ள பனிக்கற்கள் கல்மழையாக பெய்தன. 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தக் கல்மழை 20 ஆட்களுக்கும் அதிகமானவர்களைக் கொன்றது, 300 பேரைக் காயப்படுத்தியது, 10,000 பேர் கொண்ட அந்தப் பட்டணத்தில் 4,000 பேரை வீடுகளின்றி தவிக்கச் செய்தது. 900 வீடுகள் கூரைகளை இழந்தன, 50 வீடுகள் முற்றிலுமாய் சேதமடைந்தன. ஐஸ் நிரம்பிய நதிகளில் வெள்ளம் புரண்டதால் கூடுதலான சேதம் விளைந்தன. ‘சமீப ஆண்டுகளில் இதுவரை பதிவிலிருந்திராத மிக மோசமான சேதமாகும்,’ என்று மேயர் கிளாவிஸ் D. டிகேஸ்ட்டோ விவரித்தார்.
நிறைவு விழாவின் பொலிவு கெட்டது
ஐ.நா-வின் 40-வது நிறைவு விழா வருத்தமான முடிவைக் கண்டது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றும் அறிக்கையை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மகா சபையின் ஆறுவார கூட்டத்தின்போது 200-க்கும் அதிகமான உயர்மட்ட பிரதிநிதிகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகளை மொழிந்திருக்கின்றனர், ஆனால் “40-வது நிறைவு விழா அறிக்கையை” அங்கீகரிக்கவில்லை, கருத்துவேறுபாடுகளின் பேரில் தீர்வு காணவும் முடியவில்லை. ஏன்? “அந்த அறிக்கையை அநேக நாடுகள் வாதம் செய்வதற்கான ஒன்றாக எடுத்துக் கொண்டனர்,” என்று அமெரிக்க பிரதிநிதி ஹார்வே ஹபெலடுமன் ஒப்புக்கொண்டார். “கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கு இழுபறிப்புகள், விசேஷமாக மத்திய கிழக்குப் பிரச்னைகளை கூட்டங்களின் பொலிவைக் கெடுத்தன. இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி சுருக்கமாகச் சொன்னார்: “அனைவருக்கும் ஏற்கத்தகுந்த ஒரு முடிவுக்குவர சில நாடுகளுக்கு மனமில்லை.”
உலகின் பல தலைவர்களுடைய கவலைகளை விளக்குபவராய் அப்கானிஸ்தானின் வெளியுறவு மத்திரி ஷா முகமது தோஸ்த் கூறினார்: “உலகம் அணு ஆயுதப் பேரழிவு என்ற முடிவற்ற பாதாளத்தின் முனையில் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்நிலையில் அனைத்து நாகரீகத்தை மட்டுமல்ல, பூமியில் எந்த ஒரு உயிர்வாழ்வும் தொடருவதை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கும் இந்நிலையில், நாம் இந்த அமைப்பின் 40-வது நிறைவு விழாவைக் கொண்டாடுகிறோம் என்பது வருத்தத்திற்குரிய காரியம். ஐக்கிய நாடுகளின் சாசனத்தை உருவாக்கி அதில் கையொப்பமிட்டவர்களின் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் இது மிகுந்த தூரத்திலிருக்கிறது.” அப்படியிருந்தும் மகா சபை 1986-ஐ “சமாதான ஆண்டாக” அறிக்கை செய்து தனது நிகழ்ச்சியை முடித்தது.
புதிய பிரேக் விளக்கு
ஒரு வாகனத்தின் பிரேக் விளக்கு கண்ணுக்கு நேராக அதன் பின் ஐன்னலில் பொருத்தப்பட்டிருப்பது, கீழ் பகுதியில் பொருத்தப்பட்டிருப்பதைவிட அதிக நன்றாக தெரியக்கூடியதாயிருக்கிறது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பிரேக் விளக்குகளுடன்கூட இவை பயன்படுத்தப்படும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதிவிடுவதை 53 சதவிகிதத்திற்குக் குறைத்துள்ளது. ஐக்கிய மாகாணங்களில் 1986-ம் ஆண்டு வாகனங்களிலெல்லாம் பொருத்தப்பட்டிருக்க வேண்டியதாயிருந்தது. பழைய வாகனங்களில்கூட இவற்றை அதிக செலவின்றி பொருத்திக்கொள்ளலாம். “பின்னால் வரும் வாகனங்கள் மோதிக்கொள்வதைக் குறைத்து ரூ.394 கோடி செலவை குறைக்க முடியும் என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் கணக்கிடுகிறது,” என்று பிரிவென்ஷன் பத்திரிகை குறிப்பிடுகிறது.
புதிய விதத்தில் அமைக்க வேண்டும்
“வாகன ஓட்டுநர்கள் தாங்கள் பிடிக்கும் கைப்பிடி சக்கரத்தில் தங்கள் தலை மோதிக்கொள்வதையும், மார்பு, வயிறு மற்றும் கீழ் முதுகெலும்புப் பகுதிகள் அடிபடுவதையும் தடைசெய்யும் விதத்தில் வாகனங்களின் இருக்கைக் கச்சைகள் புதிய விதத்தில் அமைக்கப்பட வேண்டும்,” என்கிறது லண்டனின் தி டைம்ஸ். வாகன இருக்கைகளில் கச்சை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு முன்பும் பின்புமான ஓர் ஆண்டின் புள்ளிவிவரங்கள் ஆராயப்பட்டன, அதாவது அடிப்பட்ட 14,000 பேர் சேர்க்கப்பட்டிருந்த 15 மருத்துவ மனைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தத்தில் மரண எண்ணிக்கையும் காயமுற்றோர் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. காயமுற்ற ஓட்டுநர்கள் எண்ணிக்கை 25 சதவிகிதமாக குறைந்தது, முன் இருக்கையில் அமர்ந்த மற்றவர்கள் எண்ணிக்கை 24 சதவிகிதமாக குறைந்தது. ஆனால் காயத்தின் கடுமைத்தன்மையில் குறைவு காணப்படவில்லை. உடலில் எந்தப் பாகத்தில் அடிபட்டது என்பதில் மாறுதல் காணப்பட்டது. மார்பு, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் காயமுறுதல் அதிகரித்தது, ஆனால் சிறுநீரகம் மற்றும் எலும்பு முறிவுகள் குறைந்தது. முன் இருக்கையிலுள்ள பயணிகளுக்கு தலையில் அடிபடுதல் வெகுவாகக் குறைந்தது, ஆனால் ஓட்டுநர்களுக்கோ அதிகமாயிருந்தது. எனவேதான் இருக்கைகளின் கச்சைகள் புதிய விதத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது.
நோயாளிகளுக்குரிய இடம் அல்ல
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆட்களில் பெரும் எண்ணிக்கையினர், தாங்கள் எந்த நோய்க்காக அனுமதிக்கப்படுகிறார்களோ, அந்த நோய்க்கு சம்பந்தமில்லாத நோய்களைப் பற்றிக் கொள்கின்றனர், டிஸ்கவர் என்ற பத்திரிகையின் சமீப வெளியீட்டில் வெளிவந்த ஓர் அறிக்கை கூறுவதாவது, இருபது இலட்சம் அமெரிக்கர்கள் மருத்துவ மனையிலிருக்கும்போது புதிய நோய்களைக் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் மருத்துவ சிகிச்சைக்கான செலவு ஆண்டுக்கு ரூ.2,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்படியாகப் பெறப்படும் நோய் மருத்துவமனையில் ஒருவரின் அனுமதியை சராசரியாக நான்கு நாட்களாகக் கூட்டுகிறது, இதற்குக் கூடுதலாக ரூ.8,000 செலவு. இப்படியாகப் பெறப்படும் நோய்களால் ஏறக்குறைய 3,00,000 நோயாளிகள் மரிக்கின்றனர். என்றபோதிலும், அறுவை சிகிச்சைக்கு முன்பு கொடுக்கப்படும் மயக்க மருந்து கொடுக்கப்படுவதில் ஏற்படும் தவறு, தவறான மருந்துகள் கொடுக்கப்படுவது, போன்ற காரியங்களால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் இலட்சக்கணக்கான நோயாளிகளை இந்தப் புள்ளிவிவரங்கள் உட்படுத்தவில்லை. யேல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் உடல் நலத்துறைப் பேராசிரியர் டாக்டர் லோவெல்லெவின் கூறுகிறார்: “கேட்பதற்கு வேடிக்கையாய்த் தொனிக்கிறது, ஆனால் மருத்துவ மனை நோயாளி இருப்பதற்குரிய இடமாயில்லை.”
தாய்மையடையும் இளைஞர்கள்
சிறுவர் மத்தியில் காணப்படும் முறைகெட்ட பாலுறவு பழக்கங்கள் வேண்டாத கருதரித்தலுக்குக் காரணமாயிருப்பதுதானே “நம்முடைய தற்போதைய சமுதாயத்தின் கடுமையான பிரச்னையாக இருக்கிறது” என்று கேப் டவுன் டைகர்பெர்க் மருத்துவமனையில் பெண்கள் நோய்ப் பிரிவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் சாரல் ரெள கூறுகிறார். 1984-ல் இந்த மருத்துவ மனையில் பிறந்த குழுந்தைகளில் 20 சதவிகிதம் பருவ வயதிலிருந்த இளம் தாய்மார்களுக்குப் பிறந்தவை. இதில் இரண்டுபேர் பத்தொன்பது வயதில் ஒன்பதாவது முறையாகக் கருதரித்தவர்கள். பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் உண்மைகளைக் கற்றுக்கொடுக்க தவறுவதாலும், நல்ல முன்மாதிரிகளாக இருக்காததாலும், அதன் விளைவுகளாக இருக்கும் சமூகப் பிரச்னைகளுக்குப் பெரியவர்களே பெரும்பாலும் காரணராக இருக்கின்றனர் என்று டாக்டர் ரெள கூறினார். “இவ்விதமான காரியங்களைப் பற்றி பெற்றோரிடம் பேச தயங்கும் அல்லது பயப்படும் பிள்ளைகள் அவ்விதமிருக்காதபடிக்கு எற்ற ஒரு சூழ்நிலையை அமைப்பது பெற்றோரின் உத்தரவாதமாக இருக்கிறது,” என்றார்.
எலும்புகளுக்குப் பால்
சிறு பிராயத்தில் நிறைய பால் பருகுவது எலும்புகள் வளர்ச்சிக்குப் பேரளவில் துணைபுரிகிறது என்று ஏசியாவீக் அறிக்கை செய்கிறது. பால் சுண்ணாம்புச்சத்தில் சிறந்திருக்கிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு இயற்கைச் சத்தாக இருக்கிறது. 49 முதல் 66 வயதிலிருந்த 255 பெண்களின் விஷயத்தில் ஆய்வு காண்பித்ததாவது, சிறு வயதில் அதிகமான பால் குடித்தவர்கள் திடமான எலும்புகளைக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் பெண்களைப் பொருத்ததில் குறிப்பிடத்தக்கவை. ஏனென்றால் அவர்கள் தாமே எலும்புக் கோளாறுகளை அதிகமாக உடையவர்களாயிருக்கின்றனர். பாலுறுப்புச் சுரப்பி நீர்கள் குறைவாக சுரக்கப்படுவதனாலும், முதுமையினாலும் எலும்புகளின் திடம் குறைந்து எளிதில் முறிவடையக்கூடியவையாகின்றன.
இளமைக் கருதரிப்பு ஒரு கடுமையான தொத்துநோய்
“இளம்வயதினர் அல்லது இளைஞர் கருதரித்தல் உலக முழுவதிலும் அவ்வளவு அதிகமாகக் காணப்படுவதால், அதை ஒரு கடுமையான தொத்துநோய் என்று குறிப்பிடுவது பொருத்தமாகவே இருக்கிறது, மற்றும் அது நம்மைச் செயல்பட வைக்க வேண்டும்,” என்று நியு யார்க் ஹன்டர் கல்லூரியில் உடல்நல அறிவியல் பிரிவின் பேராசிரியரும் உளநூல் மருத்துவருமான மைக்கல் A. கரேரா குறிப்பிடுகிறார். ஆண்டுதோறும் தேவையற்ற இளமைக் கருதரிப்பு பத்துலட்சம் என்ற வேகத்தில் சென்று கொண்டிருப்பது ஐக்கிய மாகாணங்களை மற்ற முன்னேறிய நாடுகளுக்கு முன்நிலையில் வைக்கிறது. கரேரா சொல்லுகிறபடி, இளைஞருக்கான பாலுறவு சம்பந்தப்பட்ட கல்வி பயனுள்ளதாயிருக்கவில்லை. ஏனென்றால், அவை மதம், சமூகம் மற்றும் கலாச்சார மதிப்புகளைக் கவனிக்க தவறிவிட்டிருக்கின்றன. (g86 2/8)