“நல்லவர்களாக இருப்பது” தானே போதாதா?
உயிரோடிருக்கும் ஒவ்வொருவரும் உண்மையிலேயே நல்லவர்களாக இருந்தால், உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆணாக இருந்தாலும்சரி, பெண்ணாக இருந்தாலும்சரி, எந்த வயதினராக இருந்தாலும் சரி, தாங்கள் கொள்ளையடிக்கப்படவோ, கற்பழிக்கப்படவோ அல்லது பழிக்கப்படவோ எவரும் விரும்புவதில்லை. சிறைச்சாலைகள் நிச்சயமாக இராது, காவல்துறையினரும் இருக்கமாட்டார்கள், இராணுவத்தினரும் இருக்கமாட்டார்கள். ஆம், அது எவ்வளவு நல்ல ஓர் உலகமாக இருக்கும்!
தற்போதைய சூழ்நிலைகளின்கீழ் அப்படிப்பட்ட ஓர் உலகத்தை எதிர்பார்ப்பது உண்மைக்கு அப்பாற்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்படும். என்றாலும், நல்ல வாழ்க்கையை, நடத்த முயற்சிப்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஒரு மேன்மையான உலகத்தை உண்டுபண்ணும் காரியத்தில் அவர்களுடைய முயற்சிகள் பலனற்றதாக இருந்தாலும், அது அதிக மோசமாவதற்கு அவர்கள் காரணமாக இருப்பதில்லை.
ஆனால், “நல்லவர்களாக இருப்பது” தானே போதாதா? ஒருவேளை நம்முடைய நண்பர்களையும் அயலகத்தாரையும் அது பிரியப்படுத்தலாம், ஆனால் அது நம்முடைய சிருஷ்டிகரை பிரியப்படுத்துமா? கடவுளுடைய அங்கீகராத்தை பெறவேண்டுமென்று விரும்பும் ஆட்கள் இவற்றை அறிந்துக்கொள்ள விரும்புவார்கள்.
“நல்லவர்களாக இருப்பது” எதை அர்த்தப்படுத்துகிறது?
“அவன் ஒரு நல்ல பிள்ளை” என்பதுதானே அவன் கெட்டவனாக இல்லையென்றும், கெட்ட காரியங்களை செய்வதற்கு பெயர்பெற்றவன் அல்ல என்றும் அநேகமாய் அர்த்தப்படுத்துகிறது. ஆனால் மதசம்பந்தமாக அது உபயோகப்படுத்தப்படும்போது, நல்லவர்களாக இருப்பது அதிகத்தை உட்படுத்த வேண்டும்? ஏன்?
நாத்திகர்கள், அறியொணாமைக் கொள்கையினர் மற்றும் மத நம்பிக்கையற்ற ஆட்களில் அநேகர் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். கெட்ட காரியங்களை செய்வதில் அவர்கள் பெயர் பெற்றவர்களல்ல. சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை மறுக்கும், சந்தேகிக்கும் அல்லது அசட்டை செய்யும் ஆட்கள், நல்லவர்களாக இருப்பது தானே சிருஷ்டிகரை பிரியப்படுத்த போதாதா? நிச்சயமாகவே இல்லை.
எனவே, கடவுள் நல்லதுதென்று கருதுகிற திருத்தமான அறிவு அவசியம், ஏனென்றால் நாம் “தேவ நீதியை அறியாமல்” “தங்கள் [தம்முடைய] சுயநீதியை நிலைநிறுத்து”பவர்களாக இருப்போம். (ரோமர் 10:1-3) இது தவறான காரியம், ஏனென்றால்—நீதியான மனிதனுடைய தராதரங்கள்—நாம் நல்லது என்று கருதும் காரியங்கள்—தெய்வீக தராதரத்திற்குக் குறைவாகவே இருக்கிறது.
பூமிக்குரிய ஊழியத்தின்போது, கடவுளுடைய குமாரனாகிய கிறிஸ்து தெய்வீக தராதரத்தின்படி நன்மை எது என்று சுட்டிக் காட்டினார். ஒரு இளம் ஐசுவரியவான் இப்படியாக கேட்டான்: “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?” அவர்களுடைய சம்பாஷணையின் அறிக்கை அதிக விவரத்தைக் கொடுப்பதாய் இருக்கிறது. நாம் வாசிப்பதாவது: “கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.”—மத்தேயு 19:16-22.
இன்றைய ஒழுக்கத்திலும் சமூக நடத்தையிலும் கட்டுப்பாடில்லாமையைப் பார்க்கும்போது, இந்த மனிதனை நல்லவனென்று நீங்கள் கருதமாட்டீர்களா? அவன் கொலை செய்யவில்லை, விபசாரம் செய்யவில்லை, திருடவில்லை, பொய் சாட்சி சொல்லவில்லை, பெற்றோரை கனப்படுத்த தவறவில்லை, அல்லது தன்னுடைய அயலகத்தாரைத் தன்னைப்போல் அன்புகூர தவறவில்லை.
ஆனால் இந்த மனிதன் நல்லவனாக இருந்தது மட்டுமே போதாது என்று இயேசு குறிப்பிட்டார். ஏதோ ஒன்று குறைவுபட்டது. அவன் நல்லவனாக, பரிபூரணனாக அல்லது முழுமையாக இருப்பதிலிருந்து அவனை ஏதோ ஒன்று குறைவுபட செய்தது. அது என்ன? கிறிஸ்துவின் சீஷனாயிருப்பதற்கு அவனைத் தூண்டுவிக்கும் தன்னையே தியாகம் செய்யும் அன்பு. இந்த சுய தியாக அன்பு கடவுளுடைய ராஜ்யத்தை மும்முரமாக பிரசங்கிப்பதில் கலந்துக்கொள்ள செய்கிறது. இந்த வேலையை செய்வதற்காக இயேசு தம்முடைய சீஷர்களை பயிற்றுவித்தார். இந்த மனிதன் “மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்” அது அவனுடைய நேரத்தை அதிகமாய் எடுத்தது என்பது கூடிய காரியமாக இருந்தது. இயேசுவின் நடைமுறையான புத்திமதியை பின்பற்றி, பொருளாதார உடைமைகளை ஒழித்து விடுவதன் மூலமும், அதை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதன் மூலமும் அவன் பொருளாதார அக்கறைகளை ஆவிக்குரிய அக்கறைகளுக்குரிய ஸ்தானத்தைவிட குறைந்த ஸ்தானத்தில் வைப்பவனாக இருப்பான். இது அவன் கவனம் சிதறாது “கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடு”வதற்கு அவனை அனுமதிக்கும்.—மத்தேயு 6:33.
கடவுளுடைய பார்வையில் நல்லவனாக இருப்பது, தீமை செய்வதிலிருந்து விலகியிருப்பதைவிட அதிகத்தைக் குறிக்கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக, நன்மை செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதை குறிக்கிறது. இது கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் “சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பதையும்” உட்படுத்துகிறது, மற்றவர்களுக்கு ‘அவருடைய நாமத்தை வெளிப்படுத்துவதை’யும், மேலும் இயேசு செய்ததைப் போல், பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்கள் மத்தியில் வைராக்கியமாக அவர் சார்பில் நிலைத்திருப்பதையும் குறிக்கிறது. (யோவான் 17:4, 6; 18:37) “காரியங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதையும்” இது குறிக்கிறது.—எபிரெயர் 13:15, 16.
நல்லவர்களாக இருப்பது மட்டுமின்றி மேம்பட்டவர்களாக ஆவது எப்படி
நல்லவர்களாக இருப்பது மட்டுமே போதாது, எனவே மேம்பட்டவர்களாவதற்கு என்ன செய்ய வேண்டும்? லூக்கா 10:38-42 நமக்கு ஒரு நினைவு குறிப்பைக் கொடுக்கிறது. அங்கே நாம் வாசிப்பதாவது: “அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் [இயேசுவைத்] தன் வீட்டிலே ஏற்றுக் கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.’”
இந்த சம்பாஷணை எதை வெளிப்படுத்துகிறது? சரீரப் பிரகாரமாக இயேசுவுக்கு பணிவிடை செய்வது போற்றத்தகுந்ததாக இருந்தபோதிலும், ஆவிக்குரிய காரியங்களுக்கு தகுந்த மதித்துணர்வைக் காட்டினதில் மார்த்தாள் செய்தது நல்லதுதான், ஆனால் அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அது போதுமானதல்ல. எனவே மரியாள் செய்தது மேம்பட்டதாக இருந்தது.
சரீர அல்லது பொருளாதார காரியங்களுக்கு மாறாக, ஆவிக்குரிய மதிப்புகள் மீது முக்கியத்துவம் வைப்பதைக் குறித்தும் இயேசு தம்முடைய மலை பிரசங்கத்தில் அழுத்திக் காண்பித்தார். அவர் சொன்னார்: “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.”—மத்தேயு 5:3.
நல்லவர்களாக இருந்தும், முக்கியமாக “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வு இல்லாதவர்களாக இருக்கும் யாரையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் தாமே அப்படிப்பட்ட ஒருவராக இருக்கக்கூடும். அப்படியிருந்தால், நன்மைக்காகக் கடவுளுடைய தராதரங்களை அறிந்துகொண்டு ஆவிக்குரிய காரியங்களினிடமாக திரும்புவதற்கு நீங்கள் முயற்சி எடுப்பதில் ஞானமுள்ளவர்களாக இருப்பீர்கள்.
அப்படி செய்வதன் மூலம், பூமியெங்கும் ஸ்தாபிக்கப்படும் கடவுளுடைய புதிய ஒழுங்கு முறையைக் காணும் எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பீர்கள். அங்கே கொள்ளையடிக்கப்படுவார்களோ அல்லது கற்பழிக்கப்படுவார்களோ, பழிக்கப்படுவார்களோ என்ற பயத்தில் எவரும் வாழமாட்டார்கள். சிறைச்சாலைகள் இனிமேலும் தேவையில்லை, அல்லது காவல்துறையினரோ அல்லது இராணுவத்தை சேர்ந்தவர்களோ இருக்க மாட்டார்கள்—ஏனெனில் இவர்கள் அதிக பலனளிக்கும் வேலையைக் கொண்டிருப்பார்கள். (g85 9/22)