அமைதி காக்கும் முயற்சிகளால் அமைதி மலருமா?
போரும் வன்முறையும் இன்று உலகத்தில் தொடர்கதையாகிக்கொண்டே போகின்றன. அதனால், ஐ.நா. சபையும் மற்ற அமைப்புகளும் அமைதி காக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. அதில் ஒன்று, வன்முறை பூமியில் அதன் பிரதிநிதிகளை நியமித்திருக்கின்றன. அந்த இடங்களில் நிலைமை கைமீறி போகாமல் பார்த்துக்கொள்வதும், சமாதானத்தை நிலைநாட்டுவதும்தான் இவற்றின் நோக்கம். “இந்தப் பூமி சமாதானமான இடமாக மாற வேண்டும் என்ற எங்களுடைய லட்சியத்தின் இதய துடிப்பே ஐ.நா. சபையின் அமைதிப் படையில் சேவை செய்கிறவர்கள்தான்” என்று ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சொன்னார்.
வருஷக்கணக்காக நடக்கிற அமைதி காக்கும் முயற்சிகள் சில வெற்றிகரமாக இருந்திருக்கின்றன. உதாரணத்துக்கு, குடிமக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள், அகதிகள் தங்களுடைய தாய் நாட்டுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள், உணவு மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன, இடிந்து கிடக்கிற சாலைகளும் கட்டிடங்களும் திரும்ப சீரமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அமைதி காக்கும் முயற்சிகளுக்கு பெரிய பெரிய தடைக்கற்கள் இருப்பதால் நினைத்ததை எல்லாம் சாதிக்க முடிவதில்லை. அப்படியென்றால், உலகம் முழுவதும் அமைதி பூங்காவாக மாற ஏதாவது நிரந்தர தீர்வு இருக்கிறதா? பைபிள் தரும் பதில்கள் என்ன?
சவால்களும் பைபிள் தீர்வுகளும்
சவால்: ஒத்துழைப்பு இல்லாதது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவமும், ராணுவம் சாராத அமைப்புகளும் ஒன்றாக கைகோர்த்து வேலை செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாலும் ஒவ்வொரு நாட்டுக்கும் முன்னுரிமைகள் வேறுபடுவதாலும் இந்த அமைப்புகளால் சில சமயங்களில் ஒற்றுமையாகவும் சிறப்பாகவும் வேலை செய்ய முடிவதில்லை.
பைபிளின் தீர்வு: “பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார் . . . அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் [மனித அரசாங்கங்களை] அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானியேல் 2:44.
ரொம்ப சீக்கிரத்தில் கடவுள் எல்லா போர்களுக்கும் சமாதி கட்டி இந்த பூமியை அமைதி பூங்காவாக மாற்றிவிடுவார். (சங்கீதம் 46:8, 9) இன்றைக்கு இருக்கிற எல்லா அரசாங்கங்களையும் நீக்கிவிட்டு ஒரே அரசாங்கத்தை, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தை, கொண்டு வருவார். இந்த அரசாங்கம் பரலோகத்தில் இருந்து பூமியை ஆட்சி செய்யும்போது போர் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. அமைதி காப்பதற்காக மனிதர்கள் ஏற்படுத்தியிருக்கிற அமைப்புகளுக்கும் அவசியம் இருக்காது.
சவால்: பணம், பொருள், சக்தி குறைவுபடுவது. அமைதி காப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறவர்களிடம் ஆள் பலமோ, பண பலமோ, பொருள் வளமோ போதுமான அளவு இருப்பதில்லை. இவையெல்லாம் அவர்களுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இவற்றில் ஈடுபடுகிற ஆட்கள், உயிருக்கே ஆபத்தான கொடூரமான இடங்களில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
பைபிளின் தீர்வு: ‘நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுள் கிறிஸ்துவை பரலோகத்தில் தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைத்தார். எல்லா அரசாங்கத்துக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் அவரை உயர்த்தினார்.’—எபேசியர் 1:17, 20, 21.
எல்லாம் வல்ல கடவுளான யெகோவா,a தன்னுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசுவை நியமித்திருக்கிறார். (தானியேல் 7:13, 14b) சிறந்த விதத்தில் ஆட்சி செய்வதற்கு தேவையான எல்லாவற்றையுமே இயேசுவுக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். எந்தவொரு மனித அரசாங்கத்துக்கோ அமைப்புக்கோ இல்லாத அளவுக்கு வல்லமை, அறிவு, புரிந்துகொள்ளும் திறன், ஞானம் ஆகியவற்றை இயேசுவுக்கு கடவுள் அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 11:2) கட்டளை கொடுத்த உடனே களத்தில் இறங்குகிற சக்தி வாய்ந்த தேவதூதர்களுடைய படையும் இயேசுவிடம் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:14) அவருக்கு எந்த சூழ்நிலையுமே சவாலானதும் இல்லை, சிக்கலானதும் இல்லை.
கடவுள் இயேசுவுக்கு கொடுத்த வளங்களையும் திறமைகளையும் பயன்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைப்பார். அதோடு, அவருடைய அரசாங்கத்தில் வாழ்கிற ஒவ்வொருவருக்கும் நிம்மதியையும் பாதுகாப்பையும் சமாதானமான சூழ்நிலைமையையும் கொடுப்பார்.—ஏசாயா 32:17, 18.
சவால்: சட்ட வரம்புகள். சட்ட வரம்புகள் இருப்பதால், சில சமயங்களில் அமைதி காக்கும் அமைப்புகளில் வேலை செய்கிறவர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியவற்றை சரியாக செய்ய முடிவதில்லை. ஏனென்றால், அவர்களுடைய வரம்புகள் என்ன... அவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது... என்பதற்கான தெளிவான விதிமுறைகள் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதனால், மற்றவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அவர்களால் வழங்க முடியவில்லை, தங்களுடைய குறிக்கோள்களையும் முழுமையாக எட்ட முடிவதில்லை.
பைபிளின் தீர்வு: “பரலோகத்திலும் பூமியிலும் [இயேசுவுக்கு] எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.”—மத்தேயு 28:18.
இயேசு தன்னுடைய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி இந்தப் பூமி முழுவதையும் சமாதானம் பூத்து குலுங்குகிற இடமாக ஆக்குவார். அதற்கு தேவையான தெளிவான விதிமுறைகளை இயேசுவுக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22) இயேசு ஊழல் செய்ய மாட்டார். அநியாயமாக நடந்துகொள்ளவே மாட்டார். (ஏசாயா 11:3-5) அதனால்தான், பைபிள் அவரை “சமாதானத்தின் அதிபதி” என்றும் அவருடைய அரசாங்கத்தில் ‘நியாயத்தையும் நீதியையும் உறுதியாக நிலைநாட்டுவார்’ என்றும் சொல்கிறது.—ஏசாயா 9:6, 7.
கடவுளுடைய அரசாங்கம்—உண்மையான சமாதானத்துக்கு ஒரே தீர்வு
அமைதி காக்கும் படைகளால் ஓரளவுக்குத்தான் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். சில இடங்களில் நடக்கிற போர்களைத்தான் அவர்களால் நிறுத்த முடியும். ஆனால், வன்முறைக்கு ஆணிவேராக இருக்கிற பகையை அவர்களால் முழுமையாக எடுத்துப்போட முடியாது.
“அமைதி என்பதே இல்லாத இடத்தில் எப்படி அமைதியை காக்க முடியும்!”—டென்னிஸ் ஜெட், ஐ.நா. சபையின் முன்னாள் தூதுவர்.
கடவுளுடைய அரசாங்கம்தான் உண்மையான சமாதானத்துக்கான ஒரே தீர்வு. ஏனென்றால், மனிதனுடைய மனதில் வேர்விட்டிருக்கிற பகையை இந்த அரசாங்கத்தால் மட்டும்தான் வேரோடு பிடுங்கி எறிய முடியும். இயேசு பூமியில் இருந்த சமயத்தில், தன்னை பின்பற்றியவர்களிடம் மற்றவர்களிடம் எப்படி சமாதானமாக இருப்பது, மற்றவர்களிடம் எப்படி அன்பு காட்டுவது என்பதை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் காட்டினார். அவர் சொன்ன சில விஷயங்களை நாம் பார்க்கலாம்:
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களுடைய முக்கியமான அடையாளமே மற்றவர்கள்மேல் காட்டுகிற அன்புதான் என்று இயேசு சொன்னார். அதுமட்டுமல்ல, சக மனிதர்கள்மேல் பகையை காட்டுகிற யாருமே கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. பைபிள் சொல்லும் சில விஷயங்களைப் பார்க்கலாம்:
உலகம் முழுவதும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு ஒரே சிறந்த தீர்வு என்னவென்று மனித இனத்தை படைத்த யெகோவா தேவனுக்கு மட்டும்தான் தெரியும். அமைதி காக்கும் முயற்சிகள் உட்பட, எந்தெந்த விஷயங்களில் எல்லாம் மனிதர்கள் தோல்வி அடைந்தார்களோ அவை எல்லாவற்றையும் கடவுளுடைய அரசாங்கம் வெற்றிகரமாக செய்து முடிக்கும்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
b தானியேல் 7:13, 14-ல் ‘மனிதகுமாரன்’ என்று சொல்லப்பட்டிருக்கிற வார்த்தை இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.—மத்தேயு 25:31; 26:63, 64.