மே 4-10, 2026
பாட்டு 53 ஊழியத்துக்கு தயாரிப்போம்
ஊழியத்துக்கு உதவும் “கற்பிக்கும் கலையை” வளர்த்துக்கொள்ளுங்கள்
‘கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி; கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி பொறுமையோடு பேசு.’—2 தீ. 4:2.
என்ன கற்றுக்கொள்வோம்?
ஊழியத்தில் இன்னும் நன்றாகச் சொல்லிக்கொடுக்க நமக்கு உதவும் மூன்று விஷயங்களைப் பற்றிக் கற்றுக்கொள்வோம்.
1. நாம் எல்லாருமே எதை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஏன்? (2 தீமோத்தேயு 4:2) (படத்தையும் பாருங்கள்.)
“எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (மத். 28:19, 20) கிறிஸ்தவர்கள் எல்லாருமே கற்றுக்கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது. உண்மைதான், “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருப்பவர்களை யெகோவாதான் சத்தியத்தின் பக்கம் ஈர்க்கிறார். அப்படிப்பட்டவர்களிடம் நம்மை வழிநடத்துவதில் தேவதூதர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. (அப். 13:48; யோவா. 6:44; வெளி. 14:6) இருந்தாலும், நாமும் நம் பங்கைச் செய்ய வேண்டும். அப்போஸ்தலர்களான பவுலும் பர்னபாவும் அதைத்தான் செய்தார்கள். இக்கோனியாவில் இருந்த ஜெபக்கூடத்தில் பிரசங்கித்தபோது, “அவர்கள் திறமையாகப் பேசியதால் ஏராளமான யூதர்களும் கிரேக்கர்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.” (அப். 14:1) பவுலும் பர்னபாவும் “கற்பிக்கும் கலையை” வளர்த்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. (2 தீமோத்தேயு 4:2-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவர்களாக நாம் எல்லாருமே அந்தக் கலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இயேசுவிடமிருந்தும் அவருடைய சீஷர்களான பவுல், பர்னபா போன்றவர்களிடமிருந்தும் “கற்பிக்கும் கலையை” நாம் கற்றுக்கொள்ளலாம் (பாரா 1)
2. கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள முடியாது என்று சில கிறிஸ்தவர்கள் ஏன் யோசிக்கலாம்?
2 சிலர் அவ்வளவாகப் படிக்காததால் அல்லது மற்றவர்களுக்கு விளக்கும் அளவுக்குத் திறமை இல்லை என்று நினைப்பதால், கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள முடியாது என்று யோசிக்கிறார்கள். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சில ஆண்கள்கூட அப்படி யோசித்திருக்கிறார்கள். (யாத். 4:10; எரே. 1:6) வேறு சிலர், மற்றவர்களுக்குக் கிடைக்கும் அளவுக்கு ஊழியத்தில் பலன்கள் கிடைக்காததால், தங்களுக்கு இருக்கிற கற்பிக்கும் கலையை நினைத்து சோர்ந்துபோகிறார்கள். உண்மைதான், யாரையெல்லாம் நாம் சந்திக்கிறோமோ, யாரிடம் எல்லாம் பேசுகிறோமோ அவர்கள் எல்லாருமே நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. நமக்குக் கிடைக்கும் பலன்கள் நம்முடைய முயற்சிகளை மட்டுமே சார்ந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது. நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி, யெகோவாவும் தேவதூதர்களும் நல்மனமுள்ள ஆட்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகிறார்கள். இருந்தாலும், மக்களின் மனதைத் தொடும் விதத்தில் நல்ல செய்தியைச் சொல்ல நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும். அதற்கு இந்தக் கட்டுரை உதவும். கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்ள உதவும் மூன்று வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மக்கள்மேல் அக்கறை காட்டுங்கள்
3. கேட்கிறவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் இயேசுவால் எப்படிப் பேச முடிந்தது?
3 மனிதர்களுடைய “இதயத்தில் என்ன இருந்ததென்று” இயேசுவுக்குத் தெரிந்திருந்தது என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 2:25) மக்கள் எப்படி யோசித்தார்கள்... அவர்களுடைய உள்நோக்கம் என்ன... இவையெல்லாமே அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்ததால் அவரால் அவர்களுடைய மனதைத் தொடும் விதத்தில் பேச முடிந்தது. ஆன்மீக விதத்தில் அந்த மக்கள் பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி இருந்ததை அவர் பார்த்தார். தேவையில்லாத பாரம்பரியங்களாலும் மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களாலும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதையும் பார்த்தார். (மத். 9:36; 23:4) இந்தப் பிரச்சினைகளைப் பற்றித்தான் மலைப் பிரசங்கத்தில் பேசினார். மக்கள் எந்த விஷயங்களால் பாதிக்கப்பட்டார்களோ அதைப் பற்றிப் பேசியதால் நிறையப் பேர் இயேசுவிடம் ஈர்க்கப்பட்டார்கள்.
4. மக்கள்மேல் அக்கறை இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்? (படங்களையும் பாருங்கள்.)
4 நாமும் மக்களுடைய கவலைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது அவர்கள்மேல் அக்கறை வைத்திருப்பதைக் காட்டுகிறோம். ஊழியத்தில் நாம் பார்க்கிற ஒவ்வொருவருமே சாத்தானுடைய இந்த மோசமான உலகத்தால் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ளும்போது அவர்கள்மேல் அனுதாபத்தைக் காட்ட முடியும். உதாரணத்துக்கு, சமீபத்தில் செய்தியில் வந்த ஏதோவொரு விஷயத்தை நினைத்து உங்கள் பகுதியில் இருக்கிறவர்கள் கவலைப்படுகிறார்களா? பள்ளியில் பிள்ளைகளுடைய பாதுகாப்பை நினைத்து பெற்றோர்கள் கவலைப்படுகிறார்களா? வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறதா? ‘படுமோசமான’ இந்தக் காலத்தில், பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றித் தெரியாத மக்களுடைய வாழ்க்கை, எவ்வளவு பரிதாபமான நிலையில் இருக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!—2 தீ. 3:1; ஏசா. 65:13, 14.
மாணவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், அவர்கள்மேல் அக்கறை காட்டவும் கற்றுக்கொள்ளுங்கள் (பாரா 4)
5. இயேசு எப்படி பரிசேயர்களைப் போல் நடந்துகொள்ளவில்லை? (மத்தேயு 11:28-30)
5 இயேசு மக்கள்மேல் அக்கறை காட்டினார். அவர்களை அவர் நடத்திய விதத்திலிருந்தே அவர்களுக்கு அது புரிந்தது. அன்றிருந்த பரிசேயர்களைப் போல் அவர் நடந்துகொள்ளவில்லை. ஏனென்றால் பரிசேயர்கள், சாதாரண மக்களைத் தாழ்வாகவும் இழிவாகவும் பார்த்தார்கள். (மத். 23:13; யோவா. 7:49) ஆனால் இயேசு, மக்களைக் கரிசனையோடும் மரியாதையோடும் நடத்தினார். அவர் “சாந்தமும் மனத்தாழ்மையுமாக” இருந்ததால் அவரால் ஒரு நல்ல போதகராக இருக்க முடிந்தது. (மத்தேயு 11:28-30-ஐ வாசியுங்கள்.) நாமும் மக்களைக் கரிசனையோடும் மரியாதையோடும் நடத்த வேண்டும்.
6. நம் செய்தியைக் கேட்காதவர்களிடமும் எதிர்க்கிறவர்களிடமும் நாம் எப்படிக் கரிசனையோடும் மரியாதையோடும் நடந்துகொள்ளலாம்?
6 சிலர், நாம் சொல்லும் செய்தியைக் கேட்காமல் போகலாம் அல்லது எதிர்க்கலாம். அந்த மாதிரி சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அதை வெறுமனே பொறுத்துக்கொண்டால் மட்டும் போதாது. இயேசு நம்மிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “உங்களை வெறுக்கிறவர்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதியுங்கள், உங்களை அவமதிக்கிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.” (லூக். 6:27, 28) இதைச் செய்வது சுலபமாக இருக்க வேண்டும் என்றால் இந்த விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: நாம் சொல்கிற செய்தியை மக்கள் கேட்காமல் போவதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். உண்மைதான், சிலர் வேண்டுமென்றே நம்மை எதிர்க்கிறார்கள். ஆனால் வேறு சிலருக்கு, நம்மேல் எந்தக் கோபமும் இருக்காது. அவர்கள் குடும்பப் பிரச்சினையால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம் அல்லது வேறு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம். ஒருவேளை, நாம் ஒரு தவறான சமயத்தில் அவர்களைப் போய் பார்த்திருக்கலாம்; அதனால், அவர்கள் நம்மை எதிர்க்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் சரி, நம் ‘பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருப்போம்.’ (கொலோ. 4:6) மக்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தால்... அவர்களுடைய தேவைகளை நாம் புரிந்துகொண்டால்... மக்களிடம் நாம் கோபப்பட மாட்டோம்; நல்ல போதகர்களாகவும் இருப்போம்.
கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்
7. இயேசு எதைப் பயன்படுத்தி மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்? (யோவான் 7:14-16)
7 இயேசு தன்னுடைய சொந்தக் கருத்துகளை மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை. கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாக வைத்துதான் சொல்லிக்கொடுத்தார். மக்கள் அதைச் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்திலும் ஞாபகம் வைத்துக்கொள்கிற விதத்திலும் சொல்லிக்கொடுத்தார். “அவர் வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராகக் கற்பித்தார்” என்று பைபிள் சொல்கிறது. அவர் சொல்லிக்கொடுத்த விதத்தைப் பார்த்து மக்கள் “அசந்துபோனார்கள்.” (மாற். 1:22) இயேசுவின் நாளில் வாழ்ந்த வேத அறிஞர்கள், ஒருசில புகழ்பெற்ற மதத் தலைவர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களை மேற்கோள் காட்டி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் இயேசு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வேதவசனங்களை மேற்கோள் காட்டி சொல்லிக்கொடுத்தார். கடவுளுடைய மகனாக முன்பு அவர் பரலோகத்தில் வாழ்ந்ததால், அவருக்கு அபாரமான ஞானம் இருந்தது. அவர் நினைத்திருந்தால் நிறைய விஷயங்களைச் சொல்லி, கேட்கிறவர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்திருக்கலாம்; அவர்களைத் திணறடித்திருக்கலாம். ஆனால், அப்படியெல்லாம் அவர் செய்யவில்லை. இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்கள், கடவுளுடைய விருப்பத்தையும் அவருடைய வார்த்தையையும் சுற்றித்தான் இருந்தன. (யோவான் 7:14-16-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே இயேசு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்.
8. பேதுரு எப்படி இயேசு மாதிரியே நடந்துகொண்டார்?
8 இயேசுவின் சீஷர்களும் கடவுளுடைய வார்த்தையைத்தான் அடிப்படையாக வைத்துச் சொல்லிக்கொடுத்தார்கள். கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள் அன்று அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த பேச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அன்று பிரபலமாக இருந்த பள்ளிகளில் அவர் படிக்கவில்லை என்றாலும், மக்களுடைய மனதைத் தொடும் விதத்தில் அவரால் கற்றுக்கொடுக்க முடிந்தது. காரணம், இயேசு மூலம் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி, வேதவசனங்களிலிருந்து அவர் விளக்கினார். (அப். 2:14-37) பலன்? “அவர் சொன்னதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள்; அன்று சுமார் 3,000 பேர் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.”—அப். 2:41.
9. கற்றுக்கொடுக்கும்போது நாம் ஏன் பைபிளைப் பயன்படுத்த வேண்டும்?
9 மக்களுடைய மனதைத் தொடுவதற்கு கடவுளுடைய வார்த்தையைவிட சிறந்த கருவி வேறு எதுவுமே இல்லை. (எபி. 4:12) அதனால், மக்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது நாம் பைபிள்மேல் கவனத்தைத் திருப்ப வேண்டும். நாம் ‘கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க’ வேண்டுமே தவிர, நம் கருத்துகளை அல்ல. (2 தீ. 4:2) “யெகோவாவே ஞானத்தைக் கொடுக்கிறார். அவருடைய வாய் அறிவையும் பகுத்தறிவையும் பொழிகிறது” என்று நீதிமொழிகள் 2:6 சொல்கிறது. நாம் வேதவசனங்களிலிருந்து கற்றுக்கொடுக்கும்போது, ஒரு விதத்தில் யெகோவாவை மக்களிடம் பேசவிடுகிறோம். (மல். 2:7) பைபிளில் இருக்கிற ஞானம், மனித ஞானத்தைவிட ரொம்ப உயர்ந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அது கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. சந்தோஷமாக, திருப்தியாக வாழவும் படைப்பாளரை நாம் சந்தோஷப்படுத்தவும் தேவையான விஷயங்கள் அதில் இருக்கின்றன.—2 தீ. 3:16, 17.
10. பைபிள் மாணவரின் கவனத்தை எப்படிக் கடவுளுடைய வார்த்தையின் பக்கம் திருப்பலாம்?
10 பைபிள் படிப்பை நடத்த தயாரிக்கும்போது, மாணவரின் கவனத்தை பைபிள் பக்கம் திருப்ப என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். மாணவருக்குச் சொல்லிக்கொடுக்க படங்களையும் வீடியோக்களையும் பயன்படுத்துகிறோம் என்பது உண்மைதான். ஆனால், பைபிள்தான் நம் முக்கியமான பாடப் புத்தகம் என்பதை மாணவர் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், முக்கிய வசனங்களை பைபிளிலிருந்து படியுங்கள். அதைப் பற்றி யோசித்துப் பார்க்க மாணவருக்கு உதவுங்கள். படங்களையும் வீடியோக்களையும் காட்டும்போது, அவற்றுக்குப் பின்னால் இருக்கும் பைபிள் நியமங்களைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுங்கள். அதற்கு நீங்கள் நிறையப் பேசவோ நிறைய வசனங்களை வாசிக்கவோ வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, படிக்கிற ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொள்ள மாணவருக்கு நேரம் கொடுங்கள்; தேவைப்பட்டால் ஒரு வசனத்தைத் திரும்ப வாசியுங்கள். இப்படிச் செய்யும்போது, நாம் ஒரு புத்தக படிப்பையோ, படத்தின் படிப்பையோ, வீடியோ படிப்பையோ நடத்தாமல் பைபிள் படிப்பை நடத்துவோம்.—1 கொ. 2:13.
11-12. (அ) நாம் எப்படி பைபிள் மாணவர்களிடம் பொறுமையாக இருக்கலாம்? (அப்போஸ்தலர் 17:1-4) (படத்தையும் பாருங்கள்.) (ஆ) சிலருக்கு பைபிளைப் பற்றி என்ன தெரியாது, நாம் எப்படி அவர்களுக்கு உதவி செய்யலாம்?
11 ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது பைபிள் மாணவருக்குக் கஷ்டமாக இருந்தால், ‘கடவுளுடைய வார்த்தையைப் பொறுமையாக’ சொல்லிக்கொடுங்கள். எல்லா மாணவர்களும் ஒரே வேகத்தில் முன்னேற மாட்டார்கள். சில விஷயங்கள் நமக்குச் சுலபமாகப் புரியலாம்; ஆனால், அதே விஷயத்தைப் புரிந்துகொள்ள சில மாணவர்களுக்குக் கொஞ்சம் நேரம் எடுக்கலாம். பவுல்கூட தெசலோனிக்கேயில் இருந்த யூதர்களுக்கு, பல சந்தர்ப்பங்களில் வேதவசனங்களை விளக்கிச் சொன்னார். அதற்குப் பிறகு, அவர் சொன்னதைச் சிலரால் புரிந்துகொள்ள முடிந்தது.—அப்போஸ்தலர் 17:1-4-ஐ வாசியுங்கள்.
12 நாம் பொறுமையாக இருப்பதற்கு இன்னொரு வழி, நாமே நிறைய பேசிக்கொண்டு இல்லாமல் மாணவரைப் பேச வைப்பது. அவருடைய மனதில் இருப்பதை வெளியே கொண்டுவர கேள்விகளைக் கேளுங்கள்; அவர் பதில் சொல்லும்வரை பொறுமையாக இருங்கள். அவர் சொல்வதை நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். அவர் என்ன யோசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு, அதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை அவர் தெரிந்துகொள்ள சில பைபிள் வசனங்களைப் படித்து, கலந்துபேசுங்கள். இதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: சிலர் பைபிளையே பார்த்திருக்க மாட்டார்கள்; அதில் என்ன இருக்கிறது என்றே அவர்களுக்குச் சுத்தமாகத் தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் பைபிளைக் காட்டாமல் நேரடியாக ஒரு பைபிளைக் கையில் கொடுக்க முடியுமா? புதிய உலக மொழிபெயர்ப்பின் ஆரம்பத்தில் இருக்கிற “கடவுளுடைய புத்தகத்துக்கு ஓர் அறிமுகம்” என்ற பகுதியைப் பயன்படுத்திக்கூட பைபிளில் எவ்வளவு ஞானமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் காட்டலாம். ஒருவேளை, 15-வது கேள்விக்குக் கீழ் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு வசனங்களைப் பயன்படுத்தி, சந்தோஷமாக இருக்க பைபிள் எப்படி உதவும் என்பதை விளக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கடவுளுடைய வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை பைபிள் மாணவருக்குக் காட்டும்போது நீங்கள் நல்ல போதகர்களாக இருப்பீர்கள்.
திறமையுள்ள ஒரு போதகர், காதுகொடுத்து கேட்பார்; அதிகமாகப் பேச மாட்டார் (பாராக்கள் 11-12)
யெகோவா பக்கம் கவனத்தைத் திருப்புங்கள்
13. நாம் சொல்லிக்கொடுக்கும்போது யார் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டும்? உதாரணம் சொல்லுங்கள்.
13 மக்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவரிடம் நெருங்கிப்போகவும் உதவி செய்ய வேண்டும்—இதுதான் நம் குறிக்கோள். (யாக். 4:8) அதற்காக நாம் செய்கிற வேலையை, கல்யாணத்தில் ஃபோட்டோ/வீடியோ எடுக்கிற ஒருவர் செய்கிற வேலையோடு ஒப்பிடலாம். கல்யாணத்தில் அவர் தன்னையே ஃபோட்டோ/வீடியோ எடுக்க மாட்டார். அதற்குப் பதிலாக, கல்யாணத்தில் முக்கியமாக இருக்கிற மாப்பிள்ளையையும் பெண்ணையும்தான் எடுப்பார்; அவர்களின் பக்கம்தான் கவனத்தைத் திருப்புவார். அதேமாதிரிதான் நாமும் பைபிளிலிருந்து சொல்லிக்கொடுக்கும்போது, நம்மேல் கவனத்தைத் திருப்பாமல் யெகோவாமேல் கவனத்தைத் திருப்ப வேண்டும்.
14. பைபிள் மாணவரின் கவனத்தை யெகோவா பக்கம் திருப்ப நாம் என்ன செய்யலாம்?
14 பைபிள் படிப்பு நடத்தும்போது, யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ள உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள். (நீதி. 27:11) இந்த அமைப்பில் சேர, இதையெல்லாம் செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்ய கூடாது என்று சொல்லிக்கொடுப்பது மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருக்க கூடாது. பைபிள் மாணவர்கள் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும்; அதற்கு உதவி செய்வதுதான் உங்கள் குறிக்கோள். ஒருவேளை பைபிள் மாணவர், ஏதோவொரு கெட்ட பழக்கத்தை விடுவதற்குக் கஷ்டப்பட்டால் இந்த மாதிரி கேள்விகளை அவரிடம் கேளுங்கள்: “யெகோவா ஏன் இந்தப் பழக்கத்தை வெறுக்கிறார்? உங்களுக்கு ரொம்பப் பிடித்த ஒரு விஷயத்தை நீங்கள் விட்டுவிட வேண்டும் என்று யெகோவா ஏன் நினைக்கிறார்? யெகோவா இப்படிச் சொல்லியிருப்பது, அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை எப்படிக் காட்டுகிறது?” பைபிள் மாணவர்கள் யெகோவாவைப் பற்றி யோசிப்பதற்கு நீங்கள் எந்தளவுக்கு உதவுகிறீர்களோ, அந்தளவுக்கு அவரை ஒரு பாசமான அப்பாவாகப் பார்ப்பார்கள். அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப்படுவார்கள்.
கற்பிக்கும் கலையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்
15. கற்பிக்கும் கலையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?
15 கற்பிக்கும் கலையை வளர்த்துக்கொள்வதில் நீங்கள் இன்னும் எதில் முன்னேற வேண்டும் என்று தெரிந்துகொள்ள யெகோவாவிடம் உதவி கேளுங்கள். (1 யோ. 5:14) செய்த ஜெபத்துக்கு ஏற்ற மாதிரி செயல்படுங்கள். அதாவது, கூட்டங்கள் மூலம் யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற பயிற்சியை ஏற்றுக்கொள்ளுங்கள். திறமையாக பைபிள் படிப்பு நடத்துகிறவர்களை உங்களுடைய பைபிள் படிப்புகளுக்குக் கூட்டிக்கொண்டு போங்கள். நீங்கள் எதில் முன்னேற வேண்டும் என்று அவர்களிடம் கேளுங்கள். இதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் சொல்லிக்கொடுக்கிற விஷயங்கள் உங்களுக்கு ரொம்பப் பழக்கமானதாக இருக்கலாம், ஆனால் பைபிள் மாணவருக்கு அல்ல. அதனால், அந்த விஷயங்களை மாணவரின் இடத்திலிருந்து பாருங்கள். நீங்கள் சொல்லித்தருகிற விஷயங்கள், சந்தோஷத்தைத் தரும் ஒரு நல்ல செய்தி என்பதைப் புரிந்துகொள்ள மாணவருக்கு உதவுங்கள். அப்படிச் செய்யும்போது, அவர் யெகோவாவின் நெருக்கமான நண்பராக ஆவார்; அவருக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும்.—சங். 1:1-3.
16. கற்பிக்கும் கலையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வது ஏன் நல்லது?
16 யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது நமக்கு இருக்கிற ஒரு பெரிய சந்தோஷம் என்று சொல்லலாம். மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற இந்தச் சந்தோஷமான வேலையை, புதிய உலகத்தில் இன்னும் அதிகமாகச் செய்வோம். அதனால் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது, கேட்கிறவர்கள்மேல் நாம் தொடர்ந்து அக்கறை காட்டலாம், கடவுளுடைய வார்த்தையை வைத்து சொல்லிக்கொடுக்கலாம், யெகோவாவின் பக்கம் கவனத்தைத் திருப்பலாம். இப்படியெல்லாம் செய்தால், ஊழியத்துக்குத் தேவையான கற்பிக்கும் கலையை நம்மால் வளர்த்துக்கொண்டே இருக்க முடியும்!
பாட்டு 65 முன்னேறு!