அவருடைய ‘அடிச்சுவடுகளை நெருங்கப் பின்பற்றுங்கள்’
1. நாம் எப்படித் திறம்பட்ட ஊழியர்களாய் ஆகலாம்?
1 ரபீக்களுடைய பள்ளிகளில் இயேசு கல்வி பயிலாவிட்டாலும், உலகிலேயே அவர்தான் மிகப் பெரிய ஊழியராய் திகழ்ந்தார். அவர் செய்த ஊழியத்தைப் பற்றிய தகவல் நம்முடைய நன்மைக்காக பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். திறம்பட்ட ஊழியர்களாய் ஆவதற்கு, நாம் அவருடைய ‘அடிச்சுவடுகளை [“நெருங்கப்,” NW] பின்பற்ற’ வேண்டும்.—1 பே. 2:21.
2. மக்களிடம் கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?
2 ஜனங்களிடம் அன்பு காட்டுங்கள்: இயேசுவுக்கு ஜனங்களிடம் இருந்த அன்பும் கரிசனையும் பிரசங்கிக்க அவரைத் தூண்டியது. (மாற். 6:30-34) நம் பிராந்தியத்தில் உள்ள பலர் ‘வேதனைப்படுகிறார்கள்’; எனவே, அவர்கள் சத்தியத்தை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். (ரோ. 8:22) அவர்களுடைய மோசமான நிலையையும் அவர்கள்மீது யெகோவா அன்பும் அக்கறையும் வைத்திருப்பதையும் நாம் எண்ணிப் பார்க்கும்போது தொடர்ந்து ஊழியத்தில் ஈடுபட தூண்டப்படுவோம். (2 பே. 3:9) மேலும், நாம் உண்மையிலேயே அவர்கள்மீது கரிசனை காட்டுவதை மக்கள் புரிந்துகொண்டால் நம் செய்திக்கு மனமுவந்து செவிசாய்ப்பதோடு அதன்படி நடக்கவும் செய்வார்கள்.
3. எந்தெந்த சந்தர்ப்பங்களில் இயேசு மற்றவர்களுக்குச் சாட்சிகொடுத்தார்?
3 எல்லா சந்தர்ப்பங்களிலும் சாட்சிகொடுங்கள்: மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க தமக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் இயேசு பயன்படுத்திக்கொண்டார். (மத். 4:23; 9:9; யோவா. 4:7-10) அதேபோல, அன்றாட வேலைகளைச் செய்யும்போது சத்தியத்தைப்பற்றிச் சாட்சிகொடுக்க நாமும் தயாராய் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், பயணிக்கையில், கடைகளுக்குச் செல்கையில் என எல்லா சந்தர்ப்பங்களிலும் சாட்சிகொடுப்பதற்காக சிலர் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
4. ராஜ்யத்தையே மையப் பொருளாய் வைத்து ஊழியத்தில் நாம் எப்படிப் பேசலாம்?
4 ராஜ்யத்திடம் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்: ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திதான் இயேசுவினுடைய ஊழியத்தின் மையப் பொருளாய் இருந்தது. (லூக். 4:43) நாம் சாட்சிகொடுக்கும்போது, உடனடியாகவோ நேரடியாகவோ ராஜ்யத்தைப்பற்றிச் சொல்லாவிட்டாலும் அதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வீட்டுக்காரருக்கு உதவ வேண்டும் என்பதை மனதில் வையுங்கள். நாம் கடைசி நாட்களில் வாழ்வதைச் சுட்டிக்காட்டுகிற மோசமான உலக நிலைமைகளைப்பற்றிப் பேசினாலும், முக்கியமாய் நாம் ‘நற்காரியங்களையே சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.’—ரோ. 10:15.
5. நம்முடைய ஊழியம் திறம்பட்டதாய் இருப்பதற்கு, பைபிளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
5 பதில் அளிக்க கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்: ஊழியத்தில் தம்முடைய போதனைகளை ஆதரிக்க இயேசு எப்போதும் வேதவசனங்களைப் பயன்படுத்தினார். அவர் சுயமாய் எதையும் போதிக்கவில்லை. (யோவா. 7:16, 18) அவர் கடவுளுடைய வார்த்தையைப் படித்தார், படித்த விஷயங்களைப் பயன்படுத்தி சாத்தானின் தாக்குதலைச் சமாளித்தார். (மத். 4:1-4) திறம்பட்ட விதத்தில் நாம் மற்றவர்களுக்குக் கற்பிக்க, பைபிளைத் தினமும் படிப்பதோடு, படித்த விஷயங்களைப் பின்பற்றவும் வேண்டும். (ரோ. 2:21) ஊழியத்தில் நம்மிடம் கேள்வி கேட்போருக்கு, பைபிளின் அடிப்படையில் நாம் பதில் அளிக்க வேண்டும்; சூழ்நிலை அனுமதித்தால், பைபிளிலிருந்தே பதிலை நேரடியாக அவர்களுக்கு வாசித்துக் காட்டலாம். நாம் சொந்த விளக்கத்தைத் தரவில்லை, கடவுளுடைய கருத்துகளையே சொல்கிறோம் என்பதை வீட்டுக்காரர் புரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும்.
6. தமக்குச் செவிசாய்த்தவர்களின் இருதயத்தை எட்ட இயேசு என்ன செய்தார்?
6 கற்பிக்கையில் இருதயத்தை எட்டுங்கள்: “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.” (யோவா. 7:46) இயேசுவை ஏன் கைதுசெய்து வரவில்லையென பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் சேவகர்களிடம் கேட்டபோது அவர்கள் இப்படித்தான் பதில் அளித்தார்கள். மக்களுக்கு இயேசு கற்பித்தபோது தகவலைச் சொன்னால் போதுமென நினைக்காமல், அவர்களுடைய இருதயத்தை எட்டும் விதத்தில் பேசினார். (லூக். 24:32) தம்முடைய செய்தியை மக்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக அன்றாட வாழ்க்கையிலிருந்து உதாரணங்களைப் பயன்படுத்தினார். (மத். 13:34) எக்கச்சக்கமான தகவலை அளித்து மக்களை அவர் திணறடிக்கவில்லை. (யோவா. 16:12) தம்மிடம் அல்ல, யெகோவாவிடமே மக்களின் கவனத்தைத் திருப்பினார். இயேசுவைப் போல நாமும் நம்முடைய ‘போதனையைப்பற்றி கருத்தாயிருந்தால்’ மட்டுமே சிறந்த போதகர் ஆகலாம்.—1 தீ. 4:16, பொது மொழிபெயர்ப்பு.
7. இயேசு ஏன் ஊழியம் செய்வதை நிறுத்திவிடவில்லை?
7 அக்கறை காட்டாதபோதும் எதிர்க்கும்போதும் சோர்ந்துவிடாதீர்கள்: இயேசு அற்புதங்களைச் செய்தபோதிலும் அநேகர் அவருக்குச் செவிகொடுக்கவில்லை. (லூக். 10:13) இயேசுவின் குடும்பத்தாரேகூட அவர் ‘மதிமயங்கியிருப்பதாக’ நினைத்தார்கள். (மாற். 3:21) இருப்பினும், இயேசு ஊழியம் செய்வதை நிறுத்திவிடவில்லை. மக்களை விடுதலை செய்யும் சத்தியம் தம்மிடம் இருப்பதைக் குறித்து அவருக்குத் துளியும் சந்தேகம் இல்லாதிருந்ததால் எப்போதும் நம்பிக்கையான மனநிலையோடு செயல்பட்டார். (யோவா. 8:32) யெகோவாவின் உதவியோடு நாமும் சோர்ந்துவிடாதிருக்கத் தீர்மானமாய் இருக்கிறோம்.—2 கொ. 4:1.
8, 9. நற்செய்தியை அறிவிப்பதற்காகத் தியாகங்களைச் செய்வதில் நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?
8 ஊழியத்தில் முழுமையாய் ஈடுபட தேவையான தியாகங்களைச் செய்யுங்கள்: ஊழியம் செய்வதற்காக சௌகரியங்கள் சிலவற்றை இயேசு தியாகம் செய்தார். (மத். 8:20) அவர் ஊக்கமாய் ஊழியத்தில் ஈடுபட்டார், சிலசமயங்களில் பொழுது சாய்ந்தும் அவர் வெகு நேரம் போதித்தார். (மாற். 6:35, 36) ஊழியத்தைச் செய்துமுடிக்க குறைந்த காலமே தமக்கு இருப்பதை இயேசு அறிந்திருந்தார். “இனிவரும் காலம் குறுகினதானபடியால்” இயேசுவைப் போல நாமும்கூட நம் நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் தியாகம் செய்ய வேண்டும்.—1 கொ. 7:29-31.
9 இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டதால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் திறம்பட்ட ஊழியர்களாக இருந்தார்கள். (அப். 4:13) உலகிலேயே மிகப் பெரிய ஊழியரான இயேசுவைப் பின்பற்றினால், நாமும் ஊழியத்தை முழுமையாய் செய்து முடிப்போம்.—2 தீ. 4:5.