பிரஸ்தாபிகளாவதற்கு உங்கள் பைபிள் மாணாக்கருக்கு உதவுங்கள்
1 இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்த வேலை பெரியளவில் செய்யப்பட வேண்டிய ஒரு வேலையாக இருந்தது. அதைப்பற்றி மத்தேயு 28:19, 20-ல் நாம் காணலாம். கிறிஸ்துவின் அறிவுரைப்படி, அவருடைய சீஷர்கள் இன்னும் அநேக சீஷர்களை உருவாக்க வேண்டும்; பிற்பாடு, சீஷராக்கும் வேலையில் இந்தப் புதிய சீஷர்களும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். கடைசி காலத்தில் உலகெங்கும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை முடிவாக அறிவிப்பதற்கான அஸ்திவாரம் அப்போதே போடப்பட்டது; முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கடைசி காலத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்.—மத். 24:14.
2 நம் பைபிள் மாணாக்கர், நம்மோடு பைபிள் படிக்க ஆர்வம் காட்டுகிற நம் பிள்ளைகளாகவோ மற்றவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக்க வேண்டியுள்ளது. இந்தப் பொறுப்பை அவர்களுக்கு உணர்த்தவும் அதை அவர்கள் சரிவர செய்வதற்கு உதவவும் நாம் உண்மையிலேயே விரும்புகிறோம்.—லூக். 6:40.
3 சாட்சி கொடுக்கத் தயார்படுத்துங்கள்: கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்லும்படி உங்கள் பைபிள் மாணாக்கரை ஊக்கப்படுத்துங்கள். வெளி ஊழியத்தில் உங்களுக்குக் கிடைத்த நல்ல அனுபவங்களை அவர்களிடம் சொல்லுங்கள். ஊழியத்தில் பங்குகொள்வதற்கு சிறுவயதிலிருந்தே உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள். அவர்களால் முடிந்தளவுக்கு சிறந்த முறையில் ஊழியத்தில் ஈடுபட பயிற்றுவியுங்கள். (சங். 148:12, 13) ஊழியத்தை நீங்கள் முக்கியமானதாய்க் கருதுகிறீர்கள் என்பதை உங்கள் சொல்லாலும் செயலாலும் அவர்களுக்குக் காட்டுங்கள்.—1 தீ. 1:12.
4 தம்முடைய நீதியான நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்கிறவர்களை மட்டுமே யெகோவா பயன்படுத்துகிறார். புதிய பிரஸ்தாபிகள், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட அனுபவமுள்ள பிரஸ்தாபிகளைப்போல் நிறைய விஷயங்களைத் தெரிந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், பிரஸ்தாபிகளாக விரும்புகிறவர்கள் பைபிளின் அடிப்படை போதனைகளை நம்ப வேண்டும்; அதை விளக்கிச் சொல்ல முடிந்தவர்களாயும் இருக்க வேண்டும். (ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல், பக். 79-82-ஐப் பாருங்கள்.) ‘மகா பாபிலோனிலிருந்தும்’ அரசியல் சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களிலிருந்தும் முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். அதே சமயத்தில் சபை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.—வெளி. 18:2, 4; யோவா. 17:16; எபி. 10:24, 25.
5 உங்களுடைய பைபிள் மாணாக்கரில் ஒருவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆவதற்குத் தகுதிபெற்றிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதை நடத்தும் கண்காணியிடம் தெரிவிக்க வேண்டும். இரண்டு மூப்பர்கள் உங்களையும் உங்கள் மாணாக்கரையும் சந்தித்துப்பேச அவர் ஏற்பாடு செய்வார். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக சபையுடன் சேர்ந்து ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு உங்கள் மாணாக்கர் தகுதிபெற்றிருக்கிறாரா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். அதன் பிறகு பைபிள் மாணாக்கரை வெளி ஊழியத்திற்கு அழைத்துச் சென்று இன்னும் அதிகமாக பயிற்சி கொடுப்பதற்கான விசேஷ வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.