ஆறுதலைக் கண்டடைய மற்றவர்களுக்கு உதவுங்கள்
1 பேரழிவுகள், யுத்தங்கள், வன்முறைகள், துன்பங்கள் ஆகியவற்றை பற்றிக் கேள்விப்பட்டு அநேக ஆட்களுக்கு அலுத்துப்போய்விட்டது. என்றாலும், இன்றைய செய்தி அறிக்கைகளில் இடம்பெறாமல் இருக்கும் ஆறுதலின் செய்தியே, மனிதவர்க்கத்திற்கு உண்மையில் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. ஆறுதல்படுத்துவது, “நம்பிக்கையும் பலமும் அளித்தல்” மற்றும் மற்றவருடைய “துக்கத்தை அல்லது பிரச்சினையைக் குறைத்தல்” என்று அர்த்தங்கொள்கிறது. இவ்விதமாக யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் மக்களுக்கு உதவி செய்வதற்கு ஆயத்தப்படுத்தப்படுகிறோம். (2 கொ. 1:3, 4) ஜூலையிலும் ஆகஸ்டிலும் நாம் அளிக்கவிருக்கும் பைபிள் அடிப்படையிலான நம்முடைய சிற்றேடுகளில் சத்தியத்தின் ஆறுதலளிக்கும் செய்திகள் அடங்கியுள்ளன. (ரோ. 15:4) வித்தியாசமான சூழ்நிலைமைகளில் அவற்றை அளிப்பதற்கான சில ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
2 துயரமான ஒரு சம்பவத்தைப் பற்றிய செய்திக்குறிப்பு சாட்சி கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கலாம், ஒருவேளை இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லி மற்றவர்களுக்கு ஆறுதலை அளிக்கலாம்:
◼ “இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது, கடவுள் உண்மையில் மனிதர்களின்மீது அக்கறை கொண்டிருக்கிறாரா என்று சிலர் சந்தேகிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] இந்த பூமியைப் படைப்பதற்கு கடவுள் ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தார் என்று பைபிள் சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்.” ஏசாயா 45:18-ஐ வாசியுங்கள். பின்பு தொடருங்கள்: “பூமியில் மனிதர்கள் குடியிருக்கவேண்டும் என்று அவர் விரும்பினால், அவர்கள் அதில் சமாதானமாக வாழ்வதை உறுதிசெய்துகொள்ள அவர் ஏதாவது செய்வார் என்று நம்புவது நியாயமாக இல்லையா? என்னிடம் ஒரு சிற்றேடு உள்ளது. அது உங்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அது கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. [அட்டையிலுள்ள கேள்விகளை வாசியுங்கள்.] நாம் இன்று எதிர்ப்படும் அநியாயமான எல்லா நிலைமைகளையும் கடவுள் முடிவுக்கு கொண்டுவருவார் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரத்தை இது கொண்டிருக்கிறது. இதை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா?” சிற்றேட்டை அளித்துவிட்டு மறுபடியும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
3 மறுசந்திப்பின்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டை நான் கொடுத்தபோது கடவுள் காட்டும் அக்கறைக்கான ஆதாரத்தைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். ஒருவேளை இந்தக் குறிப்பை பக்கம் 7-ல் நீங்கள் கவனித்திருப்பீர்கள். [படத்தைக் காண்பித்து பாரா 15-ஐ சுருக்கமாக விளக்குங்கள்.] மனிதவர்க்கத்தின் படைப்பில் கடவுள் எப்படிப்பட்ட அக்கறையைக் காட்டியிருக்கிறார் என்பதற்கு இது வெறும் ஒரு உதாரணம்தான். [பக்கம் 9-லுள்ள பாரா 27-ஐ வாசிக்கவும்.] பைபிளைத் தனிப்பட்டவிதமாக படிப்பது வாழ்க்கையில் தினந்தோறும் வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு எனக்கு உதவி செய்திருக்கிறது, ஏனென்றால் அது காரியங்களை கடவுளுடைய நோக்குநிலையில் பார்க்க உதவுகிறது.” ஒரு படிப்பை நடத்திக்காட்டுவதாக சொல்லுங்கள்.
4 “வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்?” என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி ஒரு சுருக்கமான சாட்சி கொடுக்கப்படலாம். உங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு இவ்வாறு சொல்லலாம்:
“நான் உங்களையும் உங்கள் அயலகத்தாரையும் ஒரு முக்கியமான செய்தியுடன் சந்தித்து வருகிறேன்.” அந்த சிற்றேட்டில் பக்கம் 4-ல் உள்ள முதல் பாராவை வாசித்துவிட்டு, வீட்டுக்காரர் என்ன நினைக்கிறார் என்று கேளுங்கள், பின்பு அவர் பதில் சொல்வதற்காக காத்திருங்கள். உங்கள் பைபிளை ஏசாயா 45:18-க்கு திருப்புங்கள். அந்த வசனத்தை வாசித்துவிட்டு சொல்லுங்கள்: “நம்மை மனதில் கொண்டுதான் பூமி படைக்கப்பட்டிருக்கிறதென்று இந்த வசனம் காட்டுகிறது. ஆனால் நாம் எதற்காக இங்கு இருக்கிறோம்? நம்முடைய எதிர்காலம் என்ன?” சிற்றேட்டின் நோக்கத்தை விளக்கி அளியுங்கள். மீண்டும் சந்திப்பதற்காக திட்டவட்டமாக ஓர் ஏற்பாட்டைச் செய்யுங்கள்.
5 மறுசந்திப்பின்போது, ஒரு படிப்பை ஆரம்பிப்பதற்காக இந்த அணுகுமுறையை நீங்கள் முயற்சி செய்யலாம்:
◼ “வாழ்க்கையின் நோக்கத்தை யார் நமக்கு சொல்லக்கூடும் என்பதற்கு உதாரணத்தைக் கொடுப்பதன்மூலம் நம்முடைய கடந்த சம்பாஷணையைத் தொடர விரும்புகிறேன். [வாழ்க்கையின் நோக்கம் சிற்றேட்டிலிருந்து பக்கம் 6-ல் உள்ள முதல் இரண்டு பாராக்களை சுருக்கமாக சொல்லுங்கள்.] யெகோவா தேவனே நம்முடைய படைப்பாளர் என்று வெளிப்படுத்துதல் 4:11 விளக்குகிறது. [வாசிக்கவும்.] நம்மை படைப்பதற்கு நிச்சயமாகவே அவர் ஒரு காரணத்தைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பிய மக்கள் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளை படித்திருக்கிறார்கள். அத்தகைய வாய்ப்பை உங்களுக்கும் அளிக்க நான் விரும்புகிறேன்.” நம்முடைய இலவச வீட்டு பைபிள்படிப்பு திட்டம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை விளக்கி, படிப்பை தொடங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்.
6 அன்பானவர்களுடைய மரணத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த உடன்பாடான அணுகுமுறை ஆறுதலை அளிக்கலாம்:
◼ “அன்பானவரை மரணத்தில் இழந்திருக்கும் எல்லோரின் சார்பாகவும் நான் ஒரு பொதுச் சேவை செய்துகொண்டிருக்கிறேன். நாம் சமாளிக்க வேண்டிய மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாக இது இருப்பதால், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற இந்த சிற்றேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு உதவியுள்ளது. இயேசு கிறிஸ்து கொடுத்த கிளர்ச்சியூட்டும் வாக்குறுதியைப் பற்றி இது என்ன சொல்லுகிறது என்று நான் உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். [பக்கம் 26-ல் உள்ள ஐந்தாவது பாராவை, யோவான் 5:21, 28, 29 ஆகிய வசனங்களுடன் வாசியுங்கள்.] இயேசு உண்மையில் லாசருவை மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கும் பைபிள் பதிவைச் சித்தரிக்கக்கூடிய பக்கம் 29-ல் உள்ள படத்தைக் கவனியுங்கள். இந்த ஆறுதலளிக்கும் சிற்றேட்டை பெற்றுக்கொள்ளும்படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், இதைக் குறித்து உங்களோடு கலந்துபேச மீண்டும் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.”
7 நீங்கள் மீண்டும் சந்திக்கையில், “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” என்ற சிற்றேட்டில் பக்கம் 29-ல் உள்ள படத்தை மறுபடியும் காண்பித்து இவ்வாறு சொல்லலாம்:
◼“இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பினதைப் பற்றிய நம்முடைய சம்பாஷணையை நினைவுபடுத்திப் பாருங்கள். [பக்கம் 28-ல் உள்ள படவிளக்கக் குறிப்பை வாசித்து, “அது உண்மையிலேயே சம்பவித்ததா?” என்ற உபதலைப்பின் கீழுள்ள தகவலைச் சிந்தியுங்கள்.] மரித்துப்போன அன்பான ஒருவரை மறுபடியும் பார்க்க முடியும் என்ற இந்த நம்பிக்கையில் உங்களுடைய இருதயம் ஏங்கினால், உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் விசுவாசம் வைப்பதற்கு நான் உங்களுக்கு உதவுகிறேன்.” ஒரு வீட்டு பைபிள் படிப்பை அளியுங்கள்.
8 ‘துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதலளிப்பதில்’ இயேசுவைப் பின்பற்றுவதன் மூலமாக வரவிருக்கும் மாதங்களில் நம்மாலான மிகச் சிறந்ததைச் செய்வோமாக.—ஏசா. 61:2.