வாய்ப்பான காலத்தை வாங்குவது எப்படி
1 யெகோவாவுடைய சேவையில் அதிகமதிகமாய்ப் பெருகுவது நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது! (1 கொ. 15:58) தனிப்பட்டவர்களாக மற்றும் குடும்பமாக படிக்கவும், தினந்தோறும் பைபிளை வாசிக்கவும், சபைக் கூட்டங்களுக்குத் தயாரித்து ஆஜராகவும், வெளி ஊழியத்தில் ஒழுங்காக கலந்துகொள்ளவும் வேண்டிய தேவையை நாம் ஒப்புக்கொள்கிறோம். கண்காணிகளுக்கு மேய்க்கும் பொறுப்புகள் உள்ளன; அவர்கள் சபையின் மற்ற பொறுப்புகளையும் கவனிக்கிறார்கள். சிலருக்கு முக்கியக் குடும்பப் பொறுப்புகளோ பிறருக்குச் செய்ய வேண்டிய பல்வகைப்பட்ட கடமைகளோ இருக்கின்றன. எல்லாவற்றையும் முழுமையாய்ச் செய்து முடிக்க, சமநிலையும் நல்ல தனிப்பட்ட ஒழுங்கமைப்பும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றன.
2 முன்னுரிமைகள் அளித்தல்: ‘வாய்ப்பான காலத்தை வாங்குவதில்’ நாம் வெற்றியடைவது, நம்முடைய பகுத்துணர்வையும், நன்கு சீர்தூக்கிப் பார்ப்பதையும் சார்ந்திருக்கிறது. (எபே. 5:15, 16, NW) [நாட்கள் பொல்லாதவைகளாயிருப்பதால் வாய்ப்பான காலத்தை வாங்குங்கள்’ - NW] ‘மிக முக்கியமானவை’ எவையென்று நாம் தீர்மானித்து, நம்முடைய முன்னுரிமைகள் பட்டியலில் அவற்றை முதலாவதாய் வைக்க வேண்டும். (பிலி. 1:9, NW) [மேலும், மிக முக்கியமானவற்றை நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் முழுமையான பகுத்துணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும் - NW] ஒரு தம்பதி தேவாட்சி முறையில் செயல்படும் தங்களுடைய குடும்பத்தை இவ்வாறு விவரித்தனர்: “எங்கள் வாழ்க்கையை சத்தியத்தால் நாங்கள் நிரப்புகிறோம். . . . சத்தியம் எங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமல்ல, அது எங்கள் வாழ்க்கையாகவே இருக்கிறது. மற்றதெல்லாம் அதை மையமாகக் கொண்டே செயல்படுகிறது.” ஒருவருடைய வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்தையும் ஊழியத்தையும் முதலாவதாக வைப்பது அத்தியாவசியமானது.
3 நேரத்தை வீணாக்கும் காரியங்களைக் கண்டுகொள்ளுங்கள்: ஒரு வாரத்திற்கு 168 மணிநேரம் உள்ளது; ஆகவே நமக்கிருக்கும் நேரத்தை ஞானமாக பயன்படுத்துவது அவசியம். தேவராஜ்ய நடவடிக்கைகளுக்குப் போதிய நேரத்தைக் கொண்டிருப்பதற்காக, நேரத்தை வீணாக்கும் காரியங்களைக் கண்டுகொண்டு, அவற்றைக் குறைக்க வேண்டும். ஐக்கிய மாகாணங்களிலுள்ள சராசரி வயதுவந்தோர், ஒரு வாரத்திற்கு 30 மணிநேரத்தை டிவி பார்ப்பதில் செலவழிப்பதாக ஒரு சுற்றாய்வு காட்டியது! மற்றவர்களுக்கு, உலகப்பிரகாரமான புத்தகங்கள் வாசிப்பதில் அதிக நேரம் செலவாகிறது. சமூக நடவடிக்கைகள், விருப்ப வேலைகள், பொழுதுபோக்குகள் அல்லது ஏதாவது ஒரு வகை கம்ப்யூட்டர் நடவடிக்கை ஆகியவற்றிற்காக மிதமிஞ்சி நேரத்தைத் தாங்கள் செலவிடுவதாக சிலர் காண்கின்றனர். நம்முடைய நேரத்தை மேம்பட்ட வகையில் நாம் எப்படி பயன்படுத்தலாம் என்பதைக் காண நம் அன்றாட வழக்கமுறையை நாம் கூர்ந்து ஆராய வேண்டியிருக்கலாம். அத்தியாவசியமில்லாத நடவடிக்கைகளுக்காக எவ்வளவு நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும் என்பதற்கு வரம்புகள் வைப்பதை ஞானம் அவசியப்படுத்துகிறது.
4 ஒரு சிறந்த வழக்கமுறையை உருவாக்குங்கள்: நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலைகள் என்னவாய் இருந்தாலும், ஆவிக்குரிய நாட்டங்களுக்காக நாம் ஒவ்வொருவரும் காலத்தை வாங்க முடியும். ஒவ்வொரு நாளும் காலையில் சற்று சீக்கிரம் எழுந்து வேலைகளை ஆரம்பிப்பது அதிகத்தைச் செய்ய உதவியிருப்பதாய் சிலர் கண்டிருக்கின்றனர். வேலைக்குப் பிரயாணம் செய்வதிலோ பிறருக்காகக் காத்திருப்பதிலோ அதிக நேரத்தை நாம் செலவிடுவதாய் இருந்தால், அதில் கொஞ்ச நேரத்தை, பைபிள் வாசிப்பதற்கு, கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்கு அல்லது ஆடியோ கேஸட்டுகளில் உள்ள சொஸைட்டியின் விஷயங்களைக் கேட்பதற்கு நாம் செலவிடலாம். சேர்ந்து படிப்பதற்காக ஓர் ஒழுங்கான, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பல குடும்பங்கள் மிகவும் பயனடைகின்றன. குடும்பப் படிப்புக்காகக் கூடி வருகையில், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நேரம் தவறாமல் இருந்தால், அது ஒவ்வொருவரின் நேரமும் வீணாகுவதைத் தவிர்க்கும்.
5 ஒவ்வொரு நாளின் முடிவிலும், ‘இனி வரும் காலம் குறுகினதாய்’ இருப்பதாக நாம் இன்னும் கூர்ந்து உணருபவர்களாக வேண்டும். (1 கொ. 7:29) மீந்திருக்கும் விலைமதிப்புள்ள நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் நம் வாழ்க்கை சார்ந்துள்ளது. ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் தரும் வகையில், வாய்ப்பான காலத்தை நாம் வாங்கினால் ஆசீர்வதிக்கப்படுவோம்!—மத். 6:33.