பள்ளியில் கிறிஸ்தவ நடத்தை
1 பள்ளியில் இன்னும் படித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ இளைஞராக நீங்கள் இருந்தால், உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கு பலமான விசுவாசம் அவசியம். உங்கள் விசுவாசத்தை சோதனைக்குட்படுத்தக்கூடிய கெட்ட சகவாசங்களையும் நிலைமைகளையும் நீங்கள் எதிர்ப்படுகிறீர்கள். “புறஜாதிகள் . . . உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் . . . தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” என்ற பேதுருவின் ஆலோசனையை நீங்கள் பொருத்துவது முக்கியம். (1 பே. 2:12) இந்தச் சவாலை எதிர்ப்படுவதற்கு உங்களுக்கு தைரியமும் உறுதியும் தேவை.
2 பள்ளிக்கு உள்ளேயோ வெளியிலோ திருமணத்திற்கு முன்னான பாலுறவு, ஆபாசமான வார்த்தைகள், புகையிலை போதைப்பொருட்களின் துர்ப்பிரயோகம் ஆகியவற்றின் களங்கப்படுத்தும் செல்வாக்குகளால் நீங்கள் பலமாகத் தாக்கப்படுகிறீர்கள். ஒவ்வொரு நாளும், உங்கள் நல்நடத்தையின் பதிவைக் கெடுப்பதற்கு அச்சுறுத்தக்கூடிய சோதனைகளை எதிர்ப்படுகிறீர்கள். வயதுவந்தோரைப் போல, அத்தகைய சோதனைகளைச் சகிக்கவேண்டுமென்றால், ‘விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடவேண்டும்.”—யூ. 3; ஏப்ரல் 1, 1992, காவற்கோபுரம், 20-3 பக்கங்களைப் பாருங்கள்.
3 பள்ளியில், நாட்டுப்பற்று விழாக்களும் உலகப்பிரகாரமான விடுமுறைகளும் இருக்கின்றன. உங்கள் பள்ளியில் என்னென்ன தேசிய விடுமுறைகளும் மத சம்பந்தப்பட்ட விடுமுறைகளும் கொண்டாடப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? சவாலுக்குள்ளாகும் நிலைமை எழும்பினதென்றால், “உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிரு”க்க முடியுமா?—1 பே. 3:16.
4 பள்ளி விளையாட்டு நடவடிக்கைகள் அல்லது சமூக கூட்டுறவுகளின் கவர்ச்சியினால் நீங்கள் சோதிக்கப்படலாம். மகிழவைப்பதாகத் தோன்றும் இந்த நடவடிக்கைகள் எவ்வாறு உங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கச் செய்யலாம் என்பதை அறிந்துகொள்ள நீங்கள் விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும். ‘உற்சாக பரிமாற்றத்தை’ அனுபவித்துக்களித்து தன்னுடைய விசுவாசத்தினால் உங்களைக் கட்டியெழுப்பக்கூடிய தோழர்களைத் தெரிந்தெடுப்பதற்கான தேவை இருக்கிறது.—ரோ. 1:12, NW.
5 யெகோவாவின் உதவியினால் உங்களால் சகித்திருக்க முடியும்: சாத்தான் உங்கள் விசுவாசத்தை தொடர்ந்து சோதிக்கிறான். நீங்கள் அனுபவிக்கவேண்டிய சோதனைகள் கடுமையானவையாக இருக்கலாம், அதன் பலன்களோ அவற்றையெல்லாம் பயனுள்ளதாக்குகின்றன. (1 பே. 1:6, 7) நீங்களாகவே வெற்றிகரமாக சகிக்க முடியாது, உதவிக்காக யெகோவாவை நோக்கியிருக்க வேண்டும். இயேசு தம் சீஷர்களைத் துரிதப்படுத்தினார்: “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.” (மத். 26:41) சிட்சையும் தன்னடக்கமும் மிக முக்கியமானவை.—1 கொ. 9:27.
6 உங்கள் நடக்கைக்காக நீங்கள் யெகோவாவுக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டுமென்று எப்போதுமே நினைவில் வையுங்கள். (பிர. 11:9.) நீங்கள் செய்யும் காரியங்களை மற்றவர்கள் காணமாட்டார்கள் என்றாலும், நீங்கள் செய்வதை யெகோவா அறிந்திருப்பதால், அவர் நியாயத்தீர்ப்பை அளிப்பார். (எபி. 4:13) அவரைப் பிரியப்படுத்தவேண்டுமென்ற உண்மை மனதுடன்கூடிய ஆசை ‘அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட’ உங்களைத் தூண்டும். (பிலி. 2:12) கடவுளுடைய வார்த்தையை அன்றாடம் படிப்பது பெரும் உதவியாயிருக்கிறது. பின்பற்றுவதற்கான அருமையான ஆலோசனைகளாலும் மிகச்சிறந்த முன்மாதிரிகளாலும் அது நிறைந்திருக்கிறது.—எபி. 12:1-3.
7 பெற்றோரே, நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளை மேற்பார்வையிட வேண்டும், அவர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளை அறிந்திருக்க வேண்டும், தேவைப்படும்போது உதவி அளிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளோடு நல்ல உறவை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? கடவுளுடைய சட்டங்களைப் பற்றியும் நியமங்களைப் பற்றியும் போற்றுதலுடன்கூடிய புரிந்துகொள்ளுதலை அவர்களுடைய மனதில் புகட்டியிருக்கிறீர்களா? அழுத்தங்களையோ சோதனைகளையோ எதிர்ப்படுகையில், உங்கள் பிள்ளைகள் உறுதியாக இருக்கிறார்களா, அல்லது எளிதில் விட்டுக்கொடுத்துவிடுகிறார்களா? தங்கள் சகாக்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக இருக்கவேண்டியுள்ளதே என அவர்கள் உற்சாகமிழந்துவிடுகிறார்களா? பெற்றோராக, அவர்களுக்கு உதவும் பொறுப்பு உங்களுக்கே இருக்கிறது. (உபா. 6:6, 7) உங்களுடைய வேலையை நீங்கள் நன்றாக செய்தால், விசுவாசத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெற அவர்களுக்கு உதவ முடியும்.—நீதி. 22:6.