மற்ற பிரசுரங்களோடு துண்டுப்பிரதிகளைச் சேர்த்தளியுங்கள்
1 இன்று பிரசுரிக்கப்படுகிற எல்லா பத்திரிகைகளிலும் காவற்கோபுரம், விழித்தெழு! மட்டுமே உண்மையான வாசகர்கள் நித்திய ஜீவ பாதையைக் கண்டடைய உதவிசெய்யும். ஏப்ரல் மே-யில் நீங்கள் மக்களோடு சம்பாஷிக்கும்போது, சிலர் ராஜ்ய செய்தியிடம் தெளிவான அக்கறையைக் காட்டுவார்கள், நீங்கள் அவர்களுடைய கவனத்தை நேரடியாக சமீபத்திய பத்திரிகைகளிடம் திருப்பி ஒரு சந்தாவை அளிக்கலாம். மற்றவர்கள் முதலில் அவ்வளவு அக்கறை காட்டமாட்டார்கள். அப்பேர்ப்பட்ட ஆட்களிடம் நீங்கள் முதலில் துண்டுப்பிரதியில் உள்ள ஓரிரண்டு குறிப்புகளைக் கலந்து பேசலாம்; பிறகு பத்திரிகையோடு துண்டுப்பிரதியைச் சேர்த்தளித்து ஒரு சந்தா அளிப்புக்கு வழிவகுக்கலாம்.
2 நீங்கள் சொல்லலாம்:
◼ “இன்றைய உலகில் தீர்வுகளைக் காட்டிலும் அதிகமான பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அநேகர் ஒத்துக்கொள்வர். நம்முடைய பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது என்று பைபிள் முன்சொல்லியிருப்பதைக்குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?” பின்னர் நீங்கள் சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியில் பக்கங்கள் 3-ஐயும் 4-ஐயும் திருப்பி பைபிளிலுள்ள சில வாக்குகளைக் கலந்து பேசலாம்.
3 நீங்கள் ஏப்ரல் 1 ஆங்கில காவற்கோபுரத்தை அளித்தால், “உலகத்தின் ஒளியைப் பின்பற்றுங்கள்” என்ற தலைப்பைக்கொண்ட கட்டுரையைக் காட்டி, கடைசியில் இயேசு கிறிஸ்து மனிதனுடைய எல்லா பிரச்னைகளையும் எவ்வாறு தீர்ப்பார் என்பதை விளக்கிக் காட்டுங்கள். “உலகத்திற்கு ஒரு மேசியா தேவையா?” என்ற கேள்வியின்பேரில் உள்ள இணையான தொடர் கட்டுரைகளை இந்திய மொழியில் வரும் ஏப்ரல் காவற்கோபுரம் பத்திரிகைகள் அளிக்கின்றன. அநேக மக்கள் ‘மேசியா’ என்ற வார்த்தைக்குப் பொருள் ‘இரட்சகர்’ என்று நினைக்கின்றனர். ‘மேசியா’ என்பது ‘அபிஷேகஞ்செய்யப்பட்டவர்’ என்ற பொருளைக் கொண்டிருந்தாலும் இயேசு கிறிஸ்து உண்மையிலேயே ஓர் இரட்சகராக இருக்கிறார், அவர் மனிதவர்க்கத்தின் ஒரே இரட்சகர் என்பதை அவர்களுக்குக் காட்டலாம். “மேசியா பூமியை ஆளும்போது” என்ற உபதலைப்பின்கீழ் பக்கம் 12-இல் உள்ள 14 முதல் 16 பத்திகளுக்குத் திருப்பி அவருடைய ஆளுகை கொண்டுவரக்கூடிய சில நன்மைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.
4 பிறகு பக்கம் 13-இல் “அவருடைய ஆட்சி உங்களை எவ்வாறு பாதிக்கிறது” என்ற அடுத்த உபதலைப்பை வீட்டுக்காரருக்குக் காட்டுங்கள். காவற்கோபுரம், பைபிளின் மகத்தான வாக்குகளை எப்போதும் எப்படிக் கலந்தாலோசிக்கிறது என்பதையும் அவற்றை நாம் எப்படி அடையலாம் என்பதையும் அது நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிடுங்கள். இதைத் தபால் மூலம் தன்னுடைய வீட்டுக்கு ஒழுங்காக வருவிக்கலாம் என்பதை விளக்கிக் காட்டுங்கள். முடிவில், அந்த நபர் சந்தாவையோ பத்திரிகைகளையோ எடுத்தாலுஞ்சரி எடுக்காவிட்டாலுஞ்சரி, அவர் அக்கறை காட்டுவாரேயானால் இந்த விஷயங்களைக்குறித்து மேலும் கலந்து பேச ஒரு செளகரியமான நேரத்தில் திரும்பவும் வந்து சந்திப்பதாகச் சொல்லுங்கள்.
5 ஏப்ரல் 8 ஆங்கில “விழித்தெழு!”வைச் சிறப்பித்துக் காட்டுவீர்களென்றால், இந்தக் கட்டுரையில் 2-ஆம் பத்தியிலுள்ள அறிமுகத்தைப் பயன்படுத்தி மேலும் சொல்லலாம்:
◼ “நம்முடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மதத்துக்கும் அரசியலுக்கும் உள்ள திறமையைக்குறித்து அநேகர் சந்தேகிக்கின்றனர், ஆனால் விஞ்ஞானம் அதற்குப் பதிலைக் கொண்டிருக்கிறதா என்று அவர்கள் யோசிக்கின்றனர்.” பின்னர் “விஞ்ஞானம் 21-ஆவது நூற்றாண்டின் சவால்களைப் பூர்த்திசெய்யக்கூடுமா?” என்ற கட்டுரையிலுள்ள பொருத்தமான குறிப்பை வாசித்துக் காட்டுங்கள். இந்தக் கட்டுரை அநேக இளைஞருடைய விசேஷமாக மாணாக்கர்களுடைய கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
6 ஏப்ரல் 8 இந்திய மொழியிலுள்ள விழித்தெழு! பத்திரிகைகள் அநேகர் கேட்கக்கூடிய இக்கேள்வியை அதன் மேலட்டையில் கொண்டிருக்கின்றன: “மாறிக்கொண்டேயிருக்கும் நம் உலகம்—நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்?” அந்த இதழின் 11-ஆம் பக்கத்தில், “மாறிக்கொண்டேயிருக்கும் நம் உலகம்—எதிர்காலம் உண்மையில் எதைக் கொண்டிருக்கிறது?” என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பதில்களிடம் வீட்டுக்காரருடைய கவனத்தை நீங்கள் திருப்பலாம். பக்கங்கள் 11 முதல் 13-இல் உள்ள உபதலைப்புகளைச் சுட்டிக்காண்பித்து, “கையாளுவதற்குக் கடினமான காலங்கள்”-இல் பைபிள் “நம்பத்தக்க தகவலின் ஓர் ஒப்பற்ற ஊற்றுமூலம்”-ஆக இருக்கிறது என்றும் அது “ஒரு மேம்பட்ட மாற்றீடு” அளித்து இப்படி “நல்லதே நடக்குமென்ற நம்பிக்கைக்கான காரணங்கள்”-ஐ கொடுக்கிறது என்றும் நீங்கள் காட்டலாம். இளைஞரிடம் “குடிப்பழக்கம் என்னை உண்மையிலேயே அதற்கு அடிமையாக்கிவிடுமா?” என்று பக்கம் 22-இல் உள்ள ‘இளைஞர் கேட்கின்றனர் . . . ’ கட்டுரையைக் காட்டலாம். பிறகு விழித்தெழு!-வுக்கோ விழித்தெழு!, காவற்கோபுரம் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கோ சந்தா அளியுங்கள்.
7 நீங்கள் ஒரு புதிய பிரஸ்தாபியாக இருந்தால், ஐயத்திற்கிடமில்லாமல் ஓர் எளிமையான அணுகுமுறையையே போற்றுவீர்கள். சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியையோ மற்ற துண்டுப்பிரதிகளில் ஒன்றையோ வேண்டிய அளவு பெற்று மேலே 2-ஆம் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நீங்கள் ஏன் பின்பற்றக்கூடாது?
8 மக்களின் வீடுகளுக்கு இரட்சிப்பின் செய்தியைக் கொண்டுச்செல்வதில் நாம் கனப்படுத்தப்படுகிறோம். ‘பாத்திரமுள்ளவர்களைத்’ தேடுகையில், நம்முடைய துண்டுப்பிரதிகளை நாம் நன்கு பயன்படுத்தி ஏப்ரலிலும் மே-யிலும் சந்தா அளிப்போடு சேர்த்து அவற்றை அளிப்போமாக.—மத். 10:13.