உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 6/1 பக். 3-4
  • முதியோரின் பரிதாப நிலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முதியோரின் பரிதாப நிலை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • இதே தகவல்
  • கிறிஸ்தவக் குடும்பம் வயதானவர்களுக்கு உதவுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • முதியோரின் அக்கறைகளில் கண்ணுங் கருத்துமாய் இருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • முதியோரை கவனித்தல்—கிறிஸ்தவ கடமை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • முதியோரிடம் கடவுள் அக்கறை காட்டுகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 6/1 பக். 3-4

முதியோரின் பரிதாப நிலை

அன்று இரவு ரோந்து வந்துகொண்டிருந்த வாட்ச்மேன் கண்ட காட்சி அவருடைய இரத்தத்தை உறைய வைத்தது. ஆடம்பரமான அடுக்குமாடிக் கட்டடத்திற்கு வெளியே அவர் கண்டது இரண்டு சடலங்கள், அதுவும் வயதான தம்பதியரின் சடலங்கள். எட்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்திருந்தார்கள். இது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், அதற்கான காரணம் நம் மனதை இன்னும் ரணமாக்குகிறது. அந்தக் கணவருடைய பாக்கெட்டில் இருந்த சிறிய சீட்டு காரணத்தை சுட்டிக்காட்டியது: “எங்கள் மகனும் மருமகளும் படுத்துகிற கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறோம்.”

இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் இன்று சர்வசாதாரணம். சொல்லப்போனால், வயதானவர்களைக் கொடுமைப்படுத்துவது என்ற பிரச்சினை, கிட்டத்தட்ட உலகெங்கும் புரையோடிக் கிடக்கிறது. பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்:

• கனடா நாட்டு முதியோரில் 4 சதவீதத்தினர் பொதுவாக குடும்பத்திலுள்ள ஒருவராலேயே கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது சுரண்டிப்பிழைக்கப்படுகிறார்கள் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்தது. ஆனால், தங்களுடைய கண்ணீர் கதையைப் பற்றி வாய்திறக்க பயப்படுகிறவர்களும் அப்படிச் சொல்வதை அவமானமாகக் கருதுகிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். எனவே, உண்மையான எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

• “நெருக்கமான குடும்ப பிணைப்புகளைக் கொண்ட நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. பிள்ளைகளால் ஒதுக்கப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால் அந்தப் பிணைப்பு அறுந்து வருகிறது” என அறிவிக்கிறது இந்தியா டுடே.

• துல்லியமான ஒரு கணக்கெடுப்பின்படி, “65 அல்லது அதற்கும் அதிகமான வயதுடைய 10 முதல் 20 லட்சம் அமெரிக்கர்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், சுரண்டிப்பிழைக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது ஏதாவதொரு விதத்தில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும், பாதுகாப்பிற்காக யாரை நம்பியிருந்தார்களோ அவர்களிடமிருந்தே இதையெல்லாம் அனுபவித்திருக்கிறார்கள்” என கொடுமைப்படுத்தப்படும் முதியோருக்கான தேசிய மையம் கூறுகிறது. “சட்டத்தை அமல்படுத்துவோர் இன்றைக்கு எதிர்ப்படும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று” முதியோர் கொடுமைப்படுத்தப்படுவதாகும் என கலிபோர்னியாவில் உள்ள சான் டியகோ மாவட்ட துணை வழக்கறிஞர் விவரிக்கிறார். அவர் மேலும் இவ்வாறு கூறுகிறார்: “அடுத்த சில ஆண்டுகளில், இந்தப் பிரச்சினை இன்னும் பூதாகரமாக வெடிக்குமென நினைக்கிறேன்.”

• நியூஜிலாந்திலுள்ள கான்டர்பரியில், குடும்பத்தாரின் தாக்குதலுக்கு முதியோர் இலக்காகிறார்கள். இது வளர்ந்துவரும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. முக்கியமாகப் போதைப்பொருளுக்கோ மதுபானத்திற்கோ சூதாட்டத்திற்கோ அடிமையான குடும்ப அங்கத்தினர்களால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். கான்டர்பரியில், முதியோர் தாக்கப்படுவதைப் பற்றிய வழக்குகளின் எண்ணிக்கை 2002-⁠ல் 65-ஆக இருந்தது. 2003-⁠லோ அது 107-⁠ஆக உயர்ந்துவிட்டது. ஆனால் இப்படித் தாக்குதலுக்கு உள்ளாகும் முதியோரின் எண்ணிக்கை இதையெல்லாம்விட பல மடங்கு அதிகம் என்று அத்தகைய கொடுமைகளைத் தடுக்கும் ஓர் ஏஜென்ஸியின் செயலாட்சித் தலைவர் கூறுகிறார்.

• “கொடுமைக்கு ஆளாகும் பிள்ளைகளுக்கோ மணத்துணைகளுக்கோ கொடுக்கப்படும் கவனிப்பைவிட, கொடுமைக்கு ஆளாகும் முதியோருக்கே அதிக கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்று ஜப்பான் வழக்கறிஞர் கழகங்களின் கூட்டரசு கூறியதாக த ஜப்பான் டைம்ஸ் அறிவிக்கிறது. ஏன்? ஒரு காரணம், “பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்படுவது, மணத்துணையால் துன்புறுத்தப்படுவது ஆகியவற்றைக் காட்டிலும் முதியோர் அனுபவிக்கிற கொடுமைகள்தான் வெளிச்சத்துக்கு வர அதிக காலம் எடுக்கிறது; தாங்கள் சரியாக நடந்துகொள்ளாததால்தான் பிள்ளைகள் தங்களை அடித்து உதைப்பதாக வயதானோர் நினைப்பதும் அரசாங்க மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இதுவரை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய தவறியிருப்பதும் இதற்கு ஓரளவு காரணமாகும்” என அந்த டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

உலகெங்கிலும் நடப்பதைப் படம்பிடித்துக் காட்டும் இந்தச் சில உதாரணங்கள் நம்மை பின்வருமாறு கேட்கத் தூண்டுகின்றன: வயதானவர்கள் அநேகர் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்? நிலைமை சீரடையும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா? முதியோருக்கு என்ன ஆறுதலான செய்தி இருக்கிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்