வாழ்க்கை சரிதை
யெகோவாவைத் தெரிந்துகொள்ள அவரே எனக்கு உதவினார்
ஃப்ளாரன்ஸ் கிளார்க் சொன்னபடி
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த என் கணவரின் கையைப் பிடித்துக்கொண்டேன். ஆங்கிலிக்கனாக இருந்த நான் என் கணவர் குணமாகும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். என் கணவர் உயிர் பிழைத்துவிட்டால் நான் கடவுளைத் தேடுவேன், அவரைக் கண்டுபிடிக்கும்வரை தேடுவேன் என்று நேர்ந்துகொண்டேன். அதன்பிறகு என்னையே அவருக்கு அர்ப்பணித்துவிடுவதாகவும் கூறினேன்.
நான் பிறந்தபோது எனக்கு ஃப்ளாரன்ஸ் சூலங் என்று பெயர் வைத்தார்கள். நான் செப்டம்பர் 18, 1937-ல் பிறந்தேன். மேற்கு ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான கிம்பர்லீ பீடபூமி பகுதியிலுள்ள ஊம்புல்கரி என்ற பழங்குடியினரின் சமுதாயத்தில் பிறந்தேன்.
நான் சிறுமியாக இருந்தபோது கவலையின் வாசமறியாமல் சந்தோஷத்தில் சிறகடித்தேன். அந்நாட்களின் இனிய நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன. சர்ச்சில் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களைக் கேட்டு கடவுளைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் சில அடிப்படை விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்; என்றாலும் என் அம்மாவிடமிருந்துதான் கிறிஸ்தவ நியமங்களைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் தவறாமல் என்னிடம் பைபிளை வாசித்துக் காட்டுவார்கள். அதனால் சிறு வயதிலிருந்தே ஆன்மீக காரியங்களில் ஆசையை வளர்த்துக்கொண்டேன். என் அம்மாவின் ஒரு சகோதரி அவருடைய சர்ச்சில் மிஷனரியாகச் சேவை செய்தார், அவரை நான் ரொம்பவே ரசித்தேன், பாராட்டினேன். நானும் அவரைப் போலவே சேவை செய்ய வேண்டும் என்று உள்ளூர விரும்பினேன்.
முன்பு ஃபாரஸ்ட் ரிவர் மிஷன் என்று அழைக்கப்பட்ட எங்கள் சமுதாயத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருந்தது. அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை இருந்தது. நான் தினமும் காலையில் இரண்டு மணிநேரம் மட்டுமே பள்ளிக்குச் சென்றேன். ஆகவே, என் படிப்பு மட்டமாக இருந்தது. அதனால் என் அப்பா ரொம்ப கவலைப்பட்டார். ஏனென்றால் தன் பிள்ளைகள் நன்கு படித்து முன்னேற வேண்டுமென்றே விரும்பினார். அதனால் முழு குடும்பத்தையும் ஊம்புல்கரி பகுதியைவிட்டு வின்தாம் என்ற நகரத்திற்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தார். அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது துக்கம் என் தொண்டையை அடைத்தது; ஆனாலும் அடுத்த நான்கு வருடங்களுக்கு, அதாவது 1949 முதல் 1952 வரை நான் பள்ளிக்கு முழுநாள் செல்ல முடிந்தது. அந்தக் கல்வியை பெற உதவி செய்ததற்காக என் அப்பாவிற்கு மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.
என் அம்மா, உள்ளூரில் ஒரு டாக்டரிடம் வேலை பார்த்தார்கள். நான் 15-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தபோது அந்த டாக்டர், வின்தாம் ஹாஸ்பிட்டலில் எனக்கு ஒரு நர்ஸ் வேலை கொடுத்தார். நான் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன்; ஏனென்றால் அந்த சமயத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.
சில வருடங்கள் கழிந்தபின் நான் அலெக் என்ற வெள்ளைக்காரரைச் சந்தித்தேன். அவர் கால்நடை பாதுகாவலராக பணியாற்றினார். நாங்கள் இருவரும் 1964-ல் டெர்பி என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டோம். அங்கு நான், ஆங்கிலிக்கன் சர்ச்சுக்கு தவறாமல் சென்றேன். ஒரு நாள் யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். எனக்கு அவர்கள் சொல்லும் விஷயத்தில் கொஞ்சம்கூட விருப்பமில்லை என்றும் மறுபடியும் என்னை வந்து சந்திக்க வேண்டாமென்றும் சொல்லி அனுப்பிவிட்டேன். ஆனாலும் கடவுளுடைய பெயர் யெகோவா என்று அவர்கள் சொன்ன விஷயம் என் ஆர்வத்தைக் கிளறியது.
“நீங்களே ஜெபம் செய்ய முடியாதா?”
1965-லிருந்து வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. என் கணவருக்கு மூன்று முறை பயங்கரமான விபத்துகள் ஏற்பட்டன. இரண்டு முறை குதிரையில் சென்றபோது ஏற்பட்டது, ஒரு முறை காரில் சென்றபோது ஏற்பட்டது. எப்படியோ , மூன்று முறையும் குணமாகி பழையபடி வேலைக்குச் சென்றார். ஆனால் கொஞ்ச காலத்திற்குள் மறுபடியுமாக குதிரையில் சென்றபோது அவருக்கு இன்னொரு விபத்து ஏற்பட்டது. இந்த முறை அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. நான் ஹாஸ்பிட்டலுக்கு விழுந்தடித்துக்கொண்டு போனபோது என் கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக டாக்டர் சொன்னார். அதைக் கேட்டு சுக்குநூறாகிவிட்டேன். ஒரு நர்ஸ், என்னை வந்து பார்க்கும்படி அந்த ஊரிலிருந்த ஒரு பாதிரியிடம் கேட்டுக்கொண்டாள். ஆனால் அவர், “இன்று முடியாது, நாளை பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டார்.
பாதிரி என்னோடுகூட இருந்து ஜெபம் செய்ய வேண்டுமென நான் விரும்பினேன்; அதை ஒரு கன்னிகாஸ்திரியிடம் சொன்னேன். அதற்கு அவள், “உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்களே ஜெபம் செய்ய முடியாதா?” என வெடுக்கென்று கேட்டுவிட்டார். அதனால் நானே சர்ச்சின் சிலைகளைப் பார்த்து உதவிக்காகக் கெஞ்சினேன். ஆனால் ஒரு பலனுமில்லை. என் கணவரோ கொஞ்சகொஞ்சமாகச் செத்துக்கொண்டிருந்ததாக தோன்றியது. ‘என் கணவர் இறந்துவிட்டால் என் நிலைமை என்னவாகும்? என் மூன்று பிள்ளைகள் கிறிஸ்டீன், நானெட், ஜெஃப்ரீ இவர்களின் கதி என்னவாகும்? அப்பா இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கும்?’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் சந்தோஷகரமாக மூன்று நாட்களுக்குப் பிறகு என் கணவர் நினைவிற்குத் திரும்பினார். டிசம்பர் 6, 1966-ல் ஹாஸ்பிட்டலிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
என் கணவர் ஓரளவு குணமாகியிருந்தாலும் மூளையில் அவருக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. அவர் நினைவிழப்பினால் கஷ்டப்பட்டார், அடிக்கடி முரட்டுத்தனமாக நடந்துகொண்டார், அவரது ‘மூட்’ திடீர் திடீரென மாறியது. அவரால் பிள்ளைகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வயதுவந்த பெரியவர்களைப் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். அப்படி நடந்துகொள்ளாதபோது அவர்கள்மீது சீறினார். அவரைப் பார்த்துக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு நான் எல்லாமே செய்ய வேண்டியிருந்தது, மீண்டும் எழுத படிக்கக்கூட சொல்லித்தர வேண்டியிருந்தது. வீட்டு வேலைகளுடன் சேர்த்து இவரையும் பார்த்துக்கொள்வது எனக்கு மிகவும் சிரமமாக ஆனது. அதனால் எனக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் இருவரும் கொஞ்சகாலத்திற்குப் பிரிந்து வாழ தீர்மானித்தோம், என் உடல்நலம் தேற வேண்டும் என்பதற்காகவே அப்படித் தீர்மானித்தோம்.
நான் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு தெற்கே பெர்த் என்ற நகரத்திற்குச் சென்றேன். அங்கு போவதற்கு முன்பே மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள கனனரா என்ற சிறிய நகரத்தில் இருந்த என் தங்கை யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க தொடங்கியிருந்தாள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்a என்ற புத்தகத்திலிருந்து ஒரு படத்தைக் காட்டி, பைபிள் வாக்களிக்கிற பரதீஸ் பூமி இதுதான் என்று எனக்கு சொன்னாள். கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது, அது யெகோவா என்பதையும் அவள் அதே புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டினாள். அது எனக்கு பிடித்திருந்தது. இதைப் பற்றி சர்ச்சில் கேள்விப்படாததால் நான் பெர்த்திற்கு குடிமாறிப்போன பிறகு உடனே யெகோவாவின் சாட்சிகளுக்கு ஃபோன் செய்ய தீர்மானித்தேன்.
ஆனால், அவர்களைத் தொடர்பு கொள்ள எனக்கு சங்கடமாக இருந்தது. ஒரு நாள் மாலை ‘காலிங் பெல்’ அடித்தது. யாரென்று என் மகன் பார்த்துவிட்டு, என்னிடம் ஓடிவந்து, “அம்மா நீங்க ஃபோன் செய்யணும்னு சொல்லீட்டிருந்தீங்களே, அவங்க வந்திருக்காங்க” என்று சொன்னான். எனக்கு ஒருபக்கம் ஆச்சரியமாக இருந்தபோதிலும், “நான் வீட்டில் இல்லை என்று அவர்களிடம் சொல்” என்றேன். அதற்கு அவன், “அம்மா, நான் பொய் சொல்லக்கூடாதுதானே” என்றான். அதைக் கேட்டு வெட்கமடைந்த நான் போய் கதவைப் திறந்தேன். நான் அவர்களை வரவேற்றபோது அவர்கள் முகம் குழம்பிப்போய் இருந்ததைக் கவனித்தேன். எங்களுக்கு முன் இந்த வீட்டில் இருந்த ஒருவரைப் பார்க்கவே அவர்கள் வந்திருந்தார்கள். நான் அவர்களை வீட்டிற்குள் அழைத்தேன். அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டேன். ஆனால் அவற்றிற்கு திருப்தியான பதில்களைப் பைபிளிலிருந்தே பெற்றுக்கொண்டேன்.
அதற்கு அடுத்த வாரத்திலிருந்து நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்திலிருந்து யெகோவாவின் சாட்சிகளுடன் தவறாமல் பைபிளைப் படிக்கத் தொடங்கினேன். ஆன்மீகக் காரியங்களிடம் எனக்கு ஒரு சமயம் இருந்த ஆர்வத்தை அந்த பைபிள் படிப்பு மறுபடியும் உயிர்ப்பித்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்குச் சென்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் கூட்டங்களுக்குச் சென்றேன். சீக்கிரத்திலேயே வார நாட்களின் கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன். படித்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லவும் தொடங்கினேன். பைபிள் சத்தியங்களைத் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு நான் உதவி செய்தபோது உணர்ச்சி ரீதியிலும் மன ரீதியிலும் புத்துணர்ச்சி பெற்றதை உணர்ந்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு பெர்த்தில் நடைபெற்ற ஒரு மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றேன்.
நான் ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைந்தபோது திருமணத்தை யெகோவா எவ்வளவு மதிப்புள்ளதாகக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அதோடு 1 கொரிந்தியர் 7:13 சொல்லப்பட்டுள்ள பைபிள் நியமத்தையும் புரிந்துகொள்ள தொடங்கினேன். அது இவ்வாறு சொல்கிறது: “ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.” அலெக்குடன் மறுபடியும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த வசனம் என்னைத் தூண்டியது.
டெர்பிக்குத் திரும்பினேன்
நான் என் கணவரிடமிருந்து பிரிந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஜூன் 21, 1979-ல் டெர்பிக்குத் திரும்பினேன். என் கணவர் என்ன சொல்லுவார் என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தேன். ஆனால் நான் அவரிடம் திரும்பி வந்துவிட்டதைக் குறித்து அவர் சந்தோஷப்பட்டார். என்றாலும் நான் யெகோவாவின் சாட்சியாக மாறியது அவருக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆகவே, அவர் போகிற சர்ச்சுக்கே என்னையும் போகும்படி சொன்னார். அதாவது நான் பெர்த்திற்குச் செல்வதற்கு முன்னால் எந்த சர்ச்சுக்கு போய்க்கொண்டிருந்தேனோ அங்கேயே போகும்படி சொன்னார். ஆனால் அதை நான் செய்ய முடியாது என்பதை அவரிடம் விளக்கி சொன்னேன். அவருடைய தலைமை ஸ்தானத்திற்கு மரியாதை கொடுக்கவும் கிறிஸ்தவ மனைவியாக சிறந்த விதத்தில் நடந்துகொள்ளவும் கடுமையாக முயற்சி செய்தேன். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் யெகோவாவைப் பற்றியும் அவருடைய எதிர்கால வாக்குறுதிகளைப் பற்றியும் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
காலப்போக்கில் அலெக், என் புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமா, மாவட்ட மாநாடுகளுக்கும் வட்டார மாநாடுகளுக்கும், ஏன், வாராந்தர கூட்டங்களுக்கும் நான் செல்வதற்குப் பணம் கொடுத்து உதவினார். ஊழியத்திற்குச் செல்வதற்காக ஒரு கார்கூட வாங்கிக்கொடுத்தார். அதற்கு நான் மிகவும் நன்றி தெரிவித்தேன். ஏனென்றால் ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புற பகுதியில் நாங்கள் இருந்ததால் அது ரொம்பவே உதவியாக இருந்தது. சகோதரர்களும் சகோதரிகளும் வட்டார கண்காணிகளும்கூட நிறைய சமயங்களில் எங்களுடன் பல நாட்கள் தங்கினார்கள். இதனால் அலெக் பல சாட்சிகளுடன் அறிமுகமாக முடிந்தது. அவர்களுடைய தோழமையும் அவருக்கு பிடித்திருந்தது.
எசேக்கியேலைப் போல உணர்ந்தேன்
சகோதர சகோதரிகள் எங்கள் வீட்டிற்கு வந்துபோனதில் நான் சந்தோஷமடைந்தேன். ஆனால் ஒரு சவாலையும் எதிர்ப்பட்டேன். டெர்பி நகரத்தில் நான் ஒருத்தி மட்டும்தான் யெகோவாவின் சாட்சியாக இருந்தேன். அருகிலுள்ள சபை ப்ரூம் நகரத்தில் 220 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது! அதனால் நற்செய்தியைப் பரப்புவதில் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய தீர்மானித்தேன். யெகோவாவின் உதவியுடன் என்னை நான் ஒழுங்கமைத்துக்கொண்டு வீட்டுக்குவீடு ஊழியம் செய்யத் தொடங்கினேன். இது எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நினைவுப்படுத்திக் கொண்டேன்: ‘என்னைப் பெலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.’—பிலிப்பியர் 4:13.
அந்த ஊரிலிருந்த சர்ச் குருக்களுக்கு என் நடவடிக்கைகள் சுத்தமாகப் பிடிக்கவில்லை. முக்கியமாக என் பழங்குடியைச் சேர்ந்த மக்களுக்கு நான் சாட்சிகொடுத்தது அவர்களுக்கு பிடிக்கவேயில்லை. என்னை பயமுறுத்தி என் ஊழியத்தை நிறுத்த முயற்சித்தார்கள். அவர்கள் அப்படி எதிர்த்ததால் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்ற என் தீர்மானம் உறுதியாகத்தான் ஆனது. நான் தொடர்ந்து யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபித்தேன். எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்ட உற்சாகத்தை நான் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வேன்: “இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன். உன் நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன், கன்மலையைப் பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு.”—எசேக்கியேல் 3:8, 9.
பல சந்தர்ப்பங்களில், ஒரு சர்ச் குரூப்பிலிருந்து இரண்டு ஆண்கள், நான் கடைக்கு சென்றபோது என் பின்னே வந்தார்கள். கடைக்கு வந்திருக்கிற எல்லாரும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் அவர்கள் கத்தி கூச்சலிட்டு என்னைக் கேலிசெய்தார்கள். அவர்களை நான் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு முறை, ஆர்வம் காட்டிய பெண்மணியிடம் மறுசந்திப்பு செய்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த ஊர் சர்ச்சிலிருந்து ஒரு மதகுரு வந்து நான் இயேசுவை நம்புவதில்லை என்று சொல்லி என்னைப் பழித்தார். என் கையிலிருந்த பைபிளை பறித்து என் முகத்தின் முன்னாக ஆட்டி, பிறகு என் கையில் அதைத் திணித்தார். அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, சாந்தமாக அதே சமயம் உறுதியாக, யோவான் 3:16-ஐ மேற்கோள் காட்டி நான் இயேசுவை நம்புவதாக ஆதாரமளித்தேன். நான் தெளிவாக அவருக்கு பதிலளித்ததைப் பார்த்து அவர் திகைத்துப்போனார். ஒரு வார்த்தைகூட பேசாமல் அங்கிருந்து போய்விட்டார்.
டெர்பி பகுதியிலிருந்த பழங்குடி மக்களுக்குச் சாட்சிகொடுப்பதில் சந்தோஷத்தைக் கண்டேன். அந்தப் பகுதியிலிருந்த பாதிரி, குறிப்பிட்ட ஒரு தொகுதியிடம் நான் பேச முடியாதபடி செய்ய முயற்சித்தார். ஆனால் அவர் அந்த இடத்திலிருந்து மாற்றப்பட்டார். அதனால் அந்தத் தொகுதி மக்களிடம் நான் பைபிளின் செய்தியைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. என் அம்மாவின் உடன் பிறந்த சகோதரியைப் போலவே நானும் ஒரு மிஷனரி ஆவதற்கு எப்போதுமே ஆசைப்பட்டேன். இப்போது நான் மிஷனரி போலவே ஊழியம் செய்கிறேன், அதாவது மற்றவர்கள் கடவுளுடைய வார்த்தையைத் தெரிந்துகொள்ள உதவுகிறேன். பழங்குடி மக்களில் அநேகர் நான் சொன்ன செய்திக்கு செவிகொடுத்தார்கள், நிறைய பேருடன் பைபிள் படிப்பையும் தொடங்கினேன்.
ஆன்மீக தேவையை உணர்ந்தேன்
ஐந்து வருடங்களுக்கு டெர்பியில் யெகோவாவின் சாட்சியாக நான் மட்டுமே இருந்தேன். சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து உற்சாகத்தைப் பெற்றுக்கொள்ள அங்கு ஒழுங்கான கூட்டங்கள் நடைபெறாத காரணத்தால் ஆன்மீக ரீதியில் உறுதியுடன் இருப்பது எனக்கு சவாலாக இருந்தது. ஒரு சமயம் நான் ரொம்பவே உற்சாகமிழந்தவளாக உணர்ந்து காரில் எங்காவது போய்விட்டு வரலாம் என்று கிளம்பினேன். அன்று மதியம் தாமதமாக வீடு திரும்பியபோது எனக்காக ஒரு சகோதரியும் அவருடைய ஏழு பிள்ளைகளும் காத்துக்கொண்டிருந்தார்கள். வெகு தொலைவில் இருந்த ப்ரூம் சபையிலிருந்து எனக்காக பிரசுரங்களைக் கொண்டுவந்திருந்தார்கள். அப்போது முதல் பெட்டீ பட்டர்ஃபீல்ட் என்ற அந்தச் சகோதரி, மாதத்திற்கு ஒரு முறையாவது டெர்பிக்கு வந்து என்னுடன் வார இறுதி நாட்களை கழிக்கத் திட்டமிட்டார். நாங்கள் இருவருமாக சேர்ந்து ஊழியம் செய்தோம், பிறகு என் வீட்டிலேயே காவற்கோபுரத்தையும் படித்தோம். நானும் மாதம் ஒரு முறை ப்ரூமிற்கு சென்று வந்தேன்.
ப்ரூம் சபையிலிருந்த சகோதரர்கள் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார்கள். அவ்வப்போது என்னுடன் ஊழியம் செய்வதற்காகவே நீண்டதூரம் பயணம் செய்து டெர்பிக்கு வந்தார்கள். மற்ற நகரங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஒருவேளை டெர்பி வழியாக பயணம் செய்தால் என்னை வந்து சந்திக்கும்படியும் என்னுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்படியும் ப்ரூம் சபையின் சகோதரர்கள் உற்சாகப்படுத்தினார்கள். இப்படி வந்தவர்கள் எனக்கு பொதுபேச்சுகள் ரெக்கார்டு செய்யப்பட்ட டேப்புகளைக் கொடுத்தார்கள். சிலர் என்னுடன் சேர்ந்து காவற்கோபுரத்தை படித்தார்கள். இவர்கள் கொஞ்ச நேரத்திற்கு என்னை வந்து சந்தித்தாலும் அவை என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தின.
அதிக உதவி கிடைத்தது
சில வருடங்களுக்கு நான் இன்னுமதிக உற்சாகத்தைப் பெற்றேன். வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஆர்த்தர் உவில்லிஸ், மேரி உவில்லிஸ் என்ற தம்பதியர் எனக்கு உதவி செய்வதற்காக மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியிலிருந்து வந்தார்கள். அவர்கள் குளிர் காலங்களில் மூன்று மாதமளவு என்னுடன் தங்கினார்கள். அப்போது பெரும்பாலான கூட்டங்களைச் சகோதரர் உவில்லிஸ்தான் நடத்துவார், அவரே வெளி ஊழியத்தையும் வழிநடத்துவார். நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கிம்பர்லீ பீடபூமியிலிருந்து மிகவும் ஒதுக்குப்புறத்திலிருந்த பகுதிகளுக்குச் செல்வோம். தொலைதூரத்தில் இருக்கிற கால்நடை பண்ணைகளைப் பார்க்கவே அங்கு செல்வோம். ஒவ்வொரு முறை உவில்லிஸ் சகோதரரும் சகோதரியும் ஊருக்குத் திரும்பும் சமயங்களில் என் வாழ்க்கையே இருண்டு காட்சியளிக்கும்.
இறுதியாக, 1983 கடைசியில் எனக்கு ஒரு சந்தோஷமான செய்தி கிடைத்தது. அதாவது டானி ஸ்டர்ஜன்னும் அவருடைய மனைவி டானீஸ் ஸ்டர்ஜன்னும் அவர்களுடைய நான்கு மகன்களும் டெர்பிக்கு குடிமாறி வருகிறார்கள் என்பதாகச் சொல்லப்பட்டது. அவர்கள் வந்தபிறகு ஒவ்வொரு வாரமும் தவறாமல் கூட்டங்கள் நடத்த முடிந்தது. அதேவிதமாக நாங்கள் எல்லாரும் சேர்ந்து வெளி ஊழியத்திலும் பங்குகொள்ள முடிந்தது. 2001-ம் ஆண்டில் ஒரு சபை உருவானது. இன்று டெர்பி சபை, 24 ராஜ்ய பிரஸ்தாபிகளை உடைய உறுதியான ஒரு சபையாக இருக்கிறது. அதில் இரண்டு மூப்பர்களும் ஒரு உதவி ஊழியரும் சபையின் ஆன்மீக தேவைகளை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். சில சமயங்களில் கூட்டத்திற்கு 30 பேர்கூட வருகிறார்கள்.
என் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கையில் யெகோவாவை சேவிக்க அவர் எனக்கு உதவியிருப்பதை எண்ணி மனம் குளிர்கிறேன். என் கணவர் இன்றும் என் நம்பிக்கைகளை ஏற்கவில்லையென்றாலும் மற்ற வழிகளில் தொடர்ந்து என்னை ஆதரித்துவருகிறார். என்னுடைய குடும்பத்தில் ஐந்து பேர் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள்—என்னுடைய இரண்டு மகள்கள், இரண்டு பேத்திகள், என் தங்கையின் மகள். அதுமட்டுமல்ல என்னுடைய சொந்தக்காரர்களில் நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளை படித்து வருகிறார்கள்.
நான் யெகோவாவைத் தெரிந்துகொள்ள அவரே எனக்கு உதவி செய்ததற்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் என்றைக்கும் அவருக்கே உரியவளாக இருக்கத் தீர்மானித்திருக்கிறேன்.—சங்கீதம் 65:2.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, ஆனால் இப்போது அச்சடிக்கப்படுவதில்லை.
[பக்கம் 15-ன் தேசப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆஸ்திரேலியா
வின்தாம்
கிம்பர்லீ பீடபூமி
டெர்பி
ப்ரூம்
பெர்த்
[படங்களுக்கான நன்றி]
கங்காருவும் லையர் பறவையும்: Lydekker; கோலா: Meyers
[பக்கம் 14-ன் படம்]
1953-ல் வின்தாம் ஹாஸ்பிட்டலில் ஒரு நர்ஸாக வேலை செய்தபோது
[பக்கம் 15-ன் படம்]
2005-ல் டெர்பி சபை