‘பலவித பாஷைக்காரர்’ நற்செய்தியைக் கேட்கிறார்கள்
‘பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் [அதாவது, புறதேசத்தாரில்] பத்து மனுஷர்: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம், ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்வார்கள்.’—சகரியா 8:23.
1. பன்மொழியில் சர்வதேச கல்வித் திட்டம் ஆரம்பமாவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் யெகோவா எப்படிக் கைகூடி வரச் செய்தார்?
பொது சகாப்தம் 33-ம் ஆண்டு, பெந்தெகொஸ்தே நாள்—சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகூடி வந்த நாள். யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் பஸ்கா பண்டிகை கொண்டாடுவதற்காகச் சில வாரங்களுக்கு முன்பே எருசலேமில் திரளாகக் கூடியிருந்தார்கள். பரந்துவிரிந்த ரோம சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பல்வேறு இடங்களிலிருந்து, குறைந்தபட்சம் 15 இடங்களிலிருந்து, அவர்கள் வந்திருந்தார்கள். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சாதாரண ஜனங்கள், அந்த சாம்ராஜ்யத்தில் பேசப்பட்ட எண்ணற்ற மொழிகளில் நற்செய்தியை அறிவித்ததை அன்றைய தினம் அங்கு கூடிவந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கேட்டார்கள். ஆனால் பூர்வ பாபேலில் மக்கள் குழம்பிப்போனதைப் போல் அவர்கள் குழம்பிப் போகவில்லை, மாறாக, அதைப் புரிந்துகொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12) அந்தச் சந்தர்ப்பத்தில்தான் கிறிஸ்தவ சபை உருவானது. அன்று ஆரம்பமான அந்தப் பன்மொழி சர்வதேச கல்வித் திட்டம் இன்றுவரை தொடர்கிறது.
2. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று கூடிவந்திருந்த பல்வேறு ஆட்களை இயேசுவின் சீஷர்கள் எப்படி ‘பிரமிப்பில்’ ஆழ்த்தினார்கள்?
2 அன்று புழக்கத்திலிருந்த பொதுவான கிரேக்கு மொழியில் இயேசுவின் சீஷர்கள் பேசினார்கள். ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழியிலும் அவர்கள் பேசினார்கள். ஆனால், பெந்தெகொஸ்தே நாளில் அந்தச் சீஷர்கள், அங்கு கூடிவந்திருந்த பல்வேறு ஆட்களின் தாய்மொழிகளில் பேசி அவர்களை ‘பிரமிப்பில்’ ஆழ்த்தினார்கள். விளைவு? கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய தாய்மொழியில் சொல்லப்பட்ட அந்த முக்கிய சத்தியங்கள் அவர்களுடைய இதயத்தைத் தொட்டன. அன்றைய தினத்தில், சீஷர்களின் அந்தச் சிறிய தொகுதி, 3,000-க்கும் மேற்பட்ட ஒரு பெருங்கூட்டமாக ஆனது.—அப்போஸ்தலர் 2:37-42.
3, 4. எருசலேம், யூதேயா, கலிலேயா ஆகிய பிராந்தியங்களிலிருந்து சீஷர்கள் வெளியேறிய பின் பிரசங்க வேலை எப்படி விரிவடைந்தது?
3 அந்த முக்கியச் சம்பவத்திற்குப் பின் சீக்கிரத்திலேயே எருசலேமில் துன்புறுத்தல் ஆரம்பமானது; “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 8:1-4) உதாரணமாக, அப்போஸ்தலர் 8-ம் அதிகாரத்தில் பிலிப்புவைப் பற்றி வாசிக்கிறோம்; அவர் கிரேக்கு மொழி பேசிய சுவிசேஷகராய் இருந்தார். அவர் சமாரியர்களிடம் பிரசங்கித்தார். எத்தியோப்பிய அதிகாரி ஒருவரிடமும் பிரசங்கித்தார்; இயேசுவைப் பற்றிய செய்தியை இந்த அதிகாரி ஏற்றுக்கொண்டார்.—அப்போஸ்தலர் 6:1-5; 8:5-13, 26-40; 21:8, 9.
4 எருசலேம், யூதேயா, கலிலேயா ஆகிய பிராந்தியங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறிய பின் வெவ்வேறு இடங்களில் குடியேறினார்கள். இனத்திலும் மொழியிலும் வேறுபட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்ததால், இப்பொழுது புதிய தடைகளை அவர்கள் எதிர்ப்பட்டார்கள். அவர்களில் சிலர் யூதர்களிடம் மட்டுமே பிரசங்கித்திருக்கலாம். ஆனால், சீஷனான லூக்கா இவ்வாறு எழுதுகிறார்: “அவர்களில் சீப்புரு தீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்தார்கள்.”—அப்போஸ்தலர் 11:19-21.
பாரபட்சமற்ற கடவுள்—செய்தி எல்லாருக்கும்
5. நற்செய்தியைப் பற்றிய விஷயத்தில் யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்திற்கு என்ன அத்தாட்சி உள்ளது?
5 இந்த முன்னேற்றங்கள் கடவுளுடைய வழிகளுக்கு இசைவாகவே இருக்கின்றன; ஏனெனில் கடவுள் பாரபட்சமற்றவர். புறதேசத்தாரைப் பற்றி அப்போஸ்தலன் பேதுருவுக்கு இருந்த கண்ணோட்டத்தை யெகோவா மாற்றிய பின், அவர் நன்றியோடு இவ்வாறு குறிப்பிட்டார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் [அதாவது, தேசத்தாரிலும்] அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35; சங்கீதம் 145:9) முன்பு கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தம். இவ்வாறு சொல்வதன் மூலம், கடவுளிடம் துளிகூட பாரபட்சம் இல்லை என்பதை பவுல் உறுதிப்படுத்தினார். (1 தீமோத்தேயு 2:4) ஆண் பெண், இனம், தேசம், மொழி என எந்த வித்தியாசமுமின்றி எல்லாருக்கும் ராஜ்ய நம்பிக்கை அளித்திருப்பதுதானே படைப்பாளரின் பாரபட்சமற்ற குணத்திற்குக் கண்கண்ட அத்தாட்சியாகும்.
6, 7. சர்வதேச அளவிலும் பன்மொழியிலும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதைப் பற்றி முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் யாவை?
6 இந்தச் சர்வதேச வளர்ச்சியைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டது. தானியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறபடி, “சகல ஜனங்களும் ஜாதியாரும் [தேசத்தாரும்], பாஷைக்காரரும் அவரையே [இயேசுவையே] சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது.” (தானியேல் 7:14) இந்தப் பத்திரிகை 151 பாஷைகளில் பிரசுரிக்கப்பட்டு உலகெங்கும் விநியோகிக்கப்படுவதுதானே இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் காட்டுகிறது; இந்தப் பத்திரிகை மூலமாகவே யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றி உங்களால் வாசித்து அறிந்துகொள்ள முடிகிறது.
7 பைபிள், அதன் உயிரளிக்கும் செய்திக்குப் பல்வேறு மொழியினர் செவிசாய்க்கும் காலத்தைப் பற்றி முன்னறிவித்தது. மெய் வணக்கம் அநேகரைக் கவர்ந்திழுக்கும் விதத்தை சகரியா தீர்க்கதரிசி முன்னுரைத்தார்: ‘அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் [புறதேசத்தாரில்] பத்து மனுஷர் ஒரு யூதனுடைய [‘தேவனுடைய இஸ்ரவேலின்’ பாகமான ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஒரு கிறிஸ்தவருடைய] வஸ்திரத் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.’ (சகரியா 8:23; கலாத்தியர் 6:16) தரிசனத்தில் தான் கண்டதை அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னார்: ‘இதோ, சகல ஜாதிகளிலும் [தேசங்களிலும்] கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் . . . சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன்.’ (வெளிப்படுத்துதல் 7:9) இந்த எல்லாத் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோமே!
எல்லா மக்களுக்கும் பிரசங்கித்தல்
8. இன்று பிரசங்க வேலையில் ஏன் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது?
8 இன்று ஆட்கள் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்வது அதிகமாகி வருகிறது. உலகமயமாக்கல் காரணமாக அயல்நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லும் புதிய ஒரு சகாப்தம் ஆரம்பமாயிருக்கிறது. போர் நடக்கும் இடங்களிலிருந்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வெளியேறி பாதுகாப்பான இடங்களில் குடியேறுகிறார்கள்; அங்கே பணப் பிரச்சினையின்றி சுகமாய் வாழ வழிதேடுகிறார்கள். அநேக நாடுகளில், அயல்நாட்டவரும் அகதிகளும் வந்து குவிவதால் பன்மொழி சமுதாயங்கள் உருவாகி உள்ளன. உதாரணமாக, பின்லாந்தில் 120-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன; ஆஸ்திரேலியாவில் 200-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. ஐக்கிய மாகாணங்களில் உள்ள சான் டியகோ என்ற நகரில் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன!
9. நம் பிராந்தியத்தில் வெவ்வேறு மொழிகளைப் பேசுவோரை நாம் எப்படிக் கருத வேண்டும்?
9 கிறிஸ்தவ ஊழியர்களாகிய நாம், வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தகைய ஆட்களை நம் ஊழியத்திற்கு ஒரு தடையாகக் கருதுகிறோமா? இல்லவே இல்லை! மாறாக, நம்முடைய ஊழியப் பிராந்தியத்தை, அதாவது ‘அறுப்புக்குத் தயாராயிருக்கிற வயல்களை,’ விஸ்தரிப்பதற்கான வாய்ப்புகளாகக் கருதுகிறோம். (யோவான் 4:35) தேசம், மொழி எதுவாக இருந்தாலும், ஆன்மீகப் பசியுள்ளவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள நாம் பிரயாசப்படுகிறோம். (மத்தேயு 5:3, NW) அதன் விளைவாக, ஒவ்வொரு வருடமும், ‘சகல பாஷைக்காரரிலுமிருந்தும்’ அதிகமதிகமானோர் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:6) உதாரணமாக, ஆகஸ்ட் 2004-ன்போது ஜெர்மனியில் 40 மொழிகளில் பிரசங்க வேலை நடைபெற்றது. அதே சமயத்தில், ஆஸ்திரேலியாவில் வெறும் 10 வருடங்களுக்கு முன்பு 18 மொழிகளில் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி கிட்டத்தட்ட 30 மொழிகளில் பிரசங்கிக்கப்பட்டது. கிரீஸில் யெகோவாவின் சாட்சிகள் ஏறத்தாழ 20 மொழிகளில் பிரசங்கித்து வருகிறார்கள். உலகெங்குமுள்ள சுமார் 80 சதவீத யெகோவாவின் சாட்சிகள், ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழியைப் பேசுகிறார்கள்.
10. ‘சகல தேசத்தாரிலும்’ உள்ள ஆட்களைச் சீஷர்களாக்குவதில் ஒவ்வொரு பிரஸ்தாபியின் பங்கு என்ன?
10 உண்மையிலேயே, ‘சகல தேசத்தாரையும் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளை நிறைவேற்றப்பட்டு வருகிறது! (மத்தேயு 28:19, NW) அந்தக் கட்டளையை யெகோவாவின் சாட்சிகள் ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, 235 நாடுகளில் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்து வருகிறார்கள், அதோடு, 400-க்கும் மேலான மொழிகளில் பிரசுரங்களை அளித்து வருகிறார்கள். ஜனங்களிடம் பிரசங்கிப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவாவின் அமைப்பு அளிக்கிறபோதிலும், ‘எல்லாருக்கும்’ நன்கு புரிகிற மொழிகளில் பைபிள் செய்தியை அறிவிக்க ஒவ்வொரு பிரஸ்தாபியுமே கட்டாயம் முயற்சியெடுக்க வேண்டும். (யோவான் 1:7) இந்தக் கூட்டு முயற்சி, வித்தியாசப்பட்ட மொழி பேசும் லட்சக்கணக்கானோர் நற்செய்தியைக் கேட்டு பயனடைய உதவுகிறது. (ரோமர் 10:14, 15) ஆம், நாம் ஒவ்வொருவரும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறோம்!
சவால்களைச் சமாளித்தல்
11, 12. (அ) சமாளிக்க வேண்டிய சவால்கள் யாவை, பரிசுத்த ஆவி எவ்வாறு துணைபுரிகிறது? (ஆ) மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் பிரசங்கிப்பது ஏன் பயனுள்ளது?
11 இன்று, ராஜ்ய பிரஸ்தாபிகள் அநேகர் மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்; ஆனால், அதற்காக கடவுளுடைய ஆவியின் அற்புத வரங்களை அவர்கள் எதிர்பார்க்கவோ அவற்றைச் சார்ந்திருக்கவோ முடியாது. (1 கொரிந்தியர் 13:8) ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது மாபெரும் வேலையாகும். மற்றொரு மொழியை ஏற்கெனவே அறிந்தவர்கள்கூட, வித்தியாசப்பட்ட பின்னணியையும் கலாச்சாரத்தையும் சேர்ந்த அந்த மொழியினரைக் கவரும் விதத்தில் பைபிள் செய்தியை அறிவிப்பதற்குத் தங்களுடைய சிந்தனையையும் அணுகுமுறையையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். அதுமட்டுமல்ல, புதிதாகக் குடியேறுபவர்கள் பெரும்பாலும் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருப்பார்கள்; அவர்கள் சிந்திக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள பெரும் முயற்சி தேவைப்படுகிறது.
12 இருந்தாலும், வேற்று மொழியினருக்கு உதவ பரிசுத்த ஆவி இன்றும்கூட யெகோவாவின் ஊழியர்களுக்குத் துணைபுரிகிறது. (லூக்கா 11:13) பரிசுத்த ஆவியானது, பல பாஷைகளைப் பேசும் அற்புத திறமைகளை நமக்கு அளிப்பதற்குப் பதிலாக, வேற்று மொழியினரிடம் பேசுவதற்கான ஆசையை நம்மில் அதிகரிக்கச் செய்கிறது. (சங்கீதம் 143:10) மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாத மொழியில் பைபிள் செய்தியை நாம் பிரசங்கித்தால் அல்லது கற்றுக்கொடுத்தால் ஒருவேளை அது அவர்கள் மனதை எட்டுமே தவிர இருதயத்தைத் எட்டாது. எனவே, அவர்களது தாய்மொழியில் பேசுவதே சிறந்தது. அவர்களுடைய மனதின் ஆசைகளோடும், உள்ளெண்ணங்களோடும், நம்பிக்கைகளோடும் நன்றாக “பேசும் மொழி” அவர்களது தாய்மொழியே.—லூக்கா 24:32.
13, 14. (அ) வேற்று மொழி பிராந்தியத்தில் ஊழியத்தை ஆரம்பிப்பதற்குச் சிலரை எது தூண்டியிருக்கிறது? (ஆ) சுயதியாக மனப்பான்மை எப்படிக் காட்டப்படுகிறது?
13 வேற்று மொழி பிராந்தியத்தில் உள்ள ஜனங்கள் பைபிள் சத்தியத்தைக் கேட்க அதிக விருப்பம் காட்டுவதால், அநேக ராஜ்ய பிரஸ்தாபிகள் அங்கு ஊழியம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுடைய சேவை சவால்மிக்கதாக, சுவாரஸ்யமானதாக இருப்பதைக் காணும் மற்றவர்கள் ஊக்கம் பெறுகிறார்கள். “கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் அநேகர் சத்தியத்திற்காக ஏங்கித் தவிக்கிறார்கள்” என தென் ஐரோப்பாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிளை அலுவலகம் குறிப்பிடுகிறது. சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனமுடைய இத்தகையோருக்கு உதவுவது எவ்வளவாய் திருப்தி அளிக்கிறது!—ஏசாயா 55:1, 2.
14 ஆனால், இந்த வேலையில் பயனுள்ள விதத்தில் ஈடுபடுவதற்கு மன உறுதியும் சுயதியாகமும் அவசியம். (சங்கீதம் 110:3) உதாரணமாக, ஜப்பானிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பங்கள் மாநகரங்களில் உள்ள தங்கள் வசதியான வீடுகளை விட்டுவிட்டு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்குக் குடிபெயர்ந்திருக்கின்றன. எதற்காக? அங்குள்ள சீன குடியேறிகளுக்கு பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக. ஐக்கிய மாகாணங்களின் மேற்கு கடலோரப் பகுதிகளில் வாழ்கிற பிலிப்பைன்ஸ் மக்களுக்கு பைபிள் படிப்புகள் நடத்துவதற்காக ஒவ்வொரு முறையும் பிரஸ்தாபிகள் ஒரு மணிநேரமோ இரண்டு மணிநேரமோ காரில் பயணிக்கிறார்கள். நார்வேயில், ஒரு தம்பதியர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பத்தாருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். இந்தத் தம்பதியர், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?a என்ற சிற்றேட்டின் ஆங்கிலப் பிரதியையும் நார்வே மொழி பிரதியையும் பயன்படுத்துகிறார்கள். அந்தக் குடும்பத்தார் பெர்சிய மொழியில் பாராக்களை வாசிக்கிறார்கள்; இது அவர்களுடைய டாரி என்ற தாய்மொழியோடு நெருங்கிய தொடர்புடைய மொழி. பேசும்போது ஆங்கிலத்தையும் நார்வே மொழியையும் பயன்படுத்துகிறார்கள். அயல்நாட்டவர்கள் நற்செய்திக்குச் செவிசாய்க்கும்போது, பிரஸ்தாபிகளின் அத்தகைய சுயதியாக மனப்பான்மைக்கும் வளைந்துகொடுக்கும் மனப்பான்மைக்கும் மிகுந்த பலன் கிடைக்கிறது.b
15. பன்மொழி பிரசங்க வேலையில் நம் எல்லாராலுமே எப்படிப் பங்குகொள்ள முடியும்?
15 இந்தப் பன்மொழி வேலையில் நீங்களும் பங்குகொள்ள முடியுமா? உங்களுடைய பிராந்தியத்தில் பொதுவாக என்னென்ன மொழிகள் பேசப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப ஊழியம் செய்ய ஆரம்பிக்கலாம், அல்லவா? அப்படியானால், அந்த மொழிகளில் சில துண்டுப்பிரதிகளை அல்லது சிற்றேடுகளை நீங்கள் எடுத்துச் செல்லலாம். 2004-ல் வெளியிடப்பட்ட சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகம், ராஜ்ய செய்தியைப் பரப்புவதற்கு ஏற்கெனவே உதவி வருகிறது; அதில் பைபிளின் செய்தி பல மொழிகளில் எளிய நடையிலும் பயனுள்ள விதத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.—பக்கம் 32-ல் உள்ள “சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி” என்ற கட்டுரையைக் காண்க.
‘அந்நியரைச் சிநேகித்தல்’
16. பொறுப்பிலுள்ள சகோதரர்கள் அயல்மொழி பேசுவோரிடம் தன்னலமற்ற விதத்தில் எப்படி அக்கறை காட்டலாம்?
16 மற்றொரு மொழியை நாம் கற்றுக்கொண்டாலும் சரி, கற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, நம் எல்லாராலும் பிராந்தியத்திலுள்ள அயல்நாட்டவர்களுக்கு ஆன்மீகக் கல்வியைப் புகட்ட முடியும். ‘அந்நியரைச் சிநேகிக்கும்படி’ யெகோவா தம் மக்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். (உபாகமம் 10:18, 19) உதாரணமாக, வட அமெரிக்காவில் உள்ள ஒரு மாநகரத்தில் ஐந்து சபைகள் ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துகின்றன. மற்ற அநேக ராஜ்ய மன்றங்களில் வருடத்திற்கு ஒருமுறை கூட்டத்தின் நேரங்கள் மாற்றப்படுவது போலவே இந்த மன்றத்திலும் சீன மொழிக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்திற்கு மாற்றப்பட வேண்டியிருந்தது. அப்படி மாற்றினால், ரெஸ்டாரன்ட் சம்பந்தப்பட்ட வேலைகளைப் பார்க்கிற அநேக அயல்நாட்டவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடும். ஆகவே, ஞாயிற்றுக்கிழமைகளில் சீன மொழிக் கூட்டங்கள் சற்று முன்னதாகவே நடப்பதற்கு மற்ற சபை மூப்பர்கள் அன்புடன் ஒத்துக்கொண்டார்கள்.
17. வேற்று மொழித் தொகுதியினருக்கு உதவுவதற்காக சிலர் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல விரும்பினால், நாம் எப்படி உணர வேண்டும்?
17 வேற்று மொழித் தொகுதியினருக்கு உதவுவதற்காக வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல விரும்புகிற, தகுதியும் திறமையும் வாய்ந்த சகோதர சகோதரிகளை அன்புள்ள கண்காணிகள் மனமாரப் பாராட்டுகிறார்கள். அனுபவமிக்க இவர்கள் வேறு இடங்களுக்குச் செல்வது அந்தச் சபைக்கு ஓர் இழப்பாக இருக்கலாம்; ஆனால் அந்தச் சபை கண்காணிகளோ, லீத்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த மூப்பர்களைப் போலவே உணருகிறார்கள். ஆம், தீமோத்தேயு தங்களுடைய சபைக்கு ஒரு சொத்துபோல் இருந்தபோதிலும், அவர் பவுலுடன் செல்வதை அங்கிருந்த மூப்பர்கள் தடுக்கவில்லை. (அப்போஸ்தலர் 16:1-4) மற்றொரு விஷயம், பிரசங்க வேலையை முன்னின்று வழிநடத்துகிறவர்கள், அயல்நாட்டவர்களின் வித்தியாசப்பட்ட மனப்பாங்குகள், பழக்கவழக்கங்கள், நடத்தைகள் ஆகியவற்றைப் பார்த்து தயங்குவதில்லை. மாறாக, இப்படிப்பட்ட வேற்றுமைகளை ஏற்றுக்கொள்கிறார்கள், நற்செய்தியின் நிமித்தம் அவர்களோடு நட்புறவை வளர்த்துக்கொள்ளவும் வழிதேடுகிறார்கள்.—1 கொரிந்தியர் 9:22, 23.
18. ஊழிய வேலைக்கான பெரிதும் அநுகூலமான என்ன வாசல் அனைவருக்கும் திறக்கப்பட்டிருக்கிறது?
18 தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே இன்று, ‘பலவித பாஷைக்காரராகிய புறதேசத்தாருக்கு’ நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. வேற்று மொழி பிராந்தியங்களில் இன்னும் நல்ல அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. திறமையுள்ள ஆயிரக்கணக்கான பிரஸ்தாபிகள், ‘பெரிதும் அநுகூலமான வாசலுக்குள்’ பிரவேசித்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 16:9) இருந்தாலும், அத்தகைய பிராந்தியங்களில் ஊழியம் செய்ய இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. அடுத்தக் கட்டுரை அதைப் பற்றி கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b மேலுமான உதாரணங்களுக்கு காவற்கோபுரம், ஏப்ரல் 1, 2004, பக்கங்கள் 24-8-ல் உள்ள “சிறிய தியாகங்கள்—பெரிய ஆசீர்வாதங்கள்” என்ற கட்டுரையைக் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• எல்லாரிடமும் பாரபட்சமின்றி நடந்துகொள்வதில் யெகோவாவை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
• நம் பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மொழிகளைப் பேசும் ஆட்களை நாம் எப்படிக் கருத வேண்டும்?
• மக்களிடம் அவர்களுடைய தாய்மொழியில் பிரசங்கிப்பது ஏன் பயனுள்ளது?
• நம் மத்தியில் வசிக்கும் அயல்நாட்டவர்களுக்கு எப்படிக் கரிசனை காட்டலாம்?
[பக்கம் 23-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ரோமாபுரி
கிரேத்தா
ஆசியா
பிரிகியா
பம்பிலியா
பொந்து
கப்பத்தோக்கியா
மெசொப்பொத்தாமியா
மேதியா
பார்த்தியா
ஏலாம்
அரபி தேசம்
லீபியா
எகிப்து
யூதேயா
எருசலேம்
[நீர்நிலைகள்]
மத்தியதரைக் கடல்
கருங்கடல்
செங்கடல்
பெர்சிய வளைகுடா
[படம்]
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு ரோம சாம்ராஜ்யத்தின் 15 இடங்களிலிருந்து வந்திருந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் நற்செய்தியைக் கேட்டனர்
[பக்கம் 24-ன் படங்கள்]
அயல்நாட்டவர் அநேகர் பைபிள் சத்தியத்தை விருப்பத்துடன் கேட்கின்றனர்
[பக்கம் 25-ன் படம்]
ஐந்து மொழிகளில் ராஜ்ய மன்ற பெயர் பலகை