சந்தேகங்கள் உங்கள் விசுவாசத்தை அழிக்க அனுமதிக்காதீர்கள்
ஒருநாள் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாக நினைக்கிறீர்கள். அடுத்த நாளோ சுகவீனமாக உணருகிறீர்கள். திடீரென்று உங்களுக்கு பலமோ சக்தியோ இல்லாமல் போய்விடுகிறது. உங்களுக்கு தலை வலிக்கிறது, உடம்பு வலியால் துடிக்கிறீர்கள். என்ன நடந்துவிட்டது? உங்களுடைய உடலின் பாதுகாப்பு கோட்டையை மீறி நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் வடிவில் கயவர்கள் உள்ளே நுழைந்து முக்கிய உறுப்புகளை தாக்கிவிட்டார்கள். இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், படையெடுத்துவரும் இந்த உயிரிகள் உங்களுடைய ஆரோக்கியத்தையே நிரந்தரமாக கெடுத்துவிடலாம்—ஏன், உங்களுக்கு சமாதியே கட்டிவிடலாம்.
கிருமி தாக்கும்போது நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இல்லையென்றால், இன்னும் அதிக பாதிப்புக்குள்ளாவீர்கள். உதாரணமாக, ஊட்டச்சத்து இல்லாமல் உங்களுடைய உடல் பலவீனமடைகிறது, உங்களுடைய எதிர்ப்பு சக்தி “மிகவும் பலவீனமடைந்து விடுவதால், மிகச் சிறிய தொற்றும் உயிருக்கு உலை வைத்துவிடலாம்” என சொல்கிறார் பீட்டர் வின்கேட் என்ற மருத்துவ ஆசிரியர்.
ஆகவே, யார்தான் பஞ்சத்தில் வாழ விரும்புவார்? நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்வீர்கள். வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றி விடாமல் பார்த்துக்கொள்வதற்கும் இயன்ற அனைத்தையும் செய்வீர்கள். ஆனால் ‘விசுவாசத்தில் ஆரோக்கியமாய்’ நிலைத்திருப்பதற்கு இதே போல் கவனம் செலுத்துகிறீர்களா? (தீத்து 2:2) உதாரணமாக, தந்திரமான சந்தேகங்களுக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்கிறீர்களா? இவை மிக எளிதாக உங்களுடைய மனதிற்குள்ளும் இதயத்திற்குள்ளும் படையெடுத்து, உங்களுடைய விசுவாசத்தையும் யெகோவாவுடன் நீங்கள் கொண்டுள்ள உறவையும் கெடுத்துவிடலாம். சிலர் இந்த ஆபத்தைக் குறித்து அறியாமல் இருப்பதாக தெரிகிறது. ஆவிக்குரிய விதத்தில் தங்களை பட்டினிபோட்டு சந்தேகங்களால் பாதிக்கப்பட தங்களை அனுமதித்துவிடுகிறார்கள். இதையே நீங்கள் செய்யும் சாத்தியம் இருக்கிறதா?
சந்தேகங்கள்—எப்பொழுதுமே தீயவையா?
நிச்சயமாகவே எல்லா சந்தேகமும் தீயதல்ல. சிலசமயங்களில், உண்மைகளை அறிந்து நிச்சயப்படுத்திக் கொள்ளும் வரை சந்தேகத்தோடு இருப்பது அவசியம்தான். நீங்கள் நம்புங்கள், எதைப் பற்றியும் சந்தேகப்படாதீர்கள் என்று மறைமுகமாக குறிப்பிடும் ஆன்மீக புத்திமதிகள் ஆபத்தானவை, வஞ்சிப்பவை. அன்பு “சகலத்தையும் விசுவாசிக்கும்” என பைபிள் சொல்வது உண்மைதான். (1 கொரிந்தியர் 13:7) கடந்த காலத்தில் நம்பகமானவர்களாக நிரூபித்தவர்களை அன்பான கிறிஸ்தவன் நிச்சயமாகவே நம்பத் தயாராயிருக்கிறான். ஆனால், ‘எல்லா வார்த்தையையும் நம்புவதைக்’ குறித்தும் கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 14:15) சிலசமயங்களில் ஒரு நபருடைய கடந்தகால பதிவால் சந்தேகப்படத்தான் வேண்டியிருக்கும். “[வஞ்சகம் பேசுபவன்] தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.” “அவனை நம்பாதே” என பைபிள் எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 26:24, 25.
குருட்டுத்தனமான நம்பிக்கைக்கு எதிராகவும் அப்போஸ்தலன் யோவான் கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறார். ‘ஏவப்பட்ட எல்லா வசனிப்புகளையும் நம்பாதீர்கள்’ என அவர் எழுதுகிறார். மாறாக, ‘ஏவப்பட்ட அந்த வசனிப்புகள் கடவுளிடமிருந்து வந்தவையா என்பதை பரிசோதித்துப் பாருங்கள்.’ (1 யோவான் 4:1, NW) ‘வசனிப்பு’ என்பது போதனை அல்லது கருத்து, இது கடவுளிடமிருந்து வருவதாக தோன்றலாம். ஆனால் உண்மையிலேயே அது கடவுளிடமிருந்து வந்ததா? ஓரளவு சந்தேகப்படுவது அல்லது நம்புவதா என முடிவுசெய்யாமல் வைத்திருப்பது உண்மையிலேயே பாதுகாப்பாக அமையலாம். ஏனென்றால் “அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” என அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார்.—2 யோவான் 7.
ஆதாரமற்ற சந்தேகங்கள்
சத்தியத்தை உறுதிப்படுத்துவதற்கு நேர்மையுடனும் மனத்தாழ்மையுடனும் உண்மைகளை ஆராய்வது அவசியம். ஆனால், ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் சந்தேகங்கள்—நம்முடைய உறுதியான நம்பிக்கைகளையும் உறவுகளையும் பாதிக்கும் சந்தேகங்கள்—மனதிலும் இருதயத்திலும் வளர அனுமதிப்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. “தீர்மானம் எடுக்கையில் அடிக்கடி குறுக்கிடும் நிச்சயமற்ற நம்பிக்கை அல்லது கருத்து” என இந்த சந்தேகம் வரையறுக்கப்படுகிறது. ஏவாளின் மனதில் யெகோவாவை பற்றிய சந்தேகங்களை சாத்தான் விதைத்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? என்று அவன் கேட்டான். (ஆதியாகமம் 3:1) கபடமற்றது போல தோன்றும் அந்தக் கேள்வியால் விளைந்த சந்தேகம் அவள் தீர்மானம் எடுப்பதை நிச்சயமாகவே குறுக்கிட்டது. அது சாத்தானுடைய தந்திரங்களில் ஒன்றாகும். பழிதூற்றி கடிதங்களை எழுதுபவரைப் போல, சூழ்ச்சிகளையும் அரைகுறை உண்மைகளையும் பொய்களையும் பயன்படுத்துவதில் அவன் கில்லாடியாக இருக்கிறான். இந்த முறையில் விதைக்கப்பட்ட சந்தேகங்கள் வாயிலாக ஆரோக்கியமான, நம்பகமான எண்ணற்ற உறவுகளை சாத்தான் கெடுத்திருக்கிறான்.—கலாத்தியர் 5:7-9.
இந்த விதமான சந்தேகத்தின் மோசமான விளைவை சீஷனாகிய யாக்கோபு தெளிவாக புரிந்துகொண்டிருந்தார். சோதனைகள் ஏற்படும்போது கடவுளிடம் தாராளமாக அணுகும் அருமையான சிலாக்கியத்தைப் பற்றி அவர் எழுதுகிறார். ஆனால் கடவுளிடம் ஜெபிக்கும்போது, “எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்” என யாக்கோபு எச்சரிக்கிறார். கடவுளோடு கொண்டுள்ள நம்முடைய உறவில் சந்தேகங்கள் “காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கி”றது. நாம் ‘இருமனமுள்ளவர்களாய் நம்முடைய வழிகளிலெல்லாம் நிலையற்றவர்களாகிவிடுவோம்.’ (யாக்கோபு 1:6, 8) நம்மை தடுமாற்றத்தில் விட்டுவிடும் நிச்சயமற்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறோம். அப்படியானால், ஏவாளுக்கு ஏற்பட்டதுபோல, நாம் எல்லா வகை பேய்த்தன போதனைகளுக்கும் தத்துவங்களுக்கும் ஆளாகிவிடுவோம்.
நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுதல்
அப்படியானால், தீங்கிழைக்கும் சந்தேகங்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்? விடை மிகவும் எளிமை: சாத்தானிய பிரச்சாரங்களை அறவே ஒதுக்கிவிட்டு, “விசுவாசத்தில் உறுதியாயிரு”ப்பதற்கு உதவும் கடவுளுடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.—1 பேதுரு 5:8-10.
தனிப்பட்ட முறையில் நல் ஆவிக்குரிய போஷாக்கை உட்கொள்ளுதல் இதற்கு மிகவும் இன்றியமையாதது. முன்பு குறிப்பிடப்பட்ட ஆசிரியர் வின்கேட் இவ்வாறு விளக்குகிறார்: “சரீரம் ஓய்வெடுக்கும்போதும்கூட ரசாயன மாற்றங்களுக்காகவும் முக்கிய உறுப்புகள் இயங்குவதற்காகவும் அதற்கு தொடர்ந்து சக்தி தேவை; அநேக திசுக்களிலுள்ள மூலப்பொருட்களும் தொடர்ந்து மாற்றீடு செய்யப்பட வேண்டும்.” இதுவே நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்திலும் உண்மை. தொடர்ந்து ஆவிக்குரிய போஷாக்கை பெறவில்லையென்றால், உணவு உட்கொள்ளாத உடலைப் போலவே, நம்முடைய விசுவாசம் படிப்படியாக பாதிக்கப்பட்டு கடைசியில் செத்துவிடும். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று சொன்னபோது இயேசு கிறிஸ்து இதை வலியுறுத்தினார்.—மத்தேயு 4:4.
இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். முதன்முதலில் நாம் எப்படி பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொண்டோம்? “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என அப்போஸ்தலன் பவுல் எழுதுகிறார். (ரோமர் 10:17) கடவுளுடைய வார்த்தையை உட்கொண்டதால் யெகோவா மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் அவருடைய அமைப்பின் மீதும் ஆரம்பத்தில் நம்முடைய விசுவாசத்தை வளர்த்துக்கொண்டோம் என்பதை அவர் அர்த்தப்படுத்துகிறார். சொல்லப்போனால், நாம் கேள்விப்பட்டதையெல்லாம் ஏதோ குருட்டுத்தனமாக நம்பிவிடவில்லை. பெரோயா பட்டணத்தில் வாழ்ந்த ஜனங்கள் செய்ததையே நாமும் செய்தோம். ‘காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தோம்.’ (அப்போஸ்தலர் 17:11) ‘நன்மையானதும் கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் அவருடைய பரிபூரண சித்தம் இன்னதென்றும் நமக்கு நாமே நிரூபித்துக்கொண்டோம்.’ (ரோமர் 12:2, NW; 1 தெசலோனிக்கேயர் 5:21) அதுமுதல், கடவுளுடைய வார்த்தையும் அவருடைய வாக்குறுதிகளும் ஒருபோதும் தவறாது என்பதை மிகவும் தெளிவாக தெரிந்துகொண்டபோது நம்முடைய விசுவாசத்தை நாம் பலப்படுத்தி வந்திருக்கலாம்.—யோசுவா 23:14; ஏசாயா 55:10, 11.
ஆவிக்குரிய பட்டினியை தவிருங்கள்
நம்முடைய விசுவாசத்தை காத்துக்கொள்வதும், யெகோவாவின் மீதும் அவருடைய அமைப்பின் மீதும் நாம் கொண்டுள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் எந்தவொரு சந்தேகத்தை தவிர்ப்பதுமே இப்பொழுது நமக்கு இருக்கும் சவால். இதைச் செய்வதற்கு நாம் தொடர்ந்து பைபிளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். “பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் [ஆரம்பத்தில் பலமான விசுவாசமுள்ளவர்களாய் தோன்றியவர்கள்] வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்” என அப்போஸ்தலன் பவுல் எச்சரிக்கிறார். (1 தீமோத்தேயு 4:1) தவறாக வழிநடத்தும் இத்தகைய உபதேசங்கள் சிலருடைய மனதில் சந்தேகத்தை விதைத்து அவர்களை கடவுளிடமிருந்து பிரித்துவிடுகின்றன. நமக்கு பாதுகாப்பு அளிப்பது எது? தொடர்ந்து ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் [நாம்] நெருங்க பின்பற்றி வந்திருக்கும் சிறந்த போதனையிலும் போஷாக்களிக்கப்படுவதே.’—1 தீமோத்தேயு 4:6, NW.
ஆனால், ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளால் போஷாக்களிக்கப்படுவதற்கு’ சிலர் இன்று விரும்புவதில்லை—அத்தகைய போஷாக்கு இலவசமாக கிடைக்கிறபோதிலும் அதை விரும்புகிறதில்லை. நீதிமொழிகள் புத்தகத்தின் எழுத்தாளர்களில் ஒருவர் சுட்டிக்காட்டுகிறபடி, நல் ஆவிக்குரிய உணவு, வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், ஆவிக்குரிய விருந்து கிடைத்தாலும், உண்மையில் அந்த உணவை சாப்பிட்டு ஜீரணிக்காமல் இருக்கும் சாத்தியம் இருக்கிறது.—நீதிமொழிகள் 19:24; 26:15.
இது ஆபத்தானது. ஆசிரியர் வின்கேட் இவ்வாறு கூறுகிறார்: “உடல் அதன் புரோட்டீனையே உட்கொள்ள ஆரம்பித்தவுடன் அதன் ஆரோக்கியம் பாதிப்படைய ஆரம்பிக்கிறது.” நீங்கள் உணவின்றி பட்டினியால் வாடும்போது, உடல் முழுவதிலும் சேமித்து வைக்கப்பட்ட சக்தியை உங்களுடைய உடல் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. இவை தீர்ந்துபோகும்போது, தொடர்ந்து வளருவதற்கும் திசுக்களை செப்பனிடுவதற்கும் முக்கியமாய் தேவைப்படும் புரோட்டீனையே உடல் உட்கொள்ள ஆரம்பிக்கிறது. முக்கிய உறுப்புக்கள் பழுதடைய ஆரம்பிக்கின்றன. பின்பு உங்களுடைய ஆரோக்கியம் திடீரென சீர்கெட்டு விடுகிறது.
ஆவிக்குரிய கருத்தில் பூர்வ கிறிஸ்தவ சபையிலிருந்தவர்களுக்கும் அதுவே நடந்தது. அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய சேமிப்பிலிருந்து வாழ முயன்றார்கள். ஒருவேளை தனிப்பட்ட படிப்பை அவர்கள் புறக்கணித்திருக்கலாம், அதனால் ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாகியிருக்கலாம். (எபிரெயர் 5:12) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, இப்படி செய்வதால் வரும் ஆபத்தை அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். “நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்.” “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால்” படிப்படியாக கெட்ட பழக்கத்திற்குள் சென்றுவிடுவது எவ்வளவு சுலபம் என்பதை அவர் அறிந்திருந்தார்.—எபிரெயர் 2:1, 4.
ஊட்டச்சத்தின்றி அவதியுறும் ஒருவர் பார்ப்பதற்கு வியாதியஸ்தராகவோ மெலிந்தவராகவோ இருப்பார் என்றில்லை. அதைப் போலவே, ஆவிக்குரிய விதத்தில் பட்டினியால் வாடுகிறவரை உடனடியாக அறிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். நீங்கள் தகுந்த போஷாக்கின்றி இருக்கும்போது ஆவிக்குரிய விதத்தில் நலமாக இருப்பதுபோல தோன்றலாம்—ஆனால் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே! நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் கட்டாயம் பலவீனமடைந்து விடுவீர்கள், ஆதாரமற்ற சந்தேகங்களுக்கு இடமளித்துவிடுவீர்கள், விசுவாசத்திற்காக கடினமாய் போராட முடியாமல் போவீர்கள். (யூதா 3) நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் எவ்வளவு உட்கொள்கிறீர்கள் என்பது வேறு யாருக்கும் தெரியாவிட்டாலும் உங்களுக்கு நன்றாக தெரியும்.
ஆகவே, தொடர்ந்து தனிப்பட்ட விதமாக படியுங்கள். சந்தேகங்களை தீவிரமாக எதிர்த்துப் போராடுங்கள். சாதாரண தொற்றாக தோன்றுவதை அசட்டை செய்வது, அதாவது தொல்லைப்படுத்தும் சந்தேகங்களைப் பற்றி ஒன்றும் செய்யாமலிருப்பது பயங்கரமான விளைவுகளை கொண்டுவரலாம். (2 கொரிந்தியர் 11:3) ‘நாம் உண்மையிலேயே கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோமா? பைபிள் சொல்வதையெல்லாம் உங்களால் நம்ப முடிகிறதா? இது உண்மையிலேயே யெகோவாவின் அமைப்பா?’ போன்ற சந்தேகங்களை சாத்தான் உங்களுடைய மனதில் விதைக்க விரும்புகிறான். ஆவிக்குரிய போஷாக்கை குறித்து அசட்டை மனப்பான்மையோடு இருந்து அவனுடைய வஞ்சகமான போதனைகளுக்கு சுலபமாக பலியாகிவிடுவதற்கு உங்களை அனுமதித்துவிடாதீர்கள். (கொலோசெயர் 2:4-7) தீமோத்தேயு கொடுத்த அறிவுரையை பின்பற்றுங்கள். “பரிசுத்த வேத எழுத்துக்களை” கற்கும் நல் மாணாக்கராக இருங்கள், அப்போதுதான் நீங்கள் “கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு”க்க முடியும்.—2 தீமோத்தேயு 3:13-15.
இதைச் செய்வதற்கு உங்களுக்கு உதவி தேவைப்படலாம். மேற்குறிப்பிடப்பட்ட எழுத்தாளர் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “கடுமையாக பட்டினி கிடந்தால் விட்டமின்களும் அத்தியாவசியமான பிற ஊட்டச்சத்துக்களும் இல்லாமல் ஜீரண உறுப்புக்கள் மிகவும் பாதிக்கப்படலாம், அதனால் பிற்பாடு சாதாரண உணவையும் உங்களால் உட்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு, எளிதில் ஜீரணிக்க முடிந்த உணவையே சில காலத்திற்கு கொடுக்க முடியும்.” பட்டினியால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை சீர்படுத்துவதற்கு விசேஷ கவனிப்பு தேவைப்படுகிறது. அதைப் போலவே, பைபிளை தனிப்பட்ட விதமாக படிக்கும் பழக்கத்தை அறவே புறக்கணித்த ஒருவர் மீண்டும் ஆவிக்குரிய பசியை பெற வேண்டுமாகில் அதிக உதவியும் உற்சாகமும் தேவைப்படலாம். இதுவே உங்களுடைய நிலைமையாக இருந்தால், உங்களுடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் பலத்தையும் மீண்டும் புதுப்பிப்பதற்கு உதவியை நாடுங்கள்; கொடுக்கப்படும் எந்த உதவியையும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.—யாக்கோபு 5:14, 15.
‘அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாதீர்கள்’
முற்பிதாவாகிய ஆபிரகாமின் சூழ்நிலைமைகளை கருத்தில் கொள்கையில், ஆபிரகாம் சந்தேகப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்ததாக உணரலாம். கடவுள் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், ‘அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவது நம்ப முடியாதது’ என்ற முடிவுக்கு வருவது மிக நியாயமாக தோன்றலாம். ஏன்? மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், காரியங்கள் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. ‘தன் சரீரம் செத்துப்போனது என்றும் சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனது என்றும் அவர் எண்ணினார்’ என பைபிள் பதிவு சொல்கிறது. இருந்தாலும், கடவுளையும் அவருடைய வாக்குறுதிகளையும் பற்றிய சந்தேகங்கள் தன்னுடைய மனதிலும் இருதயத்திலும் வேரூன்ற அனுமதிக்காமல் உறுதியோடு இருந்தார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை,” அல்லது ‘அவிசுவாசமாய்ச் சந்தேகப்படவில்லை.’ “தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று [ஆபிரகாம்] முழு நிச்சயமாய் நம்பி”னார். (ரோமர் 4:18-21) அவர் யெகோவாவுடன் பல வருடங்களாக பலமான, தனிப்பட்ட, நம்பகமான உறவை ஏற்படுத்தியிருந்தார். அந்த உறவை பலவீனப்படுத்தும் எந்த சந்தேகங்களையும் புறக்கணித்தார்.
“ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு”ந்தால்—ஆவிக்குரிய விதத்தில் நன்கு உட்கொண்டு வந்தால்—நீங்களும் விசுவாசத்தில் உறுதியாக இருக்க முடியும். (2 தீமோத்தேயு 1:13) சந்தேகங்கள் எனும் ஆபத்தை மிக வினைமையானதாக கருதுங்கள். ஆவிக்குரிய நுண்ணுயிரி போரில் (spiritual bacteriologic warfare) சாத்தான் ஈடுபடுகிறான். தனிப்பட்ட படிப்பின் மூலமும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதன் மூலமும் நல் ஆவிக்குரிய உணவு உட்கொள்வதை அசட்டை செய்தால், இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளாவீர்கள். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் வழங்கப்படும் தாராளமான, காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். (மத்தேயு 24:45, NW) தொடர்ந்து ‘ஆரோக்கியமான வசனங்களை ஒப்புக்கொண்டு,’ ‘விசுவாசத்தில் . . . ஆரோக்கியமுள்ளவர்களாயிருங்கள்.’ (1 தீமோத்தேயு 6:3; தீத்து 2:2) உங்களுடைய விசுவாசத்தை சந்தேகங்கள் அழித்துவிட அனுமதித்துவிடாதீர்கள்.
[பக்கம் 21-ன் படங்கள்]
ஆவிக்குரிய விதத்தில் எவ்வளவு நன்றாக உட்கொண்டு வருகிறீர்கள்?