அன்பின் மிகச் சிறந்த அடிச்சுவட்டை பயிலுதல்
கோசோவோ, லெபனான், அயர்லாந்து. சமீப ஆண்டுகளில் செய்தித்தாள்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நாடுகளின் பெயர்களே இவை. இப்பெயர்களைக் கேட்ட உடனே இரத்த வெள்ளம், குண்டுவெடிப்புகள், கொலைகள் போன்ற காட்சிகள்தான் மக்கள் மனங்களில் ஓடும். மத, இன, குல அல்லது மற்ற வேறுபாடுகளால் ஏற்படும் வன்முறை கலகங்கள் என இவையெல்லாம் புதுமையான ஒன்றல்ல என்பது உண்மைதான். சொல்லப்போனால், வரலாற்று ஏடுகளின் அதிக பக்கங்களை சுருட்டிக்கொண்டவை இவையே. இவற்றால் மனிதன் அனுபவிக்கும் வேதனைகள், கஷ்டங்கள்தான் எத்தனை எத்தனை!
மனித சரித்திரத்தின் பக்கங்களைக் கறைபடுத்திய யுத்தங்களைக் கண்ட மக்களில் அநேகர் எட்டிய முடிவு: யுத்தங்கள் தவிர்க்க முடியாதவை, மனிதர் ஒருவரையொருவர் வெறுப்பது சகஜம்தான். எனினும், இத்தகைய கருத்துக்கள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் போதனைகளுக்கு முற்றிலும் எதிர்மாறானவை. சந்தேகத்திற்கிடமின்றி பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்பதே படைப்பாளரின் ஆசை என்பது தெளிவாய் தெரிகிறது.
மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான் எனவும் பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26, 27) அப்படியென்றால், கடவுளுடைய குணங்களை, அதிலும் முக்கியமாக அன்பை வெளிக்காட்டும் திறமையோடே மனிதன் உண்டாக்கப்பட்டிருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இது இவ்வாறு இருக்கையில், சரித்திரம் முழுவதிலும் மனிதன் இந்தளவுக்கு அன்பு காட்ட தவறி, கெட்டு சீரழிந்திருப்பது ஏன்? இதற்கும் பைபிளே பதிலளிக்கிறது. முதல் மனித ஜோடியான ஆதாம் ஏவாள் கடவுளுக்கெதிராக கலகம் செய்து பாவத்தில் வீழ்ந்துவிட்டதே இதற்குக் காரணம். அதன் விளைவாக மனித ஜாதி முழுவதுமே சுதந்தரிக்கப்பட்ட பாவத்தையும் அபூரணத்தையும் சொத்தாகப் பெற்றது. “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா”னோம் என ரோமர் 3:23 விளக்குகிறது. நேசிப்பதற்காக கடவுள் கொடுத்த திறமை நம்முடைய சுதந்தரிக்கப்பட்ட பாவத்தாலும் அபூரணத்தாலும் பாழ்ப்படுத்தப்பட்டது. இனிமேலும் மனிதர் ஒருவரையொருவர் நேசிக்க முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நம்முடைய ‘அயலாரோடு’ சமாதானத்தையும், அன்பான உறவையும் என்றென்றும் அனுபவித்து மகிழுவோம் என்பதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
கடவுளை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
அபூரணர்களாக இருந்தபோதிலும் நம்மால் மற்றவர்களிடம் அன்பு காட்ட முடியும் என்பதை யெகோவா தேவன் அறிந்திருக்கிறார். அதன் காரணமாகவே தம்மை பிரியப்படுத்த விரும்புகிறவர்கள், தங்களால் முடிந்தளவு பிறரிடம் அன்பு காட்டும்படி அவர் கேட்கிறார். இந்தத் தேவையைக் கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்தினார். இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணக் கட்டளைகளில் எது பிரதானமானது என்று கேட்டபோது இவ்வாறு சொன்னார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை” என அவர் சொன்னார். “இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என மேலும் சொன்னார்.—மத்தேயு 22:37-40.
எனினும், தங்களால் பார்க்க முடியாத ஒருவரை நேசிப்பது முடியாத காரியம் என அநேகர் நினைக்கின்றனர்; யெகோவா தேவன் ஆவியாக இருப்பதால் மனிதர்களாகிய நாம் பார்க்க முடியாது. (யோவான் 4:24) நித்தம் நித்தம் அவர் செய்யும் காரியங்களால் நாம் நல்ல விதத்தில் பாதிக்கப்படுகிறோம்; காரணம் நம்முடைய நன்மைக்காக கடவுள் படைத்திருக்கிற அநேக காரியங்களையே நாம் அனைவரும் சார்ந்திருக்கிறோம். “அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் [கடவுள்] தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை” என சொல்கையில் இந்த உண்மையை அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டினார்.—அப்போஸ்தலர் 14:17.
ஏதோவொரு விதத்தில் சிருஷ்டிகரின் ஏற்பாடுகளால் ஒவ்வொருவரும் பயனடைகிறபோதிலும் சொற்பப் பேரே அவருக்கு நன்றியுணர்வோடு இருக்கின்றனர் அல்லது நன்றி செலுத்தத் தூண்டப்படுகின்றனர். இப்படி, நமக்காக கடவுள் செய்திருக்கிற எல்லா நல்ல காரியங்களையும் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டியது அவசியம்; அவருடைய செயல்கள் ஒவ்வொன்றிலும் புதைந்திருக்கும் அற்புதமான குணங்களை தியானிக்க வேண்டும். அவ்வாறு செய்வது நம்முடைய மகத்தான சிருஷ்டிகரின் வியக்க வைக்கும் ஞானத்தையும் வல்லமையையும் புரிந்துகொள்ள நமக்கு உதவும். (ஏசாயா 45:18) எல்லாவற்றிற்கும் மேலாக அவர் எத்தகைய அன்பான கடவுள் என்பதைக் காண அது நமக்கு உதவ வேண்டும்; அவர் நமக்கு உயிரை மட்டும் கொடுக்கவில்லை, அத்தோடு வாழ்க்கையின் ஆனந்தத்தை அருந்திடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறார்.
உதாரணமாக, பூமியில் கடவுள் படைத்த, வர்ணஜாலம் புரியும் எண்ணற்ற ரக அழகிய பூக்களைக் குறித்து சற்று சிந்தியுங்கள். இவற்றின் கொள்ளை அழகை கண்களால் அள்ளிப் பருகவும் அவற்றிலிருந்து மட்டற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கவும் நமக்கு அவர் திறமையைக் கொடுத்தாரே! அதோடு நம் வாழ்வுக்குக் கடவுள் சத்துள்ள, வித விதமான உணவு வகைகளையும் வாரி வழங்கினார். ரசனை உணர்வைக் கொடுத்து அவர் நம்மைப் பார்த்துப் பார்த்துப் படைத்தார்; ருசித்துப் புசிப்பதால் கிடைக்கும் திருப்தியை அதனால் அனுபவித்து மகிழ்கிறோம்! கடவுள் நம்மை உண்மையில் நேசிக்கிறார், நம்முடைய நலனில் அதிக ஆர்வமுள்ளவர் என்பதற்கு இவை ஆணித்தரமான ஆதாரங்களாக இல்லையா என்ன?—சங்கீதம் 145:16, 17; ஏசாயா 42:5, 8.
இயற்கை எனும் புத்தகத்தின் வாயிலாக மட்டுமே தம்மைப் பற்றி சொல்வதை நிறுத்திக் கொள்ளாமல், தாம் எப்படிப்பட்ட கடவுள் என்பதை தம்முடைய வார்த்தையாகிய பைபிள் வாயிலாகவும் அவர் வெளிப்படுத்துகிறார். இதற்குக் காரணம், கடந்த காலத்தில் யெகோவா தேவன் செய்த அநேக அன்பான செயல்களைப் பற்றியும் எதிர்காலத்தில் வெகு சீக்கிரத்தில் மனிதவர்க்கத்தின் மீது பொழியப்போவதாக வாக்குக் கொடுக்கிற எண்ணற்ற ஆசீர்வாதங்களைப் பற்றியும் பைபிள் பதிவு செய்து வைத்திருக்கிறது. (ஆதியாகமம் 22:17, 18; யாத்திராகமம் 3:17; சங்கீதம் 72:6-16; வெளிப்படுத்துதல் 21:4, 5) எல்லாவற்றிற்கும் மேலாக, பாவம், மரணம் ஆகியவற்றின் கோரப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் மீட்பராக தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்குத் தருவதன்மூலம் மனிதவர்க்கத்தினிடம் கடவுள் காட்டிய அன்பின் மிகப் பெரிய வெளிக்காட்டைப் பற்றியும் பைபிள் நமக்கு சொல்கிறது. (ரோமர் 5:8) நம்முடைய அன்பான படைப்பாளரைப் பற்றி நாம் எந்தளவுக்கு கற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு நம்முடைய இதயப்பூர்வ அன்பில் அவரிடம் நாம் அதிக அதிகமாக நெருங்கி வருவோம்.
அயலாரை நேசிக்க கற்றுக்கொள்ளுதல்
கடவுளை, நம்முடைய முழு இருதயத்தோடு, ஆத்துமாவோடு, மனதோடு நேசிக்க வேண்டும் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் நம்மைப் போலவே நம்முடைய அயலாரை நேசிக்க வேண்டும் எனவும் இயேசு சுட்டிக்காட்டினார். கடவுளிடமான அன்பு நம்முடைய அயலாரையும் நேசிக்கும்படி நம்மை கட்டாயத்திற்குள்ளாக்குவது உண்மை. “பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்” என அப்போஸ்தலனாகிய யோவான் விளக்கினார். “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” என்றும் வலியுறுத்தினார்.—1 யோவான் 4:11, 20, 21.
‘எல்லாம் முதலில் எனக்குத் தான் வேண்டும்’ என்ற மனப்பான்மையை வெளிக்காட்டும் ஜனங்கள் பெரும்பான்மையோர் உள்ள உலகில் நாம் வாழ்கிறோம்; ‘தற்பிரியராய்’ இருப்பர் என பைபிள் முன்னறிவித்ததற்கு இசைவாய் இது இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:2) எனவே, மிகச் சிறந்த அன்பின் அடிச்சுவட்டைப் பயில விரும்பினால், இந்த உலகத்தாருக்கே உரித்தான தன்னல வழிகளை பின்பற்றாமல், நம்முடைய மனதை மாற்ற கடுமுயற்சியெடுத்து நம்முடைய அன்பான சிருஷ்டிகரின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். (ரோமர் 12:2; எபேசியர் 5:1) “நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” தேவன்; அவர் “தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” நம்முடைய பரலோகத் தகப்பன் இத்தகைய சிறந்த முன்மாதிரியை நமக்கு வைக்கையில் நாமும் அனைவரிடமும் தயவோடு நடந்துகொள்ள வேண்டும், உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதனால் நாம் ‘பரலோகத்திலிருக்கிற நம்முடைய அன்பான பிதாவுக்குப் புத்திரராய்’ நிரூபிக்கலாம்.—லூக்கா 6:35; மத்தேயு 5:45.
ஜனங்களுக்கு உதவும் இத்தகைய அன்பான செயல்கள் சிலசமயங்களில் உண்மை கடவுளின் வணக்கத்தாராக மற்றவர்களை மாற்றியிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் ஒரு குடும்பத் தலைவி தன் அயலாரிடம் பைபிள் செய்தியைப் பகிர்ந்துகொள்ள முயன்றார்; மிஞ்சியதெல்லாம் கடுமையான எதிர்ப்புமட்டுமே. எனினும் இந்த எதிர்ப்பைக் கண்டு அவர் முடங்கிவிடவில்லை. மாறாக, அந்த அயலாரிடம் தொடர்ந்து கனிவாகவே நடந்துகொண்டார், உதவியளிக்கவும் முன்வந்தார். ஒரு சமயம் அந்த அயலார் குடிமாறி செல்கையில் உதவிக்கரம் நீட்டினார். மற்றொரு சமயம் அந்த அயலார் தன் உறவுக்காரர்களைச் சந்திக்க ஏர்போர்ட்டுக்குச் செல்கையில் துணைக்கு ஒருவரை இந்தச் சகோதரி உடனனுப்பி வைத்தார். பின்னர் அந்த அயலார் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்; அவருடைய கணவனிடமிருந்து வெகு கடுமையான துன்புறுத்துதலை எதிர்ப்பட்ட போதிலும் இறுதியில் அவர் வைராக்கியமுள்ள கிறிஸ்தவரானார். ஆம், அத்தகைய அன்பான செயல்கள் நித்திய ஆசீர்வாதத்திற்கு வித்திட்டன.
கடவுள் நம்மிடம் அன்பு காட்டுவது, ஏதோ நம்மிடம் விரும்பத்தக்க குணங்கள் எக்கச்சக்கமாய் இருப்பதனால் அல்ல என்பதை நேர்மையாகவே ஒப்புக்கொள்வோம். மாறாக, நம்மிடம் ஏராளமான குற்றங்குறைகள் இருந்தபோதிலும் அவர் நம்மிடம் அன்பு காட்டுகிறார். அப்படியானால், அநேக குறைபாடுகள் இருந்தபோதிலும் நம்முடைய உடன் மனிதரை நாமும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடமுள்ள குறைபாடுகளை பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டிருக்காமல் அவர்களிலுள்ள நல்ல குணங்களைக் கண்டறிந்து மனமார பாராட்டுவதற்கு நம்மை நாமே பயிற்றுவித்துக்கொண்டால் மற்றவர்களிடம் அன்புகாட்டுவதை வெகு சுலபமானதாய் காண்போம். அவர்களைப் பற்றிய நம்முடைய எண்ணம், நியமங்களுக்குக் கட்டுப்பட்ட அன்பின் எல்லையையும் கடந்து செல்லும்; அத்தோடு நெருங்கிய நண்பர்களுக்கிடையே காணப்படுவதற்கு ஒத்த பாசத்தையும் நேசத்தையும் காட்டுவோம்.
உங்கள் அன்பு வளரட்டும்
அன்பும் நட்பும் பேணி வளர்க்க வேண்டியவை; அதற்குத் தேவைப்படும் உரக்கலவையில் வாய்மையும் நேர்மையும் மிக முக்கியமானவை. யாரிடம் நண்பர்களாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்களிடத்தில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த சிலர் தங்கள் குற்றங்குறைகளை மூடிமறைக்க முயலுகின்றனர். எனினும், இத்தகைய போக்கு எக்குத்தப்பாக குட்டு வெளிப்படுவதில் போய் எப்போதும் முடிவடையும்; அது, மற்றவர்கள் உண்மை நிலையை அறியவும் அந்த நேர்மையற்றவரிடமிருந்து காததூரம் ஓடவும் செய்யும். எனவே, சரிப்படுத்திக்கொள்ள போராடும் குறைபாடுகள் நம்மிடம் இருந்தாலும், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை, உள்ளதை உள்ளபடி மற்றவர்கள் அறியச் செய்ய தயங்கக்கூடாது. அது நட்புக்கு வழிதிறக்கலாம்.
கிழக்கு ஆசியப்பகுதியிலுள்ள ஒரு சபையில் சாட்சியாய் இருக்கும் வயதான சகோதரியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்; அவருக்கு அந்தளவுக்கு படிப்பறிவில்லை. எனினும் அந்த உண்மையை மற்றவர்களிடமிருந்து அவர் ஒருபோதும் மறைத்ததில்லை. உதாரணமாக, பைபிள் தீர்க்கதரிசனங்களில் இருந்தும் சரித்திரத்திலிருந்தும் புறஜாதிகளின் காலம் 1914-ல் முடிவடைந்தது என நிரூபிப்பதற்கு தன்னால் முடியாது என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். a எனினும் ஊழியத்திற்கான வைராக்கியத்திலும், சகோதரர்களுக்கு அன்புகாட்டுவதிலும் உபசரிப்பதிலும் அவர் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்; அதன் காரணமாக அவர் சபையில் ‘மதிப்புக்குரியவர்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
சில கலாச்சாரங்களில் வெளிப்படையாக அன்பு காட்டினால் முகம் சுழிப்பார்கள்; அங்கு, மற்றவர்களிடம் தொடர்புகொள்ளும்போது மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளும்படி ஆட்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. மரியாதையோடும் பண்போடும் நடந்துகொள்வது எப்போதுமே நல்லதுதான். எனினும் நாம் காட்டும் மதிப்பு மரியாதை, நம்முடைய உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிக்காட்டாதபடி நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது அல்லது அவற்றை மறைக்க முயலக்கூடாது. தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய பூர்வ இஸ்ரவேலருக்கு தம்முடைய அன்பை வெளிக்காட்ட யெகோவா வெட்கப்படவில்லை; “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என அவர்களிடம் சொன்னார். (எரேமியா 31:3) அவ்விதமாகவே, தெசலோனிக்கேயில் இருந்த உடன் விசுவாசிகளிடம் அப்போஸ்தலனாகிய பவுல், “நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்” என்று சொன்னார். (1 தெசலோனிக்கேயர் 2:8) அயலாரிடமாக நாம் உண்மையான அன்பை வளர்த்துக்கொள்ள முயலுகையில் அது பைபிள் போதனைக்கு இசைவாக இருக்கிறது; அத்தகைய உணர்ச்சிகளை ‘அணைபோட்டு’ தடுக்காமல் இயற்கையாக வெளிக்காட்ட வேண்டும்.
தொடர்ந்து முயற்சிப்பது அவசியம்
உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் மற்றவர்களை நேசிக்கவும் கற்றுக்கொள்வது என்பது முடிவில்லா தொடர்கதை. ஏனெனில் நம்முடைய அபூரணத்தன்மையை மேற்கொள்ளவும் அன்பற்ற இந்த உலகத்தின் பலமான செல்வாக்கை எதிர்க்கவும் நம் பங்கில் பெரும் முயற்சி தேவை. எனினும் அது நமக்கு வாரிவழங்கும் பெரும் ஆசீர்வாதங்கள் எந்தத் தியாகத்திற்கும் மேலானவை.—மத்தேயு 24:12.
இந்த அபூரண உலகிலும் நம்முடைய அயலாரோடு மேம்பட்ட உறவை அனுபவித்து மகிழ முடியும்; அது, அதிக சந்தோஷம், சமாதானம், திருப்தி ஆகியவற்றை நமக்கும் மற்றவர்களுக்கும் தரும். இத்தகைய முயற்சி எடுப்பதினால், கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் வாழும் அருமையான நம்பிக்கைக்கு தகுதியானவர்களாய் நம்மை நிரூபிப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, மிகச் சிறந்த அன்பின் அடிச்சுவட்டைப் பயிலுவதன்மூலம் இன்றும் என்றும் நம்முடைய அன்பான சிருஷ்டிகரிடமிருந்து அங்கீகாரத்தையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்!
[அடிக்குறிப்புகள்]
a விவரங்களுக்கு வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகத்தில் தொகுதி 1, பக்கங்கள் 132-5-ஐக் காண்க.
[பக்கம் 10-ன் படங்கள்]
கனிவான செயல்களின் மூலம் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டலாம்
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
UN PHOTO 186226/M. Grafman