உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 4/15 பக். 15-17
  • நீங்கள் நன்றியுள்ளவர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் நன்றியுள்ளவர்களா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா நன்றியுள்ளவர்
  • இயேசு—ஆழ்ந்த போற்றுதலுள்ளவர்
  • சாத்தானின் குற்றப்படுத்தும் மனப்பான்மை
  • கடவுளையும் கிறிஸ்துவையும் பின்பற்றுங்கள்
  • ‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள்’
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • யெகோவா—நன்றியுள்ள கடவுள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • “நன்றியுள்ளவர்களாயிருங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமானவர்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 4/15 பக். 15-17

நீங்கள் நன்றியுள்ளவர்களா?

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மிஷனரி வீட்டில் டெடி என்ற ஒரு நாய் இருந்தது. அதற்கு ஒரு மாமிச துண்டை போட்டபோது லபக்கென்று விழுங்கிவிட்டது—ருசித்தும் பார்க்கவில்லை, மென்றும் தின்னவில்லை. கொழுத்தும் வெயிலில் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு, இன்னொரு துண்டை எப்போது எறிவார்கள் என ஏங்கிக்கொண்டிருந்தது. எல்லாம் காலியான பிறகு, அது திரும்பிக்கூட பார்க்காமல் நடையை கட்டிவிட்டது.

டெடி இதுவரை கொஞ்சம்கூட நன்றியுணர்வை காட்டியதில்லை. அப்படி இருக்க வேண்டுமென்று யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அது ஒரு நாய்தானே.

நன்றியுணர்வை பொருத்தவரையில், நாம் மிருகங்களிடமிருந்து எதிர்பார்ப்பதைவிட மனுஷர்களிடமிருந்தே அதிகம் எதிர்பார்க்கிறோம். ஆனால், பொதுவாக ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அநேகர் தங்களால் முடிந்தளவுக்கு வாழ்க்கையில் கிடைப்பதை வாரிக்கொள்ள பார்க்கிறார்கள்; இன்னும் நிறைய வேண்டுமென்றும் ‘ஆவ் ஆவ்’ என அலைகிறார்கள். இதிலும் ஆச்சரியமில்லை. கடைசி நாட்களில் மனுஷர்கள் நன்றிகெட்ட ஜென்மங்களாக இருப்பார்கள் என பைபிள் முன்னறிவித்தது.—2 தீமோத்தேயு 3:1, 2.

ஆனால், கடவுளுடைய ஊழியர்களிடம் இருப்பதோ வித்தியாசமான குணம். ‘நன்றியறிதலுள்ளவர்களாயிருங்கள்’ என அப்போஸ்தலன் பவுல் உடன் விசுவாசிகளுக்கு கொடுத்த புத்திமதிக்கு செவிசாய்க்கிறார்கள்.—கொலோசெயர் 3:15.

யெகோவா நன்றியுள்ளவர்

போற்றுதல் காட்டுவதில் பூரண முன்மாதிரி வகிப்பவர் யெகோவா தேவனே. தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை அவர் எப்படி நோக்குகிறார் என்பதை கவனியுங்கள். எபிரெய கிறிஸ்தவர்களுக்கு தேவாவியால் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.

உண்மையுள்ள ஊழியர்களை யெகோவா பாராட்டிய சமயங்கள் எண்ணிலடங்கா. ஆபிரகாமின் சந்ததியை பன்மடங்காக்குவதன் மூலம் அவரை ஆசீர்வதித்தார்; “வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும்” அவர்கள் பெருகினார்கள். (ஆதியாகமம் 22:17) கடும் சோதனையிலும் உண்மையுடன் நிலைத்திருந்த யோபுவை யெகோவா பாராட்டினார். அவருக்கு மிகுந்த செல்வத்தை—‘இரண்டத்தனையாக’—கொடுத்தார். (யோபு 42:10) ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதருடன் யெகோவா கொண்ட செயல்தொடர்புகள் இந்தக் கூற்றின் உண்மையை நிரூபித்திருக்கின்றன: “முழு இருதயத்தோடும் தம்மோடு இசைந்திருக்கிறவர்களுக்குத் தமது வல்லமையை விளங்கப்பண்ணும்படி யெகோவாவின் கண்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கின்றன.”—2 நாளாகமம் [தினவர்த்தமானம்] 16:9, தி.மொ.

தம்முடைய சித்தத்தைச் செய்ய நாடுகிறவர்களை கடவுள் பாராட்டுவதும் அவர்களுக்குப் பலனளிக்க மனமுள்ளவராக இருப்பதும் அவருடைய பண்பின் சிறப்பு அம்சங்கள். இதை அறிந்துகொள்வது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு முக்கியம். பவுல் எழுதினார்: ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் . . . அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்று விசுவாசிக்கவேண்டும்.’—எபிரெயர் 11:6.

யெகோவா கண்டிப்பானவராகவும் குற்றங்குறை காண்பவராகவும் இருந்திருந்தால், நாம் எல்லாருமே கண்டனம் செய்யப்பட்டவர்களாய் இருப்போம். வெகு காலத்திற்கு முன்பே சங்கீதக்காரன் இந்தக் குறிப்பை சொன்னார்: “யெகோவா, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால் நிலைநிற்கக்கூடியவன் யார் ஆண்டவரே?” (சங்கீதம் 130:3, தி.மொ.) யெகோவா நன்றிபாராட்டாதவரும் அல்ல, குற்றங்குறை காண்பவரும் அல்ல. தம்மை சேவிப்போரை நெஞ்சார நேசிக்கிறார். அவர் எப்பொழுதும் நன்றியுள்ளவர்.

இயேசு—ஆழ்ந்த போற்றுதலுள்ளவர்

இயேசு கிறிஸ்து தம்முடைய பரம பிதாவின் பண்புகளை அச்சுவார்த்தாற்போல பூரணமாய் பிரதிபலித்தார்; மற்றவர்கள் விசுவாசத்தோடு செய்த காரியங்களுக்காக நன்றியுள்ளவராக இருந்தார். ஒருசமயம் எருசலேம் ஆலயத்தில் நடந்ததை கவனியுங்கள்: “அவர் [இயேசு] கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரையும் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.”—லூக்கா 21:1-4.

போட்ட காசின் அடிப்படையில் பார்த்தால், முக்கியமாக ஐசுவரியவான்கள் போட்டதோடு ஒப்பிட்டு பார்த்தால், அந்த நன்கொடை அற்பமானதுதான். அங்கு இருந்தவர்களில் பெரும்பாலானோர் அவளை ஏறிட்டுகூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இயேசு அந்த விதவையை பார்த்தார். அவளுடைய சூழ்நிலைமைகளை புரிந்துகொண்டார். இயேசு அவளை உயர்வாக மெச்சினார்.

மற்றொரு சம்பவம் ஒரு பணக்கார பெண்ணாகிய மரியாளை பற்றியது. சாப்பிடுவதற்காக பந்தியில் இயேசு சாய்ந்து அமர்ந்திருந்தார். அப்பொழுது இவள் மிகவும் விலையுயர்ந்த நறுமண தைலத்தை அவருடைய பாதங்களிலும் தலையிலும் ஊற்றினாள். இதை சிலர் குறைகூறினார்கள்; அந்தத் தைலத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தியிருக்கலாமே என அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு என்ன பதிலளித்தார்? அவர் சொன்னார்: “அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். . . . இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மாற்கு 14:3-6, 9; யோவான் 12:3.

அந்த விலையுயர்ந்த தைலத்தை வேறு எதற்காவது பயன்படுத்தியிருக்கலாமே என இயேசு புலம்பவில்லை. மரியாள் காட்டிய தாராளமான அன்பையும் விசுவாசத்தையும் அவர் பாராட்டினார். அவளுடைய சிறந்த செயலின் நினைவாக இச்சம்பவம் பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இயேசு இருதயப்பூர்வமான பாராட்டு தெரிவிக்கும் நபர் என்பதை இதுவும் இன்னபிற விவரங்களும் காட்டுகின்றன.

நீங்கள் கடவுளுடைய ஊழியராக இருந்தால், தூய வணக்கத்தை முன்னேற்றுவிக்கும் உங்கள் முயற்சிகளை யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் வெகுவாக பாராட்டுவார்கள் என்பதில் உறுதியாக இருக்கலாம். இதை அறிவது நம்மை அவர்களிடம் நெருங்கிவரச் செய்கிறது, நாமும் நன்றியுள்ளவர்களாய் இருந்து அவர்களுடைய மாதிரியைப் பின்பற்றவும் உந்துவிக்கிறது.

சாத்தானின் குற்றப்படுத்தும் மனப்பான்மை

நன்றிகெட்ட ஒருவனுடைய உதாரணத்தை இப்போது நாம் கவனிக்கலாம். அவன்தான் பிசாசாகிய சாத்தான். சாத்தானின் நன்றிகெட்ட குணம், கடவுளுக்கு விரோதமாய் அழிவுக்கேதுவான கலகத்தை தூண்டிவிடுவதில் போய் முடிந்தது.

அதிருப்தி எனும் மனப்பான்மையை சாத்தான் வளர்த்துக்கொண்டதால், அதை மற்றவர்களுடைய மனதிலும் விதைக்கத் தொடங்கினான். ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவங்களை சற்று கவனியுங்கள். முதல் மனுஷனையும் மனுஷியையும் யெகோவா படைத்து, பூத்துக்குலுங்கும் ஓர் அழகிய தோட்டத்தில் அவர்களை குடிவைத்தார். பின்பு அவர்களிடம் சொன்னார்: “தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.” ஆனால் ஒரேவொரு கட்டுப்பாடு இருந்தது. கடவுள் சொன்னார்: “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.”—ஆதியாகமம் 2:16, 17.

ஆனால், விரைவிலேயே யெகோவாவின் நம்பகத்தன்மையை சாத்தான் சவால்விட்டான். யெகோவாவுக்கு விரோதமாக தான் கலகம் செய்ததுபோல, ஏவாள் மிகவும் நன்றிகெட்டவளாகி அவருக்கு எதிராக கலகம் செய்யட்டும் என்றும் சாத்தான் விரும்பினான். “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? என்று சாத்தான் கேட்டான். (ஆதியாகமம் 3:1) அருமையான ஏதோ ஒன்றை, ஏவாளுடைய கண்களைத் திறந்து, அவளை கடவுளைப் போல் ஆக்கும் ஏதோ ஒன்றை அவளுக்கு கொடாமல் கடவுள் வைத்திருக்கிறார் என்பதே இதன் சூட்சுமம். அநேக ஆசீர்வாதங்களைப் பொழிந்த யெகோவாவுக்கு நன்றியுள்ளவளாய் இருப்பதற்கு பதிலாக, தடைசெய்யப்பட்ட ஒன்றை அடைய ஏவாள் வேட்கைகொள்ள தொடங்கினாள்.—ஆதியாகமம் 3:5, 6.

இதன் படுபயங்கர விளைவுகள் நன்கு அறியப்பட்டதே. ‘ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய்’ என்பதால் ஏவாள் என்ற பெயர் சூட்டப்பட்டாள். ஆனால் வேறொரு கருத்தில் சாவோருக்கெல்லாம் தாய் ஆனாள். மரணத்தை பிறப்பிக்கும் பாவத்தை ஆதாமிலிருந்து எல்லா மனிதரும் சுதந்தரித்தார்கள்.—ஆதியாகமம் 3:20; ரோமர் 5:12.

கடவுளையும் கிறிஸ்துவையும் பின்பற்றுங்கள்

சாத்தானுக்கும் இயேசுவுக்குமிடையே உள்ள வேறுபாட்டை கவனியுங்கள். சாத்தான், “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் . . . குற்றஞ்சாட்டுகிறவன்” என்று விவரிக்கப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:10) இயேசு, “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”—எபிரெயர் 7:25.

சாத்தானோ கடவுளுடைய ஊழியர்களை குற்றஞ்சாட்டுகிறான். இயேசுவோ அவர்களை பாராட்டி, அவர்களுக்காக வேண்டுதல் செய்கிறார். கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் கிறிஸ்தவர்கள் மற்றவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களையே காண முயற்சி செய்ய வேண்டும்; ஒருவரையொருவர் போற்றவும் உயர்வாக மதிக்கவும் வேண்டும். இப்படி செய்கையில், பாராட்டுவதில் ஈடற்ற உன்னத முன்மாதிரியானவராகிய யெகோவா தேவனுக்கு இவர்கள் நன்றியுள்ளவர்களாக தங்களை காட்டுகிறார்கள்.—1 கொரிந்தியர் 11:1.

[பக்கம் 17-ன் படம்]

மரியாளின் சிறந்த செயலை இயேசு பாராட்டினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்