உங்கள் சிந்தனையை வடிவமைப்பவர் யார்?
“நான் எத யோசிக்கணும், எத செய்யணும்னு எனக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்ல.” இப்படி அழுத்தந்திருத்தமாக சொல்லுகையில், உங்கள் மீதும் உங்கள் தீர்மானத்தின் மீதும் உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதையே அது எப்போதும் அர்த்தப்படுத்தும். அப்படி நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? யாரும் உங்களுக்காக தீர்மானம் எடுக்க முடியாது என்பதென்னவோ வாஸ்தவம்தான். ஆனால், நல்ல அறிவுரை கிடைக்கையில் அது என்னவென்றுகூட சிந்திக்காமல் கேட்பதற்கு முன்பே காதைப் பொத்திக்கொள்வது நியாயமா? சிறந்த தீர்மானங்களை எடுக்க உங்களுக்கு உதவுவார் யாருமில்லையா? அப்படியென்றால், உங்கள் யோசனைகளை வடிவமைப்பதில் உங்களுக்கே தெரியாமல் உங்கள்மீது யாரும் செல்வாக்கு செலுத்த முடியாது என உறுதியாய் சொல்ல முடியுமா?
உதாரணத்திற்கு யோசெஃப் கோபெல்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். இவர் இரண்டாம் உலகப் போருக்கு முன் ஹிட்லரின் கொள்கைப் பரப்பு மந்திரியாக இருந்தார். இவர் ஜெர்மானிய திரைப்பட வர்த்தகத்தை தன் மேற்பார்வையில் வைத்துக்கொண்டது ஏன் தெரியுமா? ஒப்பற்ற மிகச் சிறந்த சக்திவாய்ந்த கருவியாக அதைப் பயன்படுத்தி, “மக்களின் நம்பிக்கைகளில் செல்வாக்கு செலுத்தவும் அதன் வாயிலாக அவர்களுடைய நடத்தையையே வடிவமைக்கவும்” முடியும் என்பதை அவர் அறிந்திருந்ததினாலேயே. (கொள்கை பரப்புதலும் ஜெர்மானிய சினிமாவும் 1933-1945 [ஆங்கிலம்]) அவர் கையாண்ட கதிகலங்க வைத்த முறைகளை ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம்; அத்தோடு நிற்காமல் இன்னும் பல வழிகளிலும் தந்திரமாக தன் எண்ணத்தைப் புகுத்தினார். இவ்வாறு அவர், சாதாரண ஜனங்கள், அதாவது பகுத்தறிவுள்ள சராசரி பாமரர்கள் நாசி தத்துவங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு தூண்டினார்.
நீங்கள் யாருக்கு செவிகொடுக்கிறீர்களோ அவர்களுடைய உணர்ச்சிகளும் நோக்குநிலைகளும் நீங்கள் யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் ஏதாவது ஒரு விதத்தில் எப்போதும் செல்வாக்கு செலுத்துகிறது. இது நல்லதல்ல என்று சொல்ல முடியாது. செல்வாக்கு செலுத்துபவர்கள் உங்கள் நலனில் உண்மையான அக்கறை காட்டும் ஆசிரியர்கள், நண்பர்கள், அல்லது பெற்றோராக இருந்தால், நீங்கள் நிச்சயமாகவே அவர்களுடைய சிட்சையிலிருந்தும் புத்திமதியிலிருந்தும் பிரயோஜனமடைவீர்கள். ஆனால் மாறாக, ஜனங்கள் தன்னலக்காரர்களாகவும், தங்களையே கெடுத்துக் கொண்டவர்களாகவோ, கெட்ட சிந்தையுள்ளவர்களாகவோ இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்; இவர்களை அப்போஸ்தலனாகிய பவுல் “மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்” என விவரித்தார். இப்படிப்பட்டவர்களிடம் ஜாக்கிரதை!—தீத்து 1:10; உபாகமம் 13:6-8.
நிலைமை இப்படி இருப்பதால், எந்தக் காலத்திலும் யாரும் உங்களை வசப்படுத்திவிட முடியாதென்று நீங்கள் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டாம். (1 கொரிந்தியர் 10:12-ஐ ஒப்பிடுக.) ஏற்கெனவே நீங்கள் யாருடைய பிடியிலோ சிக்கி இருக்கிறீர்கள், நீங்கள் இல்லை இல்லை என்று மறுத்தாலும் அது தான் உண்மையில் அடிக்கடி நடக்கிறது; உங்களுக்கே தெரியாமல் விரிக்கப்பட்ட வலையில் நீங்கள் விழலாம். எப்படி? அதற்கு இதோ ஓர் உதாரணம்: நீங்கள் கடைக்கு ஏதோ ஒரு பொருளை வாங்க செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். முழுக்க முழுக்க நீங்களே சொந்தமாக, நன்றாக சிந்தித்து முடிவு செய்துதான் எப்போதும் எதையும் வாங்குகிறீர்களா? அல்லது நீங்கள் நேரில் பார்க்க முடியாத யாரோ ஒருவர் உங்கள் தெரிவில் தந்திரமாக ஆனால் அதிக செல்வாக்கு செலுத்துகிறார்களா? ஆம் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பதே இதைப்பற்றி அலசி ஆராய்ந்தவரும் பத்திரிகை எழுத்தாளருமான எரிக் கிளார்க்கின் அனுமானம். “நம்மை எந்தளவுக்கு விளம்பரங்கள் நாலாபுறமும் இருந்து தாக்குகின்றனவோ அந்தளவுக்கு நம்மையே அறியாமல், ஆனால் நிச்சயமாக நாம் அதனிடம் சாய்ந்துவிடுவோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.” ஜனங்கள் விளம்பரங்களால் எந்தளவுக்கு பயனடைகிறார்கள் என கேட்ட போது, “அது ஆட்களை வசப்படுத்துவதென்னவோ உண்மை, ஆனால் தாங்கள் அதற்கு வசப்படுவதில்லை” என பதில் கிடைத்ததாக அவர் அறிவிக்கிறார். விளம்பரங்களால் யார் ஏமாந்துபோனாலும், தாங்கள் ஏமாந்துபோகிறதில்லை என்பதே ஜனங்களின் நினைப்பு. “தாங்கள் மாத்திரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாய் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றுகிறது.”—ஆசையைத் தூண்டுபவர்கள் (ஆங்கிலம்).
சாத்தானின் அச்சுக்குள் திணிக்கப்பட்டிருக்கிறீர்களா?
தினந்தினம் பார்க்கும் விளம்பரங்களால் நீங்கள் தாக்கப்பட்டாலும்கூட உங்களுக்கு அவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், இன்னுமொரு விதமான தாக்குதல் இருக்கிறது, அது வெகு ஆபத்தானது. சாத்தான் தந்திரமாக ஏமாற்றுவதில் பலே கில்லாடி என பைபிள் தெளிவாக காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) அவனுடைய கொள்கைகளைத் திணிக்க அவன் உபயோகிக்கும் முறை விளம்பரதாரர் செய்வதைப் போன்றதே. தாங்கள் தாக்கும் இரண்டு விதங்களைப் பற்றி சொல்கையில், “ஒன்று ஆளை வசமாக்கி ஒருவழி ஆக்கிவிடுவது, மற்றொன்று மனதை மயக்கி பதமாக்குவது” என விளம்பரதாரர் ஒருவர் சொன்னார்; சாத்தானுடைய யோசனையும் அப்படித்தான். உங்கள் எண்ணங்களை வடிவமைக்க சாதாரண கொள்கை பரப்பாளர்களும் விளம்பரதாரர்களும் இந்தளவுக்குத் தந்திரமாக ஏமாற்றும் லாவகங்களை உபயோகிக்க முடியுமென்றால் இதைப் போன்ற சூழ்ச்சிகளை கையாளுவதில் சாத்தான் எந்தளவு சாமர்த்தியமானவனாக இருப்பான் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்களேன்!—யோவான் 8:44.
அப்போஸ்தலன் பவுலுக்கு இது நன்றாகவே தெரியும். தன்னுடைய உடன் கிறிஸ்தவர்களில் சிலர் கவனமற்றவர்களாக இருந்து சாத்தானின் தந்திரங்களுக்குள் வீழ்ந்துவிடுவார்களோ என அவர் கவலைப்பட்டார். “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்” என அவர் எழுதினார். (2 கொரிந்தியர் 11:3) இந்த எச்சரிக்கைக்கு கூடுதலாகவே கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால், கொள்கை பரப்புதல் மனதை பதமாக்குதல் ஆகியவை மற்றவர்களை வலையில் விழச் செய்தாலும் “தங்களிடம் அவற்றின் பாச்சா பலிக்காது” என நம்பும் ஆட்களைப் போல நீங்கள் இருப்பீர்கள். இப்போது நாம் காணும் மனிதத் தன்மையற்ற, நடத்தை கெட்ட, ஏமாற்றுப் பேர்வழிகள் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதே சாத்தானிய கொள்கை பரப்புதல் செல்லுபடியாகிறது என்பதற்கு தெள்ளத் தெளிவான உண்மையாய் இருக்கிறது.
எனவே, பவுல், “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” இருங்கள் என தன் உடன் கிறிஸ்தவர்களிடம் கெஞ்சினார். (ரோமர் 12:2) பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பவுலின் இந்த வார்த்தைகளுக்கு இவ்வாறு பொழிப்புரை கொடுத்தார்: “உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகம் தன்னுடைய அச்சுக்குள் உங்களைத் திணிக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள்.” (ரோமர் 12:2, ஃபிலிப்ஸ்) அந்தக் கால குயவர்கள் தங்களுக்கு விருப்பமான உருவிலும் வடிவிலும் பொருளை வனைய பிரத்தியேக அச்சுக்குள் களிமண்ணைத் திணித்தது போல, தன்னுடைய அச்சுக்குள் உங்களைத் திணிப்பதற்கு சாத்தான் எதையும் செய்ய தயங்கமாட்டான். இதையெல்லாம் சாதிப்பதற்கு இந்த உலகின் அரசியல், வர்த்தகம், மதம், பொழுதுபோக்கு போன்றவற்றை விரல் அசைத்தால் செயல்படும் நிலையில் தயாராக வைத்திருக்கிறான் சாத்தான். அவனுக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறது? அப்போஸ்தலனாகிய யோவானின் காலத்தில் இருந்தது போலவே அவன் செல்வாக்கு எங்கும் வியாபித்திருக்கிறது. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற”தென்று யோவான் சொன்னாரே. (1 யோவான் 5:19; 2 கொரிந்தியர் 4:4-ஐயும் காண்க.) மக்களின் மனதை மயக்கி, அவர்களுடைய யோசனைகளை கந்தரகோளமாக்கும் சாத்தானின் திறமையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் ஒப்புக்கொடுக்கப்பட்ட கடவுளுடைய மக்களான இஸ்ரவேலரை, ஒரு தேசத்தாரை எவ்வளவு திறமையாக வளைத்துப் போட்டுக் கொண்டான் என்பதை சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். (1 கொரிந்தியர் 10:6-12) அதை நிலைமை உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ? சாத்தானின் கவர்ச்சியூட்டும் செல்வாக்கிற்கு உங்கள் மனம் ‘மயங்க’ இடம் கொடுத்தீர்கள் என்றால் ஆபத்துதான்.
நடப்பவற்றிற்கு விழிப்புள்ளவர்களாய் இருங்கள்
பொதுவாக, நீங்கள் இடங்கொடுத்தாலே இத்தகைய நயவஞ்சக சக்திகள் உங்கள்மீது செல்வாக்கு செலுத்த முடியும். மறைந்திருந்தே இணங்க வைப்பவர்கள் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் வேன்ஸ் பாக்கர்ட் இந்தக் குறிப்பைத் தெரிவித்தார்: “இவ்வாறு [மறைந்திருந்து] இணங்க வைப்பவர்களிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பலமான பாதுகாப்பு நமக்கு இன்னும் இருக்கிறது: அந்தத் தெரிவு இணங்காதிருப்பதே. எந்தச் சூழ்நிலைமையானாலும் சரி, தெரிவு செய்வதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது; நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கு நாம் விழிப்புள்ளவர்களாக இருந்தால் தந்திரத்தால் நமக்கே தெரியாமல் நாம் ஏமாறமாட்டோம்.” கொள்கைப் பரப்புதலையும் தந்திரத்தையும் பொருத்தமட்டிலும்கூட இதுவே உண்மை நிலை.
‘நடப்பவற்றிற்கு விழிப்புள்ளவர்களாய் இருப்ப’தற்கு, நல்லதை கற்பூரம் மாதிரி ‘கப்’ என்று பிடித்துக் கொள்ள உங்கள் மனதை தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது உண்மையே. ஆரோக்கியமான மனதை ஆரோக்கியமான உடலுக்கு ஒப்பிடலாம்; மனம் சரிவர செயல்பட நல்ல போஷாக்கு அவசியம். (நீதிமொழிகள் 5:1, 2) எதையுமே தெரிந்து கொள்ளாமல் இருப்பது தவறான விஷயங்களைத் தெரிந்து கொள்வதைக் காட்டிலும் ஆபத்தானது. தவறான வழிக்கு நடத்திச் செல்லும் கருத்துக்களுக்கும் தத்துவங்களுக்கும் உங்கள் மனதை பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய தேவை இருப்பதென்னவோ வாஸ்தவம்தான். இருந்தபோதிலும், உங்களுக்குக் கொடுக்கப்படும் புத்திமதியானாலும் சரி நீங்கள் கேள்விப்படும் செய்தியானாலும் சரி, ‘எனக்கென்ன’ என்றிருக்கக்கூடாது; குதர்க்கமான கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்கவும் கூடாது. இந்த விஷயத்தில் கவனமாய் இருக்க முயலுங்கள்.—1 யோவான் 4:1.
மெய்யென காட்டி நம்ப வைப்பதும் மறைந்திருந்தே கொள்கையைப் பரப்புவதும் ஒரே விஷயமல்ல. “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களா”க ஆகுபவர்களுக்கு கவனமாயிருக்கும்படி அப்போஸ்தலன் பவுல், வாலிபனாய் இருந்த தீமோத்தேயுவை முன்னதாகவே எச்சரித்திருந்தார். “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் [“மெய்யெனக் காட்டி நம்ப வைக்கப்பட்டவற்றில்,” NW] நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கி[றாய்]” என்றும் பவுல் சொன்னார். (2 தீமோத்தேயு 3:13, 14) உங்கள் மனதிற்கு நீங்கள் போடும் தீனி ஓரளவிற்கு உங்களை பாதிக்கப்போவதால் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய இரகசியம் ஒன்றிருக்கிறது. அது இதுதான்: ‘இன்னாரிடத்தில் நீங்கள் அவற்றைக் கற்றீர்கள் என்பது,’ அதுவும் அவர்கள் சுயநலவாதிகள் அல்ல, உங்கள்மீது உண்மையாகவே கரிசனை வைத்திருப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தெரிவு உங்களுடையதே. இந்த உலகத்தின் தத்துவங்களும் சமுதாயம் வரவேற்கும் குணங்களும் உங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்த இடமளித்து, நீங்கள் “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரி”க்கலாம். (ரோமர் 12:2) ஆனால் இந்த உலகிற்கு உங்கள் மேல் துளியும் அக்கறை இல்லை. எனவே, “லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தை [பற்றியவை]” என அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார். (கொலோசெயர் 2:8) இவ்விதத்தில் சாத்தானின் அச்சுக்குள் திணிக்கப்படுவதோ அல்லது உங்களை ‘ஒருவன் கொள்ளைகொண்டுபோவதோ’ வெகு சுலபம். நீங்கள் புகைக்க வேண்டிய அவசியமில்லாமலே, யாரோ ஒருவர் ஊதித்தள்ளிய புகையை உள்ளிழுப்பதைப் போன்றது அது. அந்த மாசுபடிந்த காற்றை சற்று உள்ளிழுத்தால் போதும் வேறு வினையே வேண்டாம், நீங்கள் பாதிக்கப்படுவதற்கு.
வேண்டுமென்றால், அந்த ‘காற்றை’ நீங்கள் சுவாசிக்காமலேயே இருக்கலாம். (எபேசியர் 2:2, NW) பவுலின் புத்திமதியைப் பின்பற்றுங்களேன்: “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) இதற்கு முயற்சி தேவை. (நீதிமொழிகள் 2:1-5) யெகோவா சூழ்ச்சிக்காரர் அல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள். தேவையான எல்லா தகவல்களையும் அவர் கொடுத்திருக்கிறார். அவற்றிலிருந்து பலனடைய நம் பங்கில் நாம் செய்ய வேண்டியவை: அவற்றிற்கு செவிசாய்க்க வேண்டும், நீங்கள் யோசிக்கையில் மனம் முழுவதும் அவையே வியாபிக்க அனுமதிக்க வேண்டும். (ஏசாயா 30:20, 21; 1 தெசலோனிக்கேயர் 2:13) கடவுளுடைய ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில், அதாவது “பரிசுத்த வேத எழுத்துக்க”ளில் உள்ள சத்தியத்தால் உங்கள் மனதை நிரப்ப நீங்கள் விருப்பமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:15-17.
வடிவமைக்க யெகோவாவை அனுமதித்தல்
யெகோவா உங்களை வடிவமைக்க அனுமதித்தால் நீங்கள் பயனடையலாம். அதற்கு உங்கள் பாகத்தில் தேவைப்படுவதெல்லாம் மனமுவந்து கீழ்ப்படிவதே. ஒரு குயவன் வீட்டிற்குச் சென்று சந்திக்கும்படி தீர்க்கதரிசியாகிய எரேமியாவிடம் யெகோவா சொல்லுகையில் இதை வெகு தெளிவாக விளக்கினார். குயவன் ஒருவன் “வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று.” அப்பொழுது தன் மனதிற்கு ஏற்றபடி அதைச் சரியாக வனைய அவன் தீர்மானித்ததை எரேமியா பார்த்தார். “இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ . . . இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்” என்று யெகோவா சொன்னார். (எரேமியா 18:1-6) ஒரே தினுசான பாத்திரமாகவோ அல்லது வேறுவிதமாகவோ தம் மனம் போனபோக்கில் வடிவமைப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் யெகோவாவின் கைகளில் உயிரற்ற களிமண் பிண்டமாக இருந்தார்களா என்ன?
யெகோவா தமக்கு பெரும் வல்லமை இருக்கிறது என்பதற்காக, ஜனங்கள் அவரவர் விருப்பப்படி நடப்பதற்கு அனுமதிக்காமல் இல்லை. சாதாரண குயவனைப் போல் நேர்மாறாக உருவாக்கவும் மாட்டார், அப்படியே உருக்குலைவு இருந்தாலும் அதற்கு அவர் காரணமும் அல்ல. (உபாகமம் 32:4) சரியான விதத்தில் வடிவமைக்க யெகோவா முயற்சி செய்கையில் அவருடைய வழிநடத்துதலுக்கு ஒத்துப் போகாதபோதுதான் குறைபாடுகள் வெளிப்பட்டு குரூர முகத்தைக் காட்டுகின்றன. இதுவே உங்களுக்கும் உயிரற்ற களிமண் பிண்டத்திற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம். உங்களுக்கு எதைச் செய்யவும் சுதந்திரம் இருக்கிறது. யெகோவா உங்களை வடிவமைப்பதற்கு மனப்பூர்வமாக சம்மதிக்கலாம் அல்லது வேண்டாம் என நீங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கலாம்; இதில் எதை தெரிவுசெய்வதற்கும் இருக்கும் உங்கள் சுதந்திரத்தை நீங்கள் தாராளமாக உபயோகிக்கலாம்.
நெஞ்சைத்தொடும் என்னே ஓர் விஷயம் இது! “நான் என்ன செய்யணுங்கறத எனக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்ல” என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்குப் பதிலாக யெகோவா சொல்வதை கேட்டு நடப்பது எத்தனை நல்லது! நம் எல்லாருக்குமே யெகோவாவின் வழிநடத்துதல் தேவை. (யோவான் 17:3) “கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” என்று ஜெபித்த சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல் நாமும் ஜெபிப்போமாக. (சங்கீதம் 25:4) “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்” என சாலொமோன் ராஜா சொன்னதை நினைவில் வையுங்கள். (நீதிமொழிகள் 1:5) நீங்கள் கேட்டு நடப்பீர்களா? நீங்கள் செவிகொடுத்தால், ‘நல்யோசனை உங்களைக் காப்பாற்றும், புத்தி உங்களைப் பாதுகாக்கும்.’—நீதிமொழிகள் 2:11.