பாவத்தைக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?
“உன்னில் எந்தப் பாவமுமில்லை, உனக்குள் எந்தத் துயரமும் இல்லை; நீயே சர்வசக்தியின் களஞ்சியம்.” இந்து மதத்தின் புனித நூலாகிய பகவத் கீதையின் ஒரு பகுதியை விளக்கும்போது, பிரசித்திபெற்ற இந்து மத தத்துவஞானி விவேகானந்தர் இவ்வாறு சொன்னார். வேதாந்தத்தை எடுத்துக் கூறுபவராய், “மிகப் பெரிய தவறு என்னவென்றால், நீ மனோ பலமற்றவன், நீ ஒரு பாவி என்று சொல்லிக்கொள்வதே”a என்பதாக அவர் அடித்துச் சொல்கிறார்.
ஆனால் மனிதனில் பாவம் இல்லை என்பது உண்மையா? மேலும் பிறப்பின்போது ஒருவர் எதையாவது சுதந்தரித்துக் கொள்கிறார் என்றால் அது என்ன? “உடலின் சாயல் [மாத்திரமே] மரபினால் தீர்மானிக்கப்படுகிறது” என்பதாக இந்து சுவாமி நிக்கிலானந்தா சொல்கிறார். பிற குணங்கள் “முந்தைய வாழ்க்கையில் ஒருவர் செய்த செயல்களால்” தீர்மானிக்கப்படுகின்றன. விவேகானந்தரின்படி, “உன் விதியை உருவாக்குவது நீயே.” சுதந்தரிக்கப்படும் பாவத்தைப் பற்றி இந்து மதம் எதையும் போதிப்பது கிடையாது.
சுதந்தரிக்கப்பட்ட பாவம் பற்றிய கருத்து சோராஸ்டிரியர்கள், ஷின்டோ மதத்தினர், கன்பியூசியன் மதத்தினர் மற்றும் புத்த மதத்தினர் மத்தியிலும்கூட காணப்படுவதில்லை. சுதந்தரிக்கப்பட்ட பாவத்தைப் பற்றிய கோட்பாட்டை பாரம்பரியமாக கற்பித்து வந்திருக்கும் யூதேய கிறிஸ்தவ மதங்களிலும்கூட, பாவத்தைப் பற்றிய மக்களின் மனப்பான்மை மாறிக்கொண்டு வருகிறது. இன்று அதிகமதிகமான ஆட்கள் தங்களைப் பாவிகளாக கருதுவது கிடையாது.
“நவீன சிந்தனை தார்மீக கண்டனத்தை உற்சாகப்படுத்துவது கிடையாது; குறிப்பாக அது தன்னைத்தான் கண்டனம் செய்துகொள்வதை உற்சாகப்படுத்துவது கிடையாது” என்பதாக இறையியலராகிய இளையவர் கொர்நேலியஸ் ப்ளான்டிங்கா கூறுகிறார். பாவத்தின் வினைமையானத்தன்மையை அற்பமாக கருதச்செய்வதில் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் ஓரளவு காரணமாய் இருந்திருக்கின்றன. “பாவத்தைப் பற்றி பேசப்படுவதை நீங்கள் கேட்க விரும்பினால் சர்ச்சுக்குப் போகாதீர்கள்” என்பதாக டியூக் பல்கலைக்கழக குரு சொல்கிறார். ப்ளான்டிங்காவின் பிரகாரம் சில சர்ச்சுகள் சமூக பிரச்சினைகளின் சம்பந்தமாக மாத்திரமே பாவத்தைப்பற்றி பொதுவாக பேசுகின்றன.
இப்பொழுதெல்லாம் சமூக துன்பங்கள் அநேகமாக இருப்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே. வன்முறை, குற்றச்செயல், போர்கள், இன கலவரங்கள், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், நேர்மையின்மை, ஒடுக்குதல், பிள்ளைகளுக்கு எதிராக வன்முறை ஆகியவை சொல்லமுடியாத அளவில் உள்ளன. உண்மையில், 20-ம் நூற்றாண்டு மனித குலம் எக்காலத்திலும் அறிந்தவற்றுள் மிக அதிகமான இரத்த வெறிகொண்ட நூற்றாண்டு என்பதாக அழைக்கப்பட்டுள்ளது. இதோடு வியாதி, முதுமை மற்றும் மரணத்தின் விளைவாக வரும் துயரத்தையும் துன்பத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இன்று உலகில் இருந்துவரும் மிகப் பேரளவான பிரச்சினைகளிலிருந்து விடுதலைக்காக யார்தான் ஏங்காதிருப்பார்?
அப்படியென்றால் பாவம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? பாவம் சுதந்தரிக்கப்படுகிறதா? துன்பத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் எப்போதாவது நமக்கு விடுதலை கிடைக்குமா? அடுத்தக் கட்டுரை இந்தக் கேள்விகளைக் கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a வேதாந்த தத்துவம் இந்து திருமறையாகிய வேதங்களின் முடிவில் வரும் உபநிடதங்களை ஆதாரமாகக் கொண்டவை.