கடவுளுடைய வார்த்தை “அற்புதங்களை” நடப்பிக்கிறது
டெரஸ் ஏயான் சொன்னபடி
ஒரு நாள் 1965-ஆம் ஆண்டில் நான் ஒரு வியாபார நிறுவனத்துக்குச் சென்று காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் இதழ்களை அங்கிருந்த வணிகர்களிடம் அளித்தேன். நான் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டபோது, வெடி சப்தம் ஒன்றைக் கேட்டேன். என் பாதங்களுக்கு அருகே தரைமீது ஒரு குண்டு வெடித்தது. “யெகோவாவின் சாட்சிகளை அவ்வாறுதான் நடத்த வேண்டும்,” என்று அவ்வணிகரில் ஒருவர் வெறுப்புடன் சொன்னார்.
அந்த அனுபவம் எனக்கு பயமூட்டியது—ஆனால் முழுநேர ஊழியத்தை விட்டுவிடும் அளவுக்கு அது என்னை செய்யவில்லை. நான் கற்றுக்கொண்ட பைபிள் சத்தியங்கள் மிகவும் அருமையானவையாக இருந்ததால், என் ஊழியத்தை விட்டுவிடுமளவுக்கு எதையும் அனுமதிக்கக்கூடாது என்று இருந்தேன். நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை விளக்குகிறேன்.
ஜூலை 1918-ல் நான் பிறந்தபிறகு, என் பெற்றோர் கனடா, க்யுபெக்கில் உள்ள கேப்-டி-லா-மாடலீன் என்ற ஒரு சிறு கிராமத்தில் குடியேறினர். அது அற்புதங்கள் நிகழும் இடமாக அறியப்பட்டிருந்தது. கன்னி மரியாளின் புண்ணியஸ்தலத்தில் வழிபடுவதற்காக பார்வையாளர்கள் இந்த இடத்துக்கு திரளாக வந்தனர். மரியாள் அற்புதங்கள் நிகழ்த்துவதாக சொல்லப்படும் விஷயங்கள் நிரூபிக்கப்படாவிட்டாலும், அந்தக் கிராமம் 30,000-க்கும் மேற்பட்ட குடிமக்களையுடைய பட்டணமாக இப்போது வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், கடவுளுடைய வார்த்தை அநேக மக்களின் வாழ்க்கையில் உண்மையாகவே அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது.
எனக்கு சுமார் 20 வயதானபோது, மத விஷயங்களில் இருந்த ஆர்வத்தை என் தந்தை பார்த்து அவருடைய பைபிளை எனக்குத் தந்தார். நான் அதை வாசிக்க ஆரம்பித்தபோது, யாத்திராகமம் 20-ஆம் அதிகாரத்தில் சிலை வழிபாடு வெளிப்படையாக கண்டனம் செய்யப்பட்டிருப்பதை படித்தறிந்தபோது அதிர்ச்சியடைந்தேன். நான் உடனடியாக கத்தோலிக்க சர்ச்சின் போதனைகளில் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்து பூசைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். சிலைகளை வணங்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. “தெரெஸா, நீ சர்ச்சுக்கு செல்லவில்லையா?” என்று என் தந்தை முன்பு என்னிடம் கேட்டது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. “இல்லை, நான் பைபிளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று நான் பதிலளித்தேன்.
நான் செப்டம்பர் 1938-ல் திருமணம் செய்துகொண்ட பிறகும்கூட, பைபிள் வாசிப்பு என் வாழ்க்கையின் ஒரு பாகமாக தொடர்ந்து இருந்தது. என் கணவர் ரோசர் பெரும்பாலும் இரவு நேரங்களில் வேலை செய்ததால், அவர் வேலைக்குச் சென்றிருந்த சமயம் பைபிள் வாசிப்பதை நான் பழக்கமாக்கிக் கொண்டேன். கடவுளுக்கு ஒரு ஜனம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் விரைவில் வந்தேன், ஆகையால் அவர்களைத் தேட ஆரம்பித்தேன்.
கடவுளுடைய ஜனங்களைத் தேடுவதில்
நான் எடுத்த முயற்சி
நான் இளம் வயதினளாய் இருந்தபோது, சர்ச்சில் கற்றுக்கொண்ட காரியங்களினிமித்தமாக, எரிநரகத்தில் விழித்தெழுவேனோ என்ற பயத்தில் நான் உறங்க செல்வதற்கு பயப்பட்டேன். அப்படிப்பட்ட பயத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, அன்பான கடவுள் அவ்வளவு பயங்கரமான காரியம் ஏதோவொன்று நிகழும்படி அனுமதிக்க மாட்டார் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். நம்பிக்கையோடு நான் பைபிளைத் தொடர்ந்து வாசித்து, சத்தியத்துக்காக தேடினேன். எத்தியோப்பிய அண்ணகன் வாசித்தபோதும் விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்ததைப் போல் நான் இருந்தேன்.—அப்போஸ்தலர் 8:26-39.
என் சகோதரர் அன்ட்ராவும் அவருடைய மனைவியும் நாங்கள் வசித்து வந்த அடுக்கக மாடியில் எங்களுக்கு கீழிருந்த மாடியில் வசித்து வந்தனர், அவர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை சுமார் 1957-ல் படிக்க ஆரம்பித்தனர். சாட்சிகள் அந்தக் கட்டடத்துக்கு பிரசங்கிக்க வருகையில், கூரையைத் தட்டுவதன் மூலம் என்னை எச்சரிக்கும்படி என் நாத்தனாரிடம் நான் கூறினேன். அவ்வாறு தட்டும்போது என் கதவைத் திறக்கக்கூடாது என்றிருந்தேன். ஒருநாள் அவர் என்னை எச்சரிக்கத் தவறிவிட்டார்.
அன்றைக்கு நான் கதவைத் திறந்தேன், கா மென்டா என்ற பயனியரை சந்தித்தேன், யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் பயனியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர் என்னிடம் கடவுளுடைய பெயரைப் பற்றி பேசினார், கடவுளுக்கு யெகோவா என்ற தனிப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது என்று விளக்கினார். அவர் புறப்பட்டுச் சென்றபின்பு, அவர் கூறியவற்றுக்கு பைபிள் வசனங்கள் உண்மையிலேயே ஆதாரமாக இருந்தன என்பதை என் பைபிளை வைத்து நான் சரிபார்த்து உறுதிசெய்து கொண்டேன். நான் செய்த ஆராய்ச்சி எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.—யாத்திராகமம் 6:3, டூவே வர்ஷன், அடிக்குறிப்பு; மத்தேயு 6:9, 10; யோவான் 17:6.
கா மறுபடியும் வந்து சந்தித்தபோது, ஒரே கடவுளில் மூன்று நபர்கள் என்று வலியுறுத்தும் கத்தோலிக்க கோட்பாடாகிய திரித்துவத்தை நாங்கள் கலந்து பேசினோம். பைபிள் திரித்துவத்தை போதிப்பதில்லை என்பதன் பேரில் என்னை திருப்திப்படுத்திக்கொள்வதற்காக பின்னர் நான் என் சொந்த பைபிளை கவனமாக ஆராய்ந்தேன். (அப்போஸ்தலர் 17:11) இயேசு கடவுளுக்கு சமமானவர் அல்ல என்பதை என் படிப்பு உறுதிசெய்தது. அவர் சிருஷ்டிக்கப்பட்டவர். அவருக்கு ஆரம்பம் இருந்தது, யெகோவாவுக்கோ ஆரம்பம் இல்லை. (சங்கீதம் 90:1, 2; யோவான் 14:28; கொலோசெயர் 1:15-17; வெளிப்படுத்துதல் 3:14) நான் கற்றுக்கொண்டிருந்த காரியங்களைக் குறித்து திருப்தியடைந்ததால், பைபிள் கலந்தாலோசிப்புகளை தொடருவதற்கு நான் சந்தோஷப்பட்டேன்.
1958-ல் ஒருநாள், நவம்பர் மாத பனிப்புயலின்போது, அந்நாள் மாலையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட மன்றத்தில் நடத்தப்பட்ட வட்டார மாநாட்டுக்கு ஆஜராகும்படி கா என்னை அழைத்தார். நான் அவர் கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சிநிரலை அனுபவித்தேன். அதற்குப் பிறகு, என்னிடம் வந்த சாட்சியிடம் சம்பாஷிக்கையில் நான் கேட்டேன், “ஒரு மெய்க் கிறிஸ்தவர் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்க வேண்டுமா?”
“ஆம், நற்செய்தியை அறிவித்தே ஆக வேண்டும், ஜனங்களை வீடுகளில் சென்று சந்திப்பது, பிரசங்க வேலையில் முக்கியமான அம்சமாக இருக்கிறது,” என்று அவர் சொன்னார்.—அப்போஸ்தலர் 20:20.
அவர் கொடுத்த பதிலைக் கேட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்! நான் கடவுளுடைய ஜனங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்பதை அது எனக்கு உறுதிப்படுத்தியது. “வேண்டாம், பிரசங்கிப்பதற்கு அவசியம் இல்லை,” என்று அவர் சொல்லியிருந்தால் நான் சத்தியத்தைக் கண்டடைந்திருக்கிறேனா என்பதைக் குறித்து சந்தேகித்திருப்பேன், ஏனென்றால் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிப்பதைக் குறித்து பைபிள் என்ன சொன்னது என்பதை நான் அறிந்திருந்தேன். அந்தச் சமயம் முதற்கொண்டு நான் விரைவாக ஆவிக்குரிய முன்னேற்றம் செய்தேன்.
அந்த வட்டார மாநாட்டிற்குப் பிறகு, அருகாமையிலிருந்த டிராய்ஸ்-ரிவிரெஸ் என்ற பட்டணத்தில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு நான் ஆஜராக ஆரம்பித்தேன். காவும் அவருடைய பயனியர் கூட்டாளியுமான ஃபிளாரன்ஸ் போமென் என்பவர் மட்டுமே அப்போது கேப்-டி-லா-மாடலீன் என்ற இடத்தில் வசித்து வந்த சாட்சிகளாய் இருந்தனர். “நாளை நான் உங்களோடு பிரசங்கிப்பதற்கு வருகிறேன்,” என்று ஒருநாள் நான் சொன்னேன். அவர்களோடு நான் செல்வதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டனர்.
என் சொந்த பட்டணத்தில் பிரசங்கித்தல்
எல்லாருமே பைபிள் செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைத்தேன், ஆனால் உண்மையில் அப்படியல்ல என்பதை விரைவில் அறிந்துகொண்டேன். காவும் ஃபிளாரன்ஸும் வேறு இடத்துக்கு நியமிக்கப்பட்டபோது, வீட்டுக்கு வீடு சென்று பைபிள் சத்தியங்களை நான் மட்டுமே தனியாக பிரசங்கித்தேன். பயந்து பின்வாங்காமல், சுமார் இரண்டு வருடங்கள் தனியாக தொடர்ந்து ஜூன் 8, 1963-ல் முழுக்காட்டுதல் பெறும் வரை பிரசங்கித்தேன். விடுமுறை பயனியர் சேவை என்று அப்போது அழைக்கப்பட்ட சேவையில் அதே நாளில் நான் சேர்ந்துகொண்டேன்.
நான் விடுமுறை பயனியர் சேவையில் ஒரு வருடம் தொடர்ந்து சேவித்தேன். பின்னர், நான் ஓர் ஒழுங்கான பயனியரானால், வாரத்துக்கு ஒரு முறை என்னோடு வந்து கேப்-டி-லா-மாடலீனில் ஊழியம் செய்வதாக டெல்வீனா சன்லாரன் வாக்களித்தார். ஆகையால் நான் என் பயனியர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தேன். ஆனால், விசனகரமாக, முழுநேர ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்வீனா இறந்துவிட்டார். நான் என்ன செய்வேன்? நான் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துவிட்டதால் என் திட்டத்தை மாற்றிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆகையால் அக்டோபர் 1964-ல், நான் முழுநேர ஊழியத்தில் என் சேவையை ஆரம்பித்தேன். அடுத்த நான்கு ஆண்டுகள் நான் வீட்டுக்கு வீடு வேலையை தனியாக செய்தேன்.
கேப்-டி-லா-மாடலீனில் இருந்த ஆழ்ந்த பற்றுள்ள கத்தோலிக்கர் பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரசங்கிப்பதிலிருந்து என்னைத் தடைசெய்ய சிலர் காவலர்களைகூட அழைத்தனர். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டபடி, ஒருநாள், என் பாதங்களின் அருகே குண்டு வெடிக்கச் செய்வதன் மூலம் ஒரு வணிகர் என்னைப் பயமுறுத்தினார். இது பட்டணத்தில் பரவலாக பேசப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதை யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான போராட்டம் என்று உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் அழைத்தது. அந்த முழு சம்பவமும் சாதகமான சாட்சி கொடுப்பதில் விளைவடைந்தது. காலப்போக்கில் பத்து வருடங்களுக்குப் பிறகு, என்னை வெடிகுண்டால் தாக்கிய அந்த வணிகரின் உறவினர் சாட்சியாக ஆனார்.
கடவுளுடைய வார்த்தை நடப்பித்த “அற்புதங்கள்”
கேப்-டி-லா-மாடலீனில் பல வருடங்களாக பைபிள் சத்தியங்களுக்கு எதிராக இருந்த கடும் எதிர்ப்பு படிப்படியாக தணிந்துபோனதை நான் பார்த்திருக்கிறேன். சுமார் 1968-ல், மற்ற சாட்சிகள் இந்த இடத்துக்கு வந்தனர், உள்ளூர் குடிமக்கள் பைபிள் சத்தியங்களுக்கு பிரதிபலிக்க ஆரம்பித்தனர். 1970-களின் ஆரம்பத்தில், பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையில் திடீரென்று அதன் காரணமாக பெரும் அதிகரிப்பு இருந்தது. வீட்டுக்குவீடு ஊழியத்தில் ஓரளவு பங்கைக் கொண்டிருப்பதற்கு, நான் நடத்திக்கொண்டிருந்த அநேக பைபிள் படிப்புகளை மற்ற சாட்சிகள் நடத்தும்படியாக கேட்டுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் என்ற பைபிள் படிப்பு உதவி புத்தகத்தை ஒருநாள் ஓர் இளம் பெண் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டாள். அந்தச் சமயத்தில் அவளுடைய தோழனாயிருந்த ஆன்ட்ரி என்ற இளம் மனிதர் போக்கிரி போன்று தோற்றமளித்த குற்றவாளியாக இருந்தார், அவர் சம்பாஷணையில் சேர்ந்துகொண்டார். ஆன்ட்ரியோடு கொண்டிருந்த சம்பாஷணை அவருடைய ஆர்வத்தைத் தூண்டியது, ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு விரைவில் அவர், தான் கற்றுக்கொண்ட காரியங்களைக் குறித்து தன் நண்பர்களிடம் பேச ஆரம்பித்தார்.
ஒரு சமயம் நான் பைபிளை கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த நால்வரோடு படித்துக்கொண்டிருந்தேன், அதில் ஒருவர் அதிகமாக எதையும் சொல்லவில்லை, ஆனால் நன்றாக செவிகொடுத்துக் கேட்டார். அவருடைய பெயர் பியர். ஒருநாள் காலை சுமார் இரண்டு மணியளவில் நானும் என் கணவனும் கதவை தட்டும் சப்தத்தைக் கேட்டோம். இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்: என்னிடம் கேள்விகள் கேட்பதற்காக கொள்ளைக்கூட்டத்தாரில் நால்வர் அங்கே நின்றுகொண்டிருந்தனர். வேளையல்லா வேளையில் சந்தித்ததற்காக ரோசர் குறைகூறியதே இல்லை.
ஆரம்பத்தில் அந்த நான்கு மனிதர்களும் கூட்டங்களுக்கு ஆஜரானார்கள். இருப்பினும், ஆன்ட்ரி மற்றும் பியர் மட்டுமே தொடர்ந்து நிலைத்திருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய மாற்றிக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றனர். இப்போது 20 வருடங்களுக்கும் மேலாக, இந்த இரண்டு மனிதரும் யெகோவாவை உண்மையோடு சேவித்து வந்திருக்கின்றனர். அவர்கள் படிக்க ஆரம்பித்தபோது, குற்றச்செயலுக்கு பேர்போனவர்களாக இருந்தனர், ஆதலால் காவலர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். எங்கள் பைபிள் படிப்புகளில் ஒன்றை முடித்தப்பிறகு அல்லது சபைக்கூட்டத்தின்போது சில சமயங்களில் காவலர்கள் அவர்களைத் தேடி வருவர். நான் ‘எல்லா வகையான மனுஷருக்கும்’ பிரசங்கித்ததைக் குறித்து சந்தோஷப்படுகிறேன், அற்புதமாய் தோன்றும் மாற்றங்களை கடவுளுடைய வார்த்தை எவ்வாறு உண்மையிலேயே செய்கிறது என்பதையும் நேரடியாக பார்த்தேன்.—1 தீமோத்தேயு 2:4.
என் ஊழியத்தின் ஆரம்பத்தில், கேப்-டி-லா-மாடலீனில் கடைசியில் ஓர் இராஜ்ய மன்றம் இருக்கும் என்றும் அது யெகோவாவின் ஜனங்களால் நிரப்பப்பட்டிருக்கும் என்றும் என்னிடம் சொல்லியிருந்தால் நான் அதை நம்பியிருக்க மாட்டேன். நான் சந்தோஷப்படும்வகையில், கேப்-டி-லா-மாடலீன் சபை உட்பட, அருகாமையில் இருந்த டிராய்ஸ்-ரிவிரெஸ் பட்டணத்தில் ஒரு சிறிய சபை இப்போது செழித்தோங்கும் ஆறு சபைகளாக வளர்ச்சியடைந்திருக்கிறது, அவை மூன்று ராஜ்ய மன்றங்களில் ஒன்றுகூடி வருகின்றன.
சுமார் 30 நபர்கள் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும் நிலையை அடைய உதவியிருக்கும் சந்தோஷத்தை நான் தனிப்பட்டவிதத்தில் பெற்றிருக்கிறேன். இப்போது, 78-வது வயதில், யெகோவாவுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்ததைக் குறித்து சந்தோஷப்படுகிறேன் என்று உண்மையில் என்னால் சொல்லமுடியும். இருப்பினும், நான் அவ்வப்போது உற்சாகத்தை இழந்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சமயங்களை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு, நான் எப்போதும் என் பைபிளைத் திறந்து அதிலிருந்து எனக்குப் புத்துணர்ச்சியளிக்கும் சில பகுதிகளை வாசிப்பேன். கடவுளுடைய வார்த்தையை வாசிக்காமல் ஒரு நாளும் கடந்துசெல்வதை என்னால் யோசித்துக்கூட பார்க்கமுடியாது. யோவான் 15:7 எனக்கு விசேஷமாக உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது, அது சொல்கிறது: “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”
விரைவில் வரப்போகும் புதிய உலகில் ரோசரைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) 1975-ல் மரணமடைவதற்கு சற்றுமுன்பு, அவர் முழுக்காட்டுதலை நோக்கி நன்கு முன்னேற்றமடைந்து கொண்டிருந்தார். இப்போது, முழுநேர ஊழியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் யெகோவாவின் வேலையில் தொடர்ந்து களிகூரவும் தீர்மானமாயிருக்கிறேன்.