உலகப்பிரகாரமான மதம் ஏன் முடிவடையும்
“என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:4.
1. (அ) எவ்வகையில் மகா பாபிலோன் விழுந்துவிட்டது? (ஆ) இந்தச் சம்பவம் யெகோவாவின் சாட்சிகளை எவ்வாறு பாதித்திருக்கிறது?
“மகாபாபிலோன் விழுந்தது!” ஆம், யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து காண்கையில், இந்தப் பொய் மத உலகப் பேரரசு விழுந்துவிட்டது. 1919-லிருந்து இது உண்மையாக இருந்திருக்கிறது. அப்போது, புதிர்நிலையிலிருந்த பாபிலோனின் முதன்மையான பாகமாகிய கிறிஸ்தவமண்டலத்தின் செல்வாக்கிலிருந்து கிறிஸ்துவின் சகோதரரில் மீதியானோர் வெளிவந்தனர். இதன் பலனாக, பொய் மதத்தை வெளிப்படையாகக் கண்டனம் செய்வதற்கும், மேசியானிய ராஜ்யத்தின் மூலமான கடவுளுடைய நீதியுள்ள ஆட்சியை அறிவிப்பதற்கும் அவர்கள் விடுதலையானவர்களாக இருந்திருக்கிறார்கள். “உலகமனைத்தையும்” மோசம்போக்குவதற்கு, சாத்தான் கையாண்டுவந்திருக்கிற அவனுடைய கைப்பொம்மையாயிருக்கும் மதங்களின் குழப்பத்தை, யெகோவாவின் உண்மைத்தவறாத சாட்சிகள், இந்த நூற்றாண்டு முழுவதிலும் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 12:9; 14:8; 18:2.
மகா பாபிலோன் எவ்வாறு விழுந்துவிட்டது?
2. உலக மதங்களின் தற்போதைய நிலைமை என்ன?
2 எனினும், ‘மிகப் பல நாடுகளில் மதம் செழித்தோங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகையில், பாபிலோன் விழுந்துவிட்டது என்று நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்?’ என்று எவராவது கேட்கலாம். கத்தோலிக்க மதமும் இஸ்லாமும் தனித்தனியே நூறு கோடிக்கு மேற்பட்ட விசுவாசிகளைக் கொண்டிருப்பவையாக உரிமைபாராட்டுகின்றன. அமெரிக்காக்களில் புராட்டஸ்டண்ட் மதம் இன்னும் செழிப்படைந்துகொண்டிருக்கிறது, புதிய சர்ச்சுகளும் ஜெப ஆலயங்களும் அங்கு தொடர்ந்து எழும்பிக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கானோர் புத்த மதத்தின் மற்றும் இந்து மதத்தின் சடங்குமுறைகளைப் பின்பற்றுகின்றனர். எனினும், நூற்றுக்கோடிக்கணக்கான இவர்களின் நடத்தையில் இந்த எல்லா மதங்களும் எந்த அளவுக்குப் பயன்தரும் முறையில் உண்மையான செல்வாக்கு செலுத்துகின்றன? வட அயர்லாந்தில் கத்தோலிக்கரும் புராட்டஸ்டண்டினரும் ஒருவரையொருவர் கொல்வதை மதம் தடுத்து வைத்ததா? மத்திய கிழக்கில் யூதருக்கும் முஸ்லீம்களுக்கும் உண்மையான சமாதானத்தை அது கொண்டுவந்திருக்கிறதா? இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒத்திசைவுக்கு அது வழிநடத்தினதா? மேலும், இன்னும் சமீபத்தில், செர்பிய ஆர்த்தடாக்ஸ் மதத்தினரையும், க்ரோயேஷீயா கத்தோலிக்கரையும், போஸ்னிய முஸ்லீம்களையும், “மரபின சுத்திகரிப்பில்” ஈடுபடுதல், கொள்ளையிடுதல், கற்பழித்தல், ஒருவரையொருவர் கொல்லுதல் ஆகியவற்றிலிருந்து அது தடுத்து வைத்ததா? மதம் பெரும்பாலும் வெறும் ஒரு பெயர்விவரச் சீட்டைப் போலும், இலேசாக அடிபடுகையில் உடைந்துவிடும் மெல்லிய முட்டையின் ஓட்டைப்போலுமே உள்ளது.—கலாத்தியர் 5:19-21; யாக்கோபு 2:10, 11-ஐ ஒப்பிடுக.
3. கடவுளுடைய நோக்குநிலையில் மதம் ஏன் ஆக்கினைத் தீர்ப்பில் உள்ளது?
3 கடவுளுடைய நோக்குநிலையில், எல்லா மதமும் கடவுளுக்கு முன்பாக முழுமையாக ஆக்கினைத் தீர்ப்பில் உள்ளது என்ற இந்தத் தப்பிக்கொள்ள முடியாத ஒரு உண்மையை, பெரும் எண்ணிக்கையான ஜனங்களின் மத ஆதரவு மாற்றிவிடுகிறதில்லை. மகா பாபிலோனின் சரித்திரம் சாட்சி பகருகிறபடி, அது தண்டனைத் தீர்ப்பளிக்கப்படுவதற்குத் தகுதியானதாக உள்ளது. ஏனெனில், “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.” (வெளிப்படுத்துதல் 18:5) தீர்க்கதரிசன மொழியில் ஓசியா இவ்வாறு எழுதினார்: “அவர்கள் காற்றை விதைத்து, சூறைக் காற்றை அறுப்பார்கள்.” உலகமெங்குமுள்ள சாத்தானின் பொய் மதங்கள் எல்லாம், கடவுளையும், அவருடைய அன்பையும், அவருடைய பெயரையும், அவருடைய குமாரனையும் மறுதலித்ததற்காக அழிவுத் தீர்வான தண்டனையைப் பெறும்.—ஓசியா 8:7; கலாத்தியர் 6:7; 1 யோவான் 2:22, 23.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்
4, 5. (அ) என்ன நிலைமைகளில் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? (ஆ) என்ன கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்?
4 ‘கடைசி நாட்களின்’ முடிவு பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மெய்க் கிறிஸ்தவர்களாக நாம், ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களைத்’ தப்பிப் பிழைப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5, NW) கொலைபாதகனாகவும், பொய்யனாகவும், பழித்தூற்றுபவனாகவும் இருக்கிற சாத்தானின் இழிவான ஆளுமையை உண்மையில் பிரதிபலிக்கிற சாத்தானின் உலகத்தில், மெய்க் கிறிஸ்தவர்கள் பரதேசிகளாக இருக்கின்றனர். (யோவான் 8:44; 1 பேதுரு 2:11, 12; வெளிப்படுத்துதல் 12:10) வன்முறை, வஞ்சனை, மோசடி, இலஞ்ச ஊழல், மடத்தனமான ஒழுக்கக்கேடு ஆகியவற்றால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். நல்நியமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்பமும் வாய்ப்புடைமையும் பொதுவழக்குச் சொற்களாகிவிட்டன. பல சமயங்களில் மதகுருக்கள், ஆண்புணர்ச்சி, வேசித்தனம், விபசாரம் ஆகியவற்றை பைபிள் தெளிவாகக் கண்டனம் செய்வதன் கண்டிப்பைக் குறைத்து, ஒழுக்கக்கேட்டை கண்டும் காணாதவர்கள்போல் இருக்கின்றனர். இதனால் கேள்வி என்னவெனில், நீங்கள் பொய் வணக்கத்தை ஆதரித்து, இடமளிக்கிறீர்களா, அல்லது உண்மையான வணக்கத்தில் சுறுசுறுப்பாய் பங்குகொள்கிறீர்களா என்பதே.—லேவியராகமம் 18:22; 20:13; ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 6:9-11.
5 இப்போதிருப்பது பிரித்தெடுப்பதற்கான ஒரு காலம். ஆகையால், பொய் வணக்கத்தையும் உண்மையான வணக்கத்தையும் தெளிவாக வேறுபடுத்திக் கண்டறிவதற்கு அதிக காரணம் உள்ளது. கிறிஸ்தவமண்டல மதங்களை வெகு கண்டனத்துக்குரியதாகச் செய்கிற வேறு எவற்றையும் அவை செய்திருக்கின்றன?—மல்கியா 3:18; யோவான் 4:23, 24.
பொய் மதம் குற்றம் சாட்டப்பட்டது
6. எவ்வாறு கிறிஸ்தவமண்டலம் கடவுளுடைய ராஜ்யத்தை மறுதலித்திருக்கிறது?
6 கிறிஸ்தவமண்டலத்தில் கோடிக்கணக்கானோர் கர்த்தருடைய ஜெபத்தைத் தவறாமல் பயன்படுத்தி, அதில் கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஜெபிக்கிறபோதிலும், தேவாட்சியைத் தவிர, மற்ற எல்லா வகையான அரசியல் வெளிப்பாடுகளையும் ஊக்கத்துடன் ஆதரித்துவந்திருக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு முன்பாக, கத்தோலிக்க சர்ச்சின் “பிரபுக்கள்” ஆகிய ரிச்சிலியு, மஸாரின், உல்ஸி போன்ற கார்டினல்கள், உலகப்பிரகாரமான அரசியல் வல்லுநர்களாகவும், அரசாங்க அமைச்சர்களாகவும் செயல்பட்டனர்.
7. யெகோவாவின் சாட்சிகள் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்தவமண்டல மதகுருக்களின் நடத்தையை எவ்வாறு அம்பலப்படுத்தினார்கள்?
7 50-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, மதம் சுழல்காற்றை அறுவடை செய்கிறது (ஆங்கிலம்) என்ற தலைப்பைக்கொண்ட சிறு புத்தகத்தில், கிறிஸ்தவமண்டலம் அரசியலில் ஈடுபடுவதை யெகோவாவின் சாட்சிகள் வெளிப்படுத்தினர்.a அப்போது சொல்லப்பட்டது இன்றும் அதே வலிமையுடன் பொருந்துகிறது: “‘கிறிஸ்தவமண்டலம்’ முழுவதிலுமுள்ள மதத் தலைவர்கள், ‘இந்தத் தற்போதைய பொல்லாத உலகத்தின்’ அரசியலில் ஆர்வமிகுந்த அக்கறையுடன் பங்குகொண்டு, அதன் உலகப்பிரகாரமான விவகாரங்களில் உட்படுகிறார்கள் என்று எல்லா பிரிவுகளையும் சேர்ந்த மதகுருமாரின் நடத்தையைப் பற்றிய நேர்மையான சோதனை வெளிப்படுத்தும்.” அப்போது, போப் பயஸ் XII, நாசி ஹிட்லருடனும் (1933) பாஸிச ஃபிரான்கோவுடனும் (1941) தான் செய்திருந்த உடன்படிக்கைகளுக்காகவும், அதோடுகூட வலிய தாக்கும் ஜப்பானுடன், மோசமான பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு சில மாதங்களுக்குப் பின்புதானே, மார்ச் 1942-ல், அரசியல் செயல்திறமுள்ள பிரதிநிதிகளை அவர் பரிமாற்றம் செய்துகொண்டதற்காகவும், சாட்சிகள் அவரை கடுமையாகக் கண்டித்துரைத்தனர். யாக்கோபின் இந்த எச்சரிக்கைக்குச் செவிகொடுக்க போப் தவறினார்: “விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.”—யாக்கோபு 4:4.
8. எவ்வாறு ரோமன் கத்தோலிக்க சர்ச் இன்று அரசியலில் உட்படுகிறது?
8 இன்று இருக்கும் நிலைமை என்ன? போப்பாதிக்கம் இன்னும் அரசியலில் உட்படுகிறது, அதன் மதகுருக்களின் மூலமாகவும் அதன் பொதுநிலை மக்களான பிரதிநிதிகளின் மூலமாகவும் அவ்வாறு உட்படுகிறது. உலக சமாதானத்துக்கு போலி ஏதுவாக, மனிதன் உண்டாக்கின ஐக்கிய நாட்டு சங்கத்தில் சொற்பொழிவாற்றுவோராய் அண்மையில் போப்புகள் அதன்பேரில் தங்கள் நற்பிரியத்தை உறுதிசெய்திருக்கின்றனர். புதிய ஏழு அரசியல் நிபுணர்களான, “போப்பின் நகரத்துக்கு அரசியல் தூதர்கள்” தங்கள் நற்சான்று பத்திரங்களை ‘புனித பிதாவிடம்’ அளித்தனர் என்று அதிகாரப்பூர்வ வத்திக்கன் செய்தித்தாளாகிய லாஸர்வேடோரா ரோமேனோ-வின் சமீப வெளியீடு ஒன்று அறிவித்தது. இயேசுவும் பேதுருவும் அத்தகைய அரசியல் செயலாட்சிக்குரிய பரிமாற்றங்களில் உட்படுவதை நாம் கற்பனை செய்யக்கூடுமா? யூதர்களால் தாம் அரசராக்கப்படுவதை இயேசு மறுத்து, தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல என்று சொன்னார்.—யோவான் 6:15; 18:36.
9. புராட்டஸ்டண்ட் மதங்கள் தங்களுக்கு நிகரான கத்தோலிக்க மதங்களைப் பார்க்கிலும் மேம்பட்டவையாக இல்லை என்று நாம் ஏன் சொல்லலாம்?
9 புராட்டஸ்டண்ட் தலைவர்கள் தங்களுக்கு நிகரான கத்தோலிக்கத் தலைவர்களைப் பார்க்கிலும் மேம்பட்டிருக்கிறார்களா? ஐக்கிய மாகாணங்களில், மாறுதல் விரும்பாத புராட்டஸ்டண்ட் மதங்கள் பலவும் மார்மன்களும், குறிப்பிட்ட சில அரசியல் இணைப்புடையவையாகக் காட்டப்படுகின்றன. கிறிஸ்தவ கூட்டிணைவு அமைப்பானது, அ.ஐ.மா.-வின் அரசியலில் மிக ஆழ்ந்து உட்பட்டிருக்கிறது. மற்ற புராட்டஸ்டண்ட் குருமார் வேறு அரசியல் நிலையோடு தங்களைத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள செய்கின்றனர். பார்லிமென்டின் பிரிட்டிஷ் உறுப்பினராகிய வட அயர்லாந்தின் ஈயன் பாய்ஸ்லி இருப்பதுபோல், பேட் ராபர்ட்ஸனையும் ஜெஸியையும் போன்ற ஐக்கிய மாகாணங்களின் அரசியல் பேச்சாளர்கள் “ரெவரென்டுகளாக” இருக்கிறார்கள் அல்லது இருந்தார்கள் என்பது சில சமயங்களில் மறந்துவிடப்படுகிறது. தங்கள் நோக்குநிலைகளை நியாயமென எப்போதும் அவர்கள் எவ்வாறு காட்டுகிறார்கள்?—அப்போஸ்தலர் 10:34, 35; கலாத்தியர் 2:6.
10. 1944-ல் என்ன தெளிவான விவர அறிக்கை செய்யப்பட்டது?
10 1914-ல், மதம் சுழல்காற்றை அறுவடை செய்கிறது என்ற சிறு புத்தகத்தில் கேட்கப்பட்ட கேள்வியையே இப்போதும் நாங்கள் கேட்கிறோம்: “இந்த உலகத்தில் அனுகூலத்தையும் அதனிடமிருந்து பாதுகாப்பையும் நாடி, உலக வல்லரசுகளுடன் உடன்படிக்கைகளுக்கு உட்பட்டு, இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களுக்குள் தன்னைச் சுறுசுறுப்பாய் நுழைத்துக்கொண்டிருக்கிற எந்த அமைப்பும் . . . கடவுளுடைய சர்ச்சாக அல்லது பூமியில் கிறிஸ்து இயேசுவைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க முடியுமா? . . . இந்த உலகத்தின் ராஜ்யங்களோடு பொதுவான இலக்குகளில் பங்குகொள்கிற எல்லா மதத்தினரும், கிறிஸ்து இயேசுவின் மூலமான கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது என்பது தெளிவாயிருக்கிறது.”
பொய் மதத்தின் காயீனைப்போன்ற மனப்பான்மை
11. எவ்வாறு பொய் மதம் காயீனின் முன்மாதிரியைப் பின்பற்றினது?
11 சரித்திரம் முழுவதிலும், பொய் மதமானது, தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலைசெய்த, உடன்பிறப்புக் கொலைபாதகனாகிய காயீனின் மனப்பான்மையையே காட்டியிருக்கிறது. “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.” தன் சகோதரனின் தூய்மையானதும் ஏற்கத்தக்கதுமான, கடவுள் வணக்கத்தைச் சகிக்க முடியாதவனாக, காயீன்—தங்கள் செயலுக்கு நியாயமான விளக்கம் தர முடியாதவர்களின் கடைசி வழிமுறையான—வன்முறையை மேற்கொண்டான்.—1 யோவான் 3:10-12.
12. போர்களிலும் சச்சரவுகளிலும் மதத்தின் ஈடுபாட்டுக்கு என்ன அத்தாட்சி உள்ளது?
12 பொய் மதத்தைப் பற்றிய இந்தக் குற்றச்சாட்டை உண்மை நிகழ்ச்சிகள் ஆதரிக்கின்றனவா? பிரசங்கிகள் போருக்கெழுகிறார்கள் என்ற ஆங்கில புத்தகத்தில் நூலாசிரியர் இவ்வாறு சொன்னார்: “நாகரிகங்களின் சரித்திரத்தில், . . . இரண்டு வல்லமைகள் இணை ஒப்பந்தத்தில் எப்போதும் ஒன்றுசேர்ந்திருக்கின்றன. அவை போரும் மதமுமே. பெரும் உலக மதங்கள் எல்லாவற்றிலும், . . . [போரில், கிறிஸ்தவமண்டலத்தைப் பார்க்கிலும்] அதிகமாய் ஈடுபட்டது வேறு எதுவுமில்லை.” சில ஆண்டுகளுக்கு முன்பாக, கனடாவில் வான்கூவர் செய்தித்தாளாகிய தி சன் பின்வருமாறு கூறினது: “கொடியை [தேசியத்தை] சர்ச் பின்பற்றுவதானது, ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட மதம் முழுவதன் பலவீனமாக இருக்கலாம். . . . என்றாகிலும் ஒவ்வொரு பக்கத்திலும் கடவுள் இருப்பதாக உரிமை கொண்டாடாமல் நடத்தப்பட்ட போர் உண்டா?” நீங்கள் இருக்குமிடத்திலுள்ள ஏதாவது சர்ச்சில் இதன் நிரூபணத்தை நீங்கள் கண்டிருக்கலாம். அடிக்கடி, தேசிய கொடிகள் பீடத்தை அலங்கரிக்கின்றன. எந்தக் கொடியின்கீழ் இயேசு அணிவகுத்து செல்வாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல,” என்ற அவருடைய வார்த்தைகள் நூற்றாண்டுகளினூடே எதிரொலித்து வந்திருக்கின்றன!—யோவான் 18:36.
13. (அ) ஆப்பிரிக்காவில் பொய் மதம் எவ்வாறு தவறியிருக்கிறது? (ஆ) கிறிஸ்தவத்தை கண்டுகொள்ள செய்யும் என்ன அடையாளத்தை இயேசு கொடுத்தார்?
13 உண்மையான சகோதர அன்பின் சத்தியத்தை, கிறிஸ்தவமண்டலத்தின் மதங்கள் அவற்றின் மந்தைகளுக்குக் கற்பித்திருக்கவில்லை. மாறாக, தேசியம், குலம், மற்றும் இனவேறுபாடுகள் தங்கள் உறுப்பினரைப் பிரித்து வைப்பதற்கு அவை அனுமதித்திருக்கின்றன. ருவாண்டாவில் இன அழிவை உண்டாக்குவதில் விளைந்த பிரிவினைகளில், கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் மதகுருக்கள் ஒரு பங்குகொண்டு செல்வாக்கு செலுத்தினரென்று அறிக்கைகள் காட்டுகின்றன. தி நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அறிக்கை செய்தது: “ருவாண்டாவில் நடந்த படுகொலைகள், சர்ச் தலைவர்களால் தாங்கள் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டதாக அங்குள்ள ரோமன் கத்தோலிக்கர் பலர் உணரும்படி செய்வித்திருக்கின்றன. ஹூட்டுக்கும் டூட்ஸிக்கும் இடையில் இனவேறுபாட்டு முறையில் சர்ச் அடிக்கடி பிரிவுற்றிருந்தது.” மேரினால் பாதிரி பின்வருமாறு சொன்னதாக அதே செய்தித் தாள் மேற்கோளாகக் குறிப்பிட்டது: “ருவாண்டாவில் 1994-ன்போது சர்ச் வெறுக்கத்தக்க முறையில் தவறினது. ருவாண்டாவைச் சேர்ந்த பலர் ஒரு கருத்தில் சர்ச்சை ஒதுக்கித் தள்ளிவிட்டனர். எவ்வகையிலும் அது இனிமேலும் நம்பத்தக்கதாக இல்லை.” இயேசுவின் வார்த்தைகளுக்கு எவ்வளவு நேர்மாறாக உள்ளது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
14. நடத்தைக்குரிய என்ன பதிவை கிறிஸ்தவமல்லாத பெரும் மதங்கள் அளிக்கின்றன?
14 மகா பாபிலோனின் மற்ற பெரும் மதங்களும் மேம்பட்ட முன்மாதிரியை வைக்கவில்லை. இந்தியா இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டபோது 1947-ல் நடந்த பயங்கர படுகொலைகளானவை, அங்குள்ள பெரும் மதங்கள் சகிப்புத்தன்மையை கொண்டிருக்கவில்லை என்று காட்டுகின்றன. இந்தியாவில் இன வன்முறை தொடர்ந்திருப்பதானது, மக்கள் பெரும்பான்மையர் மாறவில்லை என்பதை உறுதிசெய்கிறது. இண்டியா டுடே பத்திரிகை இவ்வாறு முடிவு செய்தது ஆச்சரியமாயில்லை: “மதத்தினுடைய பெயரிலேயே மிக பயங்கர குற்றச் செயல்கள் நடப்பிக்கப்பட்டிருக்கின்றன. . . . பேரளவான வன்முறையை அது ஏவி விடுகிறது, மிக அழிவுக்கேதுவான ஒரு வல்லமையாக உள்ளது.”
“வியப்புண்டாக்கும் முரண்படும் மெய்ம்மை”
15. மேற்கத்திய உலகத்தில் மதத்தின் நிலைமை என்ன?
15 மெய்ப்பித்துக் காட்டுவதற்கும், உண்மையான பண்பு மதிப்புகளை மனதில் பதியவைப்பதற்கும், இவ்வுலகச் சார்பானவை உள்நுழைவதைத் தடுப்பதற்கும் மதம் தவறியிருப்பதை உலகப்பிரகாரமான கருத்துரையாளர்களுங்கூட கவனித்திருக்கின்றனர். கட்டுக்கடங்காமல் போயிற்று (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில், அ.ஐ.மா. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸூபிக்னெஃப் பிரேஷின்ஸ்கே இவ்வாறு எழுதினார்: “‘கடவுள் மரித்துவிட்டார்’ என்ற முன்மொழிக்கு மிகப் பெரும் வெற்றி, மார்க்கிஸ்ட்டுகள் பெரும்பான்மையரைக் கொண்ட நாடுகளில் அல்ல . . . ஆனால், ஒழுக்க அக்கறையின்மையை நாகரிக வகையில் வளர்த்துள்ள மேற்கத்திய முற்போக்கு பொதுக் குடியாட்சி சமுதாயங்களில்தானே ஏற்பட்டதானது வியப்புண்டாக்கும் முரண்படும் மெய்ம்மையாக உள்ளது. பிற்பட்டதில், உண்மை என்னவெனில், மதம் முக்கிய சமுதாய வலிமையாக இருந்தது நின்றுபோயிற்று.” அவர் மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “ஐரோப்பிய நாகரிக பண்பாட்டின்மீது மதத்தின் பிடி பேரளவில் குறைந்துவிட்டது, இன்று ஐரோப்பா—அமெரிக்காவையும் பார்க்கிலும் அதிகமாக—முக்கியமாய் உலகப்பிரகாரமான சமுதாயமாக உள்ளது.”
16, 17. (அ) இயேசு, தம்முடைய நாளின் மதகுருமாரைப் பற்றி கொடுத்த அறிவுரை என்ன? (ஆ) கனியைப் பற்றிய என்ன நல்ல நியமத்தை இயேசு கூறினார்?
16 இயேசு, தம்முடைய நாளின் யூத மதகுருமாரைப் பற்றி என்ன சொன்னார்? “வேதபாரகரும் பரிசேயரும் [நியாயப்பிரமாணமாகிய டோராவை கற்பிப்பதற்கு] மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில் அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” ஆம், மதப் பாசாங்குத்தனம் புதிய ஒன்றல்ல.—மத்தேயு 23:2, 3.
17 பொய் மதத்தின் கனி அதைக் கண்டனம் செய்கிறது. இயேசு கொடுத்த நியமம் மிகவும் பொருத்தமாக உள்ளது: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்; நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”—மத்தேயு 7:17-20.
18. கிறிஸ்தவமண்டலம் தன் மதங்களை எவ்வாறு சுத்தமாக வைத்திருந்திருக்க வேண்டும்?
18 கிறிஸ்தவமண்டலத்தின் மதங்கள், அவற்றின் உறுப்பினரென உரிமைபாராட்டுவோர் செய்யும் சட்டமீறுதலான எல்லா செயல்களுக்கும் சபைக்குப் புறம்பாக்குதலின் அல்லது சபையிலிருந்து தள்ளி வைத்தலின் கிறிஸ்தவ சிட்சையை மனச்சாட்சியுடன் பொருத்திப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? மனந்திரும்பாத எல்லா பொய்யர்களுக்கும், வேசிக்கள்ளருக்கும், விபசாரக்காரருக்கும், ஓரினப் புணர்ச்சிக்காரருக்கும், மோசடி செய்வோருக்கும், பெரும் குற்றவாளிகளுக்கும், போதைப்பொருள் விற்பனைக்காரருக்கும் துர்ப்பழக்கத்தினருக்கும், திட்டமிட்டு குற்றச்செயல் நடப்பிப்போரின் உறுப்பினருக்கும் என்ன நடக்கும்? சந்தேகமில்லாமல், கிறிஸ்தவமண்டலத்தின் ஊழலான கனி, கடவுளால் அது அழிக்கப்படுவதற்கு மாத்திரமே அதைத் தகுதியாக்குகிறது.—1 கொரிந்தியர் 5:9-13; 2 யோவான் 10, 11.
19. மத தலைமைவகிப்பைக் குறித்த எவை வெளியிடப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டன?
19 ஐக்கிய மாகாணங்களில் பிரெஸ்பிட்டேரியன் சர்ச்சுக்கான பொது கூட்டத்தினர் இவ்வாறு ஒப்புக்கொண்டனர்: “அதன் அளவுகளிலும் சிக்கல்களிலும் பயங்கரமான ஒரு நெருக்கடி கட்டத்தை நாம் எதிர்ப்படுகிறோம். . . . தேசமுழுவதிலும் 10-க்கும் 23-க்கும் இடைப்பட்ட சதவீதமான குருமார் பால்சம்பந்த ஆபாசமான நடத்தையில் அல்லது சபையோர், வாடிக்கையாளர், வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள், முதலியோருடன் பாலுறவில் ஈடுபட்டிருக்கின்றனர்.” ஐ.மா. வாணிகர் ஒருவர் இந்தக் குறிப்பைச் சுருக்கமாக நன்றாய்த் தொகுத்துக் கூறினார்: “மத ஸ்தாபனங்கள் தங்கள் சரித்திர பண்பு மதிப்புகளைக் கடத்துவதற்குத் தவறிவிட்டிருக்கின்றன, மேலும் பல சமயங்களில், பிரச்சினையின் பாகமாகிவிட்டிருக்கின்றன.”
20, 21. (அ) பாசாங்குத்தனத்தை இயேசுவும் பவுலும் எவ்வாறு வெளிப்படையாகக் கண்டனம் செய்தனர்? (ஆ) இன்னும் பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகள் யாவை?
20 மத பாசாங்குத்தனத்தை இயேசு வெளிப்படையாகக் கண்டனம் செய்தது அவருடைய காலத்தில் இருந்ததுபோல் இன்றும் உண்மையாகப் பொருந்துகிறது: “மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.” (மத்தேயு 15:7-9) தீத்துவுக்கு எழுதின பவுலின் வார்த்தைகளுங்கூட நம்முடைய தற்கால நிலைமையை விவரிக்கின்றன: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.”—தீத்து 1:16.
21 ஒரு குருடனுக்கு குருடன் வழிகாட்டினால், இருவரும் குழிக்குள் விழுவார்கள் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 15:14) மகா பாபிலோனோடு முடிவடைய நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் கண்கள் திறந்திருக்க, நேரான பாதைகளில் நடந்து, யெகோவாவின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ நீங்கள் விரும்புகிறீர்களா? இவை இப்போது நாம் எதிர்ப்படும் கேள்விகள்: தேவ கனிகளைக் கொடுக்கிற மதம் ஏதாவது இருந்தால், அது எது? கடவுளுக்கு ஏற்கத்தக்கதாயுள்ள உண்மையான வணக்கத்தை நாம் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்?—சங்கீதம் 119:105.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் 1944-ல் பிரசுரிக்கப்பட்டது; இப்போது அச்சடிப்பில் இல்லை.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ கடவுளுக்கு முன்பாக மகா பாபிலோனின் தற்போதைய நிலைநிற்கை என்ன?
◻ என்ன ஆதாரத்தின்பேரில் பொய் மதம் குற்றம் சாட்டப்படுகிறது?
◻ எவ்வாறு பொய் மதம் காயீனின் மனப்பான்மையை காட்டியிருக்கிறது?
◻ எந்த மதத்தையும் நியாயந்தீர்ப்பதற்கான என்ன நியமத்தை இயேசு கூறினார்?
[பக்கம் 13-ன் படம்]
சரித்திரம் முழுவதிலும் மதத் தலைவர்கள் அரசியலில் தலையிட்டிருக்கின்றனர்
[பக்கம் 15-ன் படங்கள்]
இந்த மதகுருமார் வல்லமைவாய்ந்த அரசியல் தலைவர்களாகவும் இருந்தனர்
கார்டினல் மஸாரின்
கார்டினல் ரிச்சிலியு
கார்டினல் உல்ஸி
[படத்திற்கான நன்றி]
Cardinal Mazarin and Cardinal Richelieu: From the book Ridpath’s History of the World (Vol. VI and Vol. V respectively). Cardinal Wolsey: From the book The History of Protestantism (Vol. I).