வன்முறைக்கு நிரந்தர முடிவு—எப்படி?
வன்முறை என்னும் அலையைக் கட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய மாகாணங்களிலுள்ள எண்ணற்ற நகரங்கள் ஒரு புதுமையான யுக்தியைக் கையாண்டன, அதன்படி துப்பாக்கிகளை யார் ஒப்படைத்தாலும் அவர்களுக்குப் பணமோ பொருளோ வெகுமானமாக வழங்கப்பட்டது. அதன் விளைவு? உதாரணமாக செ. லூயி நகரம் $3,41,000 செலவில் 85,000 துப்பாக்கிகளைக் கைப்பற்றியது. நியூ யார்க் நகரத்திலும் அதேவிதமான திட்டம் ஆயிரத்திற்கும் மேலான ஆயுதங்களைச் சிக்கவைத்தது.
இவை அனைத்தும் வன்முறையின்மீது எத்தகைய பாதிப்பைக் கொண்டிருந்தன? வருந்தத்தக்க விதத்தில் பாதிப்பு மிகக் குறைவே. தொடர்ந்துவந்த வருடத்தில் செ. லூயியில் அதுவரை இல்லாத அளவிற்கு, துப்பாக்கியால் நடந்த மனித கொலைகள் உச்சநிலையை எட்டின. நியூ யார்க் நகரத்தில் கணக்கிடப்பட்ட 20 லட்ச துப்பாக்கிகள் சாதாரண மக்களிடத்தில் இன்னமும் உள்ளன. ஐக்கிய மாகாணங்களில் 20 கோடி துப்பாக்கிகள் தனியார் கைவசம் உள்ளன, இவை கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஒன்று என்ற கணக்கில் உள்ளன. மற்ற தேசங்களிலும் துப்பாக்கி உபயோகிக்கப்படும் வன்முறை அச்சுறுத்தும் விகிதத்தில் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. பிரிட்டனில், “1983-க்கும் 1993-க்கும் இடையே போலீசாரால் பதிவுசெய்யப்பட்ட குற்றச்செயல்களில், துப்பாக்கி உபயோகிக்கப்பட்டவை 14,000, இது கிட்டத்தட்ட இரண்டுமடங்கு,” என்று தி இகானமிஸ்ட் சொல்கிறது. இந்த நாட்டில் மனித கொலையின் விகிதம் ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும், சட்டவிரோதமான ஆயுதங்கள் சுமார் பத்து லட்சம் உள்ளன.
நிச்சயமாகவே, இந்த அச்சம் தரும் எண்ணிக்கையில் எவ்வளவு குறைத்தாலும் அது முன்னேற்றத்தின் ஒரு படியாக இருக்கிறது. ஆயினும், மேற்கூறப்பட்ட அத்தகைய ஏற்பாடுகள் நிச்சயம் வன்முறையின் மூலகாரணிகளைச் சென்றெட்டவில்லை. அந்தக் காரணிகள் யாவை? பல மூலக்காரணிகள் குறிப்பிட்டு காட்டப்படுகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கைதான் அடிப்படையாக இருக்கின்றன. குடும்பம் ஸ்திரமின்றி இருப்பதும் ஒழுக்கநெறி போதனையின்றி இருப்பதும் பல இளைஞர்கள் சொந்தம்கொண்டாடப்படும் ஓர் உணர்வைப் பெறுவதற்காகவே கும்பல்களில் சேர தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும் லாபத்திற்கான கவர்ச்சி பலரை வன்முறையைத் திணிப்பதற்குத் தூண்டுகிறது. அநீதியானது, வன்முறைகளைக்கொண்டு காரியங்களுக்குத் தீர்வை நாட மற்றவர்களை உந்துவிக்கிறது. நாட்டிற்காக, இனத்திற்காக அல்லது வாழ்க்கை அந்தஸ்துக்காகக் கொள்ளும் பெருமையானது மக்களை மற்றவர்களின் துன்பத்தை அசட்டைசெய்ய வைக்கிறது. இவை மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கும் காரணிகளாக இருப்பதால் எளிய தீர்வுகள் கிடையாது.
என்ன செய்ய முடியும்?
இன்னும் அதிகமான போலீசார், கடுங்காவல் தண்டனைகள், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைக் கட்டுப்படுத்துதல், மரண தண்டனை ஆகிய அனைத்தும் வன்முறையையும் குற்றச்செயலையும் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட மற்றும் முயன்று பார்க்கப்பட்ட வழிவகைகள். இவை அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் வெற்றியைக் கொண்டுவந்தன, ஆனாலும் கவலைக்குரிய உண்மையானது வன்முறை இன்னமும் நம் மத்தியில் உள்ளது. ஏன்? ஏனென்றால் இந்த ஏற்பாடுகள் வெறுமனே அறிகுறிகளை மாத்திரம் சரிசெய்கின்றன.
மறுபட்சத்தில், கல்வியே வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சாதனம் என்பதாகப் பல நிபுணர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கருத்து வலிமையாக இருந்தாலும், வன்முறையானது கல்வி வாய்ப்புகள் குறைவாக உள்ள தேசங்களில் மாத்திரம் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பார்க்கப்போனால், மிக அதிக வன்முறை நிறைந்த தேசங்கள் சிலவற்றில், உயர்வான கல்வி தரத்தை உடைய தேசங்களும் உள்ளடங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. இதிலிருந்து வெறும் கல்வி மாத்திரம் அல்ல ஆனால் கல்வியின் சரியான வகை தேவையாக இருக்கிறது என்பதைக் காண்பது ஒன்றும் கடினமல்ல. எது அந்த வகை? சமாதானத்தை விரும்புகிறவர்களாகவும் நேர்மையான ஆட்களாகவும் இருக்கவேண்டும் என்று மக்களுக்குப் போதிக்க வல்ல ஒருவர் இருக்கிறாரா?
‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.’ (ஏசாயா 48:17, 18) யெகோவா எவ்வாறு சமாதானத்தை நேசிக்கிறவர்களாகவும் நீதியுள்ளவர்களாகவும் இருக்க மக்களுக்குப் போதிக்கிறார்? பிரதானமாகத் தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமே.
கடவுளுடைய வார்த்தையின் வல்லமை
நிச்சயமாகவே, பைபிள் வெறுமனே காலத்திற்கு ஒவ்வாத, சம்பந்தமில்லாத கட்டுக்கதைகளின் மற்றும் முதுமொழிகளின் தொகுப்பு அல்ல. அது மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரிடமிருந்து நியமங்களையும் எண்ணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. எந்த ஒரு நபரைக்காட்டிலும் அவரே தம்முடைய உயரிய நோக்குநிலையிலிருந்து மனிதனின் சிக்கலான குணயியல்புகளை நன்கு அறிந்துள்ளார். “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது,” என்று யெகோவா தேவன் கூறுகிறார்.—ஏசாயா 55:9.
இதன் காரணமாக அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு சான்றுபகருகிறார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) ஆம், ஒரு மனிதனின் இருதயத்திற்குள் ஊடுருவி, அதைத் தொட்டு அவருடைய யோசனையையும் நடத்தையையும் மாற்றக்கூடிய வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிறது. இதுவல்லவோ இன்று மக்களின் வன்முறையான வழிகளை மாற்றுவதற்குத் தேவையாக இருப்பது?
கடவுளுடைய வார்த்தை உண்மையிலேயே வாழ்க்கையை மேன்மையானதாக உருமாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறது என்பதற்கு, 230-க்கும் அதிகமான தேசங்களிலுள்ள சுமார் 50 லட்ச எண்ணிக்கையான யெகோவாவின் சாட்சிகளே காணக்கூடிய சான்றாக இருக்கிறார்கள். ஒவ்வொரு தேசத்திலிருந்தும் மொழியிலிருந்தும் இனத்திலிருந்தும் வந்த மக்கள் அவர்கள் மத்தியில் இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு அந்தஸ்துகளிலிருந்தும் சமுதாய பின்னணியிலிருந்தும் வந்தவர்கள். அவர்களில் சிலர், ஒருகாலத்தில் வன்முறையான மற்றும் தொல்லை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். ஆனால், இத்தகைய காரணிகள் அவர்கள் மத்தியில் வன்மம், போட்டி, வேற்றுமை, பகைமை ஆகியவற்றை வளர்க்க அனுமதிப்பதற்கு மாறாக, இத்தகைய முட்டுக்கட்டைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றிருக்கின்றனர்; சமாதானத்தை நேசிப்பவர்களாக மாறிவிட்டனர், உலகம் முழுவதிலும் ஒன்றுபட்டிருக்கின்றனர். எது இதைச் சாத்தியமாக்கியது?
ஒரு இயக்கம் வன்முறையை ஒழிக்கிறது
கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அவருடைய நோக்கத்தைப்பற்றிய திருத்தமான அறிவை மற்றவர்கள் பெற்றுக்கொள்ள உதவுவதில் யெகோவாவின் சாட்சிகள் தங்களைச் சமர்ப்பித்துள்ளனர். யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்ளவும் அவரால் போதிக்கப்படவும் விரும்புவோரை அவர்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் தேடுகின்றனர். அவர்களுடைய முயற்சிகள் பலனளித்துக்கொண்டிருக்கின்றன. இந்தக் கல்வி இயக்கத்தின் பயனாக மகத்தான தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
சுமார் 2,700 ஆண்டுகளுக்கு முன் ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுத தூண்டப்பட்டார்: “கடைசிநாட்களில் . . . திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”—ஏசாயா 2:2, 3.
யெகோவாவினால் போதிக்கப்படுவதும் அவருடைய வழிகளில் நடப்பதும் மக்களின் வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. அத்தகைய மாற்றங்களில் ஒன்றை அதே தீர்க்கதரிசனம் சொல்கிறது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) பலர் இந்த வசனத்தைப் படித்திருப்பார்கள். உண்மையில், இந்த வசனம் நியூ யார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிளாஸாவின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை எதை அடைய விரும்புகிறது என்பதற்கு ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கிறது, ஆனால் அதை அடைய தவறிவிட்டிருக்கிறது. மனிதனால் நிறுவப்பட்ட எந்த அரசியல் அமைப்பாலும் போரையும் வன்முறையையும் ஒழிப்பதை சாதிக்க முடியாது. இது யெகோவா தேவன் மாத்திரம் செய்யவல்ல ஒரு காரியமாகும். அதை அவர் எவ்வாறு சாதிப்பார்?
தெரிந்தவிதமாகவே, ‘கர்த்தரின் பர்வதத்துக்குப் போவதற்கும்,’ ‘அவரின் வழிகளில் போதிக்கப்படுவதற்கும்,’ ‘அவரின் பாதைகளில் நடப்பதற்கும்,’ கொடுக்கப்படும் அழைப்புக்கு அனைவரும் பிரதிபலிப்பதில்லை; அல்லது ‘அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பதற்கு’ மனமுள்ளவர்களாக இல்லை. அப்படிப்பட்டவர்களை யெகோவா என்ன செய்வார்? அவர் என்றென்றைக்குமாக சந்தர்ப்பம் என்னும் கதவை திறந்துவைத்துக்கொண்டு அல்லது அவர்கள் மாறுவதற்காகக் காத்துக்கொண்டு இருக்கப்போவதில்லை. வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தங்களுடைய வன்முறையான வழிகளிலே நிலைத்திருப்பவர்களையும்கூட யெகோவா முடிவுக்குக் கொண்டுவருவார்.
ஒரு முக்கிய பாடம்
யெகோவா தேவன் நோவாவின் நாளில் செய்த காரியம் இன்று நமக்கு ஓர் எச்சரிக்கைப் பாடத்தை அளிக்கிறது. அப்போது எத்தகைய ஓர் உலகம் இருந்தது என்பதை பைபிள் பதிவு காட்டுகிறது: “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.” இதன் காரணமாக, கடவுள் நோவாவுக்கு அறிவித்தார்: “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.”—ஆதியாகமம் 6:11, 13.
ஒரு முக்கியமான குறிப்பை நாம் கவனிக்கவேண்டும். அந்தச் சந்ததியின் மீது அழிவைக் கொண்டுவந்தபோது, கடவுள் நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றினார். ஏன்? பைபிள் விடையளிக்கிறது: “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.” (ஆதியாகமம் 6:9; 7:1) அந்தக் காலத்தில் வாழ்ந்தவருள் ஒவ்வொருவரும் கொடூரமான நபராக இருந்திருக்கவேண்டிய அவசியமில்லை, இருந்தும் நோவாவும் அவருடைய குடும்பமும் ‘தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள்.’ அதன் காரணமாகத்தான் அந்த வன்முறையான உலகத்திற்கு அழிவு கொண்டுவரப்படுகையில் அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள்.
மறுபடியுமாகப் பூமியானது ‘கொடுமையினால் நிறைந்திருப்பதை’ நாம் காண்கையில், இது கடவுளின் கவனத்திலிருந்து தப்பாது என்று நிச்சயமாக இருக்கலாம். அவர் நோவாவின் நாளில் செய்ததைப்போலவே, வெகுவிரைவில் வன்முறைக்கு எதிராக நடவடிக்கையெடுத்து அதை—நிரந்தரமாக—ஒழித்திடுவார். ஆனால், பாதுகாப்பிற்கான ஒரு வழியை ‘தேவனோடே சஞ்சரிக்க’ இப்பொழுது கற்றுக்கொண்டிருப்போருக்கும், சமாதானத்திற்காக அவருடைய மாபெரும் கல்வி புகட்டும் இயக்கத்திற்கு பிரதிபலிப்போருக்கும்கூட அவர் ஏற்பாடு செய்வார்.
சங்கீதக்காரனின் மூலம் இந்த உறுதியை யெகோவா அளிக்கிறார்: “இன்னுங் கொஞ்சநேரம்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
யெகோவாவின் சாட்சிகள் உங்களுடன் பைபிளை படிப்பதற்கு சந்தோஷப்படுவார்கள், அப்போது நீங்களும் இவ்வாறு கூறுபவர்களுடன் சேர்ந்துகொள்ள முடியும்: “நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.” (ஏசாயா 2:3) இவ்விதம் செய்வதன்மூலம், அனைத்து பொல்லாப்புக்கும் வன்முறைக்கும் நேரவிருக்கும் முடிவைக் காண்போரின் மத்தியில் நீங்களும் இருப்பீர்கள். நீங்கள் ‘மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பீர்கள்.’
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
Reuters/Bettmann