நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்களா?
ஜானிக்கு பத்து வயதிருக்கும், அப்போது, பொருட்காட்சி ஒன்றில் அவனை இடைமறித்து, “சிறுவனே, இயேசு கிறிஸ்துவை உனது கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறாயா?” என்று ஒரு மனிதர் கேட்டார். எப்போதும் இயேசுவில் நம்பிக்கை வைத்திருந்த ஜானிக்கு அந்தக் கேள்வி வினோதமாக ஒலித்தது. ஆகவே அவன் பதிலளித்தான், “நிச்சயமாகவே, நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.” “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவுக்காக மற்றொரு ஆத்துமா இரட்சிக்கப்பட்டது!” என்று அந்த மனிதர் பலர் கேட்குமாறு கூச்சலிட்டார்.
இரட்சிப்பு என்பது உண்மையிலேயே அவ்வளவு சுலபமா? ஜானி அந்த வார்த்தைகளைச் சொன்ன தருணத்திலிருந்தே “இரட்சிக்கப்பட்டானா,” தன்னுடைய எஞ்சிய வாழ்நாளில் என்ன செய்யப்போகிறபோதிலும்? உண்மையுள்ள ஆட்கள் பலர் ஆம் என்றே பதிலளிப்பர். சில மதத் துண்டுப்பிரதிகள், உங்களால் நினைவுபடுத்தி பார்ப்பதற்காக நீங்கள் “இரட்சிக்கப்பட்ட” தேதியைக் குறித்துவைக்குமாறு சொல்கின்றன.
“பெயரளவாக கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அந்தத் தருணத்திலேயே . . . ஒருவர் சென்றடையும் இடம் நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது,” என்று ஒரு பாதிரியார் எழுதினார். ஒரே முறை செய்யப்படும், ஒரு ஒற்றை “விசுவாச செயல்” மீது இரட்சிப்பு சார்ந்திருக்கிறது, “விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பதில் அல்ல,” என்று பைபிள் சொல்வதாக அவர் விவாதித்தார். மற்றொரு மத எழுத்தாளர் எழுதினார்: “இது முடிந்துவிட்ட ஒரு காரியம். இது உங்களுக்காக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது . . . உங்களுடைய ‘போராட்டம் முற்றுப்பெற்றுவிட்டிருக்கிறது.’ உங்களுடைய ‘பாவம் நீக்கப்பட்டுவிட்டிருக்கிறது.’” ஆனால், இந்த ஒரே முறை செய்யப்படும் விசுவாச செயல் மெய் என்று உறுதியாக நம்பும் ஆட்கள்கூட இதில் ஒரு பிரச்சினை இருப்பதை காணலாம். “இரட்சிக்கப்பட்டவர்கள்” என்று சொல்லப்பட்ட ஆட்கள் பலர், வாழவேண்டும் என்று பைபிள் சொல்கிற வழியில் வாழாதிருப்பது வெளியரங்கமாய் இருக்கிறது. பொதுவாகவே கொடுக்கப்படும் விளக்கமானது, ஒருவேளை அவர்கள் கிறிஸ்துவை உண்மையாக “ஏற்றுக்கொள்ளவில்லை” என்பதே.
ஆகவே, இயேசுவை “ஏற்றுக்கொள்வது” என்றால் உண்மையில் என்ன அர்த்தம்? இது, ஒரே முறை செய்யப்படும் விசுவாச செயலா அல்லது தொடரும் வாழ்க்கை முறையா? நம்மை செயல்பட தூண்டும் அளவிற்கு நமது நம்பிக்கை போதுமான வலிமையுள்ளதாக இருக்குமா? இயேசுவைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பை தவிர்த்து, அவருடைய பலியின் நன்மைகளை நம்மால் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியுமா?
பல ஆட்கள் ஆசீர்வாதங்களை விரும்புகிறார்கள், ஆனால் இயேசுவைப் பின்பற்றி, அவருக்குக் கீழ்ப்படிய வேண்டிய பொறுப்பை விரும்புகிறதில்லை. பார்க்கப்போனால், “கீழ்ப்படி” என்ற வார்தை அவர்களை கலவரமடையச் செய்கிறது. ஆயினும் இயேசு, “என்னைப் பின்பற்றி வா,” என்று சொன்னார். (லூக்கா 18:18-23) பைபிள் குறிப்பிடுகிறது: ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் நீதியுள்ள . . . நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.’—2 தெசலோனிக்கேயர் 1:7, 10; மத்தேயு 10:38; 16:24.
இரட்சிப்பைப்பற்றி என்ன போதிக்கப்பட்டிருக்கிறதோ அதன் பேரில் பைபிள் சொல்லும் பல காரியங்கள் கருத்தார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் பொருளின் பேரில் பைபிள் என்னதான் சொல்கிறது என்று சரிபார்க்க நீங்கள் விரும்பினால், பின்வரும் பக்கங்கள் குறிப்பாக அக்கறையூட்டுபவையாக இருக்கக் காண்பீர்கள். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் இந்த முக்கியமான காரியத்தைப்பற்றி என்ன போதித்தார்கள் என்பதைக் காண, உங்கள் பைபிளைத் திறந்து, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசியுங்கள்.