“கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”
உல்ஃப் ஹெல்கஸன் சொன்னபடி
ஜூலை 1983-ல், எனக்கு மேலாக சாய்ந்துகொண்டிருந்த மருத்துவர்கள் வியந்துகூறினர்: “அவர் விழித்திருக்கிறார்!” என்னுடைய முதுகு தண்டுவடத்திலிருந்து 12 சென்டிமீட்டர் நீளமான கட்டி ஒன்று, சிக்கலான 15-மணிநேர அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டிருந்தது. நான் முற்றிலும் செயலற்றவனானேன்.
ஒருசில நாட்கள் கழித்து, ஸ்வீடனுக்கு தெற்கிலுள்ள என் சொந்த ஊராகிய ஹால்ஸிங்பார்க்கிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு நான் மறுவாழ்வு திட்டம் ஒன்றில் சேர்ந்தேன். அது அதிகப்படியான முயற்சியைத் தேவைப்படுத்தும் என்று இயன்முறை சிகிச்சையாளர் சொன்னபோதிலும், அதைத் தொடங்குவதற்கு நான் ஆவலுள்ளவனாக இருந்தேன். உண்மையிலேயே நான் மீண்டும் நடக்க விரும்பினேன். நாளொன்றுக்கு ஐந்து மணிநேர பயிற்சி திட்டம் ஒன்றை ஊக்கமாகத் தொடருவதன் மூலம், என்னில் விரைவான முன்னேற்றம் காணப்பட்டது.
ஒரு மாதத்திற்குப்பின் பயணக் கண்காணி எங்கள் சபையைச் சேவித்தபோது, அவரும் மற்ற கிறிஸ்தவ மூப்பர்களும், சபை மூப்பர் கூட்டத்தை என்னுடைய மருத்துவமனை அறையில் நடத்துவதற்காக அந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். சகோதர அன்பின் இந்த அத்தாட்சியைக் கண்டு என் உள்ளம் எவ்வளவு ஆனந்தமடைந்தது! கூட்டத்திற்குப் பின் அந்த வார்டில் இருந்த தாதிகள் அந்த முழு குழுவிற்கும் தேனீரையும் ஸான்ட்விச்களையும் பரிமாறினர்.
முதலில் என்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு மருத்துவர்கள் வியந்தனர். மூன்று மாதங்களுக்குப் பின்னர் என்னுடைய சக்கர நாற்காலியில் என்னால் நேராக உட்கார முடிந்தது; ஒருசில விநாடிகளுக்கு நிற்கவும்கூட முடிந்தது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது; மீண்டும் நடக்கவேண்டுமென்று முழு தீர்மானத்துடன் இருந்தேன். என் குடும்பத்தினரும் உடன் கிறிஸ்தவர்களும் சந்திக்க வரும்போது அதிக உற்சாகத்தை அளித்தனர். குறைந்த காலப்பகுதிகளுக்கு என்னால் வீட்டிற்கும்கூட செல்ல முடிந்தது.
உண்மையான ஒரு பின்னடைவு
என்றபோதிலும், அதற்குப் பிறகு, நான் மேலுமான முன்னேற்றம் எதையும் காண்பிக்கவில்லை. சீக்கிரத்தில் இயன்முறை சிகிச்சையாளர் இந்த வேதனையான செய்தியை எனக்குத் தெரிவித்தார்: “இதற்கும் மேலாக நீங்கள் குணமடைய மாட்டீர்கள்!” என்னுடைய சக்கர நாற்காலியில் நானே நகர்ந்து செல்லுமளவிற்கு என்னைப் பலப்படுத்தவேண்டும் என்பதே தற்போதைய இலக்காக இருந்தது. எனக்கு என்ன சம்பவிக்குமோவென்று நான் யோசித்தேன். என் மனைவி எவ்வாறு சமாளிப்பாள்? அவளுக்குத்தானே பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது, என்னுடைய உதவி அவளுக்கு தேவைப்பட்டிருந்தது. எனக்கு நிரந்தரமாக ஒரு நிறுவனத்தின் கவனிப்பு தேவைப்படுமா?
நான் ஆழ்ந்த மனச்சோர்வுக்குள்ளானேன். என்னுடைய பெலன், மன உரம், சக்தி அனைத்தும் மறைந்துவந்தன. நாட்கள் கடந்துசென்றன, நான் அசையமுடியாதவனானேன். நான் உடல் சம்பந்தமாக செயலற்றவனானது மட்டுமல்லாமல், உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆவிக்குரிய வகையிலும் உணர்வற்றவனானேன். நான் ‘கீழே தள்ளப்பட்டேன்.’ நான் எப்போதும் என்னை ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ளவனாகக் கருதியிருந்தேன். கடவுளுடைய ராஜ்யத்தில் உறுதியாக வேரூன்றப்பட்ட விசுவாசத்தைக் கொண்டிருந்தேன். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) எல்லா நோய்களும் ஊனங்களும் கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் நிவிர்த்தி செய்யப்படும் என்பதும் மனிதகுலம் முழுவதும் அங்கு பரிபூரண வாழ்க்கைக்கு மீண்டும் கொண்டுவரப்படும் என்பதுமான பைபிள் வாக்குறுதியை நான் உறுதியாக நம்பினேன். (ஏசாயா 25:8; 33:24; 2 பேதுரு 3:13) இப்போது நான் உடல் சம்பந்தமாக மட்டுமல்லாமல் ஆவிக்குரிய வகையிலும் செயலற்றவனாக உணர்ந்தேன். நான் ‘மடிந்துபோனவனாக’ உணர்ந்தேன்.—2 கொரிந்தியர் 4:9.
மேலுமாகத் தொடருவதற்குள், என் பின்னணியைக் குறித்து உங்களுக்குக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
ஒரு மகிழ்ச்சியான குடும்பம்
நான் 1934-ல் பிறந்தேன்; என்னுடைய உடல்நலம் எப்போதும் நன்றாகவே இருந்து வந்தது. 1950-களின் ஆரம்பத்தில், நான் இங்க்ரடைச் சந்தித்தேன்; 1958-ல் நாங்கள் திருமணம் செய்து, மத்திய ஸ்வீடனிலுள்ள ஆஸ்டர்ஸண்ட் நகரில் குடியேறினோம். யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்கத் தொடங்கியபோது, 1963-ல் எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு மூன்று சிறு பிள்ளைகள்—ஏவா, பியார்ன், லீனா—இருந்தனர். சீக்கிரத்தில் எங்களுடைய முழு குடும்பமும் படித்துக்கொண்டும் பைபிள் சத்தியங்களைப் பற்றிய அறிவில் நன்கு முன்னேறிக்கொண்டும் இருந்தது.
நாங்கள் படிக்க ஆரம்பித்தபின் சீக்கிரத்தில், ஹால்ஸிங்பார்க்குக்குக் குடிபெயர்ந்தோம். அங்கு, என் மனைவியும் நானும் யெகோவாவுக்கு எங்களை ஒப்புக்கொடுத்து 1964-ல் முழுக்காட்டப்பட்டோம். எங்கள் மூத்த மகளாகிய ஏவா 1968-ல் முழுக்காட்டப்பட்டபோது எங்கள் மகிழ்ச்சி அதிகரித்தது. ஏழு வருடங்கள் கழித்து, 1975-ல், பியார்னும் லீனாவும் முழுக்காட்டப்பட்டனர்; அதற்கடுத்த வருடம் நான் கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராக நியமிக்கப்பட்டேன்.
என்னுடைய உலகப்பிரகாரமான வேலை, என் குடும்பத்தின் சரீரப்பிரகாரமான தேவைகளை நன்கு கவனித்துக் கொள்வதற்கு உதவியது. பியார்னும் லீனாவும் முழுநேர ஊழியத்தை மேற்கொண்டபோது எங்களுடைய மகிழ்ச்சி அதிகரித்தது. ஆர்பூகாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்யும்படி பியார்ன் விரைவில் அழைக்கப்பட்டான். சொல்லப்போனால், வாழ்க்கை எங்களுக்குச் சாதகமாக இருந்தது. பின்னர், 1980-ன் தொடக்கத்தில், அந்தக் கட்டியின் சரீரப்பிரகாரமான பாதிப்புகளை நான் உணர ஆரம்பித்தேன்; அது கடைசியாக 1983-ல், அந்தப் பெரிய அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.
ஆவிக்குரிய செயலற்ற நிலையை மேற்கொள்ளுதல்
நான் மீண்டும் நடக்க முடியாது என்று சொல்லப்பட்டபோது, வாழ்க்கை நம்பிக்கையற்றதாகத் தோன்றியது. நான் எப்படி ஆவிக்குரிய பலத்தை மீண்டும் பெற்றேன்? அது நான் நினைத்ததைவிட எளிதாக இருந்தது. நான் வெறுமனே என் பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். நான் எவ்வளவு அதிகமாக வாசித்தேனோ அவ்வளவு அதிகமாக ஆவிக்குரிய பலத்தைப் பெற்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் மலைப் பிரசங்கத்தை நான் மதித்துணர ஆரம்பித்தேன். நான் அதை மீண்டும் மீண்டும் வாசித்து அதைக்குறித்து தியானித்தேன்.
வாழ்க்கையைப் பற்றிய என் மகிழ்ச்சியான நோக்கைத் திரும்பப் பெற்றேன். வாசிப்பதன்மூலமாகவும் தியானிப்பதன்மூலமாகவும், நான் தடங்கல்களுக்கு பதிலாக வாய்ப்புகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பைபிள் சத்தியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான விருப்பத்தை நான் திரும்பப்பெற்றேன்; மருத்துவமனை பணியாளர்களிடமும் நான் சந்தித்த மற்றவர்களிடமும் சாட்சிகொடுப்பதன்மூலம் இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொண்டேன். என் குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவை அளித்து, என்னை எப்படி கவனிப்பது என்பதைக் குறித்து பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர். கடைசியாக நான் மருத்துவமனையைவிட்டு வெளியேற முடிந்தது.
கடைசியாக நான் வீடுவந்து சேர்ந்தேன். எங்கள் அனைவருக்கும் அது எவ்வளவு மகிழ்ச்சியான நாளாக இருந்தது! என்னைக் கவனிப்பதையும் உட்படுத்திய ஒரு அட்டவணையை என் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். என்னுடைய மகன், பியார்ன், யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலுள்ள வேலையை விட்டுவிடத் தீர்மானித்தான்; என்னைக் கவனிப்பதில் உதவியாயிருக்கும்படியாக வீட்டுக்குத் திரும்பினான். என் குடும்பத்தினரிடமிருந்து அவ்வளவு அதிகமான அன்புக்கும் அக்கறைக்கும் உரியவராக இருப்பது மிகவும் ஆறுதலளிப்பதாய் இருந்தது.
மற்றொரு பின்னடைவைச் சமாளித்தல்
என்றபோதிலும், காலம் கடந்துசென்றபோது, என்னுடைய உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது; நான் அசைவதே கஷ்டமாக இருந்தது. கடைசியாக, என் குடும்பத்தினரின் ஈடுபாடுள்ள முயற்சிகளின் மத்தியிலும், அவர்களால் இனிமேலும் என்னை வீட்டில் வைத்து கவனிக்க முடியவில்லை. ஆகவே நான் ஒரு நர்ஸிங் ஹோமுக்குச் செல்வதே மிகவும் நல்லது என்று நினைத்தேன். திரும்பவும், அது மாற்றங்களையும் ஒரு புதிய வழக்கமுறையையும் உட்படுத்தியது. ஆனால் இது ஒரு ஆவிக்குரிய பின்னடைவாகும்படி நான் அனுமதிக்கவில்லை.
பைபிள் வாசிப்பையும் ஆராய்ச்சியையும் நான் ஒருபோதும் விட்டுவிடவில்லை. நான் எதைச் செய்ய முடியாது என்பதையல்ல, எதைச் செய்ய முடியும் என்பதையே யோசித்துக்கொண்டிருந்தேன். யெகோவாவின் சாட்சிகள் அனைவருக்கும் இருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின்பேரில் நான் தியானித்தேன். நான் ஜெபத்தில் யெகோவாவிடம் நெருங்கிய உறவை வைத்துக்கொண்டேன்; மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டேன்.
தற்போது நான் என் இரவுகளையும் பகல்நேரத்தின் சில பகுதிகளையும் நர்ஸிங் ஹோமில் கழிக்கிறேன். பிற்பகல் வேளைகளையும் மாலை வேளைகளையும் வீட்டிலோ கிறிஸ்தவ கூட்டங்களிலோ செலவிடுகிறேன். நகரிய சமூக சேவை அமைப்பு ஒன்று, கூட்டத்திற்கும் என் வீட்டிற்கும் சென்று திரும்புவதற்கான போக்குவரத்தை வழக்கமாக ஏற்பாடு செய்கிறது. பற்றுமிக்க என் குடும்பத்தினரும், சபையிலுள்ள சகோதரரும், நர்ஸிங் ஹோமிலுள்ள பணியாளர்களும் என்னை அற்புதகரமாகக் கவனிக்கின்றனர்.
என்னால் முடிந்ததைச் செய்தல்
என்னை நான் ஊனமுற்றவனாகக் கருதுவதில்லை, என்னுடைய குடும்பத்தினராலோ என் கிறிஸ்தவ சகோதரர்களாலோ அவ்வாறு நடத்தப்படவுமில்லை. ஒரு மூப்பராக திறம்பட்ட வகையில் தொடர்ந்து சேவிக்க உதவும் வகையில் நான் அன்பாக கவனிக்கப்படுகிறேன். ஒவ்வொரு வாரமும் நான் ஒரு சபை புத்தகப் படிப்பையும், ராஜ்ய மன்றத்தில் வாராந்தர காவற்கோபுர படிப்பையும் நடத்துகிறேன். பைபிளின் பக்கங்களைத் திருப்புவது எனக்குக் கடினமாக இருக்கிறது; ஆகையால் கூட்டங்களில் அதைச் செய்வதற்கு எனக்கு உதவும்படியாக யாராவது ஒருவர் நியமிக்கப்படுகிறார். என்னுடைய சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு நான் கூட்டங்களை நடத்துகிறேன், பேச்சுக்களைக் கொடுக்கிறேன்.
இவ்வாறாக நான் முன்பு அனுபவித்துச் செய்த அநேக காரியங்களை இன்னும் என்னால் செய்ய முடிகிறது; மேய்ப்புச் சந்திப்புகளைச் செய்வதையும் இது உட்படுத்துகிறது. (1 பேதுரு 5:2) சகோதர சகோதரிகள் என்னிடம் உதவிக்காகவோ ஆலோசனைக்காகவோ வரும்போது நான் இதைச் செய்கிறேன். மற்றவர்களை தொலைபேசி வழியாக அழைப்பதற்கு முன்முயற்சி எடுப்பதன்மூலம் தொலைபேசியையும் நான் பயன்படுத்துகிறேன். அதனால் இருதரப்பினருமே உற்சாகமளிக்கப்படுகின்றனர். (ரோமர் 1:10, 11) சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார்: “நான் எப்போ சோர்வா உணருறேனோ, சரியா அப்போதான் நீங்க என்னை கூப்பிட்டு உற்சாகப்படுத்துறீங்க.” ஆனால், யெகோவா என்னுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கிறார் என்று அறிவதால் நானும் உற்சாகப்படுத்தப்படுகிறேன்.
கூட்டங்களுக்கு முன்னும் பின்னும், சபையிலுள்ள பிள்ளைகளுடன் நான் சிறந்த கூட்டுறவை அனுபவிக்கிறேன். நான் என்னுடைய சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருப்பதால், ஒரே கண் மட்டத்திலிருந்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கிறோம். அவர்களுடைய நேர்மையையும் கபடமற்றத்தன்மையையும் நான் பாராட்டுகிறேன். ஒரு சிறு பையன் என்னிடம் ஒருமுறை சொன்னான்: “நீங்க வழக்கத்துக்கு மாறான வகையில அழகான ஊனமுற்றவர்!”
என்னால் செய்ய முடியாதவற்றைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக என்னால் செய்ய முடிகிறவற்றில் கவனம் செலுத்துவதன்மூலம் நான் யெகோவாவுக்குச் சேவை செய்வதை அனுபவித்து வந்திருக்கிறேன். எனக்கு என்ன சம்பவித்திருக்கிறதோ அதிலிருந்து நான் அதிகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் அனுபவிக்கிற சோதனைகளின் மூலமாக பயிற்றுவிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறோம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.—1 பேதுரு 5:10.
உடல்நலமுள்ள அநேகர், நம் பரலோகப் பிதாவின் வணக்கத்தை எப்போதும் கருத்தூன்றிய விதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுவதை நான் கவனித்திருக்கிறேன். அவ்வாறு இல்லை என்றால், நம் படிப்பு அட்டவணை, கூட்டங்கள், வெளி ஊழியம் ஆகியவை வெறும் வழக்கமுறையாக ஆகிவிடலாம். இந்த உலகின் முடிவினூடே தப்பிப்பிழைத்து கடவுளுடைய வாக்குறுதி செய்யப்பட்ட பூமிக்குரிய பரதீஸுக்குள் செல்வதற்கு இந்த ஏற்பாடுகளை இன்றியமையாதவையாக நான் கருதுகிறேன்.—சங்கீதம் 37:9-11, 29; 1 யோவான் 2:17.
கடவுளுடைய வரப்போகும் புதிய உலகில் வாழ்க்கைக்கான நம்பிக்கையை நம் இருதயங்களில் எப்போதும் உயிருள்ளதாக வைத்திருக்க வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:8) சோர்ந்துபோவதற்கான எந்த மனச்சாய்வுக்கும் எதிராகப் போராடுவதில் விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கும் நான் கற்றிருக்கிறேன். யெகோவாவை என் தகப்பனாகவும் அவருடைய அமைப்பை என் தாயாகவும் கருத கற்றிருக்கிறேன். நாம் முயற்சி எடுத்தால், யெகோவா நம்மில் எவரையும் அவருடைய திறம்பட்ட ஊழியராகப் பயன்படுத்த முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
சொல்லப்போனால், சில வேளைகளில் நான் ‘கீழே தள்ளப்பட்டவனாக’ உணர்ந்திருக்கிறபோதிலும்கூட, ‘மடிந்துபோகவில்லை.’ நான் யெகோவாவாலும் அவருடைய அமைப்பாலும் ஒருபோதும் கைவிடப்படவுமில்லை; என்னுடைய குடும்பத்தாராலும் என் கிறிஸ்தவ சகோதரராலும் கைவிடப்படவுமில்லை. பைபிளை எடுத்து அதை வாசிக்க ஆரம்பித்ததன் காரணமாக நான் ஆவிக்குரிய பலத்தை திரும்பப் பெற்றேன். நாம் அவரில் நம்பும்போது ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை’ தருகிற யெகோவா தேவனுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.என்றபோதிலும், இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமை நம்முடையதாக இல்லாமல் கடவுளுடையதாக இருக்கும்படியாக நாம் இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.—2 கொரிந்தியர் 4:7, NW.
யெகோவாவில் முழு உறுதியோடும் முழு நம்பிக்கையோடும் நான் எதிர்காலத்தை ஆவலுடன் நோக்கியிருக்கிறேன். இங்கு பூமியில் திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு பரதீஸைக் குறித்த தம்முடைய வாக்குறுதியை, அது கொண்டுவரும் எல்லா அருமையான ஆசீர்வாதங்களுடனும்கூட வெகு சீக்கிரத்தில் யெகோவா தேவன் நிறைவேற்றுவார் என்று நான் நம்பிக்கையாக இருக்கிறேன்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.