‘தேவனுடைய இஸ்ரவேலும் திரள்கூட்டமும்’
“நான் பார்த்தபோது, இதோ, . . . ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் . . . நிற்கக்கண்டேன்.”—வெளிப்படுத்துதல் 7:9.
1-3. (அ) என்ன மகிமையான பரலோக எதிர்பார்ப்புகளை அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கின்றனர்? (ஆ) முதல் நூற்றாண்டு சபையை அழிப்பதற்கு சாத்தான் எவ்வாறு முயற்சி செய்தான்? (இ) அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையை கறைபடுத்துவதற்கு சாத்தானின் முயற்சிகள் தோல்வியடைந்தன என்பதைக் காண்பிப்பதற்கு 1919-ல் என்ன நடந்தது?
‘தேவனுடைய இஸ்ரவேல்’ பொ.ச. 33-ல் ஸ்தாபிக்கப்பட்டதானது யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றி முடிப்பதில் முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நடவடிக்கையாக இருந்தது. (கலாத்தியர் 6:16) அபிஷேகம்செய்யப்பட்ட அதன் அங்கத்தினர்கள் அழியாமையுள்ள ஆவி சிருஷ்டிகளாக கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யும் நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றனர். (1 கொரிந்தியர் 15:50, 53, 54) அந்த ஸ்தானத்தில் அவர்கள் யெகோவாவின் நாமத்தை பரிசுத்தப்படுத்துவதிலும், பெரிய எதிரியாகிய பிசாசாகிய சாத்தானின் தலையை நசுக்குவதிலும் முக்கியமான ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றனர். (ஆதியாகமம் 3:15; ரோமர் 16:20) இப்புதிய சபையை துன்புறுத்துவதன் மூலமும், அதைக் கறைபடுத்த முயற்சிசெய்வதன் மூலமும் சாத்தான் தன்னிடமிருந்த எல்லா வல்லமையையும் கொண்டு அதை அழிக்க முயற்சிசெய்ததைக் குறித்து ஆச்சரியமேதுமில்லை!—2 தீமோத்தேயு 2:18; யூதா 4; வெளிப்படுத்துதல் 2:10.
2 அப்போஸ்தலர் உயிரோடிருந்தபோது சாத்தானால் வெற்றிபெற முடியவில்லை. என்றபோதிலும், அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு விசுவாசதுரோகம் தங்குதடையின்றி பரவியது. இறுதியில், இன்று கிறிஸ்தவமண்டலம் என்றறியப்படும் விசுவாசதுரோகத் தன்மையுள்ள பெரும் இழிவான போலி மத அமைப்பை சாத்தான் கொண்டுவந்தபோது கிறிஸ்துவால் ஸ்தாபிக்கப்பட்ட தூய கிறிஸ்தவ சபை மனிதர்களுடைய பார்வைக்குக் கறைபடுத்தப்பட்டதாக தோன்றியது. (2 தெசலோனிக்கேயர் 2:3-8) இருப்பினும், மெய் கிறிஸ்தவம் தொடர்ந்து நிலைத்திருந்தது.—மத்தேயு 28:20.
3 இயேசு, கோதுமை மற்றும் களைகள் பற்றிய தம்முடைய உவமையில், மெய் கிறிஸ்தவர்கள் களைகளோடு அல்லது பொய் கிறிஸ்தவர்களோடு சிறிது காலம் வளருவார்கள் என்று முன்னறிவித்தார்; இது நடந்தது. ஆனால் கடைசிநாட்களின்போது, “ராஜ்யத்தின் புத்திரர்” மறுபடியும் ‘களைகளிலிருந்து’ வெளிப்படையாக பார்க்கக்கூடிய விதத்தில் வித்தியாசமாக இருப்பார்கள் என்றும்கூட சொன்னார். (மத்தேயு 13:36-43) இதுவும்கூட உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. 1919-ல் அபிஷேகம்செய்யப்பட்ட மெய் கிறிஸ்தவர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” என்று தெய்வீக அங்கீகாரத்தைப் பெற்றவர்களாய் இருந்தனர், ராஜ்யத்தின் நற்செய்தியைத் தைரியமாகப் பிரசங்கிப்பதற்கு ஆரம்பித்தனர். (மத்தேயு 24:14, 45-47, NW; வெளிப்படுத்துதல் 18:4) அவர்களில் பெரும்பான்மையர் புறஜாதியார்; ஆனால் அவர்கள் ஆபிரகாமின் விசுவாசத்தைக் கொண்டிருந்ததன் காரணமாக, உண்மையில் ‘ஆபிரகாமின் சந்ததியாராய்’ இருந்தனர். அவர்கள் ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ அங்கத்தினர்களாய் இருந்தனர்.—கலாத்தியர் 3:7, 26-29.
‘திரள் கூட்டம்’
4. குறிப்பாக 1930-களில் எந்தக் கிறிஸ்தவத் தொகுதியினர் கவனத்துக்கு வந்தனர்?
4 தொடக்க நிலையில், இப்படிப்பட்ட அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பிரசங்கிப்புக்குப் பிரதிபலித்தவர்களும்கூட ஆவிக்குரிய இஸ்ரவேலராக ஆயினர், அவர்கள் 1,44,000 பேரின் மீதமுள்ள பகுதியானோராய் பரலோக நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். (வெளிப்படுத்துதல் 12:17) இருப்பினும், குறிப்பாக 1930-களில் மற்றொரு தொகுதியினர் கவனத்துக்கு வந்தனர். இவர்கள் தொழுவங்களைப் பற்றிய உவமையில் ‘வேறே ஆடுகளோடு’ அடையாளங்காட்டப்பட்டனர். (யோவான் 10:16) அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாய் ஒரு பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனோடு வாழும் நம்பிக்கையுடையவர்கள். அடையாள அர்த்தத்தில் சொன்னால், அவர்கள் அபிஷேகம்செய்யப்பட்டவர்களின் ஆவிக்குரியப் பிள்ளைகளாய் இருந்தனர். (ஏசாயா 59:21; 66:22; ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 4:15, 16.) அவர்கள் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையை உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக அடையாளங்கண்டு கொண்டனர், அவர்களுடைய அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களைப் போலவே அவர்களும் யெகோவாவின் பேரில் ஆழ்ந்த அன்பு, இயேசுவின் பலியின் மேல் விசுவாசம், கடவுளைத் துதிப்பதில் வைராக்கியம், நீதியின் காரணமாக துன்பப்பட மனமுள்ளவர்களாயிருத்தல் ஆகிய தன்மைகளைக் கொண்டிருந்தனர்.
5. வேறே ஆடுகளின் ஸ்தானம் எவ்வாறு படிப்படியாக நன்கு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது?
5 முதலில் இந்த வேறே ஆடுகளின் ஸ்தானம் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை, ஆனால் காலம் கடந்துசென்றபோது விஷயங்கள் தெளிவாக ஆயின. 1932-ல் வேறே ஆடுகளைப் பிரசங்க வேலையில் பங்குகொள்ளும்படி ஊக்கப்படுத்த அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்—பெரும்பாலான வேறே ஆடுகள் ஏற்கெனவே பிரசங்கவேலை செய்துகொண்டிருந்தனர். 1934-ல் வேறே ஆடுகள் தண்ணீர் முழுக்காட்டுதலுக்கு உட்படும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர். 1935-ல் அவர்கள் வெளிப்படுத்துதல் 7-ஆம் அதிகாரத்தில் உள்ள ‘திரள் கூட்டத்தோடு’ அடையாளங்காட்டப்பட்டனர். 1938-ல் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்குப் பார்வையாளர்களாக ஆஜராகும்படி அழைக்கப்பட்டனர். 1950-ல் அவர்கள் மத்தியில் இருந்த முதிர்ச்சிவாய்ந்த ஆண்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” சேவிக்கும் ‘பிரபுக்களாக’ கண்டுணரப்பட்டனர். (ஏசாயா 32:1, 2; சங்கீதம் 45:16) 1953-ல் கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பு—அந்தச் சமயத்தில் அதிலிருந்த பெரும் பகுதி வேறே ஆடுகளால் உண்டுபண்ணப்பட்டிருந்தது—புதிய உலகில் இருக்கப்போகும் பூமிக்குரிய சமுதாயத்தின் மையமாகக் காணப்பட்டது. இயேசுவினுடைய மீட்பின் பலியின் அடிப்படையில், அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடன் வேறே ஆடுகள் கடவுளுடைய நண்பர்களாக நீதிமான்கள் என்று அறிவிக்கப்படுகின்றனர் என்று 1985-ல் புரிந்துகொள்ளப்பட்டது.
6. இன்று, அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் மற்றும் வேறே ஆடுகள் ஆகியோரின் சம்பந்தப்பட்ட ஸ்தானங்கள் யாவை, என்ன கேள்விகளுக்கு இது வழிநடத்துகிறது?
6 இந்தக் ‘கடைசிநாட்களின்’ கடைசி பகுதிக்குள்ளாக, 1,44,000 பேரில் பெரும்பாலானோர் இறந்து போய் தங்கள் பரலோக வெகுமதியைப் பெற்றுவிட்டிருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 6:9-11; 14:13) இப்போது நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையின் பெரும்பகுதியை பூமிக்குரிய நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் செய்கின்றனர், இந்த வேலையில் இயேசுவின் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களுக்கு ஆதரவு தருவதை அவர்கள் ஒரு சிலாக்கியமாகக் கருதுகின்றனர். (மத்தேயு 25:40) என்றபோதிலும், அபிஷேகம்செய்யப்பட்ட இவர்கள் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக இருக்கின்றனர், இவர்கள் மூலமாய் ஆவிக்குரிய உணவு இந்தக் கடைசி நாட்களின்போது வழங்கப்பட்டு வருகிறது. அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொண்டுவிட்ட பிறகு, வேறே ஆடுகளின் நிலைமை என்னவாக இருக்கும்? அப்போது வேறே ஆடுகளுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்? அப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க பண்டைய இஸ்ரவேலை சற்று கவனிப்பது நமக்கு உதவிசெய்யும்.
அடையாள அர்த்தமுள்ள ‘ஆசாரிய ராஜ்யம்’
7, 8. எந்த அளவுக்குப் பண்டைய இஸ்ரவேல் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் ஆசாரிய ராஜ்யமாகவும் பரிசுத்த ஜனமாகவும் இருந்தது?
7 யெகோவா இஸ்ரவேலை தம் சொந்த ஜனமாக தெரிந்தெடுத்தபோது, அவர் இவ்வாறு சொல்லி அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் [“ஜனமுமாய்,” NW] இருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:5, 6) நியாயப்பிரமாண உடன்படிக்கையின் அடிப்படையில் இஸ்ரவேலர் யெகோவாவின் விசேஷித்த ஜனங்களாய் இருந்தனர். ஆசாரிய ராஜ்யத்தையும் பரிசுத்த ஜனத்தையும் உட்படுத்திய வாக்கு எவ்வாறு நிறைவேறும்?
8 இஸ்ரவேலர் உண்மையுள்ளவர்களாய் இருந்தபோது யெகோவாவின் பேரரசுரிமையை ஏற்றுக்கொண்டு அவரை தங்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். (ஏசாயா 33:22) இவ்வாறு அவர்கள் ஒரு ராஜ்யமாக இருந்தனர். ஆனால், பின்பு வெளிப்படுத்தப்பட்டபடி, ‘ஒரு ராஜ்யத்தைப்’ பற்றிய வாக்கு அதைக்காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்தும். கூடுதலாக, அவர்கள் யெகோவாவின் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தபோது, அவர்கள் சுத்தமானவர்களாய் தங்களைச் சுற்றியிருந்த ஜனங்களிலிருந்து பிரிந்திருந்தனர். அவர்கள் ஒரு பரிசுத்த ஜனமாய் இருந்தனர். (உபாகமம் 7:5, 6) அவர்கள் ஆசாரிய ராஜ்யமாய் இருந்தனரா? இஸ்ரவேலில் லேவி கோத்திரத்தார் ஆலய சேவைக்காக தனியே பிரித்து வைக்கப்பட்டனர், அந்தக் கோத்திரத்துக்குள்ளேயே லேவியர்களின் ஆசாரியத்துவம் இருந்தது. மோசேயின் நியாயப்பிரமாணம் தொடங்கிவைக்கப்பட்டபோது, லேவியரல்லாத குடும்பங்கள் ஒவ்வொன்றின் முதற்பேறானவர்களுக்குப் பதிலாக லேவிய ஆண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.a (யாத்திராகமம் 22:29; எண்ணாகமம் 3:11-16, 40-51) இவ்வாறு இஸ்ரவேலில் இருந்த ஒவ்வொரு குடும்பமும் ஆலய சேவையில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது போல் இருந்தது. ஒரு ஆசாரியத்துவமாக சேவிப்பதற்கு மிகவும் நெருக்கமாக இந்த அளவுதான் அத்தேசம் வரமுடிந்தது. இருந்தபோதிலும், அவர்கள் தேசங்களுக்கு முன்பாக யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்தனர். மெய்க் கடவுளை வணங்க விரும்பிய எந்தப் புறஜாதியானும் இஸ்ரவேலரோடு கூட்டுறவுகொண்டு மட்டுமே அவ்வாறு செய்ய முடிந்தது.—2 நாளாகமம் 6:32, 33; ஏசாயா 60:10.
9. இஸ்ரவேலின் வடதேசத்தை ‘தமக்கு ஆசாரியராக சேவிப்பதிலிருந்து’ விலக்கிவைத்துவிட யெகோவாவை செய்வித்தது எது?
9 சாலொமோனின் மரணத்துக்குப் பிறகு கடவுளுடைய ஜனங்கள், யெரொபெயாம் ராஜாவின்கீழ் இஸ்ரவேலின் வடதேசம் என்றும், ரெகொபெயாம் ராஜாவின்கீழ் யூதாவின் தென்தேசம் என்றும் பிரிக்கப்பட்டனர். மெய் வணக்கத்துக்கு மையமாயிருந்த ஆலயம் யூதாவின் பிராந்தியத்தில் இருந்ததன் காரணமாக, யெரொபெயாம் தன் சொந்த தேசிய பிராந்தியத்தில் கன்றுக்குட்டிகளின் உருவங்களை உண்டாக்கி வைப்பதன் மூலம் முறைகேடான வணக்கமுறை ஒன்றை நிறுவினான். இன்னுமதிகமாக, “அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத பொது ஜனத்திலிருந்து எடுத்தவர்களை ஆசாரியராக்கினான்.” (1 இராஜாக்கள் 12:31, NW) ஆகாப் ராஜா தன் அந்நிய மனைவியாகிய யேசபேல் பாகால் வணக்கத்தைத் தேசத்தில் ஸ்தாபிப்பதற்கு அனுமதித்தபோது, வடதேசம் பொய் வணக்கத்துக்குள் இன்னும் ஆழமாக சென்றது. இறுதியில் யெகோவா, கலகத்தனமான அந்த ராஜ்யத்தின்மீது நியாயத்தீர்ப்பை அறிவித்தார். ஓசியாவின் மூலம் அவர் சொன்னார்: “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன்.” (ஓசியா 4:6) அதற்குப் பிறகு விரைவில், அசீரியர்கள் இஸ்ரவேலின் வடதேசத்தை அழித்தனர்.
10. யூதாவின் தென்தேசம் உண்மைத்தன்மையுடன் இருந்தபோது, எவ்வாறு யெகோவாவை தேசங்களுக்கு முன்பாக பிரதிநிதித்துவம் செய்தது?
10 தென்தேசமாகிய யூதாவைப் பற்றியென்ன? எசேக்கியாவின் நாட்களில், ஏசாயாவின் மூலம் யெகோவா அவர்களிடம் சொன்னார்: “நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் . . . இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.” (ஏசாயா 43:10, 21; 44:21) தென்தேசத்தார் உண்மைத்தன்மையுள்ளவர்களாய் இருந்தபோது, யெகோவாவின் மகிமையை தேசங்களுக்கு அறிவிப்பதிலும், அவருடைய ஆலயத்தில் அவரை வணங்கி முறையான லேவிய ஆசாரியத்துவத்தால் சேவிக்கப்படுவதற்கு நேர்மை இருதயமுள்ள ஜனங்களைக் கவர்ந்திழுப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.
இஸ்ரவேலில் அந்நியர்கள்
11, 12. இஸ்ரவேலரோடு கூட்டுறவுகொண்டு யெகோவாவை சேவிப்பவர்களாக ஆன சில அந்நியரின் பெயரைக் குறிப்பிடுங்கள்.
11 இந்தத் தேசிய சாட்சிக்குப் பிரதிபலித்த அந்நியர்களுக்கு மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது—மோசேயின் மனைவியாகிய சிப்போராள் மீதியானிய தேசத்தைச் சேர்ந்தவள். இஸ்ரவேலரல்லாத “பல ஜாதியான ஜனங்கள்” இஸ்ரவேலரோடு எகிப்தை விட்டுச் சென்றனர், நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபோது அங்கேயிருந்தனர். (யாத்திராகமம் 2:16-22; 12:38; எண்ணாகமம் 11:4) ராகாபும் அவளுடைய குடும்பமும் எரிகோவிலிருந்து விடுவிக்கப்பட்டு, பின்னர் யூத சபைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். (யோசுவா 6:23-25) அதற்குச் சற்றுப் பிறகு கிபியோனியர்கள் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்துகொண்டனர், ஆசரிப்புக் கூடாரத்தின் சம்பந்தமாக அவர்களுக்கு வேலைகள் நியமிக்கப்பட்டன.—யோசுவா 9:3-27; இவற்றையும் காண்க: 1 இராஜாக்கள் 8:41-43; எஸ்தர் 8:17.
12 நாளடைவில் அந்நியர் உயர்வான ஸ்தானங்களில் சேவை செய்தனர். பத்சேபாளின் கணவனாகிய ஏத்தியனான உரியா, அம்மோனியனாகிய சேலேக் ஆகியோர் தாவீதின் ‘பராக்கிரமசாலிகளுக்குள்’ இருந்தனர். (1 நாளாகமம் 11:26, 39, 41; 2 சாமுவேல் 11:3, 4) எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் அரண்மனையில் சேவித்தார், ராஜாவை நேரடியாக அணுகும் ஸ்தானத்தில் இருந்தார். (எரேமியா 38:7-9) இஸ்ரவேலர் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபின், இஸ்ரவேலரல்லாத நிதனீமியர் ஆசாரியர்களுக்கு உதவிசெய்வதில் கூடுதலான உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டனர். (எஸ்றா 7:24) இப்படிப்பட்ட உண்மையுள்ள அந்நியரில் அல்லது புறஜாதியாரில் பெரும்பாலானோர் இன்றுள்ள திரள்கூட்டத்தாரை முன்நிழலாகக் குறிப்பாக கருதப்படுவதன் காரணமாக, அவர்களுடைய நிலைமை நமக்கு ஆர்வமுள்ளதாய் இருக்கிறது.
13, 14. (அ) இஸ்ரவேலில் யூத மதத்துக்கு மாறியவர்களின் சிலாக்கியங்களும் உத்தரவாதங்களும் என்னவாயிருந்தன? (ஆ) யூத மதத்துக்கு மாறிய விசுவாசிகளை இஸ்ரவேலர் எவ்வாறு கருதவேண்டியவர்களாய் இருந்தனர்?
13 அப்படிப்பட்டவர்கள் யூத மதத்துக்கு மாறியவர்களாய் இருந்தனர், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட வணக்கத்தாராக இஸ்ரவேலரோடு சேர்ந்து தேசங்களிலிருந்து பிரிக்கப்பட்டவர்களாய் இருந்தனர். (லேவியராகமம் 24:22) அவர்கள் இஸ்ரவேலர் செய்ததைப் போலவே பலிகளைச் செலுத்தினர், பொய் வணக்கத்திலிருந்து விடுபட்டிருந்தனர், இரத்தத்திலிருந்தும் விலகியிருந்தனர். (லேவியராகமம் 17:10-14; 20:2) அவர்கள் சாலொமோனின் ஆலயத்தைக் கட்டுவதற்கு உதவி செய்தனர், ஆசா மற்றும் எசேக்கியா ராஜாக்களின்கீழ் மெய் வணக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவதில் சேர்ந்துகொண்டனர். (1 நாளாகமம் 22:2; 2 நாளாகமம் 15:8-14; 30:25) பொ.ச. 33-ல் ராஜ்யத்தின் முதல் திறவுகோலை பேதுரு உபயோகித்தபோது, அவருடைய வார்த்தைகளை ‘யூதர்களும் யூத மதத்துக்கு மாறிய [யூதரல்லாதவர்களும்]’ கேட்டனர். அந்த நாளில் முழுக்காட்டப்பட்ட மூவாயிரம் பேர்களில் சிலர் யூத மதத்துக்கு மாறியவர்களாக இருந்திருக்கக்கூடும். (அப்போஸ்தலர் 2:10, 41) அதற்கு சிறிது காலத்துக்குப் பின்பு, யூத மதத்துக்கு மாறிய ஒரு எத்தியோப்பியன் பிலிப்புவால் முழுக்காட்டப்பட்டான்—இது கொர்நேலியுவோடும் அவருடைய குடும்பத்தோடும் ராஜ்யத்தின் கடைசி திறவுகோலை பேதுரு உபயோகிப்பதற்கு முன்பாகும். (மத்தேயு 16:19; அப்போஸ்தலர் 8:26-40; 10:30-48) யூத மதத்துக்கு மாறியவர்கள் புறஜாதியார் போல் கருதப்படவில்லை என்பது தெளிவாயிருந்தது.
14 இருப்பினும், இஸ்ரவேல் தேசத்தில் யூத மதத்துக்கு மாறியவர்களின் ஸ்தானம் பிறப்பினால் இஸ்ரவேலர்களாய் இருந்தவர்களுடையதைப் போன்று இல்லை. யூத மதத்துக்கு மாறியவர்கள் ஆசாரியர்களாக சேவிக்கவில்லை, அவர்களுடைய முதற்பேறானவர்கள் லேவிய ஆசாரித்துவத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை.b யூத மதத்துக்கு மாறியவர்களுக்கு இஸ்ரவேலில் நிலச்சுதந்தரம் இல்லை. இருந்தபோதிலும், யூத மதத்துக்கு மாறிய விசுவாசிகளைக் கரிசனையோடு நடத்தி அவர்களை சகோதரர்களாக கருதவேண்டும் என்று இஸ்ரவேலருக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது.—லேவியராகமம் 19:33, 34.
ஆவிக்குரிய ஜனம்
15. இயற்கையான இஸ்ரவேலர் மேசியாவை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது என்ன விளைவு ஏற்பட்டது?
15 இஸ்ரவேலர்களை சுத்தமாகவும், அவர்களைச் சுற்றியிருந்த தேசங்களிலிருந்து பிரித்து வைப்பதற்காகவும் நியாயப்பிரமாணம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது வேறொரு நோக்கத்தைச் சேவித்தது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.” (கலாத்தியர் 3:24) வருந்தத்தக்கவிதத்தில், பெரும்பாலான இஸ்ரவேலர் நியாயப்பிரமாணத்தின் மூலம் கிறிஸ்துவினிடமாக வழிநடத்தப்பட தவறினர். (மத்தேயு 23:15; யோவான் 1:11) ஆகையால் யெகோவா தேவன் அத்தேசத்தை நிராகரித்து ‘தேவனுடைய இஸ்ரவேல்’ பிறப்பிக்கப்படும்படி செய்தார். மேலும், இந்தப் புதிய இஸ்ரவேலில் முழு-நிலையடைந்த குடிமக்களாக ஆவதற்கு அவர் யூதரல்லாதவர்களுக்கு அழைப்பு கொடுத்தார். (கலாத்தியர் 3:28; 6:16) யாத்திராகமம் 19:5, 6-ல் ராஜரீக ஆசாரியத்துவத்தைப் பற்றிய யெகோவாவின் வாக்கு இப்புதிய ஜனத்தின் பேரில்தான் அதன் அற்புதமான இறுதி நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது. எப்படி?
16, 17. பூமியிலிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எந்த கருத்தில் ‘ராஜரீகமானவர்களாய்’ இருக்கின்றனர்? ஒரு ‘ஆசாரியத்துவமாய்’ இருக்கின்றனர்?
16 பேதுரு தன் நாளில் இருந்த அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் யாத்திராகமம் 19:6-ஐ மேற்கோளாகக் குறிப்பிட்டார்: “நீங்களோ தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) இது எதை அர்த்தப்படுத்துகிறது? அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பூமியில் ராஜாக்களாக இருக்கின்றனரா? இல்லை, அவர்கள் ராஜாக்களாக பதவி வகிப்பது இன்னும் எதிர்காலத்தில் நடந்தேற வேண்டியதாய் உள்ளது. (1 கொரிந்தியர் 4:8) இருப்பினும், எதிர்காலத்தில் ராஜரீக சிலாக்கியங்களைப் பெறுவதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் “ராஜரீகமான”வர்களாக இருக்கின்றனர். இப்போதும்கூட அவர்கள் மகா பேரரசராகிய யெகோவா தேவனால் நியமிக்கப்பட்டிருக்கும் ராஜாவாகிய இயேசுவின்கீழ் ஒரு ஜனமாக இருக்கின்றனர். பவுல் எழுதினார்: “இருளின் அதிகாரத்தினின்று [யெகோவா] நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தி[னார்].”—கொலோசெயர் 1:13.
17 பூமியிலிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒரு ஆசாரியத்துவமாய் இருக்கின்றனரா? ஆம், சில விதங்களில் அவ்வாறிருக்கின்றனர். ஒரு சபையாக, அவர்கள் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க ஆசாரிய சேவை செய்கின்றனர். பேதுரு இவ்வாறு சொன்னபோது இதை விளக்கினார்: “நீங்கள் ஆவிக்கேற்ற மாளிகையாகவும் . . . பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.” (1 பேதுரு 2:5; 1 கொரிந்தியர் 3:16) இன்று, அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதியானோர் ஒரு தொகுதியாக “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யாக இருக்கின்றனர், ஆவிக்குரிய உணவை விநியோகிப்பதற்கு வழியாக இருக்கின்றனர். (மத்தேயு 24:45-47, NW) யெகோவாவை வணங்க விரும்பும் எவரும், பண்டைய இஸ்ரவேலில் இருந்ததுபோல, இப்படிப்பட்ட அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு கூட்டுறவுகொண்டு வணங்கவேண்டும்.
18. பூமியிலிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபை ஒரு ஆசாரியத்துவமாக, என்ன பிரதான உத்தரவாதத்தைக் கொண்டிருக்கிறது?
18 மேலும், தேசங்களுக்கு யெகோவாவின் மகத்துவத்தைக் குறித்து சாட்சிகொடுப்பதற்கு இஸ்ரவேலர்களுக்கு இருந்த சிலாக்கியத்தை அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பெற்றுக்கொண்டனர். பேதுரு அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை ராஜரீக ஆசாரியத்துவம் என்று அழைத்தபோது, அவர் பிரசங்கிக்கும் வேலையை மனதில் கொண்டிருந்தார் என்பதை அவ்வசனத்தின் சூழமைவு காண்பிக்கிறது. உண்மையில், அவர் யாத்திராகமம் 19:6-ல் உள்ள யெகோவாவின் வாக்கோடு, ஏசாயா 43:21-ல் இஸ்ரவேலுக்கு யெகோவா கூறின வார்த்தைகளை ஒன்றுசேர்த்து பின்வருமாறு கூறினார்: “நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு . . . ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) இதற்கிசைவாக, பவுல் யெகோவாவின் புண்ணியங்களை அறிவிப்பதை ஆலய பலி என்று கூறினார். அவர் எழுதினார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் [இயேசு] மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.”—எபிரெயர் 13:15.
ஒரு பரலோக நிறைவேற்றம்
19. இஸ்ரவேல் ஆசாரிய ராஜ்யமாக இருக்கும் என்ற வாக்கின் இறுதியான, மகத்தான நிறைவேற்றம் என்ன?
19 என்றபோதிலும், யாத்திராகமம் 19:5, 6 இறுதியில் மிகப் பெரிய மகிமையான நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில், அப்போஸ்தலனாகிய யோவான் பரலோக சிருஷ்டிகள் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை துதித்துப் பாடுகையில் இவ்வசனத்தைப் பொருத்துவதைக் கேட்கிறார்: ‘நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து [“ஆட்களை,” NW] தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, நம் தேவனுக்கு முன்பாக அவர்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; அவர்கள் [“ராஜாக்களாக பூமியை,” NW] அரசாளுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:9, 10) இறுதியில், ராஜரீக ஆசாரியத்துவம் கடவுளுடைய பரலோக ராஜ்யமாக இருக்கிறது, அது நாம் ஜெபிக்கும்படி இயேசு கற்றுக்கொடுத்த ஆளும் அதிகாரம் ஆகும். (லூக்கா 11:2) இறுதிவரை உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட 1,44,000 கிறிஸ்தவர்கள் அனைவரும் அந்த ராஜ்ய ஏற்பாட்டில் ஒரு பங்கைக் கொண்டிருப்பர். (வெளிப்படுத்துதல் 20:4, 6) வெகு காலத்துக்கு முன்பு மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்ட வாக்கின் எப்பேர்ப்பட்ட ஆச்சரியமான நிறைவேற்றம்!
20. என்ன கேள்வி இன்னும் பதிலளிக்கப்பட வேண்டியுள்ளது?
20 அபிஷேகம்செய்யப்பட்ட அனைவருமே தங்கள் அற்புதமான சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, இவையனைத்தும் திரள்கூட்டத்தாருடைய நிலைமைக்கும் அவர்களுடைய எதிர்காலத்துக்கும் என்ன சம்பந்தத்தைக் கொண்டுள்ளது? இது இத்தொடர் கட்டுரைகளின் இறுதி கட்டுரையில் தெளிவாகும்.
[அடிக்குறிப்புகள்]
a இஸ்ரவேலின் ஆசாரியத்துவம் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, லேவியரல்லாத இஸ்ரவேல் கோத்திரத்தாரின் முதற்பேறானவர்களும் லேவி கோத்திரத்தின் ஆண்களும் கணக்கெடுக்கப்பட்டனர். லேவிய ஆண்களைக் காட்டிலும் 273 கூடுதலான முதற்பேறானவர்கள் இருந்தனர். எனவே, அந்த 273 பேரில் ஒவ்வொருவருக்கும் ஐந்து சேக்கல் மிகைப்பட்ட அளவுக்கு மீட்கும் பொருளாக கொடுக்கப்பட வேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டார்.
b பொ.ச.மு. 1513-ல் நியாயப்பிரமாணம் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, இஸ்ரவேலரல்லாத பலஜாதியான திரள்கூட்டத்தார் ஆஜராயிருந்தனர், ஆனால் இஸ்ரவேலின் முதற்பேறானவர்களுக்கு மாற்றீடாக லேவியர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அவர்களுடைய முதற்பேறானவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. (பாரா 8-ஐ காண்க.) எனவே, இப்படிப்பட்ட இஸ்ரவேலரல்லாதவரின் முதற்பேறானவர்களுக்கு மாற்றீடாக லேவியர்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ வேறே ஆடுகளின் ஸ்தானம் எவ்வாறு படிப்படியாக நன்கு புரிந்துகொள்ளப்பட்டது?
◻ இஸ்ரவேலின் வடதேசத்தை தமக்கு ஆசாரியராக சேவிப்பதிலிருந்து யெகோவா ஏன் நிராகரித்து விட்டார்?
◻ உண்மைத்தன்மையுடன் இருந்தபோது, தேசங்களுக்கு முன்பாக யூதாவின் ஸ்தானம் என்னவாக இருந்தது?
◻ இஸ்ரவேலில் யூத மதத்துக்கு மாறிய விசுவாசிகளின் ஸ்தானம் என்னவாக இருந்தது?
◻ அபிஷேகம்செய்யப்பட்ட சபை எவ்வாறு ஆசாரிய ராஜ்யமாக சேவிக்கிறது?
[பக்கம் 16-ன் படம்]
அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ராஜரீக ஆசாரியத்துவமாக, யெகோவாவின் மகிமையை பூமியில் அறிவிக்கின்றனர்
[பக்கம் 18-ன் படம்]
அந்த ராஜ்யமே யாத்திராகமம் 19:6-ன் இறுதி நிறைவேற்றம்