வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கலாத்தியர் 6:8-ன் பிரகாரம், “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் “ஆவி” எது? இவ்வாறு நாம் ஜீவனை எப்படி அறுக்கலாம்?
“ஆவி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய, கிரேக்க பதங்களுக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன, அவையாவன: (1) கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி, (2) மனிதர்களில் அல்லது மிருகங்களில் உள்ள உயிர்சக்தி, (3) ஒரு நபரை தூண்டுவிக்கும் மனச்சாய்வு, (4) ஆவி உருவில் உள்ள ஒருவர் அல்லது தேவதூதர். இவற்றுள் முதலாவது உள்ள—கடவுளுடைய செயல்நடப்பிக்கும் சக்தி—என்ற அர்த்தத்தையே நாம் கலாத்தியர் 6:8-ல் காண்கிறோம்.
இதன் பின்னணியை அறிந்துகொள்ள தயவுசெய்து கலாத்தியர் 3:2-க்குத் திருப்புங்கள், அங்குதான் “ஆவி” என்ற வார்த்தை கலாத்தியரில் முதலாவது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பவுல் கிறிஸ்தவர்களை நோக்கி, “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?” என்று கேட்டார். பிறகு கலாத்தியர் 3:5-ல் அவர் அந்த ‘ஆவியை’ அற்புதங்களை நடப்பிப்பதோடு இணைக்கிறார். எனவே “ஆவி” என்று அவர் குறிப்பிட்டது கடவுளுடைய காணக்கூடாத செயல் நடப்பிக்கும் சக்தியாகிய பரிசுத்த ஆவியையே ஆகும்.
பின்னர், கலாத்தியர் 5:16-ல் பவுல் ஆவியையும் மாம்சத்தையும் வித்தியாசப்படுத்திக் காட்டினார். நாம் வாசிக்கிறோம்: “நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” “மாம்ச இச்சை” என்பதன் மூலம் அவர் பாவம்நிறைந்த மனித மாம்சத்தை அர்த்தப்படுத்தினார். இவ்வாறு கலாத்தியர் 5:19-23-ல் ‘மாம்சத்தின் கிரியைகளை,’ ‘ஆவியின் கிரியைகளிலிருந்து’ வித்தியாசப்படுத்தி பவுல் வரிசைப்படுத்தினார்.
எனவே, கலாத்தியர் 6:8-ல் “தன் மாம்சத்திற்கென்று” விதைக்கிறவன் பாவம் நிறைந்த மனித இச்சைகளினால் நடத்தப்பட தன்னை அனுமதித்து ‘மாம்சத்தின் கிரியைகளில்’ ஈடுபடும் ஒருவனாக இருக்க வேண்டும். அத்தகைய நடத்தையின் அழிவுக்கேற்ற பாதிப்புகளை அவன் அனுபவிக்கக்கூடும், அவன் திருந்தாவிட்டால் கடவுளுடைய ராஜ்யத்திலோ அல்லது அதன் கீழோ நிச்சயமாகவே ஜீவன் அடையமாட்டான்.—1 கொரிந்தியர் 6:9, 10.
நாமோ பக்தியுள்ள கிறிஸ்தவர்களாக, ‘கடவுளுடைய ஆவிக்கென்று விதைக்க விரும்புகிறோம்.’ பரிசுத்த ஆவி நம்முடைய வாழ்க்கையில் தடையின்றி கிரியைசெய்து அதன் கனிகளை வெளிப்படுத்த நமக்கு உதவும்படி அதை அனுமதிக்கும்வண்ணம் வாழ்வதை இது உட்படுத்துகிறது. எதை வாசிப்பது, அல்லது எந்த டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போன்றவற்றைத் தீர்மானிக்கையில் இதை நாம் மனதில்கொள்ள வேண்டும். நாம் கூட்டங்களில் கவனம் செலுத்தி, ஆவியினால் நியமிக்கப்பட்ட மூப்பர்களின் ஆலோசனைகளைப் பிரயோகிக்க முயற்சிக்கையில், ஆவிக்கென்று விதைக்கிறோம்.—அப்போஸ்தலர் 20:28.
அக்கறைக்குரியவிதமாக, பரிசுத்த ஆவிக்கு இசைவாக நாம் விதைக்கையில், ‘ஆவியினாலே நித்திய ஜீவனை அறுக்கும்’ நிலையில் இருப்போம் என்ற உறுதியளிப்போடு கலாத்தியர் 6:8 முடிவதை கவனியுங்கள். ஆம், கிறிஸ்துவின் மீட்கும்பொருளின் அடிப்படையில், கடவுள் முடிவற்ற வாழ்க்கையை பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலம் தந்தருளுவார்.—மத்தேயு 19:29; 25:46; யோவான் 3:14-16; ரோமர் 2:6, 7; எபேசியர் 1:7.